இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஏப்ரல் 29, 2020

நிச்சலனம்: எல்லாம் அல்லது எதுவுமில்லை


உயிரோடு இருப்பவர்கள் சொன்னாலே பல புத்தகங்களை வாசிக்க மாட்டோம். ஆனால், இறந்துவிட்ட எழுத்தாளர் ஒருவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்தார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இறந்துபோனவர் எப்படிப் பரிந்துரைக்க முடியுமென. ஆனால், நான் சொல்வது உண்மைதான் எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைந்த பின்னர் அவருக்கான அஞ்சலிக் குறிப்பை (இருக்கும்போது ஒருவருக்கு அஞ்சலிக் குறிப்பெழுத முடியுமா என்ன?) எழுதியதற்காக காலச்சுவடு பதிப்பகம் எனக்கொரு நூலை அனுப்பிவைத்தது. அந்தப் புத்தகத்தை எனக்கு நஞ்சுண்டன் பரிந்துரைத்தார் என்பதை இப்போது நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பொதுவாக, பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களையே அலமாரியில் வைத்துவிட்டு வாய்ப்பு வரும்போது படித்துக்கொள்ளலாம் என முடிவுசெய்வதுதான் எனது பழக்கம். இப்படிப் பல புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. சில புத்தகங்களை ஐம்பது அறுபது பக்கங்கள் வாசித்துவிட்டு அப்படியே மூடிவைத்துவிடுவேன். வாசிப்பதற்கு, புத்தகமும் நேரமும் இருந்தால் மட்டும் போதாது, ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். மனநிலை வாய்க்காதபோது எவ்வளவு சிறப்பான புத்தகம் கிடைத்தாலும் வாசிக்க இயலாது என்பதுதான் எனது அனுபவம். 

காலச்சுவடு எனக்குப் புத்தகம் அனுப்பியிருந்தது என்று சொன்னேனே ஒழிய அது என்ன புத்தகம் என்று இன்னும் சொல்லவில்லையே. அந்தப் புத்தகம் நிச்சலனம். அது ஒரு துருக்கிய நாவல். அகமத் ஹம்தி தன்பினார் என்பவர் எழுதியது. 20ஆம் நூற்றாண்டின் துருக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் இவர் என ஓரான் பாமுக் குறிப்பிட்டுள்ளார். அவர் டிரையாலஜியாக எழுதிய நாவலில் இது இரண்டாவதாக வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் துருக்கியில் 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நாவல் தீவிரமான மொழிநடையில் அமைந்திருக்கிறது. துருக்கியின் கலை, அரசியல், பண்பாடு, இசை, வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் அலசிச் செல்கிறார் நாவலாசிரியர். இஸ்தான்புல், அனடோலியா எனப் பல இடங்களுக்கும் நாவல் பயணப்படுகிறது. நாவல் முதலில் துருக்கியில்  நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அங்குள்ள நாளிதழின் தரத்தை நமது நாட்டின் நாளிதழ்களின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் பெருமூச்சுதான் விட இயலும். 


பொதுவாக, ஒரு நாவலையோ புத்தகத்தை வாசிக்க ஒரு தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதலை நண்பர் ஒருவர் தரலாம், இல்லையெனில் எங்கோ வாசிக்கும் ஏதோவொரு வரியில் குறிப்பிடத்தக்க தூண்டுதல் கிடைத்துவிடலாம். அப்படிக் கிடைத்தபோது அதை நாம் வாசிக்கத் தொடங்குவோம். நிச்சலனத்தைப் பொறுத்தவரை எனக்கு நஞ்சுண்டனைத் தவிர யாரும் பரிந்துரைக்கவில்லை. அவருடைய பரிந்துரையும் அது ஒரு வகையான மாய எண்ணம்தானே. இப்படியெல்லாம் எதையாவது நினைத்து மனம் மகிழ்ந்துகொள்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும். 

கரோனா காலத்தின் முதல் ஊரடங்கைத் தொடர்ந்து திரைப்படங்களாகப் பார்த்துக் கழித்தேன். பார்க்க வேண்டிய பல படங்களைப் பார்த்து முடித்தேன். அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். இந்தப் பதிவில் நிச்சலன குறித்து மட்டும் எழுத வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் அதற்குத் தாவுகிறேன். இப்படியெல்லாம் நமக்கு நாமே எதையாவது கட்டுப்பாடுகளை விதித்துத்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். இது ஒருவகையில் அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும். இதுதானே நிலைமை? 

எனது வாசிப்பு என்பது மிகவும் சுணக்கம் கொண்டது. நாவலின் பக்கங்களைக் கொண்டு ஒருநாளுக்கு எத்தனை பக்கம் படித்தால் அதை எத்தனை நாளில் முடிக்கலாம் என முதலில் திட்டமிடுவேன். அதன்படி சில நாள்கள் படித்தும் முடிப்பேன். அதன் பின்னர் அந்தத் திட்டத்துக்கு ஏதோ ஒரு நோவு வந்துவிடும். நாவலைக் கசந்த காதல் போல் தள்ளிவைத்துவிடுவேன். மீண்டும் அந்தக் காதல் துளிர்க்குமோ துளிர்க்காதோ அது காலத்துக்குத்தான் வெளிச்சம். 

அகமத் ஹம்தி தன்பினார்
நிச்சலனம் நாவல் 424 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு 40 பக்கம் வீதம் வாசித்தால் சுமார் பதினோரு நாளில் முடித்துவிடலாம் என ஒரு கணக்குப் போட்டேன். எனது கணக்கில் பிழை இருக்காது எனது வாசிப்பில்தான் பிழை இருக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருப்பதை நினைவுகூர்ந்து நீங்கள் இதை எப்படி வாசித்திருப்பான் எனச் சந்தேகப்படாதீர்கள். எப்போதும் ஒருவன் சோம்பேறியாக இருக்க மாட்டான். சிலவேளை அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு சுறுசுறுப்புப் படகு வந்து அவனைக் கரை சேர்த்துவிடும். அப்படியான படகு எனக்கு நிச்சலனம் நாவல் விஷயத்தில் நடந்தேறியது. மிகவும் ஆச்சரியகரமான வகையில் 2020 ஏப்ரல் 18 அன்று வாசிக்கத் தொடங்கி ஏப்ரல் 27 அன்றிரவில் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். எனக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படி என்னை வாசிக்க வைத்தது நாவலின் நடை. ஆகாய விமானம் பரந்த வெளியில் தடம்பிறழாமல் செல்வது போன்றதொரு நடையில் நாவல் நகர்த்தப்பட்டிருந்தது. 

வாழ்க்கைமீது உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகளும் வாழ்க்கை குறித்து உங்களுக்கு அநேக சிந்தனைகளும் இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நிச்சலனத்தை வாசிக்க வேண்டும். அது தரும் இலக்கிய சுகம் இப்படி அப்படியென்றில்லை அது ஒரு பரம சுகம். கதை என்று பார்த்தால் வெறும் காதல் கதைதான். என்ன வெறும் காதல் என்கிறான் மரமண்டைப்பயல் என நீங்கள் எனைத் திட்டக் கூடும். காதலை வெறும் காதல் என்பதால் எனக்குக் காதல் மீது வெறுப்பு என்று கருதிக்கொள்ளாதீர்கள். அது சும்மா வெறும் நடிப்பு. ஒவ்வொரு முட்டாளுக்குள்ளும் ஒரு ‘அறிவுஜீவி’ முளைவிடத் துடிக்கத்தானே செய்வான். அவனது செயல்பாடுகள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தானே இருக்கும். அப்படி ஒரு அசட்டுத்தனத்தில் வெளிப்பட்டதுதான் அந்த வெறும் காதல். 

மும்தாஜ் எனும் இளைஞனின் காதல்தான் நாவலின் நடு நரம்பு. அதை அடிப்படையாகக் கொண்டு நாவல் அங்குமிங்கும் சென்று வருகிறது. நான்கு பாகங்களைக் கொண்ட நாவலில் முதல் பாகம் இக்ஸான், இரண்டாம் பாகம் நூரன், மூன்றாம் பாகம் சூயத், நான்காம் பாகம் மும்தாஜ். நான்கு பாகங்களில் இரண்டாம் பாகமான நூரன் அதிகப் பக்கங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நூரன் தான் மும்தாஜின் காதலி. தன் வாழ்வின் பல சோகங்களை பால்யம் முதலே அனுபவித்துவந்த மும்தாஜின் வாழ்க்கையில் அவனை அவனது இடர்பாடுகளிலிருந்து கைதூக்க வந்தவள் நூரன் என்று நம்பினான் மும்தாஜ். ஆனால் அவள் அவனுக்குத் துக்கத்தையே பரிசளித்துச் சென்றுவிட்டாள். நூரனுடன் மும்தாஜ் படகில் இரவு பகல் என்று பாராமல் சுற்றியிருக்கிறான். அந்தத் தேவதையுடன் திருமணத்துக்கான நாளை எல்லாம் குறித்துவிட்டான். எல்லாவற்றையும் ஒரு மரணம் வந்து அழித்துவிட்டது. அதுவும் ஒரு தற்கொலை. நூரனோ மும்தாஜோ இறந்திவிட்டிருந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால், நூரனை எப்போதோ காதலித்திருந்த ஒருவன் இறந்து இவர்கள் காதலை நிறைவேறாத ஒன்றாக மாற்றிவிட்டான். 

அகமத் ஹம்தி தன்பினார்

தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டிருந்த நூரனுக்கு மும்தாஜ் எல்லாமுமாக இருந்தான். அவனைக் கைபிடிக்கலாம் என்றிருந்தபோது அவளுடைய கணவன் திரும்பிவந்து அவளுடைய காதலின் திசையை மாற்றிவிட்டான். நிறைவேறாத காதலின காவியச் சோகம் இந்த நாவலின் பக்கங்களில் எல்லாம் நிரம்பிவழிகிறது. ஆனால், அது மாத்திரமே நாவலா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். துருக்கி நாட்டின் வரலாறு ஒட்டாமன் பேரரசின் சரித்திரம், அந்த நாட்டின் நவீன வாழ்க்கை, பழம்பெருமை என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார் தன்பினார். 

தனி மனிதரின் அக உணர்வுகளையும் புறச் சூழல்களையும் ஒருசேர எடுத்துவைத்துக்கொண்டே போகிறார். துருக்கிய இஸ்லாம் வாழ்வின் பல பக்கங்களைத் திறந்துகாட்டுகிறார். அதன் இசை, தத்துவம் என வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துருக்கிய பண்பாட்டின் விதைகளைத் தூவிச் செல்கிறார் தன்பினார். இந்த நாவலின்வழியே இசைபட வாழும் ஒரு பண்பாடு வாய்க்கப்பெற்ற நாடாக துருக்கி துலக்கம் கொள்கிறது.  இரண்டாம் உலகப் போர் மூளுமா மூளாதா என கேள்விகள் பல்கிப் பெருகிய காலகட்டத்தில் தொடங்கும் நாவல் நிறைவுறும் வேளையில் இரண்டாம் உலகப் போர் மூண்டுவிடுவதான அறிவிப்பு வருகிறது. 

அறிவுப்பூர்வமான வாழ்வை வாழும் மனிதனின் உணர்வுபூர்வ காதல் வழியே ஒரு நாட்டின் வரலாற்றைக் குழைத்து இலக்கிய ருசியுடன் அகமத் ஹம்தி தன்பினார் படைத்திருக்கும் ரசனையான விருந்து நிச்சலனம். ஆங்கிலத்தில் இந்த நாவல் A mind at piece என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துருக்கிய மொழியில் இதன் தலைப்பு ஹோஸோர் (Huzur). தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கிறார் தி.அ.ஸ்ரீனிவாசன். நாவல் முழுவதும் ஒற்றுப்பிழைகள் ஏராளம் காணப்படுகின்றன. நஞ்சுண்டன் பரிந்துரைத்த நாவல் ஆனால் அவரால் சகித்துக்கொள்ள இயலாத ஒற்றுப்பிழைகளுடன் வாசிக்க நேர்ந்தது நகைமுரண்தான். 

நிச்சலனம் 
அகமத் ஹம்தி தன்பினார் 
தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன் 
வெளியீடு:  காலச்சுவடு
பக்கங்கள்: 424
விலை ரூ. 375 
தொடர்புக்கு: 04652278525

1 கருத்து:

  1. ஒரு புத்தகத்துக்கு இப்படியும் விமர்சனம் எழுத முடியும் என்பதை இந்த நிச்சலனம் புத்தக விமர்சனம் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
    விமர்சனம் என்பது கடமையல்ல, கடன் அல்ல, அது படைப்பாளிக்கும், படைப்புக்கும் நியாயம் செய்வது என்பதை விமர்சகர் திரு செல்லப்பா நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
    வாசிப்பு என்பது தவம் என்கிறபோது இந்த புத்தக விமர்சனத்தை வாசிப்பது சுகானுபவமாக அமைகிறது.
    இந்த விமர்சனத்தை வாசிக்கிறபோது, என்னையும் வாசியேன் என்று புத்தகம் சொல்வதாகவே உணர்கிறேன்.
    இப்படிப்பட்ட படைப்பை வெளியிட்ட காலச்சுவடுகள் பதிப்பகமும், விமர்சனம் எழுதிய திரு செல்லப்பாவும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
    படைப்பாளி தன்பினார் இருந்தால், நிச்சயமாய் கொண்டாடுவார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு