இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

மனமே மயங்காதே

நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு பதிவிடல். இதற்கு முந்தைய பதிவிடல் ஜூனில் நிகழ்ந்துள்ளது. ஏன் இவ்வளவு இடைவெளி என யாரும் கேட்கப்போவதில்லை, ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்று தான் நினைப்பீர்கள் ஆனாலும் என்ன செய்ய இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அது படுத்தும்பாடு கொஞ்சம்கூட வெட்கமே கிடையாது அதற்கு. அது தான் என்னிடம் சொன்னது எழுது எழுது என. எழுதுவதற்கு எதுவுமே இல்லையே எதை எழுத என அதனிடமே கேட்டேன். அது என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தது. உங்களுக்குப் புரிந்தது போலவே எனக்கும் புரிந்தது. நீங்கள் நினைத்தது சரிதான். அதையே தான் அதுவும் சொன்னது. என்னமோ இவ்வளவு நாளா ரொம்ப நல்ல சிந்தனைகளையும் மிக சுவாரசியமான பதிவுகளையும் எழுதிக்குவித்தது போல சலிச்சுக்கிடாத தம்பி. சிறப்பாக நீ இயங்குவதாக தப்பித்தவறி கூட எண்ணிவிடாதே. ஏதோ ஒரு வகையில் நீ இயங்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிச் சொன்னேன் என்ற மனத்திடம் நான் என்ன பேச முடியும்?

ஆவி ஜோசியம் பார்க்கும் போது, வட்ட வடிவமான காசையோ டம்பளரையோ நாம் நகர்த்த வேண்டியதில்லை அதுவாக ஒரு பக்கம் போகும். அதைப் போல் தான் எழுத ஆரம்பித்த உடனேயே எழுத்துகளெல்லாம் அவை விரும்பிய படி அவற்றை அமைத்துக்கொள்கின்றன. ஆசை ஆசையாய் மகனின் தலையில் எண்ணெய் தேய்க்க அம்மா ஓடோடி வருவாள் போக்கிரிப் பிள்ளையோ அங்கேயும் இங்கேயும் ஓடி அவளை அலைக்கழிக்க ஓட்டத்தில் எண்ணெய் எல்லாம் சிந்திவிடவே அகப்படும் மகனின் தலையில் வெற்றுக் கரங்களை ஆவி பறக்க தேய்க்கும் தாய் போல எழுத நினைத்தவுடன் மனத்தில் ஏதேதோ வரிகள் அங்கும் இங்கும் ‘சர் சர்’ரென நடைபோட அவற்றை இழுத்துப் பிடித்து நிறுத்திவிட்டால் போதும் சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்தேன் ஆனால் அந்தத் தாய் போல நானும் ஏமாந்துவிட்டேன். ஒரு எழவும் இந்தப் பதிவிலும் கிடையாது என்பதைச் சொல்ல வைத்து விட்டது அந்த நல்லவன் வேஷம் போடும் மனம்.


விடையற்ற கேள்விகள் ஏராளமாக நிரம்பி வழிகின்றன எனது மேசையின் இழுப்பறையில். தெரிகிறதோ தெரியவில்லையோ தேர்வு நேரம் முடியும் வரை பேனாவை கன்னத்திலும் டெஸ்க்கிலும் தட்டியபடி யோசிப்பதாக பாவனை புரியும் அப்பாவி/அடப்பாவி மாணவனைப் போல் அந்தக் கேள்விகளுக்கு விடை தேடி நான் யோசிப்பேன்/யோசிப்பது போல் பாவனை புரிவேன். எதன் மீதும் யார் மீதும் மரியாதையோ நம்பிக்கையோ அற்ற சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. எனது துயரங்கள் எனது இன்பங்கள் எல்லாவற்றையும் நான் ஒருவன் மாத்திரமே அனுபவிக்கிறேன். அது ஒரு வகையில் பேராசை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் யாரையும் என் வீட்டுக்கு வர விடாத பாம்பொன்று என் வீட்டைக் காவல் காக்கிறது. என்னால் அதைக் கொல்ல முடியாது, ஏனெனில் அதன் நோக்கம் நூறு சதவிகிதம் என் நலம். அதை மீறி யார் அங்கே வரப்போகிறார்கள். அப்படி வந்தும் அவர்கள் சாதிக்கப்போவதென்ன?


நாம் சரியென நினைக்கும் ஒன்றைச் செய்ய முடியாதவரை தவறு என நினைக்கும் ஒன்றைச் செய்யும் வரை ஏதோ ஒரு இயக்கத்தின் கட்டளைப்படிதானே நாம் செயல்படுகிறோம். அந்த இயக்கம் எது அதன் பெயர் என்ன? யார் யாரோ என்ன என்னவோ சொல்கிறார்கள் எதுவுமே புரியவில்லை. இரண்டும் மூன்றும் ஐந்து. மிகத் தெளிவாகப் புரிகிறது. அப்படிப் புரிய வேண்டும் வாழ்க்கையும் என ஆசைப்படுகிறது மனம். பேராசைதான் அதற்கு. ஆனால் எத்தனைமுறை போட்டு பார்த்தாலும், மிகக் கவனமாய் வகைகளை எழுதிப் பார்த்தாலும் விடை மட்டும் எப்போது தவறாகவே வருகிறது. சற்றும் மனம் தளராத மனமோ மீண்டும் மீண்டும் போட்டு முட்டி முட்டி பாடாய்ப்படுகிறது. அவஸ்தைதான். தொடர்ந்த அவஸ்தையின் காரணமாக அவஸ்தை இல்லாவிடின் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ஆகிறது. மகிழ்ச்சியும் துக்கமும் ஒன்றென்பதை ஏன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உணர்வென்று பார்த்தால் சந்திப்பும் பிரிவும் ஒன்றுதானே. ஆனால் எப்போதும் இன்பம் மட்டுமே ஏன் எதிர்பார்க்கிறோம். வெற்றிக்கான வரிசை மிக நீளமாக இருக்கும் போது ஏன் எல்லோரும் அங்கேயே குவிகிறார்கள்? தத்துவமும் எதார்த்தமும் ஏன் சந்தித்துக்கொள்வதில்லை, ஒன்றையொன்று சந்திக்காமலே போய்விடுமோ?


வாலற்ற நாய்களுக்கு எலும்புத் துண்டுகள்கூடக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும் வாலோடு சேர்த்து இரும்புக்கம்பியைக் கட்டிக்கொண்டுவிட்ட மனத்தை என்ன செய்வது? திடும் திடுமென எங்கிருந்தோ எங்கேயோ தாவும் மனத்தை அது இஷ்டத்திற்கு விடுவதா கட்டி நிறுத்துவதா? சாக்கடையில் உருண்டு புரண்டு எழும் மனம் அடுத்த நொடி சந்தனம் கம கமக்க சபையில் வந்து அமர்ந்துவிடுகிறது. அடிக்க ஓங்கும் கை அணைக்கத்தானே முடியும். இப்படித் தான் ஆகிறது எப்போதும். மீண்டும் ஒரு நாள் சந்திக்கிறேன் இப்போது விடை பெறுகிறேன். தொடர்ந்து சட்டசபைக்குப் போகாவிடில் பதவி இழக்க நேரிடும் என்பதால் கையெழுத்துப் போட்டுவிட்டு வராண்டாவில் சற்று அமர்ந்துவிட்டுப் போகும் எம்எல்ஏ போல நீண்ட இடைவெளிபோக்க ஒரு சிறு பதிவு செய்தாகிவிட்டது, இனி ஜென்மம் சாபல்யமாகிவிடும்.

5 கருத்துகள்:

  1. ஒழுங்கா எழுதுறமோ இல்லையோ ஏதாவது படமாவது போடுவோம்னு நினைச்சிட்டியா தம்பி?

    பதிலளிநீக்கு
  2. நீயே பதிவு எழுதி அதற்கு நீயே கருத்துரை அனுப்பி இந்தப் பொழைப்பு பொழைக்குறதுக்கு நாலு மொழக் கயித்துல தொங்கிறலாமே...

    பதிலளிநீக்கு
  3. //எதன் மீதும் யார் மீதும் மரியாதையோ நம்பிக்கையோ அற்ற சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.// உங்களுக்கு மட்டுமா விதிக்கப்பட்டிருக்கிறது...எல்லோருமே மரியாதை இருப்பதாக நம்பிக்கை இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருப்பதால் உண்மை தெரிவதில்லை. ஓட்டத்தைப் பழக்கிக் கொண்டால் எல்லாம் சுபமே(கருத்து சொல்லிவிட்டால் ஏதோ சாதித்துவிட்ட உணர்வு :-)....
    உங்கள் தலைப்புகள் நன்றாக இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
  4. என்ன எழுதினாலும் உடனே படித்துவிட்டு கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. என்ன எழுதினாலும் உடனே படித்துவிட்டு கருத்து சொல்லுறான்டா. இவன் ரொம்ப நல்லவன்டா :-)...
    நாங்களும் ஏதாவது எழுதிவிட்டு வந்து கருத்து மொய் வைக்கச் சொல்லுவோமில்ல....

    பதிலளிநீக்கு