இந்த வலைப்பதிவில் தேடு

நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 01, 2020

அன்புதான் உலக ஜோதி

இன்று சிவாஜி கணேசனின் பிறந்தநாள். அவரது நடிப்பின் நினைவாக அன்னையின் ஆணை’ திரைப்படத்தில் இடம்பெற்ற சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தை நினைவுகூரலாம். இந்தப் படத்தின் வசனம் கலைஞர் என்றே நினைத்திருந்தேன். ஆனால், படத்தின் வசனத்தை எழுதியிருப்பவர் முரசொலி மாறன். 

அதிகார வெறியில் அறிவிழந்த அசோகன், சாதாரண அசோகன் அல்லன், சாம்ராட் அசோகன். ஆகவே, போர் வேண்டாம் என்ற ஆலோசனைகளைப் புறந்தள்ளுகிறான். வெற்றி போதை தலைக்கேற கலிங்கப் போரில் ஈடுபடுகிறான். வெற்றியும் பெற்றுவிடுகிறான் அசோகன். ஆனால், அதற்காக அவன் கொடுத்த விலை எண்ணற்ற மனித உயிர்கள். போர்க்களக் காட்சிகள் அவனை உலுக்குகின்றன. மூதாட்டி ஒருத்தி காறி உமிழ்வது போல் கேள்வி கேட்கிறாள். அசோகனுக்கு உண்மை உறைக்கிறது. 

போர் வழியிலிருந்து விலகி அன்புவழியில் நடக்கத் தொடங்குகிறான். இந்த நாடகத்தில் அசோகனை விஞ்சி நிற்கிறார் நடிப்பில் சிவாஜி. 

நாடகக் காட்சியைக் காண இங்கே சொடுக்குங்கள் 


ஞாயிறு, மார்ச் 01, 2020

திரௌபதி: எட்டுத் திக்கும் வன்மம்


சிலம்ப வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது திரௌபதி.

இயக்குநர் மோகன் திரைக்கதையை ஒரு நோக்கத்துடன் அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நோக்கமே முதன்மை பெறுவதால் வழக்கமான திரைக்கதையின் கட்டுமானத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போலித் திருமணம், நாடகக் காதல் என சில அம்சங்களையும் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன் எனச் சில அம்சங்கங்களையும் எதிரெதிர் பாதையில் கொண்டுசெலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார். இந்தப் பயணத்தில் சாதிப் பெருமை என்னும் பழமைவாதக் கருத்தைத் திரைக்கதையில் மையமாக்கி அதற்கு ஊட்டச்சத்தான உணவை வழங்க முயன்றிருக்கிறார். என்றபோதும் அது சவலைக்குழந்தையாக வளர்ந்து நிற்கிறது. 


ஒரு சமூகத்தை மேம்படுத்த சினிமா எனும் சாதனத்தை பெரும்பான்மையோர் பயன்படுத்தி வரும் வேளையில் அதே சாதனத்தை சாதி எனும் பழமைவாதக் கருத்தைப் பரப்ப இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சக மனிதரை இழிவுபடுத்தும் காட்சிகளை வைப்பது குறித்து எந்தக் கிலேசமுமின்றி இயக்குநர் காட்சிகளைக் கையாண்டிருக்கிறார். நமது சாதியச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டைக் களைய பெரும்பங்கு வகிக்கும் காதல் எனும் இயல்பான உணர்வை முடிந்த அளவு கொச்சைப்படுத்தியுள்ளன திரைக்கதையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். படத்தில் நாயகனும் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் சொந்தத்திலேயே காதல்செய்தவர். 

படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பொறுப்பான கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற வசனங்களைப் போகிற போக்கில் உதிர்த்துச் செல்கின்றன. “இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லணும்” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “நாம எப்ப சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணமோ அப்பவே கார்ப்பரேட் டிசைட் பண்ணிட்டாங்க நாம எப்ப பிள்ளைப் பெத்துக்கணும்னு” என்கிறார் ஒரு மருத்துவர். இயக்குநர் பார்த்தறிந்த மருத்துவர் இப்படியான புரிதல்கொண்டவர்தான் போலும்.

பஞ்சாயத்துக் காட்சியில் பிரபாகனிடம் ”நீங்க ஏன் மாமா அவங்ககிட்ட பேசிட்டிருக்கீங்க” என்று சொல்லியபடி, வழக்கறிஞரையும் அரசியல்வாதியையும் பார்த்து சமூக சேவகியான திரௌபதி வெளிப்படுத்தும் உடல்மொழி சாதித் திமிரின் வெளிப்பாடு.  நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த திரௌபதியின் புரிதலும் வன்மமாக வெளிப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் கண்ணி வெடியைப் புதைத்துவைத்துள்ளதைப் போல் சாதி வன்மத்தைப் புதைத்துவைத்துள்ளது படம். 

கல்யாண வயதில் உள்ள பெண்களை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு வஞ்சகத்தால் சீரழிக்க முயல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க படம் முயல்கிறது. மணமகள் விருப்பமே இல்லாமல் பதிவுத் திருமணங்கள்  நடத்திவைகப்படுவதான பிம்பத்தை நிறுவ இயக்குநர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறார். எங்கோ ஓரிடத்தில் தவறாக நடந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஆரோக்கியமாகக் கையாளப்படும் காதல் திருமணம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என விஷயத்தை அப்படியே தலைகீழாக்க இயக்குநர் முயன்றுள்ளார். பல காட்சிகளில் வன்மத்தைக் கக்குகின்றன வசனங்கள். தணிக்கையில் சில வசங்களின் ஒலி முடக்கப்பட்டுள்ளது என்றபோதும் சில வன்மமான வசனங்களைத் தணிக்கதைத் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?

பரபரப்பான இடங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு கொலைகளைச் செய்துவிடுகிறாரே அது எப்படி? பெண் குழந்தைகள் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனும்போது, பெற்றோரின் பார்வையில்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எப்படி எழுப்ப இயலுகிறது? இப்படி அநேகக் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பைத் தாராளமாக வழங்குகிறார் இயக்குநர்.

நடிகர்கள் பலரது நடிப்பு ஏதோ ஒரு சுரத்தற்ற நாடகத்தைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று காட்சிகள் நகர்கின்றன. இயையமைப்பாளர் ஜுபினின் பின்னணியிசை பெரிய அளவில் உறுத்தவில்லை; அதே நேரத்தில் பெரிதாகக் கைகொடுக்கவும் இல்லை.  குக்குக்குக்குக்கூ எனும் பாடல் முணுமுணுக்கவைக்கிறது. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும் சராசரி ரகம்.  

பட்டறையில் வேலை பார்க்கும் படித்த வசதியான பெண்ணைக் காதலித்து மணமுடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என நம்பும் ஜேக்கைப் பார்த்து நாயகன் ”படிக்காதது உன் தப்பு” என்று பேசுகிறார். இப்படியான அபத்தமான வசங்களுக்கும் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமேயில்லை. 

”நான் அட்டகத்தி சார்” 

”எந்த மாதிரி வம்சத்துல பொறந்துட்டு எப்படிப் பேசுற”

”இந்த முறை டவுசரத் தான் அறுத்தேன் அடுத்த முறை அறுத்துருவேன்”

”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யார் கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” 

இவையெல்லாம் இந்தப் படத்தில் வெவ்வேறு காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள். சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய விஷ வித்துக்கள் போன்ற வசனங்களை தன் படத்தில் ஒலிக்க விடுவதில் இயக்குநருக்குப் பெருமிதம் இருக்கலாம்; ஆனால், மேம்பட்ட சமூகம் பற்றிய கனவு காணும் ஒரு பார்வையாளனை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. படத்தில் நாயகன் இரண்டு காட்சிகளில் மீசையை முறுக்குவார்.  முதலில் திரௌபதி, திலகாவின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என மிரட்டு இளைஞனின் டவுசரை அறுத்து அம்மணமாக்கும்போது. இரண்டாவது தன் மனைவி கருவுற்ற சேதி அறிந்தபோது. 

மூன்று மணி நேரம் தொடர்பில் இல்லாத தன் பெண்ணைப் பற்றி வரும் தகவலைச் சரிபார்க்காமல் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு தந்தை. தன் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்கிறாளே சரி பரவாயில்லை அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்ற பொறுமைகூட அவருக்கில்லை. சட்டென்று விஷம் குடித்து இறந்துபோகிறார் என்றால் இந்தச் சமூகம் என்ன மனநிலையில் உள்ளது? அப்படியா உன் சாதி உயர்ந்தது எனும் கேள்வியே எழுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டும் ஒருவன் குறித்து கணவனிடம் பேசப் பயந்து தந்தையிடம் ஓடிவருகிறார் ஒரு மனைவி. தனக்கே தெரியாமல் தன்னைப் பதிவுதிருமணம் செய்ததாக மிரட்டுகிறானாம் ஒருவன். அந்த மகளின் பிரச்சினையை மருமகனிடம் பேசும் துணிவு அந்தத் தந்தைக்கு இல்லை. கோடி கோடியாகப் பணம் கொடுத்துப் பிரச்சினையைச் சமாளித்தாராம் அவர். அழுதுகொண்டே நீதிமன்றத்தில் சொல்கிறார் அந்தத் தந்தை. நீங்கள் பார்த்துவைத்து திருமணம் உங்கள் சாதியில் ஒருவரைத் தான் மணமுடித்துவைத்துள்ளீர்கள். அந்த மருமகனிடம் உங்களால் பேசவே முடியவில்லை என்றால் இது என்னவிதமான உறவு? 
இயக்குநர் பெருமிதமாகக் கருதும் சமூகம் இப்படியான மனிதர்களைத் தான் உருவாக்கியுள்ளது என்பது காட்சிகளில் அம்பலமாகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளனுக்கு அந்தச் சமூகத்தின் மீது எப்படி நம்பிக்கை வரும்? இப்படியான ஒரு திரைப்படத்தைச் சமூகத்துக்கு வழங்கியதன் மூலம் இயக்குநர் பெருமை கொள்வதைப் போன்ற சிறுமை இந்தச் சமூகத்துக்கு வேறில்லை.  உருவாக்கரீதியான அமெச்சூர்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது; ஆனால், கருத்தியல்ரீதியாக விஷம் கக்கும் திரௌபதி கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல; புறக்கணிக்கப்பட வேண்டியவள்.

புதன், செப்டம்பர் 30, 2015

வேலி

டாலர் எனும் புதிருக்குள் சிக்கிய வாழ்க்கை



அந்த மாலைப்பொழுது கொஞ்சம் இறுக்கமானதாக அமைந்ததுகண்முன்னே  அமெரிக்கத் தம்பதி ஒன்றின் குடும்பச் சிக்கல் அரங்கேறிக்கொண்டிருந்தது. தீவிர மன உணர்வுகளைக் கிளறியபடி நகர்ந்துகொண்டிருந்ததுஅல்லயன்ஸ் பிரான்சேயில் கண்ட நாடகமான வேலிநவீன வாழ்வின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மனிதர்கள் தேசங்களின் எல்லையை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள்.ஆனால் அவர்களது மனதில் சொந்த தேசம் விதைத்த எண்ணங்களே பரிபூரணமாக நிரம்பிவழிகின்றன.தாங்கள் சென்ற நாட்டில் திடீரென ஒரு சிக்கல் ஏற்படும்போது நிலைதவறிவிடுகிறார்கள்உறவுகளுக்குள்ளேயே சிக்கல் முளைத்துவிடுகிறதுஇதற்கெல்லாம் மனிதர்களின் மனோபாவம் காரணமா,அவர்கள் சென்று வசித்துவரும் வெளிநாடு காரணமா இப்படிப் பலகேள்விகளை எழுப்புகிறது வேலி


எந்த நேரத்திலும் மனிதர்களை மனப்பிறழ்வுக்குள்ளாக்கிவிடும் சாத்தியங்களைக் கொண்ட நெருக்கடிகளைத் தாராளமாகத் தந்துகொண்டேயிருக்கிறது அந்த அமெரிக்க வாழ்க்கைஅப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துவருகிறான் ராஜன் தன் மனைவி ஜெயாவுடன்டாலர்களைக் குவிப்பதற்காக,படுக்கையறையின் ஒரு பகுதியில் தலையணை போல் எப்போதும் இடம்பிடித்துக் கொள்கிறது மடிக் கணினி. தன் ஒன்றரை வயதுக் குழந்தை கட்டிலிலிருந்து தவறி விழுந்து விபத்து நேர்ந்துவிடுவதாக ராஜன் கூறுகிறான்அதை அவனுடைய மனைவியும் நம்புகிறாள்குழந்தை சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க மருத்துவர்களது அறிக்கை சொல்கிறதுகுழந்தை வளர்க்கும் தகுதி ராஜனுக்கு இல்லை என்று அவர்களின் சட்டம் சொல்ல முற்படுகிறதுசராசரியான இந்தியத் தாயான ஜெயாவுக்குத் தங்கள் குழந்தை தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்னும் பதற்றம் தொற்றிக்கொள்கிறதுராஜனின் நெருங்கிய நண்பன் கோபால்அவனுடைய மனைவி ரேகா ஆகியோரின் உதவியை நாடுகிறார்கள்அவர்கள் ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் காந்தாவை இந்த வழக்குக்காக அமர்த்துகிறார்கள்.

நாடகத்தில் ஒரு புதிர் மெல்ல மெல்ல அவிழ்கிறதுஅது முழுவதுமாக அவிழ்ந்துகொள்ளும்போது நாடகம் நிறைவடைகிறது பார்வையாளனின் மனத்தில் வாழ்வு குறித்த வெறுமை சூழ்ந்துகொள்கிறது.வாழ்க்கையின் ஆதார நம்பிக்கைகளை மிக லாவகமாக ஆனால் தீவிரமாக அசைத்துப் பார்க்கிறது இந்த நாடகம்போலி ஆசாபாசத்துடன் நவநாகரிக உடையணிந்து நடமாடும் நவீன மனிதர்களை எள்ளி நகையாடுகிறது வேலிமனிதர்களின் அகத்தில் கரைபுரண்டு ஓடும் சாக்கடையின் துர்நாற்றத்தைபுறத்தில் போட்டுக்கொள்ளும் ஒப்பனையால் தவிர்க்க நினைக்கும் அறியாமையைக் கொடூரத்துடன் குத்திக்காட்டுகிறது நாடகம்.


பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் அவன் மீது அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என்கிறது பரிசுத்த வேதாகமம்தான் எப்படியிருந்தாலும் தன் குழந்தை ஊரார் மெச்சும் உத்தமனாக வளர வேண்டும் என்பதே பெற்றொரின் விழைவுஅதன் பொருட்டே அவர்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டிக்கிறார்கள்ஆனால் அது வரம்பை மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறதுஅப்படியான பொறுப்பில் அவர்கள் சிறிதளவு பிசகினாலும் சட்டம் தன் கடமையைக் கவனிக்க வந்துவிடுகிறதுஇது அமெரிக்காவின் சட்டம்ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைச் சட்டம் கண்காணிக்கத் தொடங்கினால் அங்கே உணர்வுக்கு வேலையில்லைஅமெரிக்க சட்டத்தின் நோக்கம் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதல்ல தனிமனிதனின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே.

ஐந்து கதாபாத்திரங்கள், ஒன்றரை வயதுக் குழந்தை அப்பு உள்பட காட்டப்படாத ஓரிரு கதாபாத்திரங்கள்,டிரேயில் ஒரு தண்ணீர் ஜாடிஇரண்டு டம்ளர்கள்சில கோப்புகள்லேடிஸ் பேக்ஜெண்ட்ஸ் பேக்ஒரு சீப்பு,ஒரு மொபைல்ஒரு பேனாஒரு டைரிஅநேகமாக இவைதான் அரங்கத்தில் இடம்பெற்றிருந்தனஆனால் பார்வையாளன் கண்முன்னே அமெரிக்காவைஅங்கே ஒரு தம்பதி எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளைசட்டச் சிக்கல்களைத் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்இதைச் சாத்தியப்படுத்தியதில் நாடக இயக்குநரின் பண்பட்ட இயக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகிறதுநாடகத்தின் பேசுபொருளை மிகத் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் சித்தரித்திருக்கிறது நாடகம்ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த வேடத்துக்கு ஏற்றபடி மிக பாந்தமாகப் பொருத்தியிருக்கிறதுஅது மிகவும் தத்ரூபமாக அமைந்திருப்பதால் தான் பார்வையாளனால் அந்த வழக்கறிஞர் பாத்திரத்துடன் ஒன்றவே முடியவில்லை.அது நாடகத்தின் சிருஷ்டியில் நேர்ந்திருக்கும் ரஸவாதம்.


கணவனுக்குப் பயந்து அவனுக்கு அடங்கியே நடந்துபழகிய ஜெயாவின் உடல்மொழியிலேயே சதா ஒரு பயம் தென்படுகிறதுதயக்கத்தின் வேர் அவளுடைய நடையையே பாதித்திருக்கிறதுஆனால் அவள் குழந்தைக்குக் கணவனால் ஆபத்து என்று தெரிந்தபோது அவளிடம் வெளிப்படும் ஆங்காரம் அவளிடம் குடிகொண்டிருக்கும் இந்திய தாய் மனத்தை வெளிக்கொண்டுவந்துவிடுகிறதுசிறுவயதில் தந்தையின் கடுமையான தண்டனைகளைப் பெற்று வளர்ந்திருந்த ராஜன்அவனுக்கும் ரேகாவுக்குமான வெளியில் சொல்ல முடியாத உறவுவேலையின் நெருக்கடி ஆகியவற்றால் எப்போதும் தீராத மனக் குழப்பத்துடனேயே இருக்கிறான்அதிலிருந்து தப்ப தற்காலிகத் தீர்வாகக் குடியை நாடுகிறான்ரேகா ஒரு புதுமைப்பெண்அவள் மென்மையானவள்தான்ஆனால் அது சுரண்டப்படும்போது அவள் கொதித்தெழுகிறாள்எந்த எல்லைக்கும் சென்று தன் கோபத்தைக் காட்டுகிறாள்ராஜன் மீது அவளுக்கிருப்பது சாதாரண பழிவாங்கும் உணர்வல்ல.அது ஆண்களின் கயமைத் தனத்தின்மீது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடு.அதனால் தான் அவளால் ஜெயாவுக்கு இரக்கப்பட முடிகிறதுஇந்த நாடகத்தில் அந்த கோபால் பாரதி சுட்டும் ஒரு வேடிக்கை மனிதன் அவ்வளவேஅவனது அறியாமை அவனைப் பாதுகாத்துக்கொள்கிறது.குழந்தை இல்லை என்னும் ஏக்கம் தத்து எடுக்க விரும்பாத மனைவி என அவனது வாழ்க்கை நித்ய கண்டம் பூரண ஆயுசு ரகம் தான்

மனித வாழ்வைப் புரட்டிப் போட்ட நவீன சாதனமென மொபைலைச் சொல்லலாம்நவீன வாழ்வில் செய்திகளும்சம்பவங்களும் உடனுக்குடன் பரிமாறப்படுகின்ன. தீர்வுக்கான முயற்சியாக இவைஅடையாளம் காணப்பட்டாலும் மன அழுத்தத்தை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் மொபைலுக்கு உள்ள பங்கை எளிதில் புறந்தள்ள முடியாதுஇந்த நாடகம் அதை நுட்பமாகச் சித்தரித்திருக்கிறதுஜெயா தன் தாயுடன் மொபைலில் மேற்கொள்ளும் உரையாடலில் தொடங்கும் நாடகம் ராஜன் வழக்கறிஞர் காந்தாவுடன் மொபைலில் வாக்குமூலம் தருவதாகச் சொல்வதுடன் நிறைவடைகிறதுஒரு திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து நாடகம் தரும் அனுபவம் முற்றிலும் வேறுபடுகிறதுநாடகத்தின் அனுபவம் மனதில் அடியாழம்வரை ஊடுருவுகிறதுதீவிர நாடகமான வேலி மனத்தில் வெவ்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறதுவாழ்வு தொடர்பான நமது புரிதலை வளப்படுத்த உதவுகிறது.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகம் என்னும் ஒரு கலையின் மகத்துவத்தை நம்மிடையே புரியவைத்து விடைபெறுகிறது இந்த வேலி

வங்காள நாடகம் பலோக்
எழுதியவர் :சுதிப்தா பாமிக்

நடிகர்கள்:
ராஜீவ் ஆனந்த் - ராஜன்
பரீன் அஸ்லம் - ஜெயா
அமல் -கோபால்
டெல்பின் ராஜேந்திரன் - ரேகா
விலாசினி - காந்தா லால்வாணி

ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் ஒளி அமைப்பு : சுனிபா பாசு.

மேடை நிர்வாகம் : மணிபாலன் , மனோ , பார்த்திபன்

தமிழ் மொழிபெயர்ப்பு & தயாரிப்பு : அம்ஷன் குமார்
இயக்கம் : பிரணாப் பாசு

இந்நாடகம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இந்தக் கட்டுரையின் சுருக்கம் தி இந்து நாளிதழில் வெளியானது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்