இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், பிப்ரவரி 11, 2021

எழுத்தாள மனசு

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு கதையின் முதல் வரி முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்பார்கள் ஆனால், முதல் வரியே இந்தக் கதையில் இப்படி மொக்கையா தொடங்குதே, கதை எந்த லட்சணத்துல இருக்குமோ என எடுத்த எடுப்பிலேயே எதிர்மறையா யோசனை போவுதா? மனசை அப்படிக் கண்டபடி அலையவிடாதீங்க. எல்லாத்துலயும் ஒரு விதிவிலக்கு இருக்கும். அதனால என்னதான் சொல்றான்னு பார்ப்போம், பிடிச்சா படிப்போம் இல்லாட்டிப் போய்டுவோம் என அதை சமாதானப்படுத்துங்கள். பரவாயில்லயே, சொன்ன உடனே அதுக்கு மதிப்புக் கொடுத்து மனச சமாதானப்படுத்தி தொடர்ந்து வாசிக்கிறீங்களே, அந்த நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது தைரியமா வாசிங்க. அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கதையைச் சொல்லுன்னு நீங்க தலையில் தட்டுவதற்குள் நான் கதையைச் சொல்லிவிடுகிறேன்.

கதையில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துரப்போவுது என அலுத்துக்கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை. கதையைவிட உண்மைச் சம்பவத்துல நல்ல சுவாரசியம் இருக்குங்கிறது உங்களுக்குத் தெரியும்லா? ஆனா அதை அப்படியே சொன்னால் சுவையா இருக்காதுல்ல அதனால அத கதையா மாத்திட்டேன். இப்ப இது சுவாரசியமான கதையா ஆயிருச்சு. இது சுவாரசியமான கதையா இல்லையாங்கிறத வாசிக்கிற நாங்கல்லா முடிவுபண்ணனும்னு நீங்க நினைக்கிறது சரிதான். கதையை எழுதுற நான் என்னதான் அடக்கமா இருந்தாலும் கதையைப் பற்றிய உண்மையைச் சொல்லாட்டி நான் கதைக்குத் துரோகம் செஞ்சவனா ஆயிரக்கூடாதுல்லா? அதனால்தான் கதை சுவாரசியமானதுன்னு உண்மையைச் சொன்னேன். அது கதையன்று கதை பற்றிய நிஜம். கதைக்குள்ள உண்மையும் இருந்தாதான நல்லது. ஆனா, நீ கடைசி வரை கதையைச் சொல்ல மாட்டபோல என உங்களுக்கு இந்த நேரம் தோனியிருக்கும். அதனால கதைக்குள்ள போறன்.
இந்தக் கதையைக் கொஞ்சம் குஷியா தொடங்குறேன். குஷின்ன உடனே குஷியாயிட்டீங்களா. இடுப்பு கிடுப்புன்னு மனசு எங்கெங்கோ போயிராம பாத்துக்கங்க. அது உங்க பாடு. என்னோட பாடு கதை சொல்றதுதான். பொதுவா, நம்மோட ஃப்ரண்ட்ஸ் நமக்கு எப்படியெப்படியெல்லாமோ உதவுவாங்க. சில வேளைல இப்படியெல்லாம் உதவ முடியுமான்னு நமக்கு திக்பிரமை ஏற்படுற மாதிரி உதவிடுவாங்க. அப்படியொரு நண்பனின் உதவிதான் இந்தக் கதை. இப்ப புரியுதா ஏன் குஷியா தொடங்குறதா சொன்னன்னு. நாம்பாட்டுக்கு குஷின்னு சொல்லிட்டேன். நீங்க குஷி பார்த்திருக்கீங்களான்னு கேக்கவேயில்ல? ஆனா பாத்துருப்பீங்கங்க நம்பிக்கையில் தொடர்றேன். சில லாஜிக் பார்த்தா கதை நகராது. ஏற்கெனவே இங்க அப்படியே செக்குலக்கை மாதிரி கதை ஒரே இடத்திலதான் நட்டமா நிக்குது அப்படீங்கிறீங்களா? கதையோட சுருக்கத்தைச் சொல்லிட்டானே இனி ஏன் இதை வாசிக்கணும்னு உங்களுக்குத் தோனலாம். தப்பில்ல, ஆனா என்ன உதவின்னு பாப்பமேன்னு உங்க மனசு இப்ப உங்கட்ட சொல்லும் பாருங்க. அது நம்ம பக்கம் சாஞ்சிருச்சு. நெனப்புதான் பொழப்ப கெடுக்குதாம் என்னும் பழமொழியை இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாம நெனைக்கீங்க.
இந்தக் கதை ரொம்ப கலோக்கியலாவும் சாதாரணமாவும் தொடங்குனாலும் இதன் முடிவு ரொம்ப சோகமா இருக்கும். சோகமா, அது பிடிக்காதேன்னு டக்குன்னு வாசிப்புக்கு குட்பை சொல்லப் பாக்குறீங்களே கொஞ்சம் பொறுமையா இருங்க. முடிவு சோகமாக இருந்தாலும் நீங்க அந்தச் சோகத்துக்காகக் கண்ணீர் விடமாட்டீங்க. அந்தச் சோகத்தை நெனச்சு சிரிக்கத்தான் போறீங்க. சோகமான விஷயத்துக்கு எப்படிச் சிரிப்பு வரும்னு ஒரு யோசனை வருதா. இப்ப யாராவது வாழப்பழத் தோல் வழுக்கி விழுந்தா அது சோகமான நிகழ்வுதான? ஆனால், அதுக்கு வருத்தப்படுவீங்களா, சிரிப்பீங்களா. வருத்தப்படுவோம் ஆனால் சிரிப்பு வந்துரும் அப்படிங்கிறீங்களா. நீங்க இந்த அளவு வெளிப்படையா உண்மையைச் சொல்லும்போது நானும் உண்மையைத்தான சொல்லணும். அதனாலதான் கதையோட முடிவு எப்படி இருக்கும்னு முன்னாடியே சொல்லிட்டேன் ஆனா சொல்லல. இன்னும் டீ வரலன்னு வட போச்ச காமெடியில் வடிவேலு சொல்றமாதிரி இன்னும் கதை வரலன்னு நீங்க சொல்லப்போறீங்கன்னு எனக்கும் தெரியுது.
இந்தக் கதையின் நாயகன் ஓர் எழுத்தாளன். டக்குன்னு தலைப்பைப் படிச்சீங்க பாரு அங்க நிக்கிறீங்க. உங்களோட சமயோஜிதப் புத்திக்கு ஒரு சபாஷ். அவன் எப்டியாப்பட்ட ஆளுன்னா, சுஜாதா மாதிரி, ஜெயமோகன் மாதிரி, தமிழ்வாணன் மாதிரி, ஜி.எஸ்.எஸ்.மாதிரி (ஜி.எஸ்.எஸ். யாருன்னு தெரியாட்டா நீங்க சமகாலச் செய்திப் பத்திரிகைகளை வாசிச்சிருக்க மாட்டீங்க அல்லது அத கவனத்தில் வைத்திருக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏனெனில், ஜி.எஸ்.எஸ். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மலை மலையா எழுதுறாரு.) என்னன்னாலும் அசராம எழுதுற ஆளு. அவன் ஒரு தொலைபேசி நிறுவனத்துல அதிகாரியா இருந்தான். அங்க அவனுக்கு வேலையே இருக்காது. எந்த வேலையும் இல்லையேன்னு எழுத ஆரம்பிச்சான். ஒருத்தனுக்கு நேரம் நல்லாயிருந்தா அவன் என்ன செஞ்சாலும் சும்மா மஜாதாம்பாங்க. அப்படி தான் அவனுக்கு ஆயிருச்சு. அவன் என்ன எழுதினாலும் எல்லாரும் படிக்க ஆரம்பிச்சாங்க. படிச்சதோட நிறுத்திட்டாப் பராவாயில்ல. சூப்பர் சூப்பர்னு சும்மா அவனப் பாராட்டித் தள்ளிட்டாங்க. அதனால அவன் துணிச்சலா ஒரு வேலையைச் செய்தான்.
அது எப்படிங்க, துணிச்சலா ஒரு வேலையை எழுத்தாளன் செய்தான்னு சொன்ன உடனே அது நாவல்தான்னு முடிவு பண்ணுனீங்க? உண்மையிலேயே உங்களுக்கு செம அறிவுங்க. அப்படியில்லாட்டி நீங்க எதுக்கு இந்தக் கதையைப் படிக்கப் போறீங்க? கோவிச்சுக்காதீங்க. இது சும்மா இடையில் ஒரு விளம்பரம்தான். பிடிக்காட்டி இதைப் படிச்சத மறந்துட்டு மேல படியுங்க. என்னங்க படிச்ச வரிய மறுபடி படிக்கிறீங்க. ஓ மேலன்னு சொன்னதாலயா, அய்யய்யோ சாரிங்க மேலன்னா மேல இல்ல, கீழ. அப்ப கீழன்னா கீழ இல்லயா மேலயான்னு சட்டுனு கோபப்படுறீங்களே? இது ஒரு காமெடிக் கதைதான. அதுக்குப் போய் இவ்வளவு கோபமா? ஓ புரியுது இதை காமெடி கதைன்னு சொன்னதாலதான் கோபமா? பாத்தீங்களா நமக்குள் ஒரு அன்னியோன்யமான உறவு வந்துருச்சு. இதுதான் ஒரு கதைக்கு அவசியம். எழுத்தாளனும் வாசகனும் ஏதாவது ஒரு கட்டத்தில் இப்படி ஒருத்தருக்கொருத்தர் பேசி உறவாடுவதும் உரையாடுவதும் ரொம்ப ஆரோக்கியமானதுதான். டேய் சவ்வப்போடாம கதைக்கு வாடா? வாடான்னா நான் வாட மாட்டேன். ஏன்னா அது உங்களுக்கு இந்தக் கதைமேல உள்ள உரிமையில வந்த வார்த்தைன்னு எனக்கும் தெரியும். கதை சொல்றதத் தவிர எல்லாம் உனக்குத் தெரியுதுடான்னு நீங்க கொஞ்சம் சத்தமாவே சொல்லிட்டீங்க. அமைதியா சொன்னாவே எனக்குக் கேட்கும் ஆனா நீங்க சத்தமாவே சொல்லிட்டாதாலே. சட்டுனு என் காதில் விழுந்திருச்சு. உனக்கு காதே விழுந்துருச்சுன்னு நெனச்சோம். நல்லவேளை காது இன்னும் இருக்குதுன்னு சொல்றன்னு ஆசுவாசம் அடைஞ்சிட்டீங்களே. சமத்துதான் நீங்க.
ஆங் கதையை எங்க விட்டேன்? என்னடா தீப்பொறி ஆறுமுகம் மாதிரி கேக்குறன்னு நினைக்காதீங்க. எனக்குக் கொஞ்சம் ஞாபக மறதி. இது வேறயா? உருப்பட்ட மாதிரிதான்னு தோனுதா? ஞாபகம் வந்துருச்சு. ஞாபகம் வந்துருச்சு. நாயகனான நம்ம எழுத்தாளன் ஒரு நாவலை எழுதினான். கிட்டத்தட்ட எழுத்து ஒரு தவம்னு சொல்ற மாதிரி கடுமையான தவம் பண்ணுன மாதிரி நாவலை முழு மூச்சா எழுதி முடிச்சான். மொத நாவல எழுதி முடிச்ச உடனே அவனுக்கு அப்படியே சும்மா கிர்ர்ர்ர்ன்னு இருந்துச்சு. ஆனா பாருங்க. எழுதுறதவிட அதை யாராவது வாசிச்சு சொன்னாதான அது எப்படி வந்திருக்கும்னு தெரியும். அதுக்கு என்ன பண்ண? இந்த மாதிரி நேரத்துல இருக்கவே இருக்கான் நம்ம பஞ்சாயத்துன்னு சொல்ற மாதிரி (ஆமா, சரிதான் களவாணி பஞ்சாயத்துதான். அதென்ன களவாணி பஞ்சாயத்துன்னு யாராவது ஒரு பஞ்சாயத்த கூட்டிராதீங்க. அதனாலதான் ப்ராக்கெட்டுல போட்டுட்டேன். நீங்க இதப் படிக்காட்டிக்கூடப் பரவாயில்ல, கதையைப் படிக்காம விட்டுட்டுப் போயிறாதீங்க.) எல்லாருக்கும் ஒரு ஃப்ரண்டு இருப்பானே. அப்படி நம்ம நாயகனுக்கும் ஒரு ஃப்ரண்ட் இருந்தான். அவனுக்கு போன போட்டான். உடனே என்ன ஏதுன்னு கேக்கவே நேராவே வந்துட்டான். அதெப்படின்னு லாஜிக்லாம் கேக்காதீங்க.
டேய் நண்பா, முதன்முதலா ஒரு நாவல் எழுதியிருக்கேன். இது மட்டும் வெளிவந்துச்சுன்னா தமிழில் இதுவரை இப்படி ஒரு நாவல் வந்ததில்லன்னு சொல்லும்படி இருக்கும். இந்த நாவல எனக்கு அடுத்து வாசிக்கிற வாய்ப்ப ஒனக்குத் தான் கொடுக்குறேன். அப்படி இப்படின்னு என்னவெல்லாமோ பிட்டப் போட்டான். நண்பன் கொஞ்சம் வாசிக்கிற ஆளு. அவனுக்கு உண்மை புரிஞ்சுபோச்சு. ஆனாலும் என்ன பண்ண முடியும் துரோகமே பண்ணுனாலும் நண்பனா இருந்தா மன்னிச்சிரணும்ங்கற தமிழர் மரபுல வந்தவனாச்சே. கண்டிப்பா வாசிக்கிறேன்னு விருப்பத்தோட தலையை நீட்டினான்.
ஆனால், ஒருவிஷயம்டா. என்னப் பொறுத்தவரை இந்த நாவல் இங்கிலீஷுல மட்டும் வந்தா எங்கெயோ போயிரும். அதுக்காக நீ இதை நல்லா இருக்குன்னு சொல்லணும்னு அவசியமில்லை. உன்னோட கருத்த நான் ரொம்ப மதிக்கிறேன். நீ படிச்சிப்பாரு. நல்லாயில்லன்னு தோனுச்சுன்னா அப்படியே என்ட்ட வந்து சொல்லு. நான் நாவலை அப்படியே கொளுத்திடுறேன் என்று கொஞ்சம் ஓவராவே உணர்ச்சிவசப்பட்டான். என்னமோ பெரிய காஃப்கான்னு நினைப்பு அவனுக்கு. சரி அவனும் எழுத்தாளன் தானே அவனுக்கும் உணர்ச்சி இருக்காதா என்ன? சே சே ஏன்டா அப்படிச் சொல்ற உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ நல்லா எழுதிருப்பே. அப்படின்னு அவன் சொல்லவுமே நம்ம எழுத்தாளருக்குப் பரவாயில்ல நாம சொன்னது ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு ஒரு பரவசம் வந்திருச்சு. கண்டிப்பா நான் படிச்சிட்டு உண்மையைச் சொல்றேன். ஆனால், எனக்கு ஒரு பத்து நாள் டைம் வேண்டும் என்றான் நண்பன். நாயகனும் தாராளமா டைம் எடுத்துக்கோ. ஆனால், மறுபடியும் சொல்றேன் கதையைப் பத்துன உண்மையைத் தான் நீ சொல்லணும்னு அடம்பிடிச்சான். இனியும் பொறுக்க முடியாதுன்னு நெனச்ச நண்பன் கதையை வாங்கிட்டு நடையைக் கட்டிட்டான்.
பத்து நாள் பத்து யுகம் மாதிரி கழிஞ்சுச்சு நம்ம எழுத்தாளருக்கு. பன்னிரண்டு நாளுக்குப் பிறகு நண்பன் எழுத்தாளரப் பார்க்க வந்தான். ஆனால் கையில நாவலோட பிரதி இல்ல. அதைப் பார்த்ததும் எழுத்தாளருக்குப் பக்குன்னு ஆயிருச்சு. ஆனா அவரு எழுத்தாளராச்சே. உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்துவாரா? எதையும் கண்டுக்கிடாத மாதிரி எப்போதும்போல ஃப்ரண்டுட்ட பேசிட்டிருந்தாரு. இவரோட ஃப்ரண்டுன்னு அவரு எப்படி இருப்பாரு. அவரும் எப்போதும்போல நல்லா ஜாலியா பேசிகிட்டே இருக்காரு. எழுத்தாளரோட மனசு ஃபுல்லா நாவலப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டக்கானேன்னு இருந்துச்சு. ஆனால் கேக்க முடியல. நண்பரும் நேரமாயிருச்சு கிளம்ப ஆயத்தமாயிட்டாரு. எழுத்தாளருக்கோ இருப்பு கொள்ளல. நாவலப் படிச்சியான்னு கேக்க வாய்வர வார்த்த வந்துருச்சு ஆனாலும் ஆர்வத்த அடக்கிட்டு நண்பர வழியனுப்பி வச்சிட்டாரு.
இப்படி இன்னும் ஒரு பத்து நாளு போச்சு. மறுபடியும் ஒரு நாள் நண்பர் வந்தாரு. இப்பவும் அவர் கையில நாவலோட பிரதி இல்ல. இந்த முறை எப்படியும் கேட்டுடணும்னு எழுத்தாளரு முடிவு பண்ணிட்டாரு. என்னடா எப்படியிருக்கன்னு கொஞ்சம் கெத்தாவே கேட்டாரு நம்ம எழுத்தாளரு. அவரோட ஃப்ரண்டுக்குப் புரிஞ்சு போச்சு. சாரிடா போன தடவயே சொல்லணும்னு நெனச்சேன். ஆனா மறந்துட்டேன் சாரிடான்னு என்னமோ கூட்டமான பஸ்ல தெரியாம கால மிதிச்ச மாதிரி சொன்னாரு. எழுத்தாளருக்கோ என்னவோ போலாயிருச்சு. எப்படிப்பட்ட நாவல எழுதி இவன்ட்ட கொடுத்தோம் அதைப் பத்திப் பேசாமா ஏதேதோ பேசுறான்னேன்னு இருந்துச்சு.
நாவலப் பத்தி நாம பேசும்போது நீ என்னடா சொன்னன்னு எழுத்தாளர்ட்ட நண்பர் கேட்டார். இங்கிலீஷ்ல மட்டும் வந்தான்னு எழுத்தாளர் ஆரம்பிச்சாரு. அதில்லடா கடைசியா என்ன சொன்ன? நல்லாயில்லன்னா சொல்லு கொளுத்திட்றேன்னு சொன்னேன் எனச் சொல்லும்போதே எழுத்தாளருக்கு ஒரு மாதிரி கலவரமாயிருச்சு. குரல் ஒடஞ்சிருச்சு. கொஞ்சம் விட்டா அழுதுருவாரு போல இருந்துச்சு. அதுக்கென்னடா இப்போ? என எழுத்தாளர் கேக்குறதுக்குள்ள நண்பர் முந்திக்கிட்டாரு. அதான் ஒனக்கு எதுக்கு சிரமம்னு நானே கொளுத்திட்டேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள எழுத்தாளர் உடம்புல சொக்கப்பனை கொளுத்திய மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஃப்ரண்ட் பொய் சொல்றானோன்னு அவன் கண்ணைப் பார்த்தார். அதில் தீர்க்கமான முடிவு தெரிஞ்சுச்சு.
இவ்வளவு நடந்ததுக்குப் பிறகு நம்ம எழுத்தாளர் நண்பர்ட்ட கேட்டாருங்க ஒரு கேள்வி. அதுதான் இந்தக் கதையோட தலைப்ப வைக்க உதவுச்சு. அப்படி என்னதான் கேட்டாரு? இருங்க சொல்லிட்றேன். டேய் நீ உண்மையிலேயே கதையைப் படிச்சியான்னு கேட்டாரு. என்னங்க இப்படிச் சிரிக்கீங்க. இது சோகக் கதைன்னு தெரிஞ்சும் சிரிக்கிறீங்க பாருங்க. அந்த நாவல் மேல் எழுத்தாளருக்கு இருந்த நம்பிக்கையை நீங்களும் புரிஞ்சிக்காம சிரிக்கீங்க பாருங்க, உண்மையிலேயே இதுதாங்க சோகம். இனிமேயும் இந்தக் கதையைத் தொடர்வதில் எனக்கு இஷ்டமில்லீங்க. இத்தோட கதைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக