சென்னையில் கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). அவரிடம் தம்பதியர் பலர் குழந்தையின்மை பிரச்சினைக்காக வருகிறார்கள். தகுந்த ‘ஸ்பெர்ம் டோனர்’ இல்லாமல் அவதிப்படும் அவர் டோனரைத் தேடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவைக் (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார் கண்ணதாசன். முதலில் டோனராக இருக்க மறுக்கும் பிரபு பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுக்குக் காதல் ஏற்படுகிறது. தான் டோனர் என்பதை நிதியிடன் சொல்லவா வேண்டாமா எனக் குழம்புகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபுவின் வாழ்வின் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதற்கு விடையாக உள்ளது தாராள பிரபு.
அறிவியல் எவ்வளவோ முன்னேறிவருகிறது; புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால்தான் பயனுண்டு என்பதை உணர்த்தும் வகையிலான திரைக்கதை அமைந்திருக்கிறது. விக்கி டோனர் (2012) என்னும் இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழுக்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார். என்றபோதும், தமிழுக்குப் படம் சற்று அந்நியமாகத் தான் இருக்கிறது. விந்து தானம், மறு மணம், தத்தெடுப்பு எனப் பல விஷயங்களைப் படம் கையாண்டிருக்கிறது. ஆனால், இயன்றவரை அதைப் பிரச்சாரப்படுத்தாமல் இயல்பான கதையோட்டத்திலேயே தந்திருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. எல்லோருக்கும் குழந்தை தந்த ஒருவருக்குக் குழந்தை இல்லாத சூழல் அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்ற ஒருவரிக் கதையை ஒரு முழுநீளப் படமாகத் தரத் தேவையான அம்சங்களைக் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விந்தணு தானம் என்ற, சமூகம் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாத, அம்சத்தைப் படம் மையமாகக் கொண்டிருந்தாலும் அதை முகம்சுளிக்கச் செய்யாத வகையில் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார்கள்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்து விளையாட்டு வீரனாக, ஸ்போட்ர்ஸ் கோட்டாவில் வேலை தேடிவிட வேண்டும் என்ற யத்தனிப்புடன் செயல்படுபவராக நடித்திருக்கிறார். விந்தணு தானத்துக்காகத் தன்னைத் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகிவிலகி ஓடுவது, பின்னர் தனது கோச்சுக்குக் குழந்தை இல்லாததால் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து தான் விந்து தானம் தரச் சம்மதிப்பது, காதலிடம் உண்மையைச் சொல்வதா வேண்டாமா எனத் தவிப்பது என பல காட்சிகளில் உறுத்தல் இல்லாமல் நடித்திருக்கிறார்.
விவேக்குக்கு முக்கியமான படம் இது. நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதைச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் சற்று நெருடல். ஒரு பெரிய மருத்துவமனையை நடத்திவரும் அவர் ஒரே ஒரு டோனரை நம்பிச் செயல்படுவதும், எப்போதும் ஹரிஷை மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது நம்பும்படியாக இல்லை. ஆர்.எஸ். சிவாஜியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இடம் அழகு.
தான்யா ஹோப் அழகாக இருக்கிறார் ஆனால் அழகுப் பதுமையாக மட்டும் பயன்பட்டிருக்கவில்லை. தான் விவாகரத்தானவள் என்பதைக் காதலனிடம் மிக இயல்பாகச் சொல்கிறார். தன்னால் குழந்தையைத் தர முடியாது என்பதை உணரும்போது வெடித்தழுகிறார்; குழந்தையைத் தத்தெடுக்கும் காட்சியில் இயல்பான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணியிசை சராசரி.
குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலரையாவது இதைப் போன்ற படங்கள் சிந்திக்க வைத்தால் நலமாக இருக்கும். சாதி, மதம், வெட்டுக் குத்து எனத் தொடர்ந்து படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் மனித உறவுகளை முன்னிருத்தி, ஆரோக்கியமான அறிவியல் உத்தியின் சாதக அம்சங்களைத் தாங்கி வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்தை ரசிக்க முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக