வால் டிஸ்னி பிக்ஸர்ஸ் தயாரிப்பில் 1967-ல் வெளியான சாகசத் திரைப்படம் த ஜங்கிள் புக். இதே பெயரில் ரூத்யார்டு கிப்லிங் 1894-ல் எழுதிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அனிமேஷன் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நான்கு மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 205.8 மில்லியன் டாலர் வசூலித்துக் கொடுத்திருக்கிறது. இப்போது இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் 1967-ல் வெளிவந்த திரைப்படத்தைவிட அதிக சுவாரஸ்யத்தைத் தரும் வகையில் இப்போது இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதலில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். பின்னர் லைவ் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் இரண்டையும் ஒன்று சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பார்ப்பதற்கு லைவ் ஆக்ஷன் படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தில் மோக்லி வேடமேற்றிருக்கும் நீல் சேதி மட்டுமே உயிருள்ள மனிதன்.
மீதி அனைத்துமே கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை. படத்தில் இடம்பெற்றிருக்கும் விலங்குகளுக்கு பில் முர்ரே, பென் கிங்ஸ்லி, இட்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் வால்கன் போன்ற பல பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் விலங்குகள் பார்க்க உயிருள்ள மிருகங்கள் போன்றே இருக்கின்றன. கார்ட்டூன் படங்களுக்கு உயிரூட்டப்பட்டது போன்ற தோற்றம் இல்லை.
ஒரு பிரம்மாண்டமான பயணத்தின் தொடக்கம் போன்று வெளியாகியிருக்கும் இதன் ட்ரெயிலர் வெளியிடப்பட்ட ஒரு நாளில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த ட்ரெயிலர் தரும் பிரமிப்பைப் பார்க்கும்போது முழுப் படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றாமல் இருக்காது.
காட்டில் மோக்லி எதிர்கொள்ளும் அத்தனை விலங்குகளையும் கம்ப்யூட்டரில் அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உதவியால்தான் உருவாக்கியிருக்கிறார்கள் என்ற நினைவே எழாதவண்ணம் அவை நிஜ விலங்குகள் போலவே கிலி ஏற்படுத்துகின்றன. காட்டில் மாட்டிக்கொள்ளும் மோக்லி புலி, யானை போன்ற பல வன விலங்குகளிடமும் மாட்டிக்கொண்டு தப்பித்துவிடுகிறான் ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் மாட்டிக்கொள்வதையும் தப்பிப்பதையும் பார்ப்பவர்களுக்கு உயிர் போய் உயிர் வருகிறது.
அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்னும் எதிர்பார்ப்பையும் என்ன அசம்பாவிதம் சம்பவிக்குமோ என்னும் அச்சத்தையும் தரும் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாகசக் காவியம் போல் இந்தப் படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நீல் சேதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் முயற்சியில் சுமார் ஆயிரம் பேரைத் தாண்டி வெற்றிபெற்றிருக்கிறான்.
அவனுக்கு அடுத்து இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரப்போவது அந்தப் பாம்புதான். அதன் முன்பு மிரட்சியுடன் நிற்கிறான் மோக்லி ஆனால் பாம்போ அவனுக்குத் தைரியமூட்டுகிறது. எத்தனையோ ஆபத்துகள்; அத்தனையையும் தனி ஒருவனாகச் சமாளித்து சிறுவன் மோக்லி மேற்கொள்ளும் சாகசப் பயணத்தின் ஒவ்வொரு கணமும் பார்ப்பதற்கு அலுக்காது.
படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஒரு சிற்பம்போல் செதுக்கியிருக்கிறார்கள். படத்தின் உயிரோட்டமான இசையும் நம் கண் முன்னே தெரியும் அந்த மாய உலகத்தை நிஜ உலகம் என நம்பவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரே படம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைச் சொல்லிவிடுகிறது. அந்தப் பிரமாண்டத்தின் முழுப் பரிமாணத்தையும் பார்க்க நீங்கள் தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும்.
செப்டம்பர்18 தி இந்து நாளிதழில் வெளியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக