இந்த வலைப்பதிவில் தேடு

இயக்குநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயக்குநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 28, 2023

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?



கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடைய சந்தை மதிப்பும் கூடியிருக்கிறது. ஏனெனில், சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்காத நிலையில் அவருக்கு நம்பிக்கையூட்டிய இயக்குநராக மாறியிருக்கிறார் நெல்சன். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் அவர் இயக்கப்போவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை அவர் இயக்கிவருகிறார். 2018இல் வெளியான கோலமாவு கோகிலா என்ற சராசரியான பொழுதுபோக்குப் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் அடுத்த தலைமுறை இயக்குநர்கள் காலூன்றத் தொடங்கிவிட்டார்கள் என்பதன் அறிகுறியாக நெல்சன் போன்ற சமீப கால இயக்குநர்களின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த இயக்குநர்கள் பற்றிய விவரத்தை அறியும்போது ஒரு சுவாரசியமான விஷயம் பளிச்சிடுகிறது. இதுவரை தமிழ்த் திரையுலகில் பெயர் வாங்கிய இயக்குநர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வெறும் வணிகப் படங்களை மட்டும் இயக்கியவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரதிராஜா காலம் தொடங்கி வெற்றிமாறன், பா.இரஞ்சித் காலம்வரை இதுதான் நியதி. இந்தப் போக்கில் சிறிய மாற்றம் தென்படுகிறது. அதன் அறிகுறியாலேயே நெல்சன் போன்ற பொழுதுபோக்குப்படத்தை இயக்கியவர்களும் இயக்குநர்கள் என்னும் பெயரில் அறியப்படுகிறார்கள். தொண்ணூறுகளில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களை இயக்கத் தொடங்கிய காலத்து நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதற்கு முந்தைய எண்பதுகளில் காலத்தில் எஸ்பி.முத்துராமனும் இயக்குநராக இருந்தார்; மகேந்திரனும் இயக்குநராக இருந்தார். ஆனால், இருவருக்குமிடையேயான வேறுபாடு இருந்துகொண்டுதான் இருந்தது.

புவனா ஒரு கேள்விக் குறி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, எங்கேயோ கேட்ட குரல் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவராக எஸ்பி.முத்துராமன் இருந்தபோதும், அவர் சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற பொழுதுபோக்குப் படங்களாலேயே அதிகம் அறியப்பட்டிருந்தார். ஆனால், உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்குத் திரையுலகில் கிடைத்த இடம் வேறு மாதிரியானது. அவர் ஜானி போன்ற வணிகச் சூத்திரத்தின் அடிப்படையிலான படத்தை இயக்கியபோதும், அது மகேந்திரனின் முத்திரையுடன் அமைந்திருந்தது. அதுதான் இயக்குநரின் ஆற்றலுக்கும் ஆதிக்கத்துக்கும் சான்று. மகேந்திரனும் எஸ்பி முத்துராமனும் இணைந்தும் ஆடுபுலி ஆட்டம், தையல்காரன் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு தெளிவாக வெளித் தெரிந்தது.

தொண்ணூறுகளில்கூட ஷங்கர் ஆக்‌ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படங்களால்தான் அதிகம் அறியப்பட்டார், ஆனால் மணி ரத்னத்துக்கு அளிக்கப்பட்ட இடம் வெறும் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு இயக்குநருக்கானதில்லை. இப்போதைய திரைப்பட இயக்குநர்களின் பயணத்தில் இப்படியான இடைவெளி சுத்தமாக அழிந்துவருகிறதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. கலைப் படம், வணிகப் படம் என்ற இடைவெளி இப்போது இல்லை. இவை இரண்டும் கலந்த படமாக அது மாறியிருக்கிறது. ஆழமான கதையம்சம் கொண்ட படம் காலாவதியாகிவிட்டதோ என்னும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற மாறுபட்ட திரைக்கதை வருகிறது ஆனாலும், பாக்யராஜ் அளவுக்குத் தெளிவான திரைக்கதையை எழுதும் இயக்குநர்கள் இப்போது யார் என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பாலுமகேந்திராவின் சீடரான பாலா இயக்க வந்தபோது, பொழுதுபோக்குப் படத்துக்கும் தீவிரப் படத்துக்குமான இடைவெளி குறையத் தொடங்கியது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் எனத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அனைத்துப் படங்களும் பொழுதுபோக்குக் கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவருடைய படங்கள் மாற்றுப்படங்கள் என்ற மயக்கத்திலேயே மதிப்பிடப்படும்.அவன் இவன் போன்ற சராசரிக்கும் கீழான படங்கள் கூட பாலா படம் என்ற மதிப்புடன் அணுகப்பட்டன. பாலுமகேந்திராவின் மற்றொரு சீடரான வெற்றிமாறன் பொழுதுபோக்குப் படங்களைக் கலாபூர்வமான முறையில் உருவாக்கும் இயக்குநராக இருக்கிறார். 

இவருக்கும் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்தாம் இப்போது உருவாகிவருகிறார்கள். இவர்களை முந்தைய தலை முறையிலிருந்து வேறுபடுத்துவது அவர்களது பின்னணியும் படங்களை உருவாக்கும் முறையும். ஓர் இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் இருந்து பிறகு படம் இயக்க வந்தவர்கள் அல்ல இவர்கள். நெல்சனையே எடுத்துக்கொண்டால், அவர் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி அப்படியே சினிமாவுக்கு வந்திருக்கிறார். எண்பதுகளின் மத்தியில் ஊமைவிழிகள் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரியில் படித்துமுடித்த மாணவர்கள் பலர் திரைத் துறையில் காலடி பதித்தார்கள். அதைப் போல் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து திரைத்துறைக்கு வருபவர்கள் அநேகர்.

சமீப ஆண்டுகளில் முதல் படத்தை இயக்கி, கவனிக்கத் தக்க அளவில் பெயரைப் பெற்றவர்கள் என துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன், சதுரங்க வேட்டை வினோத், இரும்புத்திரை பி. எஸ். மித்ரன், உறியடி விஜய குமார், கிடாரி பிரசாத் முருகேசன், மாநகரம் லோகேஷ் கனகராஜ், பாம்புச் சட்டை ஆடம் தாசன், எட்டுத் தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், ஒரு கிடாயின் கருணை மனு சுரேஷ் சங்கையா, புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி, அறம் மீஞ்சூர் கோபி, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ், ராட்சசன் ராம் குமார், 96 பிரேம் குமார், ஜீவி வி ஜே கோபிநாத், க/பெ ரணசிங்கம் பி விருமாண்டி எனச் சிலரைக் குறிப்பிடலாம். சிலர் விடுபட்டிருக்கக்கூடும். இவர்களில் தொடர்ந்து ஒரு படத்துக்கு மேல் படங்களை இயக்கியவர்கள் எனப் பார்க்கும்போது, பலர் பட்டியலிலிருந்து விலகிவிடுகிறார்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து சந்தோஷ் பி ஜெயகுமார், திரௌபதி மோகன் ஜி ஆகியோர்களும் இதே தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் என அறிப்பட்டிருப்பது நகைமுரணே.

மிக இளைய வயதில் இயக்குநராகிவிட்ட கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு மூலம் கவனம் பெற்றிருந்தார் என்றபோதும் அந்தப் படம் மிகவும் சாதாரண த்ரில்லர் வகையைச் சார்ந்ததே. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஃபியா மிகவும் சுமாரான படமே. இரும்புத் திரையில் புதுமையாக இயக்குநராக வெளிப்பட்ட மித்ரன், ஹீரோ படத்தில் மிகச் சாதாரண இயக்குநராக மாறியிருந்தார். உறியடி வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட படம் என்ற அளவில் பொருள்கொள்ளத்தக்கதே தவிர உறியடி 1, 2 ஆகிய படங்களை வைத்து அவர் பிரமாதமான இயக்குநர் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ற வகையில் மதிப்பிடும்போது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஈர்த்த அளவுக்கு அவருடைய கைதியோ மாஸ்டரோ ஈர்க்கவில்லை. ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டு படங்களுமே மாறுபட்டவைதாம். முதல் படமான புரியாத புதிர் கிம் கி டுக்கின் பியட்டா படத்தை நினைவூட்டியது.

இயக்குநராகச் சொல்லிக்கொள்ளும்படியான படங்களைத் தரும் முனைப்பு அவருக்கு உள்ளது என்பதை அவருடைய படங்கள் சொல்கின்றன. பிரசாத் முருகேசன், ஆடம் தாசன், சுரேஷ் சங்கையா, பி.விருமாண்டி ஆகியோரது அடுத்தடுத்த படம் வெளிவரும்போதுதான் அவர்கள் எப்படி இயக்குநராகப் பரிணமிக்கிறார்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும். ராம் குமார் இயக்கிய ராட்சசன் பெரிய வெற்றியைப் பெற்றது என்றபோதும், அந்தப் படத்தை அவர் கையாண்டவகையில் வெற்றிபெற்ற படத்தின் இயக்குநர் என்று அவரைச் சொல்ல முடிகிறதே ஒழிய வெற்றிகரமான இயக்குநர் என்று சொல்ல முடியவில்லை.

96 வழக்கமான காதலை வழக்கத்துக்கு மாறாகச் சொன்ன படம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காதல் படம் ரசிகர்களுக்குத் தேவையாயிருக்கிறது. ஒரு தலை ராகம், இதயம், காதல் கோட்டை, ஆட்டோ கிராப் வரிசையில் 96 இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். பிரேம் குமார் சிறப்பான இயக்குநராக என்பதைச் சொல்தல் கடினம். தொடர்ந்து இரண்டு படங்களையும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகவே, அவர் மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. தனது மூன்று படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான ஆளுமையைச் செலுத்தியவர் என ஹெச். வினோத் இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தது. அடுத்து அஜித்தின் வலிமையை இயக்கிவருகிறார். தொடர்ந்து ஓர் இயக்குநராக அவர் சாதித்திருக்கிறார் என்று நம்புவதற்கான சான்றுகள் இப்படங்கள்.

இயக்குநர் சிகரம் என்ற பெயரை பாலசந்தருக்குக் கொடுத்து தமிழ்த் திரையுயலகம் கௌரவித்திருக்கிறது. ஆனால், அவரைவிட சினிமாவை ஒழுங்காகக் கையாண்டு வெற்றிபெற்றவர் என ஸ்ரீதரைத் தான் சொல்ல முடியும். அவர் பொழுதுபோக்குப் படங்களை இயக்கியவர் என்ற வகையில் அறியப்பட்டிருந்த போதும் சினிமாவை சினிமாவாக உருவாக்கியவர் அவர். இப்போதைய இயக்குநர்களில் ஒரு ஸ்ரீதரோ, பாலசந்தரோ பாரதிராஜாவோ பாலுமகேந்திராவோ உருவாவார்களா என்பது சந்தேகமே. வேண்டுமானால், ஒரு ஷங்கரோ, மணிரத்னமோ உருவாகலாம். ஏனெனில், காலம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அதற்கேற்பத் தான் இயக்குநர்களும் வெளிப்படுவார்கள்.

தமிழ் இதழ்களில் முன்னர் பொழுதுபோக்கு இதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. இப்போது அப்படியான வேறுபாடு அழிந்துவிட்டது. தீவிர இலக்கிய இதழ்களில் எழுதிய பலர் பொழுதுபோக்கு இதழ்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றம் இது. அது போல் தமிழ் சினிமாவின் இயக்கத்திலும் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. புத்தாயிரத்தின் நவீன இளைஞர்கள் திரைத்துறையில் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் உலகப் படங்களையும் இணையத் தொடர்களையும் பார்த்த மயக்கத்தில் படமெடுக்க வந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய படங்களில் வெளிப்படுகிறது. தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

மேலும், அந்தக் கால இயக்குநர்களுக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அவர்கள் இயக்குநராகக் கோலோச்ச கால அவகாசம் இருந்தது. ஆனால், இப்போது படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தக் கால அவகாசம் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். இரண்டு மூன்று படங்கள் இயக்கிய பிறகே அவர்களைத் தேடத் தான் வேண்டியதிருக்கிறது. அதற்குள் அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பார்களா, பெயரைச் சம்பாதிப்பார்களா என்னும் கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்மதி இணையதளத்தில் 2021 அக்டோபர் 16 அன்று வெளியான கட்டுரை.  

சனி, ஆகஸ்ட் 01, 2020

பாஸ்கர்: ஒரு தனித்துவ இயக்குநர்


பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா எனப் பரவலாக அறியப்பட்ட இயக்குநர்களது படங்களைப் பற்றிப் பலரும் எழுதுகிறார்கள். ஆகவே, அவர்களது படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. உலக சினிமா குறித்தும் உலக இயக்குநர்கள் குறித்தும்கூடத் தமிழிலே பல கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் பங்களிப்புச் செய்துள்ள இயக்குநர்கள் சிலரது படங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் கிடைப்பதில்லை. கரோனா கால ஊரடங்கு நேரத்தில் அவர்களில் சிலரது படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவே, அப்படியான சிலரைப் பற்றியும் அந்தச் சிலரது படங்களைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன். 

முதலில் இயக்குநர் எம்.பாஸ்கர் பற்றிப் பார்க்கலாம். ஆலமரத்துக்குக் கீழே எதுவுமே வளராது என்று இயக்குநர் எம்.பாஸ்கர் தனது ‘பௌர்ணமி அலைகள்’ படத்தில் வசனம் ஒன்றை எழுதியிருப்பார். இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதைச் சரியான விதத்தில் சரியான இடத்தில் வசனமாகக் கையாண்டிருப்பார் அவர். தங்கள் படங்களுக்காகக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியவர்கள் என பாக்யராஜையும் டி ராஜேந்தரையும் முன்னிறுத்தும் பலருக்கும் பாஸ்கர் பெயரை அந்த வரிசையில் ஒன்றாக நிறுத்தத் தோணாது. காரணம்  மேலே வாசித்த அந்தப் பழமொழிதான். யாரிந்த பாஸ்கர்? 

பாஸ்கரைப் பற்றிய உடனடி அறிமுகம் வேண்டுமென்றால் இவர்தான் ரஜினி காந்த் முதலில் கதாநாயகனாக நடித்த ‘பைரவி’ படத்தை இயக்கியவர். 1978 ஜூன் 2 அன்று வெளிவந்தபைரவிமகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. ரஜினிகாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. எனது பள்ளிப் பருவங்களில் இவரது படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சட்டப் பிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கியவர் இவர் என்பது மட்டும் மனத்தில் பதிந்துபோயிருந்தது. இவரைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் 1935 ஏப்ரல் 3 அன்று, வி.எஸ்.மாரியப்பன் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை முடித்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராகத் திரையுலகில் நுழைந்திருக்கிறார். இயக்குநர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். 

இதன் பின்னர்தான் இவருக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படம் ’இன்னும் ஒரு மீரா’ என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஆனால், அது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ’பைரவி’. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. ’பைரவி’ படத்தைத் தயாரித்த கலைஞானம் ரஜினியைக் கதாநாயகனாக்கியதால் அவருக்கு ஆதரவு தருவதாக வாக்களித்திருந்த சாண்டோ சின்னப்பா தேவர் கையைவிரித்துவிட்டார். அப்போது வில்லனாக நடித்துவந்த ரஜினியைக் கதாநாயகனாக்கியது தேவருக்கு உவப்பாயில்லை என்பதே காரணம். படம் வெற்றிபெறுமா என்னும் சந்தேகத்தின் காரணமாகவே கலைஞானத்துக்கு தேவர் உதவவில்லை. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத கலைஞானம் ரஜினிதான் கதாநாயகன் என்று உறுதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான் எம். பாஸ்கரை இயக்குநராக்க அவர் முடிவுசெய்திருக்கிறார். 


ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இதே முத்துராமன் ரஜினிக்கு வில்லனாக ’முரட்டுக்காளை’யில் நடித்திருந்தார். ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் கேட்டிருக்கிறார்கள், அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தின் டைட்டிலில் முதலில் ஸ்ரீகாந்த் பெயர்தான் இடம்பெறும். அதற்குக் கீழேதான் ரஜினி காந்தின் பெயர் வரும். இப்படித்தான் ’பைரவி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் விநியோகஸ்தரான தாணு இந்தப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரம் செய்திருந்தார். படமும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.  

ஏறக்குறைய ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்து, திரைக்கதையை உருவாக்கி அதற்குப் பின்னர் அந்தத் திரைக்கதையை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, பின்னர்தான் படப்பிடிப்புக்குச் செல்வார், எம்.பாஸ்கர் என இவரைப் பற்றி நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார் எனத் தகவல் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. பாஸ்கரின் இயக்கத்தில் சிவகுமார் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘பௌர்ணமி அலைகள்’, ‘பன்னீர் நதிகள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ’பைரவி’யும் இந்த நான்கு படங்களுமே எம். பாஸ்கரின் திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. இதன் பின்னர் கார்த்திக் நாயகனாக நடிக்க ‘சட்டத்தின் திறப்பு விழா’, ‘சக்கரவர்த்தி’ ஆகிய படங்களை உருவாக்கியுள்ளார். மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். பிரமாதமான இயக்குநர் என்று இவரை முன்வைக்க இயலாவிடினும் தனித்துவமான இயக்குநர் என்று சொல்லத்தக்க வகையில் படங்களை உருவாக்கியுள்ளார். ’விஷ்ணு’, ’காதல் ரோஜாவே’, ’தோட்டா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நான்கு முறை செயலாளராக இருந்துள்ளார். இவரது திருமணத்துக்கு சிவாஜி கணேசன் தன் துணைவியாருடன் சென்று கலந்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்திருக்கவில்லை என்றபோதும், பாஸ்கர் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கிறார்.


2013 ஜூலை 12 அன்று மாரடைப்பால் இவர் மரணமடைந்துள்ளார்.

சனி, ஆகஸ்ட் 20, 2016

இறைவி: சிற்பி சிதைத்த சிலைகள்


ஓரிரு படங்கள் இயக்கிய பின்னர், தான் ஒரு இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டியதும் சமூக அக்கறை தொனிக்கும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற வேட்கை ஓர் இயக்குநருக்கு எழுவது இயல்பு. கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ அப்படி உருவான படைப்பே. எல்லாப் படங்களையும் போலவே இதிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வருகிறார்கள். இது பெண்களுக்கான படமோ ஆண்களுக்கான படமோ அல்ல, இது குத்துப்பாடலைக் கலையாகக் கருதும் சராசரியான ஒரு சினிமா. ஆனால் ஒரு வணிக சினிமாவாக ‘ஜிகர்தண்டா’ கொண்டிருந்த நேர்த்தி இதில் இல்லை. ‘இறைவி’யில் சில நெகிழ்ச்சியான, உயிரோட்டமான தருணங்களை உருவாக்கித் தர முயன்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த முயற்சி பல இடங்களில் தோல்வியையே அடைந்துள்ளது. வெற்றி தோல்வி முக்கியமல்ல முயற்சியே போதும் என்று மொழியும் நல் மனங்களைக் கொண்டோர் அவரை உச்சிமோந்து வருகிறார்கள்.   

கார்த்திக் சுப்புராஜ் ஒரு நேர்காணலில், இது பெண்ணியப் படமல்ல என்று தெரிவித்தார். அது உண்மை என்பது படத்தைப் பார்த்த பின்னர் தெளிவாகப் புலனாகிறது. கதையின் மையமான வடிவுக்கரசி ஏற்றிருக்கும் மீனாட்சி என்னும் கதாபாத்திரம் படம் முழுவதும் கோமா நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மையில் ஒரு குறியீடு. மீனாட்சியின் மூத்த மகனான இயக்குநர் அருள் செல்வன் என்ற வேடமேற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வேடம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. அவருக்குத் தொந்தரவு தராத வேடமான இதுதான் படத்தின் பிரதான வேடம். ‘இறைவி’யின் ஆதிச் சிக்கல் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது. அருள் பிரமாதமான இயக்குநர் என்பதாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் நம்புகிறார்கள். அவருடைய மே 17 படம் படமாக்கப்பட்டும் வெளிவர இயலவில்லை. தயாரிப்பாளர் முகுந்தனுக்கும் அருளுக்கும் ஏற்பட்ட ஈகோ மோதலே இதற்குக் காரணம். படம் வெளியானால் அருள் செல்வன் உலகத் தமிழர்களால், புலம் பெயர் தமிழர்களால் விதந்தோதப்படலாம் என்னும் நம்பிக்கை அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளது. ஆனால் இறுதிவரை அந்தப் படம் வெளியானதா இல்லையா என்பதை யாராலும் எளிதில் சொல்லிவிட முடியாது.


தமிழர்களின் உணர்ச்சியை உத்தேசித்து கண்ணகியையும் ஈழத் தமிழர் விஷயத்தையும் கதையில் சேர்த்திருக்கிறார்கள். சிலப்பதிகாரம், இலங்கைத் தமிழர் விவகாரம் என்ற சங்கதிகள் இணையும்போது படத்தின் நிறம் மாறும். கூடவே மகளிரின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசும்போது அப்படத்துக்குத் தனிக்கவனம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் படத்தை உருவேற்றியிருக்கிறார்கள். இவையெல்லாம் இப்படத்திற்கு ஒரு அறிவுஜீவித் தனமான பிம்பத்தை உருவாக்கும் முயற்சி என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தைச் சந்தைப்படுத்தும் ஓர் உத்தி. அந்த உத்தி வெற்றியடைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படம் ஒரு போலி அறிவுஜீவித்தனமான படமாகவே காட்சி கொள்கிறது. இயல்பான சம்பவங்களோ, காட்சியமைப்போ, வசனங்களோ இல்லாமல் எல்லாமே போலச் செய்தது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரது படங்களின் பாதிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர் வேடம் போட்டது போல் படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மீனாட்சி, யாழினி, பொன்னி, மலர்விழி என்ற நான்கு பெண்களின் வாழ்வு அவர்களைச் சேர்ந்த ஆண்களால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதே கதை. ஆனால் அது திரைக்கதைக்குத் தாவும்போது தடாலடியாகக் கீழே விழுந்து படத்துக்கு மிகப் பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடுகிறது. கதைக்குத் தேவையான திரைக்கதை அமைக்கப்படாமல் திரைக்கதையின் பயணம் வேறொரு திசையில் செல்கிறது. படத்தின் முக்கியத் திருப்பங்கள் சீரியல் தனமானவை. திரைக்கதையை நகர்த்த வேண்டும் என்ற முனைப்பே பிரதானமாக உள்ளது காட்சிகளின் நம்பகத் தன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. விஜய் சேதுபதி போலீஸ் வாகனத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் இடம்பெறும் இரு கொலைகளும் அவசியமில்லாதவை. அதிலும் தயாரிப்பாளரை மைக்கேல் கொல்லும் காட்சி வன்முறையானது. தான் எதைச் சொல்லப்போகிறோம் என்ற தெளிவு இயக்குநரிடம் இல்லாத தன்மையையே இது காட்டுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் அபாயகரமானவை அதனாலேயே அவை கொண்டாடப்படவும் செய்கின்றன என்பது ஒரு முரண்நகை அல்லது தற்போதைய தமிழ்ச் சூழல்.


இயக்குநர் அருள் செல்வன் படம் முடங்கிப்போய்விட்ட காரணத்தால் முழு நேரக் குடிகாரனாகிவிட்டார். தன்னைத்தானே சிதைத்துக்கொள்கிறார். படத்தை வெளியிட சிலைகளைக் கொள்ளையடிக்கும் முயற்சிக்கு அருள் செல்வனின் தந்தையான சிற்பி தாஸ் வரை அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ‘தங்களிடம் பராமரிப்பே இல்லாத நிலையில் இருக்கும் சிலை அது பேணப்படும் இடத்திற்குச் செல்வது சரிதானே’ என்று தன் மனைவியைக் குறிப்பிட்டு தாஸ் வசனம் பேசுவதன் மூலம் சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. இது சரியென்றால் குடிகார அருள் செல்வனைவிட்டு அவருடைய மனைவி யாழினி விலகிச் செல்ல விரும்புவது நியாயம்தானே? ஒருவேளை மே 17 என்னும் படம் வெளியாகி அப்படம் தோற்றுவிட்டால் அவர் மீண்டும் குடிகாரனாகும் வாய்ப்பு உள்ளதே. அப்படிப்பட்ட ஒரு குடிகாரக் கணவனைவிட்டு யாழினி செல்லாமல் அருள் செல்வனைத் தியாகியாகக் காட்டியிருப்பது எந்தவகை நியாயம் எனத் தெரியவில்லை. அதிலும் இறுதியில் அவர் பேசும் ஆண் நெடில் என்னும் வசனம் அருவருப்பானது ஆனால் திரையரங்கில் இந்த வசனத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு குமட்டச்செய்கிறது.       

மலர்விழி கதாபாத்திரம் காதல் கணவனை இழந்தபிறகு துணையாக மைக்கேலைக் கொள்கிறார். அவருக்கு மைக்கேல் மேல் துளியும் காதலில்லை. ஆனால் உடல் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மைக்கேல் மலர்விழியைக் காதலிக்கிறார். அவரையே மணந்துகொள்ள விரும்புகிறார். ஆனால் மலர்விழி மறுக்கவே பொன்னியை மணந்துகொள்கிறார். மலர்விழி கதாபாத்திரம் தனது பாலியல் தேவையை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது புனித மழை நீரை இயக்குநர் தெளிக்கிறார். மைக்கேல் மழையில் நனைந்தபடி வெளியேறுவதை மாடியிலிருந்து பார்க்கும் மலர் கண்ணீர் வடிப்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?


ஜெகன் கதாபாத்திரச் சித்தரிப்பும் சரிவரக் கையாளப்படவில்லை. பெண்களின் துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் அவர். ஆனால் அவரால்தான் பொன்னியின் வாழ்க்கையில் சிக்கலே வருகிறது. அவருக்குப் பொன்னி மீது காதல். பொன்னியை விரும்புவதை வெளிப்படையாகச் சொல்கிறார். சமூகம் போதித்த கட்டுப்பாடுகளை பொன்னியால் மீற முடியாமல் அந்தக் காதலை மறுக்கிறார். ஆனால் பொன்னியை அடைய ஜெகன் போடும் திட்டமோ சிறிதுகூடத் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கவில்லை. அந்தத் திட்டம் நம்பத்தகுந்ததாகவோ, ஏற்றுக்கொள்ளும்படியாகவோ அமைக்கப்படவில்லை.   

கதை தொடர்பான அனுபவமோ புரிதலோ இல்லாமல் படத்தைக் கையாண்டிருப்பதால் படத்துடன் ஒன்றுவது சிரமமாக உள்ளது. அஞ்சலி கதாபாத்திரம் மட்டுமே படத்தின் சினிமாத்தனத்தை மீறி இயல்பாக உலவுகிறது. பாலசந்தரின் படங்களிலும் ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களிலும் பெண் கதாபாத்திரங்களிடம் காணப்பட்ட தெளிவு இந்தப் படத்தின் கதாபாத்திரங்களிடம் காணப்படவில்லை. படத்தின் பல காட்சிகளில் மழை பொழிகிறது. மழையில் நனையப் பெண்கள் விருப்பம் கொள்கிறார்கள், ஆனால் நனைவதே இல்லை. பெண்களின் சிக்கலுக்கு ஆண்களே காரணம் என்ற கருத்தியல் முன்வைக்கப்படுவது ஆண் பெண் உறவு குறித்த புரிதலின் போதாமையினாலேயே. இத்தகைய கதையைக் கையாளும் பக்கும் இன்னும் கார்த்திக் சுப்புராஜுக்கு கைவரவில்லை என்பதையே இப்படம் உணர்த்துகிறது.     

நண்பர் முரளியின் அடவி இதழில் ஆகஸ்டு 2016இல் வெளியானது.

சனி, மார்ச் 15, 2014

இவ்வளவு தப்பாவா எழுதுறீங்க?

முல்லைப் பெரியாறு அணை
இயக்குனர் என்பது தவறு இயக்குநர் என்பது சரி
சில்லரை என்பது தவறு சில்லறை என்பது சரி
கருப்பு நிறம் என்பது பிழை கறுப்பு என்பது சரி
என்னைப் பொறுத்தவரை என்பது சரி என்னைப் பொருத்தவரை என்பது தவறு
உளமார என்பது சரி உளமாற என்பது தவறு

முன்னூறு என்பது பிழை முந்நூறு என்பது சரி
ஐநூறு என்பது பிழை ஐந்நூறு என்பது சரி

நினைவுகூறுதல் என்பது தவறு நினைவுகூர்தல் என்பது சரி
பதற்றம் என்பது சரி பதட்டம் என்பது தவறு

மேனாள் என்பது தவறு முன்னாள் என்பது சரி
இன்னாள் என்பது தவறு இந்நாள் என்பது சரி

பண்டகசாலை என்பது அவசியமல்ல பண்டசாலை என்பது போதும்
கன்றாவி அல்ல கண் அராவி
கவிதாயினி அல்ல கவிஞர் என்பது தான் சரி

குற்றால அருவி
 நீர்வீழ்ச்சி அல்ல அருவி என்பது தான் நல்ல தமிழ்
அனுப்பவும் என்பது சரியல்ல அனுப்புக என்பதே சரி
அடையார் அல்ல அடையாறு என்பதே சரி
முல்லைப்பெரியார் அல்ல முல்லைப்பெரியாறு என்பது தான் சரி

கோடியக்கரை என்பது தவறு கோடிக்கரை என்பது சரி
திருக்கடையூர் அல்ல திருக்கடவூர் என்பதே சரி
திருவானைக்கோயில் என்பது தவறு திருவானைக்கா என்பது சரி
திருவெற்றியூர் என்பது தவறு திருவொற்றியூர்
மைலாப்பூர் என்பது தவறு மயிலாப்பூர் என்பதே சரி
அவ்வை என்பது தவறு ஔவை என்பதுதான் சரி
பூந்தமல்லி என்பதும் பூவிருந்தவல்லி என்பதும் தவறு பூந்தண்மலி என்பதே சரி
திருக்கோஷ்டியூர் என்பது பிழை திருக்கோட்டியூர்
திருவரம்பூர் அல்ல திருவெறும்பூர் என்பதே சரி
அமைந்தகரை என்பது பிழை அமிஞ்சிக்கரை என்பதே சரி
அடியக்க மங்கலம் என்பது தவறு அடியார்க்கு மங்கலம் என்பதே சரி

திரு ஆபரணம் சாற்றி என்பது பிழை சாத்தி என்பதே சரி
சிறப்பாக ஏற்றி என்பது பிழை சிறப்பாக ஏத்தி என்பதே சரி
பொன்னாடை போற்றினான் என்பது தவறு பொன்னாடை போர்த்தி என்பதே சரி

மங்கையர்க்கரசி என்பது தான் சரி மங்கையற்கரசி என்பது பிழை
அங்கயர்க்கண்ணி என்பது பிழை அங்கயற்கண்ணி என்பது சரி


தொலைப்பேசி என்பது சரி தொலைபேசி என்பது தவறு
தொலைக்காட்சி என்பது சரி தொலைகாட்சி என்பது பிழை
கைப்பேசி என்பது சரி கைபேசி என்பது தவறு
சின்னதிரை என்பது சரி சின்னத்திரை என்பது பிழை
கடைபிடி என்பது பிழை கடைப்பிடி என்பது சரி

திரைகடல் என்பதும் சரி திரைக்கடல் என்பதும் சரி

பிழைதிருத்தம் என்பது சரி பிழைத்திருத்தம் என்பது பிழை

கைமாறு என்பது பிழை கைம்மாறு என்பது சரி

சித்தரிக்கப்பட்டது என்பது தவறு சித்திரிக்கப்பட்டது என்பதே சரி

கோவில் என்பது சரி கோயில் என்பது தவறு

மென்னீர் என்பது சரி மெந்நீர் என்பது பிழை
வெந்நீர் என்பது சரி வென்னீர் என்பது பிழை
திருநீர் அல்ல திருநீறு (நீறு என்றால் சாம்பல்)

திருமாறன், நெடுமாறன், நன்மாறன் என்பவை ஒழுங்கான தமிழ்ப் பெயர்கள் இதிலுள்ள மாறன் என்பதற்கு பாண்டியன் என்பது பொருள். ஆனால் சுகுமாறன் என்பது பிழை சுகுமாரன் என்பதே சரி. ஏனெனில் சுகு என்பது வடமொழிச் சொல். சுகுமாரன் என்றால் அழகிய மன்மதன் என்பது பொருள்.

இலையின் பருவங்கள்: துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு
பூவின் பருவங்கள்: அரும்பு, முகை, மொட்டு, மலர், வீ

வேஷ்டி அல்ல வேட்டி (வெட்டப்பட்டது வேட்டி, துண்டாடப்பட்டது துண்டு)

பட்டணம் என்றால் நகரம் பட்டினம் என்றால் கடற்கரை நகரம் ட வரும்போது ண வரும் டி வரும் போது ன வரும்

ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல் என்பது பொருள்

அதிர்ஷ்டம் என்பதற்கு ஆகூழ் என்றும் துரதிர்ஷ்டம் என்பதற்கு போகூழ் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன

பார்த்தல் - இயல்பாகப் பார்த்தல் (உம். அவளைப் பார்த்தான்)
நோக்குதல் - காரணத்துடன் பார்த்தல் (உம். கண்ணை நோக்கினான்)
கவனித்தல் - ஆழமாகப் பார்த்தல் (உம். உரையைக் கவனித்தான்)

வேறுபாடு - மனிதரின் முகம் ஆளாளுக்கு வேறுபடும்
மாறுபாடு - மனிதரின் முகம் விலங்கின் முகத்திலிருந்து மாறுபட்டது

தலைசுற்று சரி தலைச்சுற்று தவறு

விளக்கம் கேட்க விரும்பினால் இந்த இணைப்பைச் சுட்டுக: நல்ல தமிழ் அறிவோம்

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்