பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் பாணிப் படங்களை உருவாக்குவது ஹாலிவுட்டுக்குக் கைவந்த கலை. வெள்ளை மாளிகைமீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படமாக 2013-ல் வெளியானது ஒலம்பஸ் ஹேஸ் ஃபாலன் என்னும் திரைப்படம். இரண்டு மடங்குக்கு மேல் வசூலை வாரிக் கொடுத்த இந்த ஹாலிவுட் படத்தின் தொடர்ச்சியாக வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது லண்டன் ஹேஸ் ஃபாலன் என்னும் ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.
இங்கிலாந்து பிரதமரின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அனைவரும் அங்கே திரண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அங்கே வருகை தந்திருக்கும் உலகத் தலைவர்களை ஒழித்துக்கட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. லண்டன் நகரமே போர்க்களம் போல் மாறிவிடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத திகில் நிமிடங்களில் மூழ்கிக் கிடக்கிறது லண்டன். அமெரிக்க உளவுத் துறையுடன் இணைந்து பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் பெரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்கிறார்.
அமெரிக்க அதிபருக்கு பிரிட்டிஷ் உளவுத் துறையும் உதவுகிறது. ஆனால் பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஏஜெண்ட் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் அந்தப் பொறுப்பை எப்படி எதிர்கொள்கிறார்? தாக்குதல் திட்டம் வெற்றிபெறுகிறதா? தலைவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்களை ஆக்ஷன் கலந்து த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர் பபேக் நஜாபி. ஈரானில் பிறந்த பபேக் சுவீடனில் அகதியாகத் தஞ்சமடைந்தவர்.
அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் மைக் பேனிங் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லர். அமெரிக்காவின் அதிபராக நடிகர் ஏரோன் எக்ஹார்டும் துணை அதிபராக நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் வேடமேற்றிருக்கிறார்கள். 10.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் டிரெயிலர் வெளியானது இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள். இது வெறும் டிரெய்லர்தான் அதைப் பார்த்தாலே சும்மா அதிருது எனும்போது மெயின் பிக்சரைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக