நடிகர் விஜய் போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக எண்பதுகளின் இறுதியில் இருந்தார் ராமராஜன். இளையராஜா இசையமைத்த
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், அக்டோபர் 27, 2025
ராமராஜனுக்கும் விஜய்க்கும் முதலமைச்சர் ஆசை
நடிகர் விஜய் போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக எண்பதுகளின் இறுதியில் இருந்தார் ராமராஜன். இளையராஜா இசையமைத்த
ஞாயிறு, செப்டம்பர் 07, 2025
வாக்காளப் பெருமக்களே...
![]() |
| பொதுச்செயலாளர் வ.மணிமாறன் உரையாற்றுகிறார் |
![]() |
| பொதுக்குழுவில் உறுப்பினர்கள் |
அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்டு 12 அன்று மாலை 6.00 மணிக்கு வழக்கறிஞர் கார்க்கி வேலன் தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பின்னர் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
![]() |
| தேர்தல் அலுவலராக கார்க்கிவேலன் பொறுப்பேற்கிறார் |
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் 2025 (செப்டம்பர்) -2027 (செப்டம்பர்) ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான அட்டவணையும் அதில் இடம்பெற்றிருந்தது. தலைவர் ஒருவர், துணைத்தலைவர் இருவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஐவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கையில் தகவல் வெளியாகியிருந்தது.
வேட்புமனு தாக்கல் ஆகஸ்டு 20 (20.08.2025) அன்று தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல்செய்வதற்கான இறுதி நாள் ஆகஸ்டு 27 (27.08.2025) என்றும், அதற்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்டு 28 (28.08.2025) அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் மனுக்களை ஆகஸ்டு 31 (31.08.2025) அன்று திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்குப்பதிவு செப்டம்பர் 14 (14.09.2025) அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாள்தோறும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை, ரிச்சி தெருவில் உள்ள எம்.யூ.ஜே. அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவைப் பெறலாம்; பூர்த்திசெய்த வேட்பு மனுவை அளிக்கலாம் எனவும் அந்த அறிவிக்கை தெரிவித்தது. தேவைப்படின் வாக்காளர் பட்டியலையும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 19 (19.08.2025) அன்று மாலை 5 மணிக்குச் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்வோர், வேட்புமனுவை முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அந்த அறிவிக்கையானது, செப்டம்பர் 14 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சங்க அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
வேட்புமனு படிவத்தைத் தேர்தல் அலுவலரிடம் கொடுக்கும்போது,
1, வேட்புமனு படிவத்தில் அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது.
2, வேட்புமனு படிவத்துடன் வேட்பாளர், அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோரின் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் (ஜெராக்ஸ்) இணைக்கப்பட வேண்டும்.
3, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் போது, வேட்பாளருடன் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் உடனிருக்க வேண்டும்.
4, போட்டியிடும் பதவியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
5, சங்க உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் நடப்பு ஆண்டு சந்தா செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும்
ஆகிய விதிமுறைகளைத் தேர்தல் அலுவலர் சங்கத்தின் அலுவலரீதியான வாட்ஸ் அப் குழு வழியே தெரிவித்திருந்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பின்னர் ஆகஸ்டு 28 அன்று, தலைவர் பொறுப்புக்கு இருவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு ஐவர், பொதுச்செயலாளராக இருவர், இணைச் செயலாளராக இருவர், பொருளாளர் பொறுப்புக்கு இருவர் என மொத்தம் 13 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக பதினோரு பேரும் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ததாகவும் அதில் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று வெளியிடப்படும் என தேர்தல் அலுவலர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தது போல் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று மாலையில் வெளியிடப்பட்டது. எம்.யூ.ஜே. நிர்வாகிகள் தேர்தல் - 2025இல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், துணைத் தலைவர் பொறுப்புக்கு மனுதாக்கல் செய்திருந்த ஒருவரும், செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்குப் மனுத்தாக்கல் செய்திருந்த ஒருவரும் திரும்பப்பெற்றுவிட்டதாகவும் இறுதியாக 21 பேர் போட்டியிட உள்ளதாகவும் இறுதி வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைவர் பொறுப்புக்கு 1. வி.செல்வின் வினோத்குமார் (தினகரன்), 2. எஸ்.ஆர்.சங்கர் (டைம்ஸ் ஆப் இந்தியா) ஆகிய இருவரும்; துணைத்தலைவர் பொறுப்புக்கு 1.எம்.முத்தையா (முரசொலி), 2.கே.நாகப்பன் (ஜீ மீடியா), 3.ஏ.பிரதாப் (டைம்ஸ் ஆப் இந்தியா), 4. டி.சரவணன் (சுயாதீனப் பத்திரிகையாளர்) ஆகிய நால்வரும்; பொதுச்செயலாளர் பொறுப்புக்கு 1.பி.கோபி (சன் நியூஸ்), 2. வ.மணிமாறன் (ஜனசக்தி) ஆகிய இருவரும்; இணைச் செயலாளர் பொறுப்புக்கு 1. திருமேனி சரவணன் (சன் டிவி), 2. எம்.வினோத் ராஜா (தினமணி) ஆகிய இருவரும்; பொருளாளர் பொறுப்புக்கு 1. எம்.அய்யனார் ராஜன் (ஆனந்த விகடன்), 2. ஜோசப் ராஜ் (ஈ டிவி பாரத்) ஆகிய இருவரும்; செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 1.ஜெ.மகேஷ் (சன் டிவி), 2.கே.பிரியா (தினகரன்), 3. வி.ரவிச்சந்திரன் (முரசொலி), 4. ஜி.சசிரேகா (சிகரம் மீடியா), 5. எம்.செந்தில்நாதன் (குமுதம்), 6. எஸ்.சுந்தர்ராஜன் (சன் டிவி), 7. இரா.தமிழ்க்கனல் (அந்திமழை), 8. கே.வெங்கடேஷ் (சன் நியூஸ்), 9. ஏ.விஜயகுமார் (தீக்கதிர்) ஆகிய ஒன்பது பேரும் என மொத்தமாக 21 பேர் தேர்தல் களத்தை எதிர்கொள்ளவிருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவித்தது.
இவர்கள் உழைக்கும் பத்திரிகையாளர் அணி, ஜனநாயக அணி என இரு அணியாகத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சில குறிப்புகள்
பாஜக அரசியல் ஆளுமையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது எனில், இந்தியா கூட்டணி அரசியலில் ஈடுபடாத ஒருவரை வேட்பாளராகக் கொண்டுவந்துள்ளது. எப்படியும் வெற்றிபெறப் போவது சி.பி.ராதாகிருஷ்ணன் தான் எனும்போது, அரசியல் சாராத ஒருவரை நிறுத்தியிருப்பதன் மூலம் இந்தியா கூட்டணி சரியாகவே நகர்ந்துள்ளது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 4,49,269 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டவர். என்னடா, பாஜக அவ்வளவு வாக்குகளை எப்படிப் பெற்றது என அதிசயிக்காதீர்கள். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. அடுத்த தேர்தலில் அதாவது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கோயம்புத்தூரில் சி.பி.ராதா கிருஷ்ணன் 4,30,068 வாக்குகளைப் பெற்று, அவரை அடுத்த வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர். நல்லகண்ணுவைவிட 54,077 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
மீண்டும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,64,505 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதா கிருஷ்ணனைத் தோற்கடித்தார். அந்தத் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 3,40,476. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 3,88,911 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டும் கோயம்புத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் 3,92,007 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டார்.
2023 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களையும் கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் உடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவராகவிருந்த ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 21. வேட்பாளர்கள் ஆகஸ்டு 25 வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் அன்றே எண்ணப்படும்.
செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற தேர்தலில், மொத்த வாக்குகள் 782இல் 767 வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் செல்லாதவை 15, பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றியை ஈட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 15 ஆம் குடியரசு துணைத் தலைவர் என்னும் பொறுப்புக்கு உரியவராகிறார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.
வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர்.
மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.
திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும்.
ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.
வியாழன், ஜூலை 08, 2021
உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா?
பாசன
நீர் கடைமடைவரை பாய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசு நிர்வாகம் அடிப்படை
அலகான ஊராட்சிகள்வரை வந்து சேர்வது. ஊராட்சிகள்வரை அதிகாரம் வந்துசேரும்போதே செழுமையான
நிர்வாகம் சாத்தியப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலைமை மாறுவதற்கு
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுதல் அவசியம். மக்கள் பிரதிநிதிகள்
அந்த அமைப்புகளில் இருக்கும்போதுதான் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை உடனுக்குடன் கவனப்படுத்த
முடியும். வீட்டில், தெருவில், ஊரில் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனடியாக மன்ற
உறுப்பினரை அணுகித் தம் குறையைக் கூற இயலும். அது தீர்க்கப்படுகிறதா, இல்லையா என்பது
வேறு கதை.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தச் சிக்கலுமின்றி ஒழுங்காக நடந்துவிடுகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாத்திரம் ஒருவிதச் சுணக்கத்தைக் காணமுடிகிறது. பொதுவாக, மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சி வலுவான நிலையில் உள்ளபோது உள்ளாட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளையும் தம் ஆளுகைக்குக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்காதோ எனும் ஐயம் எழுந்தால் அவ்வளவுதான் உள்ளாட்சித் தேர்தல் எண்ணத்தையே அது மூட்டை கட்டிவைத்துவிடுகிறது.
தமிழ்நாட்டில்
1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு,
அந்த உற்சாகத்தில் பத்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை
1996 அக்டோபரில் நடத்தியது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு,
இப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக மக்களால் முதன்முதலில்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித்
தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
2016ஆம்
ஆண்டில் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிமுக அரசு தமிழகத்தின்
உள்ளாட்சித் தேர்தலை 2016 அக்டோபரில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால்
அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, அதற்குப் பிறகு
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட
9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அந்த ஒன்பது மாவட்டங்களிலும் மறுசீரமைப்பு பணிகளின் பொருட்டு அப்போது அவற்றுக்கு விலக்கு
அளிக்கப்பட்டது.
நீதிமன்ற
உத்தரவு காரணமாக 2019 டிசம்பரில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. தமிழகத்தின் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான
தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக
உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
தென்காசி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.
மேலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில்,
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணிகளை
நிறைவுசெய்து 2020 டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களைத் தாக்கல்
செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா
பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும்
என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட
உச்ச நீதிமன்றம் அவகாசத்தை வழங்கியிருந்தது.
இந்நிலையில்
மேற்குறிப்பிட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா
போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம்
தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ”இந்தியாவிலேயே கொரோனா
பரவல் தமிழகத்தில்தான் அதிகம். இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட
பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை
தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை
நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்”என்று
கோரினார்.
அதையேற்க
நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை
உள்ளிட்ட பணிகளை நிறைவுசெய்து 2021 செப்டம்பர் 15க்குள் அங்கே உள்ளாட்சித் தேர்தலை
நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்”என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத்
தள்ளிவைத்துள்ளனர்.
இதனிடையே 2019ஆம் ஆண்டு ஊரக அளவிலான தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் ஆகியவை நடத்தப்படாததால், அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்துவருகிறார்கள். இதற்கான அரசாணை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறையில் செயல்படும் அத்தகைய தனி அதிகாரிகளின் பதவிக் காலம் 2021 ஜூன் 30 அன்றுடன் முடிவடைவதால், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.
2021
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உள்ளாட்சித்
தேர்தல் முழுமையாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பதை
நினைவில்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும்
சூழலிலும், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி
அமைச்சர் கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள்
வந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும்
பணிகள் தேங்கிக் கிடந்தால் அதை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்
என்கிறது ஆளும் தரப்பு. முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2021 இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படக்கூடும்
என்று பேசப்படுகிறது.
கொரோனாவின்
இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், மூன்றாம் அலை செப்டம்பரில் வரக்கூடும்
என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை உருவானால்
அந்தச் சூழலில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது
எந்த அளவுக்கு இயலும் என்பது கேள்விக்குறியே. அதே வேளையில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில்
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு
தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில்
12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கடுங்கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேர்வு நடத்துவதே பாதுகாப்பற்றது என்ற எண்ணம் உள்ளபோது, தேர்தல் நடத்துவது எப்படிப்
பாதுகாப்பானது என்ற கேள்வி எழுவது இயல்பு. தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது,
பரப்புரை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் பொதுவிடங்களில் திரளக்கூடும். சட்டப்பேரவைத்
தேர்தல் பரப்புரை காரணமாகத் தமிழ்நாட்டின் இரண்டாம் அலை அதிகமாகப் பரவியது என்னும்
விமர்சனமும் எழுந்ததை மறந்துவிட முடியாது. அதேவேளையில் கொரோனாவைக் காரணங்காட்டி மீண்டும்
தேர்தலை தள்ளிவைக்க செப்டம்பர் 15 எனக் கெடு விதித்துள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா?
ஒருவேளை அப்படித் தள்ளிவைத்தாலும் ஆளும் அரசுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே உள்ளாட்சித்
தேர்தலுக்கு அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் வாய்ப்பும்
உள்ளது. ஆக, தேர்தலை நடத்தினாலும் சிக்கல் நடத்தாவிட்டாலும் சிக்கல் என்பதே உண்மை நிலை.
ஆனால்,
திமுக தம் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டால்,
அது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். ஆக, உள்ளாட்சித்
தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படுவதை ஆர்வத்துடன்
எதிர்நோக்கும் கட்சிக்காரர்களின் திசையிலேயே ஆளும் தரப்பும் பயணப்படுகிறது என்றே தோன்றுகிறது.
உள்ளாட்சித் தேர்தலைக் கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு; மக்கள் எதிர்பார்க்கும்
காரணம் வேறு. அதே நேரத்தில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை என்னும் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதையும்
பரிசீலித்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எடுக்கப்படுவதே அனைவருக்கும் நல்லது. இந்தச்
சிக்கல்களைச் சமாளித்து உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பெரும்
சவால் ஆளுங்கட்சி முன் உள்ளது. அதை எப்படி ஆளுங்கட்சி சமாளிக்கப்போகிறது?
நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. அந்த இதழில் ஜூனில் வெளியானது.
வெள்ளி, ஏப்ரல் 09, 2021
ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்

செவ்வாய், ஏப்ரல் 06, 2021
போட்டாச்சு... போட்டாச்சு...
நான் முதன்முதலில் எந்தத் தேர்தலில் வாக்களித்தேன் என்பதே மறந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வாக்களித்தேன் என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேனா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தேனா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தேனா என்னும் தெளிவு இல்லை. அது ஒரு மங்கிய சித்திரமாகவே மனத்தின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது. அண்மையில் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். பாஜக ஆட்சி அமைந்தபிறகுதான் வாக்களிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை உணர முடிந்திருக்கிறது.
ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது சிலருக்கு ஒரு சடங்கு. ஆனால், உண்மையில் வாக்களிப்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது ஜனநாயக உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. பொதுவாக, வாக்களிப்பது குறித்து பெரிய புரிதல் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. நாம் வாக்களித்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்னும் விட்டேத்தியான மனநிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த மனநிலையிலிருந்து விடுபட்டால் மட்டுமே நூறு சதவீத வாக்களிப்பு என்பதை நம் நாடு சாத்தியமாக்கும் என்பது உறுதி. மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமை கொண்ட நமது நாடும் தேர்தல் என்பதை மிகப் பெரிய பொருள்செலவுடனும் ஆள்பலத்துடனும் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 முதலே வாக்களிப்பதன் அவசியத்தை மனம் குறித்துவைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் பீடு நடைபோட்டது. பத்தாண்டுகளாக ஆட்சி வாய்ப்பை இழந்திருந்த திமுக எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்னும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எல்லாவற்றையும் சமாளித்தது திமுக. நாடாளுமன்றக் கூட்டணியை எந்தச் சேதாரமுமின்றி அப்படியே தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.
அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து சிக்கல்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை இம்முறை தவறவிட்டது அதிமுக. பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக என்பது அதிமுகவுக்கு மிகப் பெரிய சவால். தமிழ்நாட்டில் பாஜக என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ள கட்சி. இதனுடன் கூட்டணி சேர்வது என்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல்தான். மீள்வது பெருங்கடினம். ஆனால், அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவைத் தவிர்த்துவிடவோ தள்ளிவைக்கவோ முடியவில்லை. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு.
இது தவிர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பெரிய கேள்விக் குறி. ஆனால், அதிமுகவின் வாக்குகளைப் பெரிய அளவில் சிதைக்கும் கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை அதுவும் அதிமுக வாக்குகளைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கட்சி பெறும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது உறுதி. இது போக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒன்றும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் பெற்ற தொகுதிகளில் மூன்றைத் திரும்பக் கொடுத்து சாதனை புரிந்தது. நாம் தமிழரும் இந்தக் களத்தில் போட்டியிடுகிறது.
![]() |
| 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் |
இப்படியான தேர்தலில் காலையிலேயே வாக்களித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாகக் காலையில் வெயில் இல்லை. இதமான சூழலே நிலவியது. காலையில் ஏழே கால் அளவில் புறப்பட்டு நன்னகரத்தில் உள்ள எனது வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்:28) வாக்களிக்கச் சென்றேன். கறுப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். அருகருகே இரண்டு வாக்குச் சாவடிகள் இருந்தன. முதல் வாக்குச்சாவடியில் ஆண், பெண் இருபாலர் வரிசையில் பலர் நின்றிருந்தனர். நான் இரண்டாவதாக இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியதிருந்தது. அதில், பெண்கள் ஓரிருவர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். ஆண்கள் வரிசையில் பத்து பேருக்கு மேலே நின்றிருந்தனர். நான் எனது முறைக்காகக் காத்திருந்தேன்.
வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் சிலிப்பைச் சோதிப்பதற்காகவும், சானிடைஸர், கையுறை வழங்குவதற்காகவும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பூத் சிலிப்பைச் சோதித்து உள்ளே வாக்களிக்க அனுப்பினர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரால் நிற்க முடியாத காரணத்தால் எல்லாருடமும் அனுமதி பெற்று வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். வாக்களித்த பின்னர் எல்லாருக்கும் இருகை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார்.
வாக்குச்சாவடியில் சுவரில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களும், வாக்காளர் குறித்த விவரங்களுக்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தன. தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இது போக நோட்டாவும் உண்டு. ஆக, மொத்தம் 19. என்னுடைய பூத் சிலிப்பைச் சோதித்துவிட்டு சானிடைஸர் வழங்கினார்கள். கைகளில் அதைப் பரவச் செய்தேன். பின்னர் கையுறையை அணிந்துகொண்டேன். பாலிதீன் கவர் போன்றிருந்தது கையுறை. சிறிது நேரத்துக்குப் பின்னர் வாக்குச்சாவடிக்குள் அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும், எதிரே அலுவலர்கள் மூவர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் தனியே அவர்களுக்கு எதிரே அவர்களுக்கு இடப்புற மூலையில் அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் நான்கு அலுவலர்கள் இருந்தனர். அனைவருமே பெண்கள்தாம்.
வரிசையாக அமர்ந்திருந்த அலுவலர்களில் எனக்கு வலப்புறம் முதலில் அமர்ந்திருந்த அலுவலர் பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று சோதித்தார். சோதித்தபின் என் பெயருக்கு எதிரே டிக் செய்து விட்டு, ரோஸ் கலர் கூப்பன் ஒன்றைக் கொடுத்தார். அடுத்து அமர்ந்திருந்த அலுவலர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார். அடுத்து இறுதியாக அமர்ந்திருந்த அலுவலரிடம் ரோஸ் நிற கூப்பனைக் கொடுத்தேன். அவர் வாக்களிக்கும் இயந்திரத்தைக் காட்டி வாக்களிக்கச் சொன்னார். வாக்கு இயந்திரம் ப வடிவ தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு காரணமாக நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பதைப் பிறர் அறியாமல் பாதுகாக்க முடிந்தது.
வாக்கு இயந்திரத்தில் நான் யாருக்கு வாக்களிக்க விரும்பினேனோ அந்த வேட்பாளருக்கு எதிரே இருந்த பொத்தானை அழுத்தினேன். அழுத்திவிட்டு அருகிலிருந்த விவிபாட் இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் நான் வாக்களித்த வேட்பாளர் பெயரும் சின்னமும் தாங்கிய சீட்டு தோன்றி, மறைந்தது. அதன் பின்னர் இயந்திரத்திலிருந்து பீப் ஒலி எழுந்தது. வெளியே வந்துவிட்டேன். இந்த முறை வாக்களித்துவிட்டேன். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். வீட்டுக்கு வந்து வாக்களித்ததை அறிவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டேன்.
வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பத்து சதவீதத்துக்கு மேலே வாக்குப் பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக அவை இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிலை நீடித்தால் வாக்கு சதவீதம் எண்பது வரை செல்லலாம் என்று நினைக்கிறேன்.
திங்கள், மார்ச் 22, 2021
தென்காசி: 1952 முதல் 2026வரை
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பரம்பரையில் வந்திருந்தபோதும், சொந்த ஊர் குறித்த பெருமிதம் இல்லாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது சந்தேகமே. நான் 1990இல் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னடா, முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லாமல் இருக்கிறதே என நினைக்காதீர்கள். சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. சொல்லவில்லை என்றால் மறந்துபோய்விடும் என்பதால் சொல்லிவிடுகிறேன். அப்போது கீழக்கரையில் இருந்த ஒரு வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். அந்த வங்கி அலுவலர் என் பெயரைக் கேட்டார். என் பெயரைக் கூறினேன். எந்த ஊர் தென்காசியா என்று அடுத்த கேள்வியைப் போட்டார். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. எப்படிக் கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்டேன். இல்ல அந்த ஊருலதான் இப்படிப் பெயர் வைப்பார்கள் என்று பட்டென்று சொன்னார்.
அப்படிப் பலரிடமும் பெயர் பெற்றிருந்த தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பற்றிய ஒரு புள்ளிவிவரக் குறிப்புகளை எழுதவிருக்கிறேன். அதனால், தான் ஊரின் பெருமையுடன் தொடங்கினேன். விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் தேர்தல் 1951இல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் மூன்று வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் 72.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 59,153. தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை 2,783 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் 44.53 சதவீத வாக்குகளைப் பெற்றார்; பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 26,340. சுயேச்சையாகப் போட்டியிட்ட சேவுக பாண்டிய தேவர் 23,557 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
அடுத்த தேர்தல் 1957இல் நடைபெற்றது. திமுக முதன்முறையாகக் களம் கண்ட
தேர்தல் இது. இந்த முறையும் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டிருக்கிறார்கள். 71.72 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். பதிவான மொத்த வாக்குகள் 58,887. காங்கிரஸ் கட்சியிடமிருந்து தொகுதியை சுயேச்சை வேட்பாளரான சட்டநாதக் கரையாளர் கைப்பற்றியுள்ளார். அவர் 31,145 வாக்குகளைப் பெற்றுள்ளார். 52.89 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர் தன்னை அடுத்து வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ ஏ சிதம்பரம் பிள்ளையைவிட 5,646 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 25,499 வாக்குகளைப் பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 43.3.
காங்கிரஸிடமிருந்து
ஆட்சியைத் திமுக கைப்பற்றிய 1967இல் நடைபெற்றது அடுத்த தேர்தல். ஆட்சியைத் திமுக கைப்பற்றியிருந்தபோதும் தென்காசி தொகுதி காங்கிரஸ் வசமே தொடர்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஐ.ஏ.சி.பிள்ளை, 34,561 வாக்குகளைப் பெற்று வென்றார். அவர் தனக்கு அடுத்த இடத்திலிருந்த திமுக வேட்பாளர் சம்சுதீனைவிட வெறும் 743 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றிருந்தார்; அவர் பெற்ற வாக்கு சதவீதம் 49.86. திமுக வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகள் 33,818; இது பதிவான வாக்குகளில் 48.79 சதவீதம். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 71,190 அதில் செல்லாதவை 1,872. ஆக, செல்லத்தக்க வாக்குகள் 69,318. இந்தத் தேர்தலில் மூவர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர்.
1971 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணா
இறந்தபிறகு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது.
வரலாறு காணாத வெற்றியில் தென்காசித் தொகுதியும் பங்கெடுத்துக்கொண்டது. தங்களுடன்
கூட்டணியமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸிடமிருந்து தொகுதியைத் திமுக பெற்றுக்கொண்டது.
கதிரவன் என்ற சம்சுதீன் இந்தத் தேர்தலில் தென்காசித் தொகுதியிலிருந்து
சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சார்பில் தென்காசியிலிருந்து
சட்டப் பேரவைக்குச் சென்ற முதல் வேட்பாளர் என்னும் பெருமையையும் பெற்றார். 72,423
வாக்குகள் பதிவாயின. அவற்றில் 2,163 வாக்குகள் செல்லாதவை. எஞ்சிய வாக்குகள்
70,260. திமுக வேட்பாளர் தன்னையடுத்த வேட்பாளரைவிட 7,960 வாக்குகள் அதிகமாகப்
பெற்று வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 39,110; வாக்கு சதவீதம் 55.6.
இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் ஐ சி ஈஸ்வரன் இருந்தார். அவர் பெற்ற
வாக்குகள் 31,150; வாக்கு சதவீதம் 44.34. இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள் இருவர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர்.
அடுத்த தேர்தல் 1980இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸும்
திமுகவும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. 74,565 வாக்குகள் பதிவாயின. இதில் 1,108
வாக்குகள் செல்லாதவை. அதிமுக சார்பில் போட்டியிட்ட சட்டநாதக் கரையாளர்
தன்னையடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் டி ஆர் வேங்கடரமணனைவிட 675 வாக்குகள் மட்டுமே
அதிகம் பெற்று வெற்றிபெற்றார். வெற்றிவேட்பாளரின் வாக்குகள் 36,638 (49.88%),
தோல்வி பெற்ற வேட்பாளர் வாங்கிய வாங்குகள் 35,963 (48.96%). மொத்தம் நால்வர் போட்டியிட்டிருந்தனர்.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகான தேர்தல் 1984 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு. கருணாநிதி போட்டியிடவில்லை. திமுகவின்
தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் முதன்முதலில்
போட்டியிட்டார். அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. கடந்த முறை தென்காசி தொகுதியில்
வெற்றி வாய்ப்பை இழந்த டி ஆர் வேங்கடரமணன் இந்த முறை 57,011 (60.45%) வாக்குகள்
பெற்று திமுக வேட்பாளர் மா.குத்தாலிங்கத்தைத் தோற்கடித்தார். திமுகவுக்குக்
கிடைத்த வாக்குகள் 35,383 (37.52%). வாக்குவித்தியாசம் 21,628. இந்த முறை மொத்தம்
99,409 வாக்குகள் பதிவாயின. இதில் 5,097 வாக்குகள் செல்லாதவை. தேர்தலில் மொத்தம்
ஐவர் போட்டியிட்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர். இறந்தபிறகு, 1989இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக இரு
அணிகளாக நின்று தேர்தலைச் சந்தித்தன. இந்த முறை தென்காசி தொகுதியில் 13 பேர்
களமிறங்கியிருந்தனர். முதன்முறையாக இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டது
இதுவே முதன்முறை. இம்முறை 1,11,533 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 2,285
வாக்குகள் செல்லாதவை. காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட்டு
வென்றார். 39,643 (36.29%) வாக்குகளைப் பெற்று திமுகவின் பாண்டிவளவனை 6,594
வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாண்டிவளவன் 33,049 (30.25%)
வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை
செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991இல் தேர்தல் நடைபெற்றது. இம்முறை 11 பேர் களத்தில்
இருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸே போட்டியிட்டு
36,879 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுக சார்பில் போட்டியிட்டவர்
எஸ்.ராமகிருஷ்ணன். பீட்டர் பெற்ற வாக்குகள் 65,142 (62.105). திமுகவுக்கு 28,263
(26.94%) வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன. மொத்தம் 1,08,739 வாக்குகள்
பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை 3,813. இந்த முறை 33 வாக்குகள் தவறிப்போயிருந்தன. பாஜக முதன்முறையாக இந்தத் தேர்தலில்
போட்டியிட்டுள்ளது.
ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்ட 1996 தேர்தலில் தென்காசியை திமுகவின்
கூட்டணிக் கட்சியான தமாகாவின் வேட்பாளரான ரவி அருணன் கைப்பற்றியிருந்தார்.
1,19,984 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாத வாக்குகள் 4,946.
மூன்று பேரின் வாக்குகள் ஏற்கெனவே போடப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ்
வேட்பாளர் ஆலடி சங்கரய்யாவை 30,760 வாக்குகள் வித்தியாசத்தில் ரவி அருணன்
வென்றிருந்தார். அவருக்கு 60,758 (52.82%)வாக்குகள் கிடைத்திருந்தன. சங்கரய்யா
29,998 (26.08%) வாக்குகளை மட்டுமே பெற்றார். தேர்தலில் இருபது பேர்
போட்டியிட்டனர். முதன்முறையாக பெண் ஒருவர் வேட்புமனுவைத் தாக்கல்
செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
2001இல் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இம்முறை 1980 ஆம் ஆண்டுக்குப்
பிறகு தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றியது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட
அண்ணாமலை 62,454 (51.41%) வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்து வந்த திமுக வேட்பாளர்
கருப்பசாமி பாண்டியனைவிட 8,792 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். திமுக வேட்பாளர் 53,662 (44.18%) வாக்குகளைப்
பெற்றிருந்தார். மொத்தம் 1,21,695 வாக்குகள் பதிவாயின. இதில் செல்லாதவை 222; ஏற்கெனவே
பிறரால் போடப்பட்ட வாக்குகள் 8. தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர்.
மைனாரிட்டி அரசு என்னும் பெயரைத் திமுகவுக்குப் பெற்றுத்தந்த தேர்தல் 2006இல்
நடைபெற்றது. 2001இல் தொகுதியைத் தவறவிட்ட கருப்பசாமி பாண்டியன் 18,658 வாக்குகள்
வித்தியாசத்தில் இந்த முறை தொகுதியைக் கைப்பற்றிக்கொண்டார். 1,40,149 வாக்குகள்
மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை, ஏற்கெனவே போடப்பட்டவை போன்றவை போக மீதி
1,39,570. கருப்பசாமிக்கு 69,755 (49.97%) வாக்குகள் கிடைத்திருந்தன. அவரையடுத்த
வாக்குகளைப் பெற்றிருந்த மதிமுகவின் இராம உதயசூரியனுக்குக் கிடைத்தவை 51,097
(37.41%). பதினோரு பேர் போட்டியிட்டனர் இந்தத் தேர்தலில். 1996இல் தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவி அருணன் பாஜக சார்பில் இந்தத்
தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவே
தக்கவைத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை போட்டியிட்டவர் செல்வ மோகன் தாஸ்
பாண்டியன். வெறும் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார். அதிமுகவுக்கு 86,339 (42.58%)
வாக்குகளும், காங்கிரஸுக்கு 85,877 (42.35%) வாக்குகளும் கிடைத்திருந்தன.
நோட்டாவுக்கு 3,379 வாக்குகள் கிடைத்திருந்தன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம்
வகித்த தமிழ் மாநில காங்கிரஸுக்கு 7,324 வாக்குகள் கிடைத்திருந்தன. முதன்முறையாக
செல்வி என்னும் பெண் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.
![]() |
| மோகன் தாஸ் பாண்டியன் |
தென்காசி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் ஏழு முறையும் அதிமுக நான்கு முறையும் திமுக இரு முறையும் சுயேச்சை ஒரு முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளன. அதிக வாக்குகள் பெற்று வென்றவர் 2011 தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார். பெற்ற வாக்குகள் 92,253. அதிக சதவீதம் பெற்று வென்றவர் 1991 தேர்தலில் பீட்டர் அல்போன்ஸ், சதவீதம் 62.1. இத்தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில், 36,879, வென்றவர் எனற பெருமையும் அவருக்குத்தான். மிகக் குறைந்த சதவீதத்தில் வென்றவரும் அவர்தான் 1989 தேர்தலில் 36.29 சதவீத வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. 1989, 1991 ஆகிய இரண்டு முறை அடுத்தடுத்து வென்றவரும் அவர்தான். குறைந்தபட்சமாக 1971இல் இருவரும் அதிகபட்சமாக 1996இல் 20 பேரும் போட்டியிட்டிருந்தனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பாத்திமா என்னும் பெண் ஒருவர் உள்ளிட்ட 34 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களில், 13 பேரின் வேட்பு மனுக்கள் (பாத்திமாவுடைய மனுவையும் சேர்த்து) தள்ளுபடி செய்யப்பட்டன; மூவர் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். மீதி 18 பேர் களம் கண்டார்கள். கடந்த தேர்தலில் மோதிய செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் பழனி நாடாரும் மோதினார்கள். கட்சி சார்ந்த வாக்குகள் அடிப்படையிலும் பொதுவான மனநிலையிலும் பார்த்தால் காங்கிரஸ் கட்சி எளிதாக வென்றுவிடும் என்றுதான் தோன்றியது. கள நிலவரம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக எதுவும் இருப்பதுபோலும் தெரியவில்லை. ஆனாலும், மக்கள்தீர்ப்பை அறிந்துகொள்ள மே 2 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
![]() |
| பழனி நாடார் |
தென்காசி தொகுதியின் முடிவு மே 2 அன்று இரவில்தான் வெளியானது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார். மொத்தம் வாக்கு எண்ணப்பட்ட 30 சுற்றுக்களில் 5, 6 ,7, 9, 14, 21, 22, 24, 26, 27, 28, 29, 30 ஆகிய சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இருந்தபோதும், வாக்கு இயந்திரத்தின் எல்லாச் சுற்றுகளையும் சேர்த்து பழனி நாடார், 87,706 வாக்குகளே பெற்றிருந்தார்; அதிமுக வேட்பாளருக்கு 88,271 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், தபால் வாக்குகள் பழனி நாடாருக்குக் கைகொடுத்துள்ளன. அவருக்குக் கிடைத்திருக்கும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை 1,609; அதிமுகவுக்கு 674. ஆக, பழனி நாடார் பெற்ற மொத்த வாக்குகள் 89,315; அதிமுக 88,945. ஒருவழியாக பழனிநாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் தென்காசி தொகுதியைக் கைப்பற்றிவிட்டார். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஆர் வின்செண்ட்ராஜ் 15,336 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நோட்டாவுக்கு 1,159 வாக்குகள் கிடைத்திருந்தன. எப்படியோ நூலிழை வித்தியாசத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸின் கைக்கு வந்துவிட்டது.
தென்காசி தொகுதியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், 16 மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 5 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. 26 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. கு. முத்து, ஆ. மாரியப்பன், மா.பொன்னுத்துரை, பொ. நோபிள் கிருஷ்ணா, சி.துரைராஜ், ச.தங்கப்பழம், மு.சாகுல் ஹமீது, மா.காளியப்பன், ச.கணேசன், ரா.ராம்குமார், க.பூர்ணசெல்வன், ரா.கிருஷ்ணன் ஆகியோர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அ.ராஜாபிரகாஷ் என்பவர் போட்டியிட்டார். காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சௌ.மனோகரன் என்பவர் போட்டியிட்டார். நாம் இந்தியர் கட்சி வேட்பாளராக ரா.செல்வகுமார் என்பவர் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, பா.புஷ்பலதா வேட்பாளராக நின்றார். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மு.பூசதுரை வேட்பாளராக நின்றார். புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் சோ. திருமலைக்குமார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளராக நின்றவர் க. கோமதி சங்கர். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராகக் களம் கண்டவர் த.இசக்கி பாண்டியன்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டாக்டர் கலை கதிரவன் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குப் பின்னர் இம்முறைதான் தென்காசியில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதிமுக சார்பில் சி.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே 2016 ஆம் தென்காசியில் வென்றவர். அதே நேரம் 2021இல் தோற்றவர். தென்காசியைப் பொறுத்தவரை 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தொகுதியில் நேரடியாக மோதியது. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 82.43 விழுக்காடு வாக்குப் பதிவானது. இறுதியாக தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவல் படி, 82.37 விழுக்காடு வாக்கு பதிவாகியிருந்தது. ஆண்கள் 1,10,971 பேரும் பெண்கள் 1,20,954 பேரும் மாற்றுப் பாலினத்தினர் 45 பேரும் என மொத்தம் 2,31,970 பேர் வாக்களித்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை 2026 மே 4 அன்று நடைபெற்றது. முதல் மூன்றாம் சுற்றுவரை அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வந்தார். நான்காம் சுற்றில் திமுக வேட்பாளருக்கு அதிகம் வாக்கு கிடைத்திருந்தது. ஐந்தாம் சுற்று முதல் திமுகவின் கலை கதிரவன் முன்னிலை பெற்று இறுதியில் 79,699 (33.92%) வாக்குகள் பெற்று தமக்கு அடுத்துவந்த அதிமுக வேட்பாளரைவிட 10,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 69,400 (29.53%). இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் 55,543 (23.64%) வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. இத்தொகுதியில் மொத்தம் 3,019 அஞ்சல் வாக்குகள் பதிவாகின. இதில் திமுகவுக்கு 1164 வாக்குகளும், அதிமுகவுக்கு 774 வாக்குகளும் தவெகவுக்கு 614 வாக்குகளும் கிடைத்துள்ளன.



























