இந்த வலைப்பதிவில் தேடு

தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 29, 2025

ரஜினியாவாரா விஜய்?

1975இல் திரையுலகுக்கு ரஜினி காந்த் வந்தார். 50 ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஐம்பதாண்டுகளில் தீபாவளிக்கு ரஜினியின் 19 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அதுவும் 1995வரை 18 படங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2021இல் அண்ணாத்தயும் வெளியானது.

முதன்முதலில் 1976இல் மூன்று முடிச்சு வெளிவந்தது. 1978 தீபாவளிக்கு, மூன்று ரஜினி படங்கள் திரைக்கு வந்துள்ளன. 1976 முதல் 1981வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் [ஆறு புஷ்பங்கள் (1977); தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய்மீது சத்தியம் (1978); அன்னை ஓர் ஆலயம் (1979); பொல்லாதவன் (1980); ராணுவ வீரன் (1981)], 1983முதல் 1989வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளும் [தங்க மகன் (1983), நல்லவனுக்கு நல்லவன் (1984), படிக்காதவன் (1985), மாவீரன் (1986), மனிதன் (1987), கொடிபறக்குது (1988), மாப்பிள்ளை (1989)] தீபாவளிக்குப் படங்களை வழங்கிய ரஜினிக்கு 1990, 1993,1994 ஆகிய ஆண்டுகளிலும், அதன் பின்னர் 2020 வரையிலும் ஒரு படம்கூடத் தீபாவளிக்குத் திரைக்கு வரவில்லை.

1990 தீபாவளிக்குத் திரைப்படம் வராததால் அவருடைய ரசிகர்கள் அந்தத் தீபாவளி நாளைத் துக்க நாள் எனச் சொல்லித் திரிந்தார்கள். மதுரையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாகக்கூட தகவல் உண்டு. அடுத்த ஆண்டு 1991இல் தளபதியும், 1992இல் பாண்டியன் திரைப்படமும் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைத்தன. இன்னும் அவர் வீட்டு முன்னர் தீபாவளி அன்று ரசிகர்கள் சிலர் திரள்கிறார்கள். இது ரஜினியின் நிலைமை.
இப்போது விஜய் கதைக்கு வருவோம். அவர் நடித்த 12 படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாயின. முதலில் தீபாவளிக்கு வந்த படம் சந்திரலேகா (1995). தீபாவளி அன்று ரஜினியின் முத்து படம் வெளியான அதே தீபாவளிக்கு வந்து படுதோல்வியடைந்த படம் இது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2000இல் பிரியமானவளே வந்தது. 2001இல் ஷாஜகான் தொடங்கி, 2019இல் பிகில் வரை, பகவதி (2002), சிவகாசி (2005), அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012), கத்தி (2014), மெர்சல் (2017), சர்கார் (2018) என மொத்தம் 10 படங்கள் வெளியாயின. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் படம் வெளியானதே ஒரே ஒரு முறைதான். அதுவே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரைப்படத் துறையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துவரும் ரஜினி பொதுமேடைகளில் எந்தவித பெரிய ஒப்பனையும் இன்றி முடியற்ற தலையுடன் தோன்றிவிடுகிறார். அப்படிப்பட்ட நடிகர் ரஜினியையே அரசியல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடவைத்துவிட்டது. ஆனால், நடிகர் விஜய் ஒப்பனையற்று ரசிகர்களைச் சந்திக்கத் துணியாமல் முழு ஒப்பனையுடன் அதுவும் குளிர்சாதனக் கூண்டு வண்டியில் வந்து மக்களைச் சந்திக்கிறார். அப்படிப்பட்ட விஜய் அரசியல் மாற்றத்துக்கான தலைவர் என்று அறியாமையாலோ அவசியத்தாலோ நம்பும் மனிதர்கள் கலர் கலராக ரீல் விடுகிறார்கள். அவரது செல்வாக்கின் ஆற்றலை மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். எல்லாம் 2026 தேர்தல் முடிவு வரும் வரையில்தான். முடிவு வந்த பின்னர் அவருக்கான ஆதரவு வெட்டவெளிச்சமாகிவிடும். அது அஞ்சு … ஆறு… விழுக்காடாக இருக்கலாம்… அதுவரை கம்பு சுத்துபவர்கள் சுத்திக்கொண்டே இருக்கலாம்.

திங்கள், நவம்பர் 01, 2021

அண்ணாத்த ரஜினி இனியாவது விழித்துக்கொள்வரா?

 


ரஜினி காந்த் என்னும் பெயருக்கும் அவரது ஸ்டைலுக்கும் தமிழ்நாட்டில் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. அதை அறுவடை செய்வதில் இன்னும் தயாரிப்பாளரிடையே போட்டியே இருக்கிறது. வயது எழுபதைத் தொட்டிருந்தாலும் ரஜினியைக் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், ரஜினி என்னும் தனித்துவத்துக்காக மட்டும் ரசிகர்கள் படம் பார்த்த நிலைமை மாறிவிட்டது. அந்த மாற்றம் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அந்த உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது அண்ணாத்த.

ரஜினி ரசிகர்களிடையே ரஜினி மீதான தங்கள் மரியாதையையும் அன்பையும் அநியாயத்துக்குச் சுரண்டுகிறார்களோ என்ற எண்ணத்தையே அண்ணாத்த திரைப்படம் அழுத்தமாக உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு நகரங்களிலுள்ள ரஜினி ரசிகர்கள்கூடக் குறைந்தது இருநூறு ரூபாய் செலவழித்தே படம் பார்க்க முடிந்தது. ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சாதாரண வருவாய் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திச் சம்பாதித்த பணம்தான் ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசாக மாறுகிறது. அண்ணாத்த படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் பலருக்கு அடிவயிற்றில் அடித்ததுபோல் இருந்தது. “அண்ணாத்த நமக்குக் கிடைக்கலடா நாமதான் அண்ணாத்தக்குக் கெடச்சிட்டோம்” என்று படத்தின் தொடக்கத்தில் வில்லன் பேசும் வசனத்தையே ரசிகர்களும் சொல்லும்படியாகிவிட்டது.  அதனால் தான் பாபாவின் பாதையில் படுபாதாளத்துக்கு அண்ணாத்த செல்கிறது.

புத்தாயிரத்தில் வந்த முதல் ரஜினி படம் பாபா. 2002இல் வெளியானது. முதல்நாளிலேயே படம் தோல்வியடைந்தது. சூப்பர் ஸ்டார் என்னும் மிகப் பெரிய பிம்பத்தின் மீது விழுந்த பலமான அடி அந்தப் படத்தின் தோல்வி. அந்தத் தோல்வியைத் துடைத்தெறிய மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன ரஜினிக்கு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியே அவரை மீண்டும் குரல் உயர்த்திப் பேசவைத்தது. ஆனால், அதை வெறும் ரஜினி படம் என்று சொல்லிவிட முடியாது. அந்தப் படத்தின் தலைப்பே நாயகி வேடத்தை முன்னிலைப்படுத்தியது. அதற்கு முன்னதாக வெளியான படையப்பா படத்திலும் நீலாம்பரி கதாபாத்திரமே பெயர் வாங்கியது என்றபோதும் படத்தின் தலைப்பு படையப்பாதான். ஆனால், சந்திரமுகி என்னும் தலைப்பு வைக்க ரஜினி ஒத்துக்கொண்டதே அவரது நிலைமை அவருக்குப் புரியத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான். இனியும் தான் சூப்பர் ஸ்டார் அல்ல; தனக்காக மட்டுமே ரசிகர்கள் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டியதுதான் என்பதை ரஜினிக்கு உணர்த்திய படமாக அமைந்தது சந்திரமுகி. அதற்கு முன்னர் நாயகிப் பாத்திரத்தின் தலைப்பில் வெளியான ரஜினி படம் 1978இல் வெளியான ப்ரியாதான்.

சந்திரமுகிக்குப் பின்னர், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில் ஷங்கர் என்ற இயக்குநரின் சூத்திரம் ரஜினியின் கணக்கில் வரவுக்கு வழிவகுத்தது. அடுத்து, அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியான ஒரே ரஜினி படமான லிங்கா அவருக்குக் கடும் தலைவலியாக அமைந்தது. இனி என்ன செய்யப்போகிறார் ரஜினி என்னும் கேள்வி அவரைத் துரத்தியது. அதன் பின்னர்தான் புதிதாக வந்த இயக்குநர்களின் வசம் தனது படத்தை ஒப்படைக்கத் தொடங்கினார். கபாலி, காலா ஆகிய படங்களை பா.இரஞ்சித் இயக்கினார். படம் பெரிய வெற்றிபெறாவிட்டாலும் ரஜினியின் வழக்கமான மசாலாப் படங்களாக அவை அமையாமல், ரஞ்சித்தின் கைவண்ணத்தில் சற்றுப் புது மாதிரியான சித்திரமாக அவை அமைந்தன. அந்த ஆசுவாசத்தில் பழைய ரஜினியை மீண்டும் காட்டுகிறோம் என்னும் பெயரில் பேட்ட, தர்பார் என்னும் இரண்டு படங்கள் வெளியாயின. இரண்டும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்று ரஜினி தரப்பினரைத் தவிர யாரும் நம்பவில்லை. 

இப்படியான நிலையில் மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் ரஜினி. கடுமையான உடல்நலப் பிரச்சினை வாட்டியபோதும் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டிய சூழலில் அண்ணாத்தவை ரஜினி முடித்துக்கொடுத்தார். தொடர்ந்து அஜித்தை வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவை இயக்குநராக நியமித்துக்கொண்டார்.  வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் வேலை சுலபம் என நினைத்திருக்கலாம் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதால் தன் வேலை சுலபம் என நினைத்துவிட்டார் இயக்குநர்.

சினிமா தோன்றிய காலத்தில் சொல்லப்பட்டிருந்தால்கூட மறுக்கப்பட்டிருக்கும் ஒரு கதையை ரஜினி ஓகே செய்திருக்கிறார். அவர் ஓகே செய்த காரணத்தால் அப்படியான பழங்கதைக்கும் திரைக்கதை எழுதிவிட்டார் இயக்குநர்; அதில் ரஜினியை நடிக்கவும் வைத்துவிட்டார்; அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் என்னும் பெரிய நிறுவனம் பெரும் பொருள் செலவில் தயாரித்திருக்கவும் செய்கிறது. ரஜினி ரசிகர்களை இவர்கள் மிகவும் எளிதான இலக்காகக் கருதிவிட்டார்களா?

பாபா தொடங்கி அண்ணாத்த வரையான ரஜினி படங்களின் வெற்றி தோல்விகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால், பெரும்பாலானவை படுதோல்வி என்னும் முடிவுக்கு வர முடிகிறது. படம் மாபெரும் வெற்றி என ஊடகங்களில் செய்தி வருவதும், படம் வெளியான சில நாள்கள் மட்டுமே வசூல் இருந்தது அதன் பின்னர் படம் பெரிதாகச் சம்பாதித்துத் தரவில்லை என்ற குரல் எழுவதும் வாடிக்கையானது. ஆக, ரஜினி படங்களின் வெற்றி தோல்வி என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியமாகவே இன்றுவரை உள்ளது. எவ்வளவு நாள் தான் ஊடகங்களின் உதவியுடன் வெற்றியை ஜோடிக்க முடியும்?

நாயகனாக மட்டுமே நடித்து இனியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது ரஜினி. தனது வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவருக்கும் அவரை இன்னும் ரசிக்கும் ரசிகர்களுக்கும் நல்லது. அதை அவர் விரும்பாமல் இன்னும் டூயட் பாட விரும்பினால் அவர் ஓய்வுபெற்றுவிடுவதே மேலானது. ஆனால், நடிப்பின் மீது தாகம் கொண்ட ரஜினி ஓய்வு என்பதை விரும்ப மாட்டார். அவருக்காக நல்ல கதையம்சத்துடன் திரைக்கதையை உருவாக்கும் இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் இன்னும் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் ரஜினி தன்னை ஒப்படைக்க வேண்டும். இயக்குநர்கள், ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்றியபோதும் ரஜினி மாறாமல் இருப்பதை ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள்; கதையும் அப்படியே மாறாமல் அண்ணத்த போல் ரஜினியைப் பல ஆண்டுகள் பின்னே இழுத்துச் செல்பவையாக இருந்தால் அது ரஜினி, தன் ரசிகர்களுக்குச் செய்யும் நியாயமாக இருக்காது. மேலும் ரஜினியின் பெயர் சொல்ல 16 வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், தர்மதுரை, தளபதி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. இனிப் புதிதாக ரஜினி நடித்துப் பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்னும் நிலைமை அவருக்கு இல்லை.

இல்லாதவனுக்கு அள்ளிக் கொடுத்துப் பாரு அந்த சாமியே சந்தோஷப்படும் என அண்ணாத்த படத்தில் ரஜினி பேசுவதுபோல இனியும் வெற்று வசனங்களைப் பேசுவது நலம்பயக்காது.  ரஜினியின் கிரீடத்தில் மேன்மேலும் வைரக் கற்களைப் பதிக்க வேண்டுமே ஒழிய அதில் கரி அள்ளிப் பூசுதல் அழகாகாது. இனி ஒரு அண்ணாத்த வந்தால் அதன் பின்னர் ரஜினியை அந்த ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 


 

 

திங்கள், நவம்பர் 09, 2020

ரஜினி பேசிய மிகச் சிறிய பஞ்ச் டயலாக்...

ஆண்டு 1988, நவம்பர் 8 தீபாவளி நாள். இலஞ்சி இராமசாமிப் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வீடும் இலஞ்சியில்தான் இருந்தது. அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி என்பது புதிதாக வந்துள்ள திரைப்படத்தைப் பார்ப்பதுதான். அதுவும் மனத்துக்குப் பிடித்த நடிகரின் படத்தைப் பார்ப்பது என்றால் மனத்துக்கு இறக்கை முளைத்துவிடும். பருவ வயதும் அந்தப் பைத்தியக்காரத்தனமும் மோடியும் வெற்றுப்பேச்சும்போல் எப்போதும் சேர்ந்தேதான் இருக்கிறது. 

அந்தத் தீபாவளிக்கு பரதன் தியேட்டரில் கொடிபறக்குது படம் வெளியாகயிருந்தது என்பதால் தீபாவளி நாளை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். உலகப் படங்களோ இந்தியப் படங்களோ பார்த்திராத பருவம் அது. பாரதிராஜாவைத் தான் உலகத்தின் சிறந்த இயக்குநர் என்பதாக நம்பிய நாட்கள் அவை. ஆகவே, பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்திருந்ததால் படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் மிகப் பெரிய ரஜினி ரசிகன் என்று காட்டிக்கொள்வதில் அப்படியொரு பெருமை. மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமைன்னு கேக்குறீங்களா? அப்போ அதெல்லாம் தெரியல. அந்தக் காலகட்டத்தில் தென்காசியில் திரையிடப்படும் ரஜினியின் திரைப்படங்களை முதல் நாளிலேயே பார்த்துவிட வேண்டும் என்னும் வெறியே இருந்தது. 1987ஆம் ஆண்டுதான் முதன்முதலில் தென்காசியில் மாவீரன் என்னும் ரஜினி படம் வெளியாகியிருந்தது. அப்போது தென்காசி போன்ற மூன்றாம் நிலை நகரங்களில் திரைப்பட ரிலீஸ் என்பதே பெருமைமிகு சம்பவம்தான். இப்போதோ தென்காசியே மாவட்டத் தலைநகராகிவிட்டது. அந்தப் பெருமை எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது. 

தீபாவளி அன்று வீட்டிலிருந்த ஹெல்குலஸ் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றேன். எனக்குப் பொழுதுபோக்காக இருந்தவந்த அந்த சைக்கிளில்தான் அப்பா அலுவலகம் சென்றுவந்துகொண்டிருந்தார். வடகரையில் நாங்கள் இருந்தபோது வாங்கிய சைக்கிள், அப்போது அதன் விலை ரூ.750 என்று நினைவு.  பாண்டியன் திரைப்படத்துக்கு தாய்பாலா சென்றபோது, போலீஸ் லத்தி அடியை அந்த சைக்கிளின் பெல் வாங்கிக்கொண்டது. பெல் மேற்பகுதி உள்வாங்கிவிட்டது. அந்த அடி மட்டும் கையில் பட்டிருந்தால், அவ்வளவுதான். சைக்கிளின் தகர செயின் கார்டின் வலது பக்கவாட்டுப் பக்கத்தில் அப்பாவின் பெயரும் அலுவலப் பணி குறித்த விவரமும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். சைக்கிளின் நிறம் இளம்பச்சை. வாங்கிய புதிதில் டைனமோ மீது மஞ்சள் நிறத் துணியைக் கட்டியிருப்போம். கால ஓட்டத்தில் அந்த சைக்கிள் கரைந்து போய்விட்டது. காலம்தான் எல்லாவற்றையும் உண்டு செரித்துவிட்டு, இன்னும் இன்னும் என்று கேட்கிறதே. 


ஒருமுறை தென்காசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இரவு நேரத்தில் டைனமோ  விளக்கு எரியவில்லையாதலால், என்னை நிறுத்தி, சைக்கிளின் காற்றைப் பிடிங்கிவிட்டார் போலீஸ்காரர் ஒருவர். அப்படியொரு தண்டனை தருவதில் அவருக்கு ஒரு திருப்தி. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மனிதனுக்கு அதைப் பயன்படுத்திப் பார்ப்பதில் ஓர் அற்ப மகிழ்ச்சி. நான் சைக்கிளை உருட்டிக்கொண்டு திரும்பியபோது அந்த சைக்கிளில் எழுதப்பட்ட விவரத்தைப் பார்த்ததும், முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா என்று கேட்டார்.  அந்த விவரம் எழுதப்பட்டதற்கு அப்படி ஒரு நோக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. 

இலஞ்சியில் இருந்தபோது, மாதந்தோறும் மளிகைச் சாமான்களை தென்காசி கூலக்கடை பஜாரில் சம்பளத் தேதியை ஒட்டிய நாளில் வாங்குவோம். அம்மா சென்று எல்லா சாமான்களையும் வாங்கி பலசரக்குக் கடையில் வைத்திருப்பார். நான் சென்று சைக்கிளின் கேரியரில் சாமான்களை வைத்துக் கட்டிக் கொண்டுவருவேன். நான் கொடிபறக்குது படம் பற்றித் தான் எழுதத் தொடங்கினேன். கதை ஏனோ சைக்கிளை நோக்கி நகர்கிறது. சரி சைக்கிளை விட்டுவிட்டு கொடிபறக்குது பக்கம் நகர்ந்துவிடுவோம். 

தீபாவளியன்று பரதனுக்குச் சென்று காத்துக் கிடந்ததுதான் மிச்சம். அன்று படப்பெட்டி வரவில்லை. மறுநாள் 9ஆம் தேதி அன்றுதான் படப் பெட்டி வரும் என்று சொல்லிவிட்டார்கள். மறுநாள் பள்ளி இருந்தது. எப்படியாவது பள்ளிக்கு லீவ் போட்டுவிட்டு வந்துவிடலாம் எனத் திட்டமிட்டேன். அதே போல் ஏதேதோ பொய் சொல்லி பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்குத்தான் செல்லவில்லையே படத்துக்குப் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என பரதனுக்கு சைக்கிளை விட்டேன். டிக்கெட்டும் கிடைத்தது. உற்சாகமாகப் படம் பார்த்தாகிவிட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் நண்பனொருவன் வந்துவிட்டான். உடனே அப்படியே சைக்கிளைப் போட்டுவிட்டு அவனுடன் அடுத்த காட்சி பார்த்தேன். அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் அதுவும் கொடிபறக்குது. யோசித்துப் பாருங்கள். என்ன தலைசுத்துகிறதா? 

என் இனிய தமிழ் மக்களே என்று தொடங்கி, ரஜினியைப் பற்றி பாரதிராஜா பேசும் வசனங்கள் அப்படியே காதுக்குள் இன்னும் ஒலிக்கின்றன: “ என் காதலுக்குரிய ராஜகுமாரன் ரஜினியுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பவனி வருகிறேன். ரஜினிக்கு நான் ரசிகனாய் ரஜினி எனக்கு ரசிகனாய் தாகம்கொண்ட இரு நதிகள் சந்தித்துக்கொண்ட சந்தோஷ சங்கமம் கொடிபறக்குது. முதல் மரியாதையில் ஒரு தென்றலின் கையைப் பிடித்துக்கொண்டு நந்தவனத்தைச் சுற்றிவந்த திருப்தி எனில் இந்தப் படத்தில் ஒரு புயலின் கையைபிடித்துக்கொண்டு பூமியைச் சுற்றிவந்த திருப்தி ...” இப்படியான வசனங்களைக் கேட்டுக் கேட்டுக் கிறங்கிக் கிடந்த காலம் அது. படத்தின் கதைவசன கேஸட்டைக்கூட வாங்கிவைத்திருந்து கேட்டுக்கொண்டிருப்போம். லஹரி நிறுவனம் வெளியிட்டிருந்த அந்த கேஸட்டை. 

கொடிபறக்குது படம் படுதோல்வியடைந்தது. ஒருவேளை எஸ்பி.முத்துராமன் இயக்கியிருந்தால் படம் வெற்றியடைந்திருக்கக்கூடும் என்று அப்போது சொல்லி மனத்தை ரஜினி ரசிகர்கள் தேற்றிக்கொண்டோம். படத்துக்கு இசை அம்சலேகா. கடலோரக் கவிதைகள் படத்துக்குப் பின்னர் இளையராஜாவிடம் ஏற்பட்ட கருத்து மோதலால் பாரதிராஜா வேதம் புதிது படத்தில் தேவேந்திரனையும் இந்தப் படத்தில் அம்சலேகாவையும் இசையமைப்பாளராகப் பயன்படுத்தியிருந்தார். பின்னர் அவர் இளையராஜாவுடன் என் உயிர்த் தோழன் படத்தில்தான் இணைந்தார். அதனால்தான் அந்தப் படத்துக்கே அப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். என் உயிர்த் தோழன் திரைப்படமும் பரதனில்தான் வெளியானது. நான்கைந்து நாட்கள் மட்டுமே ஓடியது. அந்தப் படத்தை பாரதிராஜாவே விநியோகித்தார் என்று சொன்னார்கள். வேதம்புதிது படத்தின் பாடல்களுடன் கொடி பறக்குது படத்தின் பாடல்களை ஒப்பிட்டால் மிகவும் சுமார் ரகம்தான். சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’, அன்னை மடியில்’ ஆகிய பாடல்கள் நினைவலைகளில் தவழ்ந்துவருகின்றன. 


வேலைக்காரன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் ரஜினியுடன் அமலா ஜோடி சேர்ந்திருந்தார். இயக்குநர் மணிவண்ணன் வில்லனாக இதில் தான் அறிமுகமானார். படத்தில் அவருக்கு பாரதிராஜா குரல் கொடுத்திருந்தார். படத்தில் இரண்டு தோற்றங்களில் ரஜினி வருவார். ஆனால் அதை இரண்டு வேடங்கள் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஏனெனில், அந்த இரண்டும் ஒரே ரஜினிதான். ஒருவர் அஸிஸ்டெண்ட் கமிஷனர், மற்றொருவர் தாதா. தாதா பேசிய யப்பா என்பதுதான் ரஜினி பேசிய மிகச் சிறிய பஞ்ச் டயலாக் என நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு மறு நாள் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் முத்துசாமியிடம் படத்தின் ஒரு காட்சி பற்றிய விளக்கம் கேட்டேன். அவரும் சொன்னார். ஆனால், என்ன சொன்னார் என்பது மறந்துவிட்டது. விளக்கத்தைத் தொடர்ந்து, இதைப் போல் என்றாவது பாடத்தில் சந்தேகம் கேட்டிருக்கிறாயா என்று வினவியது மட்டும் ஞாபகத்தில் உள்ளது. 

வேதியியல் ஆசிரியர் முத்துசாமி நிறையக் கதைகள் சொல்வார். அவரிடம் டியூஷன் படித்த காலத்தில் அவருடைய காதல் கதைகளைக்கூடக் கூறியிருக்கிறார். பள்ளியில் ரெனால்ட் பால் பாயிண்ட் பேனாவை அவர்தான் அறிமுகப்படுத்தினார். பிற ஆசிரியர்களிடமிருந்து வேறுபட்டவர் அவர். ரெனால்ட் பேனா என்பதை எங்கு கேள்விப்பட்டாலும் அத்துடன் ஆசிரியர் முத்துசாமியையும் மனம் நினைவில் கொண்டு நிறுத்திவிட்டு இதுதானே என்பதுபோல் ஒரு பார்வை பார்க்கும். மனத்தின் இது போன்ற குழந்தைவிளையாட்டு இல்லாவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது.

வியாழன், நவம்பர் 05, 2020

தளபதி: சில நினைவுகள்

உலகப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் காலைவைக்கத் தொடங்கிய வேளை அது. 1991 நவம்பர் 5 அன்று தான் ரஜினிகாந்த் நடித்த தளபதி’ திரைப்படம் வெளியானது. தளபதி’ படத்தை வைத்து பலவகையான வியாபாரமும் முன்னெடுக்கப்பட்டது. தளபதி காலண்டர், தளபதி டி ஷர்ட், தளபதி தொப்பி எனப் பல பொருட்கள் வியாபாரத்துக்கு வரலாயின. தென்காசியில் பரதன், வாஹினி இரண்டு திரையரங்கிலும் தளபதி’ திரைப்படம் வெளியானது. பரதன் இப்போது இடிக்கப்பட்டுவிட்டது. வாஹினி திரையரங்கு இருந்த இடத்தில் ஏதோ ஷோபா கம் பெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆண்டு கமல் நடித்து வெளியான குணா’ தாய்பாலா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. தாய் பாலா இப்போதைக்கு இயங்கிவருகிறது. இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்குமோ?

தீபாவளியன்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஓபனிங் ஷோ பார்த்தோம். அதுவரை தென்காசியில் எந்தப் படத்துக்கும் அப்படி அதிகத் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியதில்லை. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எந்தப் பண்டிகை என்றாலும் தியேட்டர்களில் டிக்கெட்டின் அசல் விலைக்கே டிக்கெட் கிடைத்துவந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றால் போதும் டிக்கெட் கிடைத்துவிடும். சைக்கிள் டோக்கனுக்கான கட்டணம் ஒரு ரூபாய். ஆகவே, நானூறு ஐந்நூறு டிக்கெட்டுகள் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்குக் கிடைத்துவந்தது. அந்த நடைமுறையை மாற்றியது தளபதி’. அன்றே வாஹினியிலும் நண்பர்களுடன் படம் பார்த்தேன். எனக்குத் தெரிந்து தளபதி’ படத்தைப் பத்துப் பன்னிரண்டு ஊர்களில் பார்த்திருப்பேன். சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்னும் பாடல் தொடங்கியதும் ஒரு கூட்டமே அப்படியே எழுந்து வெளியில் போய்விடும். படத்தின் ஓபனிங் காட்சியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது. 

ஜப்பானிய சாமுராய் போன்ற உடையில் ரஜினியை அந்தப் பாடல் காட்சியில் உலவவிட்டிருந்தார் மணிரத்னம். அந்தத் தீபாவளிக்கு வெளியான தினமலர் தீபாவளி மலருடன் ரஜினியின் ஆளுயர ஃபுளோ அப் ஒன்றைத் தந்தார்கள். அதில் இந்தத் தளபதி’ தோற்றத்தில் தான் ரஜினிகாந்த் காட்சியளித்தார். மலையாளத்தில் வெளியான தளபதி’ படத்தில் இறுதிக் காட்சி மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்றும் அந்தக் காட்சியில் ரஜினி இறந்து மம்முட்டி உயிருடன் இருப்பார் என்றும் அப்போது வதந்தி உலவியது.    

மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தின் பாதிப்பில் தளபதி’ படத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் படம் ஒருவகையில் நாயகனின் உல்டாதான். நாயக’னில் ஒருவர் என்றால் தளபதி’யில் இருவர். மற்றபடி அதே நிழலுலக தாதாக்களின் வாழ்க்கைதான் படத்துக்குச் சம்பவங்களாயிருந்தன. ரஜினியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்த படம் தளபதி’. 

ஆனால், படம் மிகப் பெரிய வெற்றியா என்பது சந்தேகம்தான். ஓரளவுக்குப் பெயர் சொல்லும்படி ஓடியதே தவிர, ரஜினி, மம்முட்டி இணையின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், சந்தோஷ் சிவனின் அமர்க்களமான ஒளிப்பதிவு ஆகியவை காரணமாக எகிறியிருந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திசெய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படம் தீபாவளி அன்று வெளியானாலும் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி போகியையும் அதைத் தொடர்ந்து பொங்கல் திருவிழாவையுமே நினைவூட்டியது. படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 

படத்தில் அடிக்கடி ரஜினி காந்த் தனியாகச் சென்று அமர்ந்துவிடுவார். பின்னணியில் சூரியன் தகதகக்கும். சூர்ய புத்திரன் கர்ணன் என்பதால் சூர்யா கதாபாத்திரத்தையும் அப்படியே உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இப்படியான காட்சி உருவாக்கங்கள் படத்துக்கு ஒரு சர்வதேசத் தன்மையை அளித்திருந்தன. இருபது வயதில் பார்த்தபோது பெரிய மயக்கத்தைத் தந்த தளபதி’ நாற்பது வயதில் பார்த்தபோது எந்தக் கிறக்கத்தையும் தரவில்லை. விடலைத்தனத்தின் துறுதுறுப்பின்போது ரசனைக்குரியதாக இருந்த படம் நாற்பதின் நிதானத்தில் ரசிக்க முடியாமல் போனது. இதுதான் மணிரத்னம் எனும் இயக்குநரின் மகிமை. 

1990 தீபாவளியின் போது ரஜினி காந்த் நடித்த எந்தப் படமும் வெளியாகியிருக்கவில்லை. ஆகவே மதுரை ரஜினி ரசிகர்கள் அந்த தீபாவளியைத் துக்க நாளாகக் கருதி சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளியானபோது செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. அப்போதே ரஜினிக்கும் ஜெ.வுக்குமான உரசல் ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து வந்த மன்னன்’ திரைப்படத்தில் விஜய சாந்தி ஏற்று நடித்த கதாபார்த்திரம் ஜெயலலிதாவுடன் பொருத்திப்பார்க்கப்பட்டு ரஜினி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.

தளபதி’யின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தும் ரஜினி நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் யாரடா நீ மன்மதா?’ என்னும் பெயரில் படம் ஒன்று வெளியாகக் கூடும் என அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என நினைவு. 29 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமான பல சம்பவங்கள் மன அலைவரிசையில் அகப்படுகின்றன. எல்லாவற்றையும் எடுத்திடவோ எழுதிடவோ இயலவில்லை என்பது பெரும் சோகம். 

வியாழன், ஜனவரி 16, 2014

ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை


தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு  வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடியவை. அந்தத் திரைத்துறை ஆளுமை ஒரு படத்தில் பங்களித்திருந்தால்கூட அவரிடம் தெரிந்துகொள்ளத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏராளமான செய்திகள் இருக்கும் என்பதாக அவரை நோக்கிக் கேள்விக் கணைகள் பாயும். ஆனால் காட்சிமொழியையும் சமூகப் புரிதலையும் உள்ளடக்கிய அசலான தமிழ்ப்படம் இது என்று ஒன்றைக்கூட நெஞ்சுநிமிர்த்தி நம்மால் சுட்ட முடியவில்லை. இந்த இடைவெளிக்குக் காரணம் என்ன?

கே.சுப்பிரமணியமும் எஸ். பாலசந்தரும் ஸ்ரீதரும் பாரதிராஜாவும் மகேந்திரனும் தேவராஜ் மோகனும் பாலுமகேந்திராவும் பாலாவும் வெற்றிமாறனும் இவர்களைப் போன்ற வேறுசிலரும் இந்த அவப்பெயரைத் தங்களால் இயன்ற அளவு துடைத்தெறிந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தியாகபூமி, அந்த நாள், கிழக்கே போகும் ரயில், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், சிட்டுக்குருவி, அவள் அப்படித்தான், உதிரிப்பூக்கள், வீடு, மகாநதி, சேது, ஆடுகளம், ஆரண்யகாண்டம் போன்ற பல படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழில் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் திரைமொழியின் அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்திச் சமூகச் சிக்கலின் அனைத்துப் பரிமாணங்களையும் தொட்டுக் கலை அனுபவம் மிளிரும் படங்களை உருவாக்குவதில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்பது கசப்பான உண்மை. இவ்வளவுக்கும் நம்மிடம் திரைத் தொழில்நுட்பம், காட்சிமொழி, திரைப்படத்தின் சாத்தியம் ஆகியவற்றை முழுவதும் உணர்ந்த கலைஞர்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இருந்தும் ஏன் ஒரு வறட்சி தொடர்ந்து நிலவுகிறது? இந்த வறட்சி தமிழ்த் திரைப்படத் துறையை எப்போதுமே பீடித்துள்ளது என்பதைத் தமிழின் தொடக்ககாலத் திரைப்படக் கட்டுரைகள் உணர்த்துகின்றன.


தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்ட தமிழ்த் திரைப்படங்கள் தமிழர் வாழ்வைச் சித்திரிக்கும்விதத்தில் மிகவும் விலகியே நிற்கின்றன. ஆழமான அகச்சிக்கல்களையும் அக உணர்வையும் சித்திரிக்கும் தீவிரப் படங்கள் உருவாக்கப்படுவதில் தொடர்ந்து மந்த நிலையே நீடிக்கிறது. தீவிர அக உணர்வுகளை அறிவுத் தளத்தில் விவாதித்த மெட்டி (1981) போன்ற திரைப்படங்கள் அற்பசொற்பமாகவே உருவாக்கப்படுகின்றன. நாட்டு விடுதலையை, தேசப்பற்றை வலியுறுத்திய திரைப்படங்கள் இந்திய விடுதலைக்கு முன்னர் தயாரிக்கப்பட்டன என்பதும் அதைத் தொடர்ந்து சினிமா பேசத் தொடங்கிய பொழுதுகளிலேயே சமூகப் படங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன என்பதும் நமது ஆச்சரியத்தை அதிகரிக்கின்றன. சமூகப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சமூகப் படங்கள் உருவாக்கப்படாததன் காரணமென நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் சுட்ட இயலவில்லை. இந்தப் படைப்பூக்கத்தின் போதாமையில் திரைத்துறையினரைப் போல அதைக் கண்டுகளிக்கும் விமர்சிக்கும் அனைவருக்கும் பங்குள்ளது என்பதே உண்மை. வாழ்வுக்கும் திரைச் சித்திரிப்புக்கும் இடையே உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கான படங்கள் உருவாக்கப்படவே இல்லை என்பது சமூகச் சோகமே. சினிமா ரசனை என்பது தமிழில் பெரிய அளவில் வளர்த்தெடுக்கப்படவில்லை. சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவிக்கும் நவீனத் தமிழ்க் குடிமக்களின் வாழ்வியலில் சிக்கல்களுக்குப் பஞ்சமேயில்லை. காலனியாதிக்கம், நாட்டு விடுதலை, நெருக்கடி நிலை, திராவிட ஆட்சி, உலகமயமாக்கல், நிதி நிறுவன மோசடி, மென்பொருள் துறையின் தாக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டம் எனத் தமிழ்ச்சூழலில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமே உள்ளன. நவீன நகர வாழ்வில் திரும்பிய பக்கங்களில் எல்லாம் சமூகத்தில் சிக்கித் திணறும் சாமான்யர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் நம் மனத்தைப் பிறாண்டுகின்றன. சுரீரென மனத்தைத் தைக்கும் இத்தனை பிரச்சினைகளையும் மீறிப் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் மட்டுமே திரையை ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிதுகூடக் கூச்சமேயின்றி அயல்மொழிப் படங்களை அப்படியே தமிழுக்கு மடைமாற்றம் செய்யும் இயக்குநர்கள் நமது சமூகத்தைப் புரிந்துவைத்துள்ளார்களா இல்லையா என்பது குறித்துச் சந்தேகம் எழுகிறது.


 
வலுமிக்க சமூக மாற்றத்தை உருவாக்கக்கூடிய சாத்தியம் கொண்ட சினிமாவைப் புரிந்து கொண்டு திரைப்படங்களைக் காட்சிபூர்வமாகவும் கையாளும் இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிழக்கே போகும் ரயில் (1978) திரைப்படத்தில் நாவிதரான மருது எதிரில்வரும் ஆதிக்கசாதியைச் சார்ந்த நபரைக் கண்ட மாத்திரத்தில் காலில் கிடக்கும் செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு உரையாடுவார். சமூகத்தில் சாதிரீதியாக ஒரு சமூகத்தினரை மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதையும் அந்தச் சமூகத்தினர் அதைக் கேள்வியே கேட்க முடியாத நிலையில் உள்ளதையும் மௌனமாக உணர்த்தியிருப்பார் பாரதிராஜா. இதைப் பார்க்கும்போது இந்தச் சமூக அவலத்தின் மீது நாகரிகம் விரும்பும் மனம் சீற்றம்கொள்ளும். ஒரு கலைஞன் சாதிரீதியான மதரீதியான வேறுபாடுகளைக் களையத் தன்னால் ஆன முயற்சிகளை எடுப்பது அவசியம்.



சினிமா ஒரு காட்சி ஊடகம் என்றபோதும் இன்னும் தமிழ்த் திரைப்படங்களில் வசனம் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது. சமீபத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) திரைப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றில் படத்தின் கருவை, கதைச் சுருக்கத்தை வெறும் வசனங்களால் விவரித்திருப்பார் இயக்குநர் மிஷ்கின். அதற்குக் கிடைத்த வரவேற்பு இன்னும் நாம் வசன ஆதிக்கத்திலிருந்து வெளிவரவில்லை என்பதன் சான்றுதான். மிஷ்கின் திரைப்படங்களைக் காட்சிபூர்வமாக அணுகும் தன்மை கொண்டவர் என்பதும் இந்தப் படமும்கூடக் காட்சிகளாலேயே நகர்த்தப்பட்ட ஒன்று என்பதும் நகைமுரணே. கதைக் களமும் சம்பவங்களும் நிகழும் சூழலும் தமிழ்ப் படம் என்பதற்கான அடையாளமின்றி அமைந்திருந்தன. இப்படத்தின் பல காட்சிகள் நவீன மேடை நாடகக் காட்சிகளைப் போன்றும் திரையில் மலர்ந்துகொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றின் காட்சிகள் போலவுமே அமைக்கப்பட்டிருந்தன. ஒரு தமிழ்ப் படம் என்று உணர்வதற்கான எந்தச் சான்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இல்லாததாலேயே இது மனத்தில் ஒட்டவில்லை.

திரைப்படத்திற்குக் கதை முதுகெலும்பு, திரைக்கதை இதயம், ரத்த ஓட்டம் இசை என்றால் அதற்கு உயிரூட்டுபவர் இயக்குநர். ஒளி, இசை, படத்தொகுப்பு, அரங்க வடிவமைப்பு, நடனம், சண்டை என சினிமா தொடர்பான அனைத்துக் கலைகளிலும் இயக்குநருக்கு முழு ஈடுபாடு இருக்க வேண்டும். இயக்குநருக்குச் சம்பவங்களை எப்படிக் காட்சியாக்க வேண்டும், அதை எப்படித் திரையில் மலர்த்த வேண்டும், காட்சியில் புலனாகும் பிம்பங்களுக்கு என்ன பொருள், அவற்றால் பார்வையாளரின் மனத்தில் என்னவிதமான தாக்கம் ஏற்படும் ஆகியவை குறித்த புரிதல் இருக்க வேண்டும். இத்துடன் நாம் வாழும் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும் சமூகத்தில் நிகழும் மாற்றங்களையும் தொடர்ந்து கவனித்துவருவதும் அவசியம். இவை அனைத்தும் ஒன்றிணையும்போதுதான் திரைப்படம் கலாபூர்வ அனுபவமாக மாறும். இதைத் தொடக்கத்திலிருந்தே விமர்சகர்கள் வலியுறுத்திவந்தபடியே இருக்கிறார்கள் என்பதை சினிமாக் கட்டுரைத் தொகுப்பு நூல்கள் உணர்த்துகின்றன.


கே. பாக்யராஜ், டி. ராஜேந்தர் போன்றோரின் வருகைக்கும் வெற்றிக்கும் பின்னர் இயக்குநர் என்றாலே அவருக்குக் கதையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் கலைத்தன்மை வீரியத்துடன் வெளிப்படாததற்கு இதுவும் ஒரு காரணம். வாசிப்பனுபவம் இல்லாத இயக்குநர்கள் தமிழ் இலக்கியத்தின் செழுமையை உணராமல் தாங்களாகவே சொந்தமாகக் கதை எழுதத் தொடங்கினார்கள். தமிழ் இலக்கியத்திலிருந்து திரைப்படத்திற்குச் சென்றவர்களோ திரைப்பட ஜோதியில் தங்கள் சுயத்தை இழந்தார்கள். ஜெயகாந்தன், பூமணி போன்றவர்கள் விதிவிலக்குகளே. ஆகச் செழுமையான கதையாடலும் புதுமையான திரைமொழியும் இணைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் செயல்பட்டுக் கலை அனுபவம் மிளிரும் திரைப்படங்கள் உருவாவதற்கான ஊற்றின் தோற்றுவாய் முற்றிலும் தூர்ந்துபோய்விட்டது.

தற்போதைய இயக்குநர்களில் திரைப்பட மொழியைப் புரிந்துகொண்டவர்களில் சிலர் குறிப்பாகப் பாலா போன்றோர் இலக்கியத்தின் செழுமையைத் தாங்கள் உருவாக்கும் திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்ள விழைந்ததாலேயே இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தனர். நவீன இலக்கியத் தளத்தில் தொடங்கி ஆனந்தவிகடன் வாயிலாகப் பரவலான வாசகர்களைச் சென்றடைந்த எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோரது திரைத்துறைப் பங்களிப்பு என்று பார்த்தால் எதுவுமே மிஞ்சவில்லை. அதனால்தான் ரஷ்யக் கதையின் பாதிப்பில் என்ற பாவனையில் சாமி இயக்கிய சிந்து சமவெளி என்னும் மாமனார் மருமகளுக்கிடையேயான அபூர்வ உறவைப் பகிரங்கப்படுத்திய ‘கலைப்படைப்பு’க்கு வசனம் எழுத ஜெயமோகனால் முடிந்தது. சுஜாதா, பாலகுமாரன் போன்றோர் செலுத்திய பங்களிப்பைக்கூட இந்த நவீன எழுத்தாளர்களால் செலுத்த முடியவில்லை.


80களின் மத்தியில் தமிழ்த் திரைப்படத் துறையில் நுழைந்து தனக்கென ஓரிடம் அமைத்துக்கொண்ட இயக்குநர் மணிரத்னத்தை விடலைப் பருவ மயக்கத்தின்போது மட்டுமே நெருங்க முடிந்தது. கையாண்ட எந்தக் கருத்திலும் ஆழமான புரிதல் இன்றி மேம்போக்காக அவர் காட்சிகளை ஒரு குறிப்பிட்ட வார்ப்பில் ஊற்றி எடுத்து அடுக்கிச் சென்றுள்ளார். காட்சிகளின் அழகியலுக்கு அழுத்தங்களைத் தந்திருந்த மணிரத்னம் உணர்வுகளின் ஆழங்களுக்குள் இறங்க இயலாமல் உயரத்தில் நிற்கிறார். இன்று அயல்நாட்டுப் படங்களைப் பார்த்து அதை அப்படியே சுத்தத் தமிழ்ப் படமாக உருவாக்க முற்படும் இயக்குநர்களுக்குத் தவறான வழிகாட்டியவராக இவரைச் சுட்ட முடிகிறது. எண்பதுகளின் இறுதிப் பகுதியில் வெளியாகி அப்போதைய பதின் பருவத்தினரின் மனசுகளைக் கவர்ந்துகொண்ட இவரது மௌன ராகம் - இப்படத்தின் அபத்தம் குறித்து அசோகமித்திரன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்- கே. பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள்தான் என்பதையும் அலைபாயுதே திரைப்படத்தின் திரைக்கதை உத்தி கே. பாக்யராஜின் மௌன கீதங்களின் உத்தி என்பதையும் அறிந்தபோது அவர்மீது கொண்டிருந்த மயக்கம் கலைந்தது. இவருக்கு இணையாகச் சிலாகிக்கப்பட்ட மற்றொரு இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், முதல்வன் போன்றவை சமூகத்தின் ஆழமான சிக்கல்களின் வேரைக் கண்டறிய முற்படாமல் மேலெழுந்தவாரியாக இலைகளை வெட்டிச் சென்றன. இட ஒதுக்கீடு, லஞ்சம் உள்ளிட்டவற்றைக் கையாண்ட இவரது திரைப்படங்களில் ஷங்கர் முன்வைத்த அரசியல் ஆபத்தானது. காட்சிரீதியான அழகியலுக்கு முக்கியத்துவம் தந்த இவர்களது திரைப்படங்கள் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் கரும்புள்ளிகள் எனச் சுட்டப்படும் சகலகலாவல்லவன், முரட்டுக்காளை போன்ற திரைப்படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்கள் முக்கியமானவை என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.


2000த்திற்குப் பின்பு மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களை ஆதர்ஷமாகக் கொண்டு திரையுலகிற்குள் நுழைந்த இளம்வயதினர் ஒழுங்கான திரைப்படங்களை உருவாக்க முடியாமல் தடுமாறினார்கள். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் வழிதவறியவர்களாயிருந்தனர். திரைப்பட விழாக்களிலும் டிவிடிகளிலும் புது இயக்குநர்கள் கண்ட உலகப் படங்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்தன. அதே வேளையில் தமிழ்ப் படங்களைக் கோத்திருந்த காட்சிகள் மேம்போக்கானவையாக இருந்தன. இவற்றுக்கிடையே காணப்பட்ட பெரும் வித்தியாசம் இயக்குநர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. எத்தகைய படங்களை உருவாக்க வேண்டும் என்னும் தெளிவு அவர்களுக்குள் உருவாக வாய்ப்பில்லாமல் போயிற்று.

தமிழ் வாழ்வியலில் காணப்படும் கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்கள் தமிழ்த் திரைப்படங்களில் பாவனைகளாகவே வெளிப்படுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் டாஸ்மாக் கலாச்சாரம் தனது கொடுங்கரங்களால் குடும்பங்களின் இனிமையான கட்டமைப்பை ஈவு இரக்கமின்றிக் கலைத்துப்போடுகிறது. ஆனால் தமிழ்த் திரைப்படங்களிலோ கதாநாயகன் நண்பர்களுடன் தனது மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பரிமாறிக்கொள்ளப் பயன்படும் மேடையாகவே இத்தகைய டாஸ்மாக் மேசைகள் பயன்பட்டன. 2012இல் வெளியான மதுபானக் கடை தனக்குக் கிடைத்த சிறு வாய்ப்பில் குடி சார்ந்த பன்மைத் தன்மையைச் சித்திரிக்க முயன்று அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது. ஆனாலும் இந்தப் படத்தைக் குறும்படத்தின் விரிவாக்கம் என்பதாகவே நினைவுகூர முடிகிறது. சமகாலச் சிக்கல்கள் குறித்த சித்திரிப்புகளும் கலைநுட்பமான திரைமொழியும் சரிவிகிதத்தில் கலக்கும்போதுதான் முழுமையான திரைப்படக் கலை பரிணமிக்கும். தொழில்நுட்ப அறிவும் காட்சியின் அழகியலும் மண் சார்ந்த மணமும் மனமும் தனித்தனியாகப் பயணிக்கும்போது கடல், அம்மாவின் கைப்பேசி, பரதேசி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற அரைகுறைப் படங்களே எஞ்சும். இவற்றையெல்லாம் மீறிப் புதுத் தலைமுறை இயக்குநர்கள் நமது சிக்கலைப் பேச வேண்டியிருந்தது. அவர்களது கவனம் உள்ளூர் இலக்கியங்களிலும் சமகால வாழ்விலும் நிலைகொள்வதற்குப் பதில் அயல்மொழித் திரைப்படங்களைச் சுற்றியது. வாசிப்பு என்பது காட்சிமொழியை வளப்படுத்திப் புதிய கற்பனைகளை மனத்தில் கிளர்த்தும் என்பது ஓர் எளிய உண்மை. ஆனால் நம் இயக்குநர்களில் பெரும்பாலானோர் உலகத் திரைப்படங்களைப் பார்ப்பதாலேயே தங்கள் படைப்பூக்கம் மிளிரும் கற்பனைத் திறன் வலுப்பெறும் என நம்புகிறார்கள்.


பாலாவின் சேது (1999) காதலைப் பின்புலமாகவும் பொழுதுபோக்குத் திரைப்படத்தின் உத்திகளைக் கவனமாகவும் கையாண்டிருந்தபோதும், பாலா திரைப்பட மொழியைப் புரிந்துகொண்டவராகத் தெரிந்தார். மண்ணின் கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பிரதிபலிக்கக்கூடிய தீவிரமான திரைப்படத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர் என்னும் நம்பிக்கையை உருவாக்கிய அவர் தந்ததென்னவோ ஏமாற்றம்தான். அவரை உயரத்திற்குச் செல்லவிடாமல் அவரது இந்துத்துவச் சார்பு தடுத்துவிடுகிறது. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த சிக்கல்களைக் காட்சிகளாக மாற்ற முடிந்த அவரால் ஜெயகாந்தன் எழுத்தில் வடித்திருந்த அழுத்தத்தைத் தர முடியவில்லை. அதனால் தொடர்ந்து வந்த அவரது திரைப்படங்கள் அவரைச் சமூகப் புரிதலற்ற கலகக்காரனாகவே அடையாளம் காட்டின. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கடுந்துயரை முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் திரைப்படமாக்கத் துணிந்த பாலா அதைப் பிழைபட நிறைவேற்றியிருந்தார். எனவே பரதேசியால் தான் அடைய வேண்டிய உயரத்தை அண்ணாந்து மட்டுமே பார்க்க முடிந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரார்ந்த வாழ்க்கையை அவர் தனது விருப்புவெறுப்புகளை விடுத்து முழுமையாகச் சித்திரித்திருந்தால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் மேட்டிமைச் சமூகத்தின் இன்பங்களுக்காக எவ்வளவு தூரம் சிதைக்கப்பட்டது என்பதன் காட்சி ஆவணமாகவும் கலை அனுபவமாகவும் அப்படம் அமைந்திருக்கும். அப்படி அமையாமல் போனதற்கு யாரைக் குற்றப்படுத்துவது?


இயக்குநர் பாரதிராஜா லண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு 2013 ஏப்ரலில் நேர்காணல் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கலைஞன் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு ஏற்பப் படங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை அவர் ஒத்துக்கொள்ள மறுத்திருந்தார். மக்களைக் கீழான கலைக்குப் பழக்கப்படுத்திவிட்டு அவர்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே கொண்ட படங்களை விரும்புகிறார்கள் எனக் கூறுவதை விமர்சித்திருந்தார். அத்தகைய படங்களை உருவாக்குவது தவறு என்றும் அவை திரையரங்கிற்கு வருவதால்தான் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். பார்வையாளர்கள்மீது பழியைப் போட்டு அவர்களைச் செல்லுலாய்ட் போதையில் அமிழ்த்துவது தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.


காதலை வெவ்வேறு விதமாகச் சித்திரித்த பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி (2013) ஆதிக்கசாதியினரின் ஒடுக்குமுறையைக் காட்சிகளாகக் கொண்டிருந்தும் அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கவில்லை. அன்னக்கொடியும் கொடிவீரனும் என்னும் தலைப்பில்கூடத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனின் பெயரை நீக்கிய பின்னரே வெளியானது. சாதி என்னும் மாயக்கரம் நமது சமூகத்தின் குரல்வளையை அழுத்தமாக நெறிப்பதை மூடிமறைத்துக்கொண்டே இருந்தால் நாம் நாகரிகச் சமூகமாகத் திமிர்ந்தெழுவது சாத்தியமல்ல. படைப்பூக்கம் மிளிரும் காலத்தில் பாரதிராஜா இதே அன்னக்கொடியைப் படமாக்கியிருந்தால் அதன் வெளிப்பாடு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.

வேதம் புதிது (1987) திரைப்படத்தில், “பாலுத் தேவர் பாலுத் தேவர்ன்னு சொல்றீங்களே பாலுங்கிறது உங்க பேரு. தேவர்ங்கிறது நீங்க வாங்கிய பட்டமா?” என ஒரு பிராமணச் சிறுவன் கேள்வி கேட்க முடிந்தது. இதே கேள்வியைச் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த சிறுவனால் திரையில் எழுப்ப முடியுமா, அப்படிக் காட்சி அமைக்கும் துணிவுள்ள இயக்குநர்கள் நம்மிடையே உள்ளனரா? அப்படியான துணிவும் புரிதலும் சமூக அக்கறையும் உள்ள இயக்குநர் எழுந்தருளும்போதுதான் திரைப்படக் கலை வீரியத்துடன் வெளிப்பட்டுச் சமூகத்தின் சிக்கல்களைப் பாகுபாடின்றிப் பேசும். உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்கள் பேசப்படும். அதைவிடுத்து ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என நாயகர்களைத் தூண்டிவிடுவதோ தென்னகத்து சத்யஜித் ரே என இயக்குநர்களுக்கு முதுகுசொறிவதோ சிறுபிள்ளைத் தனமாகவே இருக்கும்.


மௌனகுரு (2011) திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமார் சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமரசாமி, கற்றது தமிழ் ராம், ஆடுகளம் வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் ஒருசிலர்மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. ஆனாலும் நமது அடையாளம் சார்ந்த மண்ணின் ஈரம் கொண்ட படங்கள் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். மீனவர்கள் சிக்கல்களைச் சித்திரித்து சமீப ஆண்டுகளில் மூன்று திரைப்படங்கள் வெளியாயின. நீர்ப்பறவை (2012), மரியான் (2013) ஆகிய இரண்டுமே மீனவர்கள் வாழ்க்கையின் அடிப்படையையே கவனத்தில்கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருந்தன. தினந்தோறும் சிங்கள ராணுவத்தால் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டு அனுதினமும் அல்லல்படும் மீனவர்களின் வாழ்க்கை திரையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவாகவில்லை. வாலியின் படகோட்டி படப் பாடல் இதைவிட அழுத்தமாக மீனவர்களின் துயரத்தைப் பதிவுசெய்திருந்தது. கடல் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான துணிவு இல்லை. ஆனால் அதுவும் மேலோட்டமான சித்திரிப்பு என்று நேர்மையான விமர்சனங்கள் தெரிவித்தன.


விமர்சனங்களை விமர்சனங்களாக எதிர் கொள்ளும்போதுதான் ஒரு கலைஞன் முழுமையை நோக்கி ஆரோக்கியத்துடன் முன்னேற முடியும். ஆனால் இங்கு விமர்சனங்களை விமர்சனமாகப் பார்க்கும் தன்மை தகர்க்கப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்கப் படைப்பாளிகள் சார்ந்த பிரச்சினை அல்ல. விமர்சகர்களும் இந்த நிலைக்குக் காரணம். விமர்சனத்தை மூர்க்கத்துடன் எதிர்கொள்ளும் இயக்குநருக்கும் கூடிக்கிடந்த காலத்தில் படத்தைப் போற்றிப் பிரிந்த பின்னர் இகழும் விமர்சகருக்கும் இதில் பங்கு உண்டு. ஒரு படைப்பாளியின் பணி விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி நேரத்தையும் காலத்தையும் வீணடிப்பதல்ல. விமர்சனங்கள் நேர்மையோடு வெளிப்படின் அது சார்ந்த பரிசீலனை படைப்புக்கு உதவும். அவ்வளவுதான். படைப்பாளி விமர்சனங்களை மட்டுமே கருத்தில் கொண்டால் படைப்புச் செயல்பாடு மழுங்கிவிடும். விமர்சகன் கரையில் நின்று கருத்துரைக்கிறானே ஒழிய கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குத்தான் காற்றின் திசையும் அலையின் வலுவும் கப்பலின் நிலையும் புரிபடும். விமர்சகனின் வேட்கையும் மாலுமியின் விழைவும் இனிமையான பயணமே. அது சாத்தியமாகாதபோதே இருவருக்குள் மாற்றுக் கருத்துகள் எழுகின்றன. தமிழ்த் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை இந்த முரண் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விமர்சனங்களால் படைப்பு கூர்மைப்பட வேண்டுமே தவிர முனை மழுங்கக் கூடாது என்பதில் விமர்சகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கை வேண்டும். படைப்புகளும் விமர்சனங்களும் முக்கியமே ஒழிய படைப்பாளியோ விமர்சகரோ முக்கியமல்ல. கலங்கரை விளக்கம் கப்பலின் பயணத்திற்கு அவசியமோ இல்லையோ விளக்கின் ஒளி கப்பலுக்காகவே சுழன்றுகொண்டிருக்கும்.

(இக்கட்டுரையை எழுத உதவிய நூல்கள்: 
பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - மீதி வெள்ளித்திரையில் (சு. தியடோர் பாஸ்கரன்), சித்திரம் பேசுதடி (தொகுப்பாசிரியர் சு. தியடோர் பாஸ்கரன்), பேசும் பொற்சித்திரம் (அம்ஷன் குமார்), அநேக இணையதளங்கள்)

காலச்சுவடு ஜனவரி 2014 இதழில் ( http://www.kalachuvadu.com/issue-169/page88.asp) பிரசுரமாகியுள்ள கட்டுரை இது.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்