இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, மே 22, 2020

சாட்டை இல்லாத பம்பரம்


நான் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் கோவில்பட்டிக்குச் செல்வோம். கோவில்பட்டியில் அப்போது சரஸ்வதி, ராமசாமி, நாராயணசாமி என மூன்று திரையரங்குகள் இருந்தன. கடைசியாக 1987 ஆம் ஆண்டு சென்றோம். அதன்பின்னர் அங்கே செல்வது இல்லை. சில உறவுகளும் நட்புகளும் அப்படியே சில பல காரணங்களால் அறுந்துபோவதுபோல் கோவில்பட்டியுடனான தொடர்பும் அறுந்துவிட்டது. ஆனால், பால்யத்தில் அங்கே பார்த்த பல படங்கள் அவ்வப்போது நினைவில் எழும். இந்த ஊரடங்கு காலத்தில் அப்படி எழுந்த நினைவுகளால் சில படங்களைப் பார்த்தேன்.


சிறு வயதில் ஏன் அந்தப் படத்தில் என்ன காட்சிகள் நினைவில் பதிந்திருந்தன, அவை ஏன் நினைவில் நின்றன போன்றவற்றை ஆராய்ந்து பார்ப்பதில் மனம் ஏதோ ஒருவகை ஆறுதல் கொள்கிறது. கோவில்பட்டியில் பார்த்த படங்களென ஒரே ரத்தம், ராமன் ஸ்ரீராமன், சாட்டை இல்லாத பம்பரம், அம்மன் கோவில் கிழக்காலே, பூவிழி வாசலிலே எனச் சில மனத்தின் மேல் வரிசைக்கு அடிக்கடி வந்து செல்லும். அப்போது கோவில்பட்டி நாடார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சியிலும் தினந்தோறும் சினிமா ஒன்று திரையிடுவார்கள். பொருட்காட்சியில் பட்டணம் பொடி விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ஆள் உட்கார்ந்து கொண்டு கையில் உலக்கையைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற உருவம் ஒன்று இப்போதுகூட நினைவிலாடுகிறது.


சாட்டை இல்லாத பம்பரம் படத்தைத் திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். மிகவும் சாதாரணப் படம். நாயகன் வெகுளியான பணக்கார இளைஞன். அவன் வீட்டு வேலையாட்களே அவனை வேலை வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு அப்பாவி அவன். அவன் வீட்டுக்கு எதிரே கடைவைத்திருக்கும் பொன்னம்மா என்னும் பெண்மணி, ஒரு விவரமான பொண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டால் அவனது வாழ்வு உருப்படும் என்கிறாள். அவனும் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவளைக் காதலித்துத் திருமணம்செய்துகொள்கிறாள். அவள் ஏழைக் குடும்பத்துப் பெண். அவர்களது வாழ்வு திருமணத்துக்குப் பிறகு என்னவானது என்பது தான் படத்தின் கதை. யூடியூபில் படம் கிடைக்கிறது.


சிவகுமார், சரிதா, சோ, சங்கிலி முருகன், சாமிக்கண்ணு, காந்திமதி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தின் கதையை கே. பாக்யராஜ் எழுத, வசனத்தை கவிஞர் வாலி எழுதியுள்ளார். ஈரோடு என் முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. 



புதன், ஏப்ரல் 29, 2020

நிச்சலனம்: எல்லாம் அல்லது எதுவுமில்லை


உயிரோடு இருப்பவர்கள் சொன்னாலே பல புத்தகங்களை வாசிக்க மாட்டோம். ஆனால், இறந்துவிட்ட எழுத்தாளர் ஒருவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்தார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இறந்துபோனவர் எப்படிப் பரிந்துரைக்க முடியுமென. ஆனால், நான் சொல்வது உண்மைதான் எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைந்த பின்னர் அவருக்கான அஞ்சலிக் குறிப்பை (இருக்கும்போது ஒருவருக்கு அஞ்சலிக் குறிப்பெழுத முடியுமா என்ன?) எழுதியதற்காக காலச்சுவடு பதிப்பகம் எனக்கொரு நூலை அனுப்பிவைத்தது. அந்தப் புத்தகத்தை எனக்கு நஞ்சுண்டன் பரிந்துரைத்தார் என்பதை இப்போது நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பொதுவாக, பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களையே அலமாரியில் வைத்துவிட்டு வாய்ப்பு வரும்போது படித்துக்கொள்ளலாம் என முடிவுசெய்வதுதான் எனது பழக்கம். இப்படிப் பல புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. சில புத்தகங்களை ஐம்பது அறுபது பக்கங்கள் வாசித்துவிட்டு அப்படியே மூடிவைத்துவிடுவேன். வாசிப்பதற்கு, புத்தகமும் நேரமும் இருந்தால் மட்டும் போதாது, ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். மனநிலை வாய்க்காதபோது எவ்வளவு சிறப்பான புத்தகம் கிடைத்தாலும் வாசிக்க இயலாது என்பதுதான் எனது அனுபவம். 

காலச்சுவடு எனக்குப் புத்தகம் அனுப்பியிருந்தது என்று சொன்னேனே ஒழிய அது என்ன புத்தகம் என்று இன்னும் சொல்லவில்லையே. அந்தப் புத்தகம் நிச்சலனம். அது ஒரு துருக்கிய நாவல். அகமத் ஹம்தி தன்பினார் என்பவர் எழுதியது. 20ஆம் நூற்றாண்டின் துருக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் இவர் என ஓரான் பாமுக் குறிப்பிட்டுள்ளார். அவர் டிரையாலஜியாக எழுதிய நாவலில் இது இரண்டாவதாக வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் துருக்கியில் 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நாவல் தீவிரமான மொழிநடையில் அமைந்திருக்கிறது. துருக்கியின் கலை, அரசியல், பண்பாடு, இசை, வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் அலசிச் செல்கிறார் நாவலாசிரியர். இஸ்தான்புல், அனடோலியா எனப் பல இடங்களுக்கும் நாவல் பயணப்படுகிறது. நாவல் முதலில் துருக்கியில்  நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அங்குள்ள நாளிதழின் தரத்தை நமது நாட்டின் நாளிதழ்களின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் பெருமூச்சுதான் விட இயலும். 


பொதுவாக, ஒரு நாவலையோ புத்தகத்தை வாசிக்க ஒரு தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதலை நண்பர் ஒருவர் தரலாம், இல்லையெனில் எங்கோ வாசிக்கும் ஏதோவொரு வரியில் குறிப்பிடத்தக்க தூண்டுதல் கிடைத்துவிடலாம். அப்படிக் கிடைத்தபோது அதை நாம் வாசிக்கத் தொடங்குவோம். நிச்சலனத்தைப் பொறுத்தவரை எனக்கு நஞ்சுண்டனைத் தவிர யாரும் பரிந்துரைக்கவில்லை. அவருடைய பரிந்துரையும் அது ஒரு வகையான மாய எண்ணம்தானே. இப்படியெல்லாம் எதையாவது நினைத்து மனம் மகிழ்ந்துகொள்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும். 

கரோனா காலத்தின் முதல் ஊரடங்கைத் தொடர்ந்து திரைப்படங்களாகப் பார்த்துக் கழித்தேன். பார்க்க வேண்டிய பல படங்களைப் பார்த்து முடித்தேன். அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். இந்தப் பதிவில் நிச்சலன குறித்து மட்டும் எழுத வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் அதற்குத் தாவுகிறேன். இப்படியெல்லாம் நமக்கு நாமே எதையாவது கட்டுப்பாடுகளை விதித்துத்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். இது ஒருவகையில் அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும். இதுதானே நிலைமை? 

எனது வாசிப்பு என்பது மிகவும் சுணக்கம் கொண்டது. நாவலின் பக்கங்களைக் கொண்டு ஒருநாளுக்கு எத்தனை பக்கம் படித்தால் அதை எத்தனை நாளில் முடிக்கலாம் என முதலில் திட்டமிடுவேன். அதன்படி சில நாள்கள் படித்தும் முடிப்பேன். அதன் பின்னர் அந்தத் திட்டத்துக்கு ஏதோ ஒரு நோவு வந்துவிடும். நாவலைக் கசந்த காதல் போல் தள்ளிவைத்துவிடுவேன். மீண்டும் அந்தக் காதல் துளிர்க்குமோ துளிர்க்காதோ அது காலத்துக்குத்தான் வெளிச்சம். 

அகமத் ஹம்தி தன்பினார்
நிச்சலனம் நாவல் 424 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு 40 பக்கம் வீதம் வாசித்தால் சுமார் பதினோரு நாளில் முடித்துவிடலாம் என ஒரு கணக்குப் போட்டேன். எனது கணக்கில் பிழை இருக்காது எனது வாசிப்பில்தான் பிழை இருக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருப்பதை நினைவுகூர்ந்து நீங்கள் இதை எப்படி வாசித்திருப்பான் எனச் சந்தேகப்படாதீர்கள். எப்போதும் ஒருவன் சோம்பேறியாக இருக்க மாட்டான். சிலவேளை அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு சுறுசுறுப்புப் படகு வந்து அவனைக் கரை சேர்த்துவிடும். அப்படியான படகு எனக்கு நிச்சலனம் நாவல் விஷயத்தில் நடந்தேறியது. மிகவும் ஆச்சரியகரமான வகையில் 2020 ஏப்ரல் 18 அன்று வாசிக்கத் தொடங்கி ஏப்ரல் 27 அன்றிரவில் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். எனக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படி என்னை வாசிக்க வைத்தது நாவலின் நடை. ஆகாய விமானம் பரந்த வெளியில் தடம்பிறழாமல் செல்வது போன்றதொரு நடையில் நாவல் நகர்த்தப்பட்டிருந்தது. 

வாழ்க்கைமீது உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகளும் வாழ்க்கை குறித்து உங்களுக்கு அநேக சிந்தனைகளும் இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நிச்சலனத்தை வாசிக்க வேண்டும். அது தரும் இலக்கிய சுகம் இப்படி அப்படியென்றில்லை அது ஒரு பரம சுகம். கதை என்று பார்த்தால் வெறும் காதல் கதைதான். என்ன வெறும் காதல் என்கிறான் மரமண்டைப்பயல் என நீங்கள் எனைத் திட்டக் கூடும். காதலை வெறும் காதல் என்பதால் எனக்குக் காதல் மீது வெறுப்பு என்று கருதிக்கொள்ளாதீர்கள். அது சும்மா வெறும் நடிப்பு. ஒவ்வொரு முட்டாளுக்குள்ளும் ஒரு ‘அறிவுஜீவி’ முளைவிடத் துடிக்கத்தானே செய்வான். அவனது செயல்பாடுகள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தானே இருக்கும். அப்படி ஒரு அசட்டுத்தனத்தில் வெளிப்பட்டதுதான் அந்த வெறும் காதல். 

மும்தாஜ் எனும் இளைஞனின் காதல்தான் நாவலின் நடு நரம்பு. அதை அடிப்படையாகக் கொண்டு நாவல் அங்குமிங்கும் சென்று வருகிறது. நான்கு பாகங்களைக் கொண்ட நாவலில் முதல் பாகம் இக்ஸான், இரண்டாம் பாகம் நூரன், மூன்றாம் பாகம் சூயத், நான்காம் பாகம் மும்தாஜ். நான்கு பாகங்களில் இரண்டாம் பாகமான நூரன் அதிகப் பக்கங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நூரன் தான் மும்தாஜின் காதலி. தன் வாழ்வின் பல சோகங்களை பால்யம் முதலே அனுபவித்துவந்த மும்தாஜின் வாழ்க்கையில் அவனை அவனது இடர்பாடுகளிலிருந்து கைதூக்க வந்தவள் நூரன் என்று நம்பினான் மும்தாஜ். ஆனால் அவள் அவனுக்குத் துக்கத்தையே பரிசளித்துச் சென்றுவிட்டாள். நூரனுடன் மும்தாஜ் படகில் இரவு பகல் என்று பாராமல் சுற்றியிருக்கிறான். அந்தத் தேவதையுடன் திருமணத்துக்கான நாளை எல்லாம் குறித்துவிட்டான். எல்லாவற்றையும் ஒரு மரணம் வந்து அழித்துவிட்டது. அதுவும் ஒரு தற்கொலை. நூரனோ மும்தாஜோ இறந்திவிட்டிருந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால், நூரனை எப்போதோ காதலித்திருந்த ஒருவன் இறந்து இவர்கள் காதலை நிறைவேறாத ஒன்றாக மாற்றிவிட்டான். 

அகமத் ஹம்தி தன்பினார்

தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டிருந்த நூரனுக்கு மும்தாஜ் எல்லாமுமாக இருந்தான். அவனைக் கைபிடிக்கலாம் என்றிருந்தபோது அவளுடைய கணவன் திரும்பிவந்து அவளுடைய காதலின் திசையை மாற்றிவிட்டான். நிறைவேறாத காதலின காவியச் சோகம் இந்த நாவலின் பக்கங்களில் எல்லாம் நிரம்பிவழிகிறது. ஆனால், அது மாத்திரமே நாவலா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். துருக்கி நாட்டின் வரலாறு ஒட்டாமன் பேரரசின் சரித்திரம், அந்த நாட்டின் நவீன வாழ்க்கை, பழம்பெருமை என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார் தன்பினார். 

தனி மனிதரின் அக உணர்வுகளையும் புறச் சூழல்களையும் ஒருசேர எடுத்துவைத்துக்கொண்டே போகிறார். துருக்கிய இஸ்லாம் வாழ்வின் பல பக்கங்களைத் திறந்துகாட்டுகிறார். அதன் இசை, தத்துவம் என வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துருக்கிய பண்பாட்டின் விதைகளைத் தூவிச் செல்கிறார் தன்பினார். இந்த நாவலின்வழியே இசைபட வாழும் ஒரு பண்பாடு வாய்க்கப்பெற்ற நாடாக துருக்கி துலக்கம் கொள்கிறது.  இரண்டாம் உலகப் போர் மூளுமா மூளாதா என கேள்விகள் பல்கிப் பெருகிய காலகட்டத்தில் தொடங்கும் நாவல் நிறைவுறும் வேளையில் இரண்டாம் உலகப் போர் மூண்டுவிடுவதான அறிவிப்பு வருகிறது. 

அறிவுப்பூர்வமான வாழ்வை வாழும் மனிதனின் உணர்வுபூர்வ காதல் வழியே ஒரு நாட்டின் வரலாற்றைக் குழைத்து இலக்கிய ருசியுடன் அகமத் ஹம்தி தன்பினார் படைத்திருக்கும் ரசனையான விருந்து நிச்சலனம். ஆங்கிலத்தில் இந்த நாவல் A mind at piece என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துருக்கிய மொழியில் இதன் தலைப்பு ஹோஸோர் (Huzur). தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கிறார் தி.அ.ஸ்ரீனிவாசன். நாவல் முழுவதும் ஒற்றுப்பிழைகள் ஏராளம் காணப்படுகின்றன. நஞ்சுண்டன் பரிந்துரைத்த நாவல் ஆனால் அவரால் சகித்துக்கொள்ள இயலாத ஒற்றுப்பிழைகளுடன் வாசிக்க நேர்ந்தது நகைமுரண்தான். 

நிச்சலனம் 
அகமத் ஹம்தி தன்பினார் 
தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன் 
வெளியீடு:  காலச்சுவடு
பக்கங்கள்: 424
விலை ரூ. 375 
தொடர்புக்கு: 04652278525

ஞாயிறு, மார்ச் 29, 2020

வசனங்களால் வாழ்ந்தார் வாழ்கிறார் இன்னும் வாழ்வார்

அஞ்சலி: இயக்குநர் விசு (01.07.1945 – 22.03.2020)


இயக்குநர் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகைகள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள். விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல் இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம் போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால் பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் விசு.

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபோத்தனமான துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமான கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மையான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி.  தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய பட்டினப்பிரவேசத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய அவன் அவள் அது, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்களை முக்தா வி சீனிவாசன் இயக்கினார்.


எஸ்பி. முத்துராமன் இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான கண்மணிப் பூங்காவில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தினருக்கான படமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப் படம் பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் படம் இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது இந்தப் படம்.  விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், மோடி மஸ்தான் என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான மணல் கயிறுதான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தின் காது கேளாத மாமா போன்ற அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தனர் சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்றவர்கள். இப்படியான நிலையக் கலைஞர்களைப் பயன்படுத்திய தன்மை நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

1986-ல் வெளியான சம்சாரம் அது மின்சாரம் விசுவின் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் குடும்ப புராணம் என்னும் பெயரில் மலையாளத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

தில்லுமுல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மன்னன் என நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. ரஜினிகாந்துடன் இவரது பயணம் 1978-ல் இவரது கதை வசனத்தில் ’பசி’ துரையின் இயக்கத்தில் உருவான சதுரங்கம் திரைப்படத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே கதையைத் தான் பின்னர் விசு, திருமதி ஒரு வெகுமதி என்னும் பெயரில் படமாக்கினார். நடிகர் எஸ்.வி.சேகர் இந்தப் படத்தில் நடித்த வெகுளித்தனமான கணவன் வேடத்தில்தான் ரஜினி காந்த் நடித்திருந்தார். ரஜினி காந்த் அரசியலில் தனது காலைப் பதிப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவரைவிட ஓரிரு வயது மூத்த விசு காலமானது ஒரு சோகமே.


கமல் ஹாசனை விசு இயக்கியதில்லை ஆனால் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த சிம்லா ஸ்பெஷல் படத்துக்கு விசு கதை வசனம் எழுதியிருந்தார். ரஜினியை இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், எந்தச் சூழலிலும் படைப்புரீதியான சமரசம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த விசு ரஜினியை இயக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்தப் படம் அண்ணாமலை. பின்னர், அந்தப் படத்துக்கு வஸந்த் இயக்குநர் என நாளிதழ்களில் விளம்பரம்கூட வந்தது. ஆனால், இறுதியில் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அப்படியான சமரசத்துக்குத் தயாராக இருந்ததால் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாட்ஷா கிடைத்தது. விசுவோ தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டவராக வரலாற்றில் நிலைபெறுகிறார்.  

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஆனந்தக் கண்ணீர் திரைப்படத்தில்கூட அவரை நினைவுபடுத்துவது தோராயமாக என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவர் டாக்ஸி டிரைவரிடம் பேசும் நீளமும் குழப்பமுமான அந்த வசனம்தான். இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் விசு வெறும் நடிகரே. ஆனால், விசு என்றவுடனேயே இயக்குநர்களுக்கு இப்படியான வசனங்களுக்கான நடிகர் என்றே தோன்றுயிருக்கிறது. ஆனால், விஜய் காந்த் நடிப்பில் அவர் இயக்கிய டௌரி கல்யாணம் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருமணப்   பந்தியில் இலைகளில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களெல்லாம் பணத் தாள்களாகவும் நாணயமாகவும் தென்படும். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனின் மனத் தாங்கலை இதைவிடத் தெளிவாக வசனங்களால்கூட வெளிப்படுத்திருக்க முடியாத அளவுக்கு நயமான காட்சி.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையில் உருவாக்கப்பட்ட நாடகங்களைப் போன்ற திரைப்படங்களைப் படைக்கவே தான் திரைப்படத் துறைக்கு வந்தோம் என்பதில் அவருக்கு இறுதிவரை எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. அந்தப் படங்களில் பல பெரும்பான்மையான ரசிகர்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைக் கவர்ந்து வெற்றியை வாரிக்குவித்ததே அவரது சாதனைச் சரித்திரம்.

ஞாயிறு, மார்ச் 15, 2020

தாராள பிரபு


சென்னையில் கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). அவரிடம் தம்பதியர் பலர் குழந்தையின்மை பிரச்சினைக்காக வருகிறார்கள். தகுந்த ‘ஸ்பெர்ம் டோனர்’ இல்லாமல் அவதிப்படும் அவர் டோனரைத் தேடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவைக் (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார் கண்ணதாசன். முதலில் டோனராக இருக்க மறுக்கும் பிரபு பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுக்குக் காதல் ஏற்படுகிறது. தான் டோனர் என்பதை நிதியிடன் சொல்லவா வேண்டாமா எனக் குழம்புகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபுவின் வாழ்வின் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதற்கு விடையாக உள்ளது தாராள பிரபு.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவருகிறது; புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால்தான் பயனுண்டு என்பதை உணர்த்தும் வகையிலான திரைக்கதை அமைந்திருக்கிறது. விக்கி டோனர் (2012) என்னும் இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழுக்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார். என்றபோதும், தமிழுக்குப் படம் சற்று அந்நியமாகத் தான் இருக்கிறது. விந்து தானம், மறு மணம், தத்தெடுப்பு எனப் பல விஷயங்களைப் படம் கையாண்டிருக்கிறது. ஆனால், இயன்றவரை அதைப் பிரச்சாரப்படுத்தாமல் இயல்பான கதையோட்டத்திலேயே தந்திருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. எல்லோருக்கும் குழந்தை தந்த ஒருவருக்குக் குழந்தை இல்லாத சூழல் அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்ற ஒருவரிக் கதையை ஒரு முழுநீளப் படமாகத் தரத் தேவையான அம்சங்களைக் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விந்தணு தானம் என்ற, சமூகம் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாத, அம்சத்தைப் படம் மையமாகக் கொண்டிருந்தாலும் அதை முகம்சுளிக்கச் செய்யாத வகையில் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார்கள்.  


நடிகர் ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்து விளையாட்டு வீரனாக, ஸ்போட்ர்ஸ் கோட்டாவில் வேலை தேடிவிட வேண்டும் என்ற யத்தனிப்புடன் செயல்படுபவராக நடித்திருக்கிறார். விந்தணு தானத்துக்காகத் தன்னைத் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகிவிலகி ஓடுவது, பின்னர் தனது கோச்சுக்குக் குழந்தை இல்லாததால் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து தான் விந்து தானம் தரச் சம்மதிப்பது, காதலிடம் உண்மையைச் சொல்வதா வேண்டாமா எனத் தவிப்பது என பல காட்சிகளில் உறுத்தல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

விவேக்குக்கு முக்கியமான படம் இது. நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதைச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் சற்று நெருடல். ஒரு பெரிய மருத்துவமனையை நடத்திவரும் அவர் ஒரே ஒரு டோனரை நம்பிச் செயல்படுவதும், எப்போதும் ஹரிஷை மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது நம்பும்படியாக இல்லை.  ஆர்.எஸ். சிவாஜியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இடம் அழகு.



தான்யா ஹோப் அழகாக இருக்கிறார் ஆனால் அழகுப் பதுமையாக மட்டும் பயன்பட்டிருக்கவில்லை. தான் விவாகரத்தானவள் என்பதைக் காதலனிடம் மிக இயல்பாகச் சொல்கிறார். தன்னால் குழந்தையைத் தர முடியாது என்பதை உணரும்போது வெடித்தழுகிறார்; குழந்தையைத் தத்தெடுக்கும் காட்சியில் இயல்பான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணியிசை சராசரி.   

குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலரையாவது இதைப் போன்ற படங்கள் சிந்திக்க வைத்தால் நலமாக இருக்கும். சாதி, மதம், வெட்டுக் குத்து எனத் தொடர்ந்து படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் மனித உறவுகளை முன்னிருத்தி, ஆரோக்கியமான அறிவியல் உத்தியின் சாதக அம்சங்களைத் தாங்கி வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்தை ரசிக்க முடிகிறது.

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

ஞாயிறு, மார்ச் 01, 2020

திரௌபதி: எட்டுத் திக்கும் வன்மம்


சிலம்ப வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது திரௌபதி.

இயக்குநர் மோகன் திரைக்கதையை ஒரு நோக்கத்துடன் அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நோக்கமே முதன்மை பெறுவதால் வழக்கமான திரைக்கதையின் கட்டுமானத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போலித் திருமணம், நாடகக் காதல் என சில அம்சங்களையும் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன் எனச் சில அம்சங்கங்களையும் எதிரெதிர் பாதையில் கொண்டுசெலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார். இந்தப் பயணத்தில் சாதிப் பெருமை என்னும் பழமைவாதக் கருத்தைத் திரைக்கதையில் மையமாக்கி அதற்கு ஊட்டச்சத்தான உணவை வழங்க முயன்றிருக்கிறார். என்றபோதும் அது சவலைக்குழந்தையாக வளர்ந்து நிற்கிறது. 


ஒரு சமூகத்தை மேம்படுத்த சினிமா எனும் சாதனத்தை பெரும்பான்மையோர் பயன்படுத்தி வரும் வேளையில் அதே சாதனத்தை சாதி எனும் பழமைவாதக் கருத்தைப் பரப்ப இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சக மனிதரை இழிவுபடுத்தும் காட்சிகளை வைப்பது குறித்து எந்தக் கிலேசமுமின்றி இயக்குநர் காட்சிகளைக் கையாண்டிருக்கிறார். நமது சாதியச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டைக் களைய பெரும்பங்கு வகிக்கும் காதல் எனும் இயல்பான உணர்வை முடிந்த அளவு கொச்சைப்படுத்தியுள்ளன திரைக்கதையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். படத்தில் நாயகனும் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் சொந்தத்திலேயே காதல்செய்தவர். 

படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பொறுப்பான கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற வசனங்களைப் போகிற போக்கில் உதிர்த்துச் செல்கின்றன. “இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லணும்” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “நாம எப்ப சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணமோ அப்பவே கார்ப்பரேட் டிசைட் பண்ணிட்டாங்க நாம எப்ப பிள்ளைப் பெத்துக்கணும்னு” என்கிறார் ஒரு மருத்துவர். இயக்குநர் பார்த்தறிந்த மருத்துவர் இப்படியான புரிதல்கொண்டவர்தான் போலும்.

பஞ்சாயத்துக் காட்சியில் பிரபாகனிடம் ”நீங்க ஏன் மாமா அவங்ககிட்ட பேசிட்டிருக்கீங்க” என்று சொல்லியபடி, வழக்கறிஞரையும் அரசியல்வாதியையும் பார்த்து சமூக சேவகியான திரௌபதி வெளிப்படுத்தும் உடல்மொழி சாதித் திமிரின் வெளிப்பாடு.  நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த திரௌபதியின் புரிதலும் வன்மமாக வெளிப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் கண்ணி வெடியைப் புதைத்துவைத்துள்ளதைப் போல் சாதி வன்மத்தைப் புதைத்துவைத்துள்ளது படம். 

கல்யாண வயதில் உள்ள பெண்களை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு வஞ்சகத்தால் சீரழிக்க முயல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க படம் முயல்கிறது. மணமகள் விருப்பமே இல்லாமல் பதிவுத் திருமணங்கள்  நடத்திவைகப்படுவதான பிம்பத்தை நிறுவ இயக்குநர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறார். எங்கோ ஓரிடத்தில் தவறாக நடந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஆரோக்கியமாகக் கையாளப்படும் காதல் திருமணம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என விஷயத்தை அப்படியே தலைகீழாக்க இயக்குநர் முயன்றுள்ளார். பல காட்சிகளில் வன்மத்தைக் கக்குகின்றன வசனங்கள். தணிக்கையில் சில வசங்களின் ஒலி முடக்கப்பட்டுள்ளது என்றபோதும் சில வன்மமான வசனங்களைத் தணிக்கதைத் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?

பரபரப்பான இடங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு கொலைகளைச் செய்துவிடுகிறாரே அது எப்படி? பெண் குழந்தைகள் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனும்போது, பெற்றோரின் பார்வையில்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எப்படி எழுப்ப இயலுகிறது? இப்படி அநேகக் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பைத் தாராளமாக வழங்குகிறார் இயக்குநர்.

நடிகர்கள் பலரது நடிப்பு ஏதோ ஒரு சுரத்தற்ற நாடகத்தைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று காட்சிகள் நகர்கின்றன. இயையமைப்பாளர் ஜுபினின் பின்னணியிசை பெரிய அளவில் உறுத்தவில்லை; அதே நேரத்தில் பெரிதாகக் கைகொடுக்கவும் இல்லை.  குக்குக்குக்குக்கூ எனும் பாடல் முணுமுணுக்கவைக்கிறது. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும் சராசரி ரகம்.  

பட்டறையில் வேலை பார்க்கும் படித்த வசதியான பெண்ணைக் காதலித்து மணமுடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என நம்பும் ஜேக்கைப் பார்த்து நாயகன் ”படிக்காதது உன் தப்பு” என்று பேசுகிறார். இப்படியான அபத்தமான வசங்களுக்கும் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமேயில்லை. 

”நான் அட்டகத்தி சார்” 

”எந்த மாதிரி வம்சத்துல பொறந்துட்டு எப்படிப் பேசுற”

”இந்த முறை டவுசரத் தான் அறுத்தேன் அடுத்த முறை அறுத்துருவேன்”

”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யார் கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” 

இவையெல்லாம் இந்தப் படத்தில் வெவ்வேறு காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள். சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய விஷ வித்துக்கள் போன்ற வசனங்களை தன் படத்தில் ஒலிக்க விடுவதில் இயக்குநருக்குப் பெருமிதம் இருக்கலாம்; ஆனால், மேம்பட்ட சமூகம் பற்றிய கனவு காணும் ஒரு பார்வையாளனை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. படத்தில் நாயகன் இரண்டு காட்சிகளில் மீசையை முறுக்குவார்.  முதலில் திரௌபதி, திலகாவின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என மிரட்டு இளைஞனின் டவுசரை அறுத்து அம்மணமாக்கும்போது. இரண்டாவது தன் மனைவி கருவுற்ற சேதி அறிந்தபோது. 

மூன்று மணி நேரம் தொடர்பில் இல்லாத தன் பெண்ணைப் பற்றி வரும் தகவலைச் சரிபார்க்காமல் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு தந்தை. தன் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்கிறாளே சரி பரவாயில்லை அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்ற பொறுமைகூட அவருக்கில்லை. சட்டென்று விஷம் குடித்து இறந்துபோகிறார் என்றால் இந்தச் சமூகம் என்ன மனநிலையில் உள்ளது? அப்படியா உன் சாதி உயர்ந்தது எனும் கேள்வியே எழுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டும் ஒருவன் குறித்து கணவனிடம் பேசப் பயந்து தந்தையிடம் ஓடிவருகிறார் ஒரு மனைவி. தனக்கே தெரியாமல் தன்னைப் பதிவுதிருமணம் செய்ததாக மிரட்டுகிறானாம் ஒருவன். அந்த மகளின் பிரச்சினையை மருமகனிடம் பேசும் துணிவு அந்தத் தந்தைக்கு இல்லை. கோடி கோடியாகப் பணம் கொடுத்துப் பிரச்சினையைச் சமாளித்தாராம் அவர். அழுதுகொண்டே நீதிமன்றத்தில் சொல்கிறார் அந்தத் தந்தை. நீங்கள் பார்த்துவைத்து திருமணம் உங்கள் சாதியில் ஒருவரைத் தான் மணமுடித்துவைத்துள்ளீர்கள். அந்த மருமகனிடம் உங்களால் பேசவே முடியவில்லை என்றால் இது என்னவிதமான உறவு? 
இயக்குநர் பெருமிதமாகக் கருதும் சமூகம் இப்படியான மனிதர்களைத் தான் உருவாக்கியுள்ளது என்பது காட்சிகளில் அம்பலமாகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளனுக்கு அந்தச் சமூகத்தின் மீது எப்படி நம்பிக்கை வரும்? இப்படியான ஒரு திரைப்படத்தைச் சமூகத்துக்கு வழங்கியதன் மூலம் இயக்குநர் பெருமை கொள்வதைப் போன்ற சிறுமை இந்தச் சமூகத்துக்கு வேறில்லை.  உருவாக்கரீதியான அமெச்சூர்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது; ஆனால், கருத்தியல்ரீதியாக விஷம் கக்கும் திரௌபதி கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல; புறக்கணிக்கப்பட வேண்டியவள்.

சனி, பிப்ரவரி 29, 2020

உறவைத் துளைத்த தோட்டா


பதினேழாம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில்,  2019 டிசம்பர் 15 அன்று கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட படம் எ சன், பிக் கெனெய்: அ பிஸ் என்பது இதன் அசல் தலைப்பு. பிரெஞ்சு நாட்டிலிருந்து 1956-ல் விடுதலை பெற்ற அரபு நாடான துனிசியாவில் 2011-ம் ஆண்டையொட்டிய பென் அலி காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகப் பொழுதில் இந்தப் படத்தின் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.  அடிமைமுறையை ஒழித்த முதல் அரேபிய நாடு துனிசியா; அதுதான் மகளிருக்கு முதல் வாக்களிக்கும் உரிமையைத் தந்த அரபு நாடு; முறைப்படியான தேர்தலை நடத்தியது அது. அதே நாட்டில்தான் திருமணம் கடந்த உறவுக்கெதிரான சட்டமும் கடுமையாக உள்ளது. திருமணம் கடந்த உறவு நிரூபணமானால் ஐந்தாண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டமும் அமலிலுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் மெஜி பசௌவ்வி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

துனிசியா, பிரான்ஸ், லெபனான், கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்தப் படம் அரேபிய, பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை எழுதி இயக்கியவர் மெஜி பசௌவ்வியின் முதல் படம் இது. படத்தின் திரைக்கதையில் மனித உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. உணர்வின் தளத்திலேயே படம் நகர்ந்துசெல்கிறது. அரசியல், சமூகம், மதம், தனிமனித உறவு, உணர்வு ஆகிய அம்சங்களை இணைத்தோடும் திரைக்கதையில் ஒரு படகு போல் ஏற்ற இறங்கங்களுடன் பயணம்செல்கிறது படம்.

ஃபேர்ஸ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலர். அவருடைய மனைவி மெரியெம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உயரிய பொறுப்பில் பணியாற்றுகிறார். மெரியெம் மனிதவளத் துறையின் இயக்குநராகப் பதவி உயர்த்தப்படுகிறார். அதைத் தெற்கு துனிசியாவில் ஓரிடத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி உற்சாகமாகக் கொண்டாடுகிறார். கொண்டாட்டம் முடிந்து தங்கள் பிரியத்துக்குரிய மகன் அஜீஸுடன் தங்களது சொகுசு காரில் திரும்புகிறார்கள். காட்சியிலும் பின்னணியிசையிலும் அவர்களது உற்சாகமான மனநிலையை உணர முடிகிறது. மகிழ்ச்சியான அந்தப் பொழுதில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்தும் தாக்குதலில் புறப்பட்டுவந்த தோட்டா ஒன்று காரைப் பதம் பார்க்கிறது. அது காரோடு போயிருந்தால் கவலை இல்லை. தங்கள் ஆசை மகனைத் துளைத்துவிட்டு ஓய்வுகொள்கிறது அந்தத் தோட்டா.


எல்லாமும் ஒரு நொடியில் மாறிவிடுகிறது. அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சட்டென்று பதங்கமாகிவிடுகிறது. அன்புப் புதல்வனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அடுத்த தோட்டா அங்கே காத்திருக்கிறது. இந்தத் தோட்டா எந்த உடம்பையும் துளைக்கவில்லை. ஆனால், மனங்களைத் துளைத்தெடுக்கிறது. அஜீஸின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கல்லீரலை மாற்றியாக வேண்டும் என்கிறார் மருத்துவர். அதற்காக மேற்கொண்ட டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிப்படுகிறது. இதுவரை தனது மகன் என்று நம்பிய மகன் தன் மகனல்ல எனும் உண்மை ஃபேர்ஸின் அடிவயிற்றைக் கலக்குகிறது.

அந்த உண்மை ஃபேர்ஸ், மெரியெம் இடையிலான அன்பையும் இணக்கத்தைம் கேள்விக்குறியாக்குகிறது. ஏதோவொரு ஆயுதத்தில் யாரோ ஒருவர் ஏவிய துப்பாக்கிக் குண்டு அந்தத் தம்பதியின் சுமுக உறவைத் துளைத்துவிடுகிறது. துனிசியா நாட்டின் சூழலை இந்தக் குடும்பம் பிரதிபலிக்கிறது. இப்படிப் பயங்கரவாதச் செயலால் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. படம் அரசியல் பிரச்சினையைத் தொட்டுச் செல்கிறது. ஆனால், அத்துடன் மட்டும் நிற்கவில்லை. பெண் விடுதலை, உறுப்பு மாற்று சிகிச்சை, இஸ்லாம் அங்கீகரிக்காத ஆண் பெண் உறவு குறித்த பல அம்சங்களையும் தனித்தனி அடுக்குகளாகப் படம் கொண்டுள்ளது.

முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் சமி பவ்ஜிலா, நஜிலா பென் அப்துல்லா இருவரும் ஒரு தம்பதியாகத் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தன் மகனைக் காப்பாற்ற முடியாமல் கையறு நிலையில் நிற்கும் வேதனையையும், கணவனது நடவடிக்கைகளில் சந்தேகம் தொனித்தபோதும் அதை முழுமையாகக் கேள்வி கேட்க முடியாத நிலையையும் முழுமையாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். அதே போல் சமி பவ்ஜிலாவும் தான் மகனாகக் கருதும் தன் மகன் தனக்குப் பிறந்தவனல்ல என்ற உண்மையை அறிந்தபிறகும் அவனை வளர்த்த பாசத்தால் அவனைக் காப்பாற்றத் துடிக்கும் துடிப்பைத் திறம்பட வெளிக்காட்டியுள்ளார். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மனிதர்களைக் கிஞ்சித்தும் இரக்கவுணர்வின்றி ஒரு கூட்டம்  பயன்படுத்தும் தன்மையைப் படம் சுட்டுகிறது. அரசியல், மதக் கொள்கைகள் எப்படித் தனிமனித வாழ்வைக் கூறுபோடுகின்றன என்பதை இந்தப் படம் மிகவும் நாகரிகமாகவும் அதே வேளையில் நுட்பமாகவும் மனிதநேய உணர்வு தொனிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியுள்ளது.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்