இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், பிப்ரவரி 15, 2016

மயக்கும் மாடுலர் கிச்சன்கள்


வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாய்க்கு ருசியாக உணவளிப்பதை நாம் விரும்பிச் செய்வோம். நமது விருந்தோம்பல் மீது நமக்கு அதிக அளவிலான பெருமிதம் உண்டு. விருந்துக்கு அடிப்படையான உணவைச் சமைக்கும் சமையலறையும் நமது வீட்டின் முக்கியப் பகுதி. ஒரு வீட்டின் சமையலறை எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பது நமது பண்பாட்டு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படும். சமையலறை சரிவரப் பேணப்படாத வீடுகளுக்குச் சமூகத்தில் பெரிய மதிப்பு கிடைக்காது.

பாரம்பரியமான வீடுகளின் அமைப்பே மாறிவருவதால் நமது பாரம்பரிய சமையலறைகளும் கால ஓட்டத்தில் தமக்குரிய அடையாளத்தை மாற்றிக்கொண்டுவருகிறது. நவீனத்தை நோக்கிச் சமூகம் நகரும்போது இதைப் போன்ற புற அடையாளங்கள் மாறிக்கொண்டே வருவதைத் தவிர்க்க முடியாது. இப்போது அமைக்கப்படும் நமது வீடுகளில் நவீன சமையலறைகள் அமைக்கப்படுவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

அஞ்சறைப் பெட்டிகளும் மட்பாண்டங்களும் நிறைந்திருந்த பாரம்பரிய சமையலறைகளை இப்போது பார்க்க விரும்பினால் அருங்காட்சியகம்தான் செல்ல வேண்டும். நவீன சமையலறைகளில் புகைகூடப் படிவதில்லை. சமையற்கட்டின் சுவிட்சு போர்டுகளில் புகையும் எண்ணெய்ப் பிசுக்கும் படிந்து என்ன நிறத்தில் அமைக்கப்பட்ட போர்டும் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும் என்ற கவலை இல்லை. நவீன சமையலறை வடிவமைப்பு குறைந்த இடத்தில் பல வசதிகளை வாரி வழங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. சமையலறையை மிகப் பெரிதாக அமைக்க வேண்டிய அவசியம் நவீன சமையலறைகளில் இல்லவே இல்லை. குறைவான இடத்தில் தேவையான அலமாரிகளை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் சமையலறையின் தோற்றமும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்துவிடுகிறது.

சமையலறையின் மேடை மிகவும் வசீகரமாக அமைக்கப்படுகிறது. மேடையிலேயே சமையல் எரிவாயு அடுப்பானது பதிக்கப்படுகிறது. மேடையில் மீது துறுத்திக்கொண்டு அடுப்பு அமையாமல் அடக்க ஒடுக்கமாக, பார்வைக்குப் பாந்தமாக அது அமைந்துவிடுகிறது. அதன் மீது அமைக்கப்படும் நவீன புகைபோக்கி புகையைச் சமையலறையிலிருந்து நாசூக்காக அப்புறப்படுத்திவிடுகிறது. நவீன புகைபோக்கி, அடுப்புக்கு மேலேயே அமைக்கப்படுவதால் சமையலின்போது ஆவியாகும் எண்ணெய்ப் புகையும், சப்பாத்தி போன்ற உணவைத் தயாரிக்கும்போது ஏற்படும் புகையும் அப்படியே மேலுக்குச் சென்று வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுவிடுகிறது. இதனால் சமையலறையில் புழங்குவோர் கண் எரிச்சலின்றி, தும்மலின்றி நிம்மதியாக வேலை செய்ய முடியும்.

சமையல் மேடையின் கீழே உள்ள இடத்தை அழகாக மரப் பலகைகளால் அழகுபடுத்தி விதவிதமான இழுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற சமையல் பொருள்களும் காய்கறிகளும் வைப்பதற்கு அவசியமான அலமாரிகள் உள்ளடங்கி அமைக்கப்படுகின்றன. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கும் இதிலேயே இடம் கிடைத்துவிடுகிறது. சமையல் கருவிகளான மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றை எல்லாம் அழகாக வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுகின்றன.

இப்படிச் சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது. பாத்திரங்களைக் கழுவுவதற்கு மேடையில் ஓரத்திலேயே கழுவு தொட்டி அமைத்துவிடுகிறார்கள். அவ்வப்போது சமையல் வேலைகளுக்கிடையே பாத்திரங்களைக் கழுவி அதனதன் இடத்தில் இருத்திவிட்டு இயல்பாகப் பிற வேலைகளைக் கவனிக்க இயலும்.

இத்தகைய நவீன சமையலறைகளை உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப விதவிதமாக அமைத்துக்கொள்ள முடியும். விதவிதமான வண்ணங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைவதா சிறந்த சமையலறை? அது பார்ப்பதற்கு அழகாகவும் சுத்தமாகவும் இருந்தால் மட்டும் போதுமா? சமையல் வேலைகளை எளிதில் செய்யும் வகையில் அமைந்திருப்பது அவசியம் அல்லவா? அப்படியான நவீன சமையலறையைத் தகுந்த நிபுணர்கள் கொண்டு அமைக்க வேண்டும். செலவு சிறிது அதிகம் ஆகும் என்றாலும் அதன் வசதிகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒத்துழைத்தால் நவீன சமையலறையை அமைத்துக்கொள்ளலாம்.

பிப்ரவரி 13 தி இந்து நாளிதழில் வெளியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக