வெகுளி வெள்ளச்சாமியோட புரோகிராம் கிண்டலா கேலியாவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க. வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2025
கிண்டலா, கேலியா?
வெகுளி வெள்ளச்சாமியோட புரோகிராம் கிண்டலா கேலியாவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க. வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.
வியாழன், ஆகஸ்ட் 12, 2021
மிக்சர் மாமா
அவன் ஒரு லோக்கல் செய்திப் பத்திரிகையில் செய்தி உற்பத்திப் பணியைச் செய்துகொண்டிருந்தான். காலை முதல் இரவுவரை சற்றும் அலுப்பில்லாமல் செய்தியை உற்பத்திசெய்துகொண்டேயிருப்பான். எந்தச் செய்திக்கு உப்பு தூக்கலாக இருக்க வேண்டும். எந்தச் செய்திக்கு நாட்டுச் சர்க்கரை போட வேண்டும் எந்தச் செய்திக்குக் காரம் மிகுதியாகவும் எந்தச் செய்திக்குக் காரம் மிகாமலும் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி.
ஒருநாள் திடீரென்று
அவனை எடிட்டர் அழைப்பதாக அவனுடைய குழுத் தலைவர் தெரிவித்தார். ஏன் அவனை அழைக்கிறார்
எடிட்டர் என்று அவனுக்கு
ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், எடிட்டர் அழைத்தால் ஒன்று ஏதோ ஒரு பெரிய
தவற்றை அவன் இழைத்திருக்க வேண்டும்.
இல்லையெனில் அவன் ஏதோ சாதனை
செய்திருக்க வேண்டும். தான் செய்தது என்ன
என்பது அவனுக்குப் புலப்படவில்லை. சரி என்ன என்பதைத்
தெரிந்துகொள்ளலாம் என அவனுடைய எடிட்டரைப்
பார்க்கப் போனான். அவன் போன நேரம்
அவர் அமைதியாக மிக்சரைத் தின்றுகொண்டிருந்தார். அவர் மிக்சர் தின்னும்
அழகு பார்ப்பதற்குச் சுவையாக இருக்கும். அது மிக அரிதான
செயலன்று. நாள்தோறும் நடைபெறும் ஒன்றுதான். என்றபோதும், மலை போல் கடலலை
போல் எத்தனைமுறை பார்த்தாலும் அது அலுக்காத காட்சி.
மிக்சர் சாப்பிடுவதற்காகவே பிறந்தவர் போல் அவர் மிக்சர்
சாப்பிடுவார்.
மிக்சரை
வலக் கையால் ஒரு குத்து அள்ளுவார்.
அதை அப்படியே இடது உள்ளங்கையில் கொட்டுவார்.
அப்படிக் கொட்டும்போதும் அவரது முகத்தில் தென்படும் மலர்ச்சியை அவர் முதல் காதல்
பொழுதிலோ காமப் பொழுதிலோகூடக் கொண்டிருந்திருக்க மாட்டார் என்றே தோன்றும். மிகவும் நிதானமாக ஓமப்பொடியையும் காராப்பூந்தியையும் தனித்தனியாக எடுத்து எடுத்து வாயில் போட்டு அதக்குவார். இடையிடையே வேர்க்கடலையும் மொறுமொறுப்பான கருவேப்பிலையையும் ஊடுபயிர் போல் வாயில் போட்டு
மெல்லுவார். வேர்க்கடலையை எடுக்கும்போது, அதன் தொலியை விரல்களிடையே
வைத்து அகற்றி மென்மையாக ஊதுவார். கடலையும் பறந்துவிடக் கூடாது தொலியும் அகல வேண்டும் வாயிலுள்ள
மிக்சரும் சிந்திவிடக் கூடாது. இந்த மூன்றையும் அனுசரித்து
மிக லாகவமாக அதை அவர் செய்வார்.
இத்தனை லாகவமாக அவர் எடிட்டர் பணியைக்கூடச்
செய்ததில்லை. மிக்சர் தின்பதே ஒரு தவம் போல்
தோன்றச் செய்துவிடுவார். அவர் மிக்சர் சாப்பிடும்
அழகில் சொக்கிப்போன அவன் தனது வேலையை
மறந்துவிட்டான். மிக்சர் சாப்பிடுவதில் லயித்திருந்த எடிட்டரும்
அவனைக் கவனிக்கவில்லை. ஒரு வேர்க்கடலை தவறிக்
கீழே விழுந்தபோது, பதறிப்போய் அதை எடுப்பதற்காகக் குனிந்தவர்
நிமிர்ந்தபோது, எதிரே நின்ற அவனைக் கவனித்தார்.
என்ன
என்பதுபோல் பார்த்தார். வாயில் மிக்சரை நிறைத்துவைத்திருந்ததால் அவரால் பேச இயலவில்லை என்று
சொன்னால் உங்கள் புத்திக்கூர்மையைச் சந்தேகிப்பதுபோல் ஆகிவிடும். மிக்சரைத் தின்று முடித்துக்கொள்ளுங்கள் கேட்கிறேன் என்றான். அவர் சிரித்துக்கொண்டே, அது ஆயுளுக்கும்
நீளும் என்பதுபோல் சைகை காட்டினார். அவ்வளவு
நாள் தாங்காது என்பதால் அவன், தன்னை ஏன் அழைத்தார் என்று
வினவினான்.
உடனடியாக
எடிட்டர் மிக்சரைக் கொட்டிவைத்திருந்த காகிதத்தை அவனிடம் நீட்டினார். அவனது
வேலை நீக்கத்தை அறிவித்த நிறுவனத்தின் கடிதம் அது. ஆங்காங்கே மிக்சரைப்
பொரித்த எண்ணெய்க் கறை அந்தக் காகிதத்தில்
தெரிந்தது. அது பார்ப்பதற்கு ஒரு
சர்க்கஸ் கோமாளியைப் போல இருந்தது. அதைச்
சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். எடிட்டர் வழக்கம்போல் மிக்சர் கொறிக்கத் தொடங்கிவிட்டார்.
அவன்
பார்த்துவந்த செய்தி உற்பத்திக் கண்காணிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவனுக்கு இழப்பீடாக ஒரு கிலோ மிக்சர்
தரப்படும் என்றும் வீடு செல்லும்வரை கொறித்துக்கொண்டே
போக ஏதுவாக நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்,
நிறுவனம் இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் இந்த மிக்சரை வாங்கவே
சிலரது இதயத்தை அறுத்தெடுத்து அடகுக் கடையில் வைத்திருக்கிறோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்த அந்தக்
கடிதம் அழகான ஆங்கிலத்தில் இலக்கணச் சுத்தமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், கடிதத்தை எழுதியிருப்பது என்பதை
அறிவிக்கும் எந்த ஒரு கையெழுத்தும் இடப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடிதத்தின் இலக்கண மேன்மையை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை. இனி
எடிட்டரிடம் கேட்க ஒன்றுமில்லை. அவரிடம் கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை.
அவர் நிம்மதியாக மிக்சர் சாப்பிடட்டும். யார் வாழ்ந்தாலும் அழிந்தாலும்
அவருக்கென்ன? அவராவது இன்பமயமான வாழ்வை அனுபவிக்கட்டும் என்றெண்ணி வந்துவிட்டான்.
அவனுக்கு,
செய்தி உற்பத்தியாளனான தன்னை ஏன் செய்தி உற்பத்திக்
கண்காணிப்பாளர் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனப் புரியவில்லை. அதை
யாரிடம் கேட்கலாம் என யோசித்தான்.
குழுத் தலைவரான தோழரிடம் கேட்கலாம் என்று போனான். அவரிடம் தான் பணி நீக்கம்
செய்யப்பட்ட செய்தியைச் சொன்னான். அப்படியா என்பதுபோல் பார்த்தாரா, அப்பாடா என்பதுபோல் பார்த்தாரா என்பது அவனது சிற்றறிவுக்குப் புலப்படவில்லை.
தன்னை ஏன் உற்பத்திக் கண்காணிப்பாளர்
எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கேட்டான். நீங்கள்
உற்பத்திக் கண்காணிப்பாளர் என்பதை மறந்து உற்பத்திப் பணியில் ஈடுபட்டதுதான் நீங்கள் செய்த தவறு அதனால்தான் பணியில்
இருந்து நீக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றார் அவர். இதை யார் சொன்னது எக்ஸா என்று எடிட்டரின்
பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டான். அவர் பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
ஆமாம் எடிட்டர் சார் சார் சார் தான் என்று சொன்னார். ஏன் இத்தனை சார் என்று யோசித்தவன்
அங்கிருந்த சிசிடிவியைப் பார்த்தான். உதட்டசைவில் எடிட்டர் மூன்று சாரைக் கவனித்துவிடுவார்
என்ற தோழரின் நம்பிக்கையை உணர்ந்துகொண்டான்.
தான்
உற்பத்தியாளன் என்றே நினைத்திருந்தவனுக்கு இது பெரும் ஆச்சரியத்தை
அளித்தது. உற்பத்திக் கண்காணிப்பாளன் என்பதை இதுவரை யாருமே ஏன் சொல்லவில்லை என்று
கேட்டான். அதையெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள், அதை நீங்களே முதலிலேயே
கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று தோழர் கூறினார். தோழர் கொஞ்சம் கறாரான பேர்வழி. தனக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும்
நெடுஞ்சாண்கிடையாக நடந்துகொள்வாரே தவிர கீழுள்ளவர்களிடம் கறாரென்றால்
கறார்தான்.
சரி
என்று கிளம்பினான். வரவேற்பறையில் அவனுக்கான மிக்சர் தரமான பாக்கிங் செய்யப்பட்டுக்
காத்திருந்தது. அந்த மிக்சரை எடுத்துக்கொண்டவன், நேரே மீண்டும் எடிட்டர் அறைக்குப்
போனான். தன்னிடமிருந்த மிக்சரை அவருக்குக் கொடுத்தான். அவர் திடுக்கிட்டுப் பார்த்தார்.
நல்லா மிக்சர் சாப்பிடுங்க மாமா, அதுக்குத்தான் பொறந்திருக்கீங்க, நல்லா மிக்சர் சாப்பிடுங்க
என்றான். வழக்கம்போன்ற டிரேட் மார்க் புன்னகையுடன் எடிட்டர் மிக்சரைப் பத்திரப்படுத்திக்கொண்டார்.
ஞாயிறு, ஏப்ரல் 18, 2021
மரணமென்னும் புதிர்
வியாழன், பிப்ரவரி 11, 2021
எழுத்தாள மனசு
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு கதையின் முதல் வரி முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்பார்கள் ஆனால், முதல் வரியே இந்தக் கதையில் இப்படி மொக்கையா தொடங்குதே, கதை எந்த லட்சணத்துல இருக்குமோ என எடுத்த எடுப்பிலேயே எதிர்மறையா யோசனை போவுதா? மனசை அப்படிக் கண்டபடி அலையவிடாதீங்க. எல்லாத்துலயும் ஒரு விதிவிலக்கு இருக்கும். அதனால என்னதான் சொல்றான்னு பார்ப்போம், பிடிச்சா படிப்போம் இல்லாட்டிப் போய்டுவோம் என அதை சமாதானப்படுத்துங்கள். பரவாயில்லயே, சொன்ன உடனே அதுக்கு மதிப்புக் கொடுத்து மனச சமாதானப்படுத்தி தொடர்ந்து வாசிக்கிறீங்களே, அந்த நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது தைரியமா வாசிங்க. அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கதையைச் சொல்லுன்னு நீங்க தலையில் தட்டுவதற்குள் நான் கதையைச் சொல்லிவிடுகிறேன்.
செவ்வாய், ஜனவரி 05, 2021
பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து
இது ஒரு நகைச்சுவைக் கதை என்பதால் யாரும் லாஜிக் பார்க்காதீர்கள். ஆனால், கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராவிட்டால் கவலைப்படாதீர்கள். இப்படியொரு கதையை எப்படி நகைச்சுவைக் கதை என்று சொன்னான் இந்த மடையன் என்று நினைத்துச் சிரித்துக்கொள்ளுங்கள். அப்போது இது நகைச்சுவைக் கதை என்பது உறுதிப்பட்டுவிடும். ஏனென்றால், நீங்கள்தான் சிரித்துவிட்டீர்களே!
இந்தக் கதை நடந்து சுமார் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனாலும் இப்போதுள்ள சூழலுக்கும் பொருந்திப்போகும்வகையில் கதை இருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. சரி கதைக்குள் போவோமா? கதையைக் கவனமாகப் படியுங்கள். கதையின் இடையிடையே நகைச்சுவைக்கான சாத்தியங்கள் ஒளிந்துள்ளன. அவற்றைத் தவறவிட்டுவிட்டால் கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராமல் போய்விடக் கூடும். அப்படிக் கதையைப் படித்து முடித்த பின்னர் சிரிப்பு வராதவர்களுக்காகவே முதல் நான்கு வாக்கியங்கள். கதையைப் படித்து முடித்தபின்னர் சிரிப்பவர்கள் முதல் நான்கு வாக்கியங்களைப் படிக்கத் தேவையில்லை. ஆனால், பழக்கதோஷத்தில் முதலிலேயே படித்துவிட்டீர்கள் என்றால் பரவாயில்லை. அதற்காக வருந்தாதீர்கள். ஒரு நகைச்சுவைக் கதையைப் படித்துவிட்டு அதிலும் அதற்காகச் சிரித்துவிட்டு வருத்தப்படுவது நன்றாக இருக்காது அல்லவா?
எப்படா அலுவலகம் திறக்கும் என்றாகிவிட்டது அவனுக்கு. சுமார் பத்து மாதங்கள் அடைத்தே வைத்துவிட்டார்கள். இன்றுதான் அலுவலகத்தைத் திறக்கிறார்கள். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பத்து மாதங்கள்தான் நிறுவனம் நல்ல லாபமீட்டியதாகவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவே இன்று அலுவலகம் திறக்கப்பட்டதாகவும், கொண்டாட்டம் முடிந்த பின்னர் மீண்டும் அலுவலகம் மூடப்பட்டுவிடும் என்றும் செய்தி கசிந்தது. அது உண்மையா பொய்யா என்று ஒருவருக்கும் தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் ஏன் இன்னும் அலுவலகம் திறக்கப்படவில்லை என்று தன் மனதுக்குள் கேள்வி கேட்ட ஊழியன் ஒருவன் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டான். தான் மனத்தில் நினைத்திருந்ததை எப்படி அலுவலகம் கண்டுபிடித்தது என்பது அந்த ஊழியனுக்குத் தெரியவேயில்லை. ஆனால் அவன் மனத்துக்குள் நினைத்தது அதுதான் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதுபோலவே அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. இந்த மாயம் எப்படிச் சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. எனவே, எவருக்கும் எந்தக் கேள்வியும் நாவில் எழவேயில்லை. எல்லாரும் அநியாயத்துக்கு மௌனம் காத்தார்கள். பொதுவான விஷயம் என்றால் சும்மா பிச்சு உதறும் சூராதி சூரர்களும் அலுவலக விஷயமென்றால் அமைதியாகிவிடுவார்கள். மற்றபடி அவர்கள் அனைவருமே புரட்சியாளர்கள்தாம்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் திறந்ததால் எல்லாரையும் போல் அவனும் உற்சாகத்துடன் அலுவலகத்துக்குச் சென்றான். அவன் அலுவலகத்தில் நுழையும்போது, அவனது கையைப் பிடித்துக்கொண்டு அழகான பெண்மணி ஒருத்தியும் அவன் தோளோடு தோள் உரசி வந்தாள். நீண்ட நாள்களாகத் திருமணமே செய்யாமல் இருந்தவன் யாரோ ஓர் அழகியின் பிடியில் விழுந்துவிட்டான் போல என அனைவரும் கருதினார்கள். ஆனால், மனைவியை அவன் ஏன் அலுவலகத்துக்கு அழைத்து வந்தான் என்பதுதான் அவர்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்தை அவன் படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டிருப்பான் போல என்று அவர்களில் சிலர் நினைத்துக்கொண்டார்கள்.
அவன் மேலாளர் அறைக்குச் சென்றான். அதுவரை குனிந்து கணக்குவழக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தவர், ஏதோ உள்ளுணர்வு உறுத்த சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். அந்த அழகி மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவர் வாயைத் துடைக்க நாலைந்து கைக்குட்டைகள் தேவைப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்னர்தான் அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்தவுடன் சற்றென்று அவருக்குப் பதற்றம் ஏற்பட்டது. மனைவியைத் தான் நீண்ட நேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டோமே எனப் பதறினாரோ என்னவோ? ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்காகத் தான் மனைவியை அழைத்துவந்ததுபோல் நடந்துகொண்டான்.
பெரிதாக எந்த வேலையும் நடைபெறவில்லை. மாலையாகிவிட்டது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டதால் அவன் மனைவியுடன் புறப்பட ஆயத்தமானான். வெளியே செல்ல எத்தனித்தபோது, அலுவலக செக்யூரிட்டி அவனை மட்டுமே போக அனுமதித்தான். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டான். அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அப்போதுதான் காலையில் நண்பர்கள் சிலர் தன்னை ஆச்சரியத்துடன் பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கேட்கலாம் என நினைத்தவனை செக்யூரிட்டி அழைத்துப் போய் காரணத்தைச் சொன்னார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்படி அந்த ஷரத்தைக் கவனிக்காமல் இருந்தான் என்று புரியவில்லை. அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது அலுவலகத்துக்குக் கணவனையோ மனைவியையோ அழைத்து வந்தால் அவர்கள் அலுவலக அடிமை ஆக்கிக்கொள்ளப்படுவார்கள் என. இப்படி ஏற்கெனவே அடிமையாக்கப்பட்டவர்கள் அந்த அலுவலகத்தில் ரகசிய அறையில் பணியில் உள்ளார்களாம். ரகசிய அறையில் என்ன பணி நடைபெறுகிறது என்பது ரகசியமாதலால் யாருக்கும் அதுபற்றித் தெரியாதாம்.
இந்த அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்த அவனுக்கு இந்த ஷரத்தோ இந்த விஷயமோ தெரியாமல் இருந்திருக்கிறது. ஆண்டுதோறும் அவன் பணி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறான். ஆனால், அப்படியோர் ஆபத்தான ஷரத்தைக் கவனிக்காமலே இருந்திருக்கிறான். எப்படியும் சட்டம் என்றால் சட்டம்தான். அலுவலகம் அதன் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவன் தனியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.
அவன் பின்னாலேயே வந்த அலுவலக நண்பன் அவனிடம் இப்படியாகிவிட்டதே உன் நிலைமை என வருத்தப்பட்டான். அப்போது ராஜகுமாரன் படத்தில் செந்தில் சிரித்ததுபோல் இடி இடியெனச் சிரித்தான் அவன். நண்பனுக்கோ ஆச்சரியம். இப்படியொரு துன்பகரமான சூழலில் உனக்கு எப்படிச் சிரிப்பு வருகிறது என்று கேட்டான். அப்போது, அவன் சொன்னான், தான் அழைத்துவந்தது தன் மனைவி அல்ல என்றும் மேலாளருடைய மனைவிதான் என்றும். அப்படியென்றால் மேலாளருக்கு அது எப்படித் தெரியாமல் போயிற்று என நண்பன் லாஜிக்காகக் கேட்டான். அலுவலகத்தில் இருந்த காரணத்தால் கடமையே கண்ணாகச் செயல்படும் மேலாளர் தன் மனைவியின் முகத்தைச் சுத்தமாக மறந்துவிட்டார். அவர் வீட்டுக்குப் போனதும் இருக்கிறது வேடிக்கை என்று கூலாகச் சொன்னான் அவன். இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குப் பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து பற்றி எதுவும் தெரியவில்லை என்பதே பொருள். சரி இந்தக் கதைக்கு ஏன் ரஜினி காந்த் படம் என யாராவது நினைத்தீர்களா? நினைத்தீர்கள் எனில் முதல் வாக்கியத்தைப் படியுங்கள் காரணம் தெரியும்.
செவ்வாய், டிசம்பர் 01, 2020
பக்கத்து வீட்டு ரோஜா
இயக்குநர்
M.பாஸ்கர் M.A. இயக்கிய நான்காம் படம் ‘பக்கத்து வீட்டு ரோஜா’. 1982 செப்டம்பர் 2 அன்று
வெளியாகியிருக்கிறது. ‘பைரவி’ படத்தில் நடிக்க மறுத்திருந்த நடிகர் முத்துராமனின் மைந்தனான
கார்த்திக்தான் இந்தப் படத்தின் நாயகன். இதில் அவருக்கு ஒரு காட்சியில் பெண் வேடமும்
உண்டு. இந்த ஆண்டில் நடிகர் கார்த்திக் நடித்த ‘நினைவெல்லாம் நித்யா’, ‘வாலிபமே வா
வா’, ‘இளஞ்ஜோடிகள்’ உள்ளிட்ட பத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு ஜோடியாக
நடிகை ராதா நடித்திருந்தார். 1982-ல் ராதா ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’,
‘காதல் ஓவியம்’ உள்ளிட்ட 14 படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திக், ராதா இருவரும்
இந்த ஆண்டில் ஆறு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். 1981-ல் வெளியாகி பெரிய வெற்றியைப்
பெற்ற ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகிய வெற்றி ஜோடி இவர்கள் என்பதே இதற்குக்
காரணமாக இருக்க வேண்டும்.
படத்தின் கதையும் தயாரிப்பும் கலைஞானம். அவருடைய
உதவியாளர் பனசை மணியன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இயக்கம் மட்டுமே பாஸ்கர்.
இசை சங்கர் கணேஷ். மனோரமா, கவுண்டமணி, ஜனகராஜ், S.S.சந்திரன், தியாகு உள்ளிட்ட பலரும்
நடித்திருக்கின்றனர். மலையாள நடிகர் பிரேம் நஸீரின் மகனான ஷாநவாஸ் எதிர்மறை நாயகனாகவும்
அப்போதைய பிரபல நடிகை ராணி பத்மினி நடனக்காரியாகவும் வேடமேற்றிருக்கிறார்கள். நிஜ வாழ்வில்
கொலைக்காளான ராணி பத்மினிக்கு இந்தப் படத்திலும் அதே கதிதான்.
மிக எளிய கதை. படத்தைப் பற்றி ஒரு வரியில்
சொல்ல வேண்டும் என்றால், பெண் ஒருவர் நகைமீது கொண்ட ஆசையால் எதிர்கொண்ட ஏற்ற இறக்கமான
சம்பவங்கள் என்று சொல்லலாம். பொதுவாகவே பாஸ்கர் தனது படத்துக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்குப்
பெரிதாக மெனக்கெடவில்லை. என்ன இருந்தாலும் இது சினிமாதான் என்ற புரிதல் காரணமாக இந்த
முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். இந்தப் படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு
நடிகர்களது பெயரே வழங்கப்பட்டிருக்கிறது. ராதாவுக்கு நகை என்றால் கொள்ளைப் பிரியம்.
கோயிலில் அர்ச்சகரிடம் இரவலாக அம்பாள் நகையையே கேட்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
யாராவது கண்ணைப் பறிக்கும் புது நகை ஒன்றை அணிந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும்
அதை எப்படியாவது அணிந்துபார்க்க வேண்டும் என்ற அடங்காத ஆசை அவருக்கு எழுந்துவிடும்.
நகைக்கடை அதிபர் மதன் ஒரு காமுகன். நகைகளுக்கு
மயங்கும் பெண்களைத் தன்வசப்படுத்தி மகிழ்பவன். அவனது நகைகளைப் பறிக்க முயன்ற கூட்டத்தினருடன்
சண்டையிட்டு அவனுக்கு கார்த்திக் உதவியதால் இருவரும் நண்பர்களாகின்றனர். தனது கடையிலேயே
மதன், கார்த்திக்கைப் பணியில் அமர்த்துகிறான். நகைக்கடைக்கு வரும் ராதா கார்த்திக்கை
அதன் உரிமையாளர் என எண்ணிக்கொள்கிறாள். அழகான பெண் என்பதால் கார்த்திக்கும் அதை அப்படியே
பராமரிக்கிறான். இருவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
தன்னைக் கடையின் உரிமையாளர் என நினைப்பதால்
தனக்கு உதவுமாறு மதனிடம் வேண்டுகிறான் கார்த்திக். ராதாவுக்காக அவனும் கார்த்திக்குக்கு
உதவுவதாக ஒத்துக்கொள்கிறான். ராதா குடும்பத்தினரிடம் கார்த்திக்கின் கடையில் தான் வேலை
பார்ப்பதாகச் சொல்கிறான் மதன். கார்த்திக் ராதா திருமணம் நடந்துவிடுகிறது. மணமான மறுநிமிடம்
ராதாவுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் ராதாவுக்கு கார்த்திக்கை மனதால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றாக இருந்தும் ஒன்றிணைய அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதைச் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.
பெண்களின் நகை மோகத்தால் அவர்களுக்கு ஏற்படும்
பாதிப்பைச் சுட்டிக்காட்டும் படம். நகைச்சுவையான திரைக்கதைதான் படத்தை நகர்த்துகிறது.
சிஸ்டர் என்று கூறியே பெண்களைக் கட்டிலில் தள்ளத்துடிக்கும் மதன் கதாபாத்திரம் வழியே
சமூகத்தில் சகோதரி என்னும் பதம் எப்படியான பொல்லாங்குப் போர்வை என்பதைச் சுட்டுகிறார்
இயக்குநர். பாஸ்கர் படங்களில் பெண்களின் உரிமை என்பது பேசப்பட்டாலும் பெண்களின் பாதுகாப்பு
என்பது வரம்புக்குள் இருக்கும்வரைதான் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இந்தப் படத்திலும்
அந்தப் போக்குதான் உள்ளது. என்றபோதும், ஆண்களின் புரிதலின்மையையும் படம் பேசுகிறது.
தன்னை நாடாத மனைவி ராதாவை வழிக்குக் கொண்டுவர இன்னொரு பெண்ணுடன் காதல் கொள்வதுபோல்
நடிக்கிறார் கார்த்திக். ஆண்களின் இந்த நடவடிக்கை எவ்வளவு அபத்தம் என்பதைப் படம் கவனப்படுத்துகிறது.
படத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் பெண் இயக்குநராக
வருகிறார் மனோரமா. நாயகர்கள் டூப் போடுவதை நக்கலடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வருகிறது.
நாயகியைச் சாட்டையால் அடிக்கும் காட்சியை டூப் போட்டு எடுக்கிறார்கள். தயாரிப்பாளர்
உதவி இயக்குநரிடம் ‘டூப்புக்கு வசனம் உள்ளதா?’ என்று கேட்கிறார். வாய்ப்பு கேட்டு வரும்
நடிகர் ஒருவர் பல் செட் வைத்துக்கொண்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனம் பேசி பல் தெறித்து
நிற்கிறார். கீழே விழுந்து கிடக்கும் பல் செட் தமிழ் சினிமாவைக் கேலியாகப் பார்க்கிறது.
சினிமாவில் இருப்பதால் அதை உன்னதமான வேலையாகக் கருதாமல், தனக்குக் கிடைக்கும் சிறு
சிறு வாய்ப்புகளில், அதன் அபத்தங்களை வெளிக்கொணரும் காட்சிகள் இயக்குநரின் முத்திரைகளாகின்றன.
முந்தையப் படங்களைப் போல் இதிலும் நட்பு, பாசம்,
காதல், பாலியல் வல்லுறவு, கொலை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான அனைத்து
அம்சங்களையும் கலந்து, தன்னால் இயன்ற அளவு தெளிவாகவும் நேர்த்தியாகவும் படத்தைத் தந்திருக்கிறார்
பாஸ்கர். யூடியூபில் இதன் மட்டமான பிரிண்ட்தான், அதுவும் பாடல்கள் எவையுமின்றிக் கிடைக்கிறது.
ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018
கட்டிப்பிடி கட்டிப்பிடிடா
![]() |
| ஓவியம்: வெங்கி |
ஞாயிறு, ஜூலை 15, 2018
தண்ணீர் சாமி
![]() |
| ஓவியம்: வெங்கி |
ஞாயிறு, ஜூன் 24, 2018
அறுபத்தியெட்டு அங்குலத் தொப்பைக்காரர்
![]() |
| ஓவியம் வெங்கி |















