இந்த வலைப்பதிவில் தேடு

கமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 12, 2025

அமலா எனும் பொன்மான்

இயக்குநர் டி ராஜேந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒருவர் அமலா. அவர் பிறந்தது செப்டம்பர் 12 அன்று தான். ஆக, இன்று அவரது பிறந்த நாள். அதனால்தான் இந்தப் பதிவையே  எழுத நேர்ந்தது. ஒன்பது எழுத்துகளில் தனது திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்த ராஜேந்தரின் ஒன்பதாம் படம் இது. இதில் தான் அமலா நாயகியாக அறிமுகமானார். படம் 1986 பிப்ரவரி 4 அன்று வெளியானது. நடிகர் சிம்பு இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒருசில காட்சிகள் வருவார். படத்தில் பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளைவிடப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற பாடல் காட்சி என்றால், ஒரு பொன்மானை நான் காண... பாடலைத் தான் சொல்ல வேண்டும். ராஜேந்தரின் கற்பனையில் உருவான பாடல் திரையில் உயிர் பெற்றதற்கு அமலாவின் தோற்றப்பொலிவும் ஈர்ப்பும் முதன்மைக் காரணங்கள். 

அமலா நடித்து வெளியான மெல்லத் திறந்தது கதவு, வேலைக்காரன், அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, சத்யா, மௌனம் சம்மதம், கற்பூர முல்லை எனப் பல படங்கள் ரசிகர்கள் நினைவை விட்டு அகலாதவை. தமிழின் முன்னணி நட்சத்திரங்களாகவிருந்த ரஜினி காந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜய காந்த், மோகன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார் அமலா. 

ரஜினியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை இவர். வேலைக்காரன் படத்தில் வா வா வா கண்ணா வா பாடல் காட்சியில் இமய மலையின் பனிபடந்த  சூழலில் வெற்றுக் கால்களுடன் இவர் நடனம் ஆடினார் என அப்போதைய பத்திரிகைகள் எழுதி மகிழ்ந்தன. ரஜினியும் இவர் கொடி பறக்குது, மாப்பிள்ளை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கமல் ஹாசனுடன் சத்யா, வெற்றி விழா ஆகிய படங்களில் நடித்துள்ள அமலா இயக்குநர் பாரதிராஜாவின் வேதம் புதிது, மணி ரத்னத்தின் அக்னி நட்சத்திரம் போன்ற படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். 

இயக்குநர் கே.பாக்யராஜுடன் இவர் நடித்திருந்த காவடி சிந்து படம் வெளிவரவில்லை என்ற போதும் அந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்ட சாமக்கோழி கூவியாச்சு ஊரு ஜனம் தூங்கியாச்சு... பாடல் காட்சி பட்டணந்தான் போகலாமடி படத்தில் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர் தாணு இயக்குநராக அவதாரமெடுத்த புதுப் பாடகன் படத்தில் அமலா தான் நடித்திருந்தார். 


சனி, ஆகஸ்ட் 21, 2021

புல்லுக்குப் பாயும் நீரா இலவசங்கள்?


திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்து அமைச்சராகியிருக்கும் தமிழ்நாட்டு நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியபோது, சமூகப் பொருளாதார நீதிக்கு ஏற்ப எல்லாருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது, அப்படிச் செய்தால் அரசு திவாலாகிவிடும் என்று கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 4,000 ரூபாய் உதவி தகுதியற்ற பலருக்கும் சென்று சேர்ந்தது என்பதை அவர் வருத்தத்துடன் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அதே போல் அரசு ஊழியர் ஓய்வூதிய விஷயத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த அரசின் பொருளாதார நிலைமை கைகொடுக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அப்படிச் சொன்னபோதுதான், எல்லாவற்றையும் இலவசங்களாகக் கொடுத்தால் அரசு திவாலாகிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  நிதியமைச்சரின் இந்தக் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இதைத் தொடக்கமாகக் கொண்டு இலவசங்கள் பற்றிய சில விஷயங்களை அலசிப் பார்க்கலாம்.  

தமிழ்நாட்டு அரசியல் களத்தில், குறிப்பாகத் தேர்தல் அரசியலில் இலவசங்கள் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இலவசங்கள் குறித்த ஆதரவான எதிரான கருத்துகளுக்கு எப்போதுமே பஞ்சமேயில்லை. பொதுவாகவே இலவசங்கள் தொடர்பான எதிர்ப்பு மனநிலை உள்ளதுபோலவே அவை தொடர்பான சாய்வு மனநிலையும் நம்மிடையே உள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய்க்குப் பொருள்களை வாங்குவோம் அதற்காகப் பத்து ரூபாய் பெறுமான பொருள் இலவசமாகக் கிடைத்தால் போதும் கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தது போல் மகிழ்வோம். உண்மையில் அது இலவசமாக இருக்காது நம்மிடம் அதற்கும் சேர்த்துத்தான் பணம் பெற்றிருப்பார்கள். ஆனால், அது குறித்து நாம் யோசிப்பதேயில்லை. அந்த நேரத்து சந்தோஷம் நமக்கு எப்போதும் முதன்மையாகிவிடுகிறது. மேலும், ஆழமாக யோசிக்கும்போதுகூட, அதற்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்துவிடுகிறோமே ஆதலால் அது இலவசமன்று நமக்கான உரிமைதானே என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். இப்படிச் சந்தோஷப்படும் நம்மிடம் யாராவது ஒருவர் சும்மா எதையாவது கொடுத்தால் உடனே நாம் வாங்கிவிடுவதில்லை. அவர் ஏன் நமக்குக் கொடுக்க வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்கிறோம். ஓரிடத்தில் இலவசத்தை எந்தக் கேள்வியுமின்றி பெறுவதில் மகிழ்ச்சியடையும் நாம்தான் இன்னோரிடத்தில் அதே இலவசம் தொடர்பாக ஆயிரம் சந்தேகங்களை எழுப்பிக்கொள்கிறோம்; இரண்டு வகையாகவும் நாம்தான் செயல்படுகிறோம்.

சில இடங்களில் இலவசத்தை அனுபவிக்கும் நாம் சில இடங்களில் அதே இலவசத்தை அனுபவிக்க மறுக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு? எந்த இடத்தில் நாம் அனுபவிக்கிறோம் எந்த இடத்தில் மறுக்கிறோம் என்பதை நிதானமாகச்  சிந்தித்துப்பார்க்கும்போது, நமக்கு உரிமை என்று நம்புமிடத்தில் நாம் அதை அனுபவிக்கிறோம், நமக்கு உரிமையானதில்லை என்று கருதுமிடத்தில் அதை மறுத்துவிடுகிறோம். ஆக, இலவசம் பெறுவது தொடர்பாக நமக்கு ஒரு தெளிவு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் ரயிலில் சிலர் வெறுமனே பிச்சை கேட்டுச் செல்வார்கள். சிலரோ அந்த ரயில் பெட்டியைச் சுத்தப்படுத்தியபடி காசு கேட்பார்கள். வெறுமனே பிச்சை கேட்பவருக்குக் கொடுப்பவர்களும் இருப்பார்கள்; சுத்தப்படுத்திவிட்டுக் காசு கேட்பவருக்குக் கொடுக்காதவர்களும் இருப்பார்கள். பெறுபவர்களுக்கு ஒரு தெளிவு இருப்பதைப் போல் கொடுப்பவர்களுக்கும் ஒரு தெளிவு இருக்கவே செய்கிறது.

இப்படி இலவசத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளபோது, அது தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பு. அதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு தரும் இலவசங்கள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன; அதே நேரத்தில் ஒரு தரப்பாரால் வரவேற்கவும் படுகின்றன. இலவசங்கள் தருவதால் மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் என்கிறது ஒரு தரப்பு. இலவசங்கள் மக்களுக்கான உரிமைதான் அரசுகள் அத்தகைய இலவசங்களைத் தருவதில் எந்தத் தவறுமில்லை அதே வேளையில் அது ஜனநாயக நாட்டில் மக்கள் நலம் நாடும் அரசின் கடமையே என்றுரைப்பாரும் உண்டு.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டில் ஆட்சியதிகாரத்தை காங்கிரஸிடமிருந்து கைப்பற்றிய திமுகவின் ஆட்சிதான் இத்தகைய இலவசங்களுக்கு வழிவகுத்தது என அண்ணாவின் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் திட்டத்தைக் கைகாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அதே மனிதர்கள், அந்தத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, அரசின் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை என்பதையும் குறையாகச் சொல்வார்கள். அண்ணாத்துரை தலைமையில் அமைந்த அந்த ஆட்சி தமிழ்நாட்டை ஒரு முன்னுதாரண மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது. அப்படியமைந்த ஆட்சி கண்டிப்பாக மக்களைச் சோம்பேறி ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு முடிவை எடுத்திருக்க இயலாது. அப்படியெனில், மக்களில் ஒரு பகுதியினருக்கு அப்படியொரு உதவி தேவைப்பட்டது என்பதே உண்மை.

இலவசங்களைப் பொறுத்தவரை கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகத் தர வேண்டும் என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அவர்கள் எங்கே முரண்படுகிறார்கள் என்றால், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர் போன்ற விஷயங்களையே எதிர்க்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கும்போது மக்களை அது சோம்பேறிகளாகிவிடக் கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், இலவசங்களை ஆதரிப்போர் இது அடிப்படையற்ற அச்சம் என்கிறார்கள். வெறுமனே இப்படியான இலவசங்களைப் பெற்றுக்கொண்டு மக்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இதில் இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. இலவசங்களை ஆதரிப்போரில் பெரும்பாலானோர் இடது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும், எதிர்ப்போரில் பெரும்பாலானோர் வலது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். நடிகர் ரஜினி காந்த் திரைக்கதை வசனம் எழுதி வள்ளி என ஒரு திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் மந்திரி ஒருவர் இலவச வேட்டி, சேலை வழங்குவார். அங்கே வரும் வீரைய்யன் என்னும் கதாபாத்திரமேற்றிருந்த ரஜினி, சேலை வேட்டி வேண்டாம் வேலை வெட்டி கேளுங்க, வேலை வெட்டி இருந்தா சேலை வேட்டி நாமே வாங்கிக்கலாம் என்று கூறுவார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதிய சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் திரைப்படத்திலும் இலவசத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தெருவில் போட்டு உடைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். 

அரசியலில் ரஜினிகாந்த் இடதா வலதா என்பதை முடிவுசெய்யும் முன்பே அவர் அரசியலிலிருந்து விலகிவிட்டபோதும், அவரது நடவடிக்கைகள் அவர் எந்தப் பக்கம் சாய்ந்திருந்தார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அதைப் போலவே எழுத்தாளர் ஜெயமோகனும் வலதுசாரிச் சாய்வு கொண்டவர் என்பதைத் தமிழ்நாடு அறியும். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இலவசங்களுக்கு எதிராக இருப்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு நிதியமைச்சர் போன்ற திராவிட இயக்கப் பின்னணி கொண்ட ஒருவர் இலவசம் தொடர்பான மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது அது பரிசீலிக்கத்தக்கதாகிறது.

உண்மையில் இலவசம் என்பதை வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சட்டென்று முடிவுகட்டிவிட முடியாது என்றே தோன்றுகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கவிருக்கும் ரூ. 1,000 தொடர்பாகக் கணக்கெடுப்பு நிகழ்த்தி அதன் பின்பே அதை வழங்க முடியும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். என்னதான் மக்கள் நலத் திட்டமாக இருந்தபோதும், அது தகுதியானோரை மட்டும் சென்றடையும்போதுதான் அதனால் பலன் இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சிறிது பாயலாம் அதைச் சகித்துக்கொள்ள முடியும். ஆனால், நீரில் பெரும்பகுதியைப் புல்லே பெற்றுக்கொள்ளுமானால் அது பயனற்றுப் போய்விடும். அரசு தரும் இலவசங்களைப் பெறுவதில் பொதுமக்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை அது நமது வரிப்பணத்தில் தரப்படுவதுதானே என அத்தகைய இலவசங்களை உரிமையாகவே கருதுகிறார்கள். எனவே, இத்தகைய இலவசங்களை வழங்குவதில் ஒரு தெளிவையும் கறார்தன்மையையும் அரசுதான் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாக்கு வாங்குவதற்காக இலவசங்களைப் பயன்படுத்தாமல் உண்மையிலேயே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கான இலவசங்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். அவற்றைப் பெறத் தகுதியானோரைச் சரியாக இனங்கண்டு மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் எந்தப் பாரபட்சமுமற்று அரசு நடந்துகொள்ளும்போது இலவசங்களால் எதிர்பார்க்கும் பயனும் பலனும் கிடைக்கக்கூடும். அதை விடுத்து வெறுமனே எல்லாருக்கும் எல்லாவற்றையும் வாரி இறைத்தால் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமாகுமே தவிர யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். நிதியமைச்சர் சொல்வது போல் அரசு திவாலாகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதப்பட்டது. 

வியாழன், நவம்பர் 05, 2020

கண்களால் பேசிய அபூர்வ ராகம்


இன்று (ஜூலை 24) நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள். அவரைப் பற்றிய சில நினைவுகளை அசைபோடுவோமா? சில முகங்களை வெறுக்க நினைத்தாலும் வெறுக்க இயலாது அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தித் தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்துகிடந்தது.

ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர். அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள். இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும். சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான, இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?

எல்லோரையும் கவரும் அந்தக் கண்களைப் பற்றி, மிகப் பெரிய நடிகர் ஒருவர், ’ஸ்ரீவித்யாவா அவருக்கு ஹெட் லைட் போல் ரெண்டு கண்ணுதானே உண்டு’ எனக் கூறி இவருடன் நடிக்க மறுத்திருக்கிறார். அதே நடிகர் ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் நூறாம் நாள் விழாவில் வந்து ஸ்ரீவித்யாவின் கண்களின் மகத்துவத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். நேருக்கு நேராக அவரிடமே ஸ்ரீவித்யா, என் கண்களைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அந்த நடிகர் ஏதோதோ சொல்லிச் சமாளித்து நழுவிவிட்டாராம். ஸ்ரீவித்யா தனது நேர்காணல் ஒன்றில் இதைக் கூறியிருக்கிறார்.


ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இசை ஞானத்துடன் இருந்தார். அதற்குக் காரணம் அவருடைய தாய் எம்.எல். வசந்த குமாரியும் தாத்தா அய்யாசுவாமியும். இருவருமே இசைக் கலைஞர்கள். வசந்தகுமாரி  மிக இளையவயதில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். எனினும், ஸ்ரீவித்யா இசை கற்றுக்கொண்டது பி.கிருஷ்ணமூர்த்தியிடம். பதினோரு வயதிலேயே இசையில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருடைய தந்தையான விகடம் கிருஷ்ணமூர்த்தி திரைப்பட நகைச்சுவை நடிகர். அரசியல் ஆர்வம் கொண்டவர். காங்கிரஸிலும் பின்னர் சுதந்திரா கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். நேரு, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் போல் மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்று தந்தையைப் பற்றி ஸ்ரீவித்யா கூறியிருக்கிறார்.   

ஏறக்குறைய 800 படங்களிலும் 25 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். என்றபோதும், அவர் சிறிய நடிகர் பெரிய நடிகர் என்ற பேதம் பார்த்ததில்லை. ரஜினி அறிமுகமான ‘அபூர்வ ராகங்க’ளில் அவருக்கு மனைவியாக நடித்த ஸ்ரீவித்யா 1991-ல் ‘தளபதி’ படத்தில் தன்னைவிட மூன்று வயது அதிகமான ரஜினிக்குத் தாயாக நடிக்கத் தயங்கவே இல்லை. அதே போல் சினிமா என்றோ தொலைக்காட்சி என்றோ வேறுபாடு காட்டியதில்லை. இயக்குநர்கள் என்ன கேட்கிறார்களோ அதை அப்படியே நடித்துத் தருவது மட்டுமே தனது பணி என்று கருதி கருமமே கண்ணாக இருந்திருக்கிறார். ‘பல நேரம் என்ன சாப்பிட்டேன் என்பதுகூட நினைவில் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். “புகழுக்காகவோ விருதுக்காகவோ பணத்துக்காகவோ இவ்வளவு கஷ்டங்களைப் பட்டு நான் நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் யார் என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதனால் இத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து நடித்தேன்” என்று தனது நடிப்பார்வத்துக்கு அவர் காரணம் கூறுகிறார்.


இயக்குநர் ஒருவர் தனது படத்தில் நடிக்க அழைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடத்தின் அதன் பின்னர் அவரைப் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார். அதே இயக்குநர் பின்னர் ஸ்ரீவித்யாவிடம் வந்து, ’தான் செய்தது தவறு’ என்று கூறி மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு நடித்தும் கொடுத்திருக்கிறார். அநேகப் பிரச்சினைகள் அவரைச் சூழந்தபோதும் பாறைபோல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு கடவுள் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு காலம் கடத்தியிருக்கிறார். ஒரு நிழல் போல் தன்னைக் கடவுள் பின் தொடர்வதான நம்பிக்கையில் எல்லாத் துயரங்களையும் கடந்தவர் ஸ்ரீவித்யா.

கடவுள்மீது இவர் நம்பிக்கை வைத்திருந்தபோதும், கடவுள் இவருக்குத் தனிப்பட்ட கருணை எதையும் காட்டியதாகத் தெரியவில்லை. கமல் ஹாசனுடனான காதல் தோல்வியில் முடிந்தது. அந்த ஏமாற்றத்தை மறக்க அடுத்த காதல் அவருக்குக் கைகொடுக்கும் என நம்பினார். மலையாளப் படமான ‘தீக்கன’லில் நடிக்கும்போது ஏற்பட்ட பரிச்சயத்தால் அதில் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஜார்ஜ் தாமஸை மதம் மாறித் திருமணம் புரிந்துகொண்டார். எல்லோரும் தடுத்தும் தனக்கு அது நன்மை பயக்கும் எனக் கருதினார். ஆனால், காதலனும் காலமும் அவரை ஏமாற்றியது. அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம் கடவுளும் கையைவிரித்துவிட்டார் அதுதான் பரிதாபகரமானது. அதன் பின்னரும் காதலும் துயரமும் அவர்மீது பேரார்வம் கொண்டு பின் தொடர்ந்தன. இயக்குநர் பரதனுக்கும் அவருக்கும் காதல் அரும்பியது. மகிழ்ச்சி தர வேண்டிய காதல்கள் அவரது மன நிம்மதியைப் பறித்தன. ஆனாலும், அவர் எதுபற்றிய கவலையும் கொள்ளாமல் இயங்கிவந்திருக்கிறார். தன் தாய் மறைந்த பத்து நாட்களில் அவர் மலையாளப் படமொன்றில் நடித்தார். ஒரு நடிகருக்குத் தனிப்பட்ட முறையில் எந்த சோகம், வருத்தம் இருந்தலும் கேமராவுக்கு முன்னே  வரும் போது அது மறந்துவிடும் அதுதான் கேமராவின் மகத்துவம் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீவித்யா. 


தமிழில் எம்.ஜி.ஆருடன் ரகசிய போலீஸ் 115-ல் நடித்திருக்க வேண்டியது. ஆனால், சிறு பெண்ணாகத் தெரிகிறார் என்று அந்த வாய்ப்புத் தட்டிப்போனது. 1967-ல் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘திருவருட்செல்வர்’ படத்தில் உமையவளாக வந்து ஒரு நடனம் ஆடுவார். அதுதான் அவரது அறிமுகப்படம். பின்னர், நூற்றுக்குநூறு, ஆறு புஷ்பங்கள், இமயம், அம்மன் கோவில் கிழக்காலே, மைதிலி என்னைக் காதலி, மனிதன்,  அபூர்வ சகோதரர்கள், கற்பூர முல்லை, நம்மவர், காதலுக்கு மரியாதை எனப் பல படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனாலும், தமிழ்ப் படங்களைவிட அவரது நடிப்புக்கு மலையாளப் படங்களே பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தன. மலையாளத்தில் முதலில் சத்யனுடன் ’சட்டாம்பிகா’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், ‘செண்டா’ படத்து சுமதி என்னும் கதாபாத்திரம் தனக்குப் பிடித்த ஒன்று என்று  ஸ்ரீவித்யா குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். எல்லா மொழிகளிலும் சொந்தக் குரலிலேயே பேசி நடித்துள்ளார். ’வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியோ பெரிய மகிழ்ச்சியோ ஏற்பட்டதில்லை. வாழ்க்கையில் ஆச்சரியமான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என்று கூறும் ஸ்ரீவிதா திரைப்படத் துறை ஆணாதிக்கம் மிகுந்தது என்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால், அதற்காகக் குறைப்பட்டுக்கொள்ளவில்லை. ’எல்லோரையும் நேசியுங்கள், யாருக்கும் துரோகம் இழைக்காதீர்கள் இயன்றவரை உண்மையைப் பேசுங்கள் முடியாதபோது அமைதி காத்திடுங்கள்’ என்று அழகாகச் சொல்கிறார் ஸ்ரீவித்யா ஒரு நேர்காணலில். அப்படியே அவர் வாழ்ந்தும் மறைந்தார். புற்றுநோய் காரணமாக 2006 அக்டோபர் 19 அன்று அவர் உயிர் பிரிந்தது. கேரளம் அவரை முழு அரசு  மரியாதையுடன் அடக்கம் செய்தது. அவரது துயரங்களிலிருந்து மரணம் அவரை விடுவித்தது ஆனால், தனது பண்பட்ட நடிப்பின் வழியே ரசிகர்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான கட்டுரை.

சனி, நவம்பர் 16, 2019

கமலுக்குக் கைவந்த கலை வணிகம்

1982 ஆம் ஆண்டு நாட்டு விடுதலை நாளை ஒட்டி ஆகஸ்ட் 14 அன்று வெளியான தமிழ்ப் படம் ஒன்று அதற்குப் பிறகான தமிழ்ப் படங்களின் பாதையில் பெருத்த மாறுதலை ஏற்படுத்தியது. கலைக் கடவுள் என்றும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்றும் தன் ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் அப்போதைய காதல் இளவரசன் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘சகலகலா வல்லவன்’தான் அது. பத்தாண்டுகள் கழித்து 1992-ல் ஓரங்க ஸ்ரீலங்கா கொப்பரத் தேங்கா பாடிய ‘சிங்கார வேல’னையும் தந்தவர் அவர். இத்தகைய படங்களைக் கமல் தனது திருப்திக்காக உருவாக்கிக்கொள்ளவில்லை; ரசிகர்களின் திருப்திக்காக என்பதில்தான் அவர் ரசிகர்கள்மீது கொண்டிருக்கும் மாறா அன்பும் தீராப் பிரியமும் வெளிப்படுகின்றன.
கமல் ஹாசன், சில்க் ஸ்மிதா
எவ்வளவு கலை மேதைமையுடன் ஒரு படத்தைப் படைத்தாலும் அதைத் திரையரங்குக்கு அனுப்பும்போது அது வணிகப் பொருள்தான் எனும் புரிதல் கமலுக்கு இருந்ததால்தான் ஒரே ஆண்டில் அவரால் ‘மூன்றாம் பிறை’ போன்ற ஒரு படத்தையும் ‘சகலகலா வல்லவ’னையும் தரமுடிந்திருந்தது.‘நேத்து ராத்திரி யம்மா’, ‘நிலா காயுது’ போன்ற பாடல்கள் வழியேயும் தன் ரசிகர்களை மகிழ்வித்தார்; படத்தை வசூல் வெற்றியடையச் செய்தார். பிறிதொரு நடிகர் என்றால் இப்படியான பாடல்களை மறுத்திருக்கக்கூடும். ஆனால், கமல்ஹாசன் அப்படியான வேலைகளில் இறங்கவில்லை. ‘சகலகலா வல்லவ’னுக்கு எது தேவையோ அதைத் தர வேண்டும் என்ற உறுதி இருந்ததால்தான் அவர் சகலகலாவல்லவன்.


அடிப்படைச் சாயலில் கிட்டத்தட்ட சார்லி சாப்ளினின் ‘சிட்டிலைட்ஸ்’ தன்மை கொண்ட, இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’யில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற அதே வேளையில் ‘பொன்மேனி உருகுதே’ என சில்க் ஸ்மிதாவுடன் ஆட்டம் போடவும் முடிந்த துணிச்சலின் மறுபெயர்தான் கமல் ஹாசன். கலை மட்டுமே பிரதானம், வணிகம் அவசியமில்லை எனக் கருதும் கிணற்றுத் தவளை அல்ல கமல், அவர் உலகநாயகன். சாதாரண நடிகர் ஒருவர் ‘மூன்றாம் பிறை’யில் நடித்திருந்தால் பொன்மேனி உருகியிருக்க வாய்ப்பில்லை; படமும் பெரிய வெற்றியைப் பெறாமல்கூடப் போயிருக்கக்கூடும்.

கமல் ஹாசன், அம்பிகா
கமலைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் எல்லாக் காட்சிகளையும் முழு ஈடுபாட்டுடன் தர வேண்டும் என்பதில் அலாதிப் பிரியம் கொண்டவர். அந்தக் கலை அர்ப்பணிப்புதான் ‘நாயக’னில் வேலு நாயக்கரிடமிருந்து உலக அழுகையை வெளிப்படுத்தியது; ‘புன்னகை மன்ன’னில் இறப்பதற்கு முன்பு ரேகாவின் உதட்டில் சர்வதேச நடிப்பின் முத்திரையைப் பதிக்கவைத்தது. எந்தக் காட்சியில் தாம் நடிக்கிறோமோ அந்தக் காட்சியில் தன்னைத் தவிர பிறர் நடித்திருக்க முடியாது; நடித்திருந்தாலும் தம்மைப் போன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்க இயலாது என்பதை ரசிகர்களை உணரவைக்க வேண்டும் என்ற தன் முனைப்புதான் அவரை இயக்கியது. இதயத் துடிப்பு நின்றுபோவதைவிடக் கொடுமையானது ரசிகர்களின் கைதட்டல் நின்றுபோவது என்பதில் அதிக நம்பிக்கை கொண்ட கலைஞானி அவர்.  


அதனால்தான் அவர், தமது படங்களை கலையும் வணிகமும் சந்திக்கும் புள்ளியில் இருந்து உருவாக்கினார். அவரைப் பொறுத்தவரை கலை ஒரு கண் என்றால், வணிகம் மற்றொரு கண். கலைப் படம் உயர்ந்தது வணிகப்படம் தாழ்ந்தது என்னும் பிற்போக்குத்தனமான எண்ணமற்றவர் கமல்ஹாசன். கலையும் வணிகமும் இணைந்து பூட்டப்பட்ட புராதன கட்ட வண்டியில் விஸ்வரூபம் எடுத்தவர் கமல் ஹாசன். 


‘குணா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஓர் இதழில் ‘குணா ஒரு ஆர்ட் ஃபிலிம்’ என்று எழுதிவிட்டார்கள். உடனே கலைஞானி கமல் ஹாசன் வெகுண்டுவிட்டார். ‘ஆர்ட் ஃபிலிம் என்பது எனது விநியோகஸ்தர்களின் வயிற்றைக் கலக்கும் கெட்ட வார்த்தை’ என்னும் ரீதியில் மறுவாரமே மறுப்புத் தெரிவித்தார். ஏனெனில், ‘குணா’ கலைப்படம் என்று கூறி அதைக் காலிசெய்துவிடுவார்களோ என்ற அசலான கலைஞனுக்கு உரித்தான தார்மிக அச்சம் அவரிடம் சட்டென்று வெளிப்பட்டது. அத்தகைய விழிப்புணர்வுதான் கமல் ஹாசன் என்னும் நடிகரை ஆஸ்கர் நாயகனாகத் தொடர்ந்து வெளிச்சத்திலேயே வைத்திருக்கிறது. ‘குணா’வில் கலைத் தன்மை நன்கு வெளிப்பட்டாலும் அதன் வணிகம் அதைப் போன்ற நல்ல படங்களை உருவாக்க எவ்வளவு முக்கியம் என்பதில் அவருக்கு இருந்த தெளிவாலேயே அவர் அவ்வளவு பதறினார்.


தாம் மாறுபட்ட படங்களில் மட்டுமே நடிக்கக்கூடிய நடிகர் என்னும் பிம்பத்தை அவரே முடிந்தவரை தகர்த்துக்கொண்டே இருந்தார். தொடக்க காலம் முதலே தமது படங்கள் மாறுபட்டவையாக இருக்க வேண்டும் என்னும் தவிப்பும் அதில் கொண்டிருந்த உறுதியும் மட்டுமே அவரிடம் வெளிப்பட்டவண்ணம் இருந்தன. அவரது திரை வாழ்வில் முக்கியத் திருப்பப் படமான ‘நாயகன்’கூட வணிகப் படமே. அதிலும் கலைத் தன்மையைக் கலந்திருந்தாரே தவிர அதை முழு மாற்றுப்படம் என்றோ கலைப் படம் என்றோ முத்திரை குத்திவிட முடியாது. ‘நிலா அது வானத்து மேல’ பாடல், ‘நான் அடிச்சா நீ செத்துருவ’ எனும் பஞ்ச் டயலாக் போன்றவற்றை ஒரு கலைப் படத்தில் நினைத்தே பார்க்க முடியாது. ஆனால், அவற்றையும் சேர்த்துதான் வெள்ளிவிழா கண்ட ‘நாயகன்’ என்பதையும் மறந்துவிடலாகாது.


கலைரீதியான படைப்புகளை மட்டுமே தாம் தர வேண்டும் என்று விடாப்பிடியாக கமல்ஹாசன் செயல்பட்டிருந்தால் அவர் காணாமல் போயிருக்கக்கூடும். அதனால் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பொழுதுபோக்குப் படங்களில் நடித்துத் தான் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் வருவாய் பெற்றுத் தரும் சந்தைமதிப்பு மிகு நடிகர் என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டியதிருந்தது. அடிக்கடி கமல் சொல்வதைப் போல், Comedy is a serious business. வணிகரீதியான வெற்றிபெற்ற படைப்புகளில் கமல் ஹாசன் நடிக்காமல் போயிருந்தால் கமலின் கலைப் படங்களை நாம் பெறாமல் போயிருப்போம். கலைரீதியான கமலின் முயற்சிகளுக்குப் பின்னணி ஆதாரமாக இருந்தவை அவரது வணிகரீதியான முயற்சிகள். நல்ல வியாபாரம் வெல்லும் என்பதில் கமலுக்கு இருந்த அபாரமான நம்பிக்கைதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ காலத்திலிருந்து ‘தூங்கா வனம்’ காலம் வரை அவரைத் திரைத்துறையின் சிறந்த கலைஞராக முன்னணியில் வைத்திருக்கிறது.



ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

சினிமா ஸ்கோப் 45: விடுகதை


திரைப்படத்தைப் பொறுத்தவரை புதிய கதைகள் என எவையுமே இல்லை. எல்லாவற்றையுமே நம் முன்னோடிகள் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். திரைக்கதையில் மட்டும்தான் புதிது புதிதாக எதையாவது சொல்ல முடியும். எத்தனையோ திரைக்கதைகளைப் படித்துவிட்டு எவ்வளவோ திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒரு திரைக்கதை அமைக்க அமர்ந்தாலும் உருவாகப்போகும் புதிய திரைக்கதை பழையவற்றிலிருந்து மாறுபட்டு அமைய வேண்டும். இல்லையென்றால் திருப்தி கிடைக்காது. திரைக்கதைகளைப் படிப்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் ஏற்கெனவே எந்தெந்தக் கருப்பொருட்களில் எல்லாம் படங்கள் வந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள மட்டுமே உதவும். அவற்றைப் பார்த்துக் காட்சிகளை அப்படியே சுடும்போது படைப்பாளியின் தராதரம் வெளிப்பட்டுவிடும். ஷங்கர் பெரிய இயக்குநர் என அறியப்பட்டிருக்கிறார். ‘அந்நிய’னில் விக்ரமை ‘தி செவன்த் சீ’லின் மரணக் கதாபாத்திர கெட்டப்பில் வெளிப்படுத்தும்போது சட்டென்று எரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. யோசிக்கவே மாட்டார்களா அப்படியே எடுத்துவைத்துவிடுகிறார்களே எனச் சலிப்பாக இருக்கிறது. ஒரு கதாபாத்திர வடிவமைப்புக்கே இப்படி என்றால் முழுப் படத்தையும் உருவிப் படம் பண்ணினால் ரசிகர்கள் படைப்பாளிகளை எப்படி மதிப்பார்கள்?

தமிழில் வித்தியாசமான படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் படைப்பாளிகளாலோ படங்களின் தலைப்புக்குக்கூட மெனக்கெட முடிவதில்லை. ஏற்கெனவே வந்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகளை அப்படியே வைத்துக்கொள்கிறார்கள். எழுபது எண்பது வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களின் தலைப்புகளை மறுபடி பயன்படுத்தினால் பரவாயில்லை. எண்பதுகளில் வந்த படங்களில் தலைப்புகளையே மறுபடியும் பயன்படுத்திவிடுவது புதிய விஷயங்களை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அவை கிடைக்கும்போது சட்டென்று பற்றிக்கொள்வார்கள். எப்போதுமே இந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த சினிமா ரசிகர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய முடிந்திருந்தது இளையராஜாவால். இளையராஜாவை மிஞ்சி என்ன செய்துவிட முடியும் என எண்ணியிருந்தால் ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் உருவாகியிருக்க மாட்டார். மாஸ்டர்களை மதிக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களை மிஞ்சும் வகையில் படங்களை உருவாக்க முயல வேண்டும்? தமிழில் மிக அரிதான வகையிலேயே வித்தியாசமான களங்களில் படங்கள் உருவாக்கப்படுகின்றன.


சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்றொரு படம் வந்தது. பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த படம். அது வணிகரீதியாக வெற்றிபெற்ற படமல்ல. ஆனால், புதிதாக எதையாவது தர வேண்டும் என்ற உந்துதலில் உருவாக்கப்பட்ட படம். அதுவரையிலும் தமிழ் இயக்குநர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தையும் கல்லிடைக்குறிச்சியையும் சுந்தரபாண்டிய புரத்தையும் குற்றாலத்தையும் அழகாகக் காட்டி வந்தார்கள். ‘ஆரஞ்சு மிட்டா’யில் அதே திருநெல்வேலி மாவட்டம்தான். அதே அம்பாசமுத்திரம்தான். ஆனால், அந்தப் படத்தில் தென்பட்ட நிலம் வேறு படங்களில் தென்படாத நிலம். 108 ஆம்புலன்ஸ் என்னும் புதிய வரவைத் திரைக்கதையின் மையமாக்கி ஒரு படத்தை உருவாக்க முடிந்த தன்மை புதிது. அதன் திரைக்கதை பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அதன் நோக்கம் புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்பதே. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் அவர் இருப்பதாலேயே ‘சூதுகவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவரையும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களின் டெம்ப்ளேட் கதாபாத்திரங்களில் அடக்கிவிடவே திரையுலகம் முயலும். அதில் நாயகர்கள் ஜாக்கிரதையாக இருந்தால் தமிழ்ப் படங்களுக்கு நல்லது.               

சகலகலா வல்லவன் கமல் ஹாசனை நாம் ‘ஹே ராம்’, ‘மகாநதி’ போன்ற படங்களுக்காகத் தான் நினைவுகூர்கிறோம். காலத்தால் முந்தைய அத்தகைய படைப்புகள் மட்டுமே அவரது அடையாளம். வணிகரீதியாக வெற்றிபெற்றதா என்பதை எல்லாம் மீறி கமல்ஹாசன் திரைத்துறையை எவ்வளவு நேசித்தார் என்பதற்குச் சான்றாக அப்படியான படங்கள் நிலைத்திருக்கும். ‘காதல் கோட்டை’ படத்தின் மூலம் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற அகத்தியனுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கொடுத்தார் கே பாலசந்தர். அப்போது அகத்தியன் உருவாக்கிய படம் ‘விடுகதை’. அது ஒரு தோல்விப் படம்தான். ஆனால், மரணம் பற்றி ஆக்கபூர்வமாகப் பேச முயன்றிருந்தார். மரணத்தை யதார்த்தமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றிப் படம் பேசியது. அது பெரிதாக வரவேற்கப்படவில்லை. மீண்டும் அவர் ‘காதல் கோட்டை’ சாயலிலே ‘காதல் கவிதை’, ‘வசந்த மாளிகை’ பாதிப்பிலே ‘கோகுலத்தில் சீதை’ என்று சென்றுவிட்டார். மணிரத்னத்திடமிருந்து வெளிவந்த சுசிகணேசனின் முதல் படம் ‘விரும்புகிறேன்’. அவர் மிக விருப்பத்துடன்தான் படத்தை உருவாக்கினார். நல்ல சப்ஜெக்ட்தான். வணிகரீதியில் வெற்றிபெறவில்லை. ஆனால், சுசி கணேசனை நினைவுபடுத்த அந்தப் படம்தான் உதவும். மணிரத்னத்திடமிருந்தோ கமல்ஹாசனிடமிருந்தோ ஒருவர் ஆக்கபூர்வமான ஆளாக வெளிப்படுவதே அபூர்வம். அப்படி வெளிப்பட்ட சுசி கணேசன் ‘கந்தசாமி’, ‘திருட்டுப் பயலே’ போன்ற படங்களின் வழியேதான் வெற்றிபெற்ற இயக்குநரானார்.  


‘உதிரிப்பூக்கள்’ தொடங்கி ‘சுப்ரமணிய புரம்’, ‘சூது கவ்வும்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘மதயானைக் கூட்டம்’ போன்ற சில திரைப்படங்கள் மட்டுமே சட்டென்று நினைவில் வருகின்றன. இதற்கிடையே ‘சேது’, ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற சில படங்கள் வழக்கத்திலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. இந்த எல்லாத் திரைப்படங்களுமே ஏதாவது ஓர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை உணர்த்துவதற்கான திரைக்கதையை அமைத்துக்கொண்டுதான் பயணப்பட்டிருக்கின்றன. பார்வையாளர் சொல்லப்பட்ட திரைக்கதையின் வழியே உணர்த்தப்பட்ட கருத்தை உள்வாங்கிக்கொள்கிறார். ஆகவே, திரைக்கதை சுவாரசியமாக இல்லையென்றால் எதையுமே பார்வையாளரால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் படத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். இங்கே கருத்து என்பது ஒரு செய்தி அவ்வளவுதான். அதை நன்னெறி என்பதாக மட்டும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை. கருத்து சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னாலும் படங்கள் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. கருத்தை வெளிப்படையாகச் சொன்னால் அடப்போங்கப்பா என ரசிகர்கள் அலுத்துக்கொள்வார்கள். ஆகவே, அதை உணர்த்தும்படியான திரைக்கதை அமைக்கும்போது ரசிகர்கள் அதை உணர்ந்துகொள்வார்கள்.


படம் ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டுமே தவிர அதையே போதிக்கக் கூடாது. போதனை கட்டுரையின் தன்மை, திரைப்படத்தின் தன்மை உணர்த்துதலே. போதனைத் தன்மைக்கு உதாரணமாக சேது மாதவன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ‘நம்மவ’ரைச் சொல்லலாம். திரைக்கதையின் காட்சிகள் அனைத்துமே மையக் கருத்தை உணர்த்துவதற்கான பயணமாக இருக்கும்போது படம் சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ருசிகரமாகச் சொல்லி உணர்த்த வேண்டிய செய்தியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில்தான் திரைக்கதை அமைப்பின் சவாலே அடங்கியுள்ளது. அதை முடிந்தவரை நுட்பமாகச் செய்ய வேண்டும். ரஜினி காந்த் படத்து ஓபனிங் காட்சி போல் அமைந்துவிடக் கூடாது. அது ரஜினிக்கு சரி. நல்ல படத்துக்குச் சரியாக அமையாது.

(இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் 45 வாரங்கள் வெளிவந்த இத்தொடர் இந்த அத்தியாயத்துடன் நிறைவுபெறுகிறது.)

ஞாயிறு, ஜூன் 18, 2017

சினிமா ஸ்கோப் 37: மனசுக்குள் மத்தாப்பூ


எல்லோருமே மன நிலைப் பாதிப்பு கொண்ட ஒருவரை வாழ்வில் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்திருப்போம். ஆனால், உடம்பு நோயைப் புரிந்துகொள்வது போல் மன நோயைப் புரிந்துகொள்கிறோமா என்பது சந்தேகமே. மனநிலைப் பிறழ்வு, மனச்சிதைவு போன்ற பல மன நோய்கள் உள்ளன. இவற்றை வைத்துப் பல திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. பொதுவாக மனநிலைப் பிறழ்வு என்பதை நமது படங்கள் இறப்புக்குப் பதிலான இன்னொரு உத்தியாகவே பயன்படுத்துகின்றன. அம்மன் கோவில் கிழக்காலே, காதல் போன்ற படங்களில் தாங்க முடியாத துக்கத்தாலும் மூன்றாம்பிறை, சேது போன்ற படங்களில் விபத்தாலும் மன நிலைப் பிறழ்வு உருவாகிவிடுகிறது. மனநிலைப் பிறழ்வுக்குள்ளான பல கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவதும் பெரும் போக்காக நடந்துவருகிறது. 

ஸ்ரீதர் வெண்ணிற ஆடை படத்தில் மனப் பிறழ்வைக் கையாண்டிருப்பார். மனநல நிபுணர் ஒருவர் செல்வந்தப் பெண் ஒருவரை (ஜெயலலிதா) பித்து நிலையிலிருந்து மீட்பார். அந்தச் சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அந்தப் பெண் அவர் மீது மையல் கொண்டுவிடுவார். அந்த மருத்துவருக்கு ஏற்கெனவே ஒரு காதலி வேறு உண்டு. இப்போது மருத்துவர் யாரைக் கரம் பிடிப்பார்? யாரைக் கரம் பிடித்தாலும் மற்றவருடைய மனம் பேதலிக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் அந்தப் பிரச்சினையை ஸ்ரீதர் தனக்கேயான பாணியில் சமாளித்திருப்பார்.   

மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு எது நிஜம் எது கற்பனை என்ற வேறுபாட்டை உணர முடியாது என்கிறார்கள். இந்த நோயையும், மல்டிபிள் பெர்ஸனாலிடி (அந்நியனை மறந்துவிடுங்கள்) என்னும் நோயையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆளவந்தான் (2001); மற்றொன்று தென்கொரியப் படமான எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் (2003). 


ஜீ-வான்-கிம் இயக்கிய தென்கொரியப் படம் ஜாங்க்வா ஹாங்க்ரியான்ஜியான் என்னும் அந்நாட்டு வாய்வழிக் கதையின் அடிப்படையில் உருவானது. ஒரு சிற்றன்னை தனக்குப் பிறந்த மகன்களுக்காகத் தன் கணவனின் முதலிரண்டு மகள்களைக் கொன்றுவிடுகிறாள். ஆனால், அவர்கள் ஆவியாக வந்து பழிதீர்க்கிறார்கள். இந்தக் கதை 1924 முதலே பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் ஜீ-வான்-கிம் எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸை உருவாக்கியிருக்கிறார். ஏனென்றால் வாய்மொழிக் கதைக்கும் இவருடைய திரைப்படத்துக்கும் சில அடிப்படையான ஒற்றுமைகள் இருந்தாலும் பாரதூரமான வேறுபாடுகளும் உண்டு. மாறுபட்ட இதன் திரைக்கதையால் வழக்கமான ஒரு சைகாலஜி திரில்லராகவோ வெறும் பேய்ப்படமாகவோ அடையாளம் காட்டப்படுவதிலிருந்து இது தப்பித்திருக்கிறது. 

படத்தின் தொடக்கத்தில் சு-மியிடம் மருத்துவர்  நீயாரென நினைக்கிறாய் என்று கேட்கிறார். குடும்பப் படத்தைக் காட்டி இது யாரெனத் தெரிகிறதா என்கிறார். அந்த நாளில் என்ன நடந்தது என விசாரிக்கிறார். அவள் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். கதை விரிகிறது. படம் ஒரு அமானுஷ்ய பயணத்தை மேற்கொள்ளும் என்பதைப் படமாக்கக் கோணங்களும் பின்னணி இசையும் சொல்லிவிடுகின்றன. தன் தங்கை சு-ய்யான், தந்தை ஆகியோருடன் வீட்டுக்கு வருகிறாள் சு-மி. வீட்டில் சிற்றன்னை இருக்கிறாள். அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறுகின்றன. தன் சிற்றன்னையால் தன் தங்கை சு-ய்யானுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதால் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறாள் சு-மி.

ஒரு கட்டத்தில் சு-மியின் செயல்பாடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சு-மியின் தந்தை அவளை ஏன் இங்கு வந்ததிலிருந்தே இப்படி நடிக்கிறாய் என ஆத்திரத்துடன் கேட்கிறார். தன் சிற்றன்னை தங்கையை எப்போதும் அலமாரியில் வைத்துப் பூட்டி சித்திரவதை செய்வதை நீங்கள் உணரவில்லையா எனக் கோபத்துடன் கேட்கிறாள்.  அப்போது அவர் வெளியிடும் தகவல் பார்வையாளரைப் புரட்டிப் போடும். அந்த வீட்டில் அதுவரை பார்வையாளர்கள் பார்த்த பல சம்பவங்கள் சு-மியின் கற்பனையில் நிகழ்ந்தவை என்பதை விவரிக்கும். அந்த வீட்டில் சு-மியும் அவளுடைய தந்தையும் மட்டுமே உள்ளார்கள் என்பதை உணரும்போது அதிர்ச்சி ஏற்படும். மேக மூட்டம் விலகிய நிலவு போல் காட்சிகள் தெளிவாகும். 


படம் பின்னோக்கித் திரும்பும். சு-மியின் தந்தை மற்றொரு பெண்ணை விரும்புகிறார். அவளை மணமுடிக்கத் திட்டமிடுகிறார். இந்தச் சிக்கலின் காரணமாக சு-மியின் தாய் ஒரு அலமாரியில் தூக்கிட்டு இறந்துகிடக்கிறார். இதைப் பார்த்து அலறும் சு-ய்யான் மீது அலமாரி கவிழ்ந்துவிடுகிறது. அவள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே சு-மியாலும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்தக் குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட அவளை மல்டிபிள் பெர்ஸ்னாலிடி டிஸார்டர் என்று மன நிலைக் கோளாறு தாக்குகிறது. அதன் விளைவுகளாலேயே அவள் தங்கை, சிற்றன்னை ஆகியோராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள். நடிகர்களின் வரம்புக்குட்பட்ட நடிப்பும் படமாக்க நேர்த்தியும் கதாபாத்திரங்களின் உணர்வைக் கச்சிதமாக பார்வையாளர்களுக்கு நகர்த்தும். படத்தில் அவசியமின்றி ஒரு ஷாட் கூட இடம்பெற்றிருக்காது.    

இப்போது ஆளவந்தானுக்கு வாருங்கள். கமல் ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தில் அவருக்கு இரண்டு வேடங்கள். ஒருவர் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் ராணுவ கமாண்டோவான விஜய். மற்றொருவர் தன் சித்தியிடமிருந்து தன் தம்பியைக் காப்பாற்றத் துடிக்கும், மனச் சிதைவின் ஒருவகையான சீஸோபெர்னிக் வித் பாரானாய்டு டெல்யூஷன்ஸ் காரணமாகக் மனநோய்க் காப்பகத்தில் பராமரிக்கப்படும் நந்து.


இதிலும் அப்பா மற்றொரு மணம் புரிகிறார். ஆகவே கொடுமைக்காரச் சிற்றன்னை உண்டு. அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். தம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்குண்டு என நம்புகிறான் நந்து. இப்படியொரு கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறொருவர் படைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் வரம்புகளை அவர் நீட்டித்துவிட்டதுதான் சோகம். மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வன்முறையாளர் இல்லை. பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவர்கள் என்றுதான் மருத்துவ அறிவியல் கூறுகிறது. இதை கமல் அறிந்திராதவராக இருக்க இயலாது. ஆனால், கமலின் கைவண்ணமான நந்து அளப்பரிய ஆற்றல் கொண்டவர்; ஒரு அதிசய மனிதர். தன் தம்பி விஜயின் காதலியான தேஜஸ்வினியைச் சித்தியின் மறு வடிவம் என்றே நந்து நம்புகிறார். எனவே, அவரிடமிருந்த தம்பியைக் காப்பாற்ற பல அசகாய சூரத்தனங்களில் ஈடுபடுகிறார். இறுதியில் தன்னையே அழித்துக்கொள்கிறார். 

எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் அடர்ந்த வனத்தில் ஓடும் மயான அமைதி கொண்ட நதி என்றால், ஆளவந்தான் நகரத்தில் சலசலத்து பாயும் ஆக்ரோஷ ஆறு. படத்தின் ஒரு காட்சியில் நந்து தவறுதலாக ஒரு பெண்மணியின் கழுத்தை அறுத்துவிட்டு சாரி ராங் நம்பர் என்பார். படத்தில் கமல் அந்த உத்தியைப் பயன்படுத்தியிருந்தால் அலுப்பூட்டும் அரை மணி நேர கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தியிருக்கலாம். ஆனால், கலைஞானி கமலுக்கு அந்த மனம் வரவில்லை போலும். ஆகவே, திரைக்கதையைப் பொறுத்தவரை கொரியப் படம் புத்திசாலித்தனமானது; ஆளவந்தான் சற்று அசட்டுத்தனமானது.

ஞாயிறு, அக்டோபர் 30, 2016

சினிமாஸ்கோப் 20: மதயானைக் கூட்டம்

தேவர் மகன் சிவாஜி, கமல்
சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி அன்று வெளியானது கமல் ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ (1992). அதே நாளில்தான் ரஜினி காந்த் நடித்த ‘பாண்டிய’னும் வெளியானது. ரஜினி, கமல் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரஜினி காந்த் நடித்த படமே வெற்றி வரிசையில் முந்திச் செல்வது வழக்கம். ‘நாயக’னுடன் வெளியான ‘மனிதன்’தான் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் நின்றது என்பது ஓர் உதாரணம். ஆனால் ‘பாண்டியன்’ படுதோல்வி அடைந்தபோது, ‘தேவர் மகன்’ தமிழகமெங்கும் வசூலை வாரிக்குவித்தது. அது மட்டுமல்ல; அந்த ஆண்டில் 5 தேசிய விருதுகளையும் அப்படம் பெற்றது.

அந்தப் படத்தில் இடம்பெற்ற, சாதிப் பெருமையை உரக்கச் சொல்லும் ‘போற்றிப்பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே’ என்ற பாடல் அதன் பின்னர் தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்மத்தை ஒருங்கிணைக்கப் பிரதான களம் அமைத்துக் கொடுத்தது. அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்ற உண்மை சிலருக்குக் கசக்கும். அந்தப் படத்தின் செய்தியோ அகிம்சை என்பதுதான் ஆச்சரியம். படத்தின் இறுதிக் காட்சியில் கையில் கொலையாயுதத்தை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வேற்படுத்தும் வசனங்களைப் பேசிச் செல்வார் சக்தி. ஆனால் அதன் திரைக்கதைப் பயணத்தில் சாதிப் பெருமிதம் மிதமிஞ்சி வழிந்த காரணத்தால், படம் உணர்த்த விரும்பிய அகிம்சை ஆழியில் கரைத்த உப்பானது. படத்தின் பிரதான கதாபாத்திரமான சக்தியே ஒரு காட்சியில், ‘நான் சக்திவேல் தேவன்’ என்ற வசனத்தை மொழியும்.
ரேணுகா, கமல், சிவாஜி, பரதன், கௌதமி
பெரிய தேவர் வேடமேற்ற சிவாஜி பஞ்சாயத்தில் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றவுடன் ஒட்டுமொத்த ஊரும் எழுந்து நிற்கும். அவர் அமரச் சொன்ன பின்னர்தான் அனைவரும் அமர்வார்கள். இது வெறும் மரியாதையல்ல; ஒரு வகையான ஆதிக்கம். படத்தின் ஒரு காட்சியில் சிவாஜியும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று காட்டப்படும். தன்னைப் பெரியார் வழியில் நடப்பவராகக் காட்டிக்கொள்வதில் விருப்புடன் செயல்படும் கமல்ஹாசனே இதன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியிருந்தார். கமல் ஹாசன் சக்தியாக அறிமுகமாகும் காட்சியிலேயே கறுப்பு நிற உடைதான் அணிந்திருப்பார். ஆனால் திருமணம் முடிந்த அன்று சக்தியின் கால்களில் விழுந்து வணங்குவார் பஞ்சவர்ணம். சக்தியும் அந்த மரியாதையை அப்படியே ஏற்றுக்கொள்வார். அத்தனை வகையான ஆதிக்கத்தையும் எதிர்த்த பெரியாரின் புகைப்படம் வெறும் செட் புராபர்ட்டி தானா? அல்ல அல்ல, நல்ல சினிமாவுக்காகத் தன் கொள்கைகளைக் கூடத் தளர்த்தி கமல் தன்னை வருத்திக்கொள்கிறார்!  


இதற்கு அடுத்த தீபாவளி அன்று வெளியானது பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ (1993). இதன் கதை வசனம் எம்.ரத்னகுமார். இது அண்ணன் தங்கைப் பாசப் படம் எனப்பட்ட போதும், இதில் அதே சமூகத்துப் பண்பாட்டு வழக்கங்களும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதங்களால் ஏற்படும் இன்னல்களுமே திரைக்கதையாகியிருந்தன. ‘பொசுக்கப்பட்ட பூமியில் நசுக்கப்பட்ட மனிதர்களை இன்னும் ஈரத்துடன் வைத்திருப்பது பாசம் என்ற உணர்ச்சியே. இது ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்த கலாச்சாரத்தின் கதை’ என்று பாரதிராஜாவின் கணீர் குரலில் தொடங்கும் படத்தின் முடிவில் விருமாயி அந்த மனிதர்களின் குரோதத்தால், நிலத்தில் குருதி சிந்திக் கிடப்பாள். பாரதிராஜா மனிதர்கள் அனைவரும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் வக்கிரங்களை அழிக்க வேண்டும் என்று வேதாந்தம் பேசுவார். பாக்யராஜ், மணிவண்ணன், இளையராஜா போன்றோர் இல்லாத வறுமை இந்தப் படத்தில் தென்படும். விருமாயி வேடமேற்றிருந்த ராதிகாவின் சிவாஜியாகும் முனைப்புக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்திருப்பார் பாரதிராஜா. ‘பசும்பொன்’னில் ராதிகா ரசிகர்களைப் பதம் பார்த்ததற்கு இந்தப் படத்தின் வெற்றியே அச்சாரமிட்டது. இந்தப் படத்தின் பல காட்சிகள் வெறும் செண்டிமெண்ட் பூச்சுக்கள். உதாரணம், அண்ணனுக்காக விருமாயி கையை வெட்டிக்கொள்ளும் காட்சி. 

இந்த இரண்டு படங்களிலுமே ஒரு சமூகத்தின் மூர்க்க குணத்தால் அதன் மானிடர்கள் படும் இன்னல்கள்தான் படத்தின் திரைக்கதை. ஆனால் அதே சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்திய படங்களாகவே இவை ரசிகர்களால் பார்க்கப்பட்டன; அதன் சான்று இவற்றின் வணிக வெற்றி. மரணத்தைக் கொண்டாடும் ஒரு நாளில் வெளியான இந்த இரண்டு படங்களும் தவறவிட்ட அம்சங்களைக் கச்சிதமாகக் கைப்பற்றி இதே சமூகத்தின் மற்றொரு பக்கத்தைக் காட்சிப்படுத்தியது, அன்பைப் போதித்த கிறிஸ்து பிறந்த தினத்தில் வெளியான (25.12.2013) விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’. ‘கிழக்குச் சீமையிலே’ மாயாண்டி-விருமாயி போல் இதில் செவனம்மாள்-வீரத் தேவர் என்னும் பாசமிக்க அண்ணன் தங்கை உண்டு. விருமாயி போல் செவனம்மாள் செண்டிமெண்ட் குளத்தில் முழுகாதவள். இவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். வெறும் பார்வையிலும் ஓரிரண்டு வாக்கியங்களிலும் முழுமையான அன்பை வெளிப்படுத்தி நிற்பார்கள். தன் அண்ணனுக்காகச் செவனம்மாள் ஒரு கொலையைக்கூட மிக நிதானமாக, நைச்சியமாகத் செய்து முடித்திருப்பவள். 

சடங்குகளுக்குள் புகாமல் அந்தச் சமூகத்தைத் தெருவில் நின்று வேடிக்கை பார்த்ததுபோல் திரைக்கதை அமைத்திருப்பார் கமல் ஹாசன், திருமணம் போன்ற மங்களகரமான சடங்குகளைத் தனது படத்தில் காட்சிகளாக்கியிருப்பார் பாரதிராஜா. ஆனால் ‘மதயானைக் கூட்ட’த்திலோ விக்ரம் சுகுமாரன் மரண வீட்டின் சடங்குகளைக் காட்சிகளாக்கியிருப்பார். முதலிரண்டு படங்களும் நேர்கோட்டில் செல்லும் ஆனால் இந்தப் படமோ முன்பின்னாகச் செல்லும் திரைக்கதையமைப்பைக் கொண்டிருக்கும். இதன் தலைப்பே அந்தச் சமூகத்தை விமர்சிக்கும். அச்சமூகத்தின் பெண்களிடம் வெளிப்படும் ஆக்ரோஷத்தையும் குரோதத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தியது இப்படம். ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலாவது சிவனாண்டியின் தாய் விஷமேற்றிய சொற்களையே விதைத்துக்கொண்டிருப்பார். ஆனால் ‘தேவர் மக’னில் பெரிய தேவர் வீட்டு அண்ணி சாந்த சொரூபியாகவே வலம் வருவார். பெண்களிடம் வெளிப்படும் வன்மம் ஒரு சமூகத்தின் வேரையே சிதைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டிய படம் மதயானைக்கூட்டம். 


சக்தியும் விருமாயியும் வசனங்களாகப் பேசிய அதே விஷயத்தை ஒற்றை சைகையில் வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன் கதாபாத்திரம். மூர்க்கத்தனத்துக்கு எதிராக அந்தப் படம் பார்வையாளரின் மனத்தில் எழுப்பிய கேள்வி உக்கிரமமானது. இப்படியான கேள்வியை எழுப்புவதுதான் ஒரு நல்ல படத்தின் தன்மை. ‘மதயானைக் கூட்டம்’ வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை எனினும் இந்தத் தன்மை இந்தப் படத்தை நினைவுகூரச் செய்யும். ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றியைப் படைப்பாளி தீர்மானிக்க இயலாது; அதைப் பார்வையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். ஆனால் அதன் கலைரீதியான அம்சத்தில் வெற்றியைப் பெறுவது படைப்பாளியின் கையில் தான் உள்ளது. அந்த வகையில் கமல் ஹாசனும் பாரதிராஜாவும் தர இயலாத கலை அம்சத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் புத்துணர்வான ‘மதயானைக் கூட்ட’த்தின் மூலம் தந்திருக்கிறார்.

ஞாயிறு, அக்டோபர் 23, 2016

சினிமா ஸ்கோப் 19: புரியாத புதிர்

சைக்கோ
மனித மனம் மிகவும் புதிரானது. மிக நெருக்கமாக மனத்தை நோக்கினால் அங்கே இன்னும் மிருக குணத்தின் தடத்தைக் கண்டடைய முடியும். என்னதான் கணினிக் காலத்து நாகரிக வாழ்வை மேற்கொண்டாலும் மனிதரது ஆழ்மனத்தில் கற்காலத்தின் சுவடுகள் எளிதில் புலனாகும். பழிவாங்குதல் என்னும் கோர குணம் தன் குரூர முகத்தைக் காட்டிக்கொண்டு பல்லிளிக்கும். பெரும்பாலான மனிதர்களுக்குப் பழிவாங்குதல் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. அது சில வேளையில், மனம் பிசகாகிக் கிடக்கும் போதில், மனத்தின் மேல் தளத்துக்கு வந்து ஆட்டுவிக்கும். அப்போது மனிதர்களின் நடத்தையில் நாகரிகத்தை எதிர்பார்க்க இயலாது. அவரை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் அந்த மிருகவெறி, இளஞ்சூடான உதிரச் சுவை அறியத் துடிக்கும். எல்லோரது மனத்திலும் இந்த மிருகவெறி  மினுக்கிட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, அது எப்போது வேண்டுமானாலும் உயிர்பெற்றெழுந்துவிடுகிறது. ஆழ்மனத்தில் பேரழிவு தரும் சிதிலம் ஏற்பட்டுவிடும்போது, இந்த உயிர்த்தெழுதலைத் தடுக்க முடியாது. 
பெர்ஃபியூம்: த ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்
இத்தகைய மனப்பிசகு கொண்ட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலைகளை நிகழ்த்தும் திரைக்கதையமைத்து ரசிகர்களுக்குத் திகிலைத் தரும் வகையிலான படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தொடர் கொலைகளை நிகழ்த்தும் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய படங்களில் மிகவும் ரசனையானது, கலாபூர்வமானது எனச் சொல்லத்தக்கது ‘பெர்ஃபியூம்: த ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்’ என்னும் ஜெர்மானியப் படம். ‘ரன் லோலா ரன்’ படத்தின் இயக்குநரான டாம் டைக்வார் இயக்கிய இந்தப் படம் திரையில் திரவிய வாசனை பரப்பிய அதிசயத்தை நிகழ்த்தியது.  

கலைஞன் கமல்
தமிழில் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’ தொடங்கி, கமல் நடித்த ‘கலைஞன்’, ‘வேட்டையாடு விளையாடு’ வரை அநேகப் படங்களைத் ரசிகர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். ஆல்ஃபிரட் ஹிட்சாக் இயக்கிய ‘சைக்கோ’ படத்தை இத்தகைய படங்களுக்கான முன்னோடி எனலாம். இதன் சாயலில் இயக்குநர் பாலுமகேந்திரா ‘மூடுபனி’ படத்தை உருவாக்கினார்.   
வேட்டையாடு விளையாடு கமல்
மிருகவெறியேறிய கதாபாத்திரங்கள் தங்கள் மன அமைதிக்காக அடுக்கடுக்காகக் கொலைகளைச் செய்வதுதான் இத்தகைய படங்களின் ஜீவ இழை. இரவில் உறக்கம் வராமல் தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும், அவ்வப்போது மனநிலை மாறுபாடு கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தின் கதை ‘டாக்ஸி டிரைவர்’ (1976). இதன் திரைக்கதையை எழுதியிருப்பவர் பால் ஸ்ரேடெர். படத்தை இயக்கியிருப்பவர் மார்டின் ஸ்கோர்ஸேஸி. இவர் ‘லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீஸ்ஸ் கிறைஸ்ட்’ படத்தை இயக்கியவர். வஸந்த் இயக்கிய ‘அப்பு’ திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் இதே போல் தூக்கம் வராமல் இரவு முழுவதும் டாக்ஸி ஓட்டும். ‘டாக்ஸி டிரைவர்’ படத்தில் ட்ரேவிஸ் கதாபாத்திரம் பாலியல் விடுதியிலிருந்து ஐரிஸ் என்னும் பெண்ணைக் காப்பாற்றியது போல் பிரசாந்த் பாலியல் விடுதிப் பெண்ணான தேவயானியைக் காப்பாற்றுவார். ஆனால் ‘அப்பு’ திரைப்படம், மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான ‘சடேக்’ என்னும் இந்திப் படத்தின் மறு ஆக்கம் என்றே குறிப்பிடப்படுகிறது. 
டாக்ஸி டிரைவர்
இரவுக்கும் தனிமைக்கும் கொலைகளுக்கும் ஏதோவோர் உறவு இருக்கும்போல. இத்தகைய படங்களில் பெரும்பாலான கொலைகள் இரவில்தான் நிகழ்த்தப்படுகின்றன. 1986-ல் வெளியாகி தமிழகத்தையே கலக்கிய ‘ஊமைவிழிக’ளில் ரவிச்சந்திரன்கூடக் கொலைகளை இரவில்தான் செய்வார்; அதுவும் அமானுஷ்யமான சூழலில். சூனியக்காரி போன்ற தோற்றம் கொண்ட அந்தப் பாட்டி, காலால் தரையில் பள்ளம் தோண்டும் குதிரை, தனியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வெங்கல மணியிலிருந்து வெளிப்படும் மர்மமான மணியோசை, இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியின் பயணம் என அனைத்துமே பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும். ஆபாவாணன் திரைக்கதையில் அர்விந்த்ராஜ் இயக்கிய ‘ஊமைவிழிகள்’ திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பெயரை வெள்ளித் திரையில் உறுதிபட எழுதியது.  

ஊமை விழிகள் விஜயகாந்த், சரிதா
லட்சியவாத நோக்கில் பத்திரிகை நடத்தும் ஜெய்சங்கர், சந்திரசேகர் அருண்பாண்டியன் நட்பு, காதல், செண்டிமெண்ட், சமூக அக்கறை, நேர்மை தவறாத காவல் அதிகாரி டி.எஸ்.பி.தீனதயாளு, இனிமையான பாடல்கள், திகிலூட்டும் பின்னணியிசை எனப் பொழுதுபோக்கு சினிமாவுக்கான அத்தனை இடுபொருள்களையும் கலந்து உருவாக்கப்பட்ட படம் இது. க்ளைமாக்ஸில் வரிசையாக கார்கள் வரும் காட்சி அப்போது மிகவும் சிலாகித்துப் பேசப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் போன்றே அது உருவாக்கப்பட்டது. கௌபாய் படங்களில் வரும் கதாபாத்திரம் போல் அருண்பாண்டியன் வேறு ஒரு மவுத் ஆர்கனை வாசித்துக்கொண்டிருப்பார். 

மேற்கண்ட படங்களில் எல்லாம் கொலை செய்பவர் யார், எதற்காகக் கொலை செய்கிறார் போன்ற விவரத்தைப் படத்தின் பயணம் தெளிவாக்கிக்கொண்டே வரும். ஆனால் கொலைகள் எதற்காக நடைபெறுகின்றன, யார் கொலை செய்வது என்ற விவரத்தைத் தெளிவாகச் சொல்லாமலே ஒரு படத்தை உருவாக்க முடியுமா? சந்தேகம்தான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் பாங் ஜூன் ஹோ, தான் இயக்கிய ‘மெமரிஸ் ஆஃப் மர்டர்’ படத்தை அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் ஒரு மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

மெமரிஸ் ஆஃப் மர்டர்
மழை பொழியும் இரவுகளில் மிகவும் அழகான, சிவப்பு உடை அணிந்த இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கொலைக்கான காரணத்தையோ கொலையாளியையோ கண்டுபிடிக்க முடியாமல் புலனாய்வுத் துறையினர் திணறுகிறார்கள். இந்த மர்ம முடிச்சுகளைக் கண்டறிய சியோலிலிருந்து புலனாய்வாளர் ஒருவர் வருகிறார். அவர் நிதானமாகச் செயல்படுகிறார். கையில் கிடைத்த விவரங்களை வைத்து மேலும் ஒரு கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதே போல் இரு நாட்களுக்குள் அந்தப் பிணத்தையும் கண்டுபிடிக்கிறார். கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி செய்யப்பட்டிருக்கின்றன, சடலங்கள் ஒரே போல் கிடத்தப்பட்டிருக்கின்றன. கொலைகள் தொடர்கின்றன. ஆனால், சாட்சிகள் மட்டும் கிடைக்கவில்லை. கொலை நடைபெறும் இரவுகளில் எல்லாம் ரேடியோ நிலையத்தில் வருத்தமான கடிதம் என்னும் ஒரு பாடல் ஒலிபரப்பாகியிருக்கிறது என்னும் உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தத் துப்பை வைத்துக் கொலையாளியை நெருங்க முடியுமா என்னும் கோணத்தில் செல்கிறார்கள். ஆனாலும், இறுதிவரை அவர்களால் கொலையாளி இவர்தான் எனத் திட்டவட்டமாகச் சொல்ல ஒரு சான்றுகூடக் கிடைக்கவில்லை.  

மெமரிஸ் ஆஃப் மர்டர்
இந்தப் படத்தின் சிறப்பு இதன் நிதானம். புலன்விசாரணை என்ற அதன் நேர்கோட்டுப் பயணம் எந்த இடத்திலும் சிறு விலகலைக்கூடச் சந்திப்பதில்லை. அநாவசியமான திகில் எதுவும் பார்வையாளர்களுக்கு ஊட்டப்படவில்லை. ஆனால், இந்த மர்மம் தெளிவாகிவிடாதா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை ஏற்படுத்திவிடும். இது தென் கொரியாவின் ஹ்வஸியாங் என்னும் நகரத்தில் 1986-லிருந்து 1991-க்குள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைச் சித்தரித்து உருவாக்கப்பட்ட படம். இந்த உண்மைச் சம்பவத்திலும் கொலையாளி இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. யார் கொன்றார், எதற்குக் கொன்றார் என்ற விவரம் வெளியுலகுக்குத் தெரியவரவேயில்லை. உலகெங்கும் இதைப் போல் தெளிவாகாத மர்ம வழக்குகள் இருந்துகொண்டேயிருக்குமோ?

< சினிமா ஸ்கோப் 18 >                          < சினிமா ஸ்கோப் 20 >

புதன், ஜூலை 13, 2016

சினிமா ஸ்கோப் 7: ஒரு கைதியின் டைரி



திரைப்படத்தின் முதல் படி கதை. அடுத்த படி திரைக்கதையே. திரைக்கதை திரைக்கதை என்கிறார்களே அதற்கும் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம் எனத் தோன்றலாம். ஒரு கதையைச் சுவாரசியமான சம்பவங்களைக் கொண்ட ரசிக்கும்படியான காட்சிகளாக மாற்றும் உத்திதான் திரைக்கதை. கரும்பு போன்றது கதை என்றால் வெல்லம் போன்றது திரைக்கதை. ஆனால் அதை அரிசி மாவுடன் சேர்த்து சுவையான அதிரசமாக மாற்றும்போது அதற்குக் கிடைக்கும் ருசியே தனி. கைப்பக்குவமான சமையல்காரரிடம் அரிசி மாவும் வெல்லமும் சென்று சேர்ந்தால்தானே நமக்கு சுவையான அதிரசம் கிடைக்கும். அதைப் போலவே நல்ல கதையை, சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய திரைக்கதையாக மாற்றி ரசனையான சினிமாவாக மாற்றக்கூடிய மாயாஜாலம் அறிந்தவர் இயக்குநர். திரைக்கதையை இயக்குநரே உருவாக்கிக்கொள்ளலாம் அல்லது பிறரை வைத்தும் எழுதச் செய்யலாம்.

திரைக்கதையைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் திரைக்கதை எழுதுவது எளிதல்ல. திரைக்கதையை எழுத ரசனையுணர்வும், வாழ்வனுபவமும் தேவை. எப்படிச் சொன்னால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பது பற்றிய அனுபவ அறிவு இருந்தால்தான் திரைக்கதையை எழுத முடியும். இல்லாவிட்டால் எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பதாக முடிந்துவிடும். டி.ராஜேந்தரும் திரைக்கதை எழுதுகிறார், பாரதிராஜாவும் திரைக்கதை எழுதுகிறார். எது நம்மை ஈர்க்கிறது என்பதே திரைக்கதையின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். 

பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி

கதை என்றால் கதாநாயகன் எப்படிப்பட்டவன் என்பதைப் பக்கம் பக்கமாக வசனமெழுதி சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் வசனமற்ற காட்சி மூலமே சொல்லிவிடலாம். உதாரணமாக ‘பாட்ஷா’ படத்தின் ஒரு காட்சி. ஆட்டோ டிரைவர் மாணிக்கமான ரஜினிகாந்த் கல்லூரி முதல்வரான சேது விநாயகத்திடம் பேசும் காட்சியை நினைத்துப் பாருங்கள். அவர்கள் கண்ணாடி அறைக்குள் பேசிக்கொள்வார்கள். எனவே எந்த வசனமும் கிடையாது. ரஜினி பேசப் பேச, சேதுவிநாயகத்திடம் பதற்றமும் பயமும் கூடும். அவர் மரியாதையுடன் தானாக எழுந்து நிற்பார். காட்சியின் முடிவில் வெளியேவரும் ரஜினி தன் தங்கையான யுவராணியிடம் ‘உண்மையைச் சொன்னேன்’ என்று கூறும்போது திரையரங்கமே அதிரும். மாணிக்கம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக பம்பாயைக் கலக்கிக்கொண்டிருந்த டான் என்பதை அழகாக, எந்த வசனமுமின்றி மிகவும் அநாயாசமாக விளக்கிவிடுகிறாரே சுரேஷ் கிருஷ்ணா. இதுதான் திரைக்கதையின் பலம். ஆனால் இந்தக் காட்சி ரஜினி போன்ற ஒரு நடிகருக்கு எடுபடும். இதுவே ஒரு புதுமுக நடிகர் என்றால் காலைவாரிவிட்டுவிடும். ஆக எந்த நடிகருக்கு, எந்தக் கதைக்கு எப்படியான திரைக்கதை அமைக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவை அனுபவம்தான் கற்றுத்தரும். 

திரைக்கதையில் முக்கியமான விஷயம் லாஜிக்தான். சில லாஜிக்களை மீற வேண்டும். சில லாஜிக்களுக்கு நியாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் சில லாஜிக் மீறல்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதை ஏற்பார்கள் எதை மறுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அது தெரியாமல்தான் திரைக்கதை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியாமல் திரைத்துறையினர் தடுமாறுகிறார்கள். ‘சின்னக் கவுண்டர்’ படத்தில் விஜய்காந்த் கொங்கு பாஷையா பேசினார்? ஆனால் படம் வெற்றிபெற்றதே! ஆடவே தெரியாத ராமராஜன் ‘கரகாட்டக்கார’னாக நடித்து படம் வெள்ளிவிழா கொண்டாடியதே! ஆக லாஜிக் மீறல் சினிமாவில் தவிர்க்க முடியாதது. ஆனால் அதை மிகச் சாமர்த்தியமாகக் கையாளத் தெரிய வேண்டும். அந்த சாமர்த்தியம் எல்லோருக்கும் எப்போதும் வாய்க்காது என்பதில்தான் சினிமாவின் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.



‘ஒரு கதையின் டைரி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதியால் வஞ்சிக்கப்படும் தொண்டனான டேவிட் அரசியல்வாதியையும் அவனுக்கு உடந்தையான இரு நண்பர்களையும் பழிவாங்குவதே கதை. இந்தக் கதைக்குப் பல திருப்பங்களும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் கொண்ட திரைக்கதையை அமைத்திருப்பார் பாரதிராஜா. அயோக்கியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மகனை அயோக்கியனாக வளர்க்கச் சொல்லி நண்பன் வேலப்பனிடம் தந்துவிடுகிறான் டேவிட். சிறைக்குச் சென்ற டேவிட் 22 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியே வருகிறான். நண்பனோ அவனைக் காவல் துறை அதிகாரியாக வளர்த்துவிடுகிறான். ஆகவே வயது முதிர்ந்த நாயகனே பழிவாங்கலில் ஈடுபடுகிறான். முதியவன் பழிவாங்கத் துடிக்கிறான். இளைஞன் அதைத் தடுக்க முயல்கிறான். எதிரும் புதிருமான இடத்தில் தந்தையும் மகனும் இருக்கிறார்கள். இப்போது நிலைமை என்ன ஆகும் என்ற ஆவலை ஏற்படுத்தி, கடமை, காதல், பாசம், பழிவாங்கும் உணர்ச்சி எனத் திரைப்படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறார் பாரதிராஜா.


குற்றமிழைத்த மூவரும் 22 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்களா? டேவிட் வந்து பழிவாங்க வேண்டும் என்றே காத்திருப்பார்களா? 22 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த கைதியான டேவிட் எப்படித் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடுகிறான்? எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி சிலை மனிதனாக மாறி இறுதிக் கொலையை நிகழ்த்துவது சாத்தியமா? இப்படியான பல கேள்விகளை நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த லாஜிக்கான கேள்விகளைக் கேட்கவிடாமல், உங்களை உணர்ச்சியில் ஆழ்த்திவிடும் நெகிழ்ச்சியான தருணங்களை உள்ளடக்கிய திரைக்கதை. டி.ஐ.ஜி.யின் மகளான ரேவதி டேவிட்டான கமலை, ஒரு கொலைகாரரைத் தனது வீட்டிலேயே தங்கவைக்கிறார். சட்டப்படி அவர் செய்வது தவறு, ஆனால் அதைச் செய்வதில் தவறில்லை எனச் சொல்லும்வகையிலான உணர்ச்சிகரமான சம்பவத்துடன் திரைக்கதையைப் பின்னியிருப்பார் பாரதிராஜா. இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் திரைக்கதை. ஆனால் அதை எப்படி லாவகமாக இழுக்க வேண்டும் என்ற ஞானத்தைக் கற்க பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவை.


டாக்டர் உன்னிகிருஷ்ணனுக்கு டேவிட் போனில் பேசும் காட்சி ஒன்றில், ‘நான் இங்கே இருப்பது உனக்கெப்படித் தெரியு’மென டாக்டர் கேட்பார். அப்போது டேவிட், பரிசித்து மகராஜாவின் கதையைச் சொல்லிச் சமாளிப்பார். டாக்டர் அங்கே இருப்பது டேவிட்டுக்கு எப்படித் தெரியும் என்பதை அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே சொல்லாமல் கடந்துசெல்லும் சாமர்த்தியம் அது. திரைக்கதையில் இப்படிச் சில சமாளிப்புகளைச் சமயோசிதமாக செய்யும் திறமை இருந்தால்தான் நல்ல திரைக்கதையை உருவாக்க முடியும். ஒரே விஷயம், லாஜிக் மீறல்களை உணராதபடி பார்வையாளரின் கவனத்தைத் திருப்பி திரைக்கதையை நகர்த்திச் செல்ல வேண்டும். ஏனெனில் அடிப்படையில் சினிமா ஓர் ஏமாற்றுக் கலை. திரைக்கதையில் புத்திசாலித்தனமாக ஏமாற்றத் தெரிந்தால் போதும் சினிமாவை வெற்றிக்கு நகர்த்தலாம். ‘சைலன்ஸ்’ என எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுத்தான் டைரக்டர், ‘ஆக்‌ஷன்’ எனக் கத்தி சினிமாவின் படப்பிடிப்பையே தொடங்குவார். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு நீங்கள் கத்துகிறீர்களே எனக் கேட்க முடியாது, இந்த முரண்தான் சினிமா.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்