ஒரு திரைக்கதையை அழகுபடுத்துவது உணர்வுபூர்வ சம்பவங்கள். அடுத்தடுத்த கட்டத்துக்குக் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் படம் சப்பென்றாகிவிடும். ஓடினால்தானே அது நதி, தேங்கினால் குட்டைதானே. கிட்டத்தட்ட ஒரே கதை என்றபோதும், திரைக்கதையின் பயணம் வெவ்வேறாக அமைந்த இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம். ஒன்றைப் பிரபலமான இயக்குநர் இயக்கியிருக்கிறார். மற்றொன்றைப் பெயரறியாத இயக்குநர் இயகியிருக்கிறார்.
முடிவல்ல ஆரம்பம் 1984-ல் வெளியான தமிழ்ப் படம். படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பவர் என்.மொஹியுத்தீன்; திரைக்கதையும் அவர்தான். படம் அநேகமாக ஏதோ ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்திக் கதையாசிரியரும் இயக்குநருமான சரண்தாஸ் ஷோக்.
அது ஒரு மலையோரக் கிராமம். அவள் ராதா, அந்தக் கிராமத்தில் ரோட்டோர டீக்கடை நடத்தும் பெண்மணியின் ஒரே மகள். பத்தாவதுவரை படித்திருக்கிறாள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். அவன் கண்ணையா, லாரி ஓட்டுநர். தொழில் நிமித்தமாகச் செல்லும் வழியில் அடிக்கடி டீக்கடைக்கு வந்து செல்கிறவன். இருவருக்குமே இள வயது. பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ளும் பருவம். காதல் வயப்படுகிறார்கள். கயிற்றுச் சடங்குக்கு முன்னரே இருவரையும் கலவி பிணைத்துவிடுகிறது. ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். கல்யாண தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை.
இந்தக் கதையைப் படிக்கும்போது, உங்களுக்குச் சமீபத்தில் வெளியான காற்று வெளியிடை ஞாபகம் வரலாம். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. காற்று வெளியிடையின் திரைக்கதை பழமையானது. சொல்லப்போனால் திரைக்கதை என்ற ஒன்றே இல்லை. தொழில்நுட்பத்தால் ஊதப்பட்ட பொம்மை அது. அதனால்தான் எல்லா ஃப்ரேம்களும் அழகாக இருந்தும் படம் ஜீவனற்றுக் காட்சி தருகிறது. காற்று வெளியிடை நதியல்ல, குட்டை. வருண் பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்கிறான். வயிற்றில் குழந்தையுடன் லீலா இருக்கிறாள். இருவரும் இணைவார்களா என்பதே கிளைமாக்ஸ். ஆனால், வெறும் காதல், மன்னிப்பு, மீண்டும் காதல் மீண்டும் மன்னிப்பு என்று பள்ளத்தில் விழுந்த லாரி டயர் போல் படம் ஒரே இடத்தில் சுழன்றுகொண்டிருக்கும். ஆணாதிக்கம், பெண் உரிமை, போர் என்ற பம்மாத்துகள் வேறு படத்தில் துருத்திக்கொண்டிருக்கும். நுட்பமாக வெளிப்படுத்துதல் வேறு, நுனிப்புல் மேய்தல் வேறு. காற்று வெளியிடை இரண்டாவது வகையானது.
லீலா ஆப்ரஹாம் போன்ற நிலையில்தான் ராதாவும் இருக்கிறாள். ஆனால், லீலா போல் ராதாவுக்கு மூளைப் பிசகில்லை; காதலுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத் தயாராகவும் இல்லை. அவளுக்குத் தன்னை ஏமாற்றிச் சென்ற காதலன் மீது கடுங்கோபம் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் பழிவாங்கவும் தயாராக இருக்கிறாள். முடிவல்ல ஆரம்பம் படத்தில் ஒரு தெளிவான திரைக்கதை இருக்கிறது. பல சுவாரசியமான முடிச்சுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அழகாக அவிழ்க்கப்படுகின்றன.
கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதை மருத்துவமனை ஒன்றின் வாசலில், இருள் விலகியிராத அதிகாலை நேரத்தில் யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள். இதுதான் தொடக்கக் காட்சி. வெளிச்சம் வந்த பின்னர், தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே விடுதியில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே அந்த மருத்துவமனையில் வளர்கிறது. தெளிந்த நீரோடையாக இப்படிப் பல சம்பவங்கள் தொடர்கின்றன.
முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்குப் பல கேள்விகள் எழுகின்றன. யாரிந்தப் பெண்? ஏன் குழந்தையை விடுதியில் கொண்டுவந்து போடுகிறாள்? குழந்தைக்கும் அவளுக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்விகள் எழும் சமயத்தில் அவளது குழந்தைதான் அது என்பது உணர்த்தப்படுகிறது. அவளது குழந்தை என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும். பிறருக்குத் தெரியாது. அதை வைத்து நகரும் கதையில் ராம் என்னும் மருத்துவர் உள்ளே வருகிறார். அவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. அவர் ராம்; அவள் சீதா. எனவே, பார்வையாளர்கள் மனதில் ஒரு கணக்கு வந்துவிடுகிறது. ஆனால், மணமாகாமலே சீதா குழந்தையுடன் இருக்கிறாளே, என்ன செய்வது? சீதாவிடம் திருமணம் பற்றிப் பேசுகிறார் ராம். அப்போது அவள் நினைவில்தான் அவளது காதல் கதை விரிகிறது.
அந்தக் காதல் கதைக்குள் ஒரு பதினாறு வயதினிலே ஒளிந்துள்ளது. கண்ணையாவும் ராதாவும் காதல் வயப்பட்டுத் துள்ளித் திரிந்த ஊரில் பதினாறு வயதினிலே பரட்டை போல் லோகு எனும் ரௌடியும் வாழ்ந்துவருகிறான். அவனுக்கும் ராதா மீது ஒரு கண். அது மாத்திரமல்ல; சப்பாணி போல் ஒரு கதாபாத்திரமும் படத்தில் உண்டு. ஒரு செல்வந்தரின் மகனான அந்தக் கதாபாத்திரம் வைத்தி. சப்பாணி மயில் மேல் உயிராக இருப்பது போல் வைத்தி ராதா மேல் உயிராக இருக்கிறான். பதினாறு வயதினிலே சப்பாணி கதாபாத்திரமே டேவிட் லீனின் ரேயான்’ஸ் டாட்டர் (1970) படத்தின் மைக்கேல் கதாபாத்திரத்தை நினைவூட்டக்கூடியது. மைக்கேல் கதாபாத்திரமும் காலை இழுத்து இழுத்துதான் நடக்கும். இந்த வேடத்தை ஏற்றிருந்த ஜான் மில்ஸ் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்த நடிப்புக்காகச் சிறந்த துணைநடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்துவிடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் கண்ணையா வந்துவிடுகிறார். ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைப் போன்று காதலியின் கணவனுக்கு சிகிச்சை செய்யும் காதலன் நிலையில் ராம் கதாபாத்திரம் இருக்கும். கண்பார்வை வந்துவிட்டால் ராதாதான் சீதா என்னும் பெயரில் மருத்துவமனையில் இருக்கிறாள் என்பது கண்ணையாவுக்குத் தெரிந்துவிடும். கண்ணையாவுக்குப் பார்வை திரும்பினால் தொழில்ரீதியில் ராமுக்கு வெற்றி. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் தோல்வி. கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ருசிகரமான காட்சிகளால் திரைக்கதை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றதா, இதன் இயக்குநர் வேறு ஏதேனும் படத்தை இயக்கியிருக்கிறாரா என்பவை தெரியவில்லை. படத்தின் வசனங்களில் பாலசந்தர் பாதிப்பு தெரிகிறது.
முடிவல்ல ஆரம்பம் வெளியானது 80-கள். இப்போது 2017. முப்பது ஆண்டுகளுக்கும் பிறகு, முற்போக்கு சாயலில் பிற்போக்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் மணி ரத்னம். தொழில்நுட்பம் அவரது மிகப் பெரிய பலம். என்ன இருந்தும் திரைக்கதை உயிர்த் துடிப்போடு இல்லாவிட்டால் தொழில்நுட்பத்தால் ஒரு பயனும் இல்லை என்பதற்குக் காற்று வெளியிடை சரியான உதாரணம்.
< சினிமா ஸ்கோப் 30 > < சினிமா ஸ்கோப் 32 >
< சினிமா ஸ்கோப் 30 > < சினிமா ஸ்கோப் 32 >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக