இந்த வலைப்பதிவில் தேடு

பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?


அவன் கிண்டி ரயில் நிலையத்தில் அந்தப் புறநகர் ரயிலில் ஏறினான். அது சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில். அவன் முதல் வகுப்பில் தனக்குக் கிடைத்த இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு வலப்புறம் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சாதாரணமான பேண்ட், சர்ட் உடுத்தியிருந்த மனிதராகத் தென்பட்டார். கையில் வைத்திருந்த மொபைலில் ஏதோ காணொலியைக் கண்டுகொண்டிருந்தார். அவ்வப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே இருந்தார். அவன் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் காட்டிக்கொண்டான். 

ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். 

“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”

அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.

அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.

“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”

“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”

“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.

அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை  வீசினார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.

அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.


திங்கள், ஏப்ரல் 12, 2021

ஸ்மைல் என்ற மண்டேலா


மாறுபட்ட திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட ரசிகர்களுக்கு தமிழ் திரைப்படங்கள் அவ்வப்போது விருந்து படைப்பதுண்டு. அப்படி ஒரு விருந்தெனச் சொல்லப்பட்ட திரைப்படம் மண்டேலா. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் வெகு தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், செய் நேர்த்தியும் கருத்தியல் நேர்த்தியும் ஒருசேர அமையாததுதான். மண்டேலாவைப் பொறுத்தவரை, யோகி பாபு போன்ற ஒரு நடிகரை மையப் பாத்திரமாகக் கொண்டு திரைக்கதை அமைத்தது மெச்சத்தகுந்ததுதான். ஆனால், அது மட்டுமே போதுமா என்பதுதான் கேள்விக்குறி. 

தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு திரைப்படத்தைத் திரையில் நேர்த்தியுடன் தருவது என்பது ஓரளவு எளிதானதுதான்.  திரைப்படத்தை உண்மையான ஆர்வத்துடன் உருவாக்க முயலும் இயக்குநர் அப்படியான படத்தை எளிதாகத் தந்துவிட முடியும். ஆகவே, இந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் அந்த வகையில் படத்தை உருப்படியாகவே தந்திருக்கிறார். யதார்த்தமான படம் போன்ற பாவனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால், படமோ யதார்த்தமானது அன்று. அது பலவிடங்களில் யதார்த்தத்தை மீறியது. 

சூரங்குடி ஊராட்சி வடக்கூர் தெக்கூர் என இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஆனால், அந்த இரு பிரிவுகளுக்கும் தலைமை வகிக்கும் மதியும் ரத்தினமும் ஒரே தகப்பனையும் தனித்தனித் தாயையும் கொண்டவர்கள். அந்தப் பெரியவர் இரண்டு பிரிவினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு பிரிவிலிருந்து ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் சாதி, சமய பூசலற்றவர் என்பதைப் போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். அவரது வீட்டில் பெரியார் படம் இருக்கிறது. ஒரு வகையில் அவர் திராவிடர் என்பதைச் சுட்டுகிறது படம். அங்கு தான் சிக்கலும் தொடங்குகிறது. திராவிடக் கட்சிகள் பணத்துக்கு வாக்கு வாங்கி மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகச் சுருக்கிவிட்டனர் என்னும் மேம்போக்கான புரிதலே படத்தை முன்னிழுத்துச் செல்கிறது.  அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது, சீரியல் பார்ப்பது என இடம்பெற்றிருக்கும் காட்சிகள் யாரைக் கிண்டலடிக்கின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் ஒரு காட்சியில் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களது புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவர்களை எல்லாம் யார் முன்னிருத்துகிறார்கள். படம் யாரைப் போற்றுகிறது யாரைத் தூற்றுகிறது என்பது எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளது. அதனால்தான் படத்துடன் ஒன்றுபட முடியாமலும்போகிறது. 

படத்தில் நடித்திருக்கும் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அரசியல் படத்துக்கு அது சொல்ல வரும் அரசியல் வலுவாக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தின் அரசியல் உள்ளீடற்று பொக்காக உள்ளது. இயக்குநர் மய்யத்தில் நின்றுகொண்டு படமெடுத்திருக்கிறார். வாக்குக்குப் பணம் வாங்குவது குறித்துப் படம் விமர்சிக்கிறது. ஆனால், தனிமனிதர் பணம் பெறாமல் அதே வாக்கைச் சமூகத்துக்காகப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்றும் சொல்கிறது. அதுதான் குழப்பமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் வருகிறது. ஆகவே, மக்கள் ஓரணியில் திரண்டு புரிதலுடன் வாக்களிப்பது என்பது எப்போதும் எட்டாக்கனியே. அதன் மகத்துவத்தையே படம் பேசுகிறது. ஆகவே, அது ஒரு உட்டோப்பியா என்னும் அளவிலேயே தங்கிவிடுகிறது. 

அரசியல் கட்சிகள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றன என்பது அரைவேக்காட்டுத் தனமான இன்னும் சொல்லப்போனால் மய்யத்தனமான புரிதல். ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஊழல் புரையோடிப்போய்விட்டது என்று இப்போது முன்வைக்கப்படும் நாலாந்தரக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையிலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் மிகவும் ஆபத்தானது. இப்படியான படங்களை அதன் எளிமைத் தன்மைக்காக விதந்தோதுவது சிக்கலானது. ஏனெனில், அந்த எளிமைத் தன்மை விஷம் கக்கப் பயன்பட்டுள்ளது. அதைப் புறந்தள்ளிவிட்டு இதை நல்ல படம் என்று முன் மொழிதல் அரசியல் புரிதலற்ற தன்மையென்றே விளங்கிக்கொள்ள முடிகிறது. 

ஸ்மைல் என்ற பெயர் கொண்ட நாவிதராக யோகி பாபு நடித்திருக்கிறார். அவரை அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் இளிச்சவாயன் என்றே கூப்பிடுகிறார்கள். அவரும் அவர்கள் சொல்லும் எல்லா  வேலைகளையும் தட்டாமல் செய்கிறார். இதெல்லாம் எந்தக் காலத்தில் நடைபெறுகிறது? அவரது உண்மையான பெயரே அவருக்கு மறந்துவிட்டதாம். அதனால் அந்த ஊருக்குப் பணிக்கு வரும் அஞ்சல் நிலையப் பணியாளரான பெண் அவருக்குப் பெயர் வைக்கிறார். மண்டேலா என்னும் பெயரை அவருக்குச் சூட்டி அவருக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்றுத் தருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே மெல்லிய அன்பு இழையோடுகிறது. 

ஒரு ஓட்டுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள் என்பது திரைக்கதையின் சவ்வுப் பகுதி. ஏனெனில், அந்த ஒற்றை அம்சத்தை வைத்துத்தான் கதையை இழுக்க வேண்டும் என்பதால் இயன்ற அளவுக்கு இழுத்திருக்கிறார்கள். ஆகவே, படத்தை மிகப் பொறுமையாகப் பார்க்க வேண்டியதும் இருக்கிறது. குறியீட்டுத் தன்மையுடன் திராவிட அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம் குருட்டாம்போக்குத் தன்மையில் மூழ்கியிருப்பதால் படம் முன்வைக்கும் அரைகுறை அரசியல் படத்தை முழுமைப்படுத்தாமல் குறைபடுத்துகிறது. கடின உழைப்பு, சிறந்த  நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி என்றெல்லாம் படத்தில் நேர்மறையான விஷயங்கள் இருந்தாலும் அது முன்வைக்கும் அரசியல் நச்சு மிக்கது என்பதால் இந்தப் படத்தைப் புறந்தள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழில் அரசியல் படங்களின் போதாமை காரணமாக இதைப் போன்ற படங்களைப் புகழ்ந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான செயல்பாடன்று. 

ஞாயிறு, மார்ச் 14, 2021

அஞ்சலி: எஸ்.பி.ஜனநாதன்: இயற்கையோடு கலந்த இயக்குநர்


1959 மே 7 அன்று பிறந்த எஸ்.பி.ஜனநாதன் இன்று, 14.03.2021 அன்று, உயிரிழந்திருக்கிறார். ஓரிரு நாள்களுக்கு முன்னர் (மார்ச் 11 அன்று) மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீண்டு வந்துவிட வேண்டுமென்று திரைத்துறையினர் விரும்பிக்கொண்டிருந்த சூழலில் இயற்கை அதற்கு ஒத்துழைக்கவில்லை. பெரிய அளவிலான கல்வி அறிவு இல்லாதபோதும், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் வாழ்க்கைக் கல்வியைக் கற்றிருக்கிறார் ஜனநாதன். படிப்பறிவில்லாத பெற்றோருக்குக் கடைசி மகனாகப் பிறந்த ஜனநாதன் எம்.ஜி.ஆர். படங்கள் வாயிலாகவே திரைத்துறைக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார். 

பி.லெனினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜனநாதன் மலையாள இயக்குநர் பரதன், இயக்குநர் கேயார் ஆகியோரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் 2003இல் வெளியான இயற்கை’ படம் இவரது முதல் படம். காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிருடன் இருந்தால் வருகிறேன்...’ என்னும் பிரபலப் பாடல் இடம்பெற்ற இந்தப் படம் தேசிய விருதை வென்றது. சிறந்த தமிழ்ப் படம் என்னும் விருதை வென்ற இதன் கதை தஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுக’ளைப் போன்ற அம்சத்தைக் கொண்டிருக்கும். இந்தப் படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ஈ’ (2006), பேராண்மை’ (2009), புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ (2015) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள லாபம்’ என்னும் திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால், வெளியாகும் நிலையில் இருந்தது. இத்தகைய சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. 

தமிழின் பெருமைமிகு இயக்குநராக ஜனநாதனை முன்னிருத்தும் வகையில் அவர் திரைப்படங்களை உருவாக்காதபோதும், குறிப்பிடத்தக்க இயக்குநராகத் தனது படைப்புகளைத் தந்தவர். அவருடைய படங்களில் இயற்கை’, ஈ’ ஆகியவை ஓரளவு நல்ல படங்கள் எனச் சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் நற்பெயர் எடுத்திருப்பவராகவே ஜனநாதன் உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியிலும் திரை ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.  

ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

சர்வதேசத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21


மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்விக்காகவும் ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. 2019-ம் ஆண்டைத் தொல்மொழிகளுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. தாய்மொழியின் அவசியமும் அருமையும் நமக்கு நன்கு தெரியும்.  ஏனெனில் நாம் நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் போராட்டம் நடத்தி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம். முதல் மொழிப் போராட்டம் 1938-ல் தொடங்கி 1940வரை நடைபெற்றிருக்கிறது.  

சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ல் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி 1938 ஏப்ரல் 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையைப் பிறப்பித்தார். இதை அடுத்து தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பு, இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்தும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன் (1939 ஜனவரி 15 அன்றும்), தாளமுத்து (1939 மார்ச் 11 அன்றும்) ஆகிய இருவர் உயிர் தியாகம் செய்தார்கள். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

இந்த பிப்ரவரி 21தான் சர்வதேசத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அது கொண்டாடப்படுவதற்கான காரணம் நமது மொழிப் போர் அல்ல. அது வேறொரு வரலாற்றைக் குறிக்கிறது. வங்க தேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலேயே சர்வதேசத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 கொண்டாடப்படுகிறது.

மேற்கு பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருந்த உருது 1948-ல் மொத்த நாட்டுக்குமான ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்க தேசம்) பெரும்பான்மையான மக்களால் வங்க மொழியே பேசப்பட்டது என்பதால் இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது. தாக்கா பல்கலைக் கழக மாணவர்களும் தாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 1952 பிப்ரவரி 21 அன்று நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவுகூரும் வகையில் பின்னர் வங்க தேசம் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளைக் கொண்டாடியது. இந்த நாளை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பிப்ரவரி 21-ஐ மொழிரீதியான பன்மைத்துவத்தைக் கொண்டாடுவகையில் விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த நாள்தான் சர்வதேசத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்குவந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும் அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் உயிரை மாய்த்துக்கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இது போக இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

1968-ம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது ”இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார்.  இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி கல்லூரிக் கல்வி வரை தமிழ் பயிற்று மொழி என்று அறிவித்தார். கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறையானது. இன்னும் உலகில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் புரிந்துகொள்ளும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க இயலாத நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை.


மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல அது பண்பாட்டு அடையாளம். உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் சுமார் 6,000 மொழிகளிலும் 43 சதவீத மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இவற்றில் பல மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்துக்குள்ளேயே இருக்கும். சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும் கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கிலுள்ளது. அதிலும் நூற்றுக்கும் குறைவான மொழிகளே நமது டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் நமது மொழி குறித்து நாம் எவ்வளவு கவனம் கொள்ள வேண்டும் என்பதே இந்த நாள் நமக்குத் தரும் பாடம்.

செவ்வாய், மார்ச் 01, 2011

மௌனமாய் உரையாடும் சிலைகள்

தந்தை பெரியார்

சென்னை அண்ணாசாலையில் சிம்சன் எதிரில் அமைந்துள்ளது தந்தை பெரியாரின் சிலை. இந்தச் சிலை பெரியாரின் 96ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17, 1974 அன்று நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றவிழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்துவைத்தது. இது தி.மு.க.வின் சார்பில் வைக்கப்பட்ட சிலையாகும். உட்கார்ந்த நிலையில் இச்சிலை அமைந்திருந்தாலும் பெரியாரின் கம்பீரம் அப்படியேதான் இருக்கிறது.

கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்துகிறார். ஆனால் கலைஞரோ பெரியாரின் சிலையை அமைத்த பிறகுதான் தனக்கு சிலை என்று அறிவித்துவிடுகிறார். அதனால் பெரியார் “தனக்குச் சென்னையில் சிலைவைக்க கலைஞரை வற்புறுத்துங்கள்” எனக் கூறுகிறார். தனது சிலை அமைக்கப்பட்டால் தானே கலைஞர் சிலையைத் திறக்க முடியும் என்பதால் அவ்வாறு வற்புறுத்தினார் பெரியார். அவரது நோக்கம் தனக்கோ கலைஞருக்கோ சிலைவைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்க வேண்டும் என்பதுதான். இதனால் அமைக்கப்பட்ட சிலை தான் இந்தப் பெரியார் சிலை.


மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று பார்ப்பனரல்லாதாரால் குறிப்பிடப்படும் ‘இந்து’ நாளிதழ் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருப்பதுதான் இதற்கான சிறப்பு. லட்சக்கணக்கான மக்கள் இன்று இச்சிலையை பார்வையிட்டபடிதான் போகிறார்கள், வருகிறார்கள். இப்பொழுது இன்னுமொரு கூடுதல் சிறப்பு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றம் பெரியார் சிலை முன்னிலையில் இருப்பது.

இச்சிலை திறப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் நாவலர் தலைமை, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வீராசாமி எம்.எல்.ஏ. வரவேற்புரை, தொடர்ந்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், மாவட்ட செயலாளர் சீதாபதி ஆகியோர் வழிமொழிந்து பேசினர். நாவலரின் தலைமை உரைக்குப்பின் லட்சசோபலட்சம் மக்களின் உணர்ச்சி வெள்ளத்திடையே தந்தை பெரியாரின் சிலையை முதல்வர் கலைஞர் திறந்துவைத்தார். பெரியார் இயற்கை அடைந்த பிறகு நடந்த சிலை திறப்பு என்பதால் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காததாக இருந்தது.

பிறகு, அமைச்சர் என்.வி. நடராசன், மேலவைத்தலைவர் சி.பி. சிற்றரசு, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, அமைச்சர் அன்பழகன் ஆகியோரின் உரைக்குப்பின் கலைஞர் உரையாற்றினார். இச்சிலையை உருவாக்கிய சிற்பி கோவிந்தசாமியின் மகன் பழனிக்கு கலைஞர் கேடயம் கொடுத்துச் சிறப்பித்தார். இந்த சிலை திறக்கப்பட்ட ஏப்ரல் 17ஆம் தேதி காலை பெரியார் திடலில் நடைபெற்ற நூலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் “பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக அனுமதிக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் உள்ள பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க மணியம்மையார் ஒப்புக்கொண்டார். பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்குவதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட விழா என்பதால், இந்தச் சிலை திறப்பு விழாவுக்கென ஒரு வரலாறு உண்டு.

கர்மவீரர் காமராஜர்

சென்னை அண்ணாசிலையில் ஜிம்கானா க்ளப் முன்னால் அமைக்கப்பட்டுள்ளது காமராஜரின் முழு உருவச் சிலை. காமராஜர் உயிரோடிருந்தபோது அக்டோபர் 9, 1961 அன்று இச்சிலையைத் திறந்துவைத்தவர் பாரதப் பிரதமர் ஜவஹர் லால் நேரு. இச்சிலையைப் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி ட்ரஸ்ட் பராமரித்து வருகிறது. குமாரசாமி காமராஜ் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களுள் ஒருவர். காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியைவிட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் காமராஜர் திட்டம். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை அக்டோபர் 2, 1963 அன்று ராஜினாமா செய்தார். அக்டோபர் 9ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.


மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தியைக் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார். 1936இல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராஜரைச் செயலாளராக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார். பெருந்தலைவர் காமராஜர் அக்டோபர் 2, 1973 அன்று காலமானார்.

தோழர் ப. ஜீவானந்தம்

பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தத்தின் சிலை சென்னை தண்டையார் பேட்டை மணிக்கூண்டுக்கு அருகே ஜீவா பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மார்பளவு சிலை இது. இந்தப் பூங்கா சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிலை 30.11.1966 அன்று காமராஜர் தலைமையில் பி.ஸி.ஜோஸியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வேறெங்கோயிருந்து இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் இது. ப. ஜீவானந்தம் ஆகஸ்ட் 21, 1906 இல் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்தவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் இவர். ஏறத்தாழ பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகப் படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜீவா 1963, ஜனவரி 13 அன்று சென்னையில் காலமானார்.

நான் ஒரு நாத்திகன் என்னும் நூலில் ஜீவா பின்வருமாறு கூறியுள்ளார்:
“அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பௌதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்”

அறிஞர் அண்ணாதுரை

சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டம் (தற்போதைய தலைமைச் செயலகம்) முன்னர் வலதுகையை உயர்த்தி வழிகாட்டியபடி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலை. 1968இல் சென்னையில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. அப்போது கடற்கரைச் சாலையில் அறிஞர் பெருமக்கள் பத்து பேர்களின் சிலை நிறுவப்பட்டது. “அப்படி பத்து சிலை வைத்ததனால் அந்த அண்ணனின் புகழைப் பார் போற்ற சென்னையிலே சிலை ஒன்று வைத்தபோது ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார் எம் அண்ணா. ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம் அய்யகோ இன்னும் ஓராண்டே நான் உயிர் வாழப்போகிறேனென்று ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது” என அண்ணாவுக்கான இரங்கல் கவிதாஞ்சலியில் கலைஞர் மு கருணாநிதி குறிப்பிடுவது இச்சிலையைத் தான். இச்சிலை நிறுவப்படுவதில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரும் கருணாநிதியும் சேர்ந்து எடுத்த பெரு முயற்சியின் காரணமாகவே இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை எம்ஜிஆர் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 1968 ஜனவரி முதல் நாளன்று டாக்டர் சர் ஏ ராமசாமி முதலியார் இச்சிலையைத் திறந்துவைத்தார். அண்ணா உயிரோடு இருக்கையில் இச்சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆனால் சிலை திறந்த அடுத்த ஆண்டே பேரறிஞர் அண்ணா மறைந்துவிட்டார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்