இந்த வலைப்பதிவில் தேடு

ஜோக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

திங்கள், ஜனவரி 09, 2017

தமிழ் சினிமா 2016: கவனம் ஈர்த்த இயக்குநர்கள்

ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை முழுமையான பொழுதுபோக்குப் படங்களே. திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்னும் உந்துதலில் மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் ஓரிரண்டு படங்களே ஒவ்வோர் ஆண்டும் தேறுகின்றன. இந்த ஆண்டும் இந்தப் போக்கிலிருந்து தமிழ்ப் படங்கள் வேறுபடவில்லை என்பதையே 2016-ல் வெளியான தமிழ்ப் படங்கள் நிரூபிக்கின்றன. கறார்த் தன்மையுடன் சொல்ல வேண்டுமானால் தமிழ்த் திரைப்படங்களில் இயக்குநர்களின் பிடி தொடர்ந்து தளர்ந்துவருகிறதோ என்னும் அச்சத்தையே இந்த ஆண்டில் வெளியான பல படங்கள் உருவாக்குகின்றன. சொல்லிக்கொள்ளத் தக்கவையாக, ‘விசாரணை', ‘ஜோக்கர்', ‘மாவீரன் கிட்டு' போன்ற சில படங்களையே சுட்ட முடிகிறது. 
இயக்குநர் வெற்றிமாறன்


சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘விசாரணை'யை இயக்கிய வெற்றி மாறன், தொடர்ந்து ஓரளவு நம்பிக்கைக்குரிய இயக்குநராக இருக்கிறார் என்பது முக்கியமான விஷயமாகப் படுகிறது. விசாரணை பல விழாக்களில் விருதுகளைப் பெற்றிருந்தபோதும், இந்தப் படம் கலாபூர்வமாகப் பல சறுக்கல்களைக் கொண்டிருந்தது என்று எழுந்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. ஆனாலும்கூட வெற்றி மாறன் உருப்படியான படத்தைத் தருவார் என்னும் நம்பிக்கை இன்னும் அடிவாங்காமலேயே உள்ளது என்பதை ஆரோக்கியமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது. 

இயக்குநர் சுசீந்திரன்
‘மாவீரன் கிட்டு’ படத்தை ஒரு தலித் படம் எனச் சொல்லலாம். பா. இரஞ்சித்தால் இயக்கப்பட்ட, தலித் படம் எனப் பெரும்பாலானோரால் கருதப்பட்ட ரஜினிகாந்த் நடித்த கபாலி என்னும் சராசரியான மசாலா சினிமா கவனிக்கப்பட்ட அளவுக்கு மாவீரன் கிட்டு கவனிக்கப்படாமைக்குக் காரணம், அது வெளியான நேரம் என்று நினைத்துக்கொள்வது நியாயமானதுதானா என்பது சந்தேகமே. ரஜினி என்னும் நடிகர் நடித்த ஒரு படத்துக்கு ஊடகங்களில் கிடைத்த முக்கியத்துவம் மாவீரன் கிட்டு போன்ற உருப்படியான முயற்சிக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
பார்த்திபனுடன் இயக்குநர் சுசீந்திரன்
எப்போதும் ஏதாவது ஒன்றை வித்தியாசமாகச் செய்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துவிட வேண்டும் என்ற தன்முனைப்புடனேயே திரையில் தோன்றும் பார்த்திபன் மாதிரியான ஒரு நடிகரின் வாயைக் கட்டிப் படம் எடுப்பது என்பது மூக்கால் உணவு உண்பதைப் போல. அதைத் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றால் சுசீந்திரனின் திறமையைச் சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. சாதியப் படங்களில் பொங்கி வழியும் சத்தமின்றி, ரத்தமின்றி ஒரு சமூகம் நிமிர்ந்தெழத் தன் உயிரைத் தந்த தியாகி ஒருவரின் தியாகத்தை ஆரவாரமின்றி அமர்த்தலாகச் சொன்ன விதத்தில் மாவீரன் கிட்டு மூலம் சுசீந்திரன் நிமிர்ந்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
ஜோக்கர்
ஜோக்கர் திரைப்படத்தைப் பொறுத்த அளவில் ராஜுமுருகன் இயக்கிய ‘குக்கூ’வை ஒப்பிடும்போது, ‘ஜோக்கர்’ சற்று மேம்பட்டிருந்தது. முழுக்க முழுக்க செயற்கைத் தன்மை கொண்ட படம் குக்கூ. ஆனால், ஜோக்கருக்கு அந்த விபத்து நேரவில்லை. அடித்தட்டு நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை அரசு நிர்வாகம் எப்படிப் பாதிக்கிறது என்பதை மனதில் பதியும் வகையில் படமாக்கியிருந்தார் ராஜுமுருகன் .பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் கதையின் பிரதான வேடங்களுக்கே சோமசுந்தரத்தையும் மு.ராமசாமியையும் பயன்படுத்தி யிருந்த தன்மை இயக்குநரின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டியது. எதைச் சொல்ல வேண்டுமோ அதை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லியிருந்த விதத்தில் ஜோக்கரைத் தந்த ராஜுமுருகனின் அடுத்த படைப்பைப் பொருட்படுத்தக்கதாகக் கருதலாம் என்னும் நம்பிக்கையை அளித்திருக்கிறது ஜோக்கர்.

‘காக்கா முட்டை’ மூலம் எதிர் பார்ப்பை உருவாக்கிய மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன. ‘குற்றமே தண்டனை’ படமாக்கப்பட்ட விதத்தில் வித்தியாசம் தெரிந்தது, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது முழுமையான திரைப்படமல்ல. திரைக்கதையில் ‘காக்கா முட்டை’யில் வெளிப்பட்டிருந்த நேர்த்தியை இதில் காண முடியவில்லை. ஆண்டவன் கட்டளை பொழுதுபோக்குத் திரைப்படமே. என்றபோதும் அதில் இடம்பெற்றிருந்த நீதிமன்றக் காட்சிகளில் தென்பட்ட இயல்புத்தன்மை மணிகண்டன் யாரென அடையாளம் காட்டியது. இந்த நீதிமன்றக் காட்சிகளில் மராட்டியப் படமான கோர்ட்டின் சாயலை உணர முடிந்தது. 

விஜய் சேதுபதியுடன் இயக்குநர மணிகண்டன்
‘சூது கவ்வும்’ படத்தின் வாயிலாகப் பலத்த கவனத்தை ஈர்த்திருந்த நலன் குமாரசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு ‘காதலும் கடந்து போகும்’ படம் வெளியானது. இது ஒரு மறு ஆக்கப்படம் என்பதால் அதில் இயக்குநருக்குப் பெரிய வேலையில்லை. மூலப் படத்தை அப்படியே தமிழில் தந்திருந்தார் என்பதைத் தவிர வேறு குறிப்பிட்டுச் சொல்ல அப்படத்தில் எதுவுமில்லை. அது ஒரு வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படம். அதில் இயக்குநருக்குரிய தனித்துவம் எதுவும் பளிச்சிடவில்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களின் மூலம் தொடர்ந்து முன்னேறிவந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’யும் இந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைச் சிறப்பான படம் என்று சொல்ல எந்த ஒரு தடயத்தையும் இப்படம் விட்டுச்செல்ல வில்லை. பெரும் பாய்ச்சல் எடுக்க விரும்பி, பாதியில் விழுந்தது போன்ற சித்திரத்தையே படம் தந்தது.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த் திரையில் பெண் இயக்குநர்கள் சரியான இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்னும் நிலைமையில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆண்டில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ அவருக்குக் கவுரமான ஓரிடத்தை அளித்திருக்கிறது. ஓரளவு கவனிக்கத்தக்க விதத்தில் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அவர் இப்படத்தை உருவாக்கியிருப்பதாகவே பரவலான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றைத் தவிர்த்து ‘உறியடி’, ‘ஒருநாள் கூத்து’, ‘மெட்ரோ’, ‘அப்பா’, ‘தர்மதுரை’ போன்ற படங்கள் வெளியான சமயத்தில் முணுமுணுப்புகள் எழுந்தன. தமிழில் முக்கிய இயக்குநராகக் கருதப்படும் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இவ்வளவு மோசமான படத்தை இனி பாலாவாலேயே உருவாக்க முடியாது என்பதையே இந்தப் படம் உணர்த்தியது. 

சற்றேறக்குறைய 200 படங்கள் தமிழில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன இதில் சில படங்களே மாற்றுப்பட முயற்சிகள், சில படங்களே வணிகரீதியிலும் பெரிய வெற்றிபெற்றிருக்கின்றன. இதுபோக எஞ்சிய நூற்றுக்கணக்கான படங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன? இது குறித்து அந்த இயக்குநர்கள் யோசிப்பது அவர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் துறைக்கும் நலம் பயக்கும்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்