இந்த வலைப்பதிவில் தேடு

அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

அரசியல் சதுரங்கம் ஆட வருகிறாரா ஆளுநர்?

தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்னும் சொற்றொடர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்றபோதும், ஆளுநர் பதவி ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசு கண்காணிக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதான எண்ணம் சுயமரியாதையைப் போற்றும் எந்த மாநில அரசுக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், எந்தக் கட்சி  மத்தியில் ஆள்கிறதோ அந்தக் கட்சிக்குச் சார்பான ஒருவரே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகும் மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் பெரிதாகக் கருத்து வேற்றுமைகளோ மோதல்களோ ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசுடன் அரசியல்ரீதியாக முரண்படும் மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எப்போதும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருபவர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது இந்திய அரசியலை அறிந்த எவருக்கும் தெரிந்த செய்தியே. 

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக எப்போதுமே ஆளுநரை ஆறாம் விரலாகத்தான் பார்க்கிறது. அரசியல் சாசனம் அனுமதித்தபோதும் அந்தப் பதவி அநாவசியம் என்றே அது நினைக்கிறது. அதனால் தான் கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் இல்லாத சமயத்தில் அப்படியோர் ஆளுநர் தேவை என்று திமுக கோரிக்கை வைத்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவைக் கிண்டல் செய்தார். திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா மட்டும் விதிவிலக்கு. அதேபோல் 1991இல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த சென்னாரெட்டிக்கும் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்குமான மோதல் போக்கு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது. ஆளுநர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும் அளவுக்கு அந்த மோதல் தரந்தாழ்ந்தவகையில் வெளிப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டு ஆளுநர் முதலமைச்சர் உறவு பெரிதாக மோதலோ சர்ச்சையோவின்றி மிகவும் அமைதியான முறையிலேயே இருந்தது.

இப்போது மாறுதலாகிச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்னும் பெயரில் நடத்திய நிகழ்வுகள் தமிழக அரசியல் நோக்கர்களைக் கொந்தளிக்கவைத்தன என்றபோதும், ஆளும் தரப்பு எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தாமல் எல்லாம் அவன் செயல் என்று காலம் கடத்தியது. இப்படியான சூழலைக் கடந்து வந்துள்ள தமிழ்நாட்டுக்கு இப்போது புதிதாக ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ரவீந்திர நாராயண ரவி. 1976இல் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பிஹாரைச் சேர்ந்த அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவலான முணுமுணுப்பு எழுந்தது. ஏனெனில், அவர் ஆளுநராக இருந்த நாகாலந்து மாநிலம் அந்த ஆளுநர் மாறிப்போவதைக் கொண்டாடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உளவுத் துறையின் அதிகாரியுமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசியலில் சிக்கலை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்படுகிறாரோ என்னும் அய்யத்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், முழுக்க, முழுக்கக் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார். இவை மட்டுமல்ல;  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதில், தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான அரசியல் பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுப்பதை அப்படியே விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் ஸ்டாலின் வரவேற்றிருப்பதையும் சாதாரணமானது என்று கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆளுநர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிவிட முடியாது என்பது வெளிப்படையான விஷயம். பதவியேற்ற நாள்முதலாக ஆளும் பாஜகவைச் சித்தாந்தரீதியில் எதிர்கொள்ளும் முதலமைச்சருக்கு ஒன்றிய அரசின் உண்மையான முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனில், அவர் ஏன் வாழ்த்தி வரவேற்கிறார்? அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு என்ன உணர்த்துகிறார்? நீங்கள் என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டை அசைத்துவிட முடியாது என்று சொல்ல நினைக்கலாம். சர்ச்சைக்குரிய மனிதரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் எங்களுக்கு ஒருவிதப் பதற்றத்தை  நீங்கள் உருவாக்க முயன்றால் நாங்கள் பதற்றமடையமாட்டோம் எனக் காட்டிக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம்.

அதே வேளையில் ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தைக் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு அம்பலப்படுத்தவும் முயலலாம். அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். ராஜாவைப் பாதுகாப்பது மட்டுமே சதுரங்கப் பலகையின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் இரு தரப்பினருக்கும் நோக்கம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதலமைச்சர் ஒரு புறம் இருக்கிறார் என்றால் ஒன்றிய அரசின் பக்கபலத்துடன் ஆளுநர் மறுபுறம் இருக்கிறார். எந்த வேளையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண்மைச்  சட்டங்கள், குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது. அனைவரையும் அர்ச்சகராக்கும் செயல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. இந்திய நாகரிகத்தைவிடத் தொன்மையானது தமிழ்நாட்டின் நாகரிகம் என்ற கருதுகோள் அழுத்தமாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முன்வைக்கப்படுகிறது. இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்ற முழக்கம் சென்னையில் ஒலித்தாலும் அது தில்லியை அதிரவைக்கிறது. அரசியல்ரீதியான எதிர்ப்புகளைவிடச் சிந்தாந்தரீதியான பண்பாட்டுரீதியான எதிர்ப்பை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் முதலமைச்சர் வெளிப்படுத்தும் வேளையில் இப்படியோர் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றால் அதை அப்படியே எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா என்ன? அதனால்தான் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர். ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது தமிழ்நாடு. அதே நேரம் முதலமைச்சரோ வரவேற்புத் தெரிவிக்கிறார். ஆகவே, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஆளுநர் என்னும் பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் மிகவும் உன்னிப்பாகவும் அதே நேரத்தில் அநாயாசமாகவும் எதிர்கொள்ளத் தயாராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு பிடிப்பு கொண்ட மாநிலத்தில், மக்களின் பேராதரவைப் பெற்ற ஓர் ஆட்சியை, அதன் முதலமைச்சரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை உணராமல் இருக்காது ஒன்றிய அரசு. இது எதிரும் புதிருமான இரண்டு பலம் வாய்ந்தவர்களின் விளையாட்டு. இந்த விளையாட்டுத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது, இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆட்டத்தில் யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பதைவிட சுவாரசியமான ஆட்டம் ஒன்று அரங்கேறப்போகிறது என்பதே ஊடகங்களுக்கான செய்தி.   

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை.   

வியாழன், ஜூலை 08, 2021

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா?


உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று அரசுகள் மார்தட்டிக்கொண்டபோதும் இன்னும் நமது ஊரகப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. சரியான சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லை, சுகாதார வசதி போதுமானதாக இல்லை, கழிவுநீர் செல்லும் வசதி இல்லை, குப்பை மேடுகள் முறையாக அகற்றப்படவில்லை எனப் பல இல்லைகளைத் தொடர்ந்து மக்கள் கவனப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளில் பொறுப்பிலிருக்கும்போதே இப்படியான நிலைமைதான் உள்ளது என்றால், மக்கள் பிரதிநிதிகளும் இல்லாதபோது, மக்கள் எதிர்கொள்ளும் அவதியைச் சொல்லத் தேவையில்லை. சின்ன சின்ன பிரச்சினைக்கும் அரசு அலுவலகத்துக்கு ஏறி இறங்க முடியாது; அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட இயலாது.   

பாசன நீர் கடைமடைவரை பாய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசு நிர்வாகம் அடிப்படை அலகான ஊராட்சிகள்வரை வந்து சேர்வது. ஊராட்சிகள்வரை அதிகாரம் வந்துசேரும்போதே செழுமையான நிர்வாகம் சாத்தியப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலைமை மாறுவதற்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுதல் அவசியம். மக்கள் பிரதிநிதிகள் அந்த அமைப்புகளில் இருக்கும்போதுதான் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை உடனுக்குடன் கவனப்படுத்த முடியும். வீட்டில், தெருவில், ஊரில் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனடியாக மன்ற உறுப்பினரை அணுகித் தம் குறையைக் கூற இயலும். அது தீர்க்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு கதை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தச் சிக்கலுமின்றி ஒழுங்காக நடந்துவிடுகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாத்திரம் ஒருவிதச் சுணக்கத்தைக் காணமுடிகிறது. பொதுவாக, மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சி வலுவான நிலையில் உள்ளபோது உள்ளாட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளையும் தம் ஆளுகைக்குக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்காதோ எனும் ஐயம் எழுந்தால் அவ்வளவுதான் உள்ளாட்சித் தேர்தல் எண்ணத்தையே அது மூட்டை கட்டிவைத்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, அந்த உற்சாகத்தில் பத்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 1996 அக்டோபரில் நடத்தியது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, இப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக மக்களால் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிமுக அரசு தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலை 2016 அக்டோபரில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த ஒன்பது மாவட்டங்களிலும் மறுசீரமைப்பு பணிகளின் பொருட்டு அப்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக 2019 டிசம்பரில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.  தமிழகத்தின் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து 2020 டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவகாசத்தை வழங்கியிருந்தது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ”இந்தியாவிலேயே கொரோனா பரவல் தமிழகத்தில்தான் அதிகம். இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்என்று கோரினார்.

அதையேற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை நிறைவுசெய்து 2021 செப்டம்பர் 15க்குள் அங்கே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு ஊரக அளவிலான தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் ஆகியவை நடத்தப்படாததால், அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்துவருகிறார்கள். இதற்கான அரசாணை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறையில் செயல்படும் அத்தகைய தனி அதிகாரிகளின் பதவிக் காலம் 2021 ஜூன் 30 அன்றுடன் முடிவடைவதால், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் சூழலிலும், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி அமைச்சர் கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தேங்கிக் கிடந்தால் அதை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறது ஆளும் தரப்பு. முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2021  இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், மூன்றாம் அலை செப்டம்பரில் வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை உருவானால் அந்தச் சூழலில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது எந்த அளவுக்கு இயலும் என்பது கேள்விக்குறியே. அதே வேளையில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கடுங்கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்வு நடத்துவதே பாதுகாப்பற்றது என்ற எண்ணம் உள்ளபோது, தேர்தல் நடத்துவது எப்படிப் பாதுகாப்பானது என்ற கேள்வி எழுவது இயல்பு. தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, பரப்புரை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் பொதுவிடங்களில் திரளக்கூடும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை காரணமாகத் தமிழ்நாட்டின் இரண்டாம் அலை அதிகமாகப் பரவியது என்னும் விமர்சனமும் எழுந்ததை மறந்துவிட முடியாது. அதேவேளையில் கொரோனாவைக் காரணங்காட்டி மீண்டும் தேர்தலை தள்ளிவைக்க செப்டம்பர் 15 எனக் கெடு விதித்துள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா? ஒருவேளை அப்படித் தள்ளிவைத்தாலும் ஆளும் அரசுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் வாய்ப்பும் உள்ளது. ஆக, தேர்தலை நடத்தினாலும் சிக்கல் நடத்தாவிட்டாலும் சிக்கல் என்பதே உண்மை நிலை.

ஆனால், திமுக தம் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டால், அது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். ஆக, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கும் கட்சிக்காரர்களின் திசையிலேயே ஆளும் தரப்பும் பயணப்படுகிறது என்றே தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தலைக் கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு; மக்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு. அதே நேரத்தில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை என்னும் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதையும் பரிசீலித்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எடுக்கப்படுவதே அனைவருக்கும் நல்லது. இந்தச் சிக்கல்களைச் சமாளித்து உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பெரும் சவால் ஆளுங்கட்சி முன் உள்ளது. அதை எப்படி ஆளுங்கட்சி சமாளிக்கப்போகிறது?

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. அந்த இதழில் ஜூனில் வெளியானது. 

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்


தமிழ்நாட்டின் 16ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021 ஏப்ரல் ஆறு அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி இந்தத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்துள்ளது.  இதுவரை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன்முறையாக வாக்குப்பதிவு இரவு ஏழு மணி வரை நடத்தப்பட்டது. மாலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவின் எம்பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார். மொத்தம் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற வேகத்தைப் பார்த்தால் எண்பது சதவீதம் பதிவாகும்போல இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சிறிது மந்த கதியாகிவிட்டது. ஆகவே, கடந்த முறையைவிடச் சற்றுக் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. 



இந்தத் தேர்தலில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி காந்த் கட்சி தொடங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் வந்து வாக்களித்துவிட்டார். ஊடகங்களின் கவனம் இந்த முறை ரஜினி மேல் இருக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் கமல்ஹாசன் தன் மகள்களுடன் வந்து வாக்களித்தார். மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பேரனைத் தூக்கியபடி வந்து வாக்களித்தார்.  


நடிகர் விஜயும் அஜீத்தும் ஊடகக் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதுவும் அவரது சைக்கிளில் கறுப்பு சிவப்பு வண்ணமிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் அஜித் அணிந்து வந்திருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்தில் சிவப்பு பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. இதுவும் பேசுபொருளானது. இருவருமே ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆனால், வாக்குச்சாவடி காரில் வருவதற்கு ஏதுவான சூழலில் இல்லாததால் விஜய் சைக்கிளில் வந்தார் என்று விஜயின் பிஆர்ஓ தெரிவித்தார். ஆனால், அஜித்திடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. வாக்குச்சாவடியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பிடுங்கினார் அஜித். பின்னர் அவரிடம் போனைக் கொடுத்துவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 


1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் இந்தத் தேர்தல்வரை வாக்களித்த மாரப்ப கவுண்டர் என்னும் தனிமனிதர் ஊடகத்தில் இடம்பிடித்தார். வாக்காளர் ஒருவர் சேலத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். வழக்கம்போல் இம்முறையும் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வமில்லை என்று பொதுவாகப் பேசப்பட்டது. யாருக்கு வாக்களித்து என்ன பண்ண என்னும் மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? அடித்தட்டு மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள். 


தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. 2016இல் வாக்குப்பதிவு சதவீதம் 74.81. ஆனால் இப்போது அதைவிட குறைவான சதவீதத்தினரே வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் இவ்வளவு பேர் வாக்களித்திருப்பது ஆரோக்கியமான செய்தியே. 2011ஆம் ஆண்டு தேர்தலில் 78.29 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதுவரையான தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு இதுவே. அப்போது ஆண்ட கட்சியான திமுகவுக்கு எதிராகத் தேர்தலின்போது பெரிய அலை வீசியது. மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்தது 1957இல். அந்த ஒரு முறைதான் ஐம்பது சதவீதத்துக்கும் கீழே வாக்குப்பதிவு சென்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 46.75 ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அலைவீசப்பட்டது எனச் சொல்லப்பட்ட 1996இலேயே 66.95 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெற்றிருக்கிறது.


இதுவரை ஆட்சி மாற்றம் நடைபெற்ற எட்டு முறையும் அதாவது, 1967, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்த வாக்குப் பதிவு அடிப்படையில் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியவருகிறது. கடந்த முறையைவிட அதிகமாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்குமுறையும் (1967, 1996, 2006, 2011), குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்கு முறையும் (1977, 1989, 1991, 2001) ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை திமுக பெற்றுள்ளது (1967, 1996, 2006); குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை அதிமுக (1977, 1991, 2001) பெற்றுள்ளது. இந்த முறை திமுக வென்று ஆட்சியமைத்துவிடும் என்றுதான் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதைக் காண மே 2 அன்று வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

போட்டாச்சு... போட்டாச்சு...

நான் முதன்முதலில் எந்தத் தேர்தலில் வாக்களித்தேன் என்பதே மறந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வாக்களித்தேன் என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேனா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தேனா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தேனா என்னும் தெளிவு இல்லை. அது ஒரு மங்கிய சித்திரமாகவே மனத்தின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது. அண்மையில் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். பாஜக ஆட்சி அமைந்தபிறகுதான் வாக்களிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை உணர முடிந்திருக்கிறது. 

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது சிலருக்கு ஒரு சடங்கு. ஆனால், உண்மையில் வாக்களிப்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது ஜனநாயக உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. பொதுவாக, வாக்களிப்பது குறித்து பெரிய புரிதல் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை.  நாம் வாக்களித்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்னும் விட்டேத்தியான மனநிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த மனநிலையிலிருந்து விடுபட்டால் மட்டுமே நூறு சதவீத வாக்களிப்பு என்பதை நம் நாடு சாத்தியமாக்கும் என்பது உறுதி. மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமை கொண்ட நமது நாடும் தேர்தல் என்பதை மிகப் பெரிய பொருள்செலவுடனும் ஆள்பலத்துடனும் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. 

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 முதலே வாக்களிப்பதன் அவசியத்தை மனம் குறித்துவைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் பீடு நடைபோட்டது. பத்தாண்டுகளாக ஆட்சி வாய்ப்பை இழந்திருந்த திமுக எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்னும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எல்லாவற்றையும் சமாளித்தது திமுக. நாடாளுமன்றக் கூட்டணியை எந்தச் சேதாரமுமின்றி அப்படியே தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. 

அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து சிக்கல்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை இம்முறை தவறவிட்டது அதிமுக. பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக என்பது அதிமுகவுக்கு மிகப் பெரிய சவால். தமிழ்நாட்டில் பாஜக என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ள கட்சி. இதனுடன் கூட்டணி சேர்வது என்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல்தான். மீள்வது பெருங்கடினம். ஆனால், அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவைத் தவிர்த்துவிடவோ தள்ளிவைக்கவோ முடியவில்லை. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு. 

இது தவிர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பெரிய கேள்விக் குறி. ஆனால், அதிமுகவின் வாக்குகளைப் பெரிய அளவில் சிதைக்கும் கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை அதுவும் அதிமுக வாக்குகளைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கட்சி பெறும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது உறுதி. இது போக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒன்றும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் பெற்ற தொகுதிகளில் மூன்றைத் திரும்பக் கொடுத்து சாதனை புரிந்தது. நாம் தமிழரும் இந்தக் களத்தில் போட்டியிடுகிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இப்படியான தேர்தலில் காலையிலேயே வாக்களித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாகக் காலையில் வெயில் இல்லை. இதமான சூழலே நிலவியது. காலையில் ஏழே கால் அளவில் புறப்பட்டு நன்னகரத்தில் உள்ள எனது வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்:28) வாக்களிக்கச் சென்றேன். கறுப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். அருகருகே இரண்டு வாக்குச் சாவடிகள் இருந்தன. முதல் வாக்குச்சாவடியில் ஆண், பெண் இருபாலர் வரிசையில் பலர் நின்றிருந்தனர். நான் இரண்டாவதாக இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியதிருந்தது. அதில், பெண்கள் ஓரிருவர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். ஆண்கள் வரிசையில் பத்து பேருக்கு மேலே நின்றிருந்தனர். நான் எனது முறைக்காகக் காத்திருந்தேன். 

வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் சிலிப்பைச் சோதிப்பதற்காகவும், சானிடைஸர், கையுறை வழங்குவதற்காகவும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பூத் சிலிப்பைச் சோதித்து உள்ளே வாக்களிக்க அனுப்பினர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரால் நிற்க முடியாத காரணத்தால் எல்லாருடமும் அனுமதி பெற்று வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். வாக்களித்த பின்னர் எல்லாருக்கும் இருகை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். 

வாக்குச்சாவடியில் சுவரில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களும், வாக்காளர் குறித்த விவரங்களுக்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தன. தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இது போக நோட்டாவும் உண்டு. ஆக, மொத்தம் 19. என்னுடைய பூத் சிலிப்பைச் சோதித்துவிட்டு சானிடைஸர் வழங்கினார்கள். கைகளில் அதைப் பரவச் செய்தேன். பின்னர் கையுறையை அணிந்துகொண்டேன். பாலிதீன் கவர் போன்றிருந்தது கையுறை. சிறிது நேரத்துக்குப் பின்னர் வாக்குச்சாவடிக்குள் அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும், எதிரே அலுவலர்கள் மூவர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் தனியே அவர்களுக்கு எதிரே அவர்களுக்கு இடப்புற மூலையில் அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் நான்கு அலுவலர்கள் இருந்தனர். அனைவருமே பெண்கள்தாம். 

வரிசையாக அமர்ந்திருந்த அலுவலர்களில் எனக்கு வலப்புறம் முதலில் அமர்ந்திருந்த அலுவலர் பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று சோதித்தார். சோதித்தபின் என் பெயருக்கு எதிரே டிக் செய்து விட்டு, ரோஸ் கலர் கூப்பன் ஒன்றைக் கொடுத்தார். அடுத்து அமர்ந்திருந்த அலுவலர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார். அடுத்து இறுதியாக அமர்ந்திருந்த அலுவலரிடம் ரோஸ் நிற கூப்பனைக் கொடுத்தேன். அவர் வாக்களிக்கும் இயந்திரத்தைக் காட்டி வாக்களிக்கச் சொன்னார். வாக்கு இயந்திரம் ப வடிவ தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு காரணமாக நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பதைப் பிறர் அறியாமல் பாதுகாக்க முடிந்தது. 

வாக்கு இயந்திரத்தில் நான் யாருக்கு வாக்களிக்க விரும்பினேனோ அந்த வேட்பாளருக்கு எதிரே இருந்த பொத்தானை அழுத்தினேன். அழுத்திவிட்டு அருகிலிருந்த விவிபாட் இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் நான் வாக்களித்த வேட்பாளர் பெயரும் சின்னமும் தாங்கிய சீட்டு தோன்றி, மறைந்தது. அதன் பின்னர் இயந்திரத்திலிருந்து பீப் ஒலி எழுந்தது. வெளியே வந்துவிட்டேன். இந்த முறை வாக்களித்துவிட்டேன். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். வீட்டுக்கு வந்து வாக்களித்ததை அறிவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டேன். 

வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பத்து சதவீதத்துக்கு மேலே வாக்குப் பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக அவை இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிலை நீடித்தால் வாக்கு சதவீதம் எண்பது வரை செல்லலாம் என்று நினைக்கிறேன். 

திங்கள், மார்ச் 22, 2021

தென்காசி தொகுதி அன்று முதல் இன்றுவரை

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பரம்பரையில் வந்திருந்தபோதும், சொந்த ஊர் குறித்த பெருமிதம் இல்லாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது சந்தேகமே. நான் 1990இல் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னடா, முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லாமல் இருக்கிறதே என நினைக்காதீர்கள். சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. சொல்லவில்லை என்றால் மறந்துபோய்விடும் என்பதால் சொல்லிவிடுகிறேன். அப்போது கீழக்கரையில் இருந்த ஒரு வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். அந்த வங்கி அலுவலர் என் பெயரைக் கேட்டார். என் பெயரைக் கூறினேன். எந்த ஊர் தென்காசியா என்று அடுத்த கேள்வியைப் போட்டார். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. எப்படிக் கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்டேன். இல்ல அந்த ஊருலதான் இப்படிப் பெயர் வைப்பார்கள் என்று பட்டென்று சொன்னார்

அப்படிப் பலரிடமும் பெயர் பெற்றிருந்த தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பற்றிய ஒரு புள்ளிவிவரக் குறிப்புகளை எழுதவிருக்கிறேன். அதனால், தான் ஊரின் பெருமையுடன் தொடங்கினேன். விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் தேர்தல் 1951இல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் மூன்று வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் 72.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 59,153. தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை 2,783 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் 44.53 சதவீத வாக்குகளைப் பெற்றார்; பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 26,340. சுயேச்சையாகப் போட்டியிட்ட சேவுக பாண்டிய தேவர் 23,557 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறார்

அடுத்த தேர்தல் 1957இல் நடைபெற்றது. திமுக முதன்முறையாகக் களம் கண்ட தேர்தல் இது. இந்த முறையும் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டிருக்கிறார்கள். 71.72 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். பதிவான மொத்த வாக்குகள் 58,887. காங்கிரஸ் கட்சியிடமிருந்து தொகுதியை சுயேச்சை வேட்பாளரான சட்டநாதக் கரையாளர் கைப்பற்றியுள்ளார். அவர் 31,145 வாக்குகளைப் பெற்றுள்ளார். 52.89 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர் தன்னை அடுத்து வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளையைவிட 5,646 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  25,499 வாக்குகளைப் பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 43.3.


1962இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் ஆறு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். மொத்தம் 75.31 சதவீத வாக்குகளான 69,171 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில், 2,198 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருக்கின்றன; பத்து வாக்குகள் தொலைந்துவிட்டன. எஞ்சிய வாக்குகளில் 29,684 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த .ஆர்.சுப்பையா முதலியார். அவர் பதிவான வாக்குகளில் 44.33 சதவீதத்தைப் பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்றிருந்தவர்  முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ரெபாய் சாஹிப். இவருக்கு 16,822 வாக்குகள் கிடைத்திருந்தன. இது பதிவான வாக்குகளில் 25.21 சதவீதம். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 12,802.

காங்கிரஸிடமிருந்து ஆட்சியைத் திமுக கைப்பற்றிய 1967இல் நடைபெற்றது அடுத்த தேர்தல். ஆட்சியைத் திமுக கைப்பற்றியிருந்தபோதும் தென்காசி தொகுதி காங்கிரஸ் வசமே தொடர்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ..சி.பிள்ளை, 34,561 வாக்குகளைப் பெற்று வென்றார். அவர் தனக்கு அடுத்த இடத்திலிருந்த திமுக வேட்பாளர் சம்சுதீனைவிட வெறும் 743 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றிருந்தார்; அவர் பெற்ற வாக்கு சதவீதம் 49.86. திமுக வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகள் 33,818; இது பதிவான வாக்குகளில் 48.79 சதவீதம். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 71,190 அதில் செல்லாதவை 1,872. ஆக, செல்லத்தக்க வாக்குகள் 69,318. இந்தத் தேர்தலில் மூவர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர்

1971 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணா இறந்தபிறகு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. வரலாறு காணாத வெற்றியில் தென்காசித் தொகுதியும் பங்கெடுத்துக்கொண்டது. தங்களுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸிடமிருந்து தொகுதியைத் திமுக பெற்றுக்கொண்டது. கதிரவன் என்ற சம்சுதீன் இந்தத் தேர்தலில் தென்காசித் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சார்பில் தென்காசியிலிருந்து சட்டப் பேரவைக்குச் சென்ற முதல் வேட்பாளர் என்னும் பெருமையையும் பெற்றார். 72,423 வாக்குகள் பதிவாயின. அவற்றில் 2,163 வாக்குகள் செல்லாதவை. எஞ்சிய வாக்குகள் 70,260. திமுக வேட்பாளர் தன்னையடுத்த வேட்பாளரைவிட 7,960 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 39,110; வாக்கு சதவீதம் 55.6. இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் ஐ சி ஈஸ்வரன் இருந்தார். அவர் பெற்ற வாக்குகள் 31,150; வாக்கு சதவீதம் 44.34. இந்தத் தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். 


எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின்னர் 1977ஆம் ஆண்டில் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. தென்காசி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளரான எஸ் முத்துசாமி கரையாளர் 41.36 சதவீத வாக்குகளான 30,763 ஐப் பெற்று வென்றார். இரண்டாமிடத்தைப் பெற்றவர் சுயேச்சை வேட்பாளரான ஜே அப்துல் ஜப்பார். அவர் 18,489 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது பதிவானவற்றில் 25.26 சதவீதமாகும். மொத்தம் பதிவான வாக்குகள் 74,171. இதில் செல்லாதவை 977. மொத்தம் ஐவர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்டவர் வை.பாண்டிவளவன்.

அடுத்த தேர்தல் 1980இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. 74,565 வாக்குகள் பதிவாயின. இதில் 1,108 வாக்குகள் செல்லாதவை. அதிமுக சார்பில் போட்டியிட்ட சட்டநாதக் கரையாளர் தன்னையடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் டி ஆர் வேங்கடரமணனைவிட 675 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிபெற்றார். வெற்றிவேட்பாளரின் வாக்குகள் 36,638 (49.88%), தோல்வி பெற்ற வேட்பாளர் வாங்கிய வாங்குகள் 35,963 (48.96%).  மொத்தம் நால்வர் போட்டியிட்டிருந்தனர்.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகான தேர்தல் 1984 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு. கருணாநிதி போட்டியிடவில்லை. திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. கடந்த முறை தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த டி ஆர் வேங்கடரமணன் இந்த முறை 57,011 (60.45%) வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மா.குத்தாலிங்கத்தைத் தோற்கடித்தார். திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள் 35,383 (37.52%). வாக்குவித்தியாசம் 21,628. இந்த முறை மொத்தம் 99,409 வாக்குகள் பதிவாயின. இதில் 5,097 வாக்குகள் செல்லாதவை. தேர்தலில் மொத்தம் ஐவர் போட்டியிட்டிருந்தனர்.

எம்.ஜி.ஆர். இறந்தபிறகு, 1989இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக இரு அணிகளாக நின்று தேர்தலைச் சந்தித்தன. இந்த முறை தென்காசி தொகுதியில் 13 பேர் களமிறங்கியிருந்தனர். முதன்முறையாக இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டது இதுவே முதன்முறை. இம்முறை 1,11,533 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 2,285 வாக்குகள் செல்லாதவை. காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட்டு வென்றார். 39,643 (36.29%) வாக்குகளைப் பெற்று திமுகவின் பாண்டிவளவனை 6,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாண்டிவளவன் 33,049 (30.25%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.  


இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991இல் தேர்தல் நடைபெற்றது. இம்முறை 11 பேர் களத்தில் இருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸே போட்டியிட்டு 36,879 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுக சார்பில் போட்டியிட்டவர் எஸ்.ராமகிருஷ்ணன். பீட்டர் பெற்ற வாக்குகள் 65,142 (62.105). திமுகவுக்கு 28,263 (26.94%) வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன. மொத்தம் 1,08,739 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை 3,813. இந்த முறை 33 வாக்குகள் தவறிப்போயிருந்தன.  பாஜக முதன்முறையாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது.

ஜெயலலிதாவைத் தோற்கடித்த 1996 தேர்தலில் தென்காசியை திமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகாவின் வேட்பாளரான ரவி அருணன் கைப்பற்றியிருந்தார். 1,19,984 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாத வாக்குகள் 4,946. மூன்று பேரின் வாக்குகள் ஏற்கெனவே போடப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆலடி சங்கரய்யாவை 30,760 வாக்குகள் வித்தியாசத்தில் ரவி அருணன் வென்றிருந்தார். அவருக்கு 60,758 (52.82%)வாக்குகள் கிடைத்திருந்தன. சங்கரய்யா 29,998 (26.08%) வாக்குகளை மட்டுமே பெற்றார். தேர்தலில் இருபது பேர் போட்டியிட்டனர். முதன்முறையாக பெண் ஒருவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

2001இல் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இம்முறை 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றியது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 62,454 (51.41%) வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்து வந்த திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனைவிட 8,792 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.  திமுக வேட்பாளர் 53,662 (44.18%) வாக்குகளைப் பெற்றிருந்தார். மொத்தம் 1,21,695 வாக்குகள் பதிவாயின. இதில் செல்லாதவை 222; ஏற்கெனவே பிறரால் போடப்பட்ட வாக்குகள் 8. தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர்.

மைனாரிட்டி அரசு என்னும் பெயரைத் திமுகவுக்குப் பெற்றுத்தந்த தேர்தல் 2006இல் நடைபெற்றது. 2001இல் தொகுதியைத் தவறவிட்ட கருப்பசாமி பாண்டியன் 18,658 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை தொகுதியைக் கைப்பற்றிக்கொண்டார். 1,40,149 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை, ஏற்கெனவே போடப்பட்டவை போன்றவை போக மீதி 1,39,570. கருப்பசாமிக்கு 69,755 (49.97%) வாக்குகள் கிடைத்திருந்தன. அவரையடுத்த வாக்குகளைப் பெற்றிருந்த மதிமுகவின் இராம உதயசூரியனுக்குக் கிடைத்தவை 51,097 (37.41%). பதினோரு பேர் போட்டியிட்டனர் இந்தத் தேர்தலில். 1996இல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவி அருணன் பாஜக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.


2011இல் நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவின் வேட்பாளரான சரத்குமார் 22,967 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றியிருந்தார். சென்ற முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் கருப்பசாமி பாண்டியன் தோல்வியைத் தழுவினார். சரத்குமாருக்கு 92,253 (54.3%) வாக்குகளும், கருப்பசாமிக்கு 69,286 (40.78%) வாக்குகளும் கிடைத்திருந்தன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 1,69,910. மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டிருந்தனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவே தக்கவைத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை போட்டியிட்டவர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன். வெறும் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார். அதிமுகவுக்கு 86,339 (42.58%) வாக்குகளும், காங்கிரஸுக்கு 85,877 (42.35%) வாக்குகளும் கிடைத்திருந்தன. நோட்டாவுக்கு 3,379 வாக்குகள் கிடைத்திருந்தன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸுக்கு 7,324 வாக்குகள் கிடைத்திருந்தன. முதன்முறையாக செல்வி என்னும் பெண் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.  

தென்காசி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் ஏழு முறையும் அதிமுக நான்கு முறையும் திமுக இரு முறையும் சுயேச்சை ஒரு முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளன. அதிக வாக்குகள் பெற்று வென்றவர் 2011 தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார். பெற்ற வாக்குகள் 92,253. அதிக சதவீதம் பெற்று வென்றவர் 1991 தேர்தலில் பீட்டர் அல்போன்ஸ், சதவீதம் 62.1. இத்தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில், 36,879, வென்றவர் எனற பெருமையும் அவருக்குத்தான். மிகக் குறைந்த சதவீதத்தில் வென்றவரும் அவர்தான் 1989 தேர்தலில் 36.29 சதவீத வாக்குகளே  அவருக்குக் கிடைத்தன. 1989, 1991 ஆகிய இரண்டு முறை அடுத்தடுத்து வென்றவரும் அவர்தான். குறைந்தபட்சமாக 1971இல் இருவரும் அதிகபட்சமாக 1996இல் 20 பேரும் போட்டியிட்டிருந்தனர்.  

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பாத்திமா என்னும் பெண் ஒருவர் உள்ளிட்ட 34 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களில், 13 பேரின் வேட்பு மனுக்கள் (பாத்திமாவுடைய மனுவையும் சேர்த்து) தள்ளுபடி செய்யப்பட்டன; மூவர் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். மீதி 18 பேர் களம் காண்கிறார்கள்.  போன தேர்தலில் மோதிய செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் பழனி நாடாரும் மோதுகிறார்கள். கட்சி சார்ந்த வாக்குகள் அடிப்படையிலும் பொதுவான மனநிலையிலும் பார்த்தால் காங்கிரஸ் கட்சி எளிதாக வென்று விடும் என்றுதான் தோன்றுகிறது. கள நிலவரம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக எதுவும் இருப்பதுபோலும் தெரியவில்லை. ஆனாலும், மக்கள்தீர்ப்பை அறிந்துகொள்ள  மே 2 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.  

தென்காசி தொகுதியின் முடிவு மே 2 அன்று இரவில்தான் வெளியானது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார். மொத்தம் வாக்கு எண்ணப்பட்ட 30 சுற்றுக்களில்  5, 6 ,7, 9, 14, 21, 22, 24, 26, 27, 28, 29, 30 ஆகிய சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இருந்தபோதும், வாக்கு இயந்திரத்தின் எல்லாச் சுற்றுகளையும் சேர்த்து பழனி நாடார், 87,706 வாக்குகளே பெற்றிருந்தார்; அதிமுக வேட்பாளருக்கு 88,271 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், தபால் வாக்குகள் பழனி நாடாருக்குக் கைகொடுத்துள்ளன. அவருக்குக் கிடைத்திருக்கும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை 1,609; அதிமுகவுக்கு 674. ஆக, பழனி நாடார் பெற்ற மொத்த வாக்குகள் 89,315; அதிமுக 88,945. ஒருவழியாக பழனிநாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் தென்காசி தொகுதியைக் கைப்பற்றிவிட்டார். இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஆர் வின்செண்ட்ராஜ் 15,336 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நோட்டாவுக்கு 1,159 வாக்குகள் கிடைத்திருந்தன. எப்படியோ நூலிழை வித்தியாசத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸின் கைக்கு வந்துவிட்டது. 

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்