இந்த வலைப்பதிவில் தேடு

திரில்லர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரில்லர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 01, 2021

கேள்விக்குள்ளாக்கும் மக்களாட்சியின் மாண்பு


தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கொடநாடு எஸ்டேட் விவகாரம் பயங்கரமான அனலைக் கிளப்பியிருக்கிறது. அங்கே 2017 ஏப்ரல் மாதம் 23 ஆம் நாளன்று அதன் காவலாளிகளில் ஒருவரான ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர் விலை மதிப்பற்ற பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் பலியானார். கொடநாடு கொலை காரணமாகத் தேடப்பட்ட சயான் தன்னுடைய மனைவியையும் மகளையும் விபத்தில் இழந்தார். கொடநாட்டுக் கொள்ளைச் சம்பவம் சிசிடிவி காட்சிகளாகப் பதிவாகவே இல்லை என்பது ஆச்சரியத்தைத் தந்தது. இதைத் தொடர்ந்து கொடநாட்டில் கணினிப் பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர் தற்கொலைசெய்துகொண்டார்.

இப்படி அடுக்கடுக்காகக் கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் பெரும்புனைவுபோல் உருண்டு திரண்டது கொடநாட்டு மர்மம். ஒரு சுவாரசியமான திரில்லர் நாவலை ஒத்திருந்தது இந்த விவகாரம். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்னும் கேள்வி தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள், வெகுமக்கள் மனத்தைக் குடைந்தது. அது தொடர்பான முறையான விசாரணை மட்டுமே இந்த விவகாரத்தின் மர்மங்களை விலக்கி உண்மையைத் தெளிவாக்கும் என்பது பொதுத்தளத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் மீண்டும் தோண்டப்படுவதையோ மறுவிசாரணை நடத்தப்படுவதையோ  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக விரும்பவில்லை. மறுவிசாரணை என்னும் நடவடிக்கை அதிமுகவைப் பெரும் பதற்றத்தின் பிடிக்குள் தள்ளியிருக்கிறது. ஆட்சியில் இருந்த காலத்தில் ஒன்றிய அரசுடன் முரண்படாமல் தன் மீது எந்தப் பழியும் விழாமல் பார்த்துக்கொண்ட அதிமுகவால் இப்போது அப்படி நடந்துகொள்ள இயலவில்லை. மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் அந்தக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தது அந்தக் கட்சி. இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கரம் கோத்து செயல்படுகிறார்கள். தங்கள் கட்சியை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் பொருட்டு இந்தக் கொடநாடு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஆளும் திமுக தரப்பு என்பது அவர்களது வாதம். கொடநாடு விவகாரத்தைச் சுற்றிப் படர்ந்துள்ள மர்மங்களை விலக்கி அங்கே என்ன நடந்தது என்பதை முறையாக விசாரித்து மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக ஆளும் திமுக தரப்பு சொல்கிறது. 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தை முன்னிட்டு அதனதன் தரப்பை நியாயப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றுகின்றன. இந்தக் கொடநாடு எஸ்டேட் அதன் உரிமையாளர்களான ஜோன்ஸ் குடும்பத்தினரிடமிருந்து கட்டாயப்படுத்தி 1994இல் வாங்கப்பட்டதிலிருந்தே அதைச் சுற்றி அநேகக் கதைகள் புனையப்பட்டுப் பொதுவெளியில் புழக்கத்துக்கு வந்தன. அவற்றில் உண்மையும் பொய்யும் புரட்டும் கலந்தே காணப்படுகின்றன. எது உண்மை எது பொய் என அறிந்துகொள்வது சாமானியமான செயலன்று.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் தலைமைச் செயலகத்தையே கொடநாட்டில் அமைத்துவிட்டாரோ என்று தோன்றும்படியாகவே தமிழ்நாட்டை ஆண்டார். அதிகாரமிகு மன்னராட்சிக் காலத்தைப் போல் மக்களாட்சியை மாற்றியமைத்தார். கேள்வி கேட்க இயலாதவராகவும் மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஒருவராகவும் அவர் நடந்துகொண்டார். அதிகார துஷ்பிரயோகம் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல அதிகாரங்களைத் தனக்குத் தோதாக ஆட்டம்போடவைத்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகளை வாரிக்குவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்தே இறங்க நேரிட்டது. ஆனாலும் துளியும் ஜெயலலிதா தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

போயஸ்கார்டன், சிறுதாவூர், கொடநாடு என ஜெயலலிதா எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் சாமானியர்கள் தங்கள் வாழ்வில் பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அவருக்காகப் போக்குவரத்து மணிக்கணக்காக நிறுத்தப்பட்டது. தான் மக்கள் சேவகர் தன்பொருட்டு மக்கள் துன்பப்படுவதா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதா என்றே தெரியவில்லை. அவர் வணங்கும் கடவுள் அவருக்கு ஆளும் வாய்ப்பையும் அதிகாரத்தின் பயனையும் தந்திருக்கிறார் என்றே நம்பியிருப்பாரோ என்னவோ? வழிபாடுகளில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை சகலரும் அறிந்த ஒன்றுதான். ஆகவே, அவருக்கு இப்படியான எண்ணம் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த முதலமைச்சரும் இப்படியான நடவடிக்கையில் இறங்கியதில்லை. அரசாங்க கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்துக்காக விமானத்தில் பறந்த வரலாற்றை ஜெயலலிதா படைத்தார். முதலமைச்சர் உள்ளிட்ட அரசாங்கப் பணிகள் அனைத்தும் மக்களுக்கான வேலைகளைப் புரிய மக்கள் அளித்த ஒரு வாய்ப்பு என்பதை மறந்து அதன் அதிகாரங்களில் திளைப்பவர்கள் அரசியலில் பெருகிய பிறகு மக்களாட்சியின் மாண்பு பெரிதும் கேள்விக்குள்ளானது. தலைமைப் பதவிகளில் தகுதியற்றோர் அமரும்போது, பதவிக்கான மாண்புகள் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டானார் ஜெயலலிதா.

மக்களாட்சி என்னும் பெரும் தத்துவத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள் இப்படியான அரசியல்வாதிகளும் தலைமைப் பொறுப்பாளர்களும். மன்னராட்சிக் காலத்தில் மன்னர் வைத்ததுதான் சட்டம். மக்களெல்லாம் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டார்கள். பல மன்னர்கள் கொடுங்கோலாட்சி நடத்தி மக்களை வதைத்தார்கள். இப்படியான கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவிக்கக்கூடிய ஒன்றாக மக்களாட்சி பார்க்கப்பட்டதென்னவோ உண்மை. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் மக்களாட்சி என்பது மக்களுக்காக இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது தலையைக் குனியத்தான் வேண்டியதிருக்கிறது. மக்கள் பணிக்காக நம்மை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்னும் புரிதல் இருந்தால் ஒரு முதலமைச்சர் தனக்கென எந்தத் தனிப்பட்ட உரிமையையும் கோர மாட்டார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்தான் சாமானியர்கள் கையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் 62,30,552. வெறும் 62 லட்சம் சொச்சம் பேர் தான் அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர். இதேபோல் திமுகவிடமிருந்து ஆட்சியை அதிமுக கைப்பற்றிய 1977 தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 130 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 51,94,876தான். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2.81 கோடிப் பேர். இன்றுவரை இப்படியான நடைமுறைதான் தொடர்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகள் 1.74 கோடிதான்.

பெரும்பான்மை மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கட்சியைப் பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதில்லை. சிறுபான்மையோர் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்தான். மக்களாட்சியின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. மக்களாட்சி தந்த வாய்ப்பால் முதலமைச்சரான அறிஞர் சி.என்.அண்ணாதுரை இரண்டு ஆண்டுக்குள் மறைந்துவிட்டார். அவரையடுத்து முதலமைச்சரான மு.கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் தரமிறங்கியதற்கான மூல விதை விதைத்தவராகக் கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சராக ஆன எம்.ஜி.ஆர். தன்னை வழிபடுகிறவர்களுக்கு வள்ளலாகத் தோற்றமளித்தபோதும் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். அவரது ராமாவரம் தோட்டம் பற்றிய கதைகள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவை. எம்.ஜி.ஆர். அங்கே அளித்த விருந்துகள் போல அங்கே அரங்கேறிய கொடுஞ்சம்பவங்களும் அதிகப்படியானவை. இருந்தபோதும், எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களால் கடவுள்போல் வழிபடப்பட்டார். மக்களின் இந்த அறியாமைதான் அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் சாதாரண மக்களைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்ற மமதையை அளித்துவிடுகிறது.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை எல்லாம் அசுர வேகத்தில் கடந்துவிட்டார். 1991 ஆம் ஆண்டில் அமைந்த அவரது ஆட்சியில் பட்டம் பெற்றவர்கள் அநேகர் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி போல் செயல்படும் வாய்ப்பை ஜெயலலிதா பெற்றிருந்தார். ஜெயலலிதா மட்டும் மக்கள் சேவைக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து நடந்துகொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ நன்மைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் மக்களுக்கான தலைவராக இல்லாமல் மக்கள் தலைவராகவே அவர் நின்றுவிட்டார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை வெறும் முழக்கத்துடன் மூலைக்கு அனுப்பிவிட்டார். அதிகாரம் தரும் அத்தனை வசதி வாய்ப்புகளையும் ஒரு முதலமைச்சராகத் தான் அனுபவித்ததுடன் தன் தோழிக்கும் அதை மடைமாற்றிவிட்டார். கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கைங்கர்யம் குறிப்பிடத்தக்கது.

மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை அவரது சமூகநீதிப் பங்களிப்பையும் மீறிய கறையாக நிலைத்திருக்கிறது. தினகரன் ஊழியர் எரிப்பு விவகாரத்தில் திமுகவின் பெயர் எந்த அளவுக்கு அடிபட்டது என்பதைத் தமிழ்நாட்டு அரசியலை அறிந்தோர் மறந்துவிட முடியாது. அதே போல் இப்போது இந்த கொடநாடு விவகாரத்தில் அதிமுகவின் தொடர்பு என்பது பல விபரீத எல்லைக்குச் சென்றுள்ளது என்றுதான் தோன்றுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிய இந்தக் காலத்திலும், ஒவ்வொருவர் கையில் கைபேசி என்னும் நவீன சாதனம் எல்லா மர்மங்களையும் வெளிப்படுத்திவிடக் கூடிய வீரியத்துடன் செயல்படும்போதும், கொடநாடு எஸ்டேட் போன்ற விவகாரங்களின் மர்மம் ஒரு புகை மூட்டம் போல தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் படர்வது மக்களாட்சி என்பதையே கேலிக்குரியதாக்குகிறது. இதை எப்படிச் சாமானியர்களால்  பொறுத்துக்கொள்ள முடியும்? அதே நேரத்தில் அவர்களால் இதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? ஆட்சியிலிருக்கும் திமுககூட இதை அரசியல்ரீதியான காய்நகர்த்துதலுக்குத்தான் பயன்படுத்துகிறதோ என்று கருதவும் இடமிருக்கிறது. ஏனெனில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டும் திமுக அரசு கருணாநிதி நினைவிடம் போன்ற வெகுமக்களுக்குப் பயன் தராத விஷயங்களிலும் வீரியத்துடன் செயல்படுவது கண்கூடு. பாஜக ஆட்சியில் 3,000 கோடி சர்தார் பட்டேல் சிலை விவகாரம் எப்படி விமர்சிக்கப்பட்டது? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டபோது திமுக அதை எப்படி எதிர்கொண்டது? இவை எல்லாம் வெகு மக்கள் மூளையில் பதிவாகியிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதுடன் மக்களின் கடமை முடிந்துவிடுகிறது. அவர்களால் ஆட்சியை மாற்றியமைக்க முடியும். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்போது அதைக் கேள்வி கேட்க இயலாது. மக்களுக்கான ஆட்சியை மக்களுக்காக அமைத்திருக்கிறோம் என்னும் புரிதலற்ற ஆளுமைகளிடம் அதிகாரம் சிக்கும்போது, அதனால் மக்கள்தாம் பாதிக்கப்படுகிறார்கள். சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தச் சட்டத்துக்குத் தாங்களும் கட்டுப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடுதல் கூடாது. அப்படி மறந்துசெயல்படும்போது, மக்கள்தாம் அவர்களுக்கு அதை நினைவூட்ட வேண்டும். மக்கள் சார்பாக நின்று ஊடகங்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால்தான் மக்களாட்சி என்பது உரிய மகத்துவம் பெறும். இல்லாவிட்டால் ஜனநாயகம் சிதைந்துவிடும். ஜனநாயகம் சிதைவது ஜனங்களுக்கு நல்லதன்று.  

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரையின் மூல வடிவம். 

சனி, ஆகஸ்ட் 14, 2021

இருளாய்த் தொடரும் வெறுப்பு


தெளிவற்ற சம்பவங்களாகத் தொடங்குகிறது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள குருதி என்னும் மலையாளப் படம். சிறிது சிறிதாகப் படம் தெளிவடைகிறது. படம் தெளிவடையும்போது, நமக்குக் குழப்பம் அதிகரிக்கிறது. மதம், மனித நேயம், கடவுள், தண்டனை, நம்பிக்கை, கடவுள் நிமித்தமான பழிவாங்கல் எனப் படம் பல விஷயங்களைப் பேசுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருப்பதில் பிழையில்லை. ஆனால், ஒன்றை விரும்பி மற்றதை வெறுக்கும்போது அங்கே சிக்கல் உருவாகிறது. மனிதர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சமயங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்மையில் என்ன செய்து வருகின்றன? மக்களிடையே வெறுப்பை வளர்த்து அதில் குளிர்காய்கின்றன. அப்படிக் குளிர்காயும் மதங்களில் சிக்குண்டு சாமானிய மனிதர்களின் வாழ்வு சிதிலமடைகிறது. மதம் சீரழிப்பதறியாமல் மீண்டும் மீண்டும் கடவுள், மதம் என அந்தக் கழிசடைக் கருத்துருக்களிலேயே கிடந்துழல்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவேயில்லையா?

இப்ராஹிம் தன் மனைவியையும் குழந்தையையும் நிலச்சரிவில் இழந்துவிட்டு அவர்களை மறக்க முடியாமல் வனப் பகுதியில் ஒரு தனிமையான வீட்டில், தன் தம்பி ரசூல், தந்தை மூசா ஆகியோருடன் வசித்துவருகிறான். அந்த வீட்டுக்கு அருகிலேயே, நிலச்சரிவில் தன் மனைவியை இழந்த தன் தமையனுடன் வசித்துவருகிறாள் சுமதி. சுமதி  இப்ராஹிம் மீது அன்புகொள்கிறாள். பெண்ணற்ற அந்த வீட்டுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவள்தான் செய்கிறாள். இப்ராஹிமுக்கு அவள் மீது பிரியம் இருக்கிறது. ஆனால், அவனால் அவளைத் திருமணம்செய்துகொள்ள முடியவில்லை. மனைவி குழந்தை ஞாபகம், மதம் போன்றவை அவனைத் தடுக்கின்றன. இந்தச் சூழலில் ஓரிரவில் இப்ராஹிம் வீட்டுக்கு சப் இன்ஸ்பெக்டர் சத்யன் ஓர் அப்பாவி வியாபாரியான இஸ்லாமியரைக் கொன்ற இந்து இளைஞனான விஷ்ணு என்னும்  ஒரு கொலைக் குற்றவாளிக் கைதியுடன் வருகிறார். யாரையும் வெளியே செல்லக் கூடாது என்று சொல்லி அவர்களது மொபைல் போன்களைப் பறித்துவைத்துவிடுகிறார். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் உணவு கொண்டு வந்து மாட்டிக்கொள்கிறாள் சுமதி. அடுத்து விஷ்ணுவைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அவனைத் தேடி வருகிறார் கொல்லப்பட்ட வியாபாரியின் மகனான லைக். அதைத் தொடர்ந்து அந்த இரவில் அடுத்தடுத்துப் பல திகில் சம்பவங்கள் நிகழ்ந்தேறுகின்றன.

மனித மனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை மிக அண்மையில் போய்ப் படம்பிடித்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சம்பவங்கள் ஓரிரவில் நடந்துமுடிந்துவிடுகின்றன. ஓரிரவில் இத்தனை சம்பவங்களை ஒரு குடும்பம் எதிர்கொண்டால் அதன் நிலைமை என்னவாகும்? துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதம் மனிதரைப் பயமுறுத்தவும் பயன்படுகிறது; பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. அது யார் கையில் எந்தச் சூழலில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடு இருக்கிறது. கைதியைப் பத்திரமாகப் பாதுகாக்கத் துடிக்கிறார் சத்யன். வீட்டுக்கு வந்த அவர்கள் மாற்று மதத்தினர் என்றபோதும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இப்ராஹிம் இருக்கிறான். ஆனால், அவன் தம்பி ரசூலுக்கோ மனிதர்களைவிட மதம் முக்கியமாகப் படுகிறது. தங்கள் மதத்துக்காக ஏதாவது செய்தாக வேண்டும் அது தனது புனிதக் கடமை என்ற கருத்தில் ஊறிப்போய்க்கிடக்கிறான். சுமதிக்கு இப்ராஹிம் மீது காதல் இருக்கிறது. அதே நேரத்தில் தன் மதத்தினனான விஷ்ணுவைக் காப்பாற்றவும் விரும்புகிறாள். இது ஒருவகையான ஆடு புலி ஆட்ட விளையாட்டுதான்.

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்வதற்காகத் திரைக்கதையில் பலவிடங்களில் லாஜிக் மீறலை எதிர்கொண்டிருக்கிறார்கள். நம்ப முடியாத விஷயங்களைச் சகித்துக்கொண்டுதான் படத்தைத் தொடர வேண்டியதிருக்கிறது. இது முழுக்க முழுக்க சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை. இருவேறு மதங்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் வலுவான வாதங்களை எடுத்துவைக்கிறார்கள். வசனங்களும் கூராயுதம் போல் படத்தில் பயன்பட்டிருக்கின்றன. பல காட்சிகளில் பூடகமான மன உணர்வை இசை வழியே வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான காட்சிகள் இருளின் மத்தியிலேயே நகர்ந்தாலும் மதங்களில் நிரம்பி வழியும் வெறுப்பு அரசியலை அம்பலமாக்குகிறார்கள்.

முதல் இருபது நிமிடங்கள் எதுவும் புரியாமலே படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. படம் எங்கே போகப் போகிறது என்ன நடக்கப் போகிறது என்பதையே உணர முடியாத திரைக்கதையில் சப் இன்ஸ்பெக்டர் சத்யன் நுழையும் போதுதான் ஓரளவுக்குப் படத்தின் திசையை ஊகிக்க முடிகிறது. ஒரு குற்றச் செயல் அதுவும் மத அடிப்படையிலான கொலைச் சம்பவம் மனிதர்களிடையே எப்படி விஷ விதைகளைத் தூவுகிறது என்பதை மிகவும் துணிச்சலாக, வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்வதை விரும்புகிறார்கள். ஆனால், அப்படிப் பகிர்வதைச் சிக்கலாக்குகின்றன மதமும் அது தொடர்பான நம்பிக்கைகளும். மனிதர்களுக்குத் தேவை மனிதர்கள்தாம் மதமல்ல. ஆனால், இன்னும் மனிதர்கள் மதத்தைத் தூக்கிச் சுமந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஆடு புலி ஆட்டம் விளையாடிக் கொண்டே இருப்பார்களோ? இந்த விபரீத விளையாட்டுக்கு எல்லையே இல்லையா? இப்படியான பல கேள்விகளுடன் படம் முடிந்துவிடுகிறது. இப்படியான கேள்விகளை எழுப்பவதையே படம் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் மானு வாரியரின் முதல் மலையாளப் படம் இது. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் அனிஷ் பல்யால். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவைக் கவனிக்க இசையமைத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். ரோஷன் மேத்யூ, பிரித்வி ராஜ், மம்மு கோயா, ஸ்ரீண்டா, முரளி கோபி, சைன் டாம் சாக்கோ ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கிறது குருதி. திரில்லர் வகைப் படமாக இருந்தபோதும், தீவிரமான மன உணர்வுகளையும் படம் வெளிப்படுத்தியிருக்கிறது; சமூகம் சார்ந்த அரசியலை விவாதித்திருக்கிறது. ஆகவே, லாஜிக் மீறல்களைச் சகித்துக்கொண்டு படத்தை அலுப்பில்லாமல் ரசிக்க முடிகிறது. 

செவ்வாய், டிசம்பர் 01, 2020

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

கொன்றவளா அவள் கொண்டவளா?


இயக்குநர் M.பாஸ்கர் M.A. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்த படம் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ (1982). ஒளிப்பதிவு, விஸ்வம் நட்ராஜன். இசை, சங்கர் கணேஷ்.  முழுமையான பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிக்கும் நயமான திரில்லர் வகைப் படம் இது.

