திடுக்கிடும் திருப்பங்களும் ரசனையான காட்சிகளும் சினிமாவை ருசிகரமானதாக்கும். அந்தத் திருப்பங்களும் காட்சிகளும் ஏதாவது ஒரு முடிச்சை உருவாக்குவதும் பின்னர் அதை அவிழ்ப்பதுமாகவே திரைக்கதையின் பயணம் அமையும். இந்த முடிச்சு ஒன்றாகவும் இருக்கலாம்; பலவாகவும் இருக்கலாம். பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பெரிய முடிச்சிட்டு அதை அவிழ்ப்பதே திரைக்கதையின் வேலையாக இருக்கும். அந்த முடிச்சு எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அதை அவிழ்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். ஒரு முடிச்சைப் போட்டு அதை மட்டுமே அவிழ்ப்பதைப் போல் பல முடிச்சுகள் கொண்ட திரைக்கதையும் அமைக்கலாம். இந்த வாரம் இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று தமிழ்ப் படம், மற்றொன்று ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட பரீட் (Buried 2010) என்னும் ஸ்பெயின் நாட்டுப் படம். வாழ்வதற்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட படம் இது. இந்த இரண்டு படங்களில் பரீட் ஒரே முடிச்சைக் கொண்ட படம். ஆனால், தமிழ்ப் படத்தில் பல முடிச்சுகள் உண்டு. ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு, ஒவ்வொன்றையும் அவிழ்த்துக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
பரீட் படத்தில் திரையில் ஒரே கதாபாத்திரம்தான் நடித்திருக்கும். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ரேயான் ரெனால்ட்ஸ் என்னும் கனடா நாட்டைச் சார்ந்த நடிகர். படத்தை இயக்கியிருப்பவர் ரோட்ரிகோ கார்டஸ். அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரக் ஓட்டுநர், பால் கான்ராய் ஈராக்கில் பிணைக்கைதியாக மாட்டிக்கொள்கிறார். பிணைக்கைதியாக அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு சவப் பெட்டி. ஆம், ஒரு சவப் பெட்டியில் அவரை வைத்து மூடி அந்தப் பெட்டியை மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரை, அதுவும் மண்ணில் புதையுண்ட அவரிடமே கேட்டு ஈராக் தீவிரவாதிகள் மிரட்டுகிறார்கள். அந்தச் சிக்கலிலிருந்து அவர் மீட்கப்பட்டாரா மீள வழியின்றி மாண்டாரா என்பதையே அந்தப் படம் சொல்லிச் செல்லும்.
ஒரு சினிமாவை ரசனைக்குரியதாக்குபவை பசுமையான சூழல்களும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் மனதை ஈர்க்கும் வண்ணமயமான லொகேஷன்களும் தாம். அப்படியான இடங்களில் படமாக்கலை மேற்கொண்டால்தான் படத்தின் மூலம் கிட்டும் காட்சி அனுபவத்தின் ருசி கூடும். அதனால்தானே தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்காகவே இதுவரை படப்பிடிப்பே நடக்காத புதிதான ஒரு நாட்டையோ புதிரான ஓர் இடத்தையோ தேடிக் கண்டுபிடித்துச் சென்று படம் பிடிக்கும் வழக்கமே தோன்றியது. ஆனால், இந்தப் படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், படம் முழுவதும் அந்தச் சவப் பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் அந்த ஓட்டுநரையே சுற்றிச் சுற்றி வரும். ஆனாலும் படம் அலுப்புத் தட்டாமல் செல்லும். அந்த வகையில் திரைக்கதையாசிரியர் கிறிஸ் ஸ்பார்லிங் காட்சிகளை நகர்த்தியிருப்பார்.
படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் அந்த ஓட்டுநர் தப்பிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை விஸ்தரித்தயபடியே செல்லும். அவரிடம் இருக்கும் மொபைல் உதவியுடன் அவர் வெளி உலகைத் தொடர்புகொண்டு அந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார். அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளாகவே படத்தின் சம்பவங்கள் அமைந்திருக்கும். அந்த ஓட்டுநரைத் தவிர ஏனைய கதாபாத்திரங்கள் எல்லாமே வெறும் குரல்களாகவே வெளிப்பட்டிருக்கும். அவரைத் தவிர படத்தில் முகத்தைக் காட்டும் ஒரு கதாபாத்திரம் அவருடன் அலுவலகத்தில் வேலைபார்த்த பெண் சகா ஒருவர். அவரும்கூட படத்தில் ஒரு வீடியோ படத்தின் காட்சியாகத்தான் வருவார். மற்றபடி அந்த ஓட்டுநர் மட்டுமே முழுப் படத்தையும் ஆக்கிரமித்திருப்பார். இது ஓர் இயக்குநருக்குச் சவாலான விஷயம்தான். இதை வெறுமனே இப்படி ஒரு த்ரில்லராக மட்டும் உருவாக்கியிருந்தால் அதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால், படத்தில் நிறுவனங்கள் தமது ஊழியரை எப்படி ஈவு இரக்கமில்லாமல் நடத்துகின்றன என்ற விமர்சனம் இடம்பெற்றிருக்கும். சிறிதுகூட குற்றவுணர்வு இன்றி நெருக்கடியில் மாட்டிக்கொண்ட ஊழியரைக் கைகழுவிவிடும் நிறுவனங்களின் குரூரத்தை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கும் பாங்கால்தான் இது மாறுபட்ட திரைப்படமாகிறது. ஒரு பேஸ் பால் விளையாட்டு வீரருக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும் ஒரு ட்ரக் ஓட்டுநருக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வசனம் உண்டு. கடைசி வரையில் அந்த ஓட்டுநர் தப்பித்துவிட மாட்டாரா, மனைவி, குழந்தையுடன் சேர்ந்துவிட மாட்டாரா என்ற ரசிகரின் எதிர்பார்ப்பு கடைசியில் பொய்த்துப்போகும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்டதன் காரணம் புரிந்துவிடும்.
குற்ற உணர்வே அற்ற அதிகாரிகளைக் கொண்ட நிறுவனத்தின் கதையை பரீட் காட்சிப்படுத்தியிருந்தது என்றால், குற்ற உணர்வு காரணமாகத் தன் நண்பனின் மீது நீங்காத அன்பு கொண்டு வாழ்ந்த ஓர் இளைஞனைப் பற்றிச் சித்தரிந்திருந்தது, சித்திக் இயக்கிய ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம். விஜய் போன்ற மாறுபட்ட முயற்சிகளுக்கு முகம் கொடுக்காத நடிகர் நடித்திருந்தும் படம் ஓரளவு ரசனைக்குரியதாக உருவானதற்குக் காரணம் இதன் திரைக்கதைதான். அதன் பலத்தில்தான் படம் நின்றது. விஜயும் சூரியாவும் நண்பர்கள். சூரியாவின் தங்கை விஜயைக் காதலிப்பார். அவர் அதை மறுத்துவிட்டு ஓடுவார். ஆனால் விஜயோ அந்தக் காதலை ஆதரிக்கவே செய்வார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்புவார். இதனிடையே அவரும் சூரியாவும் சேர்ந்து பெரும் செல்வந்தக் குடும்பத்தின் மாளிகைக்குச் செல்ல நேரும். அங்கு தேவயானியுடன் விஜய்க்குக் காதல் வரும். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல், சூரியாவுக்கும் தேவயானிக்கும் மோதல், நண்பனுக்காகத் திருமணம் வேண்டாம் என விஜய் மறுப்பது எனப் படம் முழுவதும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல முடிச்சுகள் வந்து விழும்.
படத்தின் தொடக்கத்தில் சூரியாவின் தம்பி சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வாலேயே எல்லோரையும்விட சூரியாமீது அதிக அன்பைப் பொழிபவராக இருக்கும் விஜய் கதாபாத்திரம். படத்தின் இறுதியில் அப்படியே இந்தச் சூழல் சூரியாவுக்கும் பொருந்திவரும். விஜய் சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு சூரியாவைப் பற்றி நிற்கும். இந்த இரு குற்ற உணர்வையும் களைந்து, படத்தை சுபமாகவே முடித்திருப்பார் இயக்குநர். விஜய் என்ற கதாநாயகத்துவ நடிகருக்காக இந்த உணர்வுபூர்வ படத்தின் கிளைமாக்ஸில் அடிதடி, சண்டை எனச் சும்மா தெறிக்கவிடுவார்கள். நம் கதாநாயகர்களது பிம்பம் காரணமாக இப்படிச் சில சேதாரம் திரைக்கதையில் நேரத்தான் செய்யும். அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இயக்குநர்களும் படத்தை உருவாக்குகிறார்கள்; ரசிகர்களும் படத்தைப் பார்க்கிறார்கள். ஆக, ஒரு படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருக்கிறார்களோ என்பதிலோ எத்தனை முடிச்சுகள் உள்ளன என்பதிலோ ரசிகர்களின் கவனம் பதியப்போவதில்லை, அவர்களது கவனமெல்லாம் படம் ரசிக்கத்தகுந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பதிலேயே நிலைத்திருக்கும்.
< சினிமா ஸ்கோப் 31 > < சினிமா ஸ்கோப் 33 >
< சினிமா ஸ்கோப் 31 > < சினிமா ஸ்கோப் 33 >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக