இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்


தமிழ்நாட்டின் 16ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021 ஏப்ரல் ஆறு அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி இந்தத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்துள்ளது.  இதுவரை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன்முறையாக வாக்குப்பதிவு இரவு ஏழு மணி வரை நடத்தப்பட்டது. மாலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவின் எம்பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார். மொத்தம் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற வேகத்தைப் பார்த்தால் எண்பது சதவீதம் பதிவாகும்போல இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சிறிது மந்த கதியாகிவிட்டது. ஆகவே, கடந்த முறையைவிடச் சற்றுக் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. 



இந்தத் தேர்தலில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி காந்த் கட்சி தொடங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் வந்து வாக்களித்துவிட்டார். ஊடகங்களின் கவனம் இந்த முறை ரஜினி மேல் இருக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் கமல்ஹாசன் தன் மகள்களுடன் வந்து வாக்களித்தார். மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பேரனைத் தூக்கியபடி வந்து வாக்களித்தார்.  


நடிகர் விஜயும் அஜீத்தும் ஊடகக் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதுவும் அவரது சைக்கிளில் கறுப்பு சிவப்பு வண்ணமிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் அஜித் அணிந்து வந்திருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்தில் சிவப்பு பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. இதுவும் பேசுபொருளானது. இருவருமே ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆனால், வாக்குச்சாவடி காரில் வருவதற்கு ஏதுவான சூழலில் இல்லாததால் விஜய் சைக்கிளில் வந்தார் என்று விஜயின் பிஆர்ஓ தெரிவித்தார். ஆனால், அஜித்திடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. வாக்குச்சாவடியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பிடுங்கினார் அஜித். பின்னர் அவரிடம் போனைக் கொடுத்துவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 


1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் இந்தத் தேர்தல்வரை வாக்களித்த மாரப்ப கவுண்டர் என்னும் தனிமனிதர் ஊடகத்தில் இடம்பிடித்தார். வாக்காளர் ஒருவர் சேலத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். வழக்கம்போல் இம்முறையும் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வமில்லை என்று பொதுவாகப் பேசப்பட்டது. யாருக்கு வாக்களித்து என்ன பண்ண என்னும் மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? அடித்தட்டு மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள். 


தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. 2016இல் வாக்குப்பதிவு சதவீதம் 74.81. ஆனால் இப்போது அதைவிட குறைவான சதவீதத்தினரே வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் இவ்வளவு பேர் வாக்களித்திருப்பது ஆரோக்கியமான செய்தியே. 2011ஆம் ஆண்டு தேர்தலில் 78.29 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதுவரையான தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு இதுவே. அப்போது ஆண்ட கட்சியான திமுகவுக்கு எதிராகத் தேர்தலின்போது பெரிய அலை வீசியது. மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்தது 1957இல். அந்த ஒரு முறைதான் ஐம்பது சதவீதத்துக்கும் கீழே வாக்குப்பதிவு சென்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 46.75 ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அலைவீசப்பட்டது எனச் சொல்லப்பட்ட 1996இலேயே 66.95 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெற்றிருக்கிறது.


இதுவரை ஆட்சி மாற்றம் நடைபெற்ற எட்டு முறையும் அதாவது, 1967, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்த வாக்குப் பதிவு அடிப்படையில் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியவருகிறது. கடந்த முறையைவிட அதிகமாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்குமுறையும் (1967, 1996, 2006, 2011), குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்கு முறையும் (1977, 1989, 1991, 2001) ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை திமுக பெற்றுள்ளது (1967, 1996, 2006); குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை அதிமுக (1977, 1991, 2001) பெற்றுள்ளது. இந்த முறை திமுக வென்று ஆட்சியமைத்துவிடும் என்றுதான் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதைக் காண மே 2 அன்று வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

போட்டாச்சு... போட்டாச்சு...

நான் முதன்முதலில் எந்தத் தேர்தலில் வாக்களித்தேன் என்பதே மறந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வாக்களித்தேன் என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேனா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தேனா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தேனா என்னும் தெளிவு இல்லை. அது ஒரு மங்கிய சித்திரமாகவே மனத்தின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது. அண்மையில் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். பாஜக ஆட்சி அமைந்தபிறகுதான் வாக்களிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை உணர முடிந்திருக்கிறது. 

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது சிலருக்கு ஒரு சடங்கு. ஆனால், உண்மையில் வாக்களிப்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது ஜனநாயக உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. பொதுவாக, வாக்களிப்பது குறித்து பெரிய புரிதல் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை.  நாம் வாக்களித்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்னும் விட்டேத்தியான மனநிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த மனநிலையிலிருந்து விடுபட்டால் மட்டுமே நூறு சதவீத வாக்களிப்பு என்பதை நம் நாடு சாத்தியமாக்கும் என்பது உறுதி. மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமை கொண்ட நமது நாடும் தேர்தல் என்பதை மிகப் பெரிய பொருள்செலவுடனும் ஆள்பலத்துடனும் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. 

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 முதலே வாக்களிப்பதன் அவசியத்தை மனம் குறித்துவைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் பீடு நடைபோட்டது. பத்தாண்டுகளாக ஆட்சி வாய்ப்பை இழந்திருந்த திமுக எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்னும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எல்லாவற்றையும் சமாளித்தது திமுக. நாடாளுமன்றக் கூட்டணியை எந்தச் சேதாரமுமின்றி அப்படியே தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. 

அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து சிக்கல்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை இம்முறை தவறவிட்டது அதிமுக. பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக என்பது அதிமுகவுக்கு மிகப் பெரிய சவால். தமிழ்நாட்டில் பாஜக என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ள கட்சி. இதனுடன் கூட்டணி சேர்வது என்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல்தான். மீள்வது பெருங்கடினம். ஆனால், அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவைத் தவிர்த்துவிடவோ தள்ளிவைக்கவோ முடியவில்லை. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு. 

இது தவிர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பெரிய கேள்விக் குறி. ஆனால், அதிமுகவின் வாக்குகளைப் பெரிய அளவில் சிதைக்கும் கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை அதுவும் அதிமுக வாக்குகளைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கட்சி பெறும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது உறுதி. இது போக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒன்றும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் பெற்ற தொகுதிகளில் மூன்றைத் திரும்பக் கொடுத்து சாதனை புரிந்தது. நாம் தமிழரும் இந்தக் களத்தில் போட்டியிடுகிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இப்படியான தேர்தலில் காலையிலேயே வாக்களித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாகக் காலையில் வெயில் இல்லை. இதமான சூழலே நிலவியது. காலையில் ஏழே கால் அளவில் புறப்பட்டு நன்னகரத்தில் உள்ள எனது வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்:28) வாக்களிக்கச் சென்றேன். கறுப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். அருகருகே இரண்டு வாக்குச் சாவடிகள் இருந்தன. முதல் வாக்குச்சாவடியில் ஆண், பெண் இருபாலர் வரிசையில் பலர் நின்றிருந்தனர். நான் இரண்டாவதாக இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியதிருந்தது. அதில், பெண்கள் ஓரிருவர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். ஆண்கள் வரிசையில் பத்து பேருக்கு மேலே நின்றிருந்தனர். நான் எனது முறைக்காகக் காத்திருந்தேன். 

வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் சிலிப்பைச் சோதிப்பதற்காகவும், சானிடைஸர், கையுறை வழங்குவதற்காகவும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பூத் சிலிப்பைச் சோதித்து உள்ளே வாக்களிக்க அனுப்பினர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரால் நிற்க முடியாத காரணத்தால் எல்லாருடமும் அனுமதி பெற்று வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். வாக்களித்த பின்னர் எல்லாருக்கும் இருகை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். 

வாக்குச்சாவடியில் சுவரில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களும், வாக்காளர் குறித்த விவரங்களுக்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தன. தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இது போக நோட்டாவும் உண்டு. ஆக, மொத்தம் 19. என்னுடைய பூத் சிலிப்பைச் சோதித்துவிட்டு சானிடைஸர் வழங்கினார்கள். கைகளில் அதைப் பரவச் செய்தேன். பின்னர் கையுறையை அணிந்துகொண்டேன். பாலிதீன் கவர் போன்றிருந்தது கையுறை. சிறிது நேரத்துக்குப் பின்னர் வாக்குச்சாவடிக்குள் அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும், எதிரே அலுவலர்கள் மூவர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் தனியே அவர்களுக்கு எதிரே அவர்களுக்கு இடப்புற மூலையில் அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் நான்கு அலுவலர்கள் இருந்தனர். அனைவருமே பெண்கள்தாம். 

வரிசையாக அமர்ந்திருந்த அலுவலர்களில் எனக்கு வலப்புறம் முதலில் அமர்ந்திருந்த அலுவலர் பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று சோதித்தார். சோதித்தபின் என் பெயருக்கு எதிரே டிக் செய்து விட்டு, ரோஸ் கலர் கூப்பன் ஒன்றைக் கொடுத்தார். அடுத்து அமர்ந்திருந்த அலுவலர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார். அடுத்து இறுதியாக அமர்ந்திருந்த அலுவலரிடம் ரோஸ் நிற கூப்பனைக் கொடுத்தேன். அவர் வாக்களிக்கும் இயந்திரத்தைக் காட்டி வாக்களிக்கச் சொன்னார். வாக்கு இயந்திரம் ப வடிவ தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு காரணமாக நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பதைப் பிறர் அறியாமல் பாதுகாக்க முடிந்தது. 

வாக்கு இயந்திரத்தில் நான் யாருக்கு வாக்களிக்க விரும்பினேனோ அந்த வேட்பாளருக்கு எதிரே இருந்த பொத்தானை அழுத்தினேன். அழுத்திவிட்டு அருகிலிருந்த விவிபாட் இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் நான் வாக்களித்த வேட்பாளர் பெயரும் சின்னமும் தாங்கிய சீட்டு தோன்றி, மறைந்தது. அதன் பின்னர் இயந்திரத்திலிருந்து பீப் ஒலி எழுந்தது. வெளியே வந்துவிட்டேன். இந்த முறை வாக்களித்துவிட்டேன். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். வீட்டுக்கு வந்து வாக்களித்ததை அறிவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டேன். 

வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பத்து சதவீதத்துக்கு மேலே வாக்குப் பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக அவை இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிலை நீடித்தால் வாக்கு சதவீதம் எண்பது வரை செல்லலாம் என்று நினைக்கிறேன். 

திங்கள், மார்ச் 22, 2021

தென்காசி: 1952 முதல் 2026வரை

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பரம்பரையில் வந்திருந்தபோதும், சொந்த ஊர் குறித்த பெருமிதம் இல்லாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது சந்தேகமே. நான் 1990இல் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னடா, முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லாமல் இருக்கிறதே என நினைக்காதீர்கள். சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. சொல்லவில்லை என்றால் மறந்துபோய்விடும் என்பதால் சொல்லிவிடுகிறேன். அப்போது கீழக்கரையில் இருந்த ஒரு வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். அந்த வங்கி அலுவலர் என் பெயரைக் கேட்டார். என் பெயரைக் கூறினேன். எந்த ஊர் தென்காசியா என்று அடுத்த கேள்வியைப் போட்டார். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. எப்படிக் கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்டேன். இல்ல அந்த ஊருலதான் இப்படிப் பெயர் வைப்பார்கள் என்று பட்டென்று சொன்னார். 

அப்படிப் பலரிடமும் பெயர் பெற்றிருந்த தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பற்றிய ஒரு புள்ளிவிவரக் குறிப்புகளை எழுதவிருக்கிறேன். அதனால், தான் ஊரின் பெருமையுடன் தொடங்கினேன். விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் தேர்தல் 1951இல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் மூன்று வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் 72.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 59,153. தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை 2,783 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் 44.53 சதவீத வாக்குகளைப் பெற்றார்; பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 26,340. சுயேச்சையாகப் போட்டியிட்ட சேவுக பாண்டிய தேவர் 23,557 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறார். 

அடுத்த தேர்தல் 1957இல் நடைபெற்றது. திமுக முதன்முறையாகக் களம் கண்ட தேர்தல் இது. இந்த முறையும் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டிருக்கிறார்கள். 71.72 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். பதிவான மொத்த வாக்குகள் 58,887. காங்கிரஸ் கட்சியிடமிருந்து தொகுதியை சுயேச்சை வேட்பாளரான சட்டநாதக் கரையாளர் கைப்பற்றியுள்ளார். அவர் 31,145 வாக்குகளைப் பெற்றுள்ளார். 52.89 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர் தன்னை அடுத்து வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ ஏ சிதம்பரம் பிள்ளையைவிட 5,646 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  25,499 வாக்குகளைப் பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 43.3.


1962இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் ஆறு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். மொத்தம் 75.31 சதவீத வாக்குகளான 69,171 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில், 2,198 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருக்கின்றன; பத்து வாக்குகள் தொலைந்துவிட்டன. எஞ்சிய வாக்குகளில் 29,684 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஏ.ஆர்.சுப்பையா முதலியார். அவர் பதிவான வாக்குகளில் 44.33 சதவீதத்தைப் பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்றிருந்தவர்  முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ரெபாய் சாஹிப். இவருக்கு 16,822 வாக்குகள் கிடைத்திருந்தன. இது பதிவான வாக்குகளில் 25.21 சதவீதம். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 12,802.

காங்கிரஸிடமிருந்து ஆட்சியைத் திமுக கைப்பற்றிய 1967இல் நடைபெற்றது அடுத்த தேர்தல். ஆட்சியைத் திமுக கைப்பற்றியிருந்தபோதும் தென்காசி தொகுதி காங்கிரஸ் வசமே தொடர்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஐ.ஏ.சி.பிள்ளை, 34,561 வாக்குகளைப் பெற்று வென்றார். அவர் தனக்கு அடுத்த இடத்திலிருந்த திமுக வேட்பாளர் சம்சுதீனைவிட வெறும் 743 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றிருந்தார்; அவர் பெற்ற வாக்கு சதவீதம் 49.86. திமுக வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகள் 33,818; இது பதிவான வாக்குகளில் 48.79 சதவீதம். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 71,190 அதில் செல்லாதவை 1,872. ஆக, செல்லத்தக்க வாக்குகள் 69,318. இந்தத் தேர்தலில் மூவர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர். 

1971 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணா இறந்தபிறகு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. வரலாறு காணாத வெற்றியில் தென்காசித் தொகுதியும் பங்கெடுத்துக்கொண்டது. தங்களுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸிடமிருந்து தொகுதியைத் திமுக பெற்றுக்கொண்டது. கதிரவன் என்ற சம்சுதீன் இந்தத் தேர்தலில் தென்காசித் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சார்பில் தென்காசியிலிருந்து சட்டப் பேரவைக்குச் சென்ற முதல் வேட்பாளர் என்னும் பெருமையையும் பெற்றார். 72,423 வாக்குகள் பதிவாயின. அவற்றில் 2,163 வாக்குகள் செல்லாதவை. எஞ்சிய வாக்குகள் 70,260. திமுக வேட்பாளர் தன்னையடுத்த வேட்பாளரைவிட 7,960 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 39,110; வாக்கு சதவீதம் 55.6. இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் ஐ சி ஈஸ்வரன் இருந்தார். அவர் பெற்ற வாக்குகள் 31,150; வாக்கு சதவீதம் 44.34. இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள் இருவர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர். 


எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின்னர் 1977ஆம் ஆண்டில் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. தென்காசி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளரான எஸ் முத்துசாமி கரையாளர் 41.36 சதவீத வாக்குகளான 30,763 ஐப் பெற்று வென்றார். இரண்டாமிடத்தைப் பெற்றவர் சுயேச்சை வேட்பாளரான ஜே அப்துல் ஜப்பார். அவர் 18,489 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது பதிவானவற்றில் 25.26 சதவீதமாகும். மொத்தம் பதிவான வாக்குகள் 74,171. இதில் செல்லாதவை 977. மொத்தம் ஐவர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்டவர் வை.பாண்டிவளவன்.

அடுத்த தேர்தல் 1980இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. 74,565 வாக்குகள் பதிவாயின. இதில் 1,108 வாக்குகள் செல்லாதவை. அதிமுக சார்பில் போட்டியிட்ட சட்டநாதக் கரையாளர் தன்னையடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் டி ஆர் வேங்கடரமணனைவிட 675 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிபெற்றார். வெற்றிவேட்பாளரின் வாக்குகள் 36,638 (49.88%), தோல்வி பெற்ற வேட்பாளர் வாங்கிய வாங்குகள் 35,963 (48.96%).  மொத்தம் நால்வர் போட்டியிட்டிருந்தனர்.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகான தேர்தல் 1984 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு. கருணாநிதி போட்டியிடவில்லை. திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. கடந்த முறை தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த டி ஆர் வேங்கடரமணன் இந்த முறை 57,011 (60.45%) வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மா.குத்தாலிங்கத்தைத் தோற்கடித்தார். திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள் 35,383 (37.52%). வாக்குவித்தியாசம் 21,628. இந்த முறை மொத்தம் 99,409 வாக்குகள் பதிவாயின. இதில் 5,097 வாக்குகள் செல்லாதவை. தேர்தலில் மொத்தம் ஐவர் போட்டியிட்டிருந்தனர்.

எம்.ஜி.ஆர். இறந்தபிறகு, 1989இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக இரு அணிகளாக நின்று தேர்தலைச் சந்தித்தன. இந்த முறை தென்காசி தொகுதியில் 13 பேர் களமிறங்கியிருந்தனர். முதன்முறையாக இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டது இதுவே முதன்முறை. இம்முறை 1,11,533 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 2,285 வாக்குகள் செல்லாதவை. காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட்டு வென்றார். 39,643 (36.29%) வாக்குகளைப் பெற்று திமுகவின் பாண்டிவளவனை 6,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாண்டிவளவன் 33,049 (30.25%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.  


இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991இல் தேர்தல் நடைபெற்றது. இம்முறை 11 பேர் களத்தில் இருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸே போட்டியிட்டு 36,879 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுக சார்பில் போட்டியிட்டவர் எஸ்.ராமகிருஷ்ணன். பீட்டர் பெற்ற வாக்குகள் 65,142 (62.105). திமுகவுக்கு 28,263 (26.94%) வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன. மொத்தம் 1,08,739 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை 3,813. இந்த முறை 33 வாக்குகள் தவறிப்போயிருந்தன.  பாஜக முதன்முறையாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது.

ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்ட 1996 தேர்தலில் தென்காசியை திமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகாவின் வேட்பாளரான ரவி அருணன் கைப்பற்றியிருந்தார். 1,19,984 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாத வாக்குகள் 4,946. மூன்று பேரின் வாக்குகள் ஏற்கெனவே போடப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆலடி சங்கரய்யாவை 30,760 வாக்குகள் வித்தியாசத்தில் ரவி அருணன் வென்றிருந்தார். அவருக்கு 60,758 (52.82%)வாக்குகள் கிடைத்திருந்தன. சங்கரய்யா 29,998 (26.08%) வாக்குகளை மட்டுமே பெற்றார். தேர்தலில் இருபது பேர் போட்டியிட்டனர். முதன்முறையாக பெண் ஒருவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

2001இல் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இம்முறை 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றியது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 62,454 (51.41%) வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்து வந்த திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனைவிட 8,792 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.  திமுக வேட்பாளர் 53,662 (44.18%) வாக்குகளைப் பெற்றிருந்தார். மொத்தம் 1,21,695 வாக்குகள் பதிவாயின. இதில் செல்லாதவை 222; ஏற்கெனவே பிறரால் போடப்பட்ட வாக்குகள் 8. தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர்.

மைனாரிட்டி அரசு என்னும் பெயரைத் திமுகவுக்குப் பெற்றுத்தந்த தேர்தல் 2006இல் நடைபெற்றது. 2001இல் தொகுதியைத் தவறவிட்ட கருப்பசாமி பாண்டியன் 18,658 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை தொகுதியைக் கைப்பற்றிக்கொண்டார். 1,40,149 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை, ஏற்கெனவே போடப்பட்டவை போன்றவை போக மீதி 1,39,570. கருப்பசாமிக்கு 69,755 (49.97%) வாக்குகள் கிடைத்திருந்தன. அவரையடுத்த வாக்குகளைப் பெற்றிருந்த மதிமுகவின் இராம உதயசூரியனுக்குக் கிடைத்தவை 51,097 (37.41%). பதினோரு பேர் போட்டியிட்டனர் இந்தத் தேர்தலில். 1996இல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவி அருணன் பாஜக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.


2011இல் நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவின் வேட்பாளரான சரத்குமார் 22,967 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றியிருந்தார். சென்ற முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் கருப்பசாமி பாண்டியன் தோல்வியைத் தழுவினார். சரத்குமாருக்கு 92,253 (54.3%) வாக்குகளும், கருப்பசாமிக்கு 69,286 (40.78%) வாக்குகளும் கிடைத்திருந்தன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 1,69,910. மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டிருந்தனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவே தக்கவைத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை போட்டியிட்டவர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன். வெறும் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார். அதிமுகவுக்கு 86,339 (42.58%) வாக்குகளும், காங்கிரஸுக்கு 85,877 (42.35%) வாக்குகளும் கிடைத்திருந்தன. நோட்டாவுக்கு 3,379 வாக்குகள் கிடைத்திருந்தன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸுக்கு 7,324 வாக்குகள் கிடைத்திருந்தன. முதன்முறையாக செல்வி என்னும் பெண் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.  

மோகன் தாஸ் பாண்டியன்

தென்காசி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் ஏழு முறையும் அதிமுக நான்கு முறையும் திமுக இரு முறையும் சுயேச்சை ஒரு முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளன. அதிக வாக்குகள் பெற்று வென்றவர் 2011 தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார். பெற்ற வாக்குகள் 92,253. அதிக சதவீதம் பெற்று வென்றவர் 1991 தேர்தலில் பீட்டர் அல்போன்ஸ், சதவீதம் 62.1. இத்தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில், 36,879, வென்றவர் எனற பெருமையும் அவருக்குத்தான். மிகக் குறைந்த சதவீதத்தில் வென்றவரும் அவர்தான் 1989 தேர்தலில் 36.29 சதவீத வாக்குகளே  அவருக்குக் கிடைத்தன. 1989, 1991 ஆகிய இரண்டு முறை அடுத்தடுத்து வென்றவரும் அவர்தான். குறைந்தபட்சமாக 1971இல் இருவரும் அதிகபட்சமாக 1996இல் 20 பேரும் போட்டியிட்டிருந்தனர்.  

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பாத்திமா என்னும் பெண் ஒருவர் உள்ளிட்ட 34 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களில், 13 பேரின் வேட்பு மனுக்கள் (பாத்திமாவுடைய மனுவையும் சேர்த்து) தள்ளுபடி செய்யப்பட்டன; மூவர் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். மீதி 18 பேர் களம் கண்டார்கள்.  கடந்த தேர்தலில் மோதிய செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் பழனி நாடாரும் மோதினார்கள். கட்சி சார்ந்த வாக்குகள் அடிப்படையிலும் பொதுவான மனநிலையிலும் பார்த்தால் காங்கிரஸ் கட்சி எளிதாக வென்றுவிடும் என்றுதான் தோன்றியது. கள நிலவரம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக எதுவும் இருப்பதுபோலும் தெரியவில்லை. ஆனாலும், மக்கள்தீர்ப்பை அறிந்துகொள்ள  மே 2 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.  

பழனி நாடார்

தென்காசி தொகுதியின் முடிவு மே 2 அன்று இரவில்தான் வெளியானது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார். மொத்தம் வாக்கு எண்ணப்பட்ட 30 சுற்றுக்களில்  5, 6 ,7, 9, 14, 21, 22, 24, 26, 27, 28, 29, 30 ஆகிய சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இருந்தபோதும், வாக்கு இயந்திரத்தின் எல்லாச் சுற்றுகளையும் சேர்த்து பழனி நாடார், 87,706 வாக்குகளே பெற்றிருந்தார்; அதிமுக வேட்பாளருக்கு 88,271 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், தபால் வாக்குகள் பழனி நாடாருக்குக் கைகொடுத்துள்ளன. அவருக்குக் கிடைத்திருக்கும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை 1,609; அதிமுகவுக்கு 674. ஆக, பழனி நாடார் பெற்ற மொத்த வாக்குகள் 89,315; அதிமுக 88,945. ஒருவழியாக பழனிநாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் தென்காசி தொகுதியைக் கைப்பற்றிவிட்டார். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஆர் வின்செண்ட்ராஜ் 15,336 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நோட்டாவுக்கு 1,159 வாக்குகள் கிடைத்திருந்தன. எப்படியோ நூலிழை வித்தியாசத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸின் கைக்கு வந்துவிட்டது. 

தென்காசி தொகுதியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், 16 மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 5 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. 26 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. கு. முத்து, ஆ. மாரியப்பன்,  மா.பொன்னுத்துரை, பொ. நோபிள் கிருஷ்ணா, சி.துரைராஜ், ச.தங்கப்பழம், மு.சாகுல் ஹமீது, மா.காளியப்பன், ச.கணேசன், ரா.ராம்குமார், க.பூர்ணசெல்வன், ரா.கிருஷ்ணன் ஆகியோர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அ.ராஜாபிரகாஷ் என்பவர் போட்டியிட்டார். காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சௌ.மனோகரன் என்பவர் போட்டியிட்டார். நாம் இந்தியர் கட்சி வேட்பாளராக ரா.செல்வகுமார் என்பவர் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, பா.புஷ்பலதா வேட்பாளராக நின்றார். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மு.பூசதுரை வேட்பாளராக நின்றார். புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் சோ. திருமலைக்குமார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளராக நின்றவர் க. கோமதி சங்கர். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராகக் களம் கண்டவர் த.இசக்கி பாண்டியன். 

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டாக்டர் கலை கதிரவன் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குப் பின்னர் இம்முறைதான் தென்காசியில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதிமுக சார்பில் சி.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே 2016 ஆம் தென்காசியில் வென்றவர். அதே நேரம் 2021இல் தோற்றவர். தென்காசியைப் பொறுத்தவரை 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தொகுதியில் நேரடியாக மோதியது. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 82.43 விழுக்காடு வாக்குப் பதிவானது. இறுதியாக தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவல் படி, 82.37 விழுக்காடு வாக்கு பதிவாகியிருந்தது. ஆண்கள் 1,10,971 பேரும் பெண்கள் 1,20,954 பேரும் மாற்றுப் பாலினத்தினர் 45 பேரும் என மொத்தம் 2,31,970 பேர் வாக்களித்திருந்தனர். 



வாக்கு எண்ணிக்கை 2026 மே 4 அன்று நடைபெற்றது. முதல் மூன்றாம் சுற்றுவரை அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வந்தார். நான்காம் சுற்றில் திமுக வேட்பாளருக்கு அதிகம் வாக்கு கிடைத்திருந்தது. ஐந்தாம் சுற்று முதல் திமுகவின் கலை கதிரவன் முன்னிலை பெற்று இறுதியில் 79,699 (33.92%) வாக்குகள் பெற்று தமக்கு அடுத்துவந்த அதிமுக வேட்பாளரைவிட 10,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 69,400 (29.53%). இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் 55,543 (23.64%) வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. இத்தொகுதியில் மொத்தம் 3,019 அஞ்சல் வாக்குகள் பதிவாகின. இதில் திமுகவுக்கு 1164 வாக்குகளும், அதிமுகவுக்கு 774 வாக்குகளும் தவெகவுக்கு 614 வாக்குகளும் கிடைத்துள்ளன. 

ஞாயிறு, மார்ச் 14, 2021

கடவுள் வருவாரா, மாட்டாரா?

அவன் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தான்.

திடீரென ஒருவர் அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். அவரை எங்கேயும் பார்த்ததுபோல் நினைவில்லை. எனவே, அவன் அவரைக் கேள்வியுடன் பார்த்தான்.
என்னை எங்கேயும் பார்த்ததில்லை என்று யோசிக்கிறாயா என்று கேட்டார்.
சட்டென்று ஒருமையில் பேசும் அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்கிறாரே என்னும் எரிச்சலில் அவர் யார் எனப் புருவம் உயர்த்தினான்.
ஒருமையில் பேசியதால் உனக்கு எரிச்சலா என்று கேட்டார்.
எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறாரே எனக் கோபமே வந்துவிட்டது அவனுக்கு.
சரி கோபப்படாதே என்றார்.
அவனது கோபம் எல்லை மீறிவிடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது.
நீங்க என்ன பெரிய கடவுளா என்று கோபத்தையும் எரிச்சலையும் அடக்கிக்கொண்டு கேட்டான்.
அவர் முகம் சட்டென்று மலர்ந்தது. எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தாய் என்று கேட்டார்.
எதுவும் நட்டு கழன்ற கேஸோ என்று கூர்ந்து பார்த்தான்.
மனிதர்களுக்குத்தான் புத்தி பேதலிக்கும் நான் கடவுள் என்றார்.
ஒருவேளை பாலா படங்களைப் பார்த்து அதனால் ஏற்பட்ட நிலைமையோ என்று யோசித்தான்.
உனக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லையா, எனக் கேட்டார்.
எப்படி இருக்க முடியும்? என்று கேட்டான்.
இப்படித்தான் என்று தன்னைக் காட்டினார்.
அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. சரி இருந்துவிட்டுப் போங்கள். எனக்கு வழிவிடுங்கள் எனக்கு வேலை இருக்கிறது என்று சொன்னான்.
என்னைவிட முக்கியமான வேலை என்றால் நீ இன்னும் என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன் என உரையாடலைத் தொடர்ந்தார்.
அவரது உரையாடல் அவனுக்கு அலுப்பைத் தந்தது. இதென்னடா வம்பாகப் போய்விட்டது. இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று நினைத்தான்.
பெரிய பகுத்தறிவு பேசுற ஆனால் யார் முகத்தில் முழித்தோம் என யோசிக்கிறாயே என்றார் அவர் விடாமல்.
ஒருவேளை கடவுள் தானோ என்று சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. தனது நம்பிக்கையின் மூல வேரை அறுக்க முயல்கிறாரே என்ற கோபம் வேறு சேர்ந்துகொண்டது.
சரி நான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால்தான் நம்புவாயா என்று கேட்டார்.
ஆமாம் என்று பலமாகத் தலையாட்டினான்.
என்ன வேண்டும் சொல் என்றார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் உங்களை நம்புகிறேன் என்றான்.
படுபாவி கடவுளாலேயே செய்ய முடியாத விஷயத்தைக் கேட்கிறானே என நினைத்தாரோ என்னவோ அவனைத் தர்மசங்கடத்துடன் பார்த்தார். ஆனால், சரி செய்கிறேன் என்றார்.
அவன் ஆச்சரியத்துடன் உங்களால் முடியுமா என்று கேட்டான்.
இனி எதையும் மே 2 அன்று கேள். அன்று மாலை உன்னை மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
மே 2 அன்று அவர் வருவாரா, மாட்டாரா?

அஞ்சலி: எஸ்.பி.ஜனநாதன்: இயற்கையோடு கலந்த இயக்குநர்


1959 மே 7 அன்று பிறந்த எஸ்.பி.ஜனநாதன் இன்று, 14.03.2021 அன்று, உயிரிழந்திருக்கிறார். ஓரிரு நாள்களுக்கு முன்னர் (மார்ச் 11 அன்று) மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீண்டு வந்துவிட வேண்டுமென்று திரைத்துறையினர் விரும்பிக்கொண்டிருந்த சூழலில் இயற்கை அதற்கு ஒத்துழைக்கவில்லை. பெரிய அளவிலான கல்வி அறிவு இல்லாதபோதும், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் வாழ்க்கைக் கல்வியைக் கற்றிருக்கிறார் ஜனநாதன். படிப்பறிவில்லாத பெற்றோருக்குக் கடைசி மகனாகப் பிறந்த ஜனநாதன் எம்.ஜி.ஆர். படங்கள் வாயிலாகவே திரைத்துறைக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார். 

பி.லெனினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜனநாதன் மலையாள இயக்குநர் பரதன், இயக்குநர் கேயார் ஆகியோரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் 2003இல் வெளியான ‘இயற்கை’ படம் இவரது முதல் படம். ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிருடன் இருந்தால் வருகிறேன்...’ என்னும் பிரபலப் பாடல் இடம்பெற்ற இந்தப் படம் தேசிய விருதை வென்றது. சிறந்த தமிழ்ப் படம் என்னும் விருதை வென்ற இதன் கதை தஸ்தயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுக’ளைப் போன்ற அம்சத்தைக் கொண்டிருக்கும். இந்தப் படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஈ’ (2006), ‘பேராண்மை’ (2009), ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ (2015) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள ‘லாபம்’ என்னும் திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால், வெளியாகும் நிலையில் இருந்தது. இத்தகைய சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. 

தமிழின் பெருமைமிகு இயக்குநராக ஜனநாதனை முன்னிருத்தும் வகையில் அவர் திரைப்படங்களை உருவாக்காதபோதும், குறிப்பிடத்தக்க இயக்குநராகத் தனது படைப்புகளைத் தந்தவர். அவருடைய படங்களில் ‘இயற்கை’, ‘ஈ’ ஆகியவை ஓரளவு நல்ல படங்கள் எனச் சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் நற்பெயர் எடுத்திருப்பவராகவே ஜனநாதன் உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியிலும் திரை ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.  

திங்கள், மார்ச் 08, 2021

கொன்றது நீதானா சொல் சொல்...


கடற்கரையில் அந்தக் குடும்பத்தினர் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கே வரும் சீருடைக் காவலர்கள் விசாரணைக்காக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். இப்படித்தான் த கேர்ள் வித் எ ப்ரேஸ்லெட் படம் தொடங்குகிறது. ஏன், என்ன, எதுவெனப் புரியாமல் நாம் நிமிர்ந்து உட்காரும்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எனப் படம் தொடர்கிறது. லீஸ் பத்தைல் என்னும் அந்த இளம் பெண் தனது அருமைத் தோழியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும் நீதிமன்றக் காட்சிகளாகவே படம் நகர்கிறது. லீஸ் கொலைசெய்திருப்பாளா இல்லையா அவள் விடுவிக்கப்படுவாளா தண்டனை பெறுவாளா என்னும் கேள்விகளுடன் நாம் படத்தைத் தொடர வேண்டியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதத்தின் வழியே கொலைக் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் 2016 ஜூன் 7 அன்று என்ன நடந்தது என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், கொலைச் சம்பவத்தின் எந்தக் காட்சியும் இறுதிவரை நமக்குக் காட்டப்படுவதேயில்லை. அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள சடலத்தின் புகைப்படம் மட்டுமே நமக்குக் காட்டப்படுகிறது. ஆறேழு இடங்களில் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார் அந்தப் பெண். குற்றம்சாட்டப்பட்டுள்ள லீஸ் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். விசாரணையின்போது, தேவைக்காக மட்டுமே பேசுகிறார். மற்றபடி உறைந்தநிலையிலேயே இருக்கிறார். இது பற்றி அரசாங்க வழக்கறிஞர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். 

ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது, அவரது நடத்தை பூரணமாகக் கவனிக்கப்படுகிறது. அவர் குற்றம்செய்தவரா இல்லையா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளும் நடைமுறைகளில் அவரது நடத்தை எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்சிகளின் மூலம் இயக்குநர் எடுத்துவைக்கிறார். ஆனால், இதையெல்லாம் வைத்து நீதியை முடிவுசெய்ய முடியாது என்பதையும் அவர் சொல்கிறார். 

பருவ வயதுப் பெண்ணின் நடத்தைகள் குறித்த புரிதலை உருவாக்கும் எண்ணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பருவ வயதினரின் உடம்பு பற்றிய புரிதல் முந்தைய தலைமுறையால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையும் படம் விசாரிக்கிறது. லீஸுக்கும் அவளுடைய தோழிக்கும் இடையே உடல்ரீதியான மகிழ்ச்சிப் பரிமாற்றம் இருந்துள்ளது. கொலை நடந்ததற்கு முந்தைய நாளின் இரவில்கூட இருவரும் ஒரே படுக்கையைப் பகிர்ந்திருக்கிறார்கள்; முத்தமிட்டிருக்கிறார்கள்; பரவச நிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அது குறித்து அவளுக்கு அசூயையோ தவறென்ற எண்ணமோ இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை அளித்துக்கொண்டோம் என்றுதான் லீஸ் கூறுகிறாள். பெரும்பாலும் மூத்த தலைமுறையினரால் நிறைந்துள்ள அந்த நீதிமன்றத்தில் அந்த இளம் பெண்ணின் உண்மையான பேச்சு ஒருவிதமான நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்துகிறது.  

ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சம்பவம் அவளுடைய அவளது குடும்பத்துடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை யோசிக்கச் செய்யும் வகையிலேயே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இளம் பெண் ஒருவருக்குத் தன் உடல் குறித்த பார்வை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் புரிதல் முதிய தலைமுறையினருக்கு வேண்டும் என்னும் கோணம் படத்தில் நம் கவனத்தைக் கோருகிறது. 

இளம்பெண்ணின் தனிப்பட்ட சுகதுக்கங்களைப் பற்றி அறிய நேரும் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் அதே வேளையில் அதன் இயல்புத்தன்மை குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஆகியவற்றைக் கதாபாத்திரங்கள் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளன. அடிப்படையில் சினிமா என்பது ஒரு புனைவாக இருந்தபோதும், அது நமது வாழ்வின் சிக்கலைத் தீர்த்துவைக்க ஏதாவது ஒரு வகையில் முயன்றுகொண்டே இருக்கிறது. இந்தப் படம் 2018இல் வெளியான த அக்குயிஸ்டு என்னும் பெயரில் வெளிவந்த அர்ஜெண்டினா நாட்டுப் படத்தின் மறு ஆக்கம். 

மாறும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. சட்டதிட்டங்கள் பழைய மரபையும் பாரம்பரியத்தையும் மட்டுமே தூக்கிப் பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமான தீர்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தல் தொடர்பான தீவிரமான கேள்வியை எழுப்பியிருக்கும் காரணத்தால் இந்தப் படத்தைப் பார்ப்பது மிகவும் பயனுள்ள செயலாகவே படுகிறது. எதேச்சையான சம்பவங்களைக் கண்டு அவற்றை குற்றம்சாட்டப்பட்டவரின் நடத்தையுடன் முடிச்சிட்டுக் குற்றங்களைப் பொதிந்துள்ள புதிரின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்வது ஒருவகையான அபத்தமே என்பதைப் படம் மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. 

வியாழன், பிப்ரவரி 11, 2021

எழுத்தாள மனசு

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு கதையின் முதல் வரி முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்பார்கள் ஆனால், முதல் வரியே இந்தக் கதையில் இப்படி மொக்கையா தொடங்குதே, கதை எந்த லட்சணத்துல இருக்குமோ என எடுத்த எடுப்பிலேயே எதிர்மறையா யோசனை போவுதா? மனசை அப்படிக் கண்டபடி அலையவிடாதீங்க. எல்லாத்துலயும் ஒரு விதிவிலக்கு இருக்கும். அதனால என்னதான் சொல்றான்னு பார்ப்போம், பிடிச்சா படிப்போம் இல்லாட்டிப் போய்டுவோம் என அதை சமாதானப்படுத்துங்கள். பரவாயில்லயே, சொன்ன உடனே அதுக்கு மதிப்புக் கொடுத்து மனச சமாதானப்படுத்தி தொடர்ந்து வாசிக்கிறீங்களே, அந்த நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது தைரியமா வாசிங்க. அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கதையைச் சொல்லுன்னு நீங்க தலையில் தட்டுவதற்குள் நான் கதையைச் சொல்லிவிடுகிறேன்.

கதையில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துரப்போவுது என அலுத்துக்கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை. கதையைவிட உண்மைச் சம்பவத்துல நல்ல சுவாரசியம் இருக்குங்கிறது உங்களுக்குத் தெரியும்லா? ஆனா அதை அப்படியே சொன்னால் சுவையா இருக்காதுல்ல அதனால அத கதையா மாத்திட்டேன். இப்ப இது சுவாரசியமான கதையா ஆயிருச்சு. இது சுவாரசியமான கதையா இல்லையாங்கிறத வாசிக்கிற நாங்கல்லா முடிவுபண்ணனும்னு நீங்க நினைக்கிறது சரிதான். கதையை எழுதுற நான் என்னதான் அடக்கமா இருந்தாலும் கதையைப் பற்றிய உண்மையைச் சொல்லாட்டி நான் கதைக்குத் துரோகம் செஞ்சவனா ஆயிரக்கூடாதுல்லா? அதனால்தான் கதை சுவாரசியமானதுன்னு உண்மையைச் சொன்னேன். அது கதையன்று கதை பற்றிய நிஜம். கதைக்குள்ள உண்மையும் இருந்தாதான நல்லது. ஆனா, நீ கடைசி வரை கதையைச் சொல்ல மாட்டபோல என உங்களுக்கு இந்த நேரம் தோனியிருக்கும். அதனால கதைக்குள்ள போறன்.
இந்தக் கதையைக் கொஞ்சம் குஷியா தொடங்குறேன். குஷின்ன உடனே குஷியாயிட்டீங்களா. இடுப்பு கிடுப்புன்னு மனசு எங்கெங்கோ போயிராம பாத்துக்கங்க. அது உங்க பாடு. என்னோட பாடு கதை சொல்றதுதான். பொதுவா, நம்மோட ஃப்ரண்ட்ஸ் நமக்கு எப்படியெப்படியெல்லாமோ உதவுவாங்க. சில வேளைல இப்படியெல்லாம் உதவ முடியுமான்னு நமக்கு திக்பிரமை ஏற்படுற மாதிரி உதவிடுவாங்க. அப்படியொரு நண்பனின் உதவிதான் இந்தக் கதை. இப்ப புரியுதா ஏன் குஷியா தொடங்குறதா சொன்னன்னு. நாம்பாட்டுக்கு குஷின்னு சொல்லிட்டேன். நீங்க குஷி பார்த்திருக்கீங்களான்னு கேக்கவேயில்ல? ஆனா பாத்துருப்பீங்கங்க நம்பிக்கையில் தொடர்றேன். சில லாஜிக் பார்த்தா கதை நகராது. ஏற்கெனவே இங்க அப்படியே செக்குலக்கை மாதிரி கதை ஒரே இடத்திலதான் நட்டமா நிக்குது அப்படீங்கிறீங்களா? கதையோட சுருக்கத்தைச் சொல்லிட்டானே இனி ஏன் இதை வாசிக்கணும்னு உங்களுக்குத் தோனலாம். தப்பில்ல, ஆனா என்ன உதவின்னு பாப்பமேன்னு உங்க மனசு இப்ப உங்கட்ட சொல்லும் பாருங்க. அது நம்ம பக்கம் சாஞ்சிருச்சு. நெனப்புதான் பொழப்ப கெடுக்குதாம் என்னும் பழமொழியை இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாம நெனைக்கீங்க.
இந்தக் கதை ரொம்ப கலோக்கியலாவும் சாதாரணமாவும் தொடங்குனாலும் இதன் முடிவு ரொம்ப சோகமா இருக்கும். சோகமா, அது பிடிக்காதேன்னு டக்குன்னு வாசிப்புக்கு குட்பை சொல்லப் பாக்குறீங்களே கொஞ்சம் பொறுமையா இருங்க. முடிவு சோகமாக இருந்தாலும் நீங்க அந்தச் சோகத்துக்காகக் கண்ணீர் விடமாட்டீங்க. அந்தச் சோகத்தை நெனச்சு சிரிக்கத்தான் போறீங்க. சோகமான விஷயத்துக்கு எப்படிச் சிரிப்பு வரும்னு ஒரு யோசனை வருதா. இப்ப யாராவது வாழப்பழத் தோல் வழுக்கி விழுந்தா அது சோகமான நிகழ்வுதான? ஆனால், அதுக்கு வருத்தப்படுவீங்களா, சிரிப்பீங்களா. வருத்தப்படுவோம் ஆனால் சிரிப்பு வந்துரும் அப்படிங்கிறீங்களா. நீங்க இந்த அளவு வெளிப்படையா உண்மையைச் சொல்லும்போது நானும் உண்மையைத்தான சொல்லணும். அதனாலதான் கதையோட முடிவு எப்படி இருக்கும்னு முன்னாடியே சொல்லிட்டேன் ஆனா சொல்லல. இன்னும் டீ வரலன்னு வட போச்ச காமெடியில் வடிவேலு சொல்றமாதிரி இன்னும் கதை வரலன்னு நீங்க சொல்லப்போறீங்கன்னு எனக்கும் தெரியுது.
இந்தக் கதையின் நாயகன் ஓர் எழுத்தாளன். டக்குன்னு தலைப்பைப் படிச்சீங்க பாரு அங்க நிக்கிறீங்க. உங்களோட சமயோஜிதப் புத்திக்கு ஒரு சபாஷ். அவன் எப்டியாப்பட்ட ஆளுன்னா, சுஜாதா மாதிரி, ஜெயமோகன் மாதிரி, தமிழ்வாணன் மாதிரி, ஜி.எஸ்.எஸ்.மாதிரி (ஜி.எஸ்.எஸ். யாருன்னு தெரியாட்டா நீங்க சமகாலச் செய்திப் பத்திரிகைகளை வாசிச்சிருக்க மாட்டீங்க அல்லது அத கவனத்தில் வைத்திருக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏனெனில், ஜி.எஸ்.எஸ். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மலை மலையா எழுதுறாரு.) என்னன்னாலும் அசராம எழுதுற ஆளு. அவன் ஒரு தொலைபேசி நிறுவனத்துல அதிகாரியா இருந்தான். அங்க அவனுக்கு வேலையே இருக்காது. எந்த வேலையும் இல்லையேன்னு எழுத ஆரம்பிச்சான். ஒருத்தனுக்கு நேரம் நல்லாயிருந்தா அவன் என்ன செஞ்சாலும் சும்மா மஜாதாம்பாங்க. அப்படி தான் அவனுக்கு ஆயிருச்சு. அவன் என்ன எழுதினாலும் எல்லாரும் படிக்க ஆரம்பிச்சாங்க. படிச்சதோட நிறுத்திட்டாப் பராவாயில்ல. சூப்பர் சூப்பர்னு சும்மா அவனப் பாராட்டித் தள்ளிட்டாங்க. அதனால அவன் துணிச்சலா ஒரு வேலையைச் செய்தான்.
அது எப்படிங்க, துணிச்சலா ஒரு வேலையை எழுத்தாளன் செய்தான்னு சொன்ன உடனே அது நாவல்தான்னு முடிவு பண்ணுனீங்க? உண்மையிலேயே உங்களுக்கு செம அறிவுங்க. அப்படியில்லாட்டி நீங்க எதுக்கு இந்தக் கதையைப் படிக்கப் போறீங்க? கோவிச்சுக்காதீங்க. இது சும்மா இடையில் ஒரு விளம்பரம்தான். பிடிக்காட்டி இதைப் படிச்சத மறந்துட்டு மேல படியுங்க. என்னங்க படிச்ச வரிய மறுபடி படிக்கிறீங்க. ஓ மேலன்னு சொன்னதாலயா, அய்யய்யோ சாரிங்க மேலன்னா மேல இல்ல, கீழ. அப்ப கீழன்னா கீழ இல்லயா மேலயான்னு சட்டுனு கோபப்படுறீங்களே? இது ஒரு காமெடிக் கதைதான. அதுக்குப் போய் இவ்வளவு கோபமா? ஓ புரியுது இதை காமெடி கதைன்னு சொன்னதாலதான் கோபமா? பாத்தீங்களா நமக்குள் ஒரு அன்னியோன்யமான உறவு வந்துருச்சு. இதுதான் ஒரு கதைக்கு அவசியம். எழுத்தாளனும் வாசகனும் ஏதாவது ஒரு கட்டத்தில் இப்படி ஒருத்தருக்கொருத்தர் பேசி உறவாடுவதும் உரையாடுவதும் ரொம்ப ஆரோக்கியமானதுதான். டேய் சவ்வப்போடாம கதைக்கு வாடா? வாடான்னா நான் வாட மாட்டேன். ஏன்னா அது உங்களுக்கு இந்தக் கதைமேல உள்ள உரிமையில வந்த வார்த்தைன்னு எனக்கும் தெரியும். கதை சொல்றதத் தவிர எல்லாம் உனக்குத் தெரியுதுடான்னு நீங்க கொஞ்சம் சத்தமாவே சொல்லிட்டீங்க. அமைதியா சொன்னாவே எனக்குக் கேட்கும் ஆனா நீங்க சத்தமாவே சொல்லிட்டாதாலே. சட்டுனு என் காதில் விழுந்திருச்சு. உனக்கு காதே விழுந்துருச்சுன்னு நெனச்சோம். நல்லவேளை காது இன்னும் இருக்குதுன்னு சொல்றன்னு ஆசுவாசம் அடைஞ்சிட்டீங்களே. சமத்துதான் நீங்க.
ஆங் கதையை எங்க விட்டேன்? என்னடா தீப்பொறி ஆறுமுகம் மாதிரி கேக்குறன்னு நினைக்காதீங்க. எனக்குக் கொஞ்சம் ஞாபக மறதி. இது வேறயா? உருப்பட்ட மாதிரிதான்னு தோனுதா? ஞாபகம் வந்துருச்சு. ஞாபகம் வந்துருச்சு. நாயகனான நம்ம எழுத்தாளன் ஒரு நாவலை எழுதினான். கிட்டத்தட்ட எழுத்து ஒரு தவம்னு சொல்ற மாதிரி கடுமையான தவம் பண்ணுன மாதிரி நாவலை முழு மூச்சா எழுதி முடிச்சான். மொத நாவல எழுதி முடிச்ச உடனே அவனுக்கு அப்படியே சும்மா கிர்ர்ர்ர்ன்னு இருந்துச்சு. ஆனா பாருங்க. எழுதுறதவிட அதை யாராவது வாசிச்சு சொன்னாதான அது எப்படி வந்திருக்கும்னு தெரியும். அதுக்கு என்ன பண்ண? இந்த மாதிரி நேரத்துல இருக்கவே இருக்கான் நம்ம பஞ்சாயத்துன்னு சொல்ற மாதிரி (ஆமா, சரிதான் களவாணி பஞ்சாயத்துதான். அதென்ன களவாணி பஞ்சாயத்துன்னு யாராவது ஒரு பஞ்சாயத்த கூட்டிராதீங்க. அதனாலதான் ப்ராக்கெட்டுல போட்டுட்டேன். நீங்க இதப் படிக்காட்டிக்கூடப் பரவாயில்ல, கதையைப் படிக்காம விட்டுட்டுப் போயிறாதீங்க.) எல்லாருக்கும் ஒரு ஃப்ரண்டு இருப்பானே. அப்படி நம்ம நாயகனுக்கும் ஒரு ஃப்ரண்ட் இருந்தான். அவனுக்கு போன போட்டான். உடனே என்ன ஏதுன்னு கேக்கவே நேராவே வந்துட்டான். அதெப்படின்னு லாஜிக்லாம் கேக்காதீங்க.
டேய் நண்பா, முதன்முதலா ஒரு நாவல் எழுதியிருக்கேன். இது மட்டும் வெளிவந்துச்சுன்னா தமிழில் இதுவரை இப்படி ஒரு நாவல் வந்ததில்லன்னு சொல்லும்படி இருக்கும். இந்த நாவல எனக்கு அடுத்து வாசிக்கிற வாய்ப்ப ஒனக்குத் தான் கொடுக்குறேன். அப்படி இப்படின்னு என்னவெல்லாமோ பிட்டப் போட்டான். நண்பன் கொஞ்சம் வாசிக்கிற ஆளு. அவனுக்கு உண்மை புரிஞ்சுபோச்சு. ஆனாலும் என்ன பண்ண முடியும் துரோகமே பண்ணுனாலும் நண்பனா இருந்தா மன்னிச்சிரணும்ங்கற தமிழர் மரபுல வந்தவனாச்சே. கண்டிப்பா வாசிக்கிறேன்னு விருப்பத்தோட தலையை நீட்டினான்.
ஆனால், ஒருவிஷயம்டா. என்னப் பொறுத்தவரை இந்த நாவல் இங்கிலீஷுல மட்டும் வந்தா எங்கெயோ போயிரும். அதுக்காக நீ இதை நல்லா இருக்குன்னு சொல்லணும்னு அவசியமில்லை. உன்னோட கருத்த நான் ரொம்ப மதிக்கிறேன். நீ படிச்சிப்பாரு. நல்லாயில்லன்னு தோனுச்சுன்னா அப்படியே என்ட்ட வந்து சொல்லு. நான் நாவலை அப்படியே கொளுத்திடுறேன் என்று கொஞ்சம் ஓவராவே உணர்ச்சிவசப்பட்டான். என்னமோ பெரிய காஃப்கான்னு நினைப்பு அவனுக்கு. சரி அவனும் எழுத்தாளன் தானே அவனுக்கும் உணர்ச்சி இருக்காதா என்ன? சே சே ஏன்டா அப்படிச் சொல்ற உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ நல்லா எழுதிருப்பே. அப்படின்னு அவன் சொல்லவுமே நம்ம எழுத்தாளருக்குப் பரவாயில்ல நாம சொன்னது ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு ஒரு பரவசம் வந்திருச்சு. கண்டிப்பா நான் படிச்சிட்டு உண்மையைச் சொல்றேன். ஆனால், எனக்கு ஒரு பத்து நாள் டைம் வேண்டும் என்றான் நண்பன். நாயகனும் தாராளமா டைம் எடுத்துக்கோ. ஆனால், மறுபடியும் சொல்றேன் கதையைப் பத்துன உண்மையைத் தான் நீ சொல்லணும்னு அடம்பிடிச்சான். இனியும் பொறுக்க முடியாதுன்னு நெனச்ச நண்பன் கதையை வாங்கிட்டு நடையைக் கட்டிட்டான்.
பத்து நாள் பத்து யுகம் மாதிரி கழிஞ்சுச்சு நம்ம எழுத்தாளருக்கு. பன்னிரண்டு நாளுக்குப் பிறகு நண்பன் எழுத்தாளரப் பார்க்க வந்தான். ஆனால் கையில நாவலோட பிரதி இல்ல. அதைப் பார்த்ததும் எழுத்தாளருக்குப் பக்குன்னு ஆயிருச்சு. ஆனா அவரு எழுத்தாளராச்சே. உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்துவாரா? எதையும் கண்டுக்கிடாத மாதிரி எப்போதும்போல ஃப்ரண்டுட்ட பேசிட்டிருந்தாரு. இவரோட ஃப்ரண்டுன்னு அவரு எப்படி இருப்பாரு. அவரும் எப்போதும்போல நல்லா ஜாலியா பேசிகிட்டே இருக்காரு. எழுத்தாளரோட மனசு ஃபுல்லா நாவலப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டக்கானேன்னு இருந்துச்சு. ஆனால் கேக்க முடியல. நண்பரும் நேரமாயிருச்சு கிளம்ப ஆயத்தமாயிட்டாரு. எழுத்தாளருக்கோ இருப்பு கொள்ளல. நாவலப் படிச்சியான்னு கேக்க வாய்வர வார்த்த வந்துருச்சு ஆனாலும் ஆர்வத்த அடக்கிட்டு நண்பர வழியனுப்பி வச்சிட்டாரு.
இப்படி இன்னும் ஒரு பத்து நாளு போச்சு. மறுபடியும் ஒரு நாள் நண்பர் வந்தாரு. இப்பவும் அவர் கையில நாவலோட பிரதி இல்ல. இந்த முறை எப்படியும் கேட்டுடணும்னு எழுத்தாளரு முடிவு பண்ணிட்டாரு. என்னடா எப்படியிருக்கன்னு கொஞ்சம் கெத்தாவே கேட்டாரு நம்ம எழுத்தாளரு. அவரோட ஃப்ரண்டுக்குப் புரிஞ்சு போச்சு. சாரிடா போன தடவயே சொல்லணும்னு நெனச்சேன். ஆனா மறந்துட்டேன் சாரிடான்னு என்னமோ கூட்டமான பஸ்ல தெரியாம கால மிதிச்ச மாதிரி சொன்னாரு. எழுத்தாளருக்கோ என்னவோ போலாயிருச்சு. எப்படிப்பட்ட நாவல எழுதி இவன்ட்ட கொடுத்தோம் அதைப் பத்திப் பேசாமா ஏதேதோ பேசுறான்னேன்னு இருந்துச்சு.
நாவலப் பத்தி நாம பேசும்போது நீ என்னடா சொன்னன்னு எழுத்தாளர்ட்ட நண்பர் கேட்டார். இங்கிலீஷ்ல மட்டும் வந்தான்னு எழுத்தாளர் ஆரம்பிச்சாரு. அதில்லடா கடைசியா என்ன சொன்ன? நல்லாயில்லன்னா சொல்லு கொளுத்திட்றேன்னு சொன்னேன் எனச் சொல்லும்போதே எழுத்தாளருக்கு ஒரு மாதிரி கலவரமாயிருச்சு. குரல் ஒடஞ்சிருச்சு. கொஞ்சம் விட்டா அழுதுருவாரு போல இருந்துச்சு. அதுக்கென்னடா இப்போ? என எழுத்தாளர் கேக்குறதுக்குள்ள நண்பர் முந்திக்கிட்டாரு. அதான் ஒனக்கு எதுக்கு சிரமம்னு நானே கொளுத்திட்டேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள எழுத்தாளர் உடம்புல சொக்கப்பனை கொளுத்திய மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஃப்ரண்ட் பொய் சொல்றானோன்னு அவன் கண்ணைப் பார்த்தார். அதில் தீர்க்கமான முடிவு தெரிஞ்சுச்சு.
இவ்வளவு நடந்ததுக்குப் பிறகு நம்ம எழுத்தாளர் நண்பர்ட்ட கேட்டாருங்க ஒரு கேள்வி. அதுதான் இந்தக் கதையோட தலைப்ப வைக்க உதவுச்சு. அப்படி என்னதான் கேட்டாரு? இருங்க சொல்லிட்றேன். டேய் நீ உண்மையிலேயே கதையைப் படிச்சியான்னு கேட்டாரு. என்னங்க இப்படிச் சிரிக்கீங்க. இது சோகக் கதைன்னு தெரிஞ்சும் சிரிக்கிறீங்க பாருங்க. அந்த நாவல் மேல் எழுத்தாளருக்கு இருந்த நம்பிக்கையை நீங்களும் புரிஞ்சிக்காம சிரிக்கீங்க பாருங்க, உண்மையிலேயே இதுதாங்க சோகம். இனிமேயும் இந்தக் கதையைத் தொடர்வதில் எனக்கு இஷ்டமில்லீங்க. இத்தோட கதைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்றேன்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்