இந்த வலைப்பதிவில் தேடு

ஹாலிவுட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹாலிவுட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 30, 2021

த ஸ்ட்ரேஞ்சர் (1946): அவன் ஓர் அந்நியன்


இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆர்சன் வெல்ஸின் த ஸ்ட்ரேஞ்சர் அமெரிக்கப் படம் இதே பின்னணியைக் கொண்டிருந்தபோதும், இந்தப் படம் பிறவற்றிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஒரு வெகுசனப் படத்தில் நாஜி வதை முகாம்களின் காட்சி இடம்பெறுவது இந்தப் படத்தில் முதன் முறையாக நிகழ்ந்திருக்கிறது. படம் போர்க்குற்றவாளி ஒருவரை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது ஒரு த்ரில்லர் வகைப் படமே. தூண்டிலில் புழுவை மாட்டி மீனைப் பிடிப்பது போன்ற ஒரு வேலையே முழுப் படமும். படத்தை இப்போது பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் பார்க்க முடிகிறது என்பதே படத்தின் சிறப்பாகப் படுகிறது. 

பொதுவாகவே, வண்ணப்படங்களைவிடக் கறுப்பு வெள்ளைப் படங்களே மனத்தைக் கவர்கின்றன. இந்தப் படம் 1946ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. படம் ஒன்றரை மணி நேரம்தான். ஒரு சினிமா தரக் கூடிய அத்தனை திருப்தியையும் தருகிறது படம். மிகச் சில கதாபாத்திரங்கள். இரண்டாம் உலகப் போரின்போது இன அழிப்பில் ஈடுபட்ட போர்க் குற்றவாளியான ஃப்ரான்ஸ் கிண்ட்லர் என்பவரைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு போர்க் குற்றங்களுக்கான ஆணையத்தின் துப்பறிவாளர் வில்ஸனிடம் (எட்வர்ட் ஜி ராபின்சன்) விடப் பட்டிருக்கிறது. அவர் முன்னால் உள்ள பெரிய சவால் என்னவென்றால், ஃப்ரான்ஸ் கிண்ட்லர் தனது எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டார். ஆகவே, அவர் எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் யாராக இருக்கிறார் என்பவற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதன்று. ஆனாலும், அவரைக் கண்டுபிடித்தாக வேண்டும். 

படம் தொடங்கும்போது, அந்நியர் ஒருவர் கப்பலில் இருந்து இறங்குகிறார். கான்ரெட் மெய்னகி என்னும் அந்த மனிதர் தன்னை போலந்தைச் சார்ந்தவர் என்றும் தனது உடல்நலத்தின் பொருட்டு அங்கே வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரை வில்ஸன் நியமித்த ஆள் தொடர்கிறார். மெய்னகி தேடி வந்த மனிதர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் ஹார்பர் நகரத்தில் வசிப்பதாகத் தகவல் கிடைக்கிறது. ஆகவே, மெய்னகி அங்கே செல்கிறார். அவரைத் தொடர்கிறார் வில்ஸன். 

ஹார்பர் நகரத்தில் மெய்னகி ஒருவரைச் சந்திக்கிறார். அவர் அங்குள்ள கல்லூரியில் பணியாற்றும் சார்லஸ் ரேன்கின் என்னும் பேராசிரியர். அன்று அந்தப் பேராசிரியருக்கும் அவரைக் காதலித்த மேரிக்கும் (லோரெட்டா யங்) திருமணம் நடைபெறுகிறது. அந்தத் திருமணத்துக்கு இடையே தன்னை வந்து சந்தித்த பேராசிரியரிடம் தன்னைத் தொடர்ந்த மனிதரைத் தான் கொன்றுவிட்டதாகக் கூறுகிறார் மெய்னகி. சிறிது நேரத்தில், பேராசிரியர் மெய்னகியைக் கொன்று புதைத்துவிடுகிறார். பேராசிரியர் யார், அவர் ஏன் மெய்னகியைக் கொல்கிறார், பேராசிரியருக்கும் மெய்னகிக்கும் என்ன உறவு, ஃப்ரான்ஸ் கிண்ட்லரை வில்சன் கண்டுபிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை தேடி மீதிப் பயணத்தை மேற்கொள்கிறது திரைக்கதை. 

ஆர்சன் வெல்ஸ் பேராசிரியர் வேடத்தை ஏற்றிருக்கிறார். திருமண நாளன்று ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை மறைக்க எத்தனையோ பொய்களைக் கூறுகிறார் அவர். ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும், அவர் சிறிது சிறிதாக உண்மையைச் சொல்வதுபோல் தொடர்ந்து தன் மனைவியிடம் கூடப் பொய்யையே கூறுகிறார். மிதமிஞ்சிய காதலின் காரணமாக மேரியால் கணவன் கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எது செய்தாலும் அது நல்லதுக்கே என்று நம்புகிறார். 

பார்வையாளர்களுக்குப் பேராசிரியர் யார் என்பதை இயக்குநர் தெளிவுபடுத்திவிடுகிறார். ஆனால், மேரிக்கு அவர் யார் என்பது இறுதியில்தான் தெரியவருகிறது. திரைக்கதையின் சுவாரசியம் குன்றாமல் படம் முழுக்கவும் பயணப்படுகிறது. பேராசிரியருக்கும் கடிகாரம் பழுதுபார்த்தல் என்பதன் மீது பேரார்வம். அதை அவர் தொடர்ந்து செய்துவருகிறார். அந்தப் பேரார்வம்தான் அவர் யார் என்பதையும் காட்டிக்கொடுக்கிறது.

மரங்களடர்ந்த பகுதி, டவுன் கிளார்க் நடத்தும் ஸ்டோர், அங்கே போன் செய்துகொள்ளலாம், மதுவருந்தலாம், சூதாடலாம், பொருள்களை வைத்துச் செல்லலாம், தேவாலயம், மேரியின் வீடு இப்படிச் சில இடங்களே படத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. கொலையாளிக்கும் துப்பறிவாளருக்கும் இடையே உள்ள சிறிய தூர இடைவெளியைத் திரைக்கதை சிறிதுசிறிதாக நிரப்பிவருகிறது. அந்த இடைவெளி முற்றாக இல்லாமல்போகும்போது படம் நிறைவடைந்துவிடுகிறது. 

விக்டர் ட்ரைவாஸ் எழுதிய கதைக்குத் திரைக்கதையை எழுதியிருக்கிறார் அந்தோனி வெய்ல்லர். ரஸ்ஸல் மெட்டி ஒளிப்பதிவை மேற்கொண்ட இந்தப் படத்தின் இசை ப்ரோனிஸ்லா காப்பர். சுவாரசியமாகப் பார்ப்பதற்கு உகந்த படம் இது. நல்ல சினிமா பார்க்க விரும்புவர்களுக்கான விருந்து இந்தப் படம். இந்தப் படத்துக்கான ஐஎம்டிபி ரேட்டிங் 7.4.  யூடியூபிலேயே படம் கிடைக்கிறது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். 

ஞாயிறு, டிசம்பர் 06, 2020

டெனெட்: புளுட்டோனிய போர் தடுக்கும் கொள்கை

கிறிஸ்டோபர் நோலன் என்ற பெயர் ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே மகத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது. மெமெண்டோ என்னும் அவரது படம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மெமெண்டோவின் தாக்கத்தில் உருவானது என்பதை நம்மில் அறியாதோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. அந்தப் படம் தமிழில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஏ.ஆர். முருகதாஸுக்கு இந்திய இயக்குநர் அந்தஸ்து கிடைக்க காரணமான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்சோம்னியா, இன்ஸெப்ஷன், இண்டர்ஸ்டெல்லர், டன்கிர்க் படங்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் டெனெட்

டெனெட் திரைப்படத்தின் கதையைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கிண்டல்களும் கேலிகளும் உலவிவருகின்றன. ஏனெனில், அவ்வளவு சிக்கலான கதை அது. கடந்த காலத்துக்குள் சென்று நமது தவறு ஒன்றைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அல்லது எதிர்காலத்துக்குள் சென்று நாம் எதிர்கொள்வதை அறிந்துகொண்டால் அதை எப்படி எதிர்கொள்வோம்? இதை யோசித்துப் பாருங்கள். ஒரு சுவாரசியம் தென்படுகிறதல்லவா? அந்த சுவாரசியத்தின் அடிப்படையில் தான் இந்தப் படமே அமைந்திருக்கிறது. 

ஒருமுறை பார்த்து அதன் கதையையும் திரைக்கதையையும் முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது உண்மையிலேயே சாதனைதான். தொடர்ந்து ஆங்கிலப் படங்களிலேயே மூழ்கி முத்தெடுப்பவர்களுக்கு ஒருவேளை அதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால், அவ்வளவு கடினப்பட்டுப் பார்க்க வேண்டிய அளவுக்கு முக்கியமான படமா டெனெட் என்றால் தொழில்நுட்பரீதியில் சரிதான். ஏனெனில், தொழில்நுட்பரீதியாக செறிவான இந்தப் படம் உள்ளடக்கரீதியில் தக்கையான, தட்டையான படம்தான். மனித உணர்வுகளுக்கு இடமே அளிக்காத ஒரு படம் இது. முழுக்க அறிவியல் புனைவு என்னும் வறண்ட வானிலையில் நகரும் படமிது. 

தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்னும் மனப் போக்கு கொண்டவர் ஆங்கில ரஷ்யரான, ஆந்த்ரேய் சேட்டர் (கென்னத் ப்ரனா என்னும் வட அயர்லாந்து நடிகர்). ஆயுத வியாபாரியான இவர் உலகை அழிக்கும் தன்மையிலான நேர்மாறு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார். ரஷ்யாவின் ரகசிய நகரத்தில் இவருடைய நேர்மாறு ஆயுத ஆலை இயங்குகிறது. நேர் மாறு ஆயுதம் என்பது அணு ஆயுதத்தைவிட மோசமானது. அதனால் கடந்த காலத்துக்கும் சென்று சேதம் விளைவிக்க முடியும். இப்படிப்பட்ட ஆயுதங்களை விற்கும் முகவரான சேட்டரால் உலகம் அழியும் ஒரு சூழல் உருவாகிறது. இதிலிருந்து மனிதர்களைக் காக்கும் பொறுப்பு சிஐஏ ஏஜண்டான நாயகனிடம் விடப்படுகிறது. இந்த வேடமேற்றிருப்பவர் ஜான் டேவிட் வாஷிங்டன். அதை அவர் நிறைவேற்றுகிறாரா, மனிதர்களை அவரால் காக்க முடிந்ததா என்பதே திரைக்கதையின் எஞ்சிய பயணம். 

வழக்கம் போன்ற ஹாலிவுட் படங்களில் காணப்படும் நன்மை தீமைக்கான போர் தான் இந்தப் படத்தின் கருவும். திரைக்கதையை உன்னிப்பாகக் கவனித்தால்தான் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது. நமது புராணங்களில் உள்ளதுபோல் பல ஜீபூம்பாக்கள் திரைக்கதையைத் தேற்றியுள்ளன. ஆனால், இடையிடையே இயற்பியல் விளக்கம் தருகிறார்கள். ஆனால், படத்தில் ஒரு வசனம் வருகிறது: இதைப் புரிந்துகொள்ள முயலாதே உணர்ந்துகொள் என்று அது தான் உண்மை. படத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் படத்தின் காட்சி அனுபவத்தைத் தவறவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, காட்சிகளைத் தொடர்ந்து அப்படியே சென்றோம் என்றால் படம் புரிந்துவிடும்.

தன்னைத் துளைத்த தோட்டா நேர்மாறானது என்பதால் அந்த தோட்டாவின் உலோகக் கலவை இந்தியாவைச் சேர்ந்தது என்று அறிந்துகொண்ட நாயகன் இந்தியாவுக்கு வருகிறான். அங்கே அவன் ஆயுத தரகரையும் அவருடைய மனைவியையும் சந்திக்கிறான். பிரியா என்னும் பெயர் கொண்ட அவர் நடிகை டிம்பிள் கபாடியா. அவரிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆந்த்ரேய் சேட்டரின் மனைவியான கேத்ரினைக் (எலிசபெத் டெபிக்கி என்னும் ஆஸ்திரேலிய நடிகை) காண்கிறான். என்னா உயரம் அந்த நடிகை! அவர் கலைப்பொருள்களை மதிப்பிடுபவர். அவர் வழியே சேட்டரைப் பிடிக்க முயல்கிறான் நாயகன். இதில் நாயகனுக்கு உதவுபவன் நீல் என்பவன் (ராபர்ட் பேட்டின்சன் எனும் ஆங்கில நடிகர்). 

வில்லன் எதிர்காலத்துக்குள் சென்று என்ன நடக்கும் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னர் அந்தச் சம்பவம் நடக்கும்போது அதைச் சமாளிக்கிறான். இப்படியான காட்சிகளை நம்பித்தான் ஆக வேண்டும். நாயகன் மட்டும் லேசுப்பட்டவனா அவனும் கடந்த காலத்துக்குச் சென்று நம்பவியலாத காரியங்களில் எல்லாம் ஈடுபடுகிறான். பார்ப்பவரைக் கவரும் விதத்திலான பிரும்மாண்டமும் தொழில்நுட்பத் தரமும் படத்தை வாய் பிளந்து பார்க்கவைக்கின்றன. ஆனால், முழுவதும் பார்த்து முடித்தபிறகு, ஒரு பூஞ்சையான படத்தைப் பார்க்கவே நேரத்தைச் செலவழித்திருக்கிறோம் என்பது தெரிகிறது. 

ஹாலிவுட் படங்களுக்கே உரிய சேஸிங் காட்சிகளும் வானளாவிய கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறும் பழங்கால உத்தி நவீனத் தொழில்நுட்பத்துடன் உதவும் காட்சிகளும் உண்டு. ஒரே நேரத்தில் ஒரு குழுவினர் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் கடந்த காலத்துக்கும் ஒரு பிரிவினர் நிகழ்காலத்துக்கும் செல்வது போன்ற காட்சிகளை எல்லாம் நம்பினால் தான் படத்தை ரசிக்க முடியும். படத்தின் தொடக்கத்தில் நிகழும் ஓபரா அரங்கில் நிகழும் தாக்குதல் முதல் இறுதிக்காட்சியில் புளுட்டோனியம் 241ஐ எடுப்பது வரை பார்வையாளர்களை திரையரங்கில் இருத்திவைப்பதற்கான நேர்த்தியான திரைக்கதைதான். என்றபோதும் வழக்கமான ஹாலிவுட் படங்களைப் பார்த்துப் பிரமிப்போருக்கான படம் இது என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை. கிறிஸ்டோபர் நோலன் படம் என்பதால் பார்க்கலாம். ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் நல்ல படங்களில் ஒன்று இதுவல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். 

ஞாயிறு, ஜூலை 30, 2017

டன்கிர்க் (ஆங்கிலம்): பிழைத்திருப்பதே பெரும் சாதனை



ற்கால ஹாலிவுட் இயக்குநர்களில் கிறிஸ்டோபர் நோலன் என்னும் பெயர் ரசிகர்களைச் சட்டென்று புருவம் உயர்த்தவைக்கும். இவரது முதல் படமான ‘ஃபாலோயிங்’ 1998-ல் வெளியானது. ஆனால், இரண்டாம் படமான ‘மெமண்டோ’ வழியாகவே ரசிகர்களின் பெரும் செல்வாக்கைப் பெற்றார். ‘த டார்க் நைட்’ வரிசைப் படங்கள், ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர் ஸ்டெல்லார்’ எனத் தொடர்ந்து அறிவியல் புனைவுப் படங்களின் மூலம், தனது இயக்குநர் என்னும் பொறுப்பை அழுத்தமாகவும் திருத்தமாகவும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியவர் நோலன். இவரது பத்தாம் படமான ‘டன்கிர்க்’ ஜூலை 13 அன்று லண்டனில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது. எல்லா ஹாலிவுட் இயக்குநர்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது ஒரு இலக்காகவே இருக்கும். நோலன் குறிப்பிடத்தகுந்த படங்களை உருவாக்கியுள்ளபோதிலும் இதுவரை ஆஸ்கரின் சிறந்த இயக்குநர் பிரிவுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதில்லை. இந்தப் படத்துக்காக நோலனுக்கு அந்த ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என்று இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


‘டன்கிர்க்’ என்னும் பெயர் இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்ஸில் ஊடுருவிய நாஜிப் படையினர், நேசப்படையினரைச் சுற்றிவளைத்துவிட்டனர். அவர்கள் தப்பிப்போக கடல் மார்க்கம் மட்டுமே மிச்சமிருந்தது. ஆகவே, இங்கிலிஷ் கால்வாய் வழியே இங்கிலாந்தை அடையலாம் என்னும் நிலையில், ஆங்கிலேயப் படைவீரர்கள் உள்ளிட்ட சுமார் 4,00,000 படைவீரர்கள் மீட்கப்பட்டனர். ராணுவ வரலாற்றில் மிகவும் அதிசயமான, ‘ஆபரேசன் டைனமோ’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வையே நோலன் ‘டன்கிர்க்’ படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், படத்தில் அரசியல் சம்பவங்களைக் கொண்ட காட்சிகளை அவர் இணைக்கவில்லை. இறுதியாக நாளிதழில் மட்டுமே வின்ஸ்டன் சர்ச்சிலின் உரை இடம்பெறுகிறது. வழக்கமாக இரண்டாம் உலகப் போரைப் பற்றிய படங்களில் நாஜிக்களும் அவர்களின் வதை முகாம்களுமே ஆதிக்கம் செலுத்தும். மனிதவர்க்கத்தையே இரண்டாகக் கிழித்துப் போடும் இந்தப் போர் எதற்காக என்று மனசாட்சியை உலுக்கும். ஆனால், நோலன் டன்கிர்க்கில் இரண்டாம் உலகப் போரின் அந்த எதிர்மறைப் பக்கத்தைத் தவிர்த்துவிட்டார்; அதைப் போல் பெரும்பாலும் பெண்களையும் தவிர்த்துவிட்டார்.

