இந்த வலைப்பதிவில் தேடு

திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025

பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது


குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.  

வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர். 

மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.

திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.  பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும். 

ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது. 

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.  

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

அரசியல் சதுரங்கம் ஆட வருகிறாரா ஆளுநர்?

தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்னும் சொற்றொடர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்றபோதும், ஆளுநர் பதவி ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசு கண்காணிக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதான எண்ணம் சுயமரியாதையைப் போற்றும் எந்த மாநில அரசுக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், எந்தக் கட்சி  மத்தியில் ஆள்கிறதோ அந்தக் கட்சிக்குச் சார்பான ஒருவரே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகும் மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் பெரிதாகக் கருத்து வேற்றுமைகளோ மோதல்களோ ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசுடன் அரசியல்ரீதியாக முரண்படும் மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எப்போதும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருபவர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது இந்திய அரசியலை அறிந்த எவருக்கும் தெரிந்த செய்தியே. 

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக எப்போதுமே ஆளுநரை ஆறாம் விரலாகத்தான் பார்க்கிறது. அரசியல் சாசனம் அனுமதித்தபோதும் அந்தப் பதவி அநாவசியம் என்றே அது நினைக்கிறது. அதனால் தான் கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் இல்லாத சமயத்தில் அப்படியோர் ஆளுநர் தேவை என்று திமுக கோரிக்கை வைத்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவைக் கிண்டல் செய்தார். திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா மட்டும் விதிவிலக்கு. அதேபோல் 1991இல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த சென்னாரெட்டிக்கும் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்குமான மோதல் போக்கு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது. ஆளுநர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும் அளவுக்கு அந்த மோதல் தரந்தாழ்ந்தவகையில் வெளிப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டு ஆளுநர் முதலமைச்சர் உறவு பெரிதாக மோதலோ சர்ச்சையோவின்றி மிகவும் அமைதியான முறையிலேயே இருந்தது.

இப்போது மாறுதலாகிச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்னும் பெயரில் நடத்திய நிகழ்வுகள் தமிழக அரசியல் நோக்கர்களைக் கொந்தளிக்கவைத்தன என்றபோதும், ஆளும் தரப்பு எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தாமல் எல்லாம் அவன் செயல் என்று காலம் கடத்தியது. இப்படியான சூழலைக் கடந்து வந்துள்ள தமிழ்நாட்டுக்கு இப்போது புதிதாக ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ரவீந்திர நாராயண ரவி. 1976இல் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பிஹாரைச் சேர்ந்த அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவலான முணுமுணுப்பு எழுந்தது. ஏனெனில், அவர் ஆளுநராக இருந்த நாகாலந்து மாநிலம் அந்த ஆளுநர் மாறிப்போவதைக் கொண்டாடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உளவுத் துறையின் அதிகாரியுமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசியலில் சிக்கலை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்படுகிறாரோ என்னும் அய்யத்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், முழுக்க, முழுக்கக் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார். இவை மட்டுமல்ல;  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதில், தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான அரசியல் பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுப்பதை அப்படியே விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் ஸ்டாலின் வரவேற்றிருப்பதையும் சாதாரணமானது என்று கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆளுநர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிவிட முடியாது என்பது வெளிப்படையான விஷயம். பதவியேற்ற நாள்முதலாக ஆளும் பாஜகவைச் சித்தாந்தரீதியில் எதிர்கொள்ளும் முதலமைச்சருக்கு ஒன்றிய அரசின் உண்மையான முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனில், அவர் ஏன் வாழ்த்தி வரவேற்கிறார்? அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு என்ன உணர்த்துகிறார்? நீங்கள் என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டை அசைத்துவிட முடியாது என்று சொல்ல நினைக்கலாம். சர்ச்சைக்குரிய மனிதரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் எங்களுக்கு ஒருவிதப் பதற்றத்தை  நீங்கள் உருவாக்க முயன்றால் நாங்கள் பதற்றமடையமாட்டோம் எனக் காட்டிக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம்.

அதே வேளையில் ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தைக் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு அம்பலப்படுத்தவும் முயலலாம். அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். ராஜாவைப் பாதுகாப்பது மட்டுமே சதுரங்கப் பலகையின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் இரு தரப்பினருக்கும் நோக்கம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதலமைச்சர் ஒரு புறம் இருக்கிறார் என்றால் ஒன்றிய அரசின் பக்கபலத்துடன் ஆளுநர் மறுபுறம் இருக்கிறார். எந்த வேளையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண்மைச்  சட்டங்கள், குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது. அனைவரையும் அர்ச்சகராக்கும் செயல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. இந்திய நாகரிகத்தைவிடத் தொன்மையானது தமிழ்நாட்டின் நாகரிகம் என்ற கருதுகோள் அழுத்தமாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முன்வைக்கப்படுகிறது. இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்ற முழக்கம் சென்னையில் ஒலித்தாலும் அது தில்லியை அதிரவைக்கிறது. அரசியல்ரீதியான எதிர்ப்புகளைவிடச் சிந்தாந்தரீதியான பண்பாட்டுரீதியான எதிர்ப்பை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் முதலமைச்சர் வெளிப்படுத்தும் வேளையில் இப்படியோர் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றால் அதை அப்படியே எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா என்ன? அதனால்தான் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர். ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது தமிழ்நாடு. அதே நேரம் முதலமைச்சரோ வரவேற்புத் தெரிவிக்கிறார். ஆகவே, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஆளுநர் என்னும் பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் மிகவும் உன்னிப்பாகவும் அதே நேரத்தில் அநாயாசமாகவும் எதிர்கொள்ளத் தயாராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு பிடிப்பு கொண்ட மாநிலத்தில், மக்களின் பேராதரவைப் பெற்ற ஓர் ஆட்சியை, அதன் முதலமைச்சரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை உணராமல் இருக்காது ஒன்றிய அரசு. இது எதிரும் புதிருமான இரண்டு பலம் வாய்ந்தவர்களின் விளையாட்டு. இந்த விளையாட்டுத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது, இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆட்டத்தில் யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பதைவிட சுவாரசியமான ஆட்டம் ஒன்று அரங்கேறப்போகிறது என்பதே ஊடகங்களுக்கான செய்தி.   

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை.   

வியாழன், செப்டம்பர் 09, 2021

அரசியல் களத்து ஆயுதமா திராவிட அடையாளம்?


அண்மை நாள்களாக அரசியல் களத்தில் திராவிடக் களஞ்சியம் தொடர்பான விவாதம் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தமிழர் அடையாளங்களை அழித்தொழிக்க முயல்கிறது என தமிழ்த் தேசியவாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்போது இந்த விவகாரம் மிகச் சூடு பிடித்ததற்கு 2021 ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதமே காரணம். ஏனெனில் அந்த விவாதத்தின்போது, ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பத்தாம் அறிவிப்பு, சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாக வெளியிடும் திட்டம், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடும் திட்டம் ஆகியற்றைக் கொண்டிருந்தது.  இது போதாதா? கொதித்தெழுந்துவிட்டன தமிழ்த் தேசிய அமைப்புகள்.  தேசிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டின.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரான பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்களுக்குத் `திராவிடக் களஞ்சியம்என்ற பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல் என்றதுடன் இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த அறிவிப்பைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பொதுத் தளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கமளித்தார்.  எல்லோரும் சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள்  என்று அவர் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களை இந்தக் காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியதாகச் சந்தி பிரித்துச் செம்பதிப்புகளாக வெளியிடுவது ஒர் அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றோர் அறிவிப்பு. அதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கால்டுவெல், அஸ்கோ பர்ப்போலா, ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்றவை குறித்த விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் அதில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தொல்காப்பியம் தொடங்கி முத்தொள்ளாயிரம் வரையிலான தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் இதற்காக வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் விட்டபாடில்லை. இந்த விவாதத்தைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் திமுக தலைவரை தமிழ்த் தேசியத்தை அழித்தொழிக்கும் ஒருவராக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் பேசும் பாஜக, தமிழ்த் தேசிய அரசியல் பேசும் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் இருவருமே தங்களது எதிராக திமுகவையே முன்னிருத்துகின்றன. தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றபோது அவர் இந்த அளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லையோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இப்போது திமுகவுக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.  திராவிட சிந்தாந்தத்தைப் பேசும் கட்சியாகத் திமுக இருந்தபோதும், கருணாநிதி தலைமையில் கட்சி நடத்தப்பட்டபோது, அதன் சித்தாந்தத்துக்கு இந்த அளவு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இப்போது திமுகவை மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தப்படும்போது சிந்தாந்தரீதியிலான நெருக்கடி முற்றிப்போயுள்ளது. மு.கருணாநிதியால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போது திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற அது மிகத் தீவிரமான இந்துத்துவ எதிர்ப்பைக் கையிலெடுக்க வேண்டியதிருந்தது.

தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தாந்தத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்து என்னும் ஒரு குடையின் கீழ் தமிழ் மக்களைத் திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்த்து நிற்கும் திமுக இட ஒதுக்கீடு, அனைவரும் அர்ச்சகர் முதலான அம்சங்களின் மூலம் தாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாஜக என்ற நேரடி எதிரியை அரசியல் களத்தில் எதிர்கொள்ளும் திராவிடக் கட்சியான திமுகவுக்கு தமிழ்த் தேசியம் என்னும் உடன்பிறந்த சகோதரத் தொல்லைகளும் உள்ளன. தமிழர் என்றும், திராவிடர் என்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் விவாதங்கள் இன்று நேற்று தொடங்கியவையல்ல. பெரியார், மறைமலையடிகள் காலம் தொட்டே இருந்துவருபவை.

ஆகவே, பாஜகவின் இந்துத்துவத்தையும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அது திராவிட சித்தாந்தத்தை வலுவுடன் கைப்பற்றிக்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாதது. இப்போதைய திமுக அரசின் நிலைப்பாடுகள் திராவிடச் சிந்தாந்தத்தில் ஊறிப்போனவை என்பதான எண்ணைத்தையே தருகின்றன. அதன் அண்மைக்காலச் சான்றென திராவிடக் களஞ்சிய அறிவிப்பைச் சொல்லலாம். கட்சியில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பெரிய பொறுப்பை இப்போது திமுக நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது. அதற்காகவே இந்தத் திராவிட களஞ்சியம் அறிவிப்பை அது வெளியிட்டிருக்கிறது. திராவிட என்ற சொல் இந்துத்துவவாதிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்துகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே அது திராவிட அடையாள அரசியலைத் தனது ஆயுதமாக ஏந்திக்கொண்டது கண்கூடு. திராவிட சிந்தாந்த அரசியல் பேசுவதும் அதை ஆயுதமாக ஏந்திக்கொள்வதும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு நலனுக்கும் உகந்தது என்பதே திராவிடச் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களது கருத்து. திராவிடக் கொள்கைகளை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டுசென்றால் மட்டுமே தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் சிந்தாந்தப் போரில் வெற்றியைப்பெற முடியும் என்று திமுகவும் ஸ்டாலினும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது.

தங்களது இனம் திராவிடம் என்றும் தாங்கள் பேசும் மொழி தமிழ் என்றும் தொடர்ந்து திராவிட ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். திராவிடமும் ஆரியமும் ஒன்றுக்கொண்டு எதிரான அரசியல் நிலைகளில் உள்ளன. எப்போதுமே திராவிடத்தை அழிக்கவும் ஒழிக்கவும் இங்கிருந்தே எதிர்களை உருவாக்குவது ஆரியத்தின் சூழ்ச்சி. எப்போதுமே திராவிடர்களது ஒன்றுதிரளலைத் தடுக்க முயலும் ஆரியம் திராவிடத்துக்கான பகையை இங்கே திராவிட நிலத்திலேயே உருவாக்கும். இதற்குத்  தமிழ்த் தேசியம் பயன்படுகிறது என்னும் குற்றச்சாட்டு திராவிடர்கள் எப்போதும் முன்வைக்கிறார்கள். ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சிக்கான உரிமைக் குரல், சாதி,மதரீதியான சமத்துவம் போன்றவை  திராவிடச் சிந்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

அதனால்தான் திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நடைமுறைப்படுத்தியுள்ளது; கீழடி போன்ற தமிழர் பண்பாட்டு ஆய்வுகளை முன்னெடுக்கிறது; வ.உ.சிதம்பரானார் போன்ற தலைவர்களைக் கொண்டாடுகிறது;  தமிழ்ப் பெருமிதமான ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த விழைகிறது திராவிடர் குறித்த களஞ்சியங்களை உருவாக்குவது போன்ற பண்பாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக திமுக ஈடுபடுகிறது. சிந்தாந்த அடிப்படையிலான கொள்கைப் பிடிப்பும் அது தொடர்பான அடையாளங்களைப் பாதுகாப்பதுமே திமுகவுக்கு அரசியல்ரீதியான பலன் தரும் என்பதை ஸ்டாலினும் சரி திமுகவினரும் சரி உணர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட சிந்தாந்த விஷயத்தில், திமுகவின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதியைவிட மிகத் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே அரசியல் களத்தினர் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான்.

அதே நேரத்தில் இந்துத்துவவாதிகளைப்போல் பிற மதத்தினரைத் தேடித் தேடித் துன்புறுத்தும் வேலை போன்ற அடாவடித்தனங்களில் திமுக ஈடுபடவில்லை. திராவிடத்தின் ஒரு கொள்கையாக கடவுள் மறுப்பு உள்ளது என்றபோதும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கையே திமுக அரசு கைக்கொள்கிறது. இறுக்கமான ராணுவக் கெடுபிடி என்னும் ரீதியில் கொள்கைகளைப் பின்பற்றாமல் தேவைப்படும் வேளையில் நெகிழ்ந்துகொடுக்கிறது திமுக.  இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. திராவிடப் பெருமிதங்கள் ஒரு புறம் இருந்தாலும் அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் தொடர்ந்து திமுக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் நலனை விரும்புபவர்களின் எண்ணம். இந்துத்துவ அரசியலைப் போன்று எதிர்தரப்பினரை எதிரிகளாகவே கருதி அவர்களை ஒழிக்க முயலாதவரை திராவிட அடையாளங்களைக் கையிலெடுக்கும் திமுகவின் நடவடிக்கை அதற்கு அனுகூலத்தையே தரும் என்பதே உண்மை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதி வெளியானது.

வியாழன், ஜூலை 08, 2021

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா?


உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று அரசுகள் மார்தட்டிக்கொண்டபோதும் இன்னும் நமது ஊரகப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. சரியான சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லை, சுகாதார வசதி போதுமானதாக இல்லை, கழிவுநீர் செல்லும் வசதி இல்லை, குப்பை மேடுகள் முறையாக அகற்றப்படவில்லை எனப் பல இல்லைகளைத் தொடர்ந்து மக்கள் கவனப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளில் பொறுப்பிலிருக்கும்போதே இப்படியான நிலைமைதான் உள்ளது என்றால், மக்கள் பிரதிநிதிகளும் இல்லாதபோது, மக்கள் எதிர்கொள்ளும் அவதியைச் சொல்லத் தேவையில்லை. சின்ன சின்ன பிரச்சினைக்கும் அரசு அலுவலகத்துக்கு ஏறி இறங்க முடியாது; அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட இயலாது.   

பாசன நீர் கடைமடைவரை பாய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசு நிர்வாகம் அடிப்படை அலகான ஊராட்சிகள்வரை வந்து சேர்வது. ஊராட்சிகள்வரை அதிகாரம் வந்துசேரும்போதே செழுமையான நிர்வாகம் சாத்தியப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலைமை மாறுவதற்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுதல் அவசியம். மக்கள் பிரதிநிதிகள் அந்த அமைப்புகளில் இருக்கும்போதுதான் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை உடனுக்குடன் கவனப்படுத்த முடியும். வீட்டில், தெருவில், ஊரில் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனடியாக மன்ற உறுப்பினரை அணுகித் தம் குறையைக் கூற இயலும். அது தீர்க்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு கதை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தச் சிக்கலுமின்றி ஒழுங்காக நடந்துவிடுகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாத்திரம் ஒருவிதச் சுணக்கத்தைக் காணமுடிகிறது. பொதுவாக, மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சி வலுவான நிலையில் உள்ளபோது உள்ளாட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளையும் தம் ஆளுகைக்குக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்காதோ எனும் ஐயம் எழுந்தால் அவ்வளவுதான் உள்ளாட்சித் தேர்தல் எண்ணத்தையே அது மூட்டை கட்டிவைத்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, அந்த உற்சாகத்தில் பத்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 1996 அக்டோபரில் நடத்தியது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, இப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக மக்களால் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிமுக அரசு தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலை 2016 அக்டோபரில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த ஒன்பது மாவட்டங்களிலும் மறுசீரமைப்பு பணிகளின் பொருட்டு அப்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக 2019 டிசம்பரில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.  தமிழகத்தின் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து 2020 டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவகாசத்தை வழங்கியிருந்தது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ”இந்தியாவிலேயே கொரோனா பரவல் தமிழகத்தில்தான் அதிகம். இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்என்று கோரினார்.

அதையேற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை நிறைவுசெய்து 2021 செப்டம்பர் 15க்குள் அங்கே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு ஊரக அளவிலான தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் ஆகியவை நடத்தப்படாததால், அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்துவருகிறார்கள். இதற்கான அரசாணை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறையில் செயல்படும் அத்தகைய தனி அதிகாரிகளின் பதவிக் காலம் 2021 ஜூன் 30 அன்றுடன் முடிவடைவதால், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் சூழலிலும், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி அமைச்சர் கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தேங்கிக் கிடந்தால் அதை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறது ஆளும் தரப்பு. முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2021  இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், மூன்றாம் அலை செப்டம்பரில் வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை உருவானால் அந்தச் சூழலில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது எந்த அளவுக்கு இயலும் என்பது கேள்விக்குறியே. அதே வேளையில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கடுங்கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்வு நடத்துவதே பாதுகாப்பற்றது என்ற எண்ணம் உள்ளபோது, தேர்தல் நடத்துவது எப்படிப் பாதுகாப்பானது என்ற கேள்வி எழுவது இயல்பு. தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, பரப்புரை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் பொதுவிடங்களில் திரளக்கூடும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை காரணமாகத் தமிழ்நாட்டின் இரண்டாம் அலை அதிகமாகப் பரவியது என்னும் விமர்சனமும் எழுந்ததை மறந்துவிட முடியாது. அதேவேளையில் கொரோனாவைக் காரணங்காட்டி மீண்டும் தேர்தலை தள்ளிவைக்க செப்டம்பர் 15 எனக் கெடு விதித்துள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா? ஒருவேளை அப்படித் தள்ளிவைத்தாலும் ஆளும் அரசுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் வாய்ப்பும் உள்ளது. ஆக, தேர்தலை நடத்தினாலும் சிக்கல் நடத்தாவிட்டாலும் சிக்கல் என்பதே உண்மை நிலை.

ஆனால், திமுக தம் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டால், அது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். ஆக, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கும் கட்சிக்காரர்களின் திசையிலேயே ஆளும் தரப்பும் பயணப்படுகிறது என்றே தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தலைக் கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு; மக்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு. அதே நேரத்தில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை என்னும் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதையும் பரிசீலித்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எடுக்கப்படுவதே அனைவருக்கும் நல்லது. இந்தச் சிக்கல்களைச் சமாளித்து உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பெரும் சவால் ஆளுங்கட்சி முன் உள்ளது. அதை எப்படி ஆளுங்கட்சி சமாளிக்கப்போகிறது?

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. அந்த இதழில் ஜூனில் வெளியானது. 

சனி, ஜூன் 26, 2021

கோவில் சீர்திருத்தம் தொடங்கு

முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி ‘பராசக்தி’ திரைப்படத்துக்காக எழுதிய, ‘கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக’ என்னும் வசனம் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அந்த வசனத்தில் குறிப்பிடப்படும் கோவில் என்பதை வெறும் வழிபாட்டுத் தலம் என்று சுருக்கிப் பார்த்துவிடல் ஆகாது. தமிழ்ப் பண்பாடு, கலை ஆகியவற்றின் வரலாற்றுச் சான்றும் அதுவே. கோவில்களில் மிளிரும் கட்டடக் கலையும் ஓவியக் கலையும் சிற்பக் கலையும் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்திவருபவை; கடும் உடலுழைப்பால் உருவானவை. இத்தகைய கோவில்களில் குடிகொண்டுள்ளதாக நம்பப்படும் கடவுள் முன் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டாலும் அப்படியொரு நிலைமை இன்றுவரை உருவாகியிருக்கிறதா? 

கடவுள் அளவில்லா ஆற்றல் கொண்டவர் என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் அவர் எல்லா மொழிகளையும் அறிந்தேயிருப்பார். சம்ஸ்கிருதத்தில் வேதங்களை ஓதினாலும் தமிழில் வேதங்களை ஓதினாலும் அவருக்கு ஒன்றுதான். ஆனால், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் கடவுள் வழிபாட்டு நடைமுறையில் மொழி ஆதிக்க உணர்வு மேலோங்கியுள்ளது. இதற்கான காரணத்தை எல்லாரும் அறிவர். வழிபாட்டு மொழியின் நிலையில் எப்படிச் சமநீதி பேணப்படவில்லையோ அதுபோலவே வழிபாடு நடத்துகிறவரான அர்ச்சகர் விஷயத்திலும் இதுவரை சமநீதி நிலைநாட்டப்படவில்லை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையிலும், அது அமலாகும் பாதையில் ஆயிரம் தடைக்கற்கள் விழுகின்றன என்பது ஆகம விதிகளின் பலத்தையல்ல; ஆதிக்கத்தின் பலத்தையே புலப்படுத்துகிறது. 

அரசியல் அதிகாரப் பலம் மிகுந்த இந்த ஆதிக்கத்துக்கு நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் வேர் சோழர் காலத்தில் சூல்கொண்டது. அப்போது சூல் கொண்ட வேர் நின்று நிலைத்துப் பெரும் விருட்சமாகி உள்ளது. அது தலவிருட்சமாகிக் கோவிலை ஆக்கிரமிக்காமல் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அக்கறை. கோவில் நிர்வாகம் எப்படிக் குடிமைச் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பதற்கு விடைசொல்கிறது, பொ.வேல்சாமியின் ‘கோவில் நிலம் சாதி’ என்னும் நூல். ‘பல்லவர் காலத்தில் தோன்றிய சைவ – வைணவக் கோவில்களுக்கு ஆடு மாடுகளே தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன.’ ’சோழர் காலத்தில் பார்ப்பனர்கள் பலர் தங்கள் நிலங்களைக் கோவில்களுக்கு விற்று வந்துள்ளதைப் பல கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார் பொ.வேல்சாமி. அப்படி விற்ற பிரம்மதேய நிலங்களுக்குப் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டாலும் கோவில் நிலங்களின் நிர்வாகிகள் என்னும் பெயரில் அந்த நிலங்களின் மீதான அதிகாரம் தங்களை விட்டுப் போகாமலும் பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டனர் என்றும் அந்நூல் தெரிவிக்கிறது. கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை உரிமை கொண்டாடியோர் குடிமைச் சமூகத்தின் மீதும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திவந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் திமுகவுக்கும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் அடிப்படையிலான கருத்தியல் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. கடவுள் விஷயத்தில் இரண்டு கட்சிகளும் முற்றிலும் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டுள்ளன. திமுக கடவுள் மறுப்புக் கொள்கையை முன்னெடுக்கும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தொடங்கப்பட்ட கட்சி. பாஜக ராமர் கோவில் விவகாரத்தைக் கையிலெடுத்து அரியணையைக் கைப்பற்றிய கட்சி. இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான அம்சம் தேர்தல் அரசியல்தாம். அந்த அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தேவையை முன்னிட்டே மக்களை ஒன்றுதிரட்டும் முகமாகத் தமிழ்நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இரு பிரிவுகளை பாஜக இந்து, இந்து அல்லாதோர் என்னும் பிரிவாக மாற்ற முயன்றுவருகிறது. பாஜகவின் இந்தச் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையாக உள்ளவை கோவில்களும் அதன் சொத்துக்களும் அவற்றின் பாதுகாப்பும்.

இப்போது, இந்தக் கோவில்கள், அவற்றின் பாதுகாப்பு அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவருகிறது என்பது விதியன்று; விதிமுறை. தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்குச் சொந்தமாகத் தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன; அத்துடன் லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கடைகளும் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை, கோவில் உண்டியல் வருமானம், நகைகளின் மதிப்பு எனக் கோவில்களின் சொத்து மதிப்பு எக்கச்சக்கமானது. இது முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், அதை யார் மேற்கொள்வது என்பதே அதிகாரப் போட்டியாக மாறி நிற்கிறது.

தமிழ்நாட்டில் அமைந்த திராவிடக் கட்சிகளின் அரசுகள் கோவில் சொத்துக்களைத் முறையாகப் பாதுகாக்கவில்லை என பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அதுவும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோவில் அடிமை நிறுத்து என்னும் இயக்கத்தை  முன்னெடுத்த பிறகு கோவில் சொத்து விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதன் பின்னணியிலுள்ள அரசியலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. கோவில்கள் தொடர்பான விஷயத்தில் அக்கறையுடன் செயல்படும் தரப்பு யார் என்பதில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் கடும்போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் ஆறு அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு இணக்கமாக ஆட்சி நடத்திவந்த அதிமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது திமுக. தேர்தலில் இந்துக்களில் பெரும்பான்மையோர் வாக்களிக்காமல் திமுகவால் ஆட்சியமைத்திருக்க முடியாது என்பது யதார்த்தம். அதுவும் கோவில் நகரங்கள் எனச் சொல்லப்படும் திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளில் திமுக பெரிய வெற்றியைப் பெற்றதால் ஆண்டவனே நம் பக்கம்தான் என்று திமுகவினர் ஆர்ப்பரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோதாதென்று, தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபு, தான் பதவியேற்றதிலிருந்தே கோவில்களின் சீர்திருத்தம் தொடர்பாகத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதை முடுக்கிவிடும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 7 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழக அரசுக்குக் கோவில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து 75 உத்தரவுகளை உயர்நீதிமன்றம் இட்டுள்ளது.

கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கெனவே அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அதன்படி, கோவில்களுக்குச் சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.  

கோவில் சொத்துக்கள் மீட்கப்படும்  நடவடிக்கை ஒருபுறம் என்றால், மறுபுறம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு கூறியிருந்தார். ‘அமைச்சரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது' எனத் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுக்காலச் சமூக நீதிப் பயணத்தில், இந்த அறிவிப்பு ஓர் மைல் கல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனும், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்னும் அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர். கோவிலின் ஆகம விதிகள் தெரிந்தவர்களையே கோவில் அர்ச்சகராகத் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அந்தணர் முன்னேற்றக் கழகம் இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. (பார்க்க: பெட்டிச் செய்தி)

அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி.  அரசுப் பணியில் பொது அறிவிப்பு, தேர்வு, நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது. பரம்பரைவழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில், திருவரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது இது அரசியல் சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் கூறியிருப்பதும், அந்தணர் முன்னேற்றக் கழகம் இந்த அறிவிப்பை ஆகம விதிகளைக் காரணங்காட்டி எதிர்ப்பதும் உற்றுநோக்கத் தக்கது.    

இத்துடன் நில்லாமல், அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் எனவும் தமிழில் அர்ச்சனை செய்வதற்குப் பயிற்சி தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப் போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும், அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இவையெல்லாம் ஆகம விதிகளின் பாற்பட்டு நிற்போருக்கு உவப்பான விஷயமாக இருக்க மாட்டா.

கோவில் பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும்இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 55 இல் ஆண் / பெண் என்ற பாலினப் பாகுபாடு ஏதுமில்லை. எனவே, பெண் ஒருவரை அர்ச்சகராக நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை’ என்கிறார் விடுதலை சிறுத்தைக் கட்சியின் எம்பியான து.ரவிக்குமார். 

கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதும், தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதும், பெண்கள் அர்ச்சகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் அவசியமான, முற்போக்குகரமான சீர்திருத்தங்களே. இவை அரசியல் நோக்கமின்றி முறையான ஆன்மிக அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, கோவில் என்பது கொடியவர்களின் கூடாரமாக மாறாமல் கும்பிடத்தகுந்த இடமாக நின்று நிலைக்கும் என்பதே உண்மை. 

*

பெட்டிச் செய்தி

அந்தணர் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக பாஜக (தமிழக திராவிட பாஜக) பிராமணர்களுக்கு எதிராகத் திரும்புவதை உணருங்கள் பிராமணர்களே. பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் திருமதி வானதி சீனீவாசன் எம்எல்ஏவும், தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகனும், ஆகம விதிகளுக்கு எதிராக, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மகளிருக்கு அர்ச்சகர் பயிற்சி என்கிற திமுகவின் செயலை வரவேற்பதாகத் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டிகொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக, பிராமணர் கட்சி என்கிற  இல்லாத ஒன்றைக் கூறிவரும் திராவிடர் கூட்டத்தின் கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காக, அரசியலுக்காக, திராவிட இயக்கங்கள் பகுத்தறிவுக் கூட்டங்களின் இந்துவிரோத போக்குக்குத் துணைபோகும்விதமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றபடும் ஆகம விதிகளுக்கு எதிராக ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை பூஜைமுறைகளைச் சிதைக்கும் நோக்கத்தோடு அர்ச்சகர் நியமனத்தையும், பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும் வரவேற்றுள்ளனர். திக நாத்திகக் கூட்டத்துக்குத் துணைபோகும் இவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.”  

(நியூஸ்ஸ்ட்ரோக் இதழில் ரோஹின் என்னும் பெயரில் எழுதிய கட்டுரை)

வெள்ளி, மே 07, 2021

மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை


திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றது திமுக. மிசா காலகட்டத்தில் தொடங்கி கொரோனா காலகட்டம் வரை பல நெருக்கடிகளை எதிர்கொண்டு சாதாரணத் தொண்டனாகத் தொடங்கிய பயணத்தில் 54 ஆண்டுகால அனுபவம் பெற்று 68 வயதில் இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார். அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களில் 15 பேர் புதுமுகங்கள். எட்டுப் பேர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள். இருவர் பெண்கள். சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நால்வர். 

கொரொனா தொற்றுப் பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் 07.05.2021 அன்று காலை எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற்றது. குடும்பத்தினர் தவிர, திருமாவளவன், வைகோ, சுபவீ, கமல் ஹாசன், சரத் குமார், ஓ.பன்னீர் செல்வம், கே.எஸ்.அழகிரி, இல.கணேசன் உள்ளிட்ட பலரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். கமல்ஹாசன் கறுப்பு  உடையில் விழாவுக்கு வந்திருந்தார். அவருடன் பொன்ராஜும் வந்திருந்தார். ஒன்பது மணிக்குச் சற்று முன்னதாக மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஸ்டாலின். கொரொனா தொற்றுப் பரவல் காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர்; சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒன்பது மணிக்கு அரங்குக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் அவருக்கு அமைச்சர்களாகப் பதவியேற்க இருப்பவர்களை அறிமுகப்படுத்தினார். 

விழா தொடக்கமாக முதலில் தேசிய கீதம் ஒலிபரப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. சரியாக 9:10க்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்... எனத் தொடங்கி உறுதிமொழி ஏற்று முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். முகக் கவசத்தைக் கழற்றிவிட்டுக் கையெத்திட்ட ஸ்டாலின் பின்னர் முகக் கவசத்தை அணிந்துகொண்டார். முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து பிற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக அமர்ந்தபடி அனைத்து நிகழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டிருந்தார். சரியாக 10:11 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு வைபவம் நிறைவடைந்தது. இறுதியாக நாட்டுப்பண் இசைக்க விழா முடிவடைந்தது. 

1. மாண்புமிகு திரு. மு..ஸ்டாலின் முதலமைச்சர் 

பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புப் முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்

2. மாண்புமிகு திரு. துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சர்

சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

3. மாண்புமிகு திரு. கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

4. மாண்புமிகு திரு. .பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சர்

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன் 

5. மாண்புமிகு திரு. .பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சர்

உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்ன ணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் 

6. மாண்புமிகு திரு. ..வேலு பொதுப்பணித் துறை அமைச்சர்

பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

7. மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் 

வேளாண்மை,  வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு 

8. மாண்புமிகு திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் 

வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை 

9. மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் 

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி - மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்

10. மாண்புமிகு திரு. எஸ்.இரகுபதி சட்டத் துறை அமைச்சர் 

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 

11. மாண்புமிகு திரு. சு.முத்துசாமி வீட்டு வசதித்துறை அமைச்சர் 

வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 

12. மாண்புமிகு திரு. கே.ஆர்.பெரியகருப்பன் ஊரக வளர்ச்சி துறைத் அமைச்சர் 

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் 

13.மாண்புமிகு திரு.தா.மோ.அன்பரசன் ஊரகத் தொழில்துறை அமைச்சர்

ஊரகத் தொழில்கள், குடிசைத்  தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், ஊரகத் தொழிற் துறை அமைச்சர்குடிசை மாற்று வாரியம் 

14. மாண்புமிகு திரு. மு.பெ.சாமிநாதன் செய்தித் துறை அமைச்சர் 

செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் 

15. மாண்புமிகு திருமதி. பி.கீதா ஜீவன் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் 

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம் 

16. மாண்புமிகு திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் 

மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு 

17. மாண்புமிகு திரு. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சர் 

போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, மற்றும் இயக்கூர்தி சட்டம் 

18. மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சர் 

வனம் 

19. மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் 

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு 

20. மாண்புமிகு திரு. வி.செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் 

மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்) 

21. மாண்புமிகு திரு. ஆர்.காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 

கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம் 

22. மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 

மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் 

23. மாண்புமிகு திரு. பி.மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் 

வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு 

24. மாண்புமிகு திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் 

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் 

25. மாண்புமிகு திரு. பி.கே.சேகர்பாபு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் 

26. மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை 

நிதித்துறை, திட்டம், பணியாளர்  மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் 

27. மாண்புமிகு திரு. சா.மு.நாசர் பால்வளத் துறை அமைச்சர் 

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி 

28. மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் 

சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம் 

29. மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 

பள்ளிக் கல்வி 

30. மாண்புமிகு திரு. சிவ.வீ.மெய்யநாதன் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை 

31. மாண்புமிகு திரு. சி.வி.கணேசன் தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு 

32. மாண்புமிகு திரு. த.மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 

தகவல் தொழில்நுட்பத் துறை 

33. மாண்புமிகு திரு. மா.மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சர் 

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 

34.  மாண்புமிகு திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 

ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

 

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்