இயக்குநர் மைக்கேல் ஆண்டர்சன் இயக்கத்தில் 1958-ல் வெளியான திரைப்படம் சேஸ் எ குரூக்டு ஷேடோ. டேவிட் ஆஸ்பார்ன், சார்லெஸ் சின்க்ளெய்ர் ஆகிய இருவர் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். தன் தந்தையும் சகோதரனும் இறந்த சோகத்தில் இருக்கிறார் அந்த இளம் பெண். அப்போது அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் வருகிறார். வந்தவர் தான் அந்தப் பெண்ணின் சகோதரன் என்கிறார். இளம் பெண்ணுக்கோ அதிர்ச்சி. ஏனெனில், அவளுடைய சகோதரன் விபத்தில் மரித்துப்போயிருக்கிறான். ஆனால், அவளுடைய சகோதரன் என்பதற்கான எல்லாச் சான்றுகளையும் அந்த இளைஞன் வைத்திருக்கிறான். உள்ளூர் காவல் துறையே குழம்புகிறது. சான்றுகள் மட்டுமல்ல; அவளுக்கும் சகோதரனுக்கும் தெரிந்த தனிப்பட்ட விஷயங்களைக்கூட அவன் அறிந்திருக்கிறான். அவள் தன் சகோதரனுக்கு, அவன் கடற்கரையை ஒட்டிய மலைச்சாலையின் அபாயகரமான வளைவுகளில் அநாயாசமாக காரோட்டியதற்காகப் பரிசாகத் தந்த சிகரெட் பெட்டி அந்த இளைஞனிடத்தில் இருக்கிறது. சகோதரனைப் போலவே அந்த இளைஞனும் அதே சாலையில் காரோட்டுவதில் சாகசம் நிகழ்த்துகிறான். ஆனாலும் அவன் தன் சகோதரன் அல்ல என்பதில் உறுதியாக அவள் மாத்திரம் இருக்கிறாள். அவன் எதற்காக ஆள் மாறாட்டத்தில் வந்திருக்கிறான்? அவளிடமுள்ள வைரத்தைக் கைப்பற்றவா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காகவே என்பதை அவளால் உணர முடியவில்லை.
அவளுடைய மாமாவை அழைத்துவருகிறார்கள் அவரும் அந்த இளைஞனை அவளுடைய சகோதரன் என்கிறார். எல்லாமே அவளுக்கு எதிராக நிற்கிறது. இறுதியாக அவனது கைரேகையை எடுத்து அதைப் பரிசோதிக்கிறார்கள். இருவருக்கு ஒரே மாதிரியான கைரேகை அமையாது என்பதால் அவள் அதை மலை போல் நம்பியிருக்கிறாள். ஆனால், அதுவும் அவளை ஏமாற்றிவிடுகிறது. இப்போது இருவரும் ஒருவரே என்ற முடிவுக்கு வந்த நேரத்தில் அந்தப் பெண் வாய் திறக்கிறாள். குடும்ப மானத்தைக் காப்பாற்றத் தன் சகோதரனைத் தான் கொன்றதாகச் சொல்கிறாள். இப்போது எல்லோரும் அதை நம்புகிறார்கள். அந்த இளைஞனை அவளுடைய சகோதரன் அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்கள். இது அத்தனையும் அவர்கள் நடத்திய நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிறது. இப்போது உங்களுக்கு ஒரு தமிழ்ப் படம் ஞாபகத்தில் வந்திருக்கும்.
இந்த ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவி 1963-ல் சேஷ் அங்கா என்ற வங்க மொழித் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை இயக்கியவர் ஹரிதாஸ் பட்டாச்சார்யா. திரைக்கதையை அவருடன் ஷியாமள் குப்தா, ராஜ்குமார் மொய்த்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். வங்காளத்தின் புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமார், ஷர்மிளா தாகூர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதில் பல மாற்றங்களைச் செய்திருப்பார்கள். ஆங்கிலப் படத்தில் நாயகியிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் வைரம் என்ற விஷயம் வங்காளப் படத்தில் கிடையாது. அதே போல் சகோதர சகோதரி என்ற உறவு இங்கே கணவன் மனைவியாக மாற்றப்பட்டிருக்கும். சுதான்ஷு குப்தா என்னும் தொழிலதிபர் தன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகக் கிளம்புவதில் படம் தொடங்கும். அவருக்கும் ஷோமா என்பவருக்கும் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கல்பனா குப்தா என்பவர் சுதான்ஷுவுடைய மனைவி என்று சொல்லி குறுக்கிடுவார். வழக்கறிஞருடன் வந்த கல்பனா குப்தா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நிறுத்திவிடுவார்.
தன் மனைவி பர்மாவில் ரங்கூனில் வைத்து விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவளுடைய இறப்புச் சான்றிதழ் தன்னிடம் உள்ளதாகவும் சுதான்ஷு குப்தா தெரிவிப்பார். வந்திருக்கும் பெண் யாரென்று தனக்குத் தெரியாது என்றும் அவரது நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் சொல்வார். கல்பனா குப்தா மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார். காவல் நிலையத்தில் வழக்குத் தொடுப்பார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும். ஆனால், பெரும்பாலான சான்றுகள் கல்பனா குப்தா சுதான்ஷு குப்தாவின் மனைவி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அமையும். இறுதியாக ஷோமாவும் தன் கையைவிட்டுப் போகும் நிலையில் சுதான்ஷு குப்தா தன் மனைவியைத் தானே கொன்றுவிட்டதாக ஒப்புக்கொள்வார். அவரது வாக்குமூலத்தைப் பெற நடத்தப்பட்ட நாடகமே இது என்பதும் தெளிவாகும்.
இந்த இரண்டு கதைகளைப் படித்ததுமே இவற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட, தாதா மிராசி இயக்கத்தில் 1964-ல் வெளியான படமான புதிய பறவை உங்கள் நினைவுகளில் சிறகசைத்திருக்கும். இதே கதையை மலையாளத்தில் மம்முட்டியைக் கதாநாயகனாகக் கொண்டு ஜி.எஸ். தயாளன் என்னும் இயக்குநர் படமாக்கினார். 1989-ல் வெளியான சரித்திரம் என்னும் அந்தப் படத்தில் உறவு அண்ணன் தம்பியாக மாறியிருக்கும். அண்ணனாக மம்முட்டியும் தம்பியாக ரகுமானும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சிவன் குட்டி என்னும் திரைப்படைக் கதையாசிரியர் வேடத்தில் ஜெகதி ஸ்ரீகுமார் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரமே உலகப் படங்களைப் பார்த்து உள்ளூரில் கதை பண்ணும் வேலையைத்தான் செய்யும். அவர் ஒரு காட்சியில், இறந்துபோன தம்பி உயிருடன் வரும்போது, சேஸ் ஆஃப் குரூக்டு ஷேடோ படத்தில் வருவது போலவே உள்ளதே என்பார். மலையாளிகள் எப்போதுமே கெட்டிக்காரர்கள்.
புதிய பறவை வங்காளப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவே அதன் டைட்டில் தெரிவிக்கும். புதிய பறவையின் திரைக்கதையை பி.பி.சந்திரா என்பவர் எழுதியிருப்பார். வசனம் ஆரூர் தாஸ். சிவாஜி கணேசனுக்காகத் திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்திருப்பார்கள். வங்கப் படத்தில் காதல் உள்ளுறை வெப்பமாக இருக்கும். ஆனால், புதிய பறவையில் காதல் அனலாகக் கொதிக்கும். நவீன பாணி உடை, பகட்டான ஒப்பனை, உணர்வுபூர்வ காட்சியமைப்புகள், அட்டகாசமான பாடல்கள், ஆர்ப்பரிக்கும் இசை போன்ற எல்லாவற்றையும் சேர்த்துப் படத்தைப் பிரம்மாண்டமான இசை நாடகம் போலவே உருவாக்கியிருப்பார்கள்.
பாடல் காட்சியில் உடலழகைக் காட்டும் வகையில் பனியன் போடாமல் மெல்லிய வெள்ளைச் சட்டையை மட்டும் சிவாஜி அணிந்திருப்பார். இந்த உத்தியைப் பணக்காரன் படத்தில் ரஜினி காப்பியடித்திருப்பார். ஆங்கிலப் படத்து நாயகியும் வங்க நாயகனும் புகைபிடிப்பவர்கள் அதைப் போலவே சிவாஜியும் படத்தில் மிகவும் ஸ்டைலாகப் புகைபிடித்துக்கொண்டேயிருப்பார். உணவு மேசையில் அமர்ந்திருக்கும்போதுகூட அவரது கையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். கைரேகையை எடுக்கும் காட்சி வங்கப் படத்தில் கிடையாது ஆனால், ஆங்கிலப் படத்திலும் புதிய பறவையிலும் உண்டு.
சிவாஜியின் நடிப்பு, அதிலும் இறுதிக் காட்சியில் எல்லாமே நாடகம் என்பதை உணர்ந்ததும் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, வசன உச்சரிப்பு எல்லாமே நயமான நாடக பாணியில் அமைந்திருக்கும். இதற்கு முன்னர் வெளியான இரண்டு படங்களிலுமே கதாபாத்திரங்கள் தம் இயல்புக்குள்ளேயே சுருண்டுதான் கிடக்கும். ஆனால், கோபால் என்னும் கதாபாத்திரம் சிவாஜி என்னும் மாபெரும் நடிகனிடம் கட்டுப்பட இயலாமல் மேலெழுந்து கர்ஜிக்கும். சிவாஜியின் ரசிகர்களும் திரையரங்கில் ஆரவாரக் கூச்சலிடுவார்கள். இப்படிப் படமாக்கப்படாமல் அந்த இரண்டு படங்களையும் போல் பெரிய சத்தமின்றி உருவாக்கப்பட்டிருந்தால் புதிய பறவைக்குப் பெரிய வணிக வெற்றி கிடைத்திருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.
< சினிமா ஸ்கோப் 32 > < சினிமா ஸ்கோப் 34 >
< சினிமா ஸ்கோப் 32 > < சினிமா ஸ்கோப் 34 >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக