ஊருக்கு ரவுடியான மைக்கேல் (விஜய்) ஒரு குப்பத்து ராஜா. கதிர் (கதிர்) ஒரு மகளிர் கால்பந்துக் குழுவின் கோச். அந்தக் குழு விளையாட்டில் ஈடுபட எல்லா உதவிகளையும் பின்னணியிலிருந்து செய்கிறார் மைக்கேல். டெல்லியில் முக்கியமான போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய சூழலில் மைக்கேலுடைய எதிரியான அலெக்ஸ் (டேனியல் பாலாஜி) கதிரைக் கத்தியால் குத்திவிடுகிறார். உயிருக்குப் போராடும் கதிர் பிகிலால் மட்டுமே இப்போதைக்குக் கால்பந்து குழுவின் கோச்சாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தர முடியும் என்கிறார். பிகிலுக்கு குழு ஒத்துழைத்ததா, மகளிர் குழு கால்பந்துப் போட்டியில் கலந்துகொண்டதா, வெற்றிபெற்றதா போன்ற கேள்விகளுக்கான விடை பிகில்.
எளிய கதை. திரைக்கதையோ மிகவும் சாதாரணம். குப்பத்து மனிதர்களுக்குப் பெருமைக்குரிய அடையாளத்தை விளையாட்டே தரும் என்பது மட்டுமே திரைக்கதையில் நல்ல விஷயம். அதுவும் இதுவரை நாம் பார்த்திராததில்லை. விஜய் என்னும் பெரிய நடிகர் நடித்திருப்பதாலேயே என்ன காட்சி வைத்தாலும் ரசிகர்கள் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்தைப் போல் மிகவும் சாதாரணக் காட்சிகளால் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டுகின்றன தொடக்க காட்சிகள். அதை நினைவூட்டுவதைத் தவிர வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாத காட்சிகள் அவை. குப்பத்து ராஜாவான மைக்கேல் ஏதோ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் போல் பள பளவென்றிருக்கிறார். விஜயின் தந்தையான ராயப்பன் தொடர்பான காட்சிகள் ’தளபதி’ திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. பிகிலுக்காக விளையாட்டுக் குழுவின் தலைவர் ஜாக்கி ஷெராபை ராயப்பன் சந்தித்துவரும் காட்சி ’பாட்ஷா’வை நினைவுபடுத்துகிறது. இப்படி எல்லாமே ஏற்கெனவே பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளாகவே உள்ளன. ஒரு காட்சிகூடப் புதிதாக இல்லை. ஆனாலும், படம் நீளமோ நீளம்.
பிகில், ராயப்பன் என்னும் இருவேடங்களில் விஜய். லேசாகத் தலை நரைத்த ராயப்பன் என்னும் உள்ளூர் தாதா வேடத்தில் விஜய் தாத்தா போல் சன்னமான குரலிலும் நிதானமாகவும் பேசுகிறார். சண்டைக் காட்சிகளில் படு வேகமாக இயங்குகிறார். இதுதான் நடிப்புபோலும். பிகில் வேடத்தில் இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடன் பவனி வருகிறார். எத்தனை வேடம் தந்தாலும் விஜய் எளிதாக நடித்துவிடுவார் எனும் நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. பெரிய மெனக்கெடல் அவருக்குத் தேவையே படவில்லை. ரசிகர்களுக்குப் பிடித்துவிடலாம்.
சமீப காலங்களில் இவ்வளவு நோஞ்சான் காதல் காட்சிகள் எந்தப் படத்திலும் இடம்பெற்றதில்லை. ஏஞ்சல் என்னும் பிசிசியோதெரபிஸ்ட் பாத்திரத்தில் நயன்தாரா. பாவம்தான். கதாநாயகி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதுவும் தேவாலயத் திருமணக் காட்சிகள் ஒவ்வொன்றும் அலுப்பு.
விஜயும் கால்பந்து விளையாட்டும் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதால் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு போன்ற நடிகர்களுக்குப் பெரிய வேலை இல்லை.
ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. கால்பந்தாட்டக் காட்சிகளில் சுவாரசியம் பெரிதாக இல்லை. ஆனால், அந்தக் காட்சிகளைப் படமாக்கிய விதம் சுவாரசியமாக உள்ளது. மகளிர் குழுவில் அனிதாவாக நடித்திருந்த ரெபோ மோனிகா ஜானின் பின்னணிக் கதை நெகிழ்ச்சியூட்டுவதற்காகவே கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல் காயத்ரி கதையும். பெண்ணுக்கான அடையாளம் தரப்பட வேண்டும் என்பதை வலிந்து சொல்கிறது.
கோச்சை வெறுக்கும் பெண்கள் அவரை விரும்புவதற்கான காரணக் காட்சி, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதாவை விளையாட சம்மதிக்கவைக்கும் காட்சியில் கதை சொல்வது போன்றவை எந்தவித அழுத்தமுமின்றிச் சாதாரணமாக உள்ளன. படத்தின் வசனங்கள் நல்லெண்ண கருத்துகள் நிறைந்தவையாக மட்டுமே உள்ளன. ’திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவை இல்லம்மா’ ஒரு உதாரணம்.
வலுவற்ற திரைக்கதையை ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் வலுப்படுத்த முடியவில்லை. இயக்குநர் அட்லீ கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். வசனத்திலும் திரைக்கதையிலும் ரமணகிரிவாசன் இணைந்து பங்கெடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இத்தனை பேர் தேவையா?
விளையாட்டை மையமாகவைத்து எடுக்கப்பட்ட விளையாட்டுத்தனமான படம் பிகில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக