இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், டிசம்பர் 03, 2020

நிலவறைக் குறிப்புகள்: நிலைக்கண்ணாடி போன்றவை


பரிசுத்த வேதாகமத்தில் பிரசங்கி என்னும் அதிகாரத்தின் ஒன்றாம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 18ஆம் வசனம் இப்படிச் சொல்கிறது: அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு, அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன்.’ ஃபியோதர் தஸ்தவ்யெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள் நாவலும் அதையே முன்மொழிகிறது. மனிதன் மகிழ்ச்சியாக இருக்க இயலாதவன்; அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியில் நிலைக்க முடியாது; அவனது மனம் சதா அவனை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும், இதிலிருந்து மீள்தல் சாத்தியமற்றது என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறது இந்த நிலவறைக் குறிப்புகள்

தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலில் தன்னைப் பற்றிச் சொல்பவன் ஒரு நிலவறை மனிதன். ஆனால், அவன் தன்னைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அவன் ஒரு பிரதிநிதியாகத்தான் இருக்கிறான். அவனைச் சமுதாயம் ஒதுக்கிவைத்திருக்கிறதா அவன் சமுதாயத்தை ஒதுக்கிவைத்திருக்கிறானா என்பது அவ்வளவு எளிதில் விடைகாணக்கூடிய வினாவன்று. அவனது இயல்புகளைச் சொல்லும்போது அவனிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மனத்தின் பாவனை, ஒப்பனை எல்லாவற்றையும் களைந்துவிட்டு பிறந்தகுழந்தையின்  தன்மையுடன் அவற்றை வெளிப்படுத்துகிறான். இந்த வாக்கியத்தில் ஓர் ஒப்பனை வந்து அமர்ந்துவிட்டது. இப்படிச் சொல்வதால் இந்த வாக்கியத்திலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன் என்று எனக்குள் வாழும் நிலவறை மனிதன் என்னைப் பார்த்து ஏளனம்செய்கிறான். நீயாக எழுதிவிட்டு வாக்கியத்தின் மீது பழிபோடுகிறாயே நியாயமா? என்று கேட்கிறான். இப்படியான கேள்விகளை நிலவறைக் குறிப்புகளில் நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளலாம். 

இந்த நாவலை ஒருமுறை வாசித்தால் போதாது; ஒவ்வொரு முறையும் அது தன்னை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம். ஆனால், மகிழ்ச்சி என்பதை ஆய்வகத்தில் கொண்டு நிறுத்தும் நிலவறை மனிதன் அதையும் ஈவு இரக்கமின்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுகிறான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனது கேள்விக் கணைகள் உங்கள் கழுத்தைப் பிடித்து திருகுகின்றன, உங்கள் மனசாட்சியை உலுக்குகின்றன. 

தன்னுணர்வு அற்றவன் எப்படி மனிதனாக முடியும் என்ற கேள்வி எழுப்பும் அதே வேளையில் மனிதனின் தன்னுணர்வு அவனை மகிழ்ச்சிக் கடலிலிருந்து வெளியேற்றித் துன்பக் கரையில் போட்டுவிடும் அபத்தத்தை நிலவறை மனிதன் மிக இயல்பாக உணர்த்தும்போது, இயல்பான மனிதனுக்கு அது புரிவதேயில்லை. ஆனால், தன்னுணர்வு கொண்ட மனிதன் அதைப் புரிந்துகொண்டு அவதியுறுகிறான். இயல்பான மனிதன் முட்டாளாக இருக்கலாம், சராசரியானவனாக இருக்கலாம். ஆனால், அவனைப் பார்த்து தன்னுணர்வு கொண்ட நிலவறை மனிதன் பொறாமைப்படுகிறான். அவனைப் போல் தன்னால் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறான். அதே நேரத்தில் அவனை முட்டாள் எனத் தூற்றுகிறான். இந்த வேறுபாடு உங்களுக்கு விளங்குகிறதுதானே?

நிலவறைக் குறிப்புகள் நாவல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நிலவறை மனிதன் தனது இயல்புகளைக் குறித்து விவரிக்கிறான். இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தான் எலி வளை போன்ற நிலவறையில் வசித்துவருவதையும் தான் யார் என்பதையும் வாசகர்களிடம் சொல்கிறான். ஆனால், அவன் வாசகர்களுக்காக எழுதவில்லை தனக்காக எழுதுவதாகவும் சொல்கிறான். இப்படிக் கணம்தோறும் நிலைமாறும் சிலவேளை நிலைதடுமாறும்  மனத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கிறான். அதன் எல்லா வேடங்களையும் நுட்பமாகக் கவனிக்கிறான். எதனால் இப்படி வேடம் புனைகிறது என்று ஆராய்கிறான். தனது மேன்மையைச் சொல்லி நமது பாராட்டைக் கோரவில்லை அவன். தனது கீழ்மையைச் சொல்லி நமது ஏளனத்தையும் எதிர்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால், தனது மேன்மை கீழ்மை எல்லாவற்றையும் எந்தப் பிரதிபலனையும் பாராமல் சொல்கிறான். அதனால், அவனுக்கு ஆசுவாசம் கிடைக்கலாம். ஆனால் ஆசுவாசம் கிடைக்கும் என்பதற்காக அவன் அதைச் சொல்லவில்லை.  

நிலவறைக் குறிப்புகளின் இரண்டாம் பாகத்தில் நிலவறை மனிதன் எதிர்கொண்ட சில சம்பவங்களை விவரிக்கிறான். அந்தச் சம்பவங்கள் அவனை அலைக்கழிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் நம்மில் பலர் எதிர்கொண்டதைப் போன்றவைதாம். இவற்றைப் போன்ற சம்பவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கலாம். நாமும் நிலவறை மனிதன் போன்ற அவசத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால், நம்மால் அதைத் தீர்மானமாக விளக்க முயன்றிருக்காது. ஆனால், நிலவறை மனிதன் அதைத் தீர்க்கமான தருக்கங்களுடன் எடுத்துவைக்கிறான். தன்னிலிருந்து விலகி தனது நடத்தையையும் அவன் கறாராக விமர்சிக்கிறான். சிலபோது, தனது நடத்தைகளுக்கான காரணத்தையும் மொழிகிறான். இந்தத் தருக்கத்தை அவனிடம் எடுத்துக்காட்டும் அவனது தன்னுணர்வுதான் அவனது மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. 

நிலவறை மனிதனால், ஒரு எஜமானனாகவோ ஒரு பணியாளனாகவோ ஒரு நண்பனாகவோ ஒரு காதலனாகவோ ஏன் ஒரு மனிதனாகவோ கூட இருக்க இயலவில்லை. அது தான் அவனது துயரம். அவனுக்குக் கிடைக்கும் அன்பையும் அவனால் அனுபவிக்க இயலவில்லை. அவனது தன்னுணர்வு அவனைச் சதா கலக்கத்திலேயே காலங்கழிக்க வைக்கிறது.  நிலவறை என்பது சிறிய குடிலாக இருக்கலாம் சிறிய பொந்தாக இருக்கலாம் பெரும்பரப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், அங்கே வசிக்கும் மனிதனின் மனம் மிகச் சுருங்கிக் கிடக்கிறது. அது அவனை நிம்மதியின்மையில் மூழ்கடிக்கிறது. தன்னைப் பெரிய அறிவாளி எனக் கருதும் நிலவறை மனிதனால் அவன் முட்டாளாகக் கருதும் இயல்பான மனிதன் துய்க்கும் இன்பத்தைக்கூடத் துயக்க இயலவில்லை. 

மகிழ்ச்சியை அவன் வேண்டினாலும் அவனால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. அவனது மகிழ்ச்சிகூட அவனைக் கையைப்பிடித்து துன்பத்துக்கே அழைத்துச் செல்கிறது. அவன் அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பள்ளிக்காலத்திலேயே வாசித்துவிட்டான். ஆனால், அது அவனது இருண்ட வாழ்க்கையில் எந்த வெளிச்சத்தையும் பாய்ச்சவில்லை. அதன் வெளிச்சமெல்லாம் அவனது கலக்கத்தைத் துலக்கப்படுத்தவே உதவுகிறது. நட்பு, உறவு, காதல் என்ற எல்லா உணர்வுகளிலிருந்து விடுபட்ட மனிதனாக அவன் இருந்தபோதும் அதன் காரணமாக அவன் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவில்லை. வெறுப்பு சமுத்திரம் அவனது மூச்சை முட்டவைத்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களுடன் அமர்ந்து ஒரு விருந்தை அவனால் இயல்பாக உண்ண இயலவில்லை. அங்கே நடக்கும் அபத்தங்கள் அவனைப் பாடாய்ப்படுத்துகின்றன. அதனால் அவன் வெளிப்படுத்தும் எதிர்வினையோ அவனை இன்னும் நார்நாராய்க் கிழித்துவிடுகிறது. குருதி வழிய வழிய குமைகிறான். எல்லாராலும் வெறுக்கப்படும் மனிதனாகத் தான் இருக்கிறோமோ எல்லாரும் தன்னைப் புறக்கணிக்கிறார்களோ அவமதிக்கிறார்களோ என எண்ணும் அதே வேளையில் தன்னால் அப்படி மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அவன் உணர்கிறான். தன்னைத் தேடி வந்து நேசம் செலுத்திய பெண்ணின் நேசத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னதமான பளிங்கு மாளிகை போன்ற ஒன்றில்கூட அவனால் வசித்திருக்க முடியாது. அந்தப் பளிங்குமாளிகையையும் அவன் நிலவறையாக மாற்றிக்கொண்டுவிடுகிறான்.  

எந்தப் பெருமிதமும் இல்லாத மனிதனாக இருக்க நேர்வதன் சோகத்தை அவன் பரப்பும் அதே நேரம் பெருமிதங்கள் மீது சாணியடிக்கவும் அவன் தவறவில்லை.  ஒரே சமயத்தில் அவனது மனம் பல்வேறு எண்ணக் குழப்பங்களால் பீடிக்கப்படுகிறது. அந்த மாயச் சுழலில் அவன் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து  அவன் வெளிவர விரும்பினாலும் அதிலேயே கிடந்து உழலவும் பிரியம் கொள்கிறான். இதற்கெல்லாம் என்னதான் முடிவு? எந்த முடிவும் இல்லை என்பதே முடிவு. இப்படியொரு நாவலை எழுதுவதேகூட அவனுக்குப் பெரிய உவப்புக்குரியதாக இல்லை. அதை ஒரு பெரிய தண்டனை என்றுகூடச் சொல்கிறான். 

இந்த நாவலைப் படித்து முடித்தபின் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றவில்லை; இப்படித்தானே இருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதுதான் நாவல் உருவாக்க விரும்பிய எண்ணமா எனவெல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த நாவலை வாசிக்கும்போது, ஒரு நிலைக்கண்ணாடி முன் அமர்ந்திருப்பதுபோல்தான் உள்ளது. இப்படியான நாவல்கள் நமது துயரத்திலிருந்து நம்மை விடுவிடுப்பதில்லை. ஆனால், நமது துயரங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என ஏளனம் செய்கின்றன. இன்பத்துக்கும் துன்பத்துக்குமான ஊடாட்டத்திலேயே வாழ்க்கை சிதைந்துகொண்டேயிருக்கிறது. சிதைவுகளின் வழியே சிரித்துக்கொண்டேயிருக்கிறோம். அந்தச் சிரிப்புக்குப் பொருளென்ன?

நிலவறைக் குறிப்புகள் 
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 
தமிழில்: எம்.ஏ.சுசீலா
விலை ரூ. 250/-
வெளியீடு: நற்றிணை பதிப்பகம் 
தொடர்புக்கு: +919486177208


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக