இந்தியாவின் பிரதமராகவிருந்த, இரும்புப் பெண்மணி என அறியப்பட்டிருந்த இந்திரா காந்தி ஆட்சியின் போது, 1975 ஜூன் 25 அன்று இந்தியா கண்ட எமர்ஜென்சி அதன் பின்னான அரசியலை ஒரு புரட்டு புரட்டியுள்ளது. நாட்டின் கருத்துரிமைக்கு வேட்டுவைத்த எமர்ஜென்சி குறித்த இலக்கியப் பதிவுகள் மிகச் சிலவே. அவற்றில் ஒன்று அசோகமித்திரன் எழுதிய இன்று.
நாவலின் தலைப்பு இன்று என்றாலும் அது எக்காலத்துக்குமானது என முன்வைக்கப்படுகிறது. தேவிபாரதி போன்ற எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளை ஒப்பிடுகையில் இதை நாவல் என்று சொல்லவே முடியவில்லை. அவ்வளவு சிறிய நாவல். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட இன்று நாவலையே படித்தேன். முதலில் நாவலில் தென்பட்ட பிழைகளைத் தாம் சொல்ல வேண்டும். வாக்கியப் பிழை, ஒருமை பன்மைப் பிழை என பக்கத்துக்கு ஒன்று தென்பட்டது. இதற்குக் காரணம் எழுத்தாளரா பதிப்பகமா என்பது தெரியவில்லை. வாசிக்கும் வேளையில் கண்ணில் வந்து விழும் துரும்புகள் போல் பிழைகள் உறுத்திக்கொண்டேயிருந்தன.
பிழைகள் காரணமாகவோ நாவல் காரணமாகவோ தெரியவில்லை. இதுவரை அசோகமித்திரன் நாவல்கள் தந்திருந்த இதத்தை இந்நாவல் தரவில்லை. இலக்கியரீதியிலேயே இதம் என்னும் சொல்லைத் தந்துள்ளேன். மற்றபடி அசோகமித்திரன் நாவல்களில் நொய்மைகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
வாழ்வை அதன் சிக்கலைச் சற்று மேட்டிமைத்தனத்துடன் அதே வேளையில் மத்தியதரவர்கத்தின் கையறுநிலையிலேயே கண்டு பதிவுசெய்பவராகவே தோற்றம் கொள்கிறார் அசோகமித்திரன். பெரிய சிக்கல் இல்லாத தமிழ்த் தொடர்களைக் கையாண்டு தான் நாவல்களை நகர்த்திச்செல்கிறார். ஆனால், உள்ளடக்கரீதியாக அவருக்குச் சூழல்மீது உள்ள ஒவ்வாமை அதீதக் கசப்பாக எழுத்துகளின் அடியே நீங்காத வடுவாக வெளிப்பட்டுள்ளது. போராட்டங்கள் குறித்த அவரது பார்வை இந்நாவலில் சற்றுக் கீழாகவே உள்ளது. எது எதற்கோ போராடுகிறார்கள் இவை எல்லாம் தேவையா எனும் சத்தம் வெறும் முனகலாகக் கேட்கிறது.
நாவலின் பின்னட்டைக் குறிப்பு இந்நாவலைக் கூறுவது போல் வடிவரீதியில் பெரிய முற்போக்கான நாவலாக இதைக் கருத இயலவில்லை. நெருக்கடி நிலை எப்படியான எண்ணத்தை இந்தியாவுக்குத் தந்ததோ அப்படியான எண்ணத்தைத்தான் இந்நாவலும் தந்துள்ளது. இவை எல்லாம் ஏன் ஏற்படுகின்றன இவற்றால் என்ன நன்மை என்னும் ஒருவித அலுப்பும் சலிப்புமான எண்ணத்தையே இந்நாவல் தோற்றுவிக்கிறது. நிராசையும் கசப்புமான சூழலில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்கள் மூச்சுவிடவே அல்லல்படுகின்றன. வாசிக்கும்போது நாமும்கூட இழுத்து இழுத்து மூச்சுவிட வேண்டியதிருக்கிறது.
அசோகமித்திரனின் நல்ல நாவல் என முன்மொழியப்பட்டாலும், நாவலை வாசித்த பின்னர் அதை வழிமொழியும் வாய்ப்பை நாவல் தரவில்லை. மற்றபடி நெருக்கடி நிலை குறித்து வாசிக்க வேண்டிய நாவலே. என்னதான் இருக்கிறது என்பதாவது வாசிப்பில் தெரிந்துவிடுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக