இந்த வலைப்பதிவில் தேடு

புதன், அக்டோபர் 29, 2025

ரஜினியாவாரா விஜய்?

1975இல் திரையுலகுக்கு ரஜினி காந்த் வந்தார். 50 ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஐம்பதாண்டுகளில் தீபாவளிக்கு ரஜினியின் 19 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அதுவும் 1995வரை 18 படங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2021இல் அண்ணாத்தயும் வெளியானது.

முதன்முதலில் 1976இல் மூன்று முடிச்சு வெளிவந்தது. 1978 தீபாவளிக்கு, மூன்று ரஜினி படங்கள் திரைக்கு வந்துள்ளன. 1976 முதல் 1981வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் [ஆறு புஷ்பங்கள் (1977); தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய்மீது சத்தியம் (1978); அன்னை ஓர் ஆலயம் (1979); பொல்லாதவன் (1980); ராணுவ வீரன் (1981)], 1983முதல் 1989வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளும் [தங்க மகன் (1983), நல்லவனுக்கு நல்லவன் (1984), படிக்காதவன் (1985), மாவீரன் (1986), மனிதன் (1987), கொடிபறக்குது (1988), மாப்பிள்ளை (1989)] தீபாவளிக்குப் படங்களை வழங்கிய ரஜினிக்கு 1990, 1993,1994 ஆகிய ஆண்டுகளிலும், அதன் பின்னர் 2020 வரையிலும் ஒரு படம்கூடத் தீபாவளிக்குத் திரைக்கு வரவில்லை.

1990 தீபாவளிக்குத் திரைப்படம் வராததால் அவருடைய ரசிகர்கள் அந்தத் தீபாவளி நாளைத் துக்க நாள் எனச் சொல்லித் திரிந்தார்கள். மதுரையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாகக்கூட தகவல் உண்டு. அடுத்த ஆண்டு 1991இல் தளபதியும், 1992இல் பாண்டியன் திரைப்படமும் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைத்தன. இன்னும் அவர் வீட்டு முன்னர் தீபாவளி அன்று ரசிகர்கள் சிலர் திரள்கிறார்கள். இது ரஜினியின் நிலைமை.
இப்போது விஜய் கதைக்கு வருவோம். அவர் நடித்த 12 படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாயின. முதலில் தீபாவளிக்கு வந்த படம் சந்திரலேகா (1995). தீபாவளி அன்று ரஜினியின் முத்து படம் வெளியான அதே தீபாவளிக்கு வந்து படுதோல்வியடைந்த படம் இது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2000இல் பிரியமானவளே வந்தது. 2001இல் ஷாஜகான் தொடங்கி, 2019இல் பிகில் வரை, பகவதி (2002), சிவகாசி (2005), அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012), கத்தி (2014), மெர்சல் (2017), சர்கார் (2018) என மொத்தம் 10 படங்கள் வெளியாயின. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் படம் வெளியானதே ஒரே ஒரு முறைதான். அதுவே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரைப்படத் துறையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துவரும் ரஜினி பொதுமேடைகளில் எந்தவித பெரிய ஒப்பனையும் இன்றி முடியற்ற தலையுடன் தோன்றிவிடுகிறார். அப்படிப்பட்ட நடிகர் ரஜினியையே அரசியல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடவைத்துவிட்டது. ஆனால், நடிகர் விஜய் ஒப்பனையற்று ரசிகர்களைச் சந்திக்கத் துணியாமல் முழு ஒப்பனையுடன் அதுவும் குளிர்சாதனக் கூண்டு வண்டியில் வந்து மக்களைச் சந்திக்கிறார். அப்படிப்பட்ட விஜய் அரசியல் மாற்றத்துக்கான தலைவர் என்று அறியாமையாலோ அவசியத்தாலோ நம்பும் மனிதர்கள் கலர் கலராக ரீல் விடுகிறார்கள். அவரது செல்வாக்கின் ஆற்றலை மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். எல்லாம் 2026 தேர்தல் முடிவு வரும் வரையில்தான். முடிவு வந்த பின்னர் அவருக்கான ஆதரவு வெட்டவெளிச்சமாகிவிடும். அது அஞ்சு … ஆறு… விழுக்காடாக இருக்கலாம்… அதுவரை கம்பு சுத்துபவர்கள் சுத்திக்கொண்டே இருக்கலாம்.

திங்கள், அக்டோபர் 27, 2025

ராமராஜனுக்கும் விஜய்க்கும் முதலமைச்சர் ஆசை


நடிகர் விஜய் போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக எண்பதுகளின் இறுதியில் இருந்தார் ராமராஜன். இளையராஜா இசையமைத்த

அவருடைய படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவின. விஜய் போல் அவர் அரசியலில் நடிகராக இல்லை. அவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆர்வம் இருந்தது. அதிமுகவில் இணைந்து 1998இல் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
திருச்செந்தூரில் அப்போது, மொத்தம் 12 பேர் மனுத் தாக்கல் செய்தனர். அதில் ஒருவரது மனு தள்ளுபடியானது. நான்கு பேர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இறுதியில் களத்தில் ஏழு பேர் எஞ்சினர். ஊரகப் பகுதியின் இளம்பெண்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நடிகர் ராமராஜனை எதிர்த்து எந்தப் பெண்ணும் போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஏழு பேரும் ஆண்கள்.
1998 பிப்ரவரி 22 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் மார்ச் 2 அன்று எண்ணப்பட்டு,முடிவு அறிவிக்கப்பட்டது.
அப்போது, திருச்செந்தூரின் மொத்த வாக்காளர்கள் 10,14,366 பேர். அவர்களில் 53.95 விழுக்காட்டினர் வாக்களித்தார்கள். 5,47,234 வாக்குகள் பதிவாயின. அவற்றின் செல்லுபடியானவை 5,35,637 வாக்குகள்.
அவற்றில் நடிகர் ராமராஜன் 2,64,290 (49.34%) வாக்குகளைப் பெற்று, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனை 46,855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டார். ஆதித்தன் பெற்ற வாக்குகள் 2,17,435 (40.59%)
எஞ்சிய ஐவரும் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர். அதிலொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குமரி அனந்தன் அவர்கள். அவருக்கு 38,291 (7.15%) வாக்குகள் கிடைத்திருந்தன.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 22 இடங்களில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளில் தோல்வியுற்றது. டி ஜெயகுமார் (மத்திய சென்னை), கா.காளிமுத்து (சிவகங்கை), கிருஷ்ணமூர்த்தி (திருப்பத்தூர்), டாக்டர் கோபால் (நாகப்பட்டினம்) ஆகிய நால்வரும் தோல்வியைத் தழுவியவர்கள்.
கா.காளிமுத்து தோல்விகண்ட சிவகங்கை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றிபெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலியில் போட்டியிட்ட நடிகர் சரத் குமார் தோற்றுப்போனார்.
முதலமைச்சர் கனவு கண்ட ராமராஜனை அந்த ஒரு தேர்தலோடு அரசியல் ஏறக்கட்டிவிட்டது.
(ராமராஜனின் பிறந்த நாளான அக்டோபர் 18 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு)

வெள்ளி, செப்டம்பர் 19, 2025

லே அவுட் ஆசிரியர்


ஆசிரியர் தெரியும். பொறுப்பாசிரியர் தெரியும். கௌரவ ஆசிரியர் தெரியும். தொகுப்பாசிரியர் தெரியும். பதிப்பாசிரியர் தெரியும். அதென்ன லே அவுட் ஆசிரியர் என நீங்கள் ஒரு நொடி சிந்தித்திருக்கக் கூடும். சிந்தித்துக்கொண்டே இருங்கள். சிந்தனையின் முடிவில் உங்களுக்கு ஒரு தெளிவு வரக்கூடும். அந்தத் தெளிவை வழங்கும் வகையில், தமிழ் இதழியலில் அண்மையில் நடந்த மாற்றம் ஒன்றைச் சுருக்கமாக உங்களிடம் பேசிப் பார்க்கும் முயற்சியே இது. இது கட்டுரையா பத்தியா வெட்டி அரட்டையா என்பதை வாசிக்கும் நீங்கள் முடிவுசெய்துகொள்ளலாம். கட்டுரைக்கான இலக்கணங்களுடன் இது உள்ளதா இல்லையா என்பதை இப்போது விவாதிக்கத் தேவையில்லை என்பதால் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறேன். நான் சொல்ல விழைந்த கூற்றுக்குள் செல்வதற்கு முன்னர் இதழியல் வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக, மணி ரத்ன வசனமாகப் பார்த்துவிடலாம். 

சீனாவில் தோன்றிய பீகிங் நியூஸ் இதழ்தான் உலகில் தோன்றிய முதல் இதழ் என்கிறார்கள். இது கி.பி.363 இல் தொடங்கப்பட்டு 1935 வரை வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் எலிசபெத் அரசி காலத்தில்தான் இதழியல் தொழிலாக மலர்ந்துள்ளது. இங்கிலாந்தின் முதல் நாளிதழ் 11.03.1702 அன்று தொடங்கப்பட்டது. எலிசபெத் மாலெத் எனும் பெண்மணி இவ்விதழைத் தொடங்கி நடத்தியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை முகலாயர் காலத்தில்தான் அரண்மனைச் செய்திகளை வெளியிடும் வழக்கம் வந்துள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் 1750 ஜனவரி 2 அன்று வங்காளத்திலிருந்து வெளியான வங்காள கெஜட் என்பது தான் இந்தியாவில் தோன்றிய முதல் வார இதழ் என்கிறார்கள். 1853இல் கிரிச் சந்திர கோஷ் எனும் இந்தியர் இந்து பேட்ரியட் எனும் இதழைத் தொடங்கினார். இந்தியரால் தொடங்கப்பட்ட முதல் இதழ் இது. சென்னை மாகாணச் செய்திகளை வழங்கிய த மெட்ராஸ் கூரியர் இதழ் 1785 ஆகஸ்டு 12 இல் தொடங்கப்பட்டுள்ளது. இது மாத இதழ். 1862இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் மெயில் இதழ்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மாலை நாளிதழ். 1878 இல் ஜி.சுப்பிரமணியரால் தொடங்கப்பட்ட தி இந்து ஆங்கில இதழ்  1889 ஏப்ரல் முதல் நாள் முதல் நாளிதழாக வெளிவந்தது. இது இந்துக் குழுமமாக வளர்ச்சியடைந்து, 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16 அன்று தி இந்து எனும் தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது. இது பின்னர் இந்து தமிழ் திசை எனப் பெயர் மாற்றப்பட்டது. 

இந்து தமிழ் திசை ஆசிரியராக இருந்த அசோகன் இந்த நாளிதழிலிருந்து விலகியிருக்கிறார். விலகிய அசோகன் எடிட்டர் அசோகன் என்னும் பெயரில் யூடியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறார். இவருக்கு முன்னரே இந்நாளிதழிலிருந்து வெளியேறிய ஒருவர் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி நடத்திவருகிறார். அவர் இந்து தமிழ் திசை நாளிதழின் இணையதளத்தில் பணியாற்றிய திரு ராம்ஜி. அவர் ரிலாக்ஸ் வித் ராம்ஜி என்னும் பெயரில் ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்திவருகிறார்.  அவரது வழியில் பயணம்செல்கிறார் எடிட்டர் அசோகன். சரி எடிட்டர் அசோகன் அலைவரிசையை அவர் பார்த்துக்கொள்வார். அவர் மட்டும் பார்த்தா எப்படி யூடியூப் சக்சஸ் ஆகும் என எடக்கு மடக்கா கேள்வி கேட்காதீங்க. அசோகன் திறமையானவர். கோயம்புத்தூரில் இருந்துகொண்டே இந்து தமிழ் திசை நாளிதழை நான்கைந்து ஆண்டுகள் நடத்திய திறமைக்குச் சொந்தக்காரர். அவரது திறமைக்கு அவர் செவ்வாய் கிரகத்தில் இருந்திருந்தாலும் இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கக்கூடியவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.  

எந்தச் சொல் யாரைப் பண்படுத்தும், எந்தச் சொல் யாரைப் புண்படுத்தும் என்பவற்றை அறிந்து எதைத் தவிர்க்க வேண்டும், எதைச் சேர்க்க வேண்டும் என்ற நுட்பம் உணர்ந்து செயல்பட்டு இதழியல் பணிகளைச் செம்மையாகச் செய்பவர். இதழியல் துறையின் நெளிவுசுளிவு அறிந்தவர். திரைத்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரை அரவணைத்துச் செல்லும் அன்பாளர். கடுஞ்சொல் கூறித் தம் காரியத்தைக் கெடுத்துக்கொள்ளாத பண்பாளர். இதழியல் பணியில் ஈடுபட்டுள்ளோர் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகவிருக்கும் சூழலில் ஒரு திரைப்படத்தையே இவர் தயாரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த அளவுக்குத் திறமையாகச் செயல்பட்டு முன்னேறியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி போல் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்துக்குத் தம் திறமையால் வந்தவர். 

அசோகன் கோயம்புத்தூரில் இருந்து இந்து தமிழ் திசையை நடத்திய காலத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வி. வெங்கடேஸ்வரன் என்றும்  அடிப்படையில் இவர் ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற போதும், செய்தி ஆசிரியராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் என்றும், கிட்டத்தட்ட நிழல் ஆசிரியர்போல செயல்பட்டவர் என்றும், அவரைச் சார்ந்த நண்பர்கள் கூறுகிறார்கள். தினமலர் நாளிதழில் வடிவமைப்பாளராகப் பணியில்  சேர்ந்த வெங்கடேஸ்வரன் தினமணி, விகடன் எனச் சென்றுவிட்டு தினகரன் நாளிதழிலிருந்து தி இந்துவுக்கு வந்தவர். அவர் எழுதிய கட்டுரை எதுவும் கண்ணில் படவில்லை. அவர் எடிட்டிங் பணியை எந்த அளவு சிறப்பாகச் செய்வார் என்பதற்கான சான்று எதுவும் இல்லை. வெங்கடேஸ்வரனைப் பொறுத்தவரையில் எழுத்து என எதுவுமே இல்லை எல்லாம் படம்தான். அவர் கையில் நாளிதழ் பக்கங்களைக் கொடுக்கும்போது அவற்றைக் கையில் வாங்கி ஒரு பார்வைதான் பார்ப்பார். பார்த்துவிட்டு அப்படியே திருப்பிக் கொடுத்து விடுவார். ஏதேனும் பிழைகள் தென்பட்டால் சொல்வார். ஒற்றுமீது அவருக்கு அநியாயத்துக்கு ஒவ்வாமை. முடிந்தவரை ஒற்றுகளை ஒரே பார்வையில் உதிர்த்துவிட்டே நாளிதழ் பக்கங்களை இறுதிசெய்வார். மிக மிகக் கவனமாக ஒற்றுப் போட்ட இடங்களை மிக மிகக் கவனமாக அகற்றுவதில் கைதேர்ந்தவர். இந்து தமிழ் திசை நாளிதழில் செய்திகளின் தரம் உயர்வதற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை ஆற்றியிருப்பார் என நம்ப முடிகிறது. இல்லையெனில், நூறாண்டு மரபு கொண்ட இந்துக் குழுமம் வெங்கடேஸ்வரன் போன்ற ஒருவரை, பார்ப்பனரல்லாதவரை அவர்களின் நூறாண்டுக் கனவான தமிழ் நாளிதழுக்கு ஆசிரியராக்கி அழகுபார்க்குமா?

