இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக