இந்த வலைப்பதிவில் தேடு

விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 29, 2025

ரஜினியாவாரா விஜய்?

1975இல் திரையுலகுக்கு ரஜினி காந்த் வந்தார். 50 ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஐம்பதாண்டுகளில் தீபாவளிக்கு ரஜினியின் 19 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அதுவும் 1995வரை 18 படங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2021இல் அண்ணாத்தயும் வெளியானது.

முதன்முதலில் 1976இல் மூன்று முடிச்சு வெளிவந்தது. 1978 தீபாவளிக்கு, மூன்று ரஜினி படங்கள் திரைக்கு வந்துள்ளன. 1976 முதல் 1981வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் [ஆறு புஷ்பங்கள் (1977); தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய்மீது சத்தியம் (1978); அன்னை ஓர் ஆலயம் (1979); பொல்லாதவன் (1980); ராணுவ வீரன் (1981)], 1983முதல் 1989வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளும் [தங்க மகன் (1983), நல்லவனுக்கு நல்லவன் (1984), படிக்காதவன் (1985), மாவீரன் (1986), மனிதன் (1987), கொடிபறக்குது (1988), மாப்பிள்ளை (1989)] தீபாவளிக்குப் படங்களை வழங்கிய ரஜினிக்கு 1990, 1993,1994 ஆகிய ஆண்டுகளிலும், அதன் பின்னர் 2020 வரையிலும் ஒரு படம்கூடத் தீபாவளிக்குத் திரைக்கு வரவில்லை.

1990 தீபாவளிக்குத் திரைப்படம் வராததால் அவருடைய ரசிகர்கள் அந்தத் தீபாவளி நாளைத் துக்க நாள் எனச் சொல்லித் திரிந்தார்கள். மதுரையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாகக்கூட தகவல் உண்டு. அடுத்த ஆண்டு 1991இல் தளபதியும், 1992இல் பாண்டியன் திரைப்படமும் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைத்தன. இன்னும் அவர் வீட்டு முன்னர் தீபாவளி அன்று ரசிகர்கள் சிலர் திரள்கிறார்கள். இது ரஜினியின் நிலைமை.
இப்போது விஜய் கதைக்கு வருவோம். அவர் நடித்த 12 படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாயின. முதலில் தீபாவளிக்கு வந்த படம் சந்திரலேகா (1995). தீபாவளி அன்று ரஜினியின் முத்து படம் வெளியான அதே தீபாவளிக்கு வந்து படுதோல்வியடைந்த படம் இது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2000இல் பிரியமானவளே வந்தது. 2001இல் ஷாஜகான் தொடங்கி, 2019இல் பிகில் வரை, பகவதி (2002), சிவகாசி (2005), அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012), கத்தி (2014), மெர்சல் (2017), சர்கார் (2018) என மொத்தம் 10 படங்கள் வெளியாயின. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் படம் வெளியானதே ஒரே ஒரு முறைதான். அதுவே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரைப்படத் துறையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துவரும் ரஜினி பொதுமேடைகளில் எந்தவித பெரிய ஒப்பனையும் இன்றி முடியற்ற தலையுடன் தோன்றிவிடுகிறார். அப்படிப்பட்ட நடிகர் ரஜினியையே அரசியல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடவைத்துவிட்டது. ஆனால், நடிகர் விஜய் ஒப்பனையற்று ரசிகர்களைச் சந்திக்கத் துணியாமல் முழு ஒப்பனையுடன் அதுவும் குளிர்சாதனக் கூண்டு வண்டியில் வந்து மக்களைச் சந்திக்கிறார். அப்படிப்பட்ட விஜய் அரசியல் மாற்றத்துக்கான தலைவர் என்று அறியாமையாலோ அவசியத்தாலோ நம்பும் மனிதர்கள் கலர் கலராக ரீல் விடுகிறார்கள். அவரது செல்வாக்கின் ஆற்றலை மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். எல்லாம் 2026 தேர்தல் முடிவு வரும் வரையில்தான். முடிவு வந்த பின்னர் அவருக்கான ஆதரவு வெட்டவெளிச்சமாகிவிடும். அது அஞ்சு … ஆறு… விழுக்காடாக இருக்கலாம்… அதுவரை கம்பு சுத்துபவர்கள் சுத்திக்கொண்டே இருக்கலாம்.

திங்கள், அக்டோபர் 27, 2025

ராமராஜனுக்கும் விஜய்க்கும் முதலமைச்சர் ஆசை


நடிகர் விஜய் போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக எண்பதுகளின் இறுதியில் இருந்தார் ராமராஜன். இளையராஜா இசையமைத்த

அவருடைய படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவின. விஜய் போல் அவர் அரசியலில் நடிகராக இல்லை. அவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆர்வம் இருந்தது. அதிமுகவில் இணைந்து 1998இல் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
திருச்செந்தூரில் அப்போது, மொத்தம் 12 பேர் மனுத் தாக்கல் செய்தனர். அதில் ஒருவரது மனு தள்ளுபடியானது. நான்கு பேர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இறுதியில் களத்தில் ஏழு பேர் எஞ்சினர். ஊரகப் பகுதியின் இளம்பெண்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நடிகர் ராமராஜனை எதிர்த்து எந்தப் பெண்ணும் போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஏழு பேரும் ஆண்கள்.
1998 பிப்ரவரி 22 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் மார்ச் 2 அன்று எண்ணப்பட்டு,முடிவு அறிவிக்கப்பட்டது.
அப்போது, திருச்செந்தூரின் மொத்த வாக்காளர்கள் 10,14,366 பேர். அவர்களில் 53.95 விழுக்காட்டினர் வாக்களித்தார்கள். 5,47,234 வாக்குகள் பதிவாயின. அவற்றின் செல்லுபடியானவை 5,35,637 வாக்குகள்.
அவற்றில் நடிகர் ராமராஜன் 2,64,290 (49.34%) வாக்குகளைப் பெற்று, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனை 46,855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டார். ஆதித்தன் பெற்ற வாக்குகள் 2,17,435 (40.59%)
எஞ்சிய ஐவரும் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர். அதிலொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குமரி அனந்தன் அவர்கள். அவருக்கு 38,291 (7.15%) வாக்குகள் கிடைத்திருந்தன.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 22 இடங்களில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளில் தோல்வியுற்றது. டி ஜெயகுமார் (மத்திய சென்னை), கா.காளிமுத்து (சிவகங்கை), கிருஷ்ணமூர்த்தி (திருப்பத்தூர்), டாக்டர் கோபால் (நாகப்பட்டினம்) ஆகிய நால்வரும் தோல்வியைத் தழுவியவர்கள்.
கா.காளிமுத்து தோல்விகண்ட சிவகங்கை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றிபெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலியில் போட்டியிட்ட நடிகர் சரத் குமார் தோற்றுப்போனார்.
முதலமைச்சர் கனவு கண்ட ராமராஜனை அந்த ஒரு தேர்தலோடு அரசியல் ஏறக்கட்டிவிட்டது.
(ராமராஜனின் பிறந்த நாளான அக்டோபர் 18 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு)

செவ்வாய், நவம்பர் 28, 2023

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?



கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடைய சந்தை மதிப்பும் கூடியிருக்கிறது. ஏனெனில், சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்காத நிலையில் அவருக்கு நம்பிக்கையூட்டிய இயக்குநராக மாறியிருக்கிறார் நெல்சன். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் அவர் இயக்கப்போவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை அவர் இயக்கிவருகிறார். 2018இல் வெளியான கோலமாவு கோகிலா என்ற சராசரியான பொழுதுபோக்குப் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் அடுத்த தலைமுறை இயக்குநர்கள் காலூன்றத் தொடங்கிவிட்டார்கள் என்பதன் அறிகுறியாக நெல்சன் போன்ற சமீப கால இயக்குநர்களின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த இயக்குநர்கள் பற்றிய விவரத்தை அறியும்போது ஒரு சுவாரசியமான விஷயம் பளிச்சிடுகிறது. இதுவரை தமிழ்த் திரையுலகில் பெயர் வாங்கிய இயக்குநர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வெறும் வணிகப் படங்களை மட்டும் இயக்கியவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரதிராஜா காலம் தொடங்கி வெற்றிமாறன், பா.இரஞ்சித் காலம்வரை இதுதான் நியதி. இந்தப் போக்கில் சிறிய மாற்றம் தென்படுகிறது. அதன் அறிகுறியாலேயே நெல்சன் போன்ற பொழுதுபோக்குப்படத்தை இயக்கியவர்களும் இயக்குநர்கள் என்னும் பெயரில் அறியப்படுகிறார்கள். தொண்ணூறுகளில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களை இயக்கத் தொடங்கிய காலத்து நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதற்கு முந்தைய எண்பதுகளில் காலத்தில் எஸ்பி.முத்துராமனும் இயக்குநராக இருந்தார்; மகேந்திரனும் இயக்குநராக இருந்தார். ஆனால், இருவருக்குமிடையேயான வேறுபாடு இருந்துகொண்டுதான் இருந்தது.

புவனா ஒரு கேள்விக் குறி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, எங்கேயோ கேட்ட குரல் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவராக எஸ்பி.முத்துராமன் இருந்தபோதும், அவர் சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற பொழுதுபோக்குப் படங்களாலேயே அதிகம் அறியப்பட்டிருந்தார். ஆனால், உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்குத் திரையுலகில் கிடைத்த இடம் வேறு மாதிரியானது. அவர் ஜானி போன்ற வணிகச் சூத்திரத்தின் அடிப்படையிலான படத்தை இயக்கியபோதும், அது மகேந்திரனின் முத்திரையுடன் அமைந்திருந்தது. அதுதான் இயக்குநரின் ஆற்றலுக்கும் ஆதிக்கத்துக்கும் சான்று. மகேந்திரனும் எஸ்பி முத்துராமனும் இணைந்தும் ஆடுபுலி ஆட்டம், தையல்காரன் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு தெளிவாக வெளித் தெரிந்தது.

தொண்ணூறுகளில்கூட ஷங்கர் ஆக்‌ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படங்களால்தான் அதிகம் அறியப்பட்டார், ஆனால் மணி ரத்னத்துக்கு அளிக்கப்பட்ட இடம் வெறும் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு இயக்குநருக்கானதில்லை. இப்போதைய திரைப்பட இயக்குநர்களின் பயணத்தில் இப்படியான இடைவெளி சுத்தமாக அழிந்துவருகிறதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. கலைப் படம், வணிகப் படம் என்ற இடைவெளி இப்போது இல்லை. இவை இரண்டும் கலந்த படமாக அது மாறியிருக்கிறது. ஆழமான கதையம்சம் கொண்ட படம் காலாவதியாகிவிட்டதோ என்னும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற மாறுபட்ட திரைக்கதை வருகிறது ஆனாலும், பாக்யராஜ் அளவுக்குத் தெளிவான திரைக்கதையை எழுதும் இயக்குநர்கள் இப்போது யார் என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பாலுமகேந்திராவின் சீடரான பாலா இயக்க வந்தபோது, பொழுதுபோக்குப் படத்துக்கும் தீவிரப் படத்துக்குமான இடைவெளி குறையத் தொடங்கியது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் எனத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அனைத்துப் படங்களும் பொழுதுபோக்குக் கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவருடைய படங்கள் மாற்றுப்படங்கள் என்ற மயக்கத்திலேயே மதிப்பிடப்படும்.அவன் இவன் போன்ற சராசரிக்கும் கீழான படங்கள் கூட பாலா படம் என்ற மதிப்புடன் அணுகப்பட்டன. பாலுமகேந்திராவின் மற்றொரு சீடரான வெற்றிமாறன் பொழுதுபோக்குப் படங்களைக் கலாபூர்வமான முறையில் உருவாக்கும் இயக்குநராக இருக்கிறார். 

இவருக்கும் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்தாம் இப்போது உருவாகிவருகிறார்கள். இவர்களை முந்தைய தலை முறையிலிருந்து வேறுபடுத்துவது அவர்களது பின்னணியும் படங்களை உருவாக்கும் முறையும். ஓர் இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் இருந்து பிறகு படம் இயக்க வந்தவர்கள் அல்ல இவர்கள். நெல்சனையே எடுத்துக்கொண்டால், அவர் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி அப்படியே சினிமாவுக்கு வந்திருக்கிறார். எண்பதுகளின் மத்தியில் ஊமைவிழிகள் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரியில் படித்துமுடித்த மாணவர்கள் பலர் திரைத் துறையில் காலடி பதித்தார்கள். அதைப் போல் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து திரைத்துறைக்கு வருபவர்கள் அநேகர்.

சமீப ஆண்டுகளில் முதல் படத்தை இயக்கி, கவனிக்கத் தக்க அளவில் பெயரைப் பெற்றவர்கள் என துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன், சதுரங்க வேட்டை வினோத், இரும்புத்திரை பி. எஸ். மித்ரன், உறியடி விஜய குமார், கிடாரி பிரசாத் முருகேசன், மாநகரம் லோகேஷ் கனகராஜ், பாம்புச் சட்டை ஆடம் தாசன், எட்டுத் தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், ஒரு கிடாயின் கருணை மனு சுரேஷ் சங்கையா, புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி, அறம் மீஞ்சூர் கோபி, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ், ராட்சசன் ராம் குமார், 96 பிரேம் குமார், ஜீவி வி ஜே கோபிநாத், க/பெ ரணசிங்கம் பி விருமாண்டி எனச் சிலரைக் குறிப்பிடலாம். சிலர் விடுபட்டிருக்கக்கூடும். இவர்களில் தொடர்ந்து ஒரு படத்துக்கு மேல் படங்களை இயக்கியவர்கள் எனப் பார்க்கும்போது, பலர் பட்டியலிலிருந்து விலகிவிடுகிறார்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து சந்தோஷ் பி ஜெயகுமார், திரௌபதி மோகன் ஜி ஆகியோர்களும் இதே தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் என அறிப்பட்டிருப்பது நகைமுரணே.

மிக இளைய வயதில் இயக்குநராகிவிட்ட கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு மூலம் கவனம் பெற்றிருந்தார் என்றபோதும் அந்தப் படம் மிகவும் சாதாரண த்ரில்லர் வகையைச் சார்ந்ததே. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஃபியா மிகவும் சுமாரான படமே. இரும்புத் திரையில் புதுமையாக இயக்குநராக வெளிப்பட்ட மித்ரன், ஹீரோ படத்தில் மிகச் சாதாரண இயக்குநராக மாறியிருந்தார். உறியடி வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட படம் என்ற அளவில் பொருள்கொள்ளத்தக்கதே தவிர உறியடி 1, 2 ஆகிய படங்களை வைத்து அவர் பிரமாதமான இயக்குநர் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ற வகையில் மதிப்பிடும்போது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஈர்த்த அளவுக்கு அவருடைய கைதியோ மாஸ்டரோ ஈர்க்கவில்லை. ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டு படங்களுமே மாறுபட்டவைதாம். முதல் படமான புரியாத புதிர் கிம் கி டுக்கின் பியட்டா படத்தை நினைவூட்டியது.

இயக்குநராகச் சொல்லிக்கொள்ளும்படியான படங்களைத் தரும் முனைப்பு அவருக்கு உள்ளது என்பதை அவருடைய படங்கள் சொல்கின்றன. பிரசாத் முருகேசன், ஆடம் தாசன், சுரேஷ் சங்கையா, பி.விருமாண்டி ஆகியோரது அடுத்தடுத்த படம் வெளிவரும்போதுதான் அவர்கள் எப்படி இயக்குநராகப் பரிணமிக்கிறார்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும். ராம் குமார் இயக்கிய ராட்சசன் பெரிய வெற்றியைப் பெற்றது என்றபோதும், அந்தப் படத்தை அவர் கையாண்டவகையில் வெற்றிபெற்ற படத்தின் இயக்குநர் என்று அவரைச் சொல்ல முடிகிறதே ஒழிய வெற்றிகரமான இயக்குநர் என்று சொல்ல முடியவில்லை.

96 வழக்கமான காதலை வழக்கத்துக்கு மாறாகச் சொன்ன படம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காதல் படம் ரசிகர்களுக்குத் தேவையாயிருக்கிறது. ஒரு தலை ராகம், இதயம், காதல் கோட்டை, ஆட்டோ கிராப் வரிசையில் 96 இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். பிரேம் குமார் சிறப்பான இயக்குநராக என்பதைச் சொல்தல் கடினம். தொடர்ந்து இரண்டு படங்களையும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகவே, அவர் மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. தனது மூன்று படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான ஆளுமையைச் செலுத்தியவர் என ஹெச். வினோத் இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தது. அடுத்து அஜித்தின் வலிமையை இயக்கிவருகிறார். தொடர்ந்து ஓர் இயக்குநராக அவர் சாதித்திருக்கிறார் என்று நம்புவதற்கான சான்றுகள் இப்படங்கள்.

இயக்குநர் சிகரம் என்ற பெயரை பாலசந்தருக்குக் கொடுத்து தமிழ்த் திரையுயலகம் கௌரவித்திருக்கிறது. ஆனால், அவரைவிட சினிமாவை ஒழுங்காகக் கையாண்டு வெற்றிபெற்றவர் என ஸ்ரீதரைத் தான் சொல்ல முடியும். அவர் பொழுதுபோக்குப் படங்களை இயக்கியவர் என்ற வகையில் அறியப்பட்டிருந்த போதும் சினிமாவை சினிமாவாக உருவாக்கியவர் அவர். இப்போதைய இயக்குநர்களில் ஒரு ஸ்ரீதரோ, பாலசந்தரோ பாரதிராஜாவோ பாலுமகேந்திராவோ உருவாவார்களா என்பது சந்தேகமே. வேண்டுமானால், ஒரு ஷங்கரோ, மணிரத்னமோ உருவாகலாம். ஏனெனில், காலம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அதற்கேற்பத் தான் இயக்குநர்களும் வெளிப்படுவார்கள்.

தமிழ் இதழ்களில் முன்னர் பொழுதுபோக்கு இதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. இப்போது அப்படியான வேறுபாடு அழிந்துவிட்டது. தீவிர இலக்கிய இதழ்களில் எழுதிய பலர் பொழுதுபோக்கு இதழ்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றம் இது. அது போல் தமிழ் சினிமாவின் இயக்கத்திலும் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. புத்தாயிரத்தின் நவீன இளைஞர்கள் திரைத்துறையில் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் உலகப் படங்களையும் இணையத் தொடர்களையும் பார்த்த மயக்கத்தில் படமெடுக்க வந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய படங்களில் வெளிப்படுகிறது. தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

மேலும், அந்தக் கால இயக்குநர்களுக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அவர்கள் இயக்குநராகக் கோலோச்ச கால அவகாசம் இருந்தது. ஆனால், இப்போது படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தக் கால அவகாசம் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். இரண்டு மூன்று படங்கள் இயக்கிய பிறகே அவர்களைத் தேடத் தான் வேண்டியதிருக்கிறது. அதற்குள் அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பார்களா, பெயரைச் சம்பாதிப்பார்களா என்னும் கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்மதி இணையதளத்தில் 2021 அக்டோபர் 16 அன்று வெளியான கட்டுரை.  

சனி, ஆகஸ்ட் 21, 2021

புல்லுக்குப் பாயும் நீரா இலவசங்கள்?


திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்து அமைச்சராகியிருக்கும் தமிழ்நாட்டு நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியபோது, சமூகப் பொருளாதார நீதிக்கு ஏற்ப எல்லாருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது, அப்படிச் செய்தால் அரசு திவாலாகிவிடும் என்று கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 4,000 ரூபாய் உதவி தகுதியற்ற பலருக்கும் சென்று சேர்ந்தது என்பதை அவர் வருத்தத்துடன் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அதே போல் அரசு ஊழியர் ஓய்வூதிய விஷயத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த அரசின் பொருளாதார நிலைமை கைகொடுக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அப்படிச் சொன்னபோதுதான், எல்லாவற்றையும் இலவசங்களாகக் கொடுத்தால் அரசு திவாலாகிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  நிதியமைச்சரின் இந்தக் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இதைத் தொடக்கமாகக் கொண்டு இலவசங்கள் பற்றிய சில விஷயங்களை அலசிப் பார்க்கலாம்.  

தமிழ்நாட்டு அரசியல் களத்தில், குறிப்பாகத் தேர்தல் அரசியலில் இலவசங்கள் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இலவசங்கள் குறித்த ஆதரவான எதிரான கருத்துகளுக்கு எப்போதுமே பஞ்சமேயில்லை. பொதுவாகவே இலவசங்கள் தொடர்பான எதிர்ப்பு மனநிலை உள்ளதுபோலவே அவை தொடர்பான சாய்வு மனநிலையும் நம்மிடையே உள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய்க்குப் பொருள்களை வாங்குவோம் அதற்காகப் பத்து ரூபாய் பெறுமான பொருள் இலவசமாகக் கிடைத்தால் போதும் கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தது போல் மகிழ்வோம். உண்மையில் அது இலவசமாக இருக்காது நம்மிடம் அதற்கும் சேர்த்துத்தான் பணம் பெற்றிருப்பார்கள். ஆனால், அது குறித்து நாம் யோசிப்பதேயில்லை. அந்த நேரத்து சந்தோஷம் நமக்கு எப்போதும் முதன்மையாகிவிடுகிறது. மேலும், ஆழமாக யோசிக்கும்போதுகூட, அதற்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்துவிடுகிறோமே ஆதலால் அது இலவசமன்று நமக்கான உரிமைதானே என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். இப்படிச் சந்தோஷப்படும் நம்மிடம் யாராவது ஒருவர் சும்மா எதையாவது கொடுத்தால் உடனே நாம் வாங்கிவிடுவதில்லை. அவர் ஏன் நமக்குக் கொடுக்க வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்கிறோம். ஓரிடத்தில் இலவசத்தை எந்தக் கேள்வியுமின்றி பெறுவதில் மகிழ்ச்சியடையும் நாம்தான் இன்னோரிடத்தில் அதே இலவசம் தொடர்பாக ஆயிரம் சந்தேகங்களை எழுப்பிக்கொள்கிறோம்; இரண்டு வகையாகவும் நாம்தான் செயல்படுகிறோம்.

சில இடங்களில் இலவசத்தை அனுபவிக்கும் நாம் சில இடங்களில் அதே இலவசத்தை அனுபவிக்க மறுக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு? எந்த இடத்தில் நாம் அனுபவிக்கிறோம் எந்த இடத்தில் மறுக்கிறோம் என்பதை நிதானமாகச்  சிந்தித்துப்பார்க்கும்போது, நமக்கு உரிமை என்று நம்புமிடத்தில் நாம் அதை அனுபவிக்கிறோம், நமக்கு உரிமையானதில்லை என்று கருதுமிடத்தில் அதை மறுத்துவிடுகிறோம். ஆக, இலவசம் பெறுவது தொடர்பாக நமக்கு ஒரு தெளிவு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் ரயிலில் சிலர் வெறுமனே பிச்சை கேட்டுச் செல்வார்கள். சிலரோ அந்த ரயில் பெட்டியைச் சுத்தப்படுத்தியபடி காசு கேட்பார்கள். வெறுமனே பிச்சை கேட்பவருக்குக் கொடுப்பவர்களும் இருப்பார்கள்; சுத்தப்படுத்திவிட்டுக் காசு கேட்பவருக்குக் கொடுக்காதவர்களும் இருப்பார்கள். பெறுபவர்களுக்கு ஒரு தெளிவு இருப்பதைப் போல் கொடுப்பவர்களுக்கும் ஒரு தெளிவு இருக்கவே செய்கிறது.

இப்படி இலவசத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளபோது, அது தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பு. அதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு தரும் இலவசங்கள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன; அதே நேரத்தில் ஒரு தரப்பாரால் வரவேற்கவும் படுகின்றன. இலவசங்கள் தருவதால் மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் என்கிறது ஒரு தரப்பு. இலவசங்கள் மக்களுக்கான உரிமைதான் அரசுகள் அத்தகைய இலவசங்களைத் தருவதில் எந்தத் தவறுமில்லை அதே வேளையில் அது ஜனநாயக நாட்டில் மக்கள் நலம் நாடும் அரசின் கடமையே என்றுரைப்பாரும் உண்டு.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டில் ஆட்சியதிகாரத்தை காங்கிரஸிடமிருந்து கைப்பற்றிய திமுகவின் ஆட்சிதான் இத்தகைய இலவசங்களுக்கு வழிவகுத்தது என அண்ணாவின் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் திட்டத்தைக் கைகாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அதே மனிதர்கள், அந்தத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, அரசின் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை என்பதையும் குறையாகச் சொல்வார்கள். அண்ணாத்துரை தலைமையில் அமைந்த அந்த ஆட்சி தமிழ்நாட்டை ஒரு முன்னுதாரண மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது. அப்படியமைந்த ஆட்சி கண்டிப்பாக மக்களைச் சோம்பேறி ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு முடிவை எடுத்திருக்க இயலாது. அப்படியெனில், மக்களில் ஒரு பகுதியினருக்கு அப்படியொரு உதவி தேவைப்பட்டது என்பதே உண்மை.

இலவசங்களைப் பொறுத்தவரை கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகத் தர வேண்டும் என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அவர்கள் எங்கே முரண்படுகிறார்கள் என்றால், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர் போன்ற விஷயங்களையே எதிர்க்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கும்போது மக்களை அது சோம்பேறிகளாகிவிடக் கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், இலவசங்களை ஆதரிப்போர் இது அடிப்படையற்ற அச்சம் என்கிறார்கள். வெறுமனே இப்படியான இலவசங்களைப் பெற்றுக்கொண்டு மக்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இதில் இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. இலவசங்களை ஆதரிப்போரில் பெரும்பாலானோர் இடது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும், எதிர்ப்போரில் பெரும்பாலானோர் வலது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். நடிகர் ரஜினி காந்த் திரைக்கதை வசனம் எழுதி வள்ளி என ஒரு திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் மந்திரி ஒருவர் இலவச வேட்டி, சேலை வழங்குவார். அங்கே வரும் வீரைய்யன் என்னும் கதாபாத்திரமேற்றிருந்த ரஜினி, சேலை வேட்டி வேண்டாம் வேலை வெட்டி கேளுங்க, வேலை வெட்டி இருந்தா சேலை வேட்டி நாமே வாங்கிக்கலாம் என்று கூறுவார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதிய சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் திரைப்படத்திலும் இலவசத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தெருவில் போட்டு உடைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். 

அரசியலில் ரஜினிகாந்த் இடதா வலதா என்பதை முடிவுசெய்யும் முன்பே அவர் அரசியலிலிருந்து விலகிவிட்டபோதும், அவரது நடவடிக்கைகள் அவர் எந்தப் பக்கம் சாய்ந்திருந்தார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அதைப் போலவே எழுத்தாளர் ஜெயமோகனும் வலதுசாரிச் சாய்வு கொண்டவர் என்பதைத் தமிழ்நாடு அறியும். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இலவசங்களுக்கு எதிராக இருப்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு நிதியமைச்சர் போன்ற திராவிட இயக்கப் பின்னணி கொண்ட ஒருவர் இலவசம் தொடர்பான மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது அது பரிசீலிக்கத்தக்கதாகிறது.

உண்மையில் இலவசம் என்பதை வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சட்டென்று முடிவுகட்டிவிட முடியாது என்றே தோன்றுகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கவிருக்கும் ரூ. 1,000 தொடர்பாகக் கணக்கெடுப்பு நிகழ்த்தி அதன் பின்பே அதை வழங்க முடியும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். என்னதான் மக்கள் நலத் திட்டமாக இருந்தபோதும், அது தகுதியானோரை மட்டும் சென்றடையும்போதுதான் அதனால் பலன் இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சிறிது பாயலாம் அதைச் சகித்துக்கொள்ள முடியும். ஆனால், நீரில் பெரும்பகுதியைப் புல்லே பெற்றுக்கொள்ளுமானால் அது பயனற்றுப் போய்விடும். அரசு தரும் இலவசங்களைப் பெறுவதில் பொதுமக்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை அது நமது வரிப்பணத்தில் தரப்படுவதுதானே என அத்தகைய இலவசங்களை உரிமையாகவே கருதுகிறார்கள். எனவே, இத்தகைய இலவசங்களை வழங்குவதில் ஒரு தெளிவையும் கறார்தன்மையையும் அரசுதான் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாக்கு வாங்குவதற்காக இலவசங்களைப் பயன்படுத்தாமல் உண்மையிலேயே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கான இலவசங்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். அவற்றைப் பெறத் தகுதியானோரைச் சரியாக இனங்கண்டு மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் எந்தப் பாரபட்சமுமற்று அரசு நடந்துகொள்ளும்போது இலவசங்களால் எதிர்பார்க்கும் பயனும் பலனும் கிடைக்கக்கூடும். அதை விடுத்து வெறுமனே எல்லாருக்கும் எல்லாவற்றையும் வாரி இறைத்தால் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமாகுமே தவிர யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். நிதியமைச்சர் சொல்வது போல் அரசு திவாலாகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதப்பட்டது. 

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்


தமிழ்நாட்டின் 16ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021 ஏப்ரல் ஆறு அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி இந்தத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்துள்ளது.  இதுவரை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன்முறையாக வாக்குப்பதிவு இரவு ஏழு மணி வரை நடத்தப்பட்டது. மாலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவின் எம்பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார். மொத்தம் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற வேகத்தைப் பார்த்தால் எண்பது சதவீதம் பதிவாகும்போல இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சிறிது மந்த கதியாகிவிட்டது. ஆகவே, கடந்த முறையைவிடச் சற்றுக் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. 



இந்தத் தேர்தலில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி காந்த் கட்சி தொடங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் வந்து வாக்களித்துவிட்டார். ஊடகங்களின் கவனம் இந்த முறை ரஜினி மேல் இருக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் கமல்ஹாசன் தன் மகள்களுடன் வந்து வாக்களித்தார். மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பேரனைத் தூக்கியபடி வந்து வாக்களித்தார்.  


நடிகர் விஜயும் அஜீத்தும் ஊடகக் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதுவும் அவரது சைக்கிளில் கறுப்பு சிவப்பு வண்ணமிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் அஜித் அணிந்து வந்திருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்தில் சிவப்பு பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. இதுவும் பேசுபொருளானது. இருவருமே ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆனால், வாக்குச்சாவடி காரில் வருவதற்கு ஏதுவான சூழலில் இல்லாததால் விஜய் சைக்கிளில் வந்தார் என்று விஜயின் பிஆர்ஓ தெரிவித்தார். ஆனால், அஜித்திடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. வாக்குச்சாவடியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பிடுங்கினார் அஜித். பின்னர் அவரிடம் போனைக் கொடுத்துவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 


1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் இந்தத் தேர்தல்வரை வாக்களித்த மாரப்ப கவுண்டர் என்னும் தனிமனிதர் ஊடகத்தில் இடம்பிடித்தார். வாக்காளர் ஒருவர் சேலத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். வழக்கம்போல் இம்முறையும் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வமில்லை என்று பொதுவாகப் பேசப்பட்டது. யாருக்கு வாக்களித்து என்ன பண்ண என்னும் மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? அடித்தட்டு மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள். 


தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. 2016இல் வாக்குப்பதிவு சதவீதம் 74.81. ஆனால் இப்போது அதைவிட குறைவான சதவீதத்தினரே வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் இவ்வளவு பேர் வாக்களித்திருப்பது ஆரோக்கியமான செய்தியே. 2011ஆம் ஆண்டு தேர்தலில் 78.29 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதுவரையான தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு இதுவே. அப்போது ஆண்ட கட்சியான திமுகவுக்கு எதிராகத் தேர்தலின்போது பெரிய அலை வீசியது. மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்தது 1957இல். அந்த ஒரு முறைதான் ஐம்பது சதவீதத்துக்கும் கீழே வாக்குப்பதிவு சென்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 46.75 ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அலைவீசப்பட்டது எனச் சொல்லப்பட்ட 1996இலேயே 66.95 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெற்றிருக்கிறது.


இதுவரை ஆட்சி மாற்றம் நடைபெற்ற எட்டு முறையும் அதாவது, 1967, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்த வாக்குப் பதிவு அடிப்படையில் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியவருகிறது. கடந்த முறையைவிட அதிகமாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்குமுறையும் (1967, 1996, 2006, 2011), குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்கு முறையும் (1977, 1989, 1991, 2001) ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை திமுக பெற்றுள்ளது (1967, 1996, 2006); குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை அதிமுக (1977, 1991, 2001) பெற்றுள்ளது. இந்த முறை திமுக வென்று ஆட்சியமைத்துவிடும் என்றுதான் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதைக் காண மே 2 அன்று வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

செவ்வாய், அக்டோபர் 29, 2019

பிகில்: விளையாட்டுத்தனம்



ஊருக்கு ரவுடியான மைக்கேல் (விஜய்) ஒரு குப்பத்து ராஜா. கதிர் (கதிர்) ஒரு மகளிர் கால்பந்துக் குழுவின் கோச். அந்தக் குழு விளையாட்டில் ஈடுபட எல்லா உதவிகளையும் பின்னணியிலிருந்து செய்கிறார் மைக்கேல். டெல்லியில் முக்கியமான போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய சூழலில் மைக்கேலுடைய எதிரியான அலெக்ஸ் (டேனியல் பாலாஜி) கதிரைக் கத்தியால் குத்திவிடுகிறார். உயிருக்குப் போராடும் கதிர் பிகிலால் மட்டுமே இப்போதைக்குக் கால்பந்து குழுவின் கோச்சாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தர முடியும் என்கிறார். பிகிலுக்கு குழு ஒத்துழைத்ததா, மகளிர் குழு கால்பந்துப் போட்டியில் கலந்துகொண்டதா, வெற்றிபெற்றதா போன்ற கேள்விகளுக்கான விடை பிகில்.

எளிய கதை. திரைக்கதையோ மிகவும் சாதாரணம். குப்பத்து மனிதர்களுக்குப் பெருமைக்குரிய அடையாளத்தை விளையாட்டே தரும் என்பது மட்டுமே திரைக்கதையில் நல்ல விஷயம்.  அதுவும் இதுவரை நாம் பார்த்திராததில்லை. விஜய் என்னும் பெரிய நடிகர் நடித்திருப்பதாலேயே என்ன காட்சி வைத்தாலும் ரசிகர்கள் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்தைப் போல்  மிகவும் சாதாரணக் காட்சிகளால் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.


ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டுகின்றன தொடக்க காட்சிகள். அதை நினைவூட்டுவதைத் தவிர வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாத காட்சிகள் அவை. குப்பத்து ராஜாவான மைக்கேல் ஏதோ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் போல் பள பளவென்றிருக்கிறார். விஜயின் தந்தையான ராயப்பன் தொடர்பான காட்சிகள் ’தளபதி’ திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. பிகிலுக்காக விளையாட்டுக் குழுவின் தலைவர் ஜாக்கி ஷெராபை ராயப்பன் சந்தித்துவரும் காட்சி ’பாட்ஷா’வை நினைவுபடுத்துகிறது. இப்படி எல்லாமே ஏற்கெனவே பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளாகவே உள்ளன. ஒரு காட்சிகூடப் புதிதாக இல்லை.  ஆனாலும், படம் நீளமோ நீளம்.  


பிகில், ராயப்பன் என்னும் இருவேடங்களில் விஜய். லேசாகத் தலை நரைத்த ராயப்பன் என்னும் உள்ளூர் தாதா வேடத்தில் விஜய் தாத்தா போல் சன்னமான குரலிலும் நிதானமாகவும் பேசுகிறார். சண்டைக் காட்சிகளில் படு வேகமாக இயங்குகிறார். இதுதான் நடிப்புபோலும். பிகில் வேடத்தில் இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடன் பவனி வருகிறார். எத்தனை வேடம் தந்தாலும் விஜய் எளிதாக நடித்துவிடுவார் எனும் நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. பெரிய மெனக்கெடல் அவருக்குத் தேவையே படவில்லை. ரசிகர்களுக்குப் பிடித்துவிடலாம்.

சமீப காலங்களில் இவ்வளவு நோஞ்சான் காதல் காட்சிகள் எந்தப் படத்திலும் இடம்பெற்றதில்லை. ஏஞ்சல் என்னும் பிசிசியோதெரபிஸ்ட் பாத்திரத்தில் நயன்தாரா. பாவம்தான். கதாநாயகி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதுவும் தேவாலயத் திருமணக் காட்சிகள் ஒவ்வொன்றும் அலுப்பு.   


விஜயும் கால்பந்து விளையாட்டும் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதால் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு போன்ற  நடிகர்களுக்குப் பெரிய வேலை இல்லை.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. கால்பந்தாட்டக் காட்சிகளில் சுவாரசியம் பெரிதாக இல்லை. ஆனால், அந்தக் காட்சிகளைப் படமாக்கிய விதம் சுவாரசியமாக உள்ளது.  மகளிர் குழுவில் அனிதாவாக நடித்திருந்த ரெபோ மோனிகா ஜானின் பின்னணிக் கதை நெகிழ்ச்சியூட்டுவதற்காகவே கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல் காயத்ரி கதையும். பெண்ணுக்கான அடையாளம் தரப்பட வேண்டும் என்பதை வலிந்து சொல்கிறது.


கோச்சை வெறுக்கும் பெண்கள் அவரை விரும்புவதற்கான காரணக் காட்சி, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதாவை விளையாட சம்மதிக்கவைக்கும் காட்சியில் கதை சொல்வது போன்றவை எந்தவித அழுத்தமுமின்றிச் சாதாரணமாக உள்ளன. படத்தின்  வசனங்கள் நல்லெண்ண கருத்துகள் நிறைந்தவையாக மட்டுமே உள்ளன. ’திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவை இல்லம்மா’ ஒரு உதாரணம்.

வலுவற்ற திரைக்கதையை ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் வலுப்படுத்த முடியவில்லை. இயக்குநர் அட்லீ கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். வசனத்திலும் திரைக்கதையிலும் ரமணகிரிவாசன் இணைந்து பங்கெடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இத்தனை பேர் தேவையா?


விளையாட்டை மையமாகவைத்து எடுக்கப்பட்ட விளையாட்டுத்தனமான படம் பிகில்.  

ஞாயிறு, மே 07, 2017

சினிமா ஸ்கோப் 32: புதையல்

திடுக்கிடும் திருப்பங்களும் ரசனையான காட்சிகளும் சினிமாவை ருசிகரமானதாக்கும். அந்தத் திருப்பங்களும் காட்சிகளும் ஏதாவது ஒரு முடிச்சை உருவாக்குவதும் பின்னர் அதை அவிழ்ப்பதுமாகவே திரைக்கதையின் பயணம் அமையும். இந்த முடிச்சு ஒன்றாகவும் இருக்கலாம்; பலவாகவும் இருக்கலாம். பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பெரிய முடிச்சிட்டு அதை அவிழ்ப்பதே திரைக்கதையின் வேலையாக இருக்கும். அந்த முடிச்சு எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அதை அவிழ்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். ஒரு முடிச்சைப் போட்டு அதை மட்டுமே அவிழ்ப்பதைப் போல் பல முடிச்சுகள் கொண்ட திரைக்கதையும் அமைக்கலாம். இந்த வாரம் இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று தமிழ்ப் படம், மற்றொன்று ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட பரீட் (Buried 2010) என்னும் ஸ்பெயின் நாட்டுப் படம். வாழ்வதற்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட படம் இது. இந்த இரண்டு படங்களில் பரீட் ஒரே முடிச்சைக் கொண்ட படம். ஆனால், தமிழ்ப் படத்தில் பல முடிச்சுகள் உண்டு. ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு, ஒவ்வொன்றையும் அவிழ்த்துக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 


பரீட் படத்தில் திரையில் ஒரே கதாபாத்திரம்தான் நடித்திருக்கும். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ரேயான் ரெனால்ட்ஸ் என்னும் கனடா நாட்டைச் சார்ந்த நடிகர். படத்தை இயக்கியிருப்பவர் ரோட்ரிகோ கார்டஸ். அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரக் ஓட்டுநர், பால் கான்ராய் ஈராக்கில் பிணைக்கைதியாக மாட்டிக்கொள்கிறார். பிணைக்கைதியாக அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு சவப் பெட்டி. ஆம், ஒரு சவப் பெட்டியில் அவரை வைத்து மூடி அந்தப் பெட்டியை மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரை, அதுவும் மண்ணில் புதையுண்ட அவரிடமே கேட்டு ஈராக் தீவிரவாதிகள் மிரட்டுகிறார்கள். அந்தச் சிக்கலிலிருந்து அவர் மீட்கப்பட்டாரா மீள வழியின்றி மாண்டாரா என்பதையே அந்தப் படம் சொல்லிச் செல்லும்.   

ஒரு சினிமாவை ரசனைக்குரியதாக்குபவை பசுமையான சூழல்களும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் மனதை ஈர்க்கும் வண்ணமயமான லொகேஷன்களும் தாம். அப்படியான இடங்களில் படமாக்கலை மேற்கொண்டால்தான் படத்தின் மூலம் கிட்டும் காட்சி அனுபவத்தின் ருசி கூடும். அதனால்தானே தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்காகவே இதுவரை படப்பிடிப்பே நடக்காத புதிதான ஒரு நாட்டையோ புதிரான ஓர் இடத்தையோ தேடிக் கண்டுபிடித்துச் சென்று படம் பிடிக்கும் வழக்கமே தோன்றியது. ஆனால், இந்தப் படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், படம் முழுவதும் அந்தச் சவப் பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் அந்த ஓட்டுநரையே சுற்றிச் சுற்றி வரும். ஆனாலும் படம் அலுப்புத் தட்டாமல் செல்லும். அந்த வகையில் திரைக்கதையாசிரியர் கிறிஸ் ஸ்பார்லிங் காட்சிகளை நகர்த்தியிருப்பார். 


படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் அந்த ஓட்டுநர் தப்பிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை விஸ்தரித்தயபடியே செல்லும். அவரிடம் இருக்கும் மொபைல் உதவியுடன் அவர் வெளி உலகைத் தொடர்புகொண்டு அந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார். அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளாகவே படத்தின் சம்பவங்கள் அமைந்திருக்கும். அந்த ஓட்டுநரைத் தவிர ஏனைய கதாபாத்திரங்கள் எல்லாமே வெறும் குரல்களாகவே வெளிப்பட்டிருக்கும். அவரைத் தவிர படத்தில் முகத்தைக் காட்டும் ஒரு கதாபாத்திரம் அவருடன் அலுவலகத்தில் வேலைபார்த்த பெண் சகா ஒருவர். அவரும்கூட படத்தில் ஒரு வீடியோ படத்தின் காட்சியாகத்தான் வருவார். மற்றபடி அந்த ஓட்டுநர் மட்டுமே முழுப் படத்தையும் ஆக்கிரமித்திருப்பார். இது ஓர் இயக்குநருக்குச் சவாலான விஷயம்தான். இதை வெறுமனே இப்படி ஒரு த்ரில்லராக மட்டும் உருவாக்கியிருந்தால் அதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால், படத்தில் நிறுவனங்கள் தமது ஊழியரை எப்படி ஈவு இரக்கமில்லாமல் நடத்துகின்றன என்ற விமர்சனம் இடம்பெற்றிருக்கும். சிறிதுகூட குற்றவுணர்வு இன்றி நெருக்கடியில் மாட்டிக்கொண்ட ஊழியரைக் கைகழுவிவிடும் நிறுவனங்களின் குரூரத்தை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கும் பாங்கால்தான் இது மாறுபட்ட திரைப்படமாகிறது. ஒரு பேஸ் பால் விளையாட்டு வீரருக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும் ஒரு ட்ரக் ஓட்டுநருக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வசனம் உண்டு. கடைசி வரையில் அந்த ஓட்டுநர் தப்பித்துவிட மாட்டாரா, மனைவி, குழந்தையுடன் சேர்ந்துவிட மாட்டாரா என்ற ரசிகரின் எதிர்பார்ப்பு கடைசியில் பொய்த்துப்போகும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்டதன் காரணம் புரிந்துவிடும். 

குற்ற உணர்வே அற்ற அதிகாரிகளைக் கொண்ட நிறுவனத்தின் கதையை பரீட் காட்சிப்படுத்தியிருந்தது என்றால், குற்ற உணர்வு காரணமாகத் தன் நண்பனின் மீது நீங்காத அன்பு கொண்டு வாழ்ந்த ஓர் இளைஞனைப் பற்றிச் சித்தரிந்திருந்தது, சித்திக் இயக்கிய ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம். விஜய் போன்ற மாறுபட்ட முயற்சிகளுக்கு முகம் கொடுக்காத நடிகர் நடித்திருந்தும் படம் ஓரளவு ரசனைக்குரியதாக உருவானதற்குக் காரணம் இதன் திரைக்கதைதான். அதன் பலத்தில்தான் படம் நின்றது. விஜயும் சூரியாவும் நண்பர்கள். சூரியாவின் தங்கை விஜயைக் காதலிப்பார். அவர் அதை மறுத்துவிட்டு ஓடுவார். ஆனால் விஜயோ அந்தக் காதலை ஆதரிக்கவே செய்வார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்புவார். இதனிடையே அவரும் சூரியாவும் சேர்ந்து பெரும் செல்வந்தக் குடும்பத்தின் மாளிகைக்குச் செல்ல நேரும். அங்கு தேவயானியுடன் விஜய்க்குக் காதல் வரும். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல், சூரியாவுக்கும் தேவயானிக்கும் மோதல், நண்பனுக்காகத் திருமணம் வேண்டாம் என விஜய் மறுப்பது எனப் படம் முழுவதும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல முடிச்சுகள் வந்து விழும். 


படத்தின் தொடக்கத்தில் சூரியாவின் தம்பி சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வாலேயே எல்லோரையும்விட சூரியாமீது அதிக அன்பைப் பொழிபவராக இருக்கும் விஜய் கதாபாத்திரம். படத்தின் இறுதியில் அப்படியே இந்தச் சூழல் சூரியாவுக்கும் பொருந்திவரும். விஜய் சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு சூரியாவைப் பற்றி நிற்கும். இந்த இரு குற்ற உணர்வையும் களைந்து, படத்தை சுபமாகவே முடித்திருப்பார் இயக்குநர். விஜய் என்ற கதாநாயகத்துவ நடிகருக்காக இந்த உணர்வுபூர்வ படத்தின் கிளைமாக்ஸில் அடிதடி, சண்டை எனச் சும்மா தெறிக்கவிடுவார்கள். நம் கதாநாயகர்களது பிம்பம் காரணமாக இப்படிச் சில சேதாரம் திரைக்கதையில் நேரத்தான் செய்யும். அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இயக்குநர்களும் படத்தை உருவாக்குகிறார்கள்; ரசிகர்களும் படத்தைப் பார்க்கிறார்கள். ஆக, ஒரு படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருக்கிறார்களோ என்பதிலோ எத்தனை முடிச்சுகள் உள்ளன என்பதிலோ ரசிகர்களின் கவனம் பதியப்போவதில்லை, அவர்களது கவனமெல்லாம் படம்  ரசிக்கத்தகுந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பதிலேயே நிலைத்திருக்கும்.

< சினிமா ஸ்கோப் 31 >                           < சினிமா ஸ்கோப் 33 >

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்