இந்த வலைப்பதிவில் தேடு

நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 02, 2025

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


எதேச்சையாக இன்றுதான் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசித்து முடித்தான். இன்று அவருடைய பிறந்தநாளாம். பள்ளிப் பருவத்தில் வாசித்த ஒரு நாவலை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் வாசித்தால் அது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தாலேயே ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசிக்கத் தொடங்கினான். அவன் பிறந்த ஆண்டு, பிறந்த மாதம் இந்த நாவலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. சிறு வயதில் வாசித்தபோது இந்நாவலின் சில சம்பவங்கள் நினைவில் பதிந்திருந்தன. இப்போது வாசித்தால் அவை என்னவிதமான உணர்வைக் கொடுக்கும் என்பதை அனுபவம் கொள்வதற்காகவே நாவலை வாசித்தான்.

பள்ளி, கல்லூரிப் பருவங்களில் வாசித்த பல நூல்களை இப்போது வாசிக்க முயன்றபோதும், அவற்றை முடிக்க முடியவில்லை. ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கிய நாவல்களைக்கூட சுவாரசியக் குறைவு காரணமாக முழுமையாக வாசிக்காமல் அப்படியே வைத்துவிடுவதே அவனது வாடிக்கை. ஏன் அப்போது வாசித்தோம் என்பது விளங்காமலே நாவலை மூடிவைத்துவிடுகிறான். அப்படியான மனநிலையில் தான் இந்த நாவலையும் திறந்தான். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த நாவல் அவனை வாஞ்சையோடு தழுவிக்கொண்டது. அவனது இதயத்தைச் சுகமான உணர்வுத் தந்தியாக மீட்டியது.
நாவலில் இடம்பெற்ற பெண்களில் இருவருக்கு மட்டும் ஜெயகாந்தன் பெயரிடவில்லை. ஒருவர் சபாபதிப் பிள்ளையின் மனைவி. மற்றொருவர் புத்திபேதலித்துத் திரியும் அந்த இளம்பெண். உண்மையில் இந்த நாவல் சபாபதிப் பிள்ளையின் மனைவியால் தான் தொடங்குகிறது. அந்தப் பெண்மணி அந்த ஊரின் பரியாறி பழனியுடன் ஓர் அதிகாலையில் செல்வதுதான் நாவலின் தொடக்கப்புள்ளி. அந்த அதிகாலைச் சம்பவத்துக்குப் பிறகு சபாபதியின் வாழ்வு விடியவே இல்லை.
சபாபதிப் பிள்ளையால் அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அன்னியோன்யமாகத்தான் இருவரும் வாழ்ந்தனர். பத்தாண்டு தாம்பத்யத்தில் குழந்தை பாக்யம் இல்லை என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவரிடமில்லாத ஏதோ ஒன்று பழனியிடம் இருந்திருக்க வேண்டும்தானே? இல்லாவிடின் அந்தப் பெண்மணி ஏன் சபாபதிப் பிள்ளையை விட்டுவிட்டு பழனியுடன் செல்ல வேண்டும்? ஏன் சென்றார் சபாபதியின் மனைவி என்பதற்கு நாவலாசிரியர் எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை. ஆனால், நாவலின் இறுதியில் புத்திபேதலித்த அந்த இளம்பெண் - அவளை ஹென்றி முதலானோர் பேபி என்கிறார்கள், ஆனால் நாவலாசிரியர் அவளுக்குப் பெயர் எதுவும் தரவில்லை. ஹென்றியே நாவலாசிரியர் உருவாக்கிய பாத்திரம் எனும்போது, பேபி நாவலாசிரியர் தந்த பெயர்தானே என நீங்கள் தருக்கம் பேசலாம், அப்படி நீங்கள் பேசினால் மறுக்க இயலாது. – ஹென்றியின் வீட்டுக்கு ஏன் வருகிறாள், வீட்டைப் பழுதுபார்த்து முடிந்த பின்னர் அவள் வந்தபடியே சென்றும்விடுகிறாளே அது ஏன்? இதற்கு ஏதாவது பொருள் புரிந்தால் தான் சபாபதிப் பிள்ளையின் மனைவி பழனியுடன் சென்றதற்கான பொருளை உணர முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மிகக் குறுகிய காலத்தில் நாவல் நடந்து முடிந்துவிடுகிறது. கிருஷ்ணராஜ புரத்துக்கு ஹென்றி வரும்போது, தொடங்கும் நாவல் தன் பப்பாவின் பூர்வீக வீட்டை அவன் பழுதுபார்த்து புதுமனைபுகுவிழா நடத்தும் நாளில் முடிந்துவிடுகிறது. ஹென்றியும் அவனுடைய பப்பாவும் வாசகர்களை ஈர்ப்பதைப் போலவே நாவலின் பெண்களான அபிராமி, கனகவல்லி, கிளியாம்பாள், நவநீதம், பஞ்சவர்ணத்தம்மாள், நாகம்மா ஆகியோரும் ஈர்த்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையாக இருக்கிறார்கள்.
தேவராஜனின் அக்கா அபிராமி – அவள் அக்கம்மா என்றே அழைக்கப்படுகிறாள்- சிறுவயதிலேயே கணவனை இழந்துவிட்டவள். அவளோடு தேவராஜனின் மனைவி கனகவல்லியால் ஒத்துப்போக முடியவில்லை. ஆகவே, கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். மணியக்காரரின் மனைவி நாகம்மா – மணியக்காரர் பெயர் ராமசாமி – கணவர் குடித்துவிட்டு வந்த அன்று பெரிய சண்டையிடுகிறாள். அன்றே தன்னை மாய்த்துக்கொள்கிறார் மணியக்காரர். அதன் பிறகு அதை எண்ணி துக்கத்தில் மூழ்குகிறாள். அவளுடைய மகள் கிளியாம்பாள், குழந்தை பெற்ற அவளை அவளுடைய கணவன் பார்க்க வரவில்லை. ஆனால், அவளுக்குக் கணவன் மீது பெரிய வருத்தமில்லை. அவளுக்கும் அவளுடைய அம்மா நாகம்மாவுக்கும் நடக்கும் சண்டையின் போது, அம்மாவும் மகளும் என்றபோதும், இருவருமே ஒருவர்மீது ஒருவர் விஷம் உமிழ்கிறார்கள்.
ஹென்றி ஒரு லட்சிய மனிதன். அப்படியொருவனை யதார்த்தத்தில் பார்க்கவியலாது. கிருஷ்ணராஜ புரமே ஒரு கற்பனையூராகத்தான் தெரிகிறது. தேவராஜன் ஒரு அசட்டு அறிவுஜீவி. அறிவுள்ளதாக நம்பும் ஆண்கள் எல்லோருமே அசடர்களாகத் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தேவராஜன் நடந்துகொள்கிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர்.
இந்த நாவலில் கல்யாண வாழ்க்கை இருக்கிறது. ஆனால், காதலோ காமமோ இல்லவே இல்லை. புத்திபேதலித்த இளம்பெண்ணான பேபி நிர்வாணமாக உலாத்தும்போதுகூட அந்த இடத்தில் துளியும் காமம் தலைதூக்க வில்லை. ஒரு பெண்ணின் நிர்வாணம், நிர்வாணம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதைப் போல் அந்தச் சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுப் போக முடிவெடுத்த தருணம் மிகவும் துயரகரமானது. அன்புக்குரிய மனைவி மற்றொரு மனிதருடன் செல்கிறாள் என்பதை நேரடியாகப் பார்க்கிறார். இப்போது, அவரால் என்ன செய்ய முடியும்? புலவரான அவர் அருந்ததி முதலான பதிவிரதைகளின் கதையைச் சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் அதைகூட இருந்து கேட்ட மனைவி இப்போது அவரை விட்டுச் செல்கிறார். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்த இருவருக்கு இடையே பகிர்ந்துகொள்ள முடியாத எண்ணம் இருந்திருக்கிறது எனும்போது, மனிதர் வாழ்வுக்கு என்னதான் பொருள் இருக்கிறது?
ஊருக்குப் பயந்துதான் சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கிறார். அந்த ஊருக்கு அவர் மனைவி பழனியுடன் சென்றது கடைசி வரை தெரியவே தெரியாது. அவரும் அந்த ஊருக்கு, கிருஷ்ணராஜ புரத்துக்குக் கடைசி வரை வரவே இல்லை. அவர் இறந்து மூன்று நாள்களுக்குப் பிறகுதான் ஹென்றி அங்கே வருகிறான். ஹென்றி பள்ளிக்குச் சென்றிருக்கவில்லை, ஆனால் அவ்வளவு பண்பானவனாக இருக்கிறான். ஹென்றியைப் பெற்றெடுத்த அம்மாவும் அப்பாவும் நாவலில் வருவதில்லை. அவனைத் தத்தெடுக்கிறார் சபாபதிப் பிள்ளை. போரில் இறந்த நண்பன் மைக்கேலின் மனைவியைத் தன் வாழ்வுடன் இணைத்துக்கொள்கிறார் சபாபதிப் பிள்ளை. அவர்களுடைய வாழ்வுக்குப் பொருள் சேர்க்க வருகிறான் ஹென்றி.
பப்பா தன் கதையை ஹென்றிக்குச் சொல்கிறார். தன் மனைவி ஓடிப்போன கதையைத் துயரத்துடன் சொல்கிறார். அவரால் அந்தத் துயரத்திலிருந்து மீளவே இயலவில்லை. ஆனால் அவர் முழுமையாக ஒரு வாழ்வு வாழ்ந்து முடித்தும்விடுகிறார். பழனி தற்கொலைசெய்துகொள்கிறான். ஆனால், சபாபதியின் மனைவியும் பழனியும் என்ன வாழ்வு வாழ்ந்தார்கள் என்பது தெரியவில்லை.
பெற்ற அம்மா அப்பாவை இழந்து, வளர்த்த பெற்றோரையும் பறிகொடுத்துவிட்டு, ஆதரவற்ற மனிதனாக கிருஷ்ணராஜ புரத்துக்கு வரும் ஹென்றிக்கு ஊரும் உறவும் சொந்தமும் பந்தமும் நட்பும் கிடைக்கின்றன. மனிதரிடையே வெறுப்பும், விரோதமும், குரோதமும் மண்டிக்கிடக்கும்போது, மனிதநேயத்தை வலியுறுத்துவதாக இந்த நாவல் தோற்றம்கொள்கிறது.
மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒருவருக்கொருவர் ஏன் பிரிந்துகிடக்கிறார்கள்? வெட்கம், அவமானம் என்பதற்கெல்லாம் என்ன பொருள் இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் எப்போதும் ஏன் அன்புடனேயே நடந்துகொள்ளக் கூடாது என்ற ஏக்கத்தை எல்லாம் நாவல் ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால், மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்… கோபமும் வன்மமும் வெறுப்பும் புரையோடிப்போன வாழ்க்கையைத் தானே வாழ்ந்து தீர்க்கிறார்கள்… இந்த வாழ்க்கையை என்ன செய்துவிட முடிகிறது என்ற நினைப்பு ஒரு கசந்த குறுஞ்சிரிப்பாக முகத்தில் தவழ்ந்தது… நாவலை மூடிவைத்துவிட்டு சன்னலுக்கு வெளியே தென்படும் உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டான் அவன்.

(2024 பிப்ரவரி 24 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

வியாழன், டிசம்பர் 03, 2020

நிலவறைக் குறிப்புகள்: நிலைக்கண்ணாடி போன்றவை


பரிசுத்த வேதாகமத்தில் பிரசங்கி என்னும் அதிகாரத்தின் ஒன்றாம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 18ஆம் வசனம் இப்படிச் சொல்கிறது: அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு, அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன்.’ ஃபியோதர் தஸ்தவ்யெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள் நாவலும் அதையே முன்மொழிகிறது. மனிதன் மகிழ்ச்சியாக இருக்க இயலாதவன்; அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியில் நிலைக்க முடியாது; அவனது மனம் சதா அவனை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும், இதிலிருந்து மீள்தல் சாத்தியமற்றது என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறது இந்த நிலவறைக் குறிப்புகள்

தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலில் தன்னைப் பற்றிச் சொல்பவன் ஒரு நிலவறை மனிதன். ஆனால், அவன் தன்னைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அவன் ஒரு பிரதிநிதியாகத்தான் இருக்கிறான். அவனைச் சமுதாயம் ஒதுக்கிவைத்திருக்கிறதா அவன் சமுதாயத்தை ஒதுக்கிவைத்திருக்கிறானா என்பது அவ்வளவு எளிதில் விடைகாணக்கூடிய வினாவன்று. அவனது இயல்புகளைச் சொல்லும்போது அவனிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மனத்தின் பாவனை, ஒப்பனை எல்லாவற்றையும் களைந்துவிட்டு பிறந்தகுழந்தையின்  தன்மையுடன் அவற்றை வெளிப்படுத்துகிறான். இந்த வாக்கியத்தில் ஓர் ஒப்பனை வந்து அமர்ந்துவிட்டது. இப்படிச் சொல்வதால் இந்த வாக்கியத்திலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன் என்று எனக்குள் வாழும் நிலவறை மனிதன் என்னைப் பார்த்து ஏளனம்செய்கிறான். நீயாக எழுதிவிட்டு வாக்கியத்தின் மீது பழிபோடுகிறாயே நியாயமா? என்று கேட்கிறான். இப்படியான கேள்விகளை நிலவறைக் குறிப்புகளில் நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளலாம். 

இந்த நாவலை ஒருமுறை வாசித்தால் போதாது; ஒவ்வொரு முறையும் அது தன்னை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம். ஆனால், மகிழ்ச்சி என்பதை ஆய்வகத்தில் கொண்டு நிறுத்தும் நிலவறை மனிதன் அதையும் ஈவு இரக்கமின்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுகிறான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனது கேள்விக் கணைகள் உங்கள் கழுத்தைப் பிடித்து திருகுகின்றன, உங்கள் மனசாட்சியை உலுக்குகின்றன. 

தன்னுணர்வு அற்றவன் எப்படி மனிதனாக முடியும் என்ற கேள்வி எழுப்பும் அதே வேளையில் மனிதனின் தன்னுணர்வு அவனை மகிழ்ச்சிக் கடலிலிருந்து வெளியேற்றித் துன்பக் கரையில் போட்டுவிடும் அபத்தத்தை நிலவறை மனிதன் மிக இயல்பாக உணர்த்தும்போது, இயல்பான மனிதனுக்கு அது புரிவதேயில்லை. ஆனால், தன்னுணர்வு கொண்ட மனிதன் அதைப் புரிந்துகொண்டு அவதியுறுகிறான். இயல்பான மனிதன் முட்டாளாக இருக்கலாம், சராசரியானவனாக இருக்கலாம். ஆனால், அவனைப் பார்த்து தன்னுணர்வு கொண்ட நிலவறை மனிதன் பொறாமைப்படுகிறான். அவனைப் போல் தன்னால் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறான். அதே நேரத்தில் அவனை முட்டாள் எனத் தூற்றுகிறான். இந்த வேறுபாடு உங்களுக்கு விளங்குகிறதுதானே?

நிலவறைக் குறிப்புகள் நாவல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நிலவறை மனிதன் தனது இயல்புகளைக் குறித்து விவரிக்கிறான். இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தான் எலி வளை போன்ற நிலவறையில் வசித்துவருவதையும் தான் யார் என்பதையும் வாசகர்களிடம் சொல்கிறான். ஆனால், அவன் வாசகர்களுக்காக எழுதவில்லை தனக்காக எழுதுவதாகவும் சொல்கிறான். இப்படிக் கணம்தோறும் நிலைமாறும் சிலவேளை நிலைதடுமாறும்  மனத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கிறான். அதன் எல்லா வேடங்களையும் நுட்பமாகக் கவனிக்கிறான். எதனால் இப்படி வேடம் புனைகிறது என்று ஆராய்கிறான். தனது மேன்மையைச் சொல்லி நமது பாராட்டைக் கோரவில்லை அவன். தனது கீழ்மையைச் சொல்லி நமது ஏளனத்தையும் எதிர்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால், தனது மேன்மை கீழ்மை எல்லாவற்றையும் எந்தப் பிரதிபலனையும் பாராமல் சொல்கிறான். அதனால், அவனுக்கு ஆசுவாசம் கிடைக்கலாம். ஆனால் ஆசுவாசம் கிடைக்கும் என்பதற்காக அவன் அதைச் சொல்லவில்லை.  

நிலவறைக் குறிப்புகளின் இரண்டாம் பாகத்தில் நிலவறை மனிதன் எதிர்கொண்ட சில சம்பவங்களை விவரிக்கிறான். அந்தச் சம்பவங்கள் அவனை அலைக்கழிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் நம்மில் பலர் எதிர்கொண்டதைப் போன்றவைதாம். இவற்றைப் போன்ற சம்பவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கலாம். நாமும் நிலவறை மனிதன் போன்ற அவசத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால், நம்மால் அதைத் தீர்மானமாக விளக்க முயன்றிருக்காது. ஆனால், நிலவறை மனிதன் அதைத் தீர்க்கமான தருக்கங்களுடன் எடுத்துவைக்கிறான். தன்னிலிருந்து விலகி தனது நடத்தையையும் அவன் கறாராக விமர்சிக்கிறான். சிலபோது, தனது நடத்தைகளுக்கான காரணத்தையும் மொழிகிறான். இந்தத் தருக்கத்தை அவனிடம் எடுத்துக்காட்டும் அவனது தன்னுணர்வுதான் அவனது மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. 

நிலவறை மனிதனால், ஒரு எஜமானனாகவோ ஒரு பணியாளனாகவோ ஒரு நண்பனாகவோ ஒரு காதலனாகவோ ஏன் ஒரு மனிதனாகவோ கூட இருக்க இயலவில்லை. அது தான் அவனது துயரம். அவனுக்குக் கிடைக்கும் அன்பையும் அவனால் அனுபவிக்க இயலவில்லை. அவனது தன்னுணர்வு அவனைச் சதா கலக்கத்திலேயே காலங்கழிக்க வைக்கிறது.  நிலவறை என்பது சிறிய குடிலாக இருக்கலாம் சிறிய பொந்தாக இருக்கலாம் பெரும்பரப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், அங்கே வசிக்கும் மனிதனின் மனம் மிகச் சுருங்கிக் கிடக்கிறது. அது அவனை நிம்மதியின்மையில் மூழ்கடிக்கிறது. தன்னைப் பெரிய அறிவாளி எனக் கருதும் நிலவறை மனிதனால் அவன் முட்டாளாகக் கருதும் இயல்பான மனிதன் துய்க்கும் இன்பத்தைக்கூடத் துயக்க இயலவில்லை. 

மகிழ்ச்சியை அவன் வேண்டினாலும் அவனால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. அவனது மகிழ்ச்சிகூட அவனைக் கையைப்பிடித்து துன்பத்துக்கே அழைத்துச் செல்கிறது. அவன் அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பள்ளிக்காலத்திலேயே வாசித்துவிட்டான். ஆனால், அது அவனது இருண்ட வாழ்க்கையில் எந்த வெளிச்சத்தையும் பாய்ச்சவில்லை. அதன் வெளிச்சமெல்லாம் அவனது கலக்கத்தைத் துலக்கப்படுத்தவே உதவுகிறது. நட்பு, உறவு, காதல் என்ற எல்லா உணர்வுகளிலிருந்து விடுபட்ட மனிதனாக அவன் இருந்தபோதும் அதன் காரணமாக அவன் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவில்லை. வெறுப்பு சமுத்திரம் அவனது மூச்சை முட்டவைத்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களுடன் அமர்ந்து ஒரு விருந்தை அவனால் இயல்பாக உண்ண இயலவில்லை. அங்கே நடக்கும் அபத்தங்கள் அவனைப் பாடாய்ப்படுத்துகின்றன. அதனால் அவன் வெளிப்படுத்தும் எதிர்வினையோ அவனை இன்னும் நார்நாராய்க் கிழித்துவிடுகிறது. குருதி வழிய வழிய குமைகிறான். எல்லாராலும் வெறுக்கப்படும் மனிதனாகத் தான் இருக்கிறோமோ எல்லாரும் தன்னைப் புறக்கணிக்கிறார்களோ அவமதிக்கிறார்களோ என எண்ணும் அதே வேளையில் தன்னால் அப்படி மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அவன் உணர்கிறான். தன்னைத் தேடி வந்து நேசம் செலுத்திய பெண்ணின் நேசத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னதமான பளிங்கு மாளிகை போன்ற ஒன்றில்கூட அவனால் வசித்திருக்க முடியாது. அந்தப் பளிங்குமாளிகையையும் அவன் நிலவறையாக மாற்றிக்கொண்டுவிடுகிறான்.  

எந்தப் பெருமிதமும் இல்லாத மனிதனாக இருக்க நேர்வதன் சோகத்தை அவன் பரப்பும் அதே நேரம் பெருமிதங்கள் மீது சாணியடிக்கவும் அவன் தவறவில்லை.  ஒரே சமயத்தில் அவனது மனம் பல்வேறு எண்ணக் குழப்பங்களால் பீடிக்கப்படுகிறது. அந்த மாயச் சுழலில் அவன் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து  அவன் வெளிவர விரும்பினாலும் அதிலேயே கிடந்து உழலவும் பிரியம் கொள்கிறான். இதற்கெல்லாம் என்னதான் முடிவு? எந்த முடிவும் இல்லை என்பதே முடிவு. இப்படியொரு நாவலை எழுதுவதேகூட அவனுக்குப் பெரிய உவப்புக்குரியதாக இல்லை. அதை ஒரு பெரிய தண்டனை என்றுகூடச் சொல்கிறான். 

இந்த நாவலைப் படித்து முடித்தபின் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றவில்லை; இப்படித்தானே இருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதுதான் நாவல் உருவாக்க விரும்பிய எண்ணமா எனவெல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த நாவலை வாசிக்கும்போது, ஒரு நிலைக்கண்ணாடி முன் அமர்ந்திருப்பதுபோல்தான் உள்ளது. இப்படியான நாவல்கள் நமது துயரத்திலிருந்து நம்மை விடுவிடுப்பதில்லை. ஆனால், நமது துயரங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என ஏளனம் செய்கின்றன. இன்பத்துக்கும் துன்பத்துக்குமான ஊடாட்டத்திலேயே வாழ்க்கை சிதைந்துகொண்டேயிருக்கிறது. சிதைவுகளின் வழியே சிரித்துக்கொண்டேயிருக்கிறோம். அந்தச் சிரிப்புக்குப் பொருளென்ன?

நிலவறைக் குறிப்புகள் 
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 
தமிழில்: எம்.ஏ.சுசீலா
விலை ரூ. 250/-
வெளியீடு: நற்றிணை பதிப்பகம் 
தொடர்புக்கு: +919486177208


புதன், ஏப்ரல் 29, 2020

நிச்சலனம்: எல்லாம் அல்லது எதுவுமில்லை


உயிரோடு இருப்பவர்கள் சொன்னாலே பல புத்தகங்களை வாசிக்க மாட்டோம். ஆனால், இறந்துவிட்ட எழுத்தாளர் ஒருவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்தார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இறந்துபோனவர் எப்படிப் பரிந்துரைக்க முடியுமென. ஆனால், நான் சொல்வது உண்மைதான் எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைந்த பின்னர் அவருக்கான அஞ்சலிக் குறிப்பை (இருக்கும்போது ஒருவருக்கு அஞ்சலிக் குறிப்பெழுத முடியுமா என்ன?) எழுதியதற்காக காலச்சுவடு பதிப்பகம் எனக்கொரு நூலை அனுப்பிவைத்தது. அந்தப் புத்தகத்தை எனக்கு நஞ்சுண்டன் பரிந்துரைத்தார் என்பதை இப்போது நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பொதுவாக, பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களையே அலமாரியில் வைத்துவிட்டு வாய்ப்பு வரும்போது படித்துக்கொள்ளலாம் என முடிவுசெய்வதுதான் எனது பழக்கம். இப்படிப் பல புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. சில புத்தகங்களை ஐம்பது அறுபது பக்கங்கள் வாசித்துவிட்டு அப்படியே மூடிவைத்துவிடுவேன். வாசிப்பதற்கு, புத்தகமும் நேரமும் இருந்தால் மட்டும் போதாது, ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். மனநிலை வாய்க்காதபோது எவ்வளவு சிறப்பான புத்தகம் கிடைத்தாலும் வாசிக்க இயலாது என்பதுதான் எனது அனுபவம். 

காலச்சுவடு எனக்குப் புத்தகம் அனுப்பியிருந்தது என்று சொன்னேனே ஒழிய அது என்ன புத்தகம் என்று இன்னும் சொல்லவில்லையே. அந்தப் புத்தகம் நிச்சலனம். அது ஒரு துருக்கிய நாவல். அகமத் ஹம்தி தன்பினார் என்பவர் எழுதியது. 20ஆம் நூற்றாண்டின் துருக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் இவர் என ஓரான் பாமுக் குறிப்பிட்டுள்ளார். அவர் டிரையாலஜியாக எழுதிய நாவலில் இது இரண்டாவதாக வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் துருக்கியில் 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நாவல் தீவிரமான மொழிநடையில் அமைந்திருக்கிறது. துருக்கியின் கலை, அரசியல், பண்பாடு, இசை, வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் அலசிச் செல்கிறார் நாவலாசிரியர். இஸ்தான்புல், அனடோலியா எனப் பல இடங்களுக்கும் நாவல் பயணப்படுகிறது. நாவல் முதலில் துருக்கியில்  நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அங்குள்ள நாளிதழின் தரத்தை நமது நாட்டின் நாளிதழ்களின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் பெருமூச்சுதான் விட இயலும். 


பொதுவாக, ஒரு நாவலையோ புத்தகத்தை வாசிக்க ஒரு தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதலை நண்பர் ஒருவர் தரலாம், இல்லையெனில் எங்கோ வாசிக்கும் ஏதோவொரு வரியில் குறிப்பிடத்தக்க தூண்டுதல் கிடைத்துவிடலாம். அப்படிக் கிடைத்தபோது அதை நாம் வாசிக்கத் தொடங்குவோம். நிச்சலனத்தைப் பொறுத்தவரை எனக்கு நஞ்சுண்டனைத் தவிர யாரும் பரிந்துரைக்கவில்லை. அவருடைய பரிந்துரையும் அது ஒரு வகையான மாய எண்ணம்தானே. இப்படியெல்லாம் எதையாவது நினைத்து மனம் மகிழ்ந்துகொள்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும். 

கரோனா காலத்தின் முதல் ஊரடங்கைத் தொடர்ந்து திரைப்படங்களாகப் பார்த்துக் கழித்தேன். பார்க்க வேண்டிய பல படங்களைப் பார்த்து முடித்தேன். அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். இந்தப் பதிவில் நிச்சலன குறித்து மட்டும் எழுத வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் அதற்குத் தாவுகிறேன். இப்படியெல்லாம் நமக்கு நாமே எதையாவது கட்டுப்பாடுகளை விதித்துத்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். இது ஒருவகையில் அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும். இதுதானே நிலைமை? 

எனது வாசிப்பு என்பது மிகவும் சுணக்கம் கொண்டது. நாவலின் பக்கங்களைக் கொண்டு ஒருநாளுக்கு எத்தனை பக்கம் படித்தால் அதை எத்தனை நாளில் முடிக்கலாம் என முதலில் திட்டமிடுவேன். அதன்படி சில நாள்கள் படித்தும் முடிப்பேன். அதன் பின்னர் அந்தத் திட்டத்துக்கு ஏதோ ஒரு நோவு வந்துவிடும். நாவலைக் கசந்த காதல் போல் தள்ளிவைத்துவிடுவேன். மீண்டும் அந்தக் காதல் துளிர்க்குமோ துளிர்க்காதோ அது காலத்துக்குத்தான் வெளிச்சம். 

அகமத் ஹம்தி தன்பினார்
நிச்சலனம் நாவல் 424 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு 40 பக்கம் வீதம் வாசித்தால் சுமார் பதினோரு நாளில் முடித்துவிடலாம் என ஒரு கணக்குப் போட்டேன். எனது கணக்கில் பிழை இருக்காது எனது வாசிப்பில்தான் பிழை இருக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருப்பதை நினைவுகூர்ந்து நீங்கள் இதை எப்படி வாசித்திருப்பான் எனச் சந்தேகப்படாதீர்கள். எப்போதும் ஒருவன் சோம்பேறியாக இருக்க மாட்டான். சிலவேளை அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு சுறுசுறுப்புப் படகு வந்து அவனைக் கரை சேர்த்துவிடும். அப்படியான படகு எனக்கு நிச்சலனம் நாவல் விஷயத்தில் நடந்தேறியது. மிகவும் ஆச்சரியகரமான வகையில் 2020 ஏப்ரல் 18 அன்று வாசிக்கத் தொடங்கி ஏப்ரல் 27 அன்றிரவில் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். எனக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படி என்னை வாசிக்க வைத்தது நாவலின் நடை. ஆகாய விமானம் பரந்த வெளியில் தடம்பிறழாமல் செல்வது போன்றதொரு நடையில் நாவல் நகர்த்தப்பட்டிருந்தது. 

வாழ்க்கைமீது உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகளும் வாழ்க்கை குறித்து உங்களுக்கு அநேக சிந்தனைகளும் இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நிச்சலனத்தை வாசிக்க வேண்டும். அது தரும் இலக்கிய சுகம் இப்படி அப்படியென்றில்லை அது ஒரு பரம சுகம். கதை என்று பார்த்தால் வெறும் காதல் கதைதான். என்ன வெறும் காதல் என்கிறான் மரமண்டைப்பயல் என நீங்கள் எனைத் திட்டக் கூடும். காதலை வெறும் காதல் என்பதால் எனக்குக் காதல் மீது வெறுப்பு என்று கருதிக்கொள்ளாதீர்கள். அது சும்மா வெறும் நடிப்பு. ஒவ்வொரு முட்டாளுக்குள்ளும் ஒரு ‘அறிவுஜீவி’ முளைவிடத் துடிக்கத்தானே செய்வான். அவனது செயல்பாடுகள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தானே இருக்கும். அப்படி ஒரு அசட்டுத்தனத்தில் வெளிப்பட்டதுதான் அந்த வெறும் காதல். 

மும்தாஜ் எனும் இளைஞனின் காதல்தான் நாவலின் நடு நரம்பு. அதை அடிப்படையாகக் கொண்டு நாவல் அங்குமிங்கும் சென்று வருகிறது. நான்கு பாகங்களைக் கொண்ட நாவலில் முதல் பாகம் இக்ஸான், இரண்டாம் பாகம் நூரன், மூன்றாம் பாகம் சூயத், நான்காம் பாகம் மும்தாஜ். நான்கு பாகங்களில் இரண்டாம் பாகமான நூரன் அதிகப் பக்கங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நூரன் தான் மும்தாஜின் காதலி. தன் வாழ்வின் பல சோகங்களை பால்யம் முதலே அனுபவித்துவந்த மும்தாஜின் வாழ்க்கையில் அவனை அவனது இடர்பாடுகளிலிருந்து கைதூக்க வந்தவள் நூரன் என்று நம்பினான் மும்தாஜ். ஆனால் அவள் அவனுக்குத் துக்கத்தையே பரிசளித்துச் சென்றுவிட்டாள். நூரனுடன் மும்தாஜ் படகில் இரவு பகல் என்று பாராமல் சுற்றியிருக்கிறான். அந்தத் தேவதையுடன் திருமணத்துக்கான நாளை எல்லாம் குறித்துவிட்டான். எல்லாவற்றையும் ஒரு மரணம் வந்து அழித்துவிட்டது. அதுவும் ஒரு தற்கொலை. நூரனோ மும்தாஜோ இறந்திவிட்டிருந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால், நூரனை எப்போதோ காதலித்திருந்த ஒருவன் இறந்து இவர்கள் காதலை நிறைவேறாத ஒன்றாக மாற்றிவிட்டான். 

அகமத் ஹம்தி தன்பினார்

தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டிருந்த நூரனுக்கு மும்தாஜ் எல்லாமுமாக இருந்தான். அவனைக் கைபிடிக்கலாம் என்றிருந்தபோது அவளுடைய கணவன் திரும்பிவந்து அவளுடைய காதலின் திசையை மாற்றிவிட்டான். நிறைவேறாத காதலின காவியச் சோகம் இந்த நாவலின் பக்கங்களில் எல்லாம் நிரம்பிவழிகிறது. ஆனால், அது மாத்திரமே நாவலா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். துருக்கி நாட்டின் வரலாறு ஒட்டாமன் பேரரசின் சரித்திரம், அந்த நாட்டின் நவீன வாழ்க்கை, பழம்பெருமை என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார் தன்பினார். 

தனி மனிதரின் அக உணர்வுகளையும் புறச் சூழல்களையும் ஒருசேர எடுத்துவைத்துக்கொண்டே போகிறார். துருக்கிய இஸ்லாம் வாழ்வின் பல பக்கங்களைத் திறந்துகாட்டுகிறார். அதன் இசை, தத்துவம் என வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துருக்கிய பண்பாட்டின் விதைகளைத் தூவிச் செல்கிறார் தன்பினார். இந்த நாவலின்வழியே இசைபட வாழும் ஒரு பண்பாடு வாய்க்கப்பெற்ற நாடாக துருக்கி துலக்கம் கொள்கிறது.  இரண்டாம் உலகப் போர் மூளுமா மூளாதா என கேள்விகள் பல்கிப் பெருகிய காலகட்டத்தில் தொடங்கும் நாவல் நிறைவுறும் வேளையில் இரண்டாம் உலகப் போர் மூண்டுவிடுவதான அறிவிப்பு வருகிறது. 

அறிவுப்பூர்வமான வாழ்வை வாழும் மனிதனின் உணர்வுபூர்வ காதல் வழியே ஒரு நாட்டின் வரலாற்றைக் குழைத்து இலக்கிய ருசியுடன் அகமத் ஹம்தி தன்பினார் படைத்திருக்கும் ரசனையான விருந்து நிச்சலனம். ஆங்கிலத்தில் இந்த நாவல் A mind at piece என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துருக்கிய மொழியில் இதன் தலைப்பு ஹோஸோர் (Huzur). தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கிறார் தி.அ.ஸ்ரீனிவாசன். நாவல் முழுவதும் ஒற்றுப்பிழைகள் ஏராளம் காணப்படுகின்றன. நஞ்சுண்டன் பரிந்துரைத்த நாவல் ஆனால் அவரால் சகித்துக்கொள்ள இயலாத ஒற்றுப்பிழைகளுடன் வாசிக்க நேர்ந்தது நகைமுரண்தான். 

நிச்சலனம் 
அகமத் ஹம்தி தன்பினார் 
தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன் 
வெளியீடு:  காலச்சுவடு
பக்கங்கள்: 424
விலை ரூ. 375 
தொடர்புக்கு: 04652278525

வியாழன், மார்ச் 31, 2016

முதல் மனிதன் ஆல்பெர் காம்யு

ஒரு முழு நாளைச் செலவழித்து மூன்றாம் வகுப்பு பிரயாணத்தின் கடும் அசதியுடன் நிறைமாதக் கர்ப்பிணியான மனைவியுடன் அல்ஜே நகரிலிருந்து போன் நகரத்துக்கு வந்திறங்குகிறான் ஆன்ரி கோர்மெரி. அராபிய வண்டியோட்டியின் குதிரை வண்டியில் படுத்தபடியே வலிதாங்காமல் மவுனமாக அழுதபடியே வருகிறாள் லூசி. பிரசவத்துக்கு இந்தச் சிறு கிராமத்துக்கா வர வேண்டும்? என மருத்துவரே ஆச்சரியப்படும் படி அவர்களை விதி வழிநடத்தியிருக்கிறது. ழாக் கோர்மெரியின் பிறப்பு அங்கேதான் நிகழ்கிறது. திராட்சைக் கொடிகளின் வாசனை, எரிசாராய மணம், புகையிலை வாடை எனப் பல வாசனைகள் கமழ்ந்தபடி தொடங்குகிறது ஆல்பர் காம்யுவின் முதல் மனிதன் நாவல். இத்தகைய பல்வேறு வாசனைகள் நாவலின் அத்தனை அத்தியாயங்களிலும் இடையிறாது கசிந்துகொண்டேயிருக்கின்றன.
சுயசரித வர்ணனை கொண்ட இந்நாவலின் நாயகன் ழாக் கோர்மெரி வேறு யாருமல்ல ஆல்பர் காம்யுதான். ழாக் கோர்மெரி காம்யு என்றுணர்ந்த பின்னர் நாவலின் பரப்பெங்கும் நம்மை வழி நடத்துகிறது காம்யுவின் ஆன்மா. புனைவின் அசாத்திய மெருகும் யதார்த்தத்தின் துல்லியமும் பின்னிப் பிணைந்த நடை வாசிப்பவருக்கு உன்மத்தம் தரும் வகையில் நாவலின் பரப்பைச் செறிவுடன் ஆக்கிரமித்திருக்கிறது. விட்டேத்தியான மனத்தை அந்நியனில் தரிசித்து வந்தோருக்கு வாஞ்சை வழிந்தோடும் மனம் இதில் காட்சியாகிறது. ஈரப்பதம் காயாத நேசத்தின் பசுஞ்சுவடு நாவல் பயணப்படும் இடங்களிலெல்லாம் தட்டுப்படுகிறது.
கண்ணெதிரே பால்யம் காலாவதியாகிக்கொண்டே வருவதை அறிந்தபோதும் அதைத் தடுக்க எதுவுமே செய்ய இயலாத கையறுநிலையும் பருவத்திடம் பால்யம் பறிபோகும் அவலமும் கலந்த விம்மலுடனான கேவல் நாவலில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அந்தக் குரல் வாசகனின் பால்யத்துக்கு அவனை நகர்த்துகிறது. நன்கறிந்த பிரதேசத்தைக் கண்ணை மூடிக் கொண்டு கண்ணெதிரே நிற்பவருக்கு விளக்குவது போல ழாக் கோர்மெரியின் பால்யத்தை கவித்துவமான நடையில் காம்யு நகர்த்துகிறார்.
தன் வாழ்வில் ஒருபோதும் யாரென்றே அறிந்திராத அந்த மனிதரின் கல்லறையின் முன் சம்பிரதாயத்துக்காக நிற்கிறார் ழாக் கோர்மெரி. அப்போது கல்லறையில் துயில் கொண்ட மனிதர் இறந்தபோது அவருடைய வயது 29 என்ற கல்லறை வாசகம் அவர் கண்ணில் படுகிறது. ழாக் கோர்மெரி இதை வாசிக்கும்போது அவருடைய வயது 40. தன்னைவிட வயது குறைந்த தந்தைக்குத் தான் பிறந்தேனா என்னும் விநோத எண்ணம் அவரது மனத்தில் குடிபுகுகிறது. மனத்தில் சட்டெனக் கிளம்பிய ஒரு சூறாவளி அவரைச் சடுதியில் நிலைகுலைத்து மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. தன் தந்தை குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்குகிறது. தனக்கு ஒரு வயதானபோது, முதல் உலகப் போருக்குத் தன்னுயிர் தந்த தந்தையை அறியப் புறப்படுகிறார் ழாக் கோர்மெரி. இந்தப் பயணத்தில் தான் ழாக்கின் பால்ய கதையை மழையின் ஈரத்தைத் தாங்கிய நிலத்தில் தங்கிய குளுமையுடன் சொல்கிறார் ஆல்பெர் காம்யு.
நினைவுகளில் பிரவாகமெடுக்கும் பால்ய நதி பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த கதையைப் பட்டும் படாமலும் சொல்கிறார் காம்யு. ஏழைச் சிறுவன் ழாக்கின் இல்லத்தில் வறுமைக்குப் பஞ்சமில்லை. ஆனால் ழாக்கை வறுமையால் வெறுமையாக்க முடியவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்புகளின் மூலம் சந்தோஷத்தை அனுபவிப்பது எப்படி என்ற தேவ ரகசியத்தை அவன் எப்படியோ கற்றுத் தேர்ந்துவிட்டான். ஆனாலும் இருளைத் தவிர்க்க இயலா இரவு போல அவனும் துயரைத் துரத்த முடியாமல் அதிலேயே அமிழ்ந்தான், அதன் சுகத்தில் திளைத்தான். ஓரிடத்தில் தன் தந்தை தனக்களித்த சொத்து என மன உளைச்சலைக் குறிப்பிடுகிறார் காம்யு.
வறுமை குறித்த புலம்பல் அவனிடம் இல்லை என்றபோதும் பால்யத்தின் வெகுளித் தனத்தைப் பருவம் களவாடுவதை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லையே என்னும் பரிதவிப்பு அவனுள் பதைபதைப்பை விதைக்கிறது; பெரியவனான தருணத்தை அதீத பதற்றத்துடன் எதிர்கொள்கிறான். ஒருபோதும் திரும்பிச்செல்ல இயலாத பால்யத்தின் நாள்களை மீண்டும் சிருஷ்டித்துப் பார்க்கிறார் காம்யு. அந்த சிருஷ்டியில் ஜீவன் இருக்கிறது. வாழ்வின் எளிய தருணங்களில் ஒளிந்திருக்கும் சந்தோஷ மலர்களைக் காட்டித் தரும் தோட்டக்காரனாக மாறிவிடுகிறார் காம்யு. ழாக் கோர்மெரி தன் தந்தையைத் தேடி அலைந்த பயணத்தின் வழியே வாசகனுக்கு அவனுடைய தாய் லூசியும், ஆசிரியர் பெர்னாரும், மாமா , நண்பர்கள் எல்லோரும் அறிமுகமாகிறார்கள்.
ழாக் வாழ்ந்த வாழ்க்கை நீரினடியில் குளுமையாகக் கண்சிமிட்டும் கூழாங்கல் போல் வாசகனுக்குத் தெளிவாகத் தென்படுகிறது. வறுமையும் அதன் துயரமும் இரவின் இருளைப் போல் நின்று நிலைத்துவிட்ட அந்தச் சிறுவனின் மனம் படும் பாட்டை அந்தச் சிறுவன் எங்கேயும் மொழியவில்லை. அவன் சூழலைச் சொல்கிறான். அதன் மேல் சூழ்ந்துகிடக்கும் துக்கம் வாசகனின் மனத்தைப் பிழிகிறது. போரால் விளையும் அபத்தங்களை நாவலில் காம்யு உணர்த்தும் விதத்தில் மனம் கொள்ளும் அவசம், அவசம் வழியே கிடைக்கும் இலக்கிய ருசி இரண்டும் சேர்ந்து இந்நாவலை சிறந்த இலக்கியப் படைப்பாகக் கொண்டாடிக் களிக்கிறது. போரில் மாண்ட தன் தந்தையின் மறைவு குறித்து நாவலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “பிரபஞ்சத் தீ ஒன்றில் விழுங்கப்பட்டுவிட்ட இந்த மனிதரில் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை; காட்டுத்தீயில் எரிந்துபோன பட்டாம்பூச்சியின் சிறகின் சாம்பலைப் போல, தொட்டுணர முடியாத ஒரு நினைவைத் தவிர…”. தந்தையைப் பறிகொடுத்த எண்ணற்ற தனயர்களின் சோகம் இது. அவர்கள் எல்லோருமே வழிகாட்டுதல்களை இழந்த முதல் மனிதர்கள்தான். கணவர்களை இழந்த எண்ணற்ற மனைவிகள், தந்தையை இழந்த எண்ணற்ற குழந்தைகள்… இவர்களின் விசும்பலும் கேவலும் போர் என்னும் கேவலத்தை, தேசப் பற்று என்னும் களவாணித் தனத்தை மவுனமாகக் கேலிசெய்கின்றன. முதல் மனிதன் ஒவ்வொருவரும் வாசித்து அனுபவிக்க வேண்டிய நாவல்.

வியாழன், ஜூன் 19, 2014

அதிர்வுகளை உருவாக்கிய எழுத்தாளர்

சல்மான் ருஷ்டி பிறந்த நாள் ஜூன் 19


இருபதாம் நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் அஹமது சல்மான் ருஷ்டி. ஆங்கிலோ இந்திய எழுத்தாளரான அவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர், 1947 ஜூன் 19 அன்று பம்பாய் (தற்போது மும்பை) நகரில் பிறந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாமிய குடும்பம் அவருடையது. அவரது தாத்தா உருதுக் கவிஞர். அவருடைய தந்தை வணிகர். ருஷ்டியின் தந்தை கேம்பிரிட்ஜில் படித்தவர். ருஷ்டியின் 14-ம் வயதில் அவர் இங்கிலாந்துக்குப் பள்ளிப் படிப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டார். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே கேம்பிரிட்ஜ் ஃபுட்லைட்ஸ் நாடகக் கம்பனியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 

1964-ல் ஏற்பட்ட இந்திய பாகிஸ் தான் போரின் காரணமாக அவருடைய குடும்பம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு இடம்பெயர்ந்தது. அப்போது அவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் வரலாறு பாடம் படித்துக்கொண்டிருந்தார். மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எழுந்த முரண்பாடுகள் சல்மான் ருஷ்டியை ஆழமாகப் பாதித்தன. 1968-ல் பட்டப் படிப்பை முடித்த பின்னர் பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சியில் பணி செய்தார். அதே நேரத்தில் இங்கிலாந்தின் ஓவல் ஹவுஸ் நாடகக் குழுவினரின் நாடகங்களில் நடிக்கவும் செய்தார். 

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி பாடலான த கான்ஃபெரன்ஸ் ஆஃப் த பேர்ட்ஸ் பிடித்துப் போனதால் அந்தப் பாதிப்பில் அவர் கிரிமஸ் (Grimus) என்னும் நாவலை எழுதினார். அவரது முதல் நாவலான இது 1975-ல் வெளியிடப்பட்டது. அறிவியல் புனை கதையான இதற்கு விமர்சகர்களிடமிருந்தோ வாசகர்களிடமிருந்தோ பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் 1981–ல் அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசியது. அந்த ஆண்டில் வெளியான அவரது நாவலான ‘மிட்நைட் சில்ட்ரன்’ உலகமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்திய அரசியலை நையாண்டி செய்து எழுதப்பட்ட இதற்கு புக்கர் பரிசு கிடைத்தது. 

1983-ல் அவரது மூன்றாம் நாவலான ‘ஷேம்’ வெளியானது. இது பாகிஸ்தான் அரசியலை உருவகித்து எழுதப்பட்டிருந்தது. 1988-ல் வெளியான அவரது நான்காம் நாவலான ‘த சாத்தானிக் வெர்சஸ்’ பலத்த சர்ச்சைக்காளானது. இஸ்லாமிய வரலாற்றைத் தவறாகச் சித்திரித்திருந்ததாகக் கூறிப் பல நாடுகளில் இந்த நாவல் புறக்கணிக்கப்பட்டது; சில நாடுகளில் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நாவலைப் பிரசுரித்தவர்கள் தாக்கப்பட்டார்கள்; கொல்லப்பட்டார்கள். 1989-ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று பிபிசி செய்தியாளர் ஒருவர் ருஷ்டிக்கு போன் செய்தார். ஈரானின் மதத் தலைவர் ஆயதுல்லா கொமானி சல்மான் ருஷ்டிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதைக் கூறினார். 

இதையெல்லாம் மீறியும் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை பதினோரு நாவல்களைப் படைத்துள்ளார். இவரது புத்தகங்கள் சுமார் 40 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 

தி இந்துவில் பிரசுரமானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்