சரி, இப்போது ஒருமுறை தலைப்பை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். 


செவ்வாய், செப்டம்பர் 16, 2025

உண்மை நின்றிட வேண்டும்


வி.நா.மருதாசலனார் எழுதி 1935இல் வெளியிட்டஇந்தியப் பத்திரிகைத் தொழிலியல்என்னும் நூலில், “இந்திய பத்திரிகை முதலாளிகளுக்குப் பத்திரிகைத் தொழிலாளர் ஒருவாறு அடிமை முறையில் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்நூல் வெளியாகி ஏறக்குறைய 90 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இன்றும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இந்தக் கசப்பான உண்மையை இப்போது நினைவுபடுத்துவதற்குக் காரணம், தேசிய பத்திரிகையாளர் நாளான நவம்பர் 16 அன்று பத்திரிகையாளர் ஃப்ரண்ட்லைன் விஜயசங்கர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தி ஒன்று. அதில், புதிய தலைமுறை ஊடக நிறுவனம் ஏறக்குறைய 40 ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்த பின்னூட்டம் ஒன்றில், தி இந்து குழுமத்திலிருந்து கடந்த சில ஆண்டுகளில் 600 ஊழியர்களும், 100 பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டிருப்பதாக அவர் எழுதியிருந்தார். புதிய தலைமுறையில் இப்படியான பணிநீக்கம் இது முதன்முறையன்று; அங்கு அது தொடர்கதை. இந்நிறுவனத்தில் அண்மையில்தான் பத்திரிகையாளர் சமஸ் பணியில் சேர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல் 

வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை என்றார் பிரெஞ்சு அறிஞர் வால்டேர். இந்தச் சொற்றொடர் ஊடகவியலாளர்களை உசுப்பேற்றுவதற்காகச் சொல்லப்படுவது வழக்கம். இப்போது பேனாவால் எழுதாத, இன்னும் சொல்லப்போனால் எழுதவே எழுதாத ஊடகவியலாளர்களே ஊடகத்திலும் சமூகத்திலும் ஆதிக்கம்செலுத்துகிறார்கள் என்ற போதும், இதழியல் துறை வெகுமக்கள் மத்தியில் தன் மானம், மரியாதையைப் போதுமான அளவுக்கு இழந்துவிட்டபோதும், இன்றைக்கும் இந்தச் சொற்றொடர் அதன் பொருளை இழந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இன்னும் உண்மையான எழுத்துக்கு இருக்கும் மரியாதை. 

வலிமையான பேனாவை ஆயுதமாக ஏந்திச் செயல்படும் உழைக்கும் பத்திரிகையாளர்களின் நிலைதான் உள்ளபடியே வலியும் வாதையும் நிறைந்தது.  நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதே அவர்களது நிலை. அவர்களது தலைக்கு மேலே பணிப் பாதுகாப்பின்மைக் கத்தி எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிழக்கூடிய நிலையில் தொங்கியபடியே உள்ளது. அந்த ரணகளத்துக்கிடையே  வாசகர் கிளுகிளுப்புக்காக அவர்கள் பரபரப்புடன் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், மிகவும் இயல்பாக அவர்களது வாழ்வாதாரப் பறிப்பு நாள்தோறும் நடந்தேறுகிறது. 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழின் முன்னணி வார இதழான ஆனந்தவிகடன், நாளிதழான இந்து தமிழ் திசை, காட்சி ஊடகமான புதிய தலைமுறை உள்ளிட்ட பல பெரிய ஊடகங்களும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையிலும், ஆள்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கின. கொரோனா பெருந்தொற்று ஊடக நிறுவனங்களுக்கு அதன் ஊழியர்களைக் கசக்கிப் பிழியும் கம்ப சூத்திரத்தையைக் கற்றுக் கொடுத்துவிட்டது; சமூகத்தில் எல்லாவற்றையும் அறச்சீற்றத்துடன் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களையோ தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக முணுமுணுக்கக்கூடவிடாமல் முடக்கிவிட்டது.

ஊடகவியலாளர்கள் பணிநீக்கம்செய்யப்படுவதைவிடப் பணிநீக்கம் செய்யப்படும்போது, அவர்கள் நடத்தப்படும்விதம்தான் சீற்றம் தருகிறது. பணி நீக்கத்துக்குரிய முறையான இழப்பீடுகள், அதாவது சட்டப்படி உரிமையான இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்குத் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான உரிமை குறித்தோ உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் குறித்தோ விழிப்புணர்வு உள்ளதா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டே இயங்கிவருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ உரிமையைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் மிகவும் கவனமாகத் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் எந்த ஓர் ஊடகவியலாளரும் ஊடகப் பணியில் சேர இயலாது எனும்போது, அவர்கள் வாய்மூடி மௌனித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். 

சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆவேசத்துடன் வாள் சுழற்றும் தலைமைப் பொறுப்பு ஊடக சூராதிசூரர்கள் சக பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டும் காணாமல் பெருந்தன்மையுடன் நடந்து, நிறுவனத்திடம் நல்ல பெயர் எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பல ஊடக நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும், ஊடகவியலாளர்கள் பெயரில்தான் இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. நமது அறிவுச் சமூகமோ கஸ்தூரி, நயன்தாரா, விஜய் செய்திகளுக்கு மூச்சுப்போட்டு விவாதிக்கிறது; ஊடகவியலாளர்கள் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம்செய்யப்படும்போதோ, வாளாவிருக்கிறது.  

கொரோனா பெருந்தொற்றைக் காரணங்காட்டி இந்து தமிழ் திசை பணிநீக்கிய றக்குறைய பதினைந்து பேரில் நானும் ஒருவன். உண்மையில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது எவருக்குமே தெரியாத அளவுக்குப் பணி நீக்கம் ரகசியமாக நடத்தப்பட்டது. அந்நிறுவனத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியில் சேர்ந்து, உதவி செய்தி ஆசிரியர் நிலையில் இருந்த வேளையில் என்னைப் பணிநீக்கம்செய்தார்கள். நூறாண்டுப் பாரம்பரியம் கொண்ட ஊடகம் என மார்தட்டிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றிலிருந்து வெளியான இந்து தமிழ் திசை நாளிதழ் பணி நீக்க விவகாரத்தில் நடந்துகொண்ட விதம் உண்மையிலேயே ஊடக அறம் மீதான அடிப்படை நம்பிக்கையையே அற்றுப் போகச் செய்துவிட்டது. 

பணி நீக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன்னர் அந்நிறுவனம், கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி, ஊழியர்களின் ஊதியத்தை 20 விழுக்காடு குறைத்தது. இப்படியான ஊதியக் குறைப்பில் நிறுவனம் அநியாயத்துக்குச் சமூக நீதியுடன் நடந்துகொண்டது. லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், வாய்க்கும் வயிற்றுக்கும் சண்டைபோடும் சாதாரண ஊழியருக்கும் ஒரே மாதிரியாக 20 விழுக்காட்டைக் குறைத்தது. அப்படிக் குறைத்தபோது, ஊழியர்களுக்கு முறையான அறிவிப்பு எதையும் அந்நிறுவனம் செய்திருக்கவில்லை. வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்ட பின்னர் ஊழியர்களுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பார்த்த பின்னர்தான் ஊதியக் குறைப்பு நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. செய்திகளை முந்தித் தரும் துடிப்புள்ள ஊடக நிறுவனங்களுக்கு எந்தச் செய்தியைக் காலதாமதமாகத் தர வேண்டும் என்ற நுட்பமும் தெரியும் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொள்ள முடிந்தது.  

ஊதியக் குறைப்பை அறிந்துகொண்ட உடன், அந்நாளிதழின் ஆசிரியர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு 2020 மே 4 அன்று அனுப்பிய மின்னஞ்சல் வழியே எனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன். நான்கு மாதங்கள் கழித்து கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி ஊடக நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கை என்பதைச் சொல்லாமல் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியபோது, நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். உழைக்கும் பத்திரிகையாளராக நான் பணியாற்றிய இணைப்பிதழின் பொறுப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், நற்குணசீலரும், தோழருமான ஆதி வள்ளியப்பன் கைபேசி வழியே அழைத்து என்னைப் பணியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் மின்னஞ்சல் வழியே தகவல் உறுதிசெய்யப்படும் என்றும் உணர்ச்சியற்ற, உள்ளடங்கிய  குரலில் சொன்னார். எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஆள்குறைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தாத, உரிய பதவியின் பெயர் குறிப்பிடப்படாமல் அநாமதேய கையெழுத்தைத் தாங்கியிருந்த பணிநீக்க அறிவிப்பு, மின்னஞ்சல் வழியே வந்தது. இயந்திரத்தின் துல்லியத்துடன் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கைக் கவனித்துக்கொள்ளும் அலுவலர் கிருஷ்ணன், இழப்பீடாக இரண்டு மாத ஊதியம் அதிலும் அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறியபோது, பணியிலிருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியைவிட அந்தப் பெரிய நிறுவனத்தின் சிறுமைப் புத்தியே பேரதிர்ச்சியை அளித்தது.

அறிந்த செய்தியை உடனடியாகப் பொதுச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஊடகக் குருதி  உந்த, அந்தச் செய்தியை ஃபேஸ் புக் தளத்தில் பதிவிட்டேன். பணி நீக்கம் தொடர்பாக நாளிதழின் தலைமைப் பொறுப்பிலிருந்த அசோகனுடன் பேசியபோது, தனது கையறு நிலையை வெளிப்படுத்திய அவர் சட்டப் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதைக் குறிப்புணர்த்தினார். அதன் பின்னர் சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் உதவியுடன் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டேன்; அங்கு நீதிகிடைக்காத நிலையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன் (O.P. No: 107/2021). அந்த வழக்குத் தொடர்ந்ததால் எனக்கு நன்மையோ இல்லையோ அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி வேறு எவரையும் இந்து தமிழ் திசை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியிருக்கவில்லை. அநீதிக்கு எதிராகப் பலவீனமாக ஒலித்த எனது மெல்லிய குரலால் நண்பர்களுக்குக் கிடைத்த நன்மை என்னும் வகையில் அது எனக்கு அற்ப  மகிழ்ச்சியைத் தந்தது. 

உதவி செய்தி ஆசிரியராகப் பணியாற்றிவந்த நான் உழைக்கும் பத்திரிகையாளர் அல்ல என்பது மாதிரியான வாதத்தைத் தொழிலாளர் நீதிமன்றத்தில் மௌண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் சவலைக் குழந்தை இந்து தமிழ் திசை முன்வைத்தது. ‘சீச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்புஎன்னும் பாரதியாரின் வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். நீதிமன்ற விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டதற்கிடையே, ஒருநாள் என்னை அழைத்து, ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படியும் நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய  நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை ஆகவே,  நான் உடன்படவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தேன். இறுதியாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி நான் உழைக்கும் பத்திரிகையாளர் என்பதை உறுதிசெய்திருந்தார்.

ஊடகவியலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அவர்கள் காக்கும் மௌனமே ஊடக நிறுவனங்களுக்குப் பலம். ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களைப் பணிநீக்கம் செய்தால், உடனே அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தரும் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு எவருக்கும் தெரியாமல் அடுத்த ஊடக நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதில்தான் ஊடகவியலாளர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். ஏதேனும் எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, நீதிக்காகச் சட்டப்போராட்டத்தைக் கையில் எடுத்தாலோ அடுத்த நிறுவனம் பணி தராமல் போய்விடுமே  என்னும் அச்சமே அவர்களிடம் தொக்கி நிற்கிறது. அவர்கள் அச்சத்தில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதே நேரத்தில் ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டோம், அதற்கான முறையான சட்டப்பூர்வ இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறார்களா போன்ற அடிப்படையான அம்சங்களில்கூட அவர்கள்  கவனம் எடுத்துக்கொள்வதில்லை என்பது வருத்தமளிக்கிறது. பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுக்க நிறுவனம் கோரும்போது, எதுவும் எதிர்த்துப் பேசாமல் அப்படியே எழுதிக் கொடுக்கும் கிளிப்பிள்ளைகள் இங்கே  காணப்படுகிறார்கள் என்பதை என்னவென்பது? பாலியல் குற்றத்தைப் பெண்கள் வெளியே சொல்லத் தயங்குவதற்கும் ஊடகவியலாளர்கள் தங்களது பணிநீக்கத்தை வெளியே சொல்வதை மானக்கேடாகக் கருதுவதற்கும் பெரிய வேறுபாடில்லை

இதில் இன்னொரு வருந்தத்தக்க செய்தி பத்திரிகையாளர் சங்கங்களைப் பற்றியது. பத்திரிகையாளர்கள்தாம் பலவீனமாக இருக்கிறார்கள் என்றால் பத்திரிகையாளர் சங்கங்களோ அவர்களைவிடப் பலவீனமாக உள்ளன. ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டுப் பணிநீக்கம் போன்ற விவகாரத்தை முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்கக்கூடிய பெரிய பொறுப்பைக் கொண்ட பத்திரிகையாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களோ தங்களில் யார் பெரியவர் என்னும் குஸ்திப் போட்டியிலேயே முஷ்டி உயர்த்திக்கொண்டு திரிகிறார்கள்.  பத்திரிகையாளர் சங்கத்துக்குள்ளும் சங்கங்களுக்குள்ளும் ஏற்படும் உள் முரண்பாடுகளைத் தீர்க்கவே தனி தீர்ப்பாயம் அமைத்தால் தேவலை என்று சொல்லத்தக்க அளவில் அறிவுச் சமூகத்தினரிடையே அவ்வளவு முரண்கள். 

இப்படியான சூழலில் நியாயமான கேள்விகளை நிறுவனங்களை நோக்கிப் பத்திரிகையாளர்கள் கேட்கத் தொடங்கும்போதுதான், இத்தகைய அவலங்கள் சிறிதாவது மட்டுப்படும்; பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் தெரியவரும், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுக்கத் தொடங்கினால், சங்கங்களும் அவர்களுக்குக் கைகொடுத்து பிரச்சினையைத் தீர்க்க முனைந்தால்தான் சமூகத்தில் அவர்களுக்கு ஆதரவான  குரல் எழும்பும். சமூகச் சீர்கேடுகளை, இழிவுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய நான்காம் தூணே சீர்கேடடைவதும், ஊடக அறத்தைக் காற்றில் மிதக்கவிட்டுவிடுவதும்  நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.

காக்கைச் சிறகினிலே டிசம்பர் 2024 இதழில் வெளியானது. 

 

திங்கள், செப்டம்பர் 15, 2025

சில்லுன்னு ஒரு பயணம்


சினிமாக்களில் மட்டுமே பார்த்துவந்த மெட்ரோ ரயிலை சென்னைவாசிகள் நேரில் கண்டுவிட்டார்கள். கடந்த திங்களன்று (29.06.2015) சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டது. புறநகர் ரயில், பறக்கும் ரயில் வரிசையில் புதிதாக இந்த மெட்ரோ ரயிலும் சேர்ந்துகொண்டது.

மெட்ரோ ரயில் பயணம் சென்னைவாசிகளுக்குப் புதுவிதமான அனுபவமே. ஏனெனில், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வெப்பமான சென்னை நகரின் ஊடே மேம்பாலத்தில் செல்லுவது உண்மையிலேயே உற்சாகமாக இருப்பதாகவே மெட்ரோ ரயிலில் பயணம்செய்தவர்கள் கூறுகிறார்கள். வெளியே சுட்டெரிக்கும் வெயிலைக் கண்ணாடி வழியே பார்த்தபடி வானத்தில் மிதப்பது போல குளுமையுடன் பயணிக்கும்போது ஆசுவாசமாக இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட பறக்கும் ரயிலின் அமைப்பிலேயே மெட்ரோ ரயில் இருக்கிறது. பறக்கும் ரயிலில் உட்கார அதிக இடம் இருக்கும், நிற்க குறைவான இடம் இருக்கும். மெட்ரோவில் இருக்க குறைவான இடம், நிற்க அதிக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையம்கூடப் பறக்கும் ரயில் நிலையம் போலவே விசாலமானதுதான்.

ஆனால், மெட்ரோவில் தொழில்நுட்ப வசதிகள் பறக்கும் ரயிலைவிட மேம்பட்டிருக்கின்றன. நடைமேடையில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல இங்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் நடைமேடைகள் இப்படி மேம்பாலத்தால் இணைக்கப்பட்டிருக்காது.

மேலும் பறக்கும் ரயில் வந்துசெல்லும் நிலையங்களில் காற்று உள்ளே வந்துவிடக் கூடாது என்று முன்யோசனையோடு கட்டியிருக்கிறார்களே என்று தோன்றும் அளவில் அவற்றை அமைத்திருப்பார்கள். வியர்வை வழிய வழியதான் நிற்க வேண்டும். பிளாட்பாரத்தின் முனைப் பகுதியில் மட்டுமே காற்று வர முடியும். ஆனால், இங்கே அந்தப் பிரச்சினை இல்லை.

மேலே கூரையில் திறப்புகள் உள்ளன. எனவே, காற்று வர வசதியுள்ளது, பார்வையில் வானமும் படுகிறது. பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் தானியங்கிக் கதவுகள் திறப்பதும் பின்னர் மூடுவதும் பார்க்க அழகாக இருக்கின்றன. ஏற்கெனவே, சென்னையின் சொகுசுப் பேருந்துகளில் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதுதான். ரயிலில் இது முதல்முறை என்பது மட்டும் புதுசு.

பிற ரயில்களில் நின்றுகொண்டே பயணிப்பது போல மெட்ரோவில் மிகச் சுலபமாக நின்றுகொண்டு பயணம் செய்ய இயலவில்லை. கவனமாக நிற்க வேண்டியிருக்கிறது. சென்னையில் டிரெயிலர் பேருந்துகளில் செல்லும்போது பேலன்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதைப் போலவே உள்ளது மெட்ரோவின் பயணம். மெட்ரோவின் அகலமும் பிற ரயில்களைவிட குறைவு. ஆகவே, ஏதோ பொருட்காட்சி ரயிலில் போவது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அனைவரும் கண்காட்சியில் ஓடும் பொம்மை ரயிலில் குடும்பத்துடன் குதூகலமாக செல்வது போலவே செல்கிறார்கள்.

நகரின் சாலைகளையும் கட்டடங்களையும் போக்குவரத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊட்டி மலை ரயிலில் போவது போல சந்தோஷத்துடன் செல்கிறார்கள். இந்தச் சந்தோஷத்தின் காரணமாக ரயில் கட்டணம் அதிகம் என்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

டூர் வந்தது போல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் உற்சாகமாக ஃபோட்டோகளும் செல்பிகளும் எடுத்து மகிழ்கிறார்கள். இதுவரை வெளிநாட்டுப் படங்களில் மட்டுமே பார்த்து மகிழ்ந்த மெட்ரோ ரயிலில் தாங்களே பயணிப்பதால் ஒருவித பரவசத்தை உணர்கிறார்களே எனத் தோன்றும்படி அமைகிறது அவர்களின் பயணம். பொதுமக்கள் போலவே விஜய்காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற பிரபலங்களும் இதில் பயணித்து மெட்ரோவைப் பெருமைப்படுத்தி விட்டார்கள்.

ரயில் கட்டணம் அதிகம் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் பத்து ரூபாயும் அதிகபட்சமாக நாற்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினசரி மெட்ரோவில் செல்பவர்கள் இந்தக் கட்டணத்தில் ரயிலைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

கட்டண விஷயத்தில் ஏசி பேருந்து, ஆட்டோ போன்றவற்றுடன் ஒப்பிட்டு இப்போதைய கட்டணத்தை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், டெல்லி நகரின் மெட்ரோ கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. முதல் நாள் இருந்த கூட்டம் அடுத்தடுத்த நாள்களில் இல்லை. ஓரிரு மாதங்கள் சென்ற பின்னர் சென்னைக்கு மெட்ரோ எந்த அளவு பயன்படப்போகிறது என்பது தெரிந்துவிடும்.

இந்து தமிழ் திசையில் பிரசுரமானது. 

வெள்ளி, செப்டம்பர் 12, 2025

அமலா எனும் பொன்மான்

இயக்குநர் டி ராஜேந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒருவர் அமலா. அவர் பிறந்தது செப்டம்பர் 12 அன்று தான். ஆக, இன்று அவரது பிறந்த நாள். அதனால்தான் இந்தப் பதிவையே  எழுத நேர்ந்தது. ஒன்பது எழுத்துகளில் தனது திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்த ராஜேந்தரின் ஒன்பதாம் படம் இது. இதில் தான் அமலா நாயகியாக அறிமுகமானார். படம் 1986 பிப்ரவரி 4 அன்று வெளியானது. நடிகர் சிம்பு இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒருசில காட்சிகள் வருவார். படத்தில் பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளைவிடப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற பாடல் காட்சி என்றால், ஒரு பொன்மானை நான் காண... பாடலைத் தான் சொல்ல வேண்டும். ராஜேந்தரின் கற்பனையில் உருவான பாடல் திரையில் உயிர் பெற்றதற்கு அமலாவின் தோற்றப்பொலிவும் ஈர்ப்பும் முதன்மைக் காரணங்கள். 

அமலா நடித்து வெளியான மெல்லத் திறந்தது கதவு, வேலைக்காரன், அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, சத்யா, மௌனம் சம்மதம், கற்பூர முல்லை எனப் பல படங்கள் ரசிகர்கள் நினைவை விட்டு அகலாதவை. தமிழின் முன்னணி நட்சத்திரங்களாகவிருந்த ரஜினி காந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜய காந்த், மோகன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார் அமலா. 

ரஜினியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை இவர். வேலைக்காரன் படத்தில் வா வா வா கண்ணா வா பாடல் காட்சியில் இமய மலையின் பனிபடந்த  சூழலில் வெற்றுக் கால்களுடன் இவர் நடனம் ஆடினார் என அப்போதைய பத்திரிகைகள் எழுதி மகிழ்ந்தன. ரஜினியும் இவர் கொடி பறக்குது, மாப்பிள்ளை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கமல் ஹாசனுடன் சத்யா, வெற்றி விழா ஆகிய படங்களில் நடித்துள்ள அமலா இயக்குநர் பாரதிராஜாவின் வேதம் புதிது, மணி ரத்னத்தின் அக்னி நட்சத்திரம் போன்ற படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். 

இயக்குநர் கே.பாக்யராஜுடன் இவர் நடித்திருந்த காவடி சிந்து படம் வெளிவரவில்லை என்ற போதும் அந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்ட சாமக்கோழி கூவியாச்சு ஊரு ஜனம் தூங்கியாச்சு... பாடல் காட்சி பட்டணந்தான் போகலாமடி படத்தில் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர் தாணு இயக்குநராக அவதாரமெடுத்த புதுப் பாடகன் படத்தில் அமலா தான் நடித்திருந்தார். 


செவ்வாய், செப்டம்பர் 09, 2025

இரும்புக் காலத்தின் முன்னோடி தமிழ்நாடு

செப்டம்பர் 8, 2025 நாளிட்ட தினமலர் நாளிதழில் ஒரு செய்தி கண்ணில் பட்டது. அகழாய்வுகள் குறித்த செய்தி அது. வாசிக்கத் தொடங்கினேன். அந்தச் செய்தியிடையே ஒரு பெட்டிச் செய்தி கண்ணில் பட்டது. அந்தப் பெட்டிச் செய்தியில், தமிழ்நாட்டின் இரும்புப் பயன்பாடு குறித்த தகவல்கள் இருந்தன. அதில், மயிலாடும்பாறை தேனி மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் ஒரு மயிலாடும்பாறை உள்ளது போல. ஆனால், சுமார் 4300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருள்கள் அகழாய்வில் கிடைத்தது கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்.  

மயிலாடும்பாறையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் நுண்கற்காலத்திலிருந்து இடைக்காலத்தின் பிற்பகுதி வரையிலான பல்வேறு பண்பாட்டுப் பொருள்கள் கிடைத்தன. அவை நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகளை மெருகேற்றும் தேய்ப்புக் குழிகள், பாறை ஓவியங்கள், இரும்புக் கால ஈமக்குழிகள், தமிழி (தமிழ- பிராமி) பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், நடுகற்கள், வணிகக்குழுக் கல்வெட்டு ஆகியவை. 

புதிய கற்காலக் கருவி மெருகேற்றும் தேய்ப்புக் குழிகளுக்கு அருகில் மலை மேல் போடப்பட்ட அகழாய்வுக் குழிகளிலிருந்து 120 செ.மீ., 140 செ.மீ. ஆழத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இம்மண்ணடுக்கில் கருப்பு-சிவப்பு பானை ஓடுகளும் இரும்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. அருகில் ஒரு பாறை ஓவியமும் இருந்துள்ளது. இங்கே கிடைத்த மாதிரிகளை ஆய்வுசெய்ததில் கி.மு. 2172இல், ஏறத்தாழ 4200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது என்று முடிவுசெய்யப்பட்டது. இந்தத் தகவல்கள் எல்லாம் இரும்பின் தொன்மை நூலில் உள்ளன. இந்நூல் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகத்தில் கிடைக்கிறது. 

தினமலர் செய்தது கவனக்குறைவான பிழைதான். ஆனாலும் பிழை பிழைதானே. 






லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்