1958-ல், லெஸ்லி நார்மன் இயக்கத்தில் வெளியான ‘டன்கிர்க்’கில்கூடப் படத்தின் முதல் பாதியில் ஆங்கிலேயக் காலாட் படைவீரர்களுக்கும் நாஜிக்களுக்குமிடையே நடைபெறும் துப்பாக்கி மோதல் காட்சிகள் உண்டு. அதன் மறுபாதியில்தான் டன்கிர்க் கடற்கரைப் பகுதியின் மோல் என அழைக்கப்படும், கடல் நீரால் கடற்கரைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் அந்த மரப்பலகைகளாலான தடுப்புப் பகுதிக்கு வருகிறார்கள். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கில் படத்தின் தொடக்கமே, வீரர்களைக் கடற்கரையை நோக்கித் துரத்துகிறது. டாமி என்னும் அந்த ஆங்கிலேய இளம் வீரன் (ஃபியான் வொயிட்ஹெட்) உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தலைதெறிக்க ஓடுகிறான். வழியெங்கும் நாஜிக்களின் குண்டுகள் துரத்துகின்றன; கடற்கரையில் காத்திருக்கும் வேளையிலும் வானிலிருந்து போர் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்னும் பதற்றத்தினிடையே நேசப் படையின் வீரர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்னும் மனநிலையுடன் காத்திருக்கிறார்கள்.


பொதுவாக, நோலனின் படங்கள் நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் முன்னதும் பின்னதுமான நான் லீனியர் வகையைச் சார்ந்தே செல்லும் தன்மை கொண்டவை. இந்தப் படத்தின் திரைக்கதையை மூன்று கோணங்களாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார் . முதல் கோணம் மோலில் காத்திருக்கும் படைவீரர்களின் பயணம். இரண்டாம் கோணம் இங்கிலாந்திலிருந்து படைவீரர்களைக் காப்பாற்ற படகைக் கொண்டுவரும் டாசனின் (மார்க் ரிலயன்ஸ்) பயணம். மற்றொரு கோணம் நாஜிக்களின் வான் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆங்கில விமானப் படைவீரர்களான ஃபாரியர், காலின் ஆகியோரது பயணம். இந்த மூன்று பயணங்களும் மாறி மாறி வருகின்றன.1958-ல் வெளியான ‘டன்கிர்க்’கில் ஆங்கிலேயே விமானப் படை வீரர்களது முறியடிப்புக் காட்சிகள் இடம்பெற்றிருக்காது. 
ஹான்ஸ் ஜிம்மரின் இசை , காத்திருப்பின் படபடப்பையும் மூச்சிரைக்க ஓடுவதையும் துப்பாக்கிக் குண்டுகளின் வெடியோசையையும் துல்லியமாக உணர்த்துகிறது. இதனால் பார்வையாளர்களும் கடற்கரையில் காத்திருக்கும் வீரர்களின் மன நிலையைச் சட்டென பெற்றுவிட முடிகிறது. என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியாமல் எல்லாவற்றையும் தனிமையச்சத்துடனும் பதைபதைப்புடனும் பார்த்துக்கொண்டிருக்கச் செய்வதில் நோலன் வெற்றிபெற்றிருக்கிறார். அதற்கு நடிகர்களின் இயல்பான நடிப்பும் நோலனின் ஆளுமைப் பண்பும் ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்பங்களும் பெருமளவில் கைகொடுத்துள்ளன. பார்வையாளர்களை உணர்ச்சி வெள்ளத்துக்குள் ஆழ்த்தாமல் படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துவிடுகிறது. ஏதாவது ஒரு காட்சியில் உணர்ச்சி மேலிடும்போது, சட்டெனப் படம் அடுத்த கோணத்துக்குச் சென்றுவிடுகிறது.


வழக்கமாக, பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த இரண்டாம் உலகப் போர் படங்களைப் பார்க்கும்போது, இந்தப் போர் எதற்காக என்னும் கேள்வி அழுத்தமாக எழும். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கைப் பார்த்தபோது, போர் பற்றிய எந்தக் கேள்வியும் எழவில்லை. பொதுவாகப் போர்களில் குடிமக்களுக்கு எந்த வேலையும் இருக்காது. போரால் பெருமளவில் குடிமக்கள் பாதிக்கப்பட்டாலும்கூட அவர்களது நேரடியான ஈடுபாடு என்பது இருக்காது. ஆனால், டன்கிர்க் சம்பவத்தில் குடிமக்கள் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அதனாலேயே நோலன் இதைப் படமாக்க எண்ணியிருக்கலாம். ஏனெனில், போரின் வெற்றி - தோல்வி என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு உயிர் பிழைத்திருப்பதே பெரும் சாதனைதான் என்பதை இந்தப் படம் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

டன்கிர்க் சம்பவத்தைப் பொறுத்தவரையில் லட்சக்கணக்கான வீரர்கள் காப்பாற்றப்பட்டதைப் போல், ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டும்போனார்கள். அதைப் போல் வீரர்கள் பலர் எதிரிகளிடம் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் இந்தப் படம் உதாரணங்களைத் தந்துள்ளது. ஆனால், வரலாற்றை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறோம் என்னும் திருப்தி ஏற்பட்டபோதும் ஒரு சிறந்த படம் பார்த்த திருப்தியை நோலனின் ‘டன்கிர்க்’ தரவில்லை. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இந்தியர்களது பங்களிப்பை எந்தப் படமும் நினைவுவைத்துப் பிரதிபலித்ததில்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. இது பற்றி நௌபிரேக்கிங் இணையதளம் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது. ‘இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து சண்டையிடவில்லை, ஆனால், ஆங்கிலேயப் பேரரசு சண்டையிட்டது’ என்று ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் யாஸ்மின் கான் தனது ‘த ராஜ் அட் வார்’ (The Raj At War: A People's History Of India's Second World War)என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை மேற்கோள் காட்டி எழுப்பியிருக்கும் கேள்வியையும் சேர்த்துப் பார்க்கும்போது, படம் ஏன் முழுமையான திருப்தியைத் தரவில்லை என்பதற்கு விடை கிடைக்கிறது.

ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்!

(தி இந்துவில் 2016 ஏப்ரல் 8 அன்று வெளியானது)

ஹாலிவுட் பட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங்களில் ஒன்று பென்-ஹர். 1959-ம் ஆண்டில் வெளியாகி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற படம் இது. ஒரு காவியமாகப் போற்றப்படும் இந்தப் படம், அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு அடிப்படையான வரலாற்று நாவல் பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட் (1880). இதை எழுதியவர் லெவ் வாலஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளர். 19-ம் நூற்றாண்டில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ நூல் இது என்று சொல்லப்படுகிறது. இந்த நாவல் இதுவரை நான்கு முறை படமாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது முறையாகவும் இதே நாவல் இப்போது ஹாலிவுட்டில் படமாக உருவாகியிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.

ரோமைச் சேர்ந்த பால்ய நண்பனால் தவறாகக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அடிமையாகக் காலங்கழிக்கும் யூத பிரபுவின் கதை இது. அத்தனை துயரங்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு தனக்குத் துரோகமிழைத்த நண்பனைப் பழிவாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் ஜூடா பென்ஹர். இந்நிலையில் இவன் நாசரேத்தின் இயேசுவை அடிக்கடி சந்திக்க சந்தர்ப்பம் அமைகிறது. அவருடனான சந்திப்பு ஜூடா பென் ஹர் வாழ்வில் மாற்றத்தை உருவாக்குகிறது. இப்படியாகப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதையை கெயித் ஆர் க்ளார்க்கும் ஜான் ரிட்லியும் எழுதியிருக்கிறார்கள்.

ஜூடா பென்ஹர் வேடமேற்றிருக்கிறார் ஜேக் ஹஸ்டன் என்னும் ஆங்கில நடிகர். மார்கன் ஃப்ரீமேன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். திமுர் பிக்மாம்பிதவ் என்னும் ரஷ்ய இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆலிவர் உட். 3 டியில் தயாராகியிருக்கும் இந்தப் படம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றும் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது இதன் டிரெயிலர். பாராமவுண்ட் பிக்சர்ஸ், எம்.ஜி.எம். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை விநியோகிக்கின்றன. ரசிகர்கள் மனதில் காவியமாக நிலைத்துவிட்ட பென்ஹர் (1959) படத்தை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஞாயிறு, மார்ச் 06, 2016

முதல் பரிந்துரையில் ஆஸ்கர்!

(தி இந்துவில் 04.03.2016 அன்று வெளியானது)

ஆஸ்கர் விருதுக்காகப் பல ஆண்டுகள் போராடும் நடிகர்கள் மத்தியில் அவ்விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் முறையே ஆஸ்கரை வென்றிருக்கிறார் நடிகை ப்ரே லார்சன். லென்னி ஆப்ரஹம்சன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'ரூம்' திரைப்படத்துக்காக இந்த விருதைப் பெற்றிருக்கும் லார்சன் இதே படத்துக்காக கோல்டன் க்ளோப் விருதையும், பாப்தா விருதையும் இந்த ஆண்டு வென்றிருக்கிறார். தன் மகன் ஜேக்குடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருக்கும் ஜாய் என்னும் தாய் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்றிருந்தார் லார்சன்.

ஜேக்கின் தந்தையான நிக்கால் ஏழாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பார் ஜாய். மகன் உறங்கும் பல சமயங்களில் நிக், ஜாயுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய துயரார்ந்த கதாபாத்திரமான ஜாய் வெளிப்படுத்த வேண்டிய அத்தனை உணர்வுகளையும் மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தித் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டார் லார்சன். அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதுதான் அவருடைய தனிச் சிறப்பு.

தனது துறை நடிப்புதான் என்பதை ஆறு வயதிலேயே முடிவு செய்துவிட்டார் லார்சன். 1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று கலிஃபோர்னியா மாகாணத்தின் ஸேக்ரமெண்டோ என்னுமிடத்தில் பிறந்தார். நடிப்புத் துறையில் முன்னேற வேண்டும் என்னும் தனது கனவு கைகூட வேண்டும் என்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குத் தன் தாயுடனும் சகோதரியுடனும் குடியேறியவர் அவர். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2003-ல் டிஸ்னியின் தொலைக்காட்சிப் படமான ‘ரைட் ஆன் ட்ராக்’கில் நடித்தார். பாடகியாக அவதாரமெடுத்த லார்சன் 2005-ல் தனது ஆல்பமான ‘ஃபைனலி அவுட் ஆஃப் பி.இ.’யை வெளியிட்டார். சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை அது பெற்றது. 2006-ல் வெளியான ‘ஹூட்' படத்தில் இவரது நடிப்பு பெரிய கவனத்தைப் பெற்றது.

தொடர்ந்து ‘க்ரீன்பெர்க்' (2010), 21 ‘ஜம்ப் ஸ்ட்ரீட்' (2012) உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரது நடிப்புக்குத் தீனி போட்ட படமாக ‘ஷார்ட் டேர்ம் 12’ அமைந்தது. அந்தப் படத்தில் அவர் விமர்சகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்தப் பயணத்தில் முத்திரை பதிக்கும் வகையில் அமைந்துவிட்டது ரூம் திரைப்படம். சிறிய அறையில் வாழும் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாகிவிட்டார் லார்சன்.

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

குங்பூ பாண்டா 3: கரடியின் தொடரும் அதிரடி!

(தி இந்துவில் 26.02.2016 அன்று வெளியானது)


‘குங்பூ பாண்டா’ அனிமேஷன் படம் 2008-ல் வெளியானது. உடல் பருத்த போ என்னும் பாண்டா கரடியின் வீர சாகச அட்டகாசம் உலகமெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து ‘குங்பூ பாண்டா-2’ திரைப்படம் 2012-ல் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த ‘குங்பூ பாண்டா’ வரிசைப் படங்களில் மூன்றாம் படமான ‘குங்பூ பாண்டா-3’ அமெரிக்காவிலும் சீனாவிலும் ஜனவரி 23 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் சாகசக் காட்சிகள் நம்ப முடியாத வகையிலான அதிசய உலகத்தை நமது கண் முன்னே கொண்டுவருகின்றன. ஜனவரி 19 அன்று வெளியான இந்தப் படத்தின் டிரெயிலரே நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இதுவரை இந்த டிரெயிலரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவரக்கூடிய வகையிலேயே இந்த ‘குங்பூ பாண்டா’ படமும் இருக்கிறது. ஜோனாதன் ராபர்ட் எய்பெல், கிளன் பெர்கர் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை ஜெனிபர் யூ நெல்சன் அலெஸாண்ட்ரோ கர்லானி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ‘குங்பூ பாண்டா-3’ படத்துக்கு ஜேக் ப்ளாக், ப்ரயான் க்ரான்ஸ்டன், டஸ்டின் காஃப்மேன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தன் இனத்தில் தான்தான் கடைசி வாரிசு என நம்பும் பாண்டா கரடியான போ, தன் தந்தையைக் கண்டுபிடிக்கிறது. பாண்டாவின் பூர்விகக் கிராமத்துக்குப் போவை அழைத்துச் செல்கிறார் தந்தை. அப்போது போவும் அதன் நண்பர்களும் பாதுகாத்துவந்த அமைதிப் பள்ளத்தாக்கு, எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறது. தப்பிப் பிழைத்த போர் வீரர்கள் போவைத் தேடிச் செல்கிறார்கள் என்று போகிறது கதை.

ஏற்கெனவே வெளியான ‘குங்பூ பாண்டா’ படங்களைப் போலவே இந்தப் படமும் முழுப் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 145 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கலக்கலான கிராஃபிக்ஸ் காட்சிகளை 3 டி எஃபக்டில் உருவாக்கியிருக்கிறார்கள். ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனமும், ஓரியண்டல் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் படத்தை விநியோகிக்கிறது. இந்தியாவில் இந்தப் படம் மார்ச் 10 அன்று வெளியாகவிருக்கிறது. அனிமேஷன் பட ரசிகர்கள் தவறவிட மாட்டார்கள் என்பதை ட்ரைலரே உறுதிசெய்கிறது.

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

இயேசுவின் பால்ய காலம்!

(2016 பிப்ரவரி 19 அன்று தி இந்துவில் வெளியானது)


இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் பெரும் வரவேற்பு எப்போதுமே இருக்கிறது. இந்த வரவேற்பை அவ்வப்போது ஹாலிவுட் அறுவடை செய்துகொள்கிறது. அந்த வகையில் இயேசு பற்றிய புதிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்று மார்ச் 11 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஏழு வயதான இயேசு மிகப் பெரிய ஆன்மிக ஆளுமையாக உருவானது வரையான சம்பவங்களின் சித்திரிப்புகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. ‘த யங் மெஸையா’ என்னும் பெயர் கொண்ட இந்த ஹாலிவுட் படம் ஆன் ரைஸ் (Anne Rice) என்னும் எழுத்தாளரின் ‘கிறிஸ்ட் த லார்டு: அவுட் ஆஃப் ஈஜிப்ட்’ என்னும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவின் ஏழு வயதில் அவரது குடும்பம் எகிப்திலிருந்து மீண்டும் நாசரேத்துக்கு வந்த பின்னர் இயேசு எதிர்கொண்ட சம்பவங்களின் புனைவுக் காட்சிகள் திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. தனது பிறப்பு குறித்த மர்மத்தை அறிய இயேசு விருப்பம் கொள்கிறார். பரலோகப் பிதாவின் மகனாக இயேசு இருந்தபோதும் பிற குழந்தைகளிலிலிருந்து அவர் எப்படி மாறுபட்டார், அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட போராட்டங்கள், தனது படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல் எனப் படத்தின் பயணம் அமைகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி, ‘த பாத் ஆஃப் 9/11’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைரஸ் நௌராஸ்டேக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். குழந்தைப் பருவம் முதல் பருவ வயதுவரை இயேசு கொண்டிருந்த இறை நம்பிக்கையைப் பரிசுத்த வேதாகமம் எப்படிச் சித்தரிக்கிறதோ அப்படியே யதார்த்தமாக இந்தப் படமும் சித்தரிப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இயேசுவின் கதையைப் புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் தங்கள் முயற்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்றும் இயக்குநர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆடம் கிரீவ்ஸ் நீல், சீன் பீன், டேவிட் ப்ராட்லி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘த பேஷன் ஆஃப் ஜீசஸ் கிறைஸ்ட்’ திரைப்படத்துக்கு இசையமைத்த ஜான் டெப்னி இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஜோயல் ரான்சம் எனும் ஒளிப்பதிவாளர். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் பருவ வயது வரையான வாழ்க்கைப் பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் அது அதிகமாகத் திரையில் வெளிப்படவில்லை என்பதாலும் இந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

விலங்குகளுக்காக ஒரு மாநகரம்!



ஹாலிவுட்டின் அனிமேஷன் படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றவை. அதிலும் வால்ட் டிஸ்னியின் தயாரிப்பு என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்க வல்ல அனிமேஷன் படங்களைத் தயாரிப்பதில் மன்னர்கள் அவர்கள். அந்த வரிசையில் வெளிவர இருப்பதுதான் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸின் பிரம்மாண்ட 3 டி அனிமேஷன் படமான ஸூடோபியா (Zootopia).

இந்தப் படத்தில் விலங்குகளான ஒரு நகரம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஸூடோபியா என்னும் இந்த நகரத்தைப் போன்ற ஒரு நகரத்தை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. குளு குளு என்ற இந்த நகரத்தில் எந்தச் சூழலிலிருந்து வரும் விலங்கும் தங்க இயலும். பெரிய விலங்கு சிறிய விலங்கு என்ற பேதமற்று அனைத்தும் ஒன்றாக வசிக்கும் சூழல் இங்கு உள்ளது. மனிதர்கள் வசிக்கும் நகரத்தைப் போன்றே இந்த நகரத்திலும் காவல்துறை துறை உண்டு. காவல்துறை துறை அதிகாரியான ஜுடி ஹாப்ஸ் என்னும் முயலுக்கு விலங்குகளைக் கட்டி மேய்ப்பது சாதாரண வேலையில்லை என்பது தெரிகிறது. ஒரு முக்கியமான வழக்கைத் துப்புதுலக்க வேண்டிய தேவையும் வருகிறது அவருக்கு. இப்படிப் போகிறது கதை.

ஜுடி ஹாப்ஸுக்குப் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் குட்வின் குரல் தந்திருக்கிறார். கான் ஆர்டிஸ்ட்டான நிக் வைல்ட் என்னும் நரிக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேஸன் பேட்மேன் குரல் கொடுத்திருக்கிறார். பைரோன் ஹவார்டு, ரிச் மோர் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். விலங்குகளின் சாகச விளையாட்டுகளைப் பார்க்கத் தயாரானவர்களுக்காக மார்ச் 3 அன்று 3டியிலும் திரைக்கு வருகிறது ஸூடோபியா.

பிப்ரவரி 12 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

சும்மா அதிருதுல்ல...!


பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணிப் படங்களை உருவாக்குவது ஹாலிவுட்டுக்குக் கைவந்த கலை. வெள்ளை மாளிகைமீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படமாக 2013-ல் வெளியானது ஒலம்பஸ் ஹேஸ் ஃபாலன் என்னும் திரைப்படம். இரண்டு மடங்குக்கு மேல் வசூலை வாரிக் கொடுத்த இந்த ஹாலிவுட் படத்தின் தொடர்ச்சியாக வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது லண்டன் ஹேஸ் ஃபாலன் என்னும் ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்.

இங்கிலாந்து பிரதமரின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அனைவரும் அங்கே திரண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அங்கே வருகை தந்திருக்கும் உலகத் தலைவர்களை ஒழித்துக்கட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. லண்டன் நகரமே போர்க்களம் போல் மாறிவிடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத திகில் நிமிடங்களில் மூழ்கிக் கிடக்கிறது லண்டன். அமெரிக்க உளவுத் துறையுடன் இணைந்து பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் பெரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்கிறார்.

அமெரிக்க அதிபருக்கு பிரிட்டிஷ் உளவுத் துறையும் உதவுகிறது. ஆனால் பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஏஜெண்ட் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் அந்தப் பொறுப்பை எப்படி எதிர்கொள்கிறார்? தாக்குதல் திட்டம் வெற்றிபெறுகிறதா? தலைவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்களை ஆக்‌ஷன் கலந்து த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர் பபேக் நஜாபி. ஈரானில் பிறந்த பபேக் சுவீடனில் அகதியாகத் தஞ்சமடைந்தவர்.

அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் மைக் பேனிங் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லர். அமெரிக்காவின் அதிபராக நடிகர் ஏரோன் எக்ஹார்டும் துணை அதிபராக நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் வேடமேற்றிருக்கிறார்கள். 10.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் டிரெயிலர் வெளியானது இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள். இது வெறும் டிரெய்லர்தான் அதைப் பார்த்தாலே சும்மா அதிருது எனும்போது மெயின் பிக்சரைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பிப்ரவரி 5 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஜனவரி 31, 2016

மறுபடியும் ஒரு டைட்டானிக்?


கடல், கப்பல் இவற்றுடன் காதலையும் இணைத்து படமாக்கப்பட்ட ‘டைட்டானிக்’ போல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அநேக திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன. அந்த வரிசையில் வரும் மற்றொரு ஹாலிவுட் படம் ‘த ஃபைனஸ்ட் ஹவர்ஸ்’. அமெரிக்க எழுத்தாளர் கேஸி ஷெர்மன் எழுதிய ‘த ஃபைனஸ்ட் ஹவர்ஸ்’ என்னும் நாவல் 2009-ல் வெளியானது.

1952-ல் கேப் காட் என்னும் கடலோரப் பகுதியில் கடும் புயலில் எஸ் எஸ் ஃபோர்ட் மெர்ஸர், எஸ் எஸ் பெண்டில்டன் என்னும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மாட்டிக்கொண்டன. இவற்றில் மாட்டிக்கொண்டவர்களைக் கடலோரப் பாதுகாப்பு படையினர் எப்படி மீட்டனர் என்பதை இந்த நாவலில் கேஸி ஷெர்மன் சித்தரித்திருந்தார்.

இந்தக் கதைக்கு ஸ்காட் சில்வர், எரிக் ஜான்சன், பால் தாமஸி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை நேர்காணல் செய்து அதன் அடிப்படையில் திரைக்கதையை செழுமைப்படுத்தியுள்ளனர்.

ஜாவியர் அகிர்ரெஸ்ரோப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஆஸ்திரேலியா இயக்குநர் கிரிக் கில்லஸ்பி இயக்கியிருக்கிறார். கோயன் பிரதர்ஸ் படங்களில் அதிகமாக இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் கார்டர் பர்வெல் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

க்ரிஸ் பைன், கேஸி அஃப்ளெக், பென் ஃபோஸ்டர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வால் டிஸ்னி பிக்சர்ஸும், விடேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். மாசாசுஸெட்ஸ் மாகாணத்தின் குய்ன்ஸி நகரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பதைத் தொடங்கி நடத்தியுள்ளார்கள்.

கடும் புயல்.. சுழன்று சுழன்று வீசும் காற்றுக்கு நடுவில் தாறுமாறாக எகிறும் அலைகளில் மாட்டிக்கொண்ட கப்பல்கள் உள்ளே கடல் நீர் அதிவேகத்தில் புகுந்துவிட்ட நிலையில் அது முழுவதும் மூழ்குமா தப்பிக்குமா என்னும் பதைபதைப்பை உருவாக்கும் வகையில் படம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். துணிச்சலுடன் மீட்புப் படையினர் மேற்கொள்ளும் சாகச சம்பவங்களும் பயணிகளின் பரிதவிப்பும் ரசிகர்களை வியப்பின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்திவிடும்போல.

இசையும் படமாக்கமும் தந்திருக்கும் தத்ரூபத்தால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் புயலில் மாட்டிய கப்பல்கள் நம் கண் முன்னே மீண்டும் ஆழிப் பேரலையில் மாட்டிக்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. டிரெயிலரைப் பார்க்கும்போதே நடுக்கடலில் கடும் புயலில் மாட்டித் தவிப்பது போன்ற உணர்வு வருகிறது. முழுப் படமும் பார்த்தால் 1952- ம் ஆண்டுக்கே போய்விடுவோம் என்றுதான் தோன்றுகிறது.

ஜனவரி 29 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஜனவரி 17, 2016

துரோகத்தை வென்றவன்


ஜனவரி 10 அன்று 73-வது கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் கலக்கல் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ டிராமா பிரிவின் சிறந்த நடிகர் விருதை வென்றிருந்தார். அவருக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்திருந்த ‘த ரெவனன்ட்’ திரைப்படம் வேறு இரு விருதுகளையும் பெற்றிருந்தது. டிராமா பிரிவின் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அது சிறந்த இயக்குநருக்கான விருதை ‘அமோரஸ் பெரஸ்’, ‘21 கிராம்ஸ்’, ‘பேபல்’, ‘பேர்ட்மேன்’ போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றிருக்கும் அலெஹாண்ட்ரோ இன்யாரீட்டூவுக்கு வாங்கித் தந்திருந்தது.

கடந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்த உடன் ஹாலிவுட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இந்தப் படத்தின் மீது விழுந்துவிட்டது. டிகாப்ரியோவின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பைக் காணத் திரையரங்குகளுக்குப் படையெடுக்கிறார்கள் அவர்கள். இது ஒரு பழிவாங்கல் கதைதான். அதுவும் 1820-களில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘மாண்டவன் மீண்டு வந்தால்’ என்பதுதான் படம் சொல்லும் கதை! மைக்கேல் புங்கே என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதி 2002-ல் வெளியான ‘த ரெவனன்ட்: எ நாவல் ஆஃப் ரிவஞ்ச்’ என்ற நாவலுக்கு மார்க் எல் ஸ்மித்தும் இயக்குநர் இன்யாரீட்டூவும் இணைந்து திரைக்கதை அமைத்திருந்தார்கள். டிகாப்ரியோவுடன் டாம் ஹார்டி, வில் பவுல்டர் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த வேட்டைக்காரரான ஹுயுக் க்ளாஸ் வேடத்தை ஏற்று நடித்திருக்கும் டிகாப்ரியோவின் நடிப்பு ரசிகர்களை மெய்மறக்கச் செய்கிறது. துரோகத்தை எதிர்கொண்டு துணிச்சலுடன் போராடும் நாயக பாத்திரத்தை டிகாப்ரியோவின் செறிவான நடிப்பு பன்மடங்கு உயர்த்திவிட்டிருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் அவருக்கு கோல்டன் க்ளோப் விருதும் கிடைத்திருக்கிறது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள் ரசிகர்கள். டிகாப்ரியோ, டாம் ஹார்டி ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் வரவேற்றுள்ளார்கள் என்பது படத்தின் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.

கடுங்குளிர் பிரதேசத்தில் பிரயத்தனத்துடன் படப்பிடிப்பை நடத்தி முடித்திருந்த இயக்குநரின் மனதை இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் விருதுகள் குளிரவைத்துவிட்டன. விருதுகளால் மகிழ்ந்த இன்யாரீட்டூ “வலி தற்காலிகமானது; திரைப்படமோ என்றென்றைக்குமானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டிருப்பவர் கிராவிட்டி, பேர்ட்மேன் ஆகிய படங்களுக்காக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள இம்மானுவேல் லுபெஸ்கி.

ஜனவரி 15 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஜனவரி 03, 2016

தேசிய விளையாட்டுக்குள் ஒரு திகில்!


கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்காவில் வெளியாகியிருக்கும் ஹாலிவுட் படம் கன்கஷன் (Concussion). அமெரிக்காவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தப் படம். பீட்டர் லேண்டெஸ்மேன் இயக்க ஹாலிவுட்டின் ஆற்றல்மிக்க நடிகர் எனச் சொல்லப்படும் வில் ஸ்மித் நடித்திருக்கும் இந்தப் படம் விளையாட்டு வீரர்களைத் தாக்கக்கூடிய வியாதியான சிடிஇ பற்றி விவாதிக்கிறது. சிடிஇ என்பது தலைமீது ஏதேனும் தொடர்ந்து வலுவாக மோதுவதால் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியால் உருவாகும் ஒருவித நோய். இந்த நோயைக் கண்டறிந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த நோயியல் நிபுணரான டாக்டர் பென்னெட் ஒமாலு.

டாக்டர் பென்னெட் ஒமாலுவின் வேடத்தைத்தான் வில் ஸ்மித் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கிறார். டாக்டர் பென்னெட் ஒமாலு அமெரிக்க தேசியக் கால்பந்துக் கழகத்துக்குப் பெரும் சவாலாக இருந்தவர். விளையாட்டு வீரர்களுக்கு மூளையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய அவருடைய ஆய்வை முடக்குவதற்கான முயற்சியை அமெரிக்க தேசியக் கால்பந்து கழகம் மேற்கொண்டது. ஏன்? அமெரிக்காவின் தேசிய விளையாட்டு கால்பந்து. அமெரிக்க தேசியக் கால்பந்துக் கழகம் ஆண்டுதோறும் ஏராளமான வருமானத்தை ஈட்டுகிறது. 2013-ம் ஆண்டு அது ஈட்டிய வருமானம் 9 பில்லியன் டாலர் என்று புள்ளிவிவரம் ஒன்று குறிப்பிடுகிறது.

ஆனாலும் தனது முயற்சியில் தளராத டாக்டர் சிடிஇ பற்றிய தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்தார். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பயோபிக் வகை திரில்லராக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் இந்தியாவில் 2016 பிப்ரவரி 5 அன்று வெளியாக இருக்கிறது.

அமெரிக்க தேசியக் கால்பந்தாட்ட வீரர்களில் 96 சதவீதத்தினருக்கு சிடிஇ வியாதிக்கான அறிகுறி இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் அமெரிக்கப் பெற்றோர்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் சிடிஇ பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இப்படியான பல சுவாரசியமான, அதிர்ச்சிதரத்தக்க சம்பவங்களைக் கதைக்களமாகக் கொண்ட கன்கஷன் இங்கேயும் அத்தகைய அதிர்ச்சிகளை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்.

ஜனவரி 1 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

இயேசுவின் உடலைத் தேடி...


இயேசு கிறிஸ்துவையும் பரிசுத்த வேதாகமத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் அநேகப் படங்கள் வந்துள்ளன. இயேசுவின் அற்புதங்களைப் புகழ்ந்தும் விமர்சித்தும் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன என்பது கடந்த கால வரலாறு, அந்த வரிசையில் வெளிவர இருக்கும் புதிய ஹாலிவுட் திரில்லர் படம் ‘ரைஸன்’.

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையற்ற ஒருவரின் பார்வையில் இந்தப் படம் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்ன இந்தப் படத்தில் இருக்கிறது என்ற எண்ணமே இப்படத்தின் மீதான சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் நடைபெறும் நிகழ்வுகளைச் சம்பவங்களாகக் கொண்டது இப்படத்தின் திரைக்கதை. க்ளேவியஸ் என்னும் ரோமத் தளபதியும் அவனுடைய உதவியாளனான லூஸியஸும் இயேசுவின் மர்மங்களைக் கண்டறியப் புறப்படுகிறார்கள். ரோம ஆளுநர் பொந்தி பிலாத்து இவர்கள் இருவரையும் காணாமல் போன இயேசுவின் உடலைக் கைப்பற்ற அனுப்புகிறான். அவர்களது நோக்கம் இயேசு உயிர்த்தெழுதல் சாத்தியமற்றது என்பதை நிரூபிப்பதும், ஜெருசலேமில் புரட்சி எழாமல் தடுப்பதுமே ஆகும். இதில் அவர்கள் வெற்றிபெற்றார்களா, இயேசுவுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஹாலிவுட் இந்தப் படத்தை முடக்க திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தாலேயே இப்படம் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகவில்லை என ஜீஸஸ் டெய்லி என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. சோனி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்று வெளியிடுவதாலேயே இதைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கப்போகிறது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தப் படத்தை, 1984-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘ரெட் டான்’ படத்தின் திரைக்கதாசிரியரும் ‘வாட்டர் வேர்ல்டு’ (1995) திரைப்படத்தை கெவின் காஸ்னருடன் சேர்ந்து இயக்கி கவனம் பெற்றவருமான கெவின் ரெனால்ட்ஸ் இயக்கியிருக்கிறார். ரைஸன் படத்தின் கதையைப் பால் அயலோ எழுத திரைக்கதையை கெவின் ரெனால்ட்ஸும் பால் அயலோவும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஜோஸப் ஃபைன்ஸ் ரோமத் தளபதி வேடத்தையும், அவருடைய உதவியாளர் வேடத்தை டாம் ஃபெல்ட்டன் என்னும் நடிகரும் ஏற்றிருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சைகளை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் உருவாவதையே தடுக்க முயன்ற ஹாலிவுட், படம் வெளியான பின்னர் என்ன எதிர்வினையை ஆற்றுமோ என்னும் திகிலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரில்லராக இப்போதைக்கு ரைஸன் அமைந்திருக்கிறது.

டிசம்பர் 25 தி இந்து நாளிதழில் வெளியானது

செவ்வாய், டிசம்பர் 15, 2015

மரணம் தண்டனையா, வெகுமதியா?



செல்மா ஜெஸ்கோவா செக்கோஸ்லோவியால் பிறந்தவள். பிழைப்புக்காக அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவள். அவளது வாழ்வில் துயரங்களுக்குப் பஞ்சமில்லை. முதல் பாதியில் வாழ்வுடன் போராடும் செல்மா இரண்டாம் பாதியில் மரணத்துடன் போராடுகிறாள். வாழ்க்கை போல் மரணம் அவள் மீது குரூரத்தைப் பிரயோகிக்கவில்லை. மரணம் அவளை வாஞ்சையுடன் ஆரத் தழுவிக்கொள்கிறது. அவளது துக்கங்களிலிருந்து விடுதலை தருகிறது. இதுதான் செல்மாவின் கதை. இதைத் தான் டான்ஸர் இன் த டார்க் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையர்.

டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையர். இவர் திரைக்கதையாசிரியரும்கூட. தனது பதினோறாவது வயதிலேயே படமெடுக்க ஆரம்பித்துவிட்டார். மன அழுத்தம், விமானத்தில் செல்லப் பயம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயம் போன்ற மனநலப் பாதிப்புகளால் உளவியல் நெருக்கடிகளை வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் தொடர்ந்து சந்தித்துவந்திருக்கிறார் இவர்.  ‘நான் எல்லாவற்றுக்கும் பயப்படுவேன் ஆனால் படமெடுப்பதற்கு மட்டும் பயப்படுவதேயில்லைஎன்று ஒருமுறை இவர் கூறியிருக்கிறார் என கார்டியன் பத்திரிகையில் ஒரு குறிப்பு வெளியாகியிருக்கிறது. அவர் தெரிவித்திருப்பது போல் படமெடுக்க அவர் பயப்படுவதில்லை என்பதை இப்படம் உறுதிப்படுத்துகிறது. 1977-ம் ஆண்டு படமெடுக்கத் தொடங்கியிருந்த இவரது டான்ஸர் இன் த டார்க் திரைப்படம் 2000-ஆவது ஆண்டில் கேன் படவிழாவில் முதலில் திரையிடப்பட்டுத் தங்கப்பனை விருதை வென்றிருக்கிறது. இப்படம் திரையிட்டு முடிந்த பின்னர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் ஆதரவையும் பாராட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இப்படத்தின் சிறப்புக்கான சான்று. இவரதுபொன்னிதய முப்படங்களில் மூன்றாவது படம் இது. முதல் படம் பிரேக்கிங் த வேவ்ஸ் (1996), இரண்டாம் படம் த இடியட்ஸ் (1998). இப்படங்களின் நாயகிகள் பரிசுத்த இதயம் படைத்தவர்கள். நல்லொழுக்கத்தையும் தூய அன்பையும் வெளிப்படுத்துபவர்கள்.


இவர் டச்சு இயக்குநர் தாமஸ் விண்டர்பெர்க்குடன் இணைந்து டாக்மீ 95 என்னும் திரைப்பட இயக்கம் ஒன்றை 1995-ஆம் ஆண்டில் நிறுவினார். பாரம்பரியமான பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட மண்சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிகர்களின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவரும் உத்திகளைக் கையாண்டும், திரைப்படமாக்கலில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கைவிட்டும் படங்களை உருவாக்க வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் கொள்கை. திரைப்படமாக்கலை ஒரு தொழிலாகக் கொள்ளாமல் அதை ஒரு கலையாக வளர்த்தெடுக்க இந்த இயக்கம் விரும்பியது. முடிந்தவரை செயற்கை அரங்குகளைத் தவிர்த்து வெளியிடங்களிலேயே படப்பிடிப்பை நிகழ்த்துவது, அவசியமற்ற விளக்குகளையும் இசையையும் தவிர்ப்பது, கேமராவைக் கையிலே சுமப்பது, 35 எம்.எம். படச்சுருளிலேயே படமெடுப்பது எனப் பத்து விதிமுறைகளை இவர்கள் பிரகடனமாகவே அறிவித்தார்கள். இந்தக் கொள்கைகளைக் கைக்கொண்டு படங்களை உருவாக்கவும் செய்தார்கள். டான்ஸ் இன் த டார்க் டாக்மீ 95 படமல்லஆனால் அந்தப் படமாக்கல் அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்ட படம்.

இந்தப் படம் இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையரின் பின்னணியைத் தெரிந்துகொள்ளத் தூண்டும். ஏனெனில் இதன் படமாக்கத்தில் காணப்படும் புதுமையான கலைத் தன்மை ஒரு சாதாரண மனநிலை கொண்ட இயக்குநரால் இந்தப் படத்தை உருவாக்கியிருக்க முடியாது என்னும் எண்ணத்தைத் தந்துவிடுகிறது. படத்தின் நாயகியான செல்மா வேடமேற்றிருப்பவர் ஒரு தொழில்முறை நடிகையல்ல. அவர் ஓர் இசைக் கலைஞர், பெயர் பியர்க். அயர்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்துவருபவர். ஆனால் இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த சிறப்பான நடிப்பு கான் திரைப்பட விழாவில் அவருக்கு விருதைப் பெற்றுத் தந்திருந்தது என்பதை இங்கே நினைவுகொள்ள வேண்டும்.  


ஓய்வுவேளைகளில் செல்மா அமெச்சூர் நாடகம் ஒன்றில் பங்குகொள்கிறாள். அவளது வாழ்க்கையே ஒரு அமெச்சூர் நாடகம் என்பதை இயக்குநர் காட்சிகளின் மூலம் சொல்லாமல் சொல்கிறார். அவளது துயரத்தைத் துடைக்க தொழிற்சாலையில் அவளுக்கு ஒரு தோழி கிடைக்கிறாள். அவளது பாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஆண் தோழன் ஒருவன் கிடைக்கிறான். அவன் செல்மாவையே பிரியத்துடன் சுற்றிச் சுற்றிவருகிறான். ஆனால் அதற்கான மனநிலை தனக்கு இல்லை எனக் கூறி அவனைத் தன் பாதையிலிருந்து விலக்கிவிடுகிறாள் செல்மா.

நெருங்கிய நண்பனே தன் வாழ்நாள் லட்சியத்துக்கான சேமிப்பைத் திருடிவிடுகிறான். அதை மீட்கும் முயற்சியில் அவள் கொல்லப்படுகிறான். அதுவும் அவன் வேண்டுகோளின் படியே. தன் மனைவியின் அபரிமிதமான செலவு காரணமாக வாழ்வின் இழிநிலைக்குச் செல்ல நேரிடும் சூழலில் தனக்கு மரணமெனும் விடுதலை கோரி இறைஞ்சுகிறான். இரக்கப்படுகிறாள் அவள். அவனது கோரிக்கைக்குச் செவிமெடுக்கிறாள். சட்டம் தன் கடமையைச் செய்ய வந்துவிடுகிறது. எந்தச் சூழலிலும் தன் ரகசியத்தை வெளியிட்டுவிடக் கூடாது என அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவள் நடந்துகொள்கிறாள். உண்மையைச் சொல்லியிருந்தால் தூக்குக் கயிறு அவள் கழுத்தை இறுக்கும் தேவை ஏற்பட்டிருக்காது. மரணத்தைவிட அதிக வாதையை அவள் உணரும்படியாக அவளது முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியிருக்க மாட்டார்கள். மரணத்தை ஏற்றுக்கொள்ளத் துணிந்த அவளால் அந்தத் துணி மூடலைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் எல்லாம் சட்டப்படியே நடக்க வேண்டும் என்பதால் அவளை அப்படியே தூக்கிலிடுகிறார்கள். மரண தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்ட பல அப்பாவிகளின் முகங்கள் நமக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது. அந்த துயரமான ஞாபகங்களைக் கிளறுவதால் இது நமது மன அமைதியைக் குலைக்கிறது. அதனாலேயே இதை நல்ல படம் என்று சொல்ல நேர்கிறது.


செல்மா வாழ்வின் துயரங்கள் எல்லாவற்றையும் இசையிலும் நடனத்திலும் கரைக்கிறாள். வாழ்வை இயல்பாக எதிர்கொள்கிறாள். அவளது பார்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. பார்வை பறிபோவதால் அவள் எதிர்கொள்ளும் இன்னல்களை எளிய காட்சிகள் மூலம் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். பார்வைக் குறைவு காரணமாக தொழிற்சாலையில் அவள் செய்யும் சிறிய தவறால் விரலில் காயம் ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் காட்சியின் பின்னணியிசை ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சிறிது நாட்களில் பார்வை முழுவதும் பறிபோய்விடும் நிலையில் வேலையையும் அவள் பார்வைக்குறைவு காரணமாக இழக்கிறாள். துயரமான நினைவுகளை மனதில் தேக்கி இல்லத்துக்கு வந்தாலோ அவள் சேமித்த பணம் காணாமல் போயிருக்கிறது. தன்னிடம் ரகசியத்தைச் சொல்லிச் சென்ற தன் நண்பன் ரகசியமாக பணத்தைத் திருடிவிட்டதை உணர்ந்துகொள்கிறாள் செல்மா.

தன் சந்தோஷத்தைத் தள்ளிவைத்துவிட்டு மகனைத் துன்பச் சேற்றிலிருந்து மீட்டுவிடத் துடிக்கும் அவளது தாய்மைத் துடிப்புக்கு வாழ்வில் என்ன பொருள் இருக்கிறது? வாழ்வையே தொலைத்து மகனின் கண் அறுவை சிகிச்சைக்காக ஏன் பணத்தைச் சேர்க்க வேண்டும்? மகனுக்குக்கூட அதைத் தெரியாமல் ஏன் மறைக்க வேண்டும்? இந்த அபலைப் பெண் ஏன் இப்படி அபத்தமாக நடந்துகொள்கிறாள்? இத்தகைய பல கேள்விகளைப் படம் உருவாக்குகிறது. இந்தக் கேள்விகளை எல்லாம் உணராவிட்டால் இது ஒரு மெலோட்ராமா என எளிதாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். 1964-ல் அமெரிக்காவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட டான்ஸர் இன் த டார்க்திரைப்படத்தை மேலோட்டமாகப் பார்க்கும் யாரும் அதை மெலோட்ராமா எனச் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நிதானமாக யோசித்தால் அப்படியான வகைக்குள் இப்படத்தை அடக்க முடியாது என்பது புரிபடும். படமாக்கத்தில் இயக்குநர் கையாண்டிருக்கும் கலைநுட்பம் மிகுந்த உத்தியே இப்படத்தை வேறுபடுத்திக்காட்டுகிறது. இந்தப் படத்தை ஓர் இசைப் படமாக இயக்குநர் தந்திருப்பதே அவரது துணிச்சலின் அடையாளம்தான். ஏனெனில் ஓர் இசைப் படத்துக்குரிய துள்ளலோ அளப்பரிய ஆர்ப்பாட்டமோ இந்தப் படத்தில் இல்லை. இது ஒருவகையில் துன்பவியல் திரைப்படமே. ஆனால் துயரம் வழிந்தபோதும் இந்தப் படம் ஒரு கலாபூர்வ சிருஷ்டியாகப் பரிணமிக்கிறது. திரைப்படத்தின் அபத்தம் எனச் சொல்லப்படும் பாடல்கள் இப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஒருவகையில் வாழ்வின் அபத்தங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தன் நண்பனைத் தானே கொல்ல நேர்ந்த அபத்த சூழலை எதிர்கொண்ட நிலையில் செல்மா பாடும் பாடல் அவளது மனோநிலையை மிகத் தெளிவாக விளக்கிவிடுகிறது. அது ஒருவிதமான கருணைக் கொலை. ஆனாள் அதற்கான தண்டனை அவளுக்கு மரணம். கண் பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் செல்மா மகனை அந்த நோயிலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கிறாள். அதற்காக அவள் மரண தண்டனையைக் கூட ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அதை அவள் எதிர்கொண்டவிதம் அரசின் சட்ட திட்டங்களை எள்ளி நகையாடுகிறது. அடப் போங்கடா நீங்களும் உங்களின் சட்டதிட்டமும் எனச் சொல்லவைத்துவிடுகிறது.


செல்மா தன் நெருங்கிய நண்பனைச் சுட்டுக்கொன்றதால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வழக்கு விசாரணையின் போது அவள் ஓர் உண்மையைச் சொல்கிறாள். ஒரு பொய்யைச் சொல்கிறாள். அதே நேரத்தில் ஓர் உண்மையை மறைத்துவிடுகிறாள். உண்மை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொய்யோ அம்பலப்பட்டுவிடுகிறது. 2,056 டாலர்கள் 10 செண்ட் பணத்துக்காகத் தன் நண்பனை அவள் கொலைசெய்துவிட்டாள் என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது. அவள் ஒரு கம்யூனிஸ்ட் அனுதாபி என்று நம்பும் நீதிமன்றம் அவளுக்கு மரண தண்டனையும் வழங்குகிறது. ஆனால் அது அவளது பணம்ஹாலிவுட் படங்கள் தான் அவளுக்குச் சிறுவயது முதலே நிம்மதியைத் தந்துவந்தது. ஹாலிவுட் படங்களில் பார்த்தைப் போன்றே அமெரிக்காவும் வளம் தரும் எனும் நம்பிக்கையில் தான் செல்மா அங்கே வந்திருந்தாள். துன்பங்களால் துரத்தப்பட்ட அவள் அடைக்கலம் தேடி அமெரிக்கா வந்தாள். அமெரிக்க நீதிமன்றம் அவளுக்கு மரணம் மூலம் நிம்மதி அளித்துவிட்டது. ஆனால் இப்படத்தின் அடிநாதமான கேள்வி பார்வையாளர்களின் நிம்மதியைக் குலைத்துவிட்டது. அங்கேதான் இப்படம் ஒரு கலைப்படைப்பாகவும் பரிணாமம் கொள்கிறது. செல்மாவின் வாழ்வின் மூலம் நமது வாழ்வு குறித்த கேள்விகள் மேலெழும்புகின்றன. இந்தப் படத்தைப் பார்த்து முடித்த பின்னர் உங்களால் நிம்மதியாக உறங்கிவிட முடியாது. உங்களது மூளையைப் பிறாண்டிக்கொண்டேயிருக்கும் இந்தப் படம். சிறந்த படத்துக்கு வேறென்ன இலக்கணம் வேண்டும்?   

நண்பர் முரளியின் அடவி இதழில் வெளியான விமர்சனக் கட்டுரை இது. 

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

திரையரங்கில் பாய்ந்த வெள்ளம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தப் பெரு மழையால் திரண்டுவந்த தண்ணீரால் நிரம்பி வழிந்தது செம்பரம்பாக்கம் ஏரி. முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஏரியின் வெள்ள நீர், அடையாற்றின் கரைகளை மீறி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வெள்ளத்தையே கண்டறியாத கரையோர வசிப்பிடங்களை நள்ளிரவில் புகுந்த வெள்ள நீர் ஆக்கிரமிப்பு ராணுவம்போல் முற்றுகையிட்டது. மக்கள் போகுமிடமின்றி வீடுகளில் சிறைப்பட்டனர்.


தண்ணீர், பால், உணவு போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மக்கள் அல்லல்பட்டார்கள். கூவம் ஆற்றிலும் இதே நிலைதான். சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தின் மேலே தண்ணீர் ஓடியது. அந்தக் காட்சிகளின் தொகுப்பைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது ஹாலிவுட் படத்தை அது மிஞ்சிவிட்டது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சும்மா சொல்லக் கூடாது, நமது தொலைக்காட்சி அலைவரிசைகளும் தங்களது மொத்த வித்தையையும் காட்டி ஒரு திகில் பட எஃபக்டைக் கொடுத்தன. இப்படிப்பட்ட பேரழிவுகளை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்…

நோவா காத்த உயிர்கள்


நோவா என்னும் அமெரிக்கத் திரைப்படம் 2014-ம் ஆண்டில் வெளியானது. டாரன் அரனொவ்ஸ்கி இயக்கிய இந்தப் படம். உலகம் அதி பயங்கர வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்தபோது, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நோவா, ஒரு பேழையை (கப்பலை) உருவாக்குகிறார். அதில் விலங்குகள் பறவையினங்களின் ஒரு ஜோடி உயிர்களைக் காப்பாற்றி வைத்து உலகில் உயிர்கள் அழியாமல் பார்த்துக்கொண்டார் என்பது பைபிளில் வரும் கதை. அதையே திரைக்கதையாக்கியிருக்கிறார் அரனொவ்ஸ்கி, பள்ளியில் படித்த காலத்திலேயே அவரைக் கவர்ந்திருக்கிறது இந்த பைபிள் கதை.

13 வயதில் உலகத்தின் அழிவை நோவாவின் கண்களால் பார்த்து, கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் அவர். படம் பண்ணும்போது நோவாவின் கதையைத் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதைப் படமாக எடுத்து வெளியிட்டார் அவர். ரஸ்ஸல் குரோ நோவாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். சுமார் 125 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டபோது அது வெளியான திரையரங்கில் வெள்ளம் பாய்ந்தது. திரையரங்கின் ஐஸ் மெஷினில் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டது.

புயலில் சிக்கிய கப்பல்



‘டிராய்’ படத்தை இயக்கிய வோல்ஃப்கேங் பீட்டர்ஸன் இயக்கி, 2000-ல் வெளியான திரைப்படம் ‘த பெர்ஃபெக்ட் ஸ்ட்ராம். 1991-ம் ஆண்டில் வட அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் புயலின்போது வட அட்லாண்டிக் கடலில் ஆண்ட்ரியா கெய்ல் என்னும் மீனவப் படகில் மாட்டிக்கொண்ட மீனவர்களைப் பற்றிய கதை இந்தப் படம். பிடித்த மீன்களோடு புயலையும் கடுமையான அலைகளையும் துணிச்சலோடு எதிர்கொண்டு கரைக்குத் திரும்பும் நம்பிக்கையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் அதனால் ஏற்பட்ட போராட்டமுமே இந்தப் படம்.

இயக்குநர் மிருகங்களை வதைக்கக் கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட எந்த மீனும் இயற்கையான மீன் அல்ல. அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஜார்ஜ் க்ளூனி இந்தப் படத்தில் கேப்டன் பில்லி டைன் என்னும் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆண்ட்ரியா கெய்ல் கப்பல் உரிமையாளர்கள் தங்களிடம் உரிமை பெறாமல் தங்கள் பெயரைப் பயன்படுத்தியதாக படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்கள்.

சுனாமியில் சிதறிய குடும்பம்


இந்தியப் பெருங்கடலில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுனாமி ஏற்பட்டது. அப்போது தாய்லாந்தின் கடற்கரை நகருக்கு விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த மரியா பெலான் என்பவரது குடும்பம் சுனாமியில் சிக்கி அவதிப்பட்ட கதையை ‘த இம்பாஸிபிள்’ என்னும் பெயரில் படமாக்கியிருந்தார் இயக்குநர் யுவான் அண்டோனியோ பயோனா. உண்மைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மரியா இந்தப் படத்தின் படமாக்கல் முழுவதுமே உடனிருந்திருக்கிறார். நடந்த சம்பவத்தை அவர் விவரித்ததன் அடிப்படையிலே படம் காட்சியாக்கப்பட்டிருந்தது. ஆழிப் பேரலை கடற்கரையின் ரிஸார்டைப் புரட்டிப் போட்ட காட்சிகள் அனைத்துமே ஒரு முறைதான் படமாக்கப்பட்டன. அந்த செட்டை அமைக்கச் செலவு அதிகமானதால் மறுபடியும் படமாக்க முடியவில்லை.

பூமியைத் தாக்கும் நட்சத்திரம்


பேர்ல் ஹார்பர், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற பல கலக்கல் ஹாலிவுட் படங்களின் மூலம் நன்கு அறியப்பட்ட மெக்கேல் பே இயக்கிய படம் ‘ஆர்மகெடான்’. பூமியின் மீது சிறிய கோள் ஒன்று மோத உள்ளது என்பது நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குத் தெரிய வருகிறது. அந்தத் தாக்குதலிலிருந்து புவிப் பந்தைக் காப்பாற்ற விண்வெளி வீரர் குழு ஒன்றை நாசா அனுப்புகிறது. இந்தப் பின்னணில் பரபரவென நகரும் படம்தான் இது. சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம், நல்ல விமர்சனங்கள், அட்டகாசமான வசூல் என்று எல்லா விதங்களிலும் சாதித்த இந்தப் படங்கள் தவிர ‘டீப் இம்பாக்ட் (1998), ‘எர்த்குவேக் (1974), அவுட்பிரேக் (1995), த ஹேப்பனிங் (2008), 2012 (2009), வோல்கனோ (1997), த டே ஆஃப்டர் டுமாரோ (2004), ஏர்ஃபோர்ட் (1970), டுவிஸ்டர் (1996)… என அநேக படங்கள் பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

நம்பிக்கை தரும் கதைக்களம்

இயற்கைச் சீற்றங்களால் பேரழிவுக்குள்ளாகும்போது வாழ்க்கை என்றால் என்னவென்று உணர நாம் முற்படுகிறோம். வாழ்க்கை குறித்த விடை தெரியாத எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் அறிய நாம் விரும்புகிறோம். அப்படியொரு வாய்ப்பை இயற்கைச் சீற்றங்கள் நமக்கு வழங்குகின்றன. அவற்றால் ஏற்படும் பேரழிவு அதோடு சம்பந்தப்படாதவர்களுக்கும் வாழ்வு குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. நாம் தப்பிவித்துவிட்டோம் நம்மை இறைவன் காப்பாற்றிவிட்டார் என அவர்கள் நம்புகிறார்கள்.

அதனால்தான் பேரழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களை உலக அளவில் ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அவையும் பெரிய அளவிலான வெற்றியைப் பெறுகின்றன. அத்தகைய படங்களைப் பார்க்கும்போது, அவற்றின் கதாபாத்திரங்கள் படும் துன்பத்தை ஒப்பிடும்போது, நமது துயரம் அதைவிடப் பெரிதல்ல என்னும் எண்ணத்தையும் பாதுகாப்பே இல்லாத இந்த உலகத்தில் நமக்குச் சிறிதளவாவது பாதுகாப்பு கிடைக்கிறதே என்ற எண்ணத்தையும் அவை தருகின்றன என்கிறார் அமெரிக்க உளவியல் பேராசிரியர் டாக்டர் ஜூலி நோரம்.

டிசம்பர் 11 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்