இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மகாமுனி: உலகத் தரத்துக்கு ஆசைப்படும் உள்ளூர் சினிமா


தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக இருக்கும் மகாதேவன் (ஆர்யா). வண்ணமயமான வாழ்க்கை வாழ ஆசைப்படும் இளம் மனைவி விஜி (இந்துஜா), மகன் பிரபாவுடன் சராசரியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். முத்துராஜ் (இளவரசு) என்னும் உள்ளூர் அரசியல்வாதிக்காகச் சில அடிதடி, கொலை போன்றவற்றுக்கான திட்டம் போட்டுக் கொடுக்கிறார். அதில் ஏற்பட்ட பகை காரணமாக மகாவையும் எதிரிகள் கொல்லத் துடிக்கின்றனர்.

ஈரோடு அருகே கிராமம் ஒன்றில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டபடி குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கான கல்வியைக் கற்றுக்கொடுத்துவருகிறார் ஒடுக்கப்பட்ட சமூகத் தாய் வளர்க்கும் முனிராஜ் (ஆர்யா). பிரம்மச்சாரியாகவே வாழ்க்கையை நகர்த்தும் முனிராஜின் வாழ்வில் குறுக்கிடுகிறார் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த தீபா (மஹிமா நம்பியார்). இதை விரும்பாத தீபாவுடைய தந்தை ஜெயராம் (ஜெயபிரகாஷ்) முனியைக் கொல்ல நினைக்கிறார்.

மகா, முனி இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதே மகாமுனியாக விரிகிறது.


மௌன குரு படத்தின் மூலம் கவனம் பெற்ற சாந்தகுமார் சமகால அரசியல், சாதிய ஒடுக்குமுறை போன்ற விஷயங்களின் வழியே திரில்லர் படமொன்றையே மறுபடியும் தந்திருக்கிறார். வழக்கமான வன்முறைப் படங்களுக்கான திரைமொழியைத் தவிர்த்துருப்பதால் படம் கவனிக்கவைக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஜானி போன்ற ஒரு தன்மையுடன் படம் நகர்கிறது. மிக நிதானமாகவே காட்சிகள் நகர்கின்றன. ஒருவிதமான தீவிரமான கதை சொல்லல் பாணியிலேயே திரைக்கதை அமைந்துள்ளது. சமகால அரசியலை ஒரு சரடாகவும், சமகால சமூகத்தின் சாதியப் பார்வையை மற்றொரு சரடாகவும் பிணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.   

படத்தின் தொடக்கத்தில் மனநிலைக் காப்பகத்தில் காணப்படும் ஆர்யா தொடர்பான காட்சிகள் படத்தைக் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் தொடர்ந்துவரும் காட்சிகள் பெரிதாகக் கவராமல் மந்த கதியில் நகர்கின்றன. ஓரளவு படம் நம்மைப் பிடித்து இருத்துவதற்கே முக்கால் மணி நேரம்வரை ஆகிவிடுகிறது. தெருமுனை திருமூர்த்தி கதையில் திருப்பமான கதாபாத்திரம் என்றபோதும் அவர் தொடர்பான மேடைப் பேச்சு காட்சி சுவாரசியமற்று உள்ளது.

ஆர்யாவுக்குச் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம். மகாவானாலும் சரி, முனியானாலும் சரி இரண்டிலுமே அவசியமான உடல்மொழியுடன் மென்மையான குரலில் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


முத்துராஜின் மனைவி மிகையாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியான விஜியாக வரும் இந்துஜா நடிப்பில் ஒரு செயற்கைத் தனம் தென்படுகிறது. முனியை விரும்பும் தீபாவான மஹிமா நம்பியார் பத்திரிகையாளர், ஆதிக்க சாதியில் பிறந்தபோதும் ஆதிக்கத்தை வெறுப்பது போன்றவற்றை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தை மீது கொண்ட கோபத்தில் அவருக்கு வேலையாள் எடுத்துச் செல்லும் மதுவைப் பிடிங்கிப் படபடவெனக் குடித்துவிட்டு பாட்டிலைப் போட்டு உடைத்துவிட்டுப் பேசும் அழகு தமிழுக்குப் புதிது.

மேடையில் தாறுமாறாகப் பேசும் திருமூர்த்தியை அழைத்துவரச் செய்து துடைப்பத்தால் சாத்தும் காட்சியும் நன்றாக இருக்கிறது. திருமூர்த்தியைக் கொல்லும் முடிவால் படத்தில் திரைக்கதையின் பாதை மாறுகிறது. மகாவின் அளவுக்கு மீறிய பணிவு இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.

படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் சரமாரியாகத் தென்படுகின்றன. உதாரணத்துக்கு, கத்தியால் அவ்வளவு ஆழமாகக் குத்துப்பட்ட மகா ஏதோ முள் குத்தியைப் போல் அதைப் பிடுங்கிவிட்டு இயல்பாக நகர்வதை நம்ப முடியவில்லை. வன்முறை தொடர்பான படம் என்றபோதும் முடிந்தவரை திரையில் வன்முறைத் தவிர்த்திருப்பது நன்று. சாதிய ஆணவக் கொலை முயற்சிக்கு விஷப் பாம்பைப் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது போன்றவற்றில் இல்லாத ஒரு மென்மைத் தன்மை பாம்பின் விஷத்தில் இருக்கிறது. சாதியம் உதிரத்தில் விஷம் போல் பரவும் என்பதைக் குறிப்பதுபோலும் உள்ளது.


அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு, எஸ்.தமனின் இசை, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு ஆகியவை படத்துக்கு உறுதுணை புரிந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மௌனகுருவில் கைவப்பட்டிருந்த நேர்த்தி மகாமுனியில் தவறியிருக்கிறது. ஹாலிவுட் கிளாஸிக் தன்மையில் படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் சாந்தகுமார் ஆனால், அவர் நினைத்த உயரத்தைப் படம் தொட்டிருக்கிறதா என்பது சந்தேகமே. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்துடன் வரும்போது அது முந்தைய படத்தைவிடச் சிறப்பாக இருந்திருந்தால் மகாமுனியைக் கொண்டாடியிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக