சிலம்ப வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது திரௌபதி.
இயக்குநர் மோகன் திரைக்கதையை ஒரு நோக்கத்துடன் அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நோக்கமே முதன்மை பெறுவதால் வழக்கமான திரைக்கதையின் கட்டுமானத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போலித் திருமணம், நாடகக் காதல் என சில அம்சங்களையும் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன் எனச் சில அம்சங்கங்களையும் எதிரெதிர் பாதையில் கொண்டுசெலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார். இந்தப் பயணத்தில் சாதிப் பெருமை என்னும் பழமைவாதக் கருத்தைத் திரைக்கதையில் மையமாக்கி அதற்கு ஊட்டச்சத்தான உணவை வழங்க முயன்றிருக்கிறார். என்றபோதும் அது சவலைக்குழந்தையாக வளர்ந்து நிற்கிறது.
ஒரு சமூகத்தை மேம்படுத்த சினிமா எனும் சாதனத்தை பெரும்பான்மையோர் பயன்படுத்தி வரும் வேளையில் அதே சாதனத்தை சாதி எனும் பழமைவாதக் கருத்தைப் பரப்ப இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சக மனிதரை இழிவுபடுத்தும் காட்சிகளை வைப்பது குறித்து எந்தக் கிலேசமுமின்றி இயக்குநர் காட்சிகளைக் கையாண்டிருக்கிறார். நமது சாதியச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டைக் களைய பெரும்பங்கு வகிக்கும் காதல் எனும் இயல்பான உணர்வை முடிந்த அளவு கொச்சைப்படுத்தியுள்ளன திரைக்கதையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். படத்தில் நாயகனும் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் சொந்தத்திலேயே காதல்செய்தவர்.
படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பொறுப்பான கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற வசனங்களைப் போகிற போக்கில் உதிர்த்துச் செல்கின்றன. “இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லணும்” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “நாம எப்ப சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணமோ அப்பவே கார்ப்பரேட் டிசைட் பண்ணிட்டாங்க நாம எப்ப பிள்ளைப் பெத்துக்கணும்னு” என்கிறார் ஒரு மருத்துவர். இயக்குநர் பார்த்தறிந்த மருத்துவர் இப்படியான புரிதல்கொண்டவர்தான் போலும்.
பஞ்சாயத்துக் காட்சியில் பிரபாகனிடம் ”நீங்க ஏன் மாமா அவங்ககிட்ட பேசிட்டிருக்கீங்க” என்று சொல்லியபடி, வழக்கறிஞரையும் அரசியல்வாதியையும் பார்த்து சமூக சேவகியான திரௌபதி வெளிப்படுத்தும் உடல்மொழி சாதித் திமிரின் வெளிப்பாடு. நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த திரௌபதியின் புரிதலும் வன்மமாக வெளிப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் கண்ணி வெடியைப் புதைத்துவைத்துள்ளதைப் போல் சாதி வன்மத்தைப் புதைத்துவைத்துள்ளது படம்.
கல்யாண வயதில் உள்ள பெண்களை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு வஞ்சகத்தால் சீரழிக்க முயல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க படம் முயல்கிறது. மணமகள் விருப்பமே இல்லாமல் பதிவுத் திருமணங்கள் நடத்திவைகப்படுவதான பிம்பத்தை நிறுவ இயக்குநர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறார். எங்கோ ஓரிடத்தில் தவறாக நடந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஆரோக்கியமாகக் கையாளப்படும் காதல் திருமணம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என விஷயத்தை அப்படியே தலைகீழாக்க இயக்குநர் முயன்றுள்ளார். பல காட்சிகளில் வன்மத்தைக் கக்குகின்றன வசனங்கள். தணிக்கையில் சில வசங்களின் ஒலி முடக்கப்பட்டுள்ளது என்றபோதும் சில வன்மமான வசனங்களைத் தணிக்கதைத் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?
பரபரப்பான இடங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு கொலைகளைச் செய்துவிடுகிறாரே அது எப்படி? பெண் குழந்தைகள் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனும்போது, பெற்றோரின் பார்வையில்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எப்படி எழுப்ப இயலுகிறது? இப்படி அநேகக் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பைத் தாராளமாக வழங்குகிறார் இயக்குநர்.
நடிகர்கள் பலரது நடிப்பு ஏதோ ஒரு சுரத்தற்ற நாடகத்தைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று காட்சிகள் நகர்கின்றன. இயையமைப்பாளர் ஜுபினின் பின்னணியிசை பெரிய அளவில் உறுத்தவில்லை; அதே நேரத்தில் பெரிதாகக் கைகொடுக்கவும் இல்லை. குக்குக்குக்குக்கூ எனும் பாடல் முணுமுணுக்கவைக்கிறது. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும் சராசரி ரகம்.
பட்டறையில் வேலை பார்க்கும் படித்த வசதியான பெண்ணைக் காதலித்து மணமுடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என நம்பும் ஜேக்கைப் பார்த்து நாயகன் ”படிக்காதது உன் தப்பு” என்று பேசுகிறார். இப்படியான அபத்தமான வசங்களுக்கும் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமேயில்லை.
”நான் அட்டகத்தி சார்”
”எந்த மாதிரி வம்சத்துல பொறந்துட்டு எப்படிப் பேசுற”
”இந்த முறை டவுசரத் தான் அறுத்தேன் அடுத்த முறை அறுத்துருவேன்”
”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யார் கைய வச்சாலும் கைய வெட்டுவோம்”
இவையெல்லாம் இந்தப் படத்தில் வெவ்வேறு காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள். சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய விஷ வித்துக்கள் போன்ற வசனங்களை தன் படத்தில் ஒலிக்க விடுவதில் இயக்குநருக்குப் பெருமிதம் இருக்கலாம்; ஆனால், மேம்பட்ட சமூகம் பற்றிய கனவு காணும் ஒரு பார்வையாளனை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. படத்தில் நாயகன் இரண்டு காட்சிகளில் மீசையை முறுக்குவார். முதலில் திரௌபதி, திலகாவின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என மிரட்டு இளைஞனின் டவுசரை அறுத்து அம்மணமாக்கும்போது. இரண்டாவது தன் மனைவி கருவுற்ற சேதி அறிந்தபோது.
மூன்று மணி நேரம் தொடர்பில் இல்லாத தன் பெண்ணைப் பற்றி வரும் தகவலைச் சரிபார்க்காமல் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு தந்தை. தன் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்கிறாளே சரி பரவாயில்லை அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்ற பொறுமைகூட அவருக்கில்லை. சட்டென்று விஷம் குடித்து இறந்துபோகிறார் என்றால் இந்தச் சமூகம் என்ன மனநிலையில் உள்ளது? அப்படியா உன் சாதி உயர்ந்தது எனும் கேள்வியே எழுகிறது.
திருமணத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டும் ஒருவன் குறித்து கணவனிடம் பேசப் பயந்து தந்தையிடம் ஓடிவருகிறார் ஒரு மனைவி. தனக்கே தெரியாமல் தன்னைப் பதிவுதிருமணம் செய்ததாக மிரட்டுகிறானாம் ஒருவன். அந்த மகளின் பிரச்சினையை மருமகனிடம் பேசும் துணிவு அந்தத் தந்தைக்கு இல்லை. கோடி கோடியாகப் பணம் கொடுத்துப் பிரச்சினையைச் சமாளித்தாராம் அவர். அழுதுகொண்டே நீதிமன்றத்தில் சொல்கிறார் அந்தத் தந்தை. நீங்கள் பார்த்துவைத்து திருமணம் உங்கள் சாதியில் ஒருவரைத் தான் மணமுடித்துவைத்துள்ளீர்கள். அந்த மருமகனிடம் உங்களால் பேசவே முடியவில்லை என்றால் இது என்னவிதமான உறவு?
இயக்குநர் பெருமிதமாகக் கருதும் சமூகம் இப்படியான மனிதர்களைத் தான் உருவாக்கியுள்ளது என்பது காட்சிகளில் அம்பலமாகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளனுக்கு அந்தச் சமூகத்தின் மீது எப்படி நம்பிக்கை வரும்? இப்படியான ஒரு திரைப்படத்தைச் சமூகத்துக்கு வழங்கியதன் மூலம் இயக்குநர் பெருமை கொள்வதைப் போன்ற சிறுமை இந்தச் சமூகத்துக்கு வேறில்லை. உருவாக்கரீதியான அமெச்சூர்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது; ஆனால், கருத்தியல்ரீதியாக விஷம் கக்கும் திரௌபதி கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல; புறக்கணிக்கப்பட வேண்டியவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக