இந்த வலைப்பதிவில் தேடு

நட்சத்திர நிழல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திர நிழல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 22, 2021

நட்சத்திர நிழல்கள் 11: ஏந்திழை சின்னத்தாயி

தமிழில் எத்தனையோ கிராமத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவற்றில் கிராமத்தின் வாழ்க்கை அப்படியே பதிவானதில்லை. திரைப்படக் கூறுகள் அதிகமாகவே இடம்பெற்றுவிடும். அப்படியான சினிமாக்களில் கிராமம் இருக்கும் ஆனால், நாம் பார்த்த வாழ்க்கை அதுவாக இருக்காது. தெற்கத்திய சிற்றூர் ஒன்றின் மனிதர்களது வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவுபண்ணிய மிகச் சில படங்களில் ஒன்று சின்னத்தாயி.

ஆறுமுக மங்கலத்து சுடலை மாட சாமியின் அருள் வந்து ஆடும் சாமியாடியின் மகன் பொன்ராசாவுக்கும் ஊரின் கடைக்கோடியில் வாழும், பாவப்பட்ட ஜென்மமாக ஊர் கருதும் ராசம்மாவின் மகள் சின்னத்தாயுக்குமான காதல்தான் படத்தின் தூல நரம்பு. அந்த நரம்பில் எந்த நாளும் வாடிப்போகாத மலர்களைக் கோத்து அழகான மாலையாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் S.கணேசராஜ். வாலியின் வரிகளில் உருவான கோட்டையை விட்டு, நான் ஏரிக்கரை மேலிருந்து போன்ற பாடல்கள் வழியாக மட்டுமே அதிகமாக அறியப்பட்டிருக்கும் திரைப்படம் இது. இதன் சிறப்புகள் இளையராஜாவின் இசை, பாடல்கள் மட்டுமேயல்ல; அதன் உருவாக்கம். கிராமத்தின் அரிதான கணங்களை, மனத்தால் மட்டுமே பார்க்க முடிந்த துணுக்குச் சம்பவங்களை எல்லாம் இணைத்துப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. 

ஒரு நல்லநாளு திங்க நாளு இல்லாமல் எல்லா நாட்களையும் காவு கேட்கும் குடும்ப உறவுச் சிக்கல்களின் அடிநாதமான தாம்பத்தியத்தின் தடுமாற்றம், சாதிய வாழ்வின் சதிராட்டம், பக்தி என்னும் சரக்கில் மதிமயங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்க்கை ஆகியவை அதில் ரசனையான சினிமாவுக்கு வாக்கப்பட்டிருந்தன. சினிமாவுக்கான கூறும் சராசரி வாழ்க்கையின் ஜீவனும் சரியான விகிதத்தில் கலந்திருந்த படம் சின்னத்தாயி.

இயக்குநர் S.கணேசராஜின் முதல் படம். அவள் அப்படித்தான் படத்துக்காக நினைவுகூரப்படும் ருத்ரய்யா போல இந்த ஒரு படத்தின் காரணமாகவே தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றைக்கும் நினைவுகூரப்பட வேண்டியவர் அவர். இது போக இன்னுமொரு படத்தை இயக்கியிருக்கிறார். அது மாமியார் வீடு. இரண்டு படங்களை இயக்கிவிட்டு இந்த உலகத்திடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஆனால், வெள்ளித்திரையில் அவரது பெயரைப் பொன்னெழுத்தில் எழுதியிருக்கும் சின்னத்தாயி, அவரை  நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.    

ஆண்களின் அடங்காக் காமத்தாலும் தீராக் கோபத்தாலும் வேட்டையாடப்படும் பெண்களின் துயரமிகு வாழ்வைச் சொல்லும் படம் இது. படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் சின்னத்தாயிதான். பத்மஸ்ரீ என்னும் நடிகை இந்த வேடத்தை ஏற்றிருந்தார். சின்னத்தாயின் தாய்க்குக் கணவனே இல்லை. சின்னத்தாயின் தந்தை  யாரென்பது அவளுக்குத் தெரியாது. அதனாலேயே ஊராரின் பழிச் சொல்லுக்கு ஆளாகியவள் ராசம்மா. பாரதி பாடலைப் பாடிய பாகவதனிடம் மனதைப் பறிகொடுத்து அவனது கருவை வயிற்றில் வாங்கிக்கொண்ட புண்ணியவதி அவள். குழந்தையைக் கொடுத்த காதலனோ அவளை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டுப் பாதியிலேயே சென்றுவிட்டான். அவளுக்கு ஆதரவு தந்த சாமுண்டியோ வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாக அவளைப் பயன்படுத்திக்கொண்டான். அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு வீட்டை அமர்த்தி அதில் ராசம்மாவையும் சின்னத்தாயியையும் தங்கவைத்துக்கொண்டான். ராசம்மாவைக் கட்டிலில் கொஞ்சத் தெரிந்த அவனுக்கு அவளைக் கண்ணியமாக நடத்தத் தெரியவில்லை. 

ஊரிலுள்ள பெண்களின் கழுத்தில் தொங்குவதைப் போன்ற கயிறு  மட்டும் ராசம்மாவின் கழுத்தில் கிடந்திருந்தால் அவள் ஊர் வாயில் விழுந்திருக்க மாட்டாள். பின்வாசலில் வந்து உதவிபெற்றுச் செல்லும் பெண்கள்கூட முன்வாசலில் வந்து அவளை வசைபாடும் வாழ்க்கை அவளுக்கு அமைந்திருக்காது. தனது வாழ்க்கை சீரழிந்த போதும் தன் மகளின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைந்துவிட வேண்டும் என்பதால் சின்னத்தாயியைக் கறிவேப்பிலைக் கொத்து போல் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தாள்.

பருவத்தின் பூங்காற்று சின்னத்தாயையும் பொன்ராசுவையும் ஒருசேரத் தழுவியது. அமைதியற்ற வீடு அவளுக்குத் தராத மகிழ்ச்சியை பொன்ராசுவின் நேசம் தந்தது. எல்லை மீறும் கிளைகளை வெட்டிவிடலாம். நிலத்தடி நீர் எல்லை தாண்டாமல் எப்படித் தடுப்பது? மனம் ரணப்பட்ட ஒரு பொழுதில் எமனைச் சந்திக்க வந்த சின்னத்தாயை மன்மதனின் அம்பு தாக்கியது. மனிதர்கள் இல்லாத அந்தப் பொழுதில் பொன்ராசையும் சின்னத்தாயையும் அப்போது பெய்த மழை ஒன்றுசேர்த்தது. மழையைச் சாட்சியாகக் கொண்ட அந்த உறவு அழுத்தமானது என்பது அறுபது நாட்களுக்குப் பிறகு புரிந்தது. 

சுடலை மாட சாமியின் அருள் வந்து வேட்டைக்குப் போகும் வீர முத்து நாயக்கரின் எதிரே பெண்கள் வந்தால் சாமி கொன்றுவிடும் என்பது நம்பிக்கை. சில உயிர்களை சாமி காவு வாங்கியிருக்கிறது என்பதற்குச் சான்றுண்டு. எனவே பெண்கள் சாமிக்கு எதிரே வரப் பயப்படுவார்கள் ஆனால், மகளின் வாழ்க்கைக்காக வேட்டைக்குவந்த சாமியின் எதிரே துணிச்சலுடன் போய் நீதி கேட்கிறாள் ராசம்மா. தன் மகனின் வாரிசு ராசம்மா மகளின் வயிற்றில் வளரும் சேதி கேட்டு விக்கித்துப்போய் நிற்கிறார் வீர முத்து நாயக்கர். சுடலை மாட சாமியின் அருளை மீறி அவரைத் தாக்கிவிடுகிறது யதார்த்தம். பாரம் தாங்காமல் வண்டி குடைசாய்வது போல் மனப் பாரம் தாங்காமல் நிலைதடுமாறி வீழ்கிறார் குறிசொல்லும் பொழுதில். 

பட்டணத்தில் படித்து குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய மகன் காதலில் வீழ்ந்து கழுத்தறுத்துவிட்டானே எனக் குமைகிறார். சின்னத்தாயி விவகாரத்தை மகனிடம் மறைத்து அவனைத் தந்திரமாகப் படிக்க அனுப்பிவிடுகிறார். ராசம்மாவைத் தேடி வரும் சாமுண்டியை வளர்ந்து நிற்கும் சின்னத்தாயி உறுத்துகிறாள். விபரீதத்தை உணர்ந்த ராசம்மா சாமுண்டியைத் தடுக்கிறாள். ஆனால், அறிவற்ற காமம் முறையற்றுப் பாய முற்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ராசம்மாவின் உயிர் பிரிகிறது. சாமுண்டிக்காக உடலைத் தந்த ராசம்மா சின்னத்தாயிக்காக உயிரையும் தந்துவிட்டாள். சாமியாடிக்குத் தப்பிய அவள் சாதாரணக் கத்திக்கு மடிந்துவிடுகிறாள்.   

ஊரே ஒன்றுகூடி ராசம்மாவின் மரணத்தை சட்டத்தின் முன் மறைத்து சாமுண்டியைக் காப்பாற்றிவிடுகிறது. ஆனால், சின்னத்தாயி சட்டத்தின் கதவுகளைத் தட்டி சாமுண்டிக்குத் தண்டனை பெற்றுத் தந்துவிடுகிறாள். தனி வீட்டிலிருந்து குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள். இப்போது பொன்ராசு மீண்டும் கிராமத்துக்கு வருகிறான்; தந்தை சாமியாட முடியாத சூழலில் சாமியாடியாக வருகிறான். வேட்டைக்கு வரும் சுடலைமாட சாமியாக வருகிறான். எதிரே  குழந்தையும் கையுமாக வந்து நிற்கிறாள் சின்னத்தாயி. தெய்வமாக ஊருக்குள் போகவா மனிதனாக மாறி ஊரை விட்டுப் போகவே என்று முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் பொன்ராசு சரியான முடிவெடுக்கிறான். சின்னத்தாயுடன் அவன் ஊரைவிட்டு வெளியேறுகிறான். வேட்டைக்குச் சென்ற சாமி மனிதனான கதை தெரியாமல் சாமிக்காக அந்த ஊர் காத்திருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட மனிதர் மீது  பரிவு கொள்வதும் விலக்கிவைக்கப்பட்ட மாந்தர் மீது கரிசனம் கொள்வதுமே  கலைக்கு அழகு. அந்த வகையில் சின்னத்தாயி கலையின் அழகு மகள்.

செவ்வாய், ஜூன் 18, 2019

நட்சத்திர நிழல்கள் 10: பொய்யாகப் போகாத பொட்டுக்கன்னியின் காதல்

பாஞ்சாலங்குறிச்சி


இயேசு கிறிஸ்து தன் சீடர்களுடன் படகில் சென்றுகொண்டிருந்தார். கடலில் பெருங்காற்று வீசியது. அலையின் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் கொந்தளிப்பு படகைத் தலைகுப்புறக் கவிழ்த்துவிடுமோ எனப் பயப்பட்டார்கள் சீடர்கள். இயேசுவோ நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். உயிருக்குப் பயந்த சீடர்கள் படபடப்புடன் இயேசுவை எழுப்பினார்கள். நிலைமையை அறிந்த இயேசு சீடர்களின் விசுவாசமற்ற தன்மையை உணர்ந்து வேதனை அடைந்தார். தான் உடனிருந்தும் சீடர்கள் பயப்படுகிறார்களே என்ற எண்ணம் அவருக்கு. அவர் சத்தம் போட்டுக் கடலை அடக்கினார். படகு சீராகச் சென்றது என்பதெல்லாம் இயேசு குறித்துச் சொல்லப்படும் கதை. 

கடவுள் தன்மை கொண்டவர் என்று அறியப்படுவர் மீதான நம்பிக்கையே சிலவேளைகளில் தகர்ந்துவிடும்போது, சாமான்ய மனிதர்கள்மீதான நம்பிக்கை எவ்வளவு தூரம் தாங்கும்? ஆனால், சிலருக்குச் சிலர்மீது அசாத்திய நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையைக் குலைக்கவோ சிதைக்கவோ முடியாது. அவராக மாற்றிக்கொள்ளாதவரை அந்த நம்பிக்கையை வெளியிலிருக்கும் ஒருவரால் மாற்ற முடியாது. ஏன் அப்படியொரு நம்பிக்கை என்பது நம்பிக்கை கொண்டவருக்கே வெளிச்சம். அப்படியான அசைக்க முடியாத நம்பிக்கையை கிட்டா(ன்) மீது பொட்டுக்கன்னி வைத்திருந்தார். காதலின் வேரைப் பற்றிப் பிணைத்திருந்தது அந்த நம்பிக்கை. 

சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ (1996) திரைப்படத்தில் பொட்டுக்கன்னியை மதுபாலாவின் உருவத்தில் பார்த்திருக்கிறோம், பொட்டுக்கன்னி கிட்டா மீது உயிரையே வைத்திருந்தாள். பொட்டுக்கன்னியுடைய தந்தை ஒரு கீதாரி. கிடைபோட்டுக் கிடைத்த  வருமானத்தில் அவரும் பொட்டுக்கன்னியும் பிழைத்துவந்தார்கள். தனக்கு ஆதரவாக இருந்த தந்தையின் மீது பொட்டுக்கன்னி எவ்வளவு பாசம் வைத்திருந்தாளோ அதற்கீடான பிரியத்தை கிட்டா மீது வைத்திருந்தாள் ஆனால், கிட்டாவுக்கோ அந்த ஊர் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே முதன்மையாகப் பட்டது. தன் தாயை இழந்துநின்ற நேரத்தில் ஆறுதலும் தேறுதலும் தந்த அய்யாவின் கௌவரத்தையும் அந்த ஊர்ப் பெண்களின் மானத்தையும் காப்பதே தனது தலையாய கடமை என்று எண்ணி வாழ்கிறான். அய்யாவின் மீது அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்வளவுக்கும் அவன் அய்யா வீட்டின் பண்ணையாள்தான். நிஜத்தில் பண்ணையாளை முதுகொடிய வேலை வாங்குவதுதான் பண்ணையார்களின் செயல். ஆனால், திரைப்படத்தில் அவர் சாந்தசொரூபியாக வாராதுவந்த மாமணியாகத் தோற்றம்கொள்கிறார். இப்படியான பண்ணையாரையும் பணியாளையும் திரையில் பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சிகொள்கிறார்கள். 


அந்த ஊரின் எந்தப் பெண்ணையும் காதலியாகப் பார்ப்பதே தவறு என்று கிட்டா நினைக்கிறான். அவனை நம்பி பொண்ணுபுள்ளைகளை அனுப்பும் ஊருக்குச் செய்யும் துரோகம் அது என்று நம்புகிறான். அது ஒருவகையில் அறியாமைதான். ஆனால், அவனது நினைப்பை அவனால் மாற்றிக்கொள்ள இயலவில்லை. பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டவன் என்பதால்தான் பொட்டுக்கன்னியும் அவனை விரும்புகிறாள். தன் காதலை பொட்டுக்கன்னி சொன்னபோது, கிட்டா அதை மறுத்துவிட்டான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை; அது உணர்வுபூர்வமானது. அந்தக் காரணத்தைக் கேட்ட பிறகு, பொட்டுக்கன்னியாலும் அவனை வற்புறுத்த இயலவில்லை.

யதார்த்தத்தில் கிடைப்பதற்கரிய பொக்கிஷம் கிட்டா. அப்படியொருவர் இருக்கப்போவதுமில்லை. எனவே, அவனையே நினைத்து அவள் வாழ்கிறாள். அவன் குறித்தான கற்பனைகளிலும் ஆசைகளிலும் நாட்களை நகர்த்திவந்தாள். பொய்யாய்ப்போன காதலின் கதகதப்பில் காலங்கடத்துகிறாள். துணையாக இருந்த தகப்பனையும் அவன் ஆசையாக வளர்த்த கால்நடைகளையும் ஊரின் பகை தின்று செரித்துவிடுகிறது. ஒத்தையில் வாடும் ரோசாவாக பொட்டுக்கன்னி அந்த ஊரில் வளைய வருகிறாள். அவள் மனம் மயங்கும் பொழுதுகளில் கிட்டாவின் அரூபத் தோளில் சாய்ந்துகொண்டு ஆறுதலடைகிறாள். கிட்டாவைத் தவிர வேறு யாரையும் மணமுடிக்க அவளுக்கு மனமில்லை. ஆகவே, அய்யா அவளது திருமணம் தொடர்பாக எடுத்த முயற்சிகளும் அவளுக்குப் பெரிய அளவில் உவப்பளிக்கவில்லை. 

இதெல்லாம் திரைப்படங்களிலும் கதைகளிலுமே சாத்தியம். இப்படியான அபத்தமான விளையாட்டுகளில் நிஜ வாழ்வில் பெண்கள் ஈடுபடுவதில்லை. ஆனால், கதாபாத்திரங்களைப் புனிதமானவர்களாகக் கட்டமைக்கும்போது அதைப் பார்த்து ரசிப்பதில் பார்வையாளர்களுக்கு ஒரு பிரியம். ஏனெனில் உலகத்தில் நேரடியாக அப்படியொருவரை நம்மால் காண முடியாதே. காண முடியாதவற்றைக் காணவைக்கும் சினிமாவைத்தானே ரசிக்க முடியும். 

அய்யா என்னதான் நல்ல மனிதராக இருந்தாலும் அவருக்கும் பகை இருக்கும் தானே? அவருடைய உறவுக்கார காளிச்சாமிதான் அவருக்குப் பகை மனிதர். அவர் பிறவியெடுத்ததன் நோக்கமே அய்யாவை வெற்றிகொள்ளத்தான். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவன் அவன். அய்யாவின் செல்ல மகள் அலமேலு நாச்சியார். அவளுடைய காதலும் பொட்டுக்கன்னியின் காதலைப் போலவே நம்பிக்கையெனும் நரம்பில் கோக்கப்பட்டது. எல்லோருடைய நம்பிக்கைகளும் பலிப்பதில்லையே.

காளிச்சாமியின் தமையன் மலைச்சாமியைக் காதலிக்கிறாள் அலமேலு. பகைவர் மீது பருவப் பெண்கள் காதல் கொள்வது ஒன்றும் புதிதில்லையே. அலமேலுவின் நம்பிக்கையைக் கானல் நீராக்கிவிடுகிறான் அவன். காதலின் சுகம் விபரீத எல்லையைக் கடக்க தாய்மையின் நுழைவாயிலில் நிற்கிறாள் அலமேலு. மலைச்சாமியோ அவளைக் கரம்பற்றத் தயங்குகிறான். இது எதுவும் அறியாத குடும்பத்தினர் அலமேலுவுக்கு மற்றொருவருடன் மண ஏற்பாட்டை நடத்துகிறார்கள். விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி உயிரைப் போக்கிக்கொள்ள விழைகிறாள் அலமேலு. 


திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் கருத்தரித்தால் ஊரார் வாய்க்கு வந்ததைப் பேசுவார்கள்; குடும்ப மானம் போய்விடுமென்று எந்த கோமகன் சொன்னாரோ தெரியவில்லை. திருமணத்துக்கு முன்னர் பெண் கருத்தரித்தாலும் ஊர்பேசும்; திருமணத்துக்குப் பின்னர் பெண் கருத்தரிக்காவிட்டாலும் ஊர்பேசும் என்றால் சிக்கல் ஊராரிடம் தானே?  கருத்தரித்தல் வெறும் அறிவியல்சார் உடலியல் நிகழ்வு  எனும்போது அதை ஏன் பண்பாட்டுடன் முடிச்சிட்டுவைத்திருக்கிறார்கள்? 

விஷயம் கிட்டாவுக்குத் தெரியவருகிறது. அய்யாவின் கௌரவம் சந்தி சிரித்துவிடுமே எனப் பயப்படுகிறான். சண்டைக்காரரின் காலில் சென்று விழுகிறான். அய்யாவுக்குத் தெரியாமலே அய்யாவின் பிரிய மகளின் சிக்கலைத் தீர்க்க முயல்கிறான். ஆனால், அதில் அவனே சிக்கிக்கொள்கிறான். அலமேலுவின் நிலைமைக்குக் கிட்டாதான் காரணமென அய்யா புரிந்துகொள்கிறார். அவனை எல்லோரும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்குகிறார்கள். அந்த ஊரில் அவனை நம்ப ஒருவருமே இல்லாத சூழலில் கிட்டான் இந்தத் தவற்றைச் செய்திருக்க மாட்டான் என பொட்டுக்கன்னி மட்டுமே நம்புகிறாள். அவனுக்குப் பக்கதுணையாக நிற்கிறாள். 

உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஊருக்குப் புரியவைத்துவிடுகிறான் கிட்டா. தன் தவற்றை நினைத்து வருந்துகிறார் அய்யா. ஆனால், தெய்வம் போல் நம்பிக்கை வைத்திருந்த அய்யா தன்னைச் சந்தேகப்பட்டதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை கிட்டாவால். இனியும் அந்த ஊரில் இருக்க அவன் மனம் ஒப்பவில்லை. தன்னை வாழவைத்த அந்த ஊரைவிட்டுத் தன்னைக் காதலித்த பொட்டுக்கன்னியின் கரம்பற்றி வெளியேறுகிறான். அய்யா மீது கிட்டா கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துப்போயிற்று; ஆனால் கிட்டாமீது பொட்டுக்கன்னி கொண்டிருந்த நம்பிக்கை அவளைக் காப்பாற்றியது.

திங்கள், ஜூன் 10, 2019

நட்சத்திர நிழல்கள் 9: தன்மானம் நிரம்பிய மாளிகை லதா

வசந்த மாளிகை


தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் மறக்கவியலாத படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் ‘வசந்த மாளிகை’ (1972). வணிகரீதியில் மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கட்டிய வசந்த மாளிகையும் இதன் பாடல்களும் நாயகி வாணிஸ்ரீயின் கொண்டையும் ரசிகர்கள் நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்பவை. ஆனால், இவற்றையெல்லாம்விட முதன்மையான அம்சம் வாணிஸ்ரீ ஏற்று நடித்த நாயகி கதாபாத்திரமான லதாவின் தன்மானம். எந்தச் சூழலிலும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காத லதாவின் பாத்திரச் சித்தரிப்பு சிறப்புக் கவனம் கொள்ளத்தக்கது. நமது ஆழ்ந்த மறதியின் அடியாழத்தில் மறைந்துகிடக்கும் அந்தச் சுயமரியாதைச் சுடரை இந்த வாரம் சந்திக்கலாம்.

‘வசந்த மாளிகை’ திரைப்படத்தின் கதை: அரெபாபூடி (கோடூரி) கௌசல்யா தேவி, வசனம்: பால முருகன். இயக்கம்: கே.எஸ்.பிரகாஷ் ராவ். லதா ஏழைக் குடும்பத்துப் பெண். ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவுக்கு முன்னரே குடும்பத்தின் பாரத்தைச் சுமந்துகொண்டவர். ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் தந்தை, தாய், கல்யாண வயதுத் தங்கை, படிக்கும் வயதில் தம்பி, தறுதலை அண்ணன், ஊதாரி அண்ணி ஆகியோரைக் கொண்ட அந்தக் குடும்பத்தைத் தனது வருமானத்தில் போஷித்துவருகிறார் லதா.

இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் நிலைதடுமாறும் விமானத்துக்குள் தள்ளாடியபடியே பாடியாடும் விஜய் ஆனந்தை விமானப் பணிப்பெண்ணான லதா சந்திக்கிறார். அழகாபுரி ஜமீன் குடும்பம் ஒன்றின் இளைய பிள்ளை விஜய் ஆனந்த். யாரையும் பார்த்தவுடன் நினைவில் கொள்ளும் வகையிலான மனிதரல்ல அவர். எப்போதும் தன்னை மதுவின் பிடியில் ஒப்படைத்துக்கொண்டு அதன் கதகதப்பிலேயே வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்க முயலும் வாலிபர் அவர். குடும்பப் பொறுப்போ வாழ்க்கை லட்சியமோ இல்லாதவர். இதற்கு நேரெதிரான குணம் கொண்டவர் லதா. அவர் மிகவும் பொறுப்பானவர். இவர்களிடையே காதல் ஏற்பட ஒரு தமிழ்ப் படத்துக்கு இந்த முரண் போதாதா?


ஆகாயத்தில் பறக்கும் ஆபத்து நிறைந்த வேலையை விட்டுவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தவே வேறு வேலை தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார் லதா. ஹோட்டல் ஒன்றில் வரவேற்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு வருகிறார் லதா. வந்த இடத்தில் மேலாளர் லதாவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முனைகிறார். நாயகியால் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்? நாயகிக்கோர் ஆபத்து எனும்போது நாயகன் வந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் திரைப்படத்தின் எழுதப்படாத விதியாயிற்றே. நாயகியின் மானத்தை நாயகன் தனது வீரத்தால் காப்பாற்ற வேண்டுமே. நிற்கவே இயலாத அளவு மூக்குமுட்ட குடித்துவிட்டுத் தள்ளாடும் ஆனந்த் வருகிறார். மேலாளரைப் புரட்டி எடுத்து லதாவைக் காப்பாற்றுகிறார். தனது ஓவர் கோட்டையும் அதிலிருந்த பணக் கட்டையும் விட்டுவிட்டு அப்படியே சென்றுவிடுகிறார். அவற்றை ஒப்படைப்பதற்காக மீண்டும் ஆனந்தைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது லதாவுக்கு.

இப்போது தனது மனங்கவர்ந்த மங்கையருடன் நீச்சல்குளத்தில் தண்ணியில் மிதக்கிறார் ஆனந்த். அங்கே வரும் லதா ஹோட்டலில் நடந்தவற்றை விளக்குகிறார். லதாவின் நிலைமையை உணர்ந்த ஆனந்த் தனது தனிச் செயலராக லதாவைப் பணியாற்றக் கோருகிறார். ஆனந்தின் நடவடிக்கைகளைச் சில சம்பவங்களால் அறிந்துகொண்ட லதா, தனது சுய மரியாதைக்குப் பங்கம் வராதவரை தன்னால் பணியாற்ற முடியும் என்று நிபந்தனை விதிக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்டு லதாவைச் செயலராகப் பணியில் ஆனந்த் சேர்த்துக்கொள்கிறார். 

அழகாபுரி ஜமீனுக்கு வரும் லதா, மது, மாது என அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் கண்டு திடுக்கிடுகிறார், தன்னால் அங்கே தொடர்ந்து பணியாற்ற முடியுமா எனப் பயப்படுகிறார். ஆனால், ஆனந்தின் பிரியத்துக்குரிய பணியாள் பொன்னையா, லதாவிடம் ‘ஆனந்த் கெட்டுப்போயிட்டாரே தவிர கெட்டவரில்லை’ எனச் சொல்கிறார். அதை லதாவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இதுவே லதா போன்ற ஒரு பெண்ணுக்கு ஆனந்திடம் இருப்பது போன்ற பழக்கவழங்கங்கள் இருந்தால், லதா கெட்டவரில்லை கெட்டுப்போயிட்டார் என்று சொல்லியிருப்பாரா? ‘கெட்டுப்போயிட்டார்’ என்ற சொல்லிலேயே சமூகம் எவ்வளவு அழுக்கை ஏற்றிவைத்திருக்கிறது?

ஆனந்துக்கும் அவருடைய அண்ணன் விஜய குமாருக்கும் பாகப்பிரிவினை செய்துவைக்க மகாராணி முடிவுசெய்யும்போது அதில் பாசம் என்னும் பெயரில் மோசம் இழைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து அதைத் தடுக்க உதவுகிறார் லதா. தான் ஏழை என்பதற்காகவோ தனது வேலை போய்விடும் என்பதற்காகவோ  பயந்துகொண்டு அதிகாரத்துக்கு ஒத்தூதும் வேலையைச் செய்யவில்லை லதா. தனது பொறுப்பைத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றிய லதாவை அரண்மனைவாசிகள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அதிலும் பெரிய குடும்பத்துப் பெண்ணான ஆனந்தின் அண்ணி லதாவின் மீது வன்மம் கொள்கிறார். 

அரண்மனையில் லதாவுக்கான முதல் சிக்கல் ஜமீனின் பணியாள் வடிவில் வருகிறது. குடிப்பதற்குப் பணம் கேட்கும் அவனது நடவடிக்கை பிடிக்காமல் பணம் தர மறுக்கிறார் லதா. அந்தத் தருணத்தில் லதாவிடம் கடுமையாக நடந்துகொள்கிறார் ஆனந்த். அவள் வெறும் வேலைக்காரப் பெண் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுயமரியாதைக்கு இழுக்க ஏற்பட உடனடியாகத் தன் வேலையை ராஜினாமா செய்கிறாள் லதா. பணக்கட்டுகளுடனும் ராஜினாமா கடிதத்துடனும் வந்து நிற்கும் லதாவிடம் ஆனந்த், “ஒண்ணு என்னோட அதிகாரம் இன்னொண்ணு உன்னோட அகம்பாவம் அப்படித்தானே” என்கிறார். பெண்ணிடம் வெளிப்படும் தன்மானத்தை அகம்பாவமாகவும் ஆணவமாகவுமே இந்தச் சமூகம் புரிந்துவைத்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு இந்த வசனம். ஆணின் சுயமரியாதையை விதந்தோதும் சமூகம் பெண்ணின் சுயமரியாதையைக் கீழாகப் பார்க்கும் அவலம் இன்றுவரை தொடரத்தானே செய்கிறது?


ஆனந்தின் குடிப்பழக்கம் குடும்பத்தில் அவருக்குக் கெட்ட பெயரை வாங்கித் தருவதை உணர்ந்து, அதிலிருந்தும் அவரை விடுவிக்கிறார். குடியை நிறுத்தி, தங்கள் நிலத்தில் விவசாயம் பார்க்கும் மனிதர்களுக்கும் நல்லது செய்யும் நிலைமைக்கு வந்துவிடுகிறார் ஆனந்த். பொறுப்பானவராக ஆனந்த் மாறியவுடன் அவருக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என மகாராணி விரும்புகிறார். ஆனால், ஆனந்த் லதாவைக் காதலிக்கிறார். அவருக்காகவே ஒரு வசந்த மாளிகையைக் கட்டி அதிலுள்ள கண்ணாடி அறையில் வைத்துத் தனது காதலை லதாவிடம் வெளிப்படுத்துகிறார். லதாவால் எப்படி மறுக்க முடியும்? இருவரும் டூயட் பாடுகிறார்கள்.

என்னதான் குணக்குன்றாக இருந்தாலும் ஏழைப் பெண் ஒருத்தியை எப்படி அரண்மனை ஏற்றுக்கொள்ளும்? அதன் அந்தஸ்து என்னவாகும்? லதா மீது திருட்டுப் பழி சுமத்துகிறார்கள். அதை ஆனந்தும் நம்பும்படியாக அந்த நாடகத்தை நடத்துகிறார்கள். ஆனந்தே லதா ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்டுவிடுகிறார். தான் நிரபராதி என்பதில் தனக்கிருக்கும் நம்பிக்கை ஆனந்துக்கு இல்லாததைக் கண்டு துடித்துப்போகிறாள். தனக்காக வசந்த மாளிகை கட்டிய ஆனந்த் என்பதை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, அந்த அரண்மனையிலிருந்து வெளியேறித் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்கிறார்.

எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்  என்பதற்கு உதாரணம் லதா. வசந்த மாளிகை ஒரு கேளிக்கைப் படம்தான், என்றபோதும் லதாவை நம்மால் மறக்க இயலாது.

செவ்வாய், ஜூன் 04, 2019

நட்சத்திர நிழல்கள் 8: அனுராதா பாடிய புதிய ராகம்



தமிழ்த் திரையுலகில் திரைப்படங்களை இயக்கிய பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆர்வத்திலும் ஆசையிலும் சிலர் ஓரிரு படங்களை இயக்கியுள்ளனர். அப்படியான ஆர்வத்துடன் படத்தை இயக்கியவர்களில் ஒருவர் ஜெயசித்ரா. துணிச்சலான நடிகை என அறியப்பட்ட ஜெயசித்ரா 1991-ல் வெளியான, தனது முதல் படமான ‘புதிய ராக’த்தில் அனுராதா என்னும் வேடத்தை ஏற்றிருந்தார். அதுவே பெரிய துணிச்சல்தான். இது போதாதென்று இந்தப் படத்தின் கதையை, திரைக்கதையை எழுதியதுடன் இயக்கித் தயாரித்துமிருந்தார்.

அனுராதா பேரும் புகழும் பெற்ற பெரிய பாடகி. சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டிருப்பார். அவருக்கு வாய்த்த துணைவன் அக்மார்க் கணவன். பெயர் ரகு ராமன். பெயர்தான் புராணக் கதாபாத்திரத்தின் பெயரே தவிர. அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான குணங்களைக் கொண்டவர் அவர். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மனைவியைச் சந்தேகப்படுவது மட்டுமே.

படத்தின் மையம் குடும்ப வன்முறைதான். அதற்கேற்றபடி குடும்பத்தில் அனுராதா சம்பாதித்துக்கொண்டே இருப்பார். ரகுராமனோ அதை வியாபாரத்தில் இழந்துகொண்டே இருப்பார். வியாபாரம் வியாபாரம் என்று சொல்வாரே தவிர அவர் எந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை யாராலும் கண்டுகொள்ள முடியாது. ரகுராமனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என்று சொல்லுமளவுக்குப் புகை, குடி, கள்ள நோட்டு, பெண்கள் என அவரது கைங்கர்யங்கள் மிகப் பரந்த தளத்திலானவை. பூமிமாதா போல் இவை எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வார் அனுராதா. காரணம் அவருக்கென்று யாரும் கிடையாது. வந்து வாய்த்தவன் இந்தப் போக்கிரித்தனமான கணவன் மட்டுமே. அவள் சாய்ந்துகொள்ளவும் தோள்வேண்டுமே? கணவன் எந்தத் தவறு செய்தாலும் தனக்கு நல்ல கணவனாக, தன்னிடம் பிரியமானவனாக நடந்துகொண்டால் மட்டும் போதும் என நம்பும் எண்ணற்ற மனைவிகளின் பிரதிநிதிகளில் ஒருவர்தான் அனுராதா. ஆனால், அப்படி எந்தக் கணவரும் நல்லவிதமாக நடந்துகொள்ளாதது போலவே ரகு ராமனும் நடந்துகொள்கிறார்.  

ராஜா என்னும் பாடகனை அனுராதா காதலித்திருப்பார். அவரையும் தியாகம் செய்துவிட்டுத் தான் ரகு ராமனைக் கைப்பிடித்திருப்பார். ராஜாவுக்காக அவருடைய முறைப்பெண் ஷீலா இருப்பார். இவர்கள் இணைய வேண்டுமென்றால் ராஜா வாழ்விலிருந்து அனுராதா விலக வேண்டுமே. ராஜாவின் பாட்டி அனுராதாவிடம் அந்தக் கோரிக்கையை வைக்க தன் காதலனை விட்டுக்கொடுத்து விலகிடுவார் அனுராதா. ஆக, அனுராதா காதலித்தவனை மணந்துகொள்ள முடியவில்லை; மணந்துகொண்டவனைக் காதலிக்க முடியவில்லை. இது அனுராதாவுக்கு மட்டுமே நிகழ்ந்த விபத்தில்லை. நூற்றுக்குப் பத்துப் பெண்கள்தாம் இந்த விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்கள்; ஏனையோர் இதில் சிக்கியிருக்கிறார்கள்.

ரகுராமன் மட்டுமே அனுராதாவைச் சுரண்டவில்லை. அவனுடைய குடும்பமே ஒட்டுண்ணியாய் அனுராதாவை உறிஞ்சுகிறது. அதை முடிந்த அளவு அனுராதாவும் அனுமதித்துக்கொண்டே இருக்கிறார். வேறென்ன செய்ய முடியும்? அவர் பெண்ணாயிற்றே? அனுராதாவின் பணப்பைகளை களவாடிய அந்தக் குடும்பம் அவருடைய கருப்பையைக் கூட விட்டுவைக்காது. அப்போதுதான் விழித்துக்கொள்கிறார். அப்போதும் விழித்துக்கொள்ளாவிட்டால் வாழும் வாழ்க்கைக்குப் பொருளே இருக்காதே. அதுவரை அவர் பாட்டுக்கு இழந்துகொண்டே இருப்பார். பொதுச் சபையில் கணவனை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். மனைவிகளுக்கே உரிய ‘பிறர் ஏதாவது நினைத்துக்கொள்வார்கள்’ என்ற தன்மையில் மூழ்கிப்போனவர்தானே அனுராதா. தன் வீட்டு விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு அசிங்கம் என்ற கொள்கையில் அனுராதா காட்டும் உறுதிப்பாடு வேறு. ஆகவே, அவர் பாடுவார்; சம்பாதிப்பார்; கோவிலுக்குப் போவார். கணவனின் கொடுமைகளை எல்லாம் சகித்துக்கொண்டிருப்பார். இந்த நாடகத்தை நடத்தும் கடவுள், கல்லாய் அமர்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். கிட்டத்தட்ட புராண காலத்தில் ஒரு பெண் அனுபவித்திருந்த கொடுமைகளை எல்லாம் அவர் தாராளமய காலத்தில் பொறுத்துக்கொண்டிருப்பார். கூடையில் வைத்து ரகுராமனைச் சுமந்துசெல்லவில்லை என்பது மட்டுமே குறை. அதற்குப் பதில் கார் இருந்தது. அது ராமனை எங்கெங்கும் சுமந்து சென்றது.  

கணவனின் கொடுமைகளால் வந்துசேர்ந்த துயரங்களால் சோர்ந்து போயிருந்த அனுராதா வாழ்வில் மீண்டும் ஒரு தென்றல் வீசத் தொடங்குகிறது. அவளது வாழ்வில் வாசம் சேர்க்க வந்துசேர்கிறான் ராஜா. அவளை அவளது துயரங்களிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய மன்னவன் அவனாகத்தானே இருக்க முடியும்? திருமண வாழ்க்கை அனுராதாவுக்கு அளிக்காத குழந்தை பாக்கியத்தை ராஜாவுக்குப் பெற்றுத் தந்த திருப்தியுடன் ஷீலா வானுலகம் சென்றுவிடுகிறாள். ஷீலா இருந்திருந்தால் அனுராதாவுக்கு அவன் எப்படிக் கைகொடுக்க முடியும்?  சமூகம் கேள்வி கேட்காதா? ராஜா மணமான பின்னர்கூட நல்ல குணங்களைக் கைவிடாதவன். காதலன் நேர்மையாளனாக, பிறர் துயரம் உணர்ந்தவனாக இருப்பதுதானே இயல்பு.

அனுராதாவின் வாழ்க்கைக்குள் ராஜா மீண்டும் வந்து சேர்ந்த பின்னர் ராமனுக்குச் சந்தேகம் வருகிறது. வராவிட்டால் அவன் எப்படி ராமன்? இல்லற வாழ்வின் கசப்பு தாங்க முடியாத முடை நாற்றத்துடன் வெளிப்படுகிறது. ஆனாலும், எதையும் ராஜாவிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அனுராதா. ஆனால், அனுராதாவின் இன்னல்களை அவனே அறிந்துகொள்ளும்படியான சூழல்கள் வாய்க்கின்றன. தன் செல்ல மகன் அனு மோகனை அனு என அழைக்கிறான் ராஜா. அவனை ஏன் மோகன் என அழைக்கக் கூடாது எனக் கேட்கிறான் ரகுராமன். அனுராதாவின் பிறந்தநாளன்று கூடக் கோவிலுக்கு அர்ச்சனைக்கு வஸ்திரம் வாங்கிவிட்டு வருவதாகச் சொன்ன ரகுராமன் வரவேயில்லை. எதேச்சையாக ராஜாதான் வஸ்திரம் வாங்கிவந்து ஆபத்பாந்தவனாக உதவுகிறான். அனுராதாவுக்குத் தன்னால் முடிந்த அளவு ஆறுதலாக இருக்கிறான் ராஜா. கணவனின் பொறுப்பற்ற தனத்தை முடிந்த அளவு சகித்துக்கொண்ட அனுராதாவால் அவன் சொத்துக்காகத் தனது கருப்பையையே அறுத்த களவாணித் தனத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆவேசத்துடன் அவனை நோக்கிக் கேள்வி கேட்கிறாள்.

ஆணை அதுவும் தொட்டுத் தாலி கட்டிய கணவனை எப்படிக் கேள்வி கேட்கலாம்? கொதித்துப்போன ரகுராமன் மங்கல வாத்தியம் முழங்க அவளது கழுத்தில் தான் கட்டிய தாலி இருக்கும் திமிரில் தானே இப்படிப் பேசுகிறாள் என்றெண்ணி மதிப்புமிக்க அந்தத் தங்கத் தாலியை அறுத்து எறிகிறான். அது நேராக அங்கிருந்த கழிப்பறையில் போய் விழுகிறது. அந்தக் கணத்தில் அனுராதாவின் தன்மானம் சட்டென்று விழித்துக்கொள்கிறது. இல்லையென்றால் பிழிந்து பிழிந்து அழுதுகொண்டிருந்திருப்பாள். சுயமரியாதை சுடர்விட்டதால் நீரைத் திறந்துவிட்டு மங்கலத் தாலியைக் கழிவுநீரில் மூழ்கடிக்கிறாள். அதுவரை வெறும் பதுமையாகத் திரிந்த அனுராதா புதுமைப் பெண்ணாகச் செய்த ஒரே உருப்படியான காரியம் இதுதான். தாலியே விலகிய பிறகு கணவனுக்கென்ன தனி மரியாதை. அவனைவிட்டு விலகி ராஜாவுடன் இணைகிறாள். வலைக்குத் தப்பி உலையில் வீழ்ந்ததுபோல் இந்தப் புதுவாழ்வும் அவருக்கு அமைந்திருந்திருக்கலாம். ஆனால், நலமாக அமையும் என்று நம்பியே இதைப் புதிய ராகம் என்கிறார் ஜெயசித்ரா. கணவன், காதலன், மகன் போன்ற ஆண் மக்கள் எல்லாம் ஒருநாளும் பெண்ணுக்கான வழித் துணையாக அமையப்போவதில்லை என்பதை அனுராதாக்கள் உணர்ந்துகொள்வதே அவர்களுக்கான விழிப்பாக இருக்கும்.

திங்கள், மே 27, 2019

நட்சத்திர நிழல்கள் 7: மேரி ஓர் இந்துப் பெண்

மிஸ்ஸியம்மா


தமிழ்த் திரைப்படங்களில் முன்னோக்கி நகர வேண்டிய பெண் கதாபாத்திரச் சித்தரிப்புகள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ளப் பழைய திரைப்படங்களைப் பார்த்தாலே போதும். முற்போக்கான பெண்களைப் பழைய திரைப்படங்களில்தான் காண முடிகிறது. 1955-ல் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் அப்படியொரு அதிசயமான பெண்ணை நம்மால் காண முடியும்.

எல்.வி பிரசாத் இயக்கத்தில் சாவித்திரி, ஆர்.கணேஷ் (ஜெமினி கணேசன்) நடிப்பில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தின் கதையையும் திரைக்கதையையும் எழுதியிருப்பவர் சக்ரபாணி. வசனத்தையும் பாடல்களையும் தஞ்சை ராமய்யாதாஸ் எழுதியிருந்தார். இந்துக் குடும்பத்தில் பிறந்த மகாலட்சுமி என்னும் சிறுமி நான்கு வயதில் மாசி மகத்தன்று கும்பகோணத்தில் தொலைந்துபோகிறார். இறை வழிபாட்டுக்கென்று போன இடத்தில் மகாலட்சுமியின் குடும்பத்தினர் குழந்தையைத் தொலைத்துவிடுகிறார்கள். கடவுளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பதினாறு ஆண்டுகளாகக் கடவுளுக்கும் வேறு வேலை போல. குழந்தையைக் குடும்பத்துடன் சேர்க்க அவரால் முடியவில்லை. தவறவிட்ட குழந்தை மகா லட்சுமியின் நினைவாக ஓர் ஆரம்பப் பள்ளியை நடத்திவருகிறார் அவளுடைய தந்தை. இந்த வேடத்தைச் செய்திருப்பவர் எஸ்.வி.ரங்காராவ்.

கழுத்தில் புலி நக மாலை அணிந்திருந்த சிறுமி மகாலட்சுமியின் வலது காலில் காசளவு மச்சம் ஒன்று உள்ளது. இந்தக் குழந்தையை நாம் அவளது இருபது வயதில் மேரியாகத் தான் சந்திக்கிறோம். கிறித்தவக் குடும்பத்தில் வளர்ந்த மகாலட்சுமி மேரியானதுடன் பி.ஏ. வரையான படிப்பையும் முடித்திருக்கிறார். அதே வேளையில் பெற்றோருடன் வசித்த மகாலட்சுமியின் தங்கை சீதாவோ பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை; சங்கீதம் கற்றுக்கொள்வதில் மட்டும் ஆர்வமாக இருக்கிறார். வீடுகளுக்குச் சென்று டியூசன் எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மேரி பெற்றோரைக் காப்பாற்றுகிறார். அவரது குடும்பத்துக்கு டேவிட் என்னும் மனிதன் கைமாற்றுக்குப் பணம் கொடுத்து உதவுகிறான். மேரியின் மீது அவனுக்குப் பயங்கரக் காதல். ஆனால், மேரியோ அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.


தன்னுடைய படிப்புக்கு உதவியவன் என்ற காரணத்துக்காக டேவிட்டை மனதாரக் காதலிப்பது போன்ற எந்த அபத்தத்திலும் மேரி ஈடுபடவில்லை. அவனிடம் பெற்ற பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறான் டேவிட். ஆனால், மேரியோ சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை; மனத்துக்குப் பிடிக்காத டேவிட்டைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என விடாப்பிடியாக நிற்கிறாள். இரண்டு மாதங்களில் அவனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதிபடத் தெரிவித்துவிடுகிறாள். மேரியின் தாய் தந்தையும் திருமணம் என்பது மேரியுடைய முடிவு என்று சொல்லிவிடுகிறார்கள். இந்தப் படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சமூகத்தில் இன்னும் இந்த நிலைமை வந்திருக்கிறதா? பெண்களின் திருமணத்தைப் பெண்களே முடிவுசெய்ய முடிகிறதா? அப்படி நடந்திருந்தாலே பல ஆவணக் கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்குமே? இவ்வளவுக்கும் இந்தப் படம் பெண்களின் பேராதரவுடன் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. திரைப்படத்தில் ரசிக்கும் ஒரு கதாபாத்திரத்தை நிஜ வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் சமூகம் தத்தளிக்கிறது போலும்.

மேரிக்கு பாலு என்ற இளைஞன் அறிமுகமாகிறான். அவனும் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்தான். இருவரும் ஒரே வீட்டில் டியூசன் எடுக்கிறார்கள். அதனால்தான் இருவருக்கும் பழக்கம். அவர்கள் டியூசன் எடுத்துவந்த குடும்பத்தலைவருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டதால் இருவரும் ஒரே நேரத்தில் வேலையிழக்கிறார்கள். வேறு வேலைக்கு முயன்றுகொண்டிருக்கும் நேரத்தில் மகாலட்சுமி ஆரம்பப்பள்ளி சார்பாக அறிவிப்பு ஒன்று நாளிதழில் வெளியாகிறது. பி.ஏ. படித்த இருவர் ஆசிரியர் வேலைக்குத் தேவை என்றும் அவர்கள் தம்பதியாக இருக்க வேண்டும் என்றும் கணவனுக்கு ஊதியம் ரூ.200. மனைவிக்கு ரூ.250 என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதைக் கண்ட பாலு, மேரியிடம் இது குறித்து நயந்து பேசுகிறான். முதலில் கோபம் கொள்ளும் மேரி ஓரிரவு முழுவதும் யோசித்துவிட்டுக் கணவன் மனைவியாக நடிக்கச் சம்மதிக்கிறாள். எப்படியும் ஓ.சி. டேவிட்டிடம் வாங்கிய ரூ.400 கடனை அடைக்க வேண்டும் என்பதாலும் எம்.டி. பாலு ஓரளவு மட்டு மரியாதை தெரிந்தவன் என்று நம்புவதாலும் இதற்கு ஒப்புக்கொள்கிறாள்.

மேரி கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு கிறிஸ்து மேல் மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. பாலுவுக்கோ சாதி, மதம் போன்ற எதன் மீதும் பெரிய மரியைதோ மதிப்போ இல்லை. தந்தையின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதியின் பெயரைத் தன் பெயரின் பின்னே அணிந்துகொள்ள விரும்பாமல் உதறித் தள்ளிய பாலு பிறப்பால் இந்து. ஆக, இந்து ஆணான பாலுவும் கிறிஸ்தவப் பெண்ணான மேரியும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாகத் தங்கி மகாலட்சுமி ஆரம்பப் பள்ளியில் பணிக்குச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட லிவிங் டுகதர் என்பது மாதிரியான வாழ்க்கை.
‘மிஸ்ஸியம்மா’ படத்தைப் பொறுத்தவரையில் மகாலட்சுமி என்ற மேரியின் கதாபாத்திரச் சித்தரிப்பு மிகவும் முன்னோடிப் பண்புகள் நிறைந்தது. பொதுவாக, பிழைப்புக்காகக் கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்வதுதான் வழக்கம், ஆனால் இந்தப் படத்தில் குயின் மேரிஸ் கல்லூரியில் படித்த மேரி பணிக்காக ஆண்டிப் பேட்டை என்னும் கிராமப் பகுதிக்குச் செல்ல நேர்கிறது. இன்றும்கூட ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது கண்கூடு. ஆனால், பாலுவைவிட மேரிக்கு ஐம்பது ரூபாய் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. பள்ளி மேலாளர் சம்பளப் பணத்தையும் கணவனிடம் தராமல் மனைவியிடமே தருவார்.

தங்க நகைகள் போட்டுக்கொள்வதில் பிரியமற்ற பெண்ணாகவே மேரி இருப்பார். அர்த்தமில்லாமல் தன் மீது பாசம் காட்டும் மனிதர்களைக் காட்டுப்பூச்சிகள் எனக் கடுமையான சொற்களால் குறிப்பிடும் அளவுக்குத் தனது விருப்பங்களிலும் உரிமைகளிலும் மதிப்பு வைத்திருக்கும் பெண் அவர். ஆனால், நெருக்கடியான சூழல் காரணமாக தனது மதத்தை மறைத்துத் தான் இந்துப் பெண் என்று நடிக்குமளவுக்கு இங்கிதம் தெரிந்தவராகவும் இருக்கிறார்; பொட்டு வைத்துக்கொள்கிறார். சீமந்தம் என்றால் என்ன என்பதே தெரியாத அளவுக்கு சடங்குகளின் அறிமுகமே இல்லாமல் இருபது வயதை அடைந்திருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தை வியக்காமல் எப்படி இருக்க முடியும்?  பெண் முடியும் என்றால் முடியாது முடியாது என்றால் முடியும் என்பதுபோன்று இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓரிரு கருத்துகளைத் தவிர்த்துவிடலாம். இந்தக் கருத்து தவறு என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

கிறிஸ்தவப் பெண்ணும் இந்து ஆணும் ஒரே வீட்டில் வசிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியதால்தான் இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்த பானுமதி விலகிக்கொண்டார் என்று ஒரு தகவல் உலவுகிறது. அது உண்மை என்றால், ஒருவகையில் பானுமதி திரையுலகுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார். இல்லையென்றால் இரண்டாம் நாயகியாக நடிக்கவிருந்த சாவித்திரி கதாநாயகி அந்தஸ்தை அடைந்திருக்க மாட்டார். தமிழ்நாடும் ஒரு நல்ல நடிகையைப் பெற்றிருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்த சாவித்திரி இந்தப் படத்தால் வாழ்க்கையில் பெற்ற ஸ்தானத்தை நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது.

திங்கள், மே 20, 2019

நட்சத்திர நிழல்கள் 6: தேன்மொழி ஒரு பொங்குமாங்கடல்

அச்சமில்லை அச்சமில்லை


திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த பெண் கதாபாத்திரங்களைச் சித்தரித்ததில் கே.பாலசந்தருக்கு முதன்மையான இடம் உண்டு என்பது ஐதிகம். உண்மை என்னவாக இருந்த போதும், வங்காளப் படங்களில் இடம்பெற்றது போன்ற அழுத்தமான, அழியாப் புகழ்படைத்த பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கியுள்ளார் என்பது தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் ஆழமான நம்பிக்கை. அப்படியான பல கதாபாத்திரங்களில் ஒன்று தேன்மொழி.

தேன்மொழி திருநெல்வேலி மாவட்டத்தின் மலையோரக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவள். இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நாள் அவளைப் பொறுத்தவரை ஒரு துக்க நாள். அரசியலால் வெறுப்படைந்து அவள் அதைத் துக்க நாளாகக் கருதவில்லை. அவளுக்கு அந்த அளவுக்கு அரசியல் ஞானமெல்லாம் இல்லை. அவள் ஆசையுடன் விரும்பிக் கட்டிக்கொண்ட கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நாள் அது என்பதாலும் தனது திருமணநாள் அன்றே தான் கொலைசெய்த நேர்ந்த துயரத்தாலும் அவள் அதைத் துக்க நாளாகக் கருதுகிறாள். 

அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்துக்கு நடிகை சரிதா உயிர் கொடுத்திருந்தார். தேன்மொழியின் உடல்மொழியிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் பாலசந்தர் தலைகாட்டிக்கொண்டே இருப்பார். அதையும் மீறி சரிதாவின் அகலமான கண்களும் அதில் வெளிப்படும் கோபம், தாபம், ஆசை, நிராசை உள்ளிட்ட பாவங்களும் தேன்மொழியை மறக்க இயலாமல் செய்திருக்கின்றன. 

தேன்மொழி ஒரு நூற்பாலையில் பணியாற்றிவருகிறாள். அவள் செல்லும் வழியில் ஊசிமலை என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் கரும்பலகையில் தினந்தோறும் நல்ல வாசகம் ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறாள். அந்த வாசகங்களின் வழியே அவற்றை எழுதிவைக்கும் உலகநாதன் அவளுக்கு அறிமுகமாகிறான். தினமும் யாருக்காவது ஒரு நன்மையாவது செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்துவரும் அவனது பண்பு காரணமாக நெக்குருகி விடுகிறாள் தேன்மொழி. அவளுடைய உள்ளத்தில் இடம்பிடித்துவிடுகிறான் உலகநாதன். 


துறு துறுவென்ற விழிகள், ஜிமிக்கித் தோடு, இடப்பக்க மூக்குத்தி, வலக்கையில் சோறு கொண்டுபோகும் தூக்குச்சட்டி, இடக்கையில் துணிப்பை, பின் கொசுவச் சேலைக்கட்டு, தலையில் சூடிய ஆவாரம்பூ, நீளமான ஒற்றைச் சடை அதன் நுனியில் ஒரு ரிப்பன் எனக் கிராமத்து அழகுடனும் மலையருவி போல் பொங்கிவழியும் சூட்டிகையான பேச்சுடனும் துள்ளித் திரிந்துவரும் தேன்மொழியையும் உலகநாதனுக்குப் பிடித்துப்போய்விட்டது. ஒருவரையொருவர் விரும்பிய காரணத்தால் இருவரும் இல்லற வாழ்வுக்குள் பெரியவர்களுடன் ஒப்புதலுடன் நுழைகிறார்கள். 

பிறருக்கு நன்மை செய்யும் தன் பண்பு காரணமாக உலகநாதன் இளம் வயதிலேயே அக்கம்பக்கத்துக் கிராமத்தினரிடையே பெரும் செல்வாக்குப் படைத்தவனாக இருக்கிறான். அவன் என்ன சொன்னாலும் கேட்பதற்கு அந்த மக்கள் தயாராக இருந்தார்கள். இதனாலேயே அவனைத் தங்கள் கட்சிகளில் இணைத்துக்கொள்ள மஞ்சள் கட்சியும் ஊதாக் கட்சியும் போட்டி போட்டன. எல்லாவற்றையும் மறுத்து வந்தான் உலகநாதன். அதையெல்லாம் கண்டு தேன்மொழிக்குத் தன் கணவனை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. ஆனால், காலத்தின் கணக்கு மாறிக்கொண்டே இருக்குமே. 

தேன்மொழியின் பிரியத்துக்குரிய உலகநாதனுக்கு மஞ்சள் கட்சி மந்திரி பதவி எனும் ஆசை வார்த்தை காட்டியது. போதாதற்குச் சன்மானமாக ஒரு அட்டியலை வேறு கொடுத்தது. அதுவரை திடமாக நின்றுவந்த உலகநாதனின் மனத்தில் ஆளும் ஆசை விருட்சமாக எழத் திடுமென்று விழுந்துவிட்டான். மஞ்சள் கட்சியில் சேர்ந்துவிட்டான். தன் அன்புப் பரிசாக அவளுக்கு அந்த அட்டியலையும் தந்தான். கணவன் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய பரிசு எனப் பூரித்துப்போன தேன்மொழிக்கு அது வந்துசேர்ந்த அரசியல் பாதை புலப்பட்டபோது வெகுண்டெழுந்தாள். கடவுள் நம்பிக்கை கொண்ட, திருநீற்று நெற்றிக்காரனான உலகநாதனின் அரசியல் முடிவு பெரிய குங்குமப் பொட்டிட்டுத் திரிந்த தேன்மொழியைக் கடுமையாகப் பாதித்தது. அவர்கள் இல்லற வாழ்வின் விரிசலுக்கு அரசியல் அச்சாரமிட்டது.

ஆணாதிக்கச் சிந்தனையால் தடித்துப்போன உலகநாதனின் செவியில் தேன்மொழியின் நல்லெண்ணப் பேச்சுகள் ஏறவேயில்லை. எல்லோருக்கும் நன்மை செய்தே பழக்கப்பட்டிருந்த உலகநாதன் பிறருக்குத் தீமைசெய்யக் கவலைப்படாதவனான். பிறர் நலமே வாழ்வாகக் கொண்டிருந்த அவனுக்கு தன்னலமே பிரதானமாகிப்போனது. மிதிவண்டியில் வலம் வந்துகொண்டிருந்தவனுக்கு புது புல்லட் கிடைத்தது. மஞ்சள் கட்சியிலிருந்து ஊதாக் கட்சிக்கு மாறினான். சிறிய வீடு பெரிய காரவீடாக மாறியது. அரசியல் செல்வாக்கு அவனைச் செல்வந்தனாக உயர்த்தியது. ஆனால், அவனிடம் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் ஒவ்வொன்றாகக் காலாவதியாகிக்கொண்டே இருந்தன. அவனது சிந்தையில் நஞ்சு கலந்தது கண்டு தேன்மொழி செய்வதறியாது திகைத்தாள். அடுப்பாங்கரைக்கும் படுக்கையறைக்கும் பொண்டாட்டி போதும் எனும் முடிவுக்கு வந்தவனிடம் எதிர்த்துப் பேசிப்பார்த்தாள் தேன்மொழி. எதுவும் அவள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. 


பெண்டாட்டியை ஓரங்கட்டிவிட்டு வேறொரு பெண்ணுடன் அதே வீட்டில் வாழத் தொடங்கினான். கணவன் ஊராருக்குக் கெடுதல் செய்யும்போது எதிர்க்கேள்வி கேட்ட தேன்மொழி அவன் தனக்குத் துன்பமிழைத்தபோது பொறுத்தே போகிறாள். தேன்மொழி ஏன் அப்படிப் பொறுத்துப்போக வேண்டும்? அதுதானே மரபு! அவள் என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் மரபைக் கைவிட முடியாதே? பெண்ணெனப் பட்டவள் தட்டுக்கெட்டுத் திரியும் கணவன் தீயவழிக்குப் போகும்போது எல்லாத் துயரங்களையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு நல்வழி காட்ட வேண்டியதிருக்கிறதே. வந்தவள் வலுத்தாள் இருந்தவள் இழந்தாள் என்ற கதையாக ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் தேன்மொழி. 

சொல்வாக்குத் தவறும் தனது போக்கு காரணமாக ஊராரிடையே செல்வாக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறான் உலகநாதன். ஆனால், அரசியலால் கிடைத்த அனுகூலங்களை அனுபவித்தவன் அதை இழக்க விரும்பவில்லை. அவற்றைத் தக்கவைக்க தகாத வழிகளில் தயங்காமல் நடைபோடுகிறான். பழிபாவத்துக்கு அஞ்சாமல் கொலைபாதகத்தில் ஈடுபடுபவனாக மாறுகிறான். இளம் பெண்ணொருத்தியைக் கொன்று சாதிச் சண்டைக்கு வித்திடுகிறான். இவை எல்லாம் தேன்மொழியில் காதுக்கும் வருகின்றன. தேனாக உலகநாதனுக்குத் தித்திப்பை வழங்கியவள் தேளாக மாறி விஷம் கொட்ட வேண்டிய சூழலும் வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தேன்மொழி பொங்குமாங்கடலாகிறாள். அந்தச் சுதந்திர நாளன்று மேடையில் ஆர்ப்பரிக்கும் அருவியாக உரை நிகத்தும் உலகநாதன் பொங்குமாங்கடலில் சிக்குகிறான். அவனுக்கு மாலையிடச் சென்ற தேன்மொழி அவனை மீளா உலகத்துக்கு அனுப்பிவைக்கிறாள். அவனிடமிருந்து அந்த ஊரை விடுவித்துவிட்டு, திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெற்ற தேன்மொழி சிறைக்குச் செல்கிறாள். இப்போதெல்லாம் உலநாதன்களுக்குப் பஞ்சமில்லை தேன்மொழிகள் எங்கே மறைந்திருக்கிறார்களோ? 

கல்யாணப் பொண்ணு போல் பொட்டுவைத்து பூச்சூடி கணவனைக் கொல்ல மேடைக்கு வந்த தேன்மொழி அவனைக் கொன்றுவிட்டு பூவையும் பொட்டையும் இழந்து சிறைக்குச் செல்லும் கோலம் தான் தேன்மொழியின் கதாபாத்திரத்தைச் சிதிலப்படுத்துகிறது. அதே கல்யாணப் பொண்ணு கோலத்திலேயே அவள் சிறைக்குச் சென்றிருக்கலாம். எதற்கும் அச்சப்படாத தேன்மொழிக்கு ஏன் அந்தக் கைம்பெண் கோலம்?

திங்கள், மே 13, 2019

நட்சத்திர நிழல்கள் 5: சகுந்தலாவின் பாதையில் வந்த ராதா

விதி


திரைப்படத்தைக் கண்களால் காணும் தலைமுறைக்குக் காதுகளால் திரைப்படம் கேட்ட கதை தெரியுமோ தெரியாதோ? சினிமாவைக் கேட்ட அனுபவம் கொண்டவர்கள் ஒலிச்சித்திரத்தை நினைவில் தேக்கிவைத்திருப்பார்கள். சரஸ்வதி சபதம் கதை வசனம் ஒலிக்காத தெருக்கள் தமிழகத்தில் இருக்குமா? அதைப் போலவே சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படமும் கதை வசனத்தில் கொடிகட்டிப் பறந்தது. அந்த வரிசையில் வைக்கத்தக்க படம் கே விஜயன் திரைக்கதை இயக்கத்தில் சுஜாதா, பூர்ணிமா ஜெயராம் மோகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 1984-ல் வெளியான விதி. இதன் வசனம் ஆரூர் தாஸ்.

இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள்கூட இந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளைக் கதை வசனமாகக் கேட்டிருப்பார்கள். இந்தப் படத்தை அறியாத ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தால் சந்தேகமே வேண்டாம் அவர் தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். பெண்ணுரிமையை மையமாகக் கொண்ட இந்தக் கரு தெலுங்கு எழுத்தாளர் டி.காமேஸ்வரியின் மனத்தில் உதித்தது. அவரது கதையே நியாயம் காவலி என்னும் பெயரில் சாரதா, ராதிகா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் நடித்த திரைப்படமாகி 1981-ல் வெளிவந்தது. இதன் மறு ஆக்க உரிமையைப் பெற்றே தயாரிப்பாளர் கே. பாலாஜி இந்தப் படத்தைத் தமிழில் தயாரித்திருக்கிறார்.

ராதா எனும் இளம்பெண்ணை ராஜா எனும் இளைஞன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். தமிழ்ப் பெண்ணான ராதா முதலில் மறுக்கிறாள். வழக்கமாகத் தமிழ் ஆண்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை ராஜா எடுக்கிறான். அவள் இல்லாவிட்டால் தான் இறந்துவிடுவதாக மிரட்டுகிறான். ராதா அதற்கு இரங்காமல் இருந்திருந்தால் அவனுக்கு இணங்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், ராதாவோ உண்மையிலேயே அப்படிச் செய்துவிடுவானோ எனப் பயந்து அவனைப் பார்க்கச் சென்றுவிடுகிறாள். அங்கிருந்து தொடங்குகிறது அவளது துயரம்.

 
யாரைக் கல்லால் அடித்துத் துரத்தவைத்தாளோ அந்த ராஜாவைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அவனது தூண்டுதலில் மகாபலிபுரம் செல்கிறாள். இருவரும் கடலில் குளிக்கிறார்கள். ஈர உடையுடன் உல்லாச விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறார்கள்; சுகம்காண்கிறார்கள். அதுவரையான அவனது மனச்சுமை குறைந்துவிடுகிறது அவளது சுமை கூடிவிடுகிறது. திருமணத்துக்காக ராஜாவை ராதா வலியுறுத்துகிறாள். ராஜா நழுவுகிறான். அவனது சுயரூபம் தெரியத் தொடங்குகிறது. ராதாவின் வீட்டில் உண்மை தெரிந்து கலவரமாகிறது. இதனிடையே தான் கர்ப்பமானது தெரிந்து அதிர்கிறாள் ராதா.

அப்படியே ஒடுங்கிப்போக ராதாவின் தன்மானம் இடம்கொடுக்கவில்லை. தன்னை நம்பவைத்து ஏமாற்றிய ராஜா போன்ற ஆணின் கயமைத்தனத்தைச் சந்தி சிரிக்கவைக்காமல் விடப்போவதில்லை என்ற எண்ணம் அவளது மனத்தை ரௌத்திரப்படுத்துகிறது. கொந்தளிப்பான மனநிலையில் அர்த்த ராத்திரியில் வழக்கறிஞர் சகுந்தலா தேவியை நாடிச் செல்கிறாள். பெண்ணுரிமைக்காகப் போராடுவதற்காகத் திருமணத்தைக்கூடத் தவிர்த்துவிட்டு வாழும் பெண்மணி அவர். ராதாவின் கதையைக் கேட்ட சகுந்தலா துணுக்குறுகிறார். அவளுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார். ராஜாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார்.

சகுந்தலா கடந்துவந்த பாதையிலேயே ராதாவும் நடந்துவந்திருக்கிறாள். இருவரது மனத்திலும் ஒரே முள் தைத்திருக்கிறது. ராதாவின் கதை சகுந்தலாவின் கதையை ஒத்ததாகவே இருக்கிறது. சகுந்தலாவும்  ஒருவனால் பாதிக்கப்பட்ட பெண்ணே. ராதாவை ஏமாற்றிய அந்த ராஜாவின் தந்தையான வழக்கறிஞர் டைகர் தயாநிதிதான் சகுந்தலாவின் வாழ்வுடன் விளையாடியவர். தான் ஏமாற்றப்பட்ட நேரத்தில் கொதித்து எழ முடியாத சகுந்தலாவுக்கு ராதாவின் தைரியம் நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கை தந்த துணிச்சலால் எல்லோரும் நிறைந்த நீதிமன்றத்தில் தன் வாதத்தை ஆணித்தரமாக வைக்கிறாள். தான் பலியாடப்பட்ட கதையையும் நீதிமன்றத்திலேயே தெரிவிக்கிறாள். அதுவரை தன் மகளையே வளர்ப்பு மகள் என்று சொல்லிவந்த பரிதாபக் கதையை ஊரறிய உரைக்கிறாள்.


வாதத் திறமையால் ராதாவுக்கு வெற்றி தேடித் தருகிறாள். ராஜாவுக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கிறது. ராஜா ராதாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ராஜாவைத் திருமணம் செய்துகொள்வதும் மறுப்பதும் அவளது விருப்பம் என்றும் நீதிமன்றம் கூறுகிறது. ராதாவைப் பொறுத்தவரை அந்த ஏமாற்றுக்காரனைக் காதலனாக வரித்தது தான் செய்த தவறு என்பதால் அதே கயவனைக் கணவனாகக் கொள்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் மறுத்துவிடுகிறாள். ஆனால், தன் குழந்தைக்குத் தகப்பன் ராஜா தான் என்பதை அறிவித்த நிம்மதியில் தன் சொந்த வாழ்வைத் தொடர்கிறாள். வழக்கில் வெற்றி தேடித்தந்த மகிழ்ச்சியில் தன் மகள் மேகலையை ராதா கையில் ஒப்படைத்துவிட்டுக் கண் மூடிவிடுகிறாள் சகுந்தலா.

தான் கற்பிழந்துவிட்டதாகவும் களங்கப்பட்டுவிட்டதாகவும் ராதா குமுறுகிறார். ஆனால், ஒரு காட்சியில்கூட ராஜா தன் கற்பு பறிபோனதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. மீண்டும் மீண்டும் அதைப் பறிகொடுக்க அவன் தயாராகவே இருக்கிறான். இதுதான் நமது சமூகம். இப்படித்தான் இருக்கிறது நமது பண்பாடு. தவறிழைத்த ராஜாவின் குடும்பத்தில் அவனுடைய தந்தை டைகர் தயாநிதி தன் மகனுக்குப் பக்கபலமாக இருக்கிறார். மகன் செய்த தவறைப் பெரிதுபடுத்தாமல் அவனுக்காக வழக்கில் தானே ஆஜராகிறார். ராதாவுடைய தந்தையோ குடும்ப மானமே பறிபோய்விட்டதாகப் புலம்புகிறார். தன் பெண்ணை ஒருவன் ஏமாற்றியபோது அது வெளியில் தெரிந்துவிடக் கூடாதே என்பதுதான் அவரது  கவலையாக இருக்கிறது. அவளுக்குக் கருக்கலைப்பு செய்து திருமணம் செய்து கொடுத்துவிடவே துடிக்கிறார். அதற்கு ராதா சம்மதிக்காவிட்டால் தான் இறந்துவிடுவதாக மிரட்டுகிறார். எப்படியாவது அதிலிருந்து தன் குடும்பம் தப்பித்தால் போதும் என்ற பரிதவிப்புதான் அதில் மேலிடுகிறது. தன் பெண்ணை ஒருவன் நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறானே என்ற கோபம் அவருக்குத் துளிக்கூடவரவில்லை.

சகுந்தலாவை வஞ்சித்த டைகர் தயாநிதியும் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்; ராதாவை வஞ்சித்த ராஜாவும் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். ஆனால், சகுந்தலாவும் ராதாவும் தனிமரங்களாகவே வாழ்கிறார்கள். சகுந்தலாவுக்கும் ராதாவுக்கும் தத்தமது குழந்தைகளை வளர்ப்பதே ஆத்ம திருப்தி தரும் பணியாக  மாறிவிடுகிறது. அதுவும் வஞ்சித்தவர்களின் வழியாக வந்த வாரிசுகளை. சகுந்தலாவும் ராதாவும் ஏன் வேறொரு திருமணம் செய்துகொள்ளாமலே வாழ வேண்டும்? அவர்கள் செய்த தவறுதான் என்ன?

ராஜா செய்தது தவறு என்று தெரிந்தும் டைகர் தயாநிதி தன் மகனைத் தட்டிக்கேட்டிருந்தால் ராதா நீதிமன்றத்தின் படியேற நேர்ந்திருக்காதே. ஒருவேளை தன் மகளுக்கு ராதா நிலைமை ஏற்பட்டிருந்தால் தயாநிதி என்ன செய்திருப்பார்? சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளுக்குக் காரணம் விதி என்று யாரும் தப்பிக்க இயலாது ஆண் குழந்தையைப் பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தையை வளர்ப்பதில் காட்டும் மெத்தனமே அத்தகு நிலைமைக்குக் காரணமோ என்ற நினைக்கவைக்கிறது விதி. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி எனும் இந்த ஓரவஞ்சனை சமூகத்தில் ஏன் தொடர்கிறது எனும் கேள்வியை விதி எழுப்புகிறது.

திங்கள், மே 06, 2019

நட்சத்திர நிழல்கள் 4: ஆனந்தியின் வாழ்வு ஒரு செய்தி

விடுகதை


சமூகத்துடன் இணைந்து வாழ்பவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் எழுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் கருத்துகளுடன் ஒத்துப்போய்விடுகி்றார்கள். அவர்களுக்கு அவ்வப்போது எழும் சின்னச் சின்ன சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் சமூகம் தானாகவே முன்வந்து கைகொடுக்கும். ஆகவே, பெரும்பாலானோர் சமூகம் முன்வைக்கும் மரபுகளைப் பின்பற்றியே வாழ்ந்து மடிந்துவிடுகிறார்கள். அதற்கு மாறாகச் சிந்திக்க அவர்களது மனம் துணிவதில்லை. ஆனால், சிலரது மனமோ மரபு வலியுறுத்தும் விதிமுறைகளை மீறுவதற்கு எத்தனிக்கும். அத்தகைய மனம் வாய்க்கப் பெற்றோர் சமூகம் அதிகம் விரும்பாத வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் விருப்பம் கொண்டுவிடுகிறார்கள். அந்தச் சிலர் மீது சமூகத்தின் பார்வை பட்டபடியே இருக்கும். அப்படிச் சமூகத்தின் பார்வைக்குத் தப்பாத இளம்பெண் ஆனந்தி.

1997-ல் வெளியான ’விடுகதை’ திரைப்படத்துக்காக ஆனந்தியை உருவாக்கியவர் இயக்குநர் அகத்தியன். ஆனந்தியாக உலவியவர் நடிகை நீனா. ஆனந்தியின் வாழ்க்கை அவள் வயதையொத்த இளம்பெண்களின் வாழ்விலிருந்து பேரளவு வேறுபட்டது. ஆனந்தி சரியான அப்பா பொண்ணு. அவரிடம்தான் அவள் எல்லாக் கதைகளையும் பேசுவாள். அவர்கள் உலகத்தில் அவரும் அவளும்தான். தந்தையின் நண்பர்கள் அவளுக்கும் நண்பர்கள். அவர்களுடன் வாயாடுவதிலும் அவளுக்குப் பிரியம் உண்டு. ஆக, ஆனந்திக்கு வாய்த்ததெல்லாம் வயதைத் தாண்டிய சிநேகம்தான்.

அவளுடைய தந்தையான ராமநாதன் ஒரு மனோதத்துவ நிபுணர். வாழ்வை மிகவும் அதன் போக்கில் வாழும் மனிதர். அவரது கவனிப்பிலும் அக்கறையிலும் ஆனந்தி துணிச்சலுடனும் வெட்கப்படவே தெரியாமலும் வளர்ந்திருந்தாள். கல்லூரியில் அவளுடன் படிக்கும் மாணவர்கள் ஓரிருவர் அவள்மீது மையல் கொண்டு மயக்கத்துடன் அவளை அணுகியபோது, அதைச் சரியாக எதிர்கொண்டு அது காதல் அல்ல என்பதை அவர்களிடம் விளக்கி அவர்களிடமிருந்து விலகியவள். அந்த அளவுக்கு வாழ்க்கை பற்றிய, ஆண் பெண் உறவு பற்றிய புரிதலைப் பருவ வயதிலேயே பெற்றுக்கொண்ட பெண் ஆனந்தி. 

இரண்டு முறை மாரடைப்பை எதிர்கொண்ட ராமநாதன் எப்போது வேண்டுமானாலும் வரவிருந்த மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த மனிதர். மரணம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டும் என்பதால் அவர் உறங்கும்போதுகூடக் கதவைப் பூட்டாமல் வெறுமனே சாத்திவைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர். அப்பாவைப் பிரியப்போவது குறித்து ஆனந்திக்கு வருத்தமோ பயமோ எழும்போதெல்லாம் அவர் ஆனந்தியை உற்சாகப்படுத்துவார். மரணம் இயல்பானது என்பதையும் அது நிம்மதியானது என்பதையும் உணர்த்துவார். ஆனந்தியும் அதைப் புரிந்துகொண்டு அத்தகைய சம்பவங்களை மிகவும் இயல்பாக எதிர்கொள்ளத் தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தாள்.


ஆனந்தி பயந்த நாளும் ராமநாதன் எதிர்நோக்கிய நாளும் எதிர்பட்டபோதுகூட அவள் அதைச் சாதாரணமாக எதிர்கொண்டாள். தந்தை மரணமடைந்த அன்று அவர் கையெழுத்திட்டுத் தந்திருந்த வங்கிக் காசோலையைப் பணமாக மாற்ற வங்கிக்குச் சென்றுவந்தாள். தந்தையின் மரணத்துக்காக அவள் பெரிய கும்பலைக் கூட்டவில்லை; பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சொல்லப்போனால் அவள் அழக்கூடவில்லை. வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துகொண்டாள். மறுநாளே கல்லூரிக்கு வந்துவிட்ட அவளை எல்லோரும் வியப்புடன் பார்க்கிறார்கள். அவள் இயல்பாக இருந்தபோதும் அவளைச் சுற்றியிருந்த மனிதர்கள் அவளை இயல்புக்கு மாறான நடத்தை கொண்ட பெண்ணாகவே பார்க்கிறார்கள். அது அவளைச் சற்றுப் பாதித்தது. ஆனாலும், அவள் அதை சட்டை செய்யவில்லை.

அப்படியான சூழலில் 18 வயதான ஆனந்தியின் வாழ்க்கைக்குள் வருகிறார் நீலகண்டன். அவருக்கு வயது 41. ராணுவத்தில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் வந்திருக்கும் மனிதர் அவர். ஆனந்தியின் வீட்டுக்கு வாடகைதாரராக வருகிறார் அவர். கிட்டத்தட்ட தன் தந்தை வயது கொண்ட நீலகண்டனை ஆனந்திக்குப் பிடித்துப்போய்விட்டது. தனிமையில் இருக்கும் நீலகண்டனுக்கும் ஆனந்தி ஒரு சாய்வாக இருந்தாள். ராணுவத்திலிருந்தே அவருடன் ஒட்டிக்கொண்ட உணவுக்கு முன்னான குடிப்பழக்கத்தைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை. அவர் மது அருந்தும்பொழுதில் அவரருகிலேயே இருந்து உரையாடுவாள். தன்னை மறந்து நீலகண்டன் தன் வாழ்வு குறித்து புலம்புவதற்குக் காது கொடுப்பாள்.

தனக்கான துணையாக நீலகண்டனே இருப்பார் என ஆனந்தி முடிவெடுத்தபோது, நீலகண்டன் முதலில் அதை மறுக்கிறார். வயது காரணமாக அவர் தயங்குவதைப் புரிந்த ஆனந்தி தன் மனத்தை அவருக்கு உணர்த்தி, சம்மதம் பெறுகிறாள். அவளுடைய தந்தையின் நண்பர்களுக்கே அந்த முடிவு சிறிது அதிர்ச்சியைத் தரத்தான் செய்தது. ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ஆனந்தியின் மனத்தை மாற்ற அவர்களாலும் முடியவில்லை.

திருமணத்துக்காகப் பதிவு அலுவலகம் சென்றபோது, அவளுக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் நான்கு மாதம் இருந்ததால் உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை விளக்குகிறார் பதிவுத் துறை அதிகாரி. ஆனால், ஆனந்திக்குத் திருமணம் என்ற சடங்கில் பெரிய நம்பிக்கை இல்லை. மனம் ஒத்துப்போனபின் இத்தகைய சடங்குகளுக்காகக் காத்திருக்க வேண்டுமா எனக் கேட்டபடி நீலகண்டனுடன் வாழ்வைத் தொடங்க முடிவுசெய்துவிட்டாள். சட்டம், திருமணம் போன்ற மரபுவழிவந்த சடங்குகளுக்காகத் தன் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பலிபீடத்திலேற்ற அவள் விரும்பவில்லை. சட்டரீதியான பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என நம்புமளவுக்கு அவளுக்கு நீலகண்டன்மீதும் வாழ்க்கை பற்றிய தனது புரிதல் மீதும் நம்பிக்கை இருந்தது. ஆகவே, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள்.  

அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தபோதும் நான்கு பேர் நான்குவிதமாகத் தான் பேசினார்கள். கல்லூரிப் பேராசிரியர் அவள் தவறான முடிவெடுத்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனந்தி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாளா என்ற சந்தேகம் அவளுடைய கல்லூரி நண்பர்களுக்கு எழுந்தது. அந்தச் சந்தேகம் நீலகண்டனுக்கே வந்தபோது, ஆனந்தி அதிர்ந்துபோனாள்; ஆனாலும் சுதாரித்துக்கொண்டாள். வெளியில் தங்களை ஜோடியாகப் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் அப்பாவும் பொண்ணுமாகவே தோன்றுகிறோமோ எனும் சந்தேகம் தரும்படியான ஓரிரு நிகழ்வுகள் நீலகண்டனைப் பாதித்தன. அவருக்குத் தான் தவறு செய்துவிட்டோமோ எனும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனந்தியைத் தன்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா என்ற ஐயம் அதிகரிக்கிறது. அவளிடமிருந்து விலகிட முடிவுசெய்துவிட்டார். அவளுக்கு ஏற்ற ஒருவனை அவள் திருமணம் செய்துகொண்டால் அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆனந்தி ஒத்துழைக்கவில்லை.

திருமணம் என்பதை உடம்புக்கானது என்று மட்டும் ஆனந்தி நினைக்கவில்லை. அதை அவள் நீலகண்டனுக்கு உணர்த்தி அவரைத் தன்னுடனேயே தங்கவைக்கிறாள். வாழ்க்கையெனும் விடுகதைக்கு விடை தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு மத்தியில் ஆனந்தி அந்த விடுகதையின் விடையை அறிந்தவளாக இருக்கிறாள். நான்கு பேர் சொல்வதற்காகவெல்லாம் நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது நம் மனதுக்குச் சரியென்றுபடுவதன்படி செயல்படுவது நல்லது எனும் தெளிவு ஆனந்தியிடம் இருந்தது. அந்தத் தெளிவுதான் ஆனந்தி அவளைப் போன்ற பெண்களுக்குத் தரும் செய்தி.

திங்கள், ஏப்ரல் 29, 2019

நட்சத்திர நிழல்கள் 3: வசந்தியின் காதலைப் பறித்த தாலி

அந்த  7 நாட்கள்


பண்பாடு, பாரம்பரியம், மரபு என்னும் பெயர்களில் தங்கள்மீது வந்து விழும் சுமைகளைப் பெரும்பாலான பெண்கள் சுமந்துதிரிகிறார்கள். அந்த வகையில் இந்தியப் பெண்களின், குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில் திருமணம் ஒரு பெரிய குறுக்கீட்டை நிகழ்த்துகிறது. அதன் பெயரில் பெண்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்படும் அத்துமீறலுக்கு அளவேயில்லை. அதன் பாதிப்பு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையில் இருக்கும். நாம் காணப் போகும் இந்த வசந்தியின் வாழ்க்கைக் கதையும் அப்படிப் பாதிப்புக்குள்ளானதுதான்.

வசந்தி எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் நடிகை அம்பிகா என்றால் அதை உருவாக்கியவர் இயக்குநர் கே.பாக்யராஜ், படம் அந்த 7 நாட்கள் (1981). வசந்தியைத் தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். வசந்தி ஒரு தமிழ்ப் பெண். அவள் காதலித்த ஆணோ மலையாளி. அவள் தன் காதல் கதையை முதன்முதலில் தன் கணவனிடம் சொல்கிறாள். அதுவும் முதலிரவுப் பொழுதில். பாலும் பழமும் அருந்த வேண்டிய பொழுதில் வசந்தியை விஷம் அருந்தவைத்து வேடிக்கை பார்க்கிறது இயற்கை. அவளை மணந்துகொண்ட டாக்டர் ஆனந்த் அவளுக்கு சிகிச்சை அளித்துப் பிழைக்க வைக்கிறான். அவள் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம்தான் அந்தக் காதல்.  

வசந்தியுடைய தந்தை வேறு ஒரு பெண்மீது மோகம் கொண்டு, குடும்பத்தை அப்படியே நிராதரவாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பண்பாடு பற்றிப் பாடமெடுக்கும் இந்தியக் குடும்பங்களில் இத்தகைய சீரழிவுக்குப் பஞ்சமேயில்லை. வசந்தியின் தாய்வழித் தாத்தாதான் குடும்பத்தைத் தாங்கிப்பிடித்திருக்கிறார். கல்யாணப் பருவத்திலிருக்கும் வசந்திக்கு, அவளைவிட ஓரிரு வயது குறைந்த தங்கையும் மாற்றுத்திறனாளியான தம்பியும் இருக்கிறார்கள். வசந்தியின் வீட்டுக்கு பாலக்காட்டு மாதவனைக் கொண்டுவந்து சேர்க்கிறது காலம்.

சென்னைக்கு வந்து பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்பது மாதவனின் கனவு. அதற்காகத் தான் தன் சீடன் கோபியுடன் அவன் சென்னைக்கு வந்திருக்கிறான். வசந்தியின் வீட்டு மாடிக்குக் குடிவருகிறான் மாதவன். வீட்டுக்குள்ளேயே கிடந்த, துடுக்கான பெண்ணான வசந்தி அறிந்த ஒரே ஆடவனாக மாதவன் இருக்கிறான். அதிலும் பெண்ணைக் கண்டு ஒடுங்கி ஓரம்போகிறவனாக இருக்கிறான். அந்தப் பண்பு வசந்தியை இன்னும் அதிகமாக ஈர்க்கிறது. பருவத்தில் வரும் காதலுக்கு வசந்தி மட்டும் விதிவிலக்கா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனத்திலும் குடியேறுகிறான் மாதவன். அதைப் புரிந்தும் புரியாததுபோல் சூழல்கருதி ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறான் மாதவன். ஆனால், மனத்திலுள்ள காதலை மரபு வேலியால் எவ்வளவு காலத்துக்குத் தான் தடுக்க இயலும்? அவனுள்ளும் காதல் சுரக்கும்படியான சம்பவங்கள் கூடிவருகின்றன.

வெண்ணெய் திரண்டுவரும்போதுதான் சொல்லிவைத்தாற்போல் பானை உடைகிறது. வசந்தியின் காதலை அறியாத அவளுடைய தாத்தா அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். அவளிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் இரண்டாம் தாரமாக அவளை மணம்செய்து கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அதுவும் மறுநாளே திருமணம். செய்தி கேட்டதும் கொதிக்கிறாள் வசந்தி. ஆனால், யதார்த்தம் அவள் மென்னியைத் திருகி அமர்த்துகிறது. இரவோடு இரவாக மாதவனும் வசந்தியும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துக் கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால், விடிவதற்குள் வசந்தியை மணமகளாக்கும் காலம் மாதவனை அவளிடமிருந்து பிரித்துவிடுகிறது. டாக்டர் ஆனந்தைக் கரம்பிடிக்கும் நிலைமைக்குத் தள்ளிவிடப்படுகிறாள் வசந்தி. காதலின் கதறல் பண்பாட்டுச் செவியை எட்ட முடியாமல் திணறுகிறது.

ஆனந்தும் நல்ல மனிதன்தான். முதல் தாரம் இறந்துவிட்ட நிலையில் தன் மகள் உஷாவை வளர்த்துவருகிறான். மீண்டும் மணம்புரிந்தால் வரும் பெண் தனக்கு நல்ல மனைவியாக இருப்பாள் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா என்ற சந்தேகத்திலேயே திருமணத்தைத் தள்ளிப்போட்டுவருபவன். ஆனால், மரணப்படுக்கையில் கிடக்கும் தாய்க்கு மகிழ்ச்சி தர ஆனந்த் மறுமணம் செய்துகொள்ள வேண்டிய நெருக்கடி வருகிறது. அந்த நேரத்தில் வசந்தியை அவன் கையில்பிடித்துக் கொடுக்கிறது காலம். ஆனந்த் நல்லவன் என்றபோதும் வசந்தியின் மனத்தில் மாதவன் இருக்கிறானே? அவளது கதையைக் கேட்ட ஆனந்த் அவளை அவளுடைய காதலன் மாதவனுடன் சேர்த்துவைப்பதாகவும் ஒரு வாரத்துக்குள் தன் அம்மா இறந்துவிடுவார் அது வரை பொறுத்துக்கொள்ளும்படியும் கோருகிறான். அவனது கோரிக்கைக்குச் செவிசாய்க்கிறாள் வசந்தி.


ஆணாக இருந்தபோதும் ஆனந்த் சொன்ன சொல் தவறாதவன். மாதவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். வசந்தியின் கணவன் என்பதை மறைத்து ஒரு தயாரிப்பாளராக அவனிடம் அறிமுகமாகி மாதவனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறான். தங்கள் கதையை ஒரு சினிமாக் கதைபோல்  மாதவனிடம் சொல்லி அதன் முடிவையும் சொல்கிறான். காதலனுடன் மனைவியைச் சேர்த்துவைக்கும் கிளைமாக்ஸ் காட்சிக்கு முதலில் பண்பாடு அது இது என்ற காரணங்களால் மறுப்புச் சொல்லும் மாதவன் இறுதியில் சம்மதிக்கிறான். இப்போது தான் வசந்தியின் கணவன் என்னும் உண்மையை உடைக்கிறான் ஆனந்த். வசந்தியை அழைத்துச் செல்லும்படி மாதவனிடம் சொல்கிறான்.

சினிமாக் கதையைப் போலவே முதலில் மறுக்கும் மாதவன் இறுதியில் வசந்தியை அழைத்துப் போகச் சம்மதிக்கிறான் ஆனால், ஒரு நிபந்தனை விதிக்கிறான். வசந்தி கழுத்தில் ஆனந்த் கட்டிய தாலி இருக்கிறது. அதைக் கழற்றிவிட்டால் அவளை அழைத்துப்போவதாகச் சொல்கிறான். வசந்தியிடமும் அதைக் கழற்றச் சொல்கிறான். வசந்திக்கு அந்தத் துணிவில்லை. தாலி அவளைத் துவளச்செய்துவிடுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மனிதனான ஆனந்தாலும் தாலியைக் கழற்றி எறிய முடியவில்லை என்னும் யதார்த்தத்தை உணர்த்தி மாதவன் அவர்கள் வாழ்விலிருந்து வெளியேறிவிடுகிறான். படம் நிறைவுபெறுகிறது.

மனத்தில் ஒருவனையும் மார்பில் மற்றொருவனையும் சுமந்து எப்படி வாழ முடியும் என்ற எண்ணத்தில் காதலனுடன் சேர்ந்து வாழச் சம்மதித்துத்தான் வசந்தி அந்த ஒரு வாரத்தை ஆனந்த் வீட்டில் கழித்தாள். மாதவனை மறக்க இயலாமல்தான் வசந்தி விஷமருந்தி உயிரிழக்க முடிவெடுத்தாள். இப்போது தாலி அவள் கண்ணை மறைத்துவிட்டதா? தன் கழுத்தில் இருக்கும் தாலியை நிமிடத்தில் கழற்றி எறிந்திருக்க முடியும் வசந்தியால். ஆனால் அதை அவள் ஏன் செய்யவில்லை. அந்தத் தாலியின் மீது படிந்து கிடக்கும் பண்பாட்டு அழுத்தத்தை மீறி அதைத் தூக்கி எறிய வசந்தியாலோ மாதவனாலோ ஆனந்தாலோ ஏன் முடியவில்லை. ஏனென்றால், அது சமூகம் செய்ய வேண்டிய வேலை. எந்தப் பாவமும் செய்யாத வசந்தியையும் வசந்தியைப் போன்றவர்களது வாழ்வையும் இத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் விழுங்கிவிடுகின்றன. மனிதர்களுக்காகப் பண்பாடா பண்பாட்டுக்காக மனிதர்களா என்னும் பெரிய கேள்வியை வசந்தியின் வாழ்க்கை எழுப்புகிறது. மரபுப் பாரம் ஏற்றப்பட்ட தாலியைப் பெண்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பெண்களின் கழுத்து தாங்கும்? என்றாவது ஒரு நாள் பாரம் தாங்காமல் தாலியைக் கழற்றிப் பெண்கள் எறியத்தான் போகிறார்கள். அப்போது எந்த நூற்றாண்டின் மனிதன் அதற்குச் சான்றாக இருக்கப்போகிறானோ?

செவ்வாய், ஏப்ரல் 23, 2019

நட்சத்திர நிழல்கள் 2: சுதாவின் கனவான இல்லம்

வீடு


தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க இயலாத படங்களில் ஒன்று பாலுமகேந்திரா இயக்கத்தில் 1988-ல் வெளியான ’வீடு’. அகிலா மகேந்திரா எழுதிய கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய பாலுமகேந்திரா ஒளிப்பதிவு, படத் தொகுப்பு இயக்கம் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருந்தார். தனது சிறு வயதில் தன் தாய் கட்டிய வீடு பற்றிய நினைவுகளின் தாக்கத்தால் இந்தப் படத்தை உருவாக்கியதாக பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

‘வீடு’ படத்தின் பிரதான கதாபாத்திரமான சுதா எனும் வேடத்தை நடிகை அர்ச்சனா ஏற்று நடித்திருந்தார். படத்தின் டைட்டிலிலும் அவரது பெயரே முதலில் இடம்பெறும். செப்டம்பர் 27 அன்று, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சுதா தன் தங்கை இந்து, ஓய்வுபெற்ற பாட்டு வாத்தியாரான தாத்தா முருகேசன் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். சூட்கேஸைக் கட்டிலுக்குக் கீழே வைத்து அது தெரியாமல் மறைக்கும் அளவுக்குக் கட்டிலின் மீது விரித்திருக்கும் பெட்ஷீட்டைத் தொங்கவிட்டிருக்கும் சராசரியான நடுத்தரவர்க்க வீடு அது.

பெரிய அளவில் வெளிச்சம் வராத அந்தப் பழங்கால வீட்டில் மூவரும் சுகஜீவனம் நடத்திவருகிறார்கள். சாய்வு நாற்காலியில் தாத்தா ஓய்ந்திருக்கும்போது வரும் தகவல் அந்தக் குடும்பத்தையே ஓயவிடாமல் செய்துவிடுகிறது. வீட்டின் உரிமையாளர் அந்த நிலத்தில் ஃபிளாட் கட்டும் முடிவெடுத்திருப்பதால் அந்த வீட்டைக் காலிபண்ண நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஒரு மாதத்துக்குள் வீடு மாறியாக வேண்டிய நிலைமை சுதாவுக்கு ஏற்படுகிறது. டுலெட் விளம்பரப் பலகைகள் தந்த ஏமாற்றத்தின் காரணமாகச் சொந்தமாக வீடு கட்டும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள் சுதா. 


தனியார் நிறுவனம் ஒன்றில் சாதாரணப் பணியில் இருக்கும் சுதாவின் மாதச் சம்பளம் 1,800 மட்டுமே. ஆனால், சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள வீட்டை அவள் கட்டியெழுப்ப வேண்டியதிருந்தது. குருவி தலையில் பனங்காயைச் சுமத்துகிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வும் காலத்துக்கு இல்லவே இல்லை. சில சுமைகள் மனிதரின் விருப்பத்தைக் கேட்டு அவர்கள் தலையில் ஏறிக்கொள்வதில்லை. அவை தாமாக மனிதரை உரிமை கொண்டாடிவிடும். அப்படித்தான் வீடு கட்டும் பணியும் ஒரு துடுக்கான குழந்தையைப் போல் சுதாவின் இடுப்பில் மீது ஏறி அமர்ந்துகொண்டது.

கூரைப் புடவை கட்டிக்கொள்ளக் காத்திருந்த சுதா தனக்கான கூரையை வேய்ந்துகொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளானாள். அவளுடன் பணிபுரியும் அய்யங்கார் வீடு கட்டுவது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலை அல்ல என நம்பிக்கை ஊட்டுகிறார். பணத்துக்கான வழிமுறைகளையும் விலாவாரியாக விளக்குகிறார். வாய் பிளந்து கேட்கும் சுதா சுதாரித்துக்கொள்ளும் முன்பு துணிச்சலாகக் காரியத்தில் இறங்குகிறாள்.

தங்கை எனும் குழந்தைக்குத் தாயாக மாறி, தாத்தாவைத் தவிர ஆண் துணையற்ற வீட்டின் தலைமைப்பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்திவரும் சுதா, பேருந்து விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்தவள். சுதாவுக்கு ஆறுதலாக இருக்கிறான் அவளுடன் பணியாற்றும் கோபி. அவனும் பெரும் செல்வந்தனல்ல. கையிருப்பை வைத்து இரு தங்கைகளுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டிய நிலையில் உள்ளவன். இவர்களுக்கிடையேயான காதல் அன்னியோன்யமானது; ஆரோக்கியமானது. சுதாவின் நெருக்கடி நேர ஆலோசனைக்கும் அவள் ஆத்திரங்கொண்டால் அரவணைத்துக்கொள்ளவும் கோபி மட்டுமே இருக்கிறான். ஒருவகையில் அவன் இருக்கும் நம்பிக்கையிலும் சுதா வீடு கட்டத் துணிகிறாள். அவனிடம் சுதா பொருளாதார உதவி எதிர்பார்க்கவில்லை. ஆனால், மன பாரம் கூடும்போதும் இறக்கிவைக்க உதவும் நெஞ்சத்துக்குரியவனாக கோபி இருக்கிறான்.
வீடு கட்டும் மனையைப் பார்க்க வரும் அன்றே மழை ‘சோ’வெனப் பெய்கிறது. சுதாவின் துயரமும் துளித் துளியாகச் சேர்கிறது. முறையாகப் பூமி பூஜை போட்டு வீட்டின் வேலை தொடங்குகிறது. அஸ்திவாரம் போடும் நாளிலும் மழை தொடர்கிறது. வெள்ளமெனச் சூழப்போகும் துயரத்தில் அவள் மாட்டிக்கொள்ளப் போகிறாள் என்பதைக் குறிப்புணர்த்துவதுபோல் பெய்து ஓய்கிறது மழை. விவசாயி வாழ்த்தும் மழையை வீடு கட்டுபவர்கள் சபிக்கிறார்கள். வீடு கட்டும் நேரத்தில் மழை என்பது வேலைக்கு இடைஞ்சல். அதுவும் ஒவ்வொரு காசாகக் கணக்குப் பார்த்துச் செலவு செய்யும் இளம்பெண்ணான சுதாவுக்கு அந்த நேரத்திய மழை பெரும் தடைக்கல். தொந்தரவு தருவதில் இயற்கைக்குச் சளைத்தவர்கள் அல்ல மனிதர்கள் என்னும் வகையில் ஒப்பந்ததாரர் நடந்துகொள்கிறார்.




சிமெண்ட்டைத் திருடி விற்கும் ஒப்பந்தகாரரை எதிர்த்துக்கேள்வி கேட்டதால் அவர் வீடு கட்டும் பணியிலிருந்து உடனடியாக விலகிக்கொள்கிறார். விக்கித்துப்போய் நிற்கும் சுதாவுக்கு, அநீதி கண்டு ஆத்திரத்துடன் கேள்வி கேட்ட மங்கா எனும் சித்தாள் பெண் கைகொடுக்கிறார். பெண்ணின் துயரத்தைப் பெண்தான் உணர்ந்துகொள்கிறாள். மங்காவின் ஒத்துழைப்புடன் மேஸ்திரியின் மேற்பார்வையில் தளம், கூரை என வீடு வளர்கிறது.

முழுமையும் பூர்த்தியாகாவிட்டாலும் ஒதுங்குவதற்கான கூரையாக வீடு நிலைபெற்றுவிட்டத்தைப் பார்த்த சந்தோஷத்திலேயே கண்ணை மூடிவிடுகிறார் தாத்தா. இருந்த ஒரே ஆண் துணையும் கைகழுவிக்கொண்டது. தாத்தா இறந்த துக்கம் கரைவதற்குள் அடுத்த துயரம் சுதா வீட்டுக் கதவைத் தட்டுகிறது. அவள் ஆசை ஆசையாக அலைந்து திரிந்து, நயந்துபேசி பணம் புரட்டி, கடன் பெற்று, மனையின் ஒரு பகுதியை விற்றுக் கட்டிய வீடு அமைந்திருக்கும் மனை மெட்ரோ வாட்டர் நிறுவனம் கையகப்படுத்தப்போகும் நிலம் என்ற குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் அந்தத் துறையினர். ஆற்றல்மிகு இடி ஒன்று நடுமண்டையில் நச்சென்று இறங்கியதைப் போல் துடிதுடித்துப் போகிறாள் சுதா.

பஞ்சாயத்தில் அனுமதி வாங்கிக் கட்டிய வீடாயிற்றே ஏன் இப்படி ஒரு நிலைமை? என நிலைகுலைந்துபோன சுதா அந்த அலுவலகத்துக்கு விரைகிறாள். சிறிய லஞ்சத் தொகைக்கு ஆசைப்பட்டுப் பொய்யான அனுமதிச் சான்றிதழ் வழங்கிய அரசு ஊழியரின் ஒற்றைக் காகிதம் சுதாவின் கனவு வீட்டைக் காவு கேட்கிறது. வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றப் படியேறுகிறாள் சுதா. படம் நிறைவடைகிறது. எளிமையான வண்ணப்புடவை, மேட்சிங் ப்ளவுஸ், கேண்ட் பேக் சகிதமாகப் பக்கத்துவீட்டுப் பெண் போன்று படம் முழுவதும் வலம்வந்த சுதாவின் துயரம் பார்வையாளர்களைக் கலங்கவைக்கிறது. நிம்மதி தரும் என நம்பி வீடு கட்டத் துணிந்த சுதாவின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் நிம்மதியையும் வீடே காலி செய்துவிட்டதோ என்னும் கேள்வியை எழுப்புகிறது வீடு.

என்றபோதும், சுதாவின் வாழ்க்கை வழியே அவளைப் போன்ற இளம் பெண்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். வீடு கட்டுவதில் உள்ள சிக்கல்களையும் அவற்றை எப்படி அணுக வேண்டும் என்ற நடைமுறைகளையும் சுதாவின் வாழ்வுச் சம்பவங்கள் நுட்பமாகச் சுட்டிக்காட்டுகின்றன. வீட்டுக்குப் பூஜை போடுவதில் அக்கறைகொள்வதைவிட அனுமதிச் சான்றிதழ் முறையானதா ஒப்பந்ததாரர் ஒழுங்கானவரா போன்ற அம்சங்களையே கவனத்தில்கொள்ள வேண்டும் என்னும் யதார்த்தத்தை உணர்த்தி ஓய்கிறது வீடு.

படங்கள் உதவி ஞானம்

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்