அன்பான கணவன், மனைவி, அழகுக் குழந்தை என்று நிம்மதியாக வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்ட சிக்கலும் அதிலிருந்து அது எப்படி மீண்டது என்பதுமே கதை. ராஜேஷ் (சிவகுமார்) ஒரு பெரிய நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிகிறார். அவருடைய மனைவி ராதா (அம்பிகா). இவர்களுடைய குழந்தை ப்ரியா (பேபி மீனா). பிற பெண்களுடன் ராஜேஷுக்குத் திருமணம் தாண்டிய உறவு உள்ளதோ என்பது ராதாவின் சந்தேகம். அது தொடர்பாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. காரசாரமாக வந்துவிழும் வார்த்தைகள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றன. ராதாவை வர்கீஸ் என்னும் உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறான் ராஜேஷ்.

அன்று ஏப்ரல் 1. வழக்கம்போல் அலுவலகம் சென்று வருகிறான் ராஜேஷ். குழந்தை வரவேற்பறையில் இருக்கிறாள். ராதா படுக்கையறையில் பொட்டு கலைந்து, காதில் ஒரு தோடு இல்லாமல் சற்று அலங்கோலமான தோற்றத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். ராஜேஷின் வாசிப்பு அறையில் ரிக்கார்ட் ப்ளேயர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பயன்படுத்திய இரண்டு கப் அண்ட் சாஸர்கள் அப்புறப்படுத்தப்படாமல் டீப்பாயின் மீது உள்ளன. இவையெல்லாம் ராஜேஷுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது அவன் தன் வாசிப்பறைக்குச் செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் மூழ்கடிக்கிறது. அவனை மட்டுமல்ல; பார்வையாளர்களையும்தான்.

லாரன்ஸ் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன்ஸ் (சத்யராஜ்). இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர் ராதா. லாரன்ஸுடைய மனைவி ஷீலா (சத்யகலா). அவர்களுடைய குழந்தை மேரி பார்வைத்திறனற்றவள். லாரன்ஸுக்குப் பெண்கள் பலருடன் உறவிருப்பதாக அவரது கடையில் வேலை பார்க்கும் கமல் உட்படப் பலரும் பேசுகிறார்கள். இது ஷீலாவுக்கும் தெரியும். இந்த லாரன்ஸின் சடலம்தான் ராஜேஷின் வாசிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடக்கிறது. லாரன்ஸை யார் கொலைசெய்திருப்பார்கள் என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.

முழு உண்மையை அறியாமல், கேட்ட, பார்த்த தகவல்களின் அடிப்படையிலான ஊகத்தின் உதவியுடன் உண்மையைப் பார்க்க விழைந்தால் அது எத்தகைய விபரீதத்தில் கொண்டுவிடும் என்பதையே திரைக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துவைத்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்பார்கள். அதைத் தான் இந்தப் படமும் சொல்கிறது. லாரன்ஸை ராதா கொலைசெய்திருப்பாளோ எனச் சந்தேகிக்கிறார் ராஜேஷ். ராஜேஷ் கொன்றிருப்பாரோ எனச் சந்தேகிக்கிறாள் ராதா. ராதாதான் லாரன்ஸைக் கொன்றாள் என்றே சொல்கிறாள் ஷீலா. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவரவர் ஊகத்துக்குத் தேவையான தடயங்களும் சந்தர்ப்ப சாட்சியங்களும் அவரவர் ஊகத்தை வலுப்படுத்துகின்றன. இப்படி ஒரு பயணத்தின் வழியே கொலைசெய்தவர் யார் என்பதும், அதற்கான காரணம் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியவரும்போது அது எதிர்பாராததாக உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு, பின்னணியிசை இரண்டும் அமானுஷ்யத் தன்மையுடன் இயங்கும்வேளையில் வசனமோ பூடகத்தன்மையிலானது. சிவகுமார், அம்பிகா, பேபி மீனா, சத்யராஜ், சத்யகலா, விஜயராகவன் எனப் படத்தில் பங்குகொண்ட அனைவரும் அவரவர் தரப்பைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு திரில்லராக எந்த இடத்திலும் இறுக்கம் குலையாமல் இறுதிவரை பயணிக்கிறது படம். நகைச்சுவைக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் உள்ளார்கள். ’பைரவி’ திரைப்படத்தை நினைவுபடுத்துவது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சிவகுமாரைப் படுத்தி எடுக்கும் சில காட்சிகளை மட்டும் ரசிக்க முடிகிறது.

மனைவிமீது அன்புகொண்ட அதே நேரத்தில் அவள் மீது எழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலாத ஒரு சராசரிக் கணவனாக சிவகுமார் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான பாசம், கோபம், எரிச்சல், ஆற்றாமை என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மனரீதியான பாதிப்பு கொண்ட பெண்ணாக இருந்தபோதும் அம்பிகாவின் கதாபாத்திரம் இயல்பான ஒரு மனைவின் தன்மையிலிருந்து பெரிதும் மாறாதது. கணவனே கண் கண்ட தெய்வம் என்னும் பழமையில் ஊறிப்போனது. அதே நேரத்தில் தன் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும் தயங்காதது. வேர் பழமையிலும் கிளை புதுமையிலும் ஊடாடும் கதாபாத்திரத்தை அம்பிகா இயல்பான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்.  கனவில் அம்மா மலையிலிருந்து விழுந்ததைக் கண்ட அதிர்ச்சி நீங்காத நிலையில் மருத்துவமனையில் அம்மா அம்பிகாவைப் பார்க்க வரும் காட்சியில் பேபி மீனாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்த்துவிடக் கூடியது. தந்தை இரவின் கெட்ட கனவால் கத்தும்போது பேபி மீனா, “ஏன் டாடி கத்துத இனிமே இப்படிக் கத்தாத எனக்குப் பயமா இருக்கு” என்பது மிக யதார்த்தமான வசனம். திரைக்கதையும், அதற்குத் தேவையான கூர்மையான வசனங்களும் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

படத்தின் வசனங்களில் பாஸ்கரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறது. உதாரணமாக சில வசனங்கள்:

“செத்துப் போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.”

”மாங்கல்யம் பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.”

”கொலைப்பொருளா இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”

”குறுக்குவிசாரணை பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”

”எங்குணம் துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”

இயன்றவரை யதார்த்தமான திரைமொழியில் படத்தை நகர்த்தினாலும் தான் எடுப்பது ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற விவேகத்துடன் பாஸ்கர் படத்தை இயக்கியிருப்பதால் எந்த இடத்திலும் சினிமாத்தனங்கள் வரம்பை மீறி வெளிப்படவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை இப்போதும் எந்த விலகலுமின்றிப் படத்தைப் பார்க்க முடிவதே இந்தப் படத்தின் சிறப்பைச் சொல்லும்.

ஞாயிறு, அக்டோபர் 23, 2016

சினிமா ஸ்கோப் 19: புரியாத புதிர்

சைக்கோ
மனித மனம் மிகவும் புதிரானது. மிக நெருக்கமாக மனத்தை நோக்கினால் அங்கே இன்னும் மிருக குணத்தின் தடத்தைக் கண்டடைய முடியும். என்னதான் கணினிக் காலத்து நாகரிக வாழ்வை மேற்கொண்டாலும் மனிதரது ஆழ்மனத்தில் கற்காலத்தின் சுவடுகள் எளிதில் புலனாகும். பழிவாங்குதல் என்னும் கோர குணம் தன் குரூர முகத்தைக் காட்டிக்கொண்டு பல்லிளிக்கும். பெரும்பாலான மனிதர்களுக்குப் பழிவாங்குதல் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. அது சில வேளையில், மனம் பிசகாகிக் கிடக்கும் போதில், மனத்தின் மேல் தளத்துக்கு வந்து ஆட்டுவிக்கும். அப்போது மனிதர்களின் நடத்தையில் நாகரிகத்தை எதிர்பார்க்க இயலாது. அவரை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் அந்த மிருகவெறி, இளஞ்சூடான உதிரச் சுவை அறியத் துடிக்கும். எல்லோரது மனத்திலும் இந்த மிருகவெறி  மினுக்கிட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, அது எப்போது வேண்டுமானாலும் உயிர்பெற்றெழுந்துவிடுகிறது. ஆழ்மனத்தில் பேரழிவு தரும் சிதிலம் ஏற்பட்டுவிடும்போது, இந்த உயிர்த்தெழுதலைத் தடுக்க முடியாது. 
பெர்ஃபியூம்: த ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்
இத்தகைய மனப்பிசகு கொண்ட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலைகளை நிகழ்த்தும் திரைக்கதையமைத்து ரசிகர்களுக்குத் திகிலைத் தரும் வகையிலான படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தொடர் கொலைகளை நிகழ்த்தும் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய படங்களில் மிகவும் ரசனையானது, கலாபூர்வமானது எனச் சொல்லத்தக்கது ‘பெர்ஃபியூம்: த ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்’ என்னும் ஜெர்மானியப் படம். ‘ரன் லோலா ரன்’ படத்தின் இயக்குநரான டாம் டைக்வார் இயக்கிய இந்தப் படம் திரையில் திரவிய வாசனை பரப்பிய அதிசயத்தை நிகழ்த்தியது.  

கலைஞன் கமல்
தமிழில் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’ தொடங்கி, கமல் நடித்த ‘கலைஞன்’, ‘வேட்டையாடு விளையாடு’ வரை அநேகப் படங்களைத் ரசிகர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். ஆல்ஃபிரட் ஹிட்சாக் இயக்கிய ‘சைக்கோ’ படத்தை இத்தகைய படங்களுக்கான முன்னோடி எனலாம். இதன் சாயலில் இயக்குநர் பாலுமகேந்திரா ‘மூடுபனி’ படத்தை உருவாக்கினார்.   
வேட்டையாடு விளையாடு கமல்
மிருகவெறியேறிய கதாபாத்திரங்கள் தங்கள் மன அமைதிக்காக அடுக்கடுக்காகக் கொலைகளைச் செய்வதுதான் இத்தகைய படங்களின் ஜீவ இழை. இரவில் உறக்கம் வராமல் தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும், அவ்வப்போது மனநிலை மாறுபாடு கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தின் கதை ‘டாக்ஸி டிரைவர்’ (1976). இதன் திரைக்கதையை எழுதியிருப்பவர் பால் ஸ்ரேடெர். படத்தை இயக்கியிருப்பவர் மார்டின் ஸ்கோர்ஸேஸி. இவர் ‘லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீஸ்ஸ் கிறைஸ்ட்’ படத்தை இயக்கியவர். வஸந்த் இயக்கிய ‘அப்பு’ திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் இதே போல் தூக்கம் வராமல் இரவு முழுவதும் டாக்ஸி ஓட்டும். ‘டாக்ஸி டிரைவர்’ படத்தில் ட்ரேவிஸ் கதாபாத்திரம் பாலியல் விடுதியிலிருந்து ஐரிஸ் என்னும் பெண்ணைக் காப்பாற்றியது போல் பிரசாந்த் பாலியல் விடுதிப் பெண்ணான தேவயானியைக் காப்பாற்றுவார். ஆனால் ‘அப்பு’ திரைப்படம், மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான ‘சடேக்’ என்னும் இந்திப் படத்தின் மறு ஆக்கம் என்றே குறிப்பிடப்படுகிறது. 
டாக்ஸி டிரைவர்
இரவுக்கும் தனிமைக்கும் கொலைகளுக்கும் ஏதோவோர் உறவு இருக்கும்போல. இத்தகைய படங்களில் பெரும்பாலான கொலைகள் இரவில்தான் நிகழ்த்தப்படுகின்றன. 1986-ல் வெளியாகி தமிழகத்தையே கலக்கிய ‘ஊமைவிழிக’ளில் ரவிச்சந்திரன்கூடக் கொலைகளை இரவில்தான் செய்வார்; அதுவும் அமானுஷ்யமான சூழலில். சூனியக்காரி போன்ற தோற்றம் கொண்ட அந்தப் பாட்டி, காலால் தரையில் பள்ளம் தோண்டும் குதிரை, தனியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வெங்கல மணியிலிருந்து வெளிப்படும் மர்மமான மணியோசை, இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியின் பயணம் என அனைத்துமே பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும். ஆபாவாணன் திரைக்கதையில் அர்விந்த்ராஜ் இயக்கிய ‘ஊமைவிழிகள்’ திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பெயரை வெள்ளித் திரையில் உறுதிபட எழுதியது.  

ஊமை விழிகள் விஜயகாந்த், சரிதா
லட்சியவாத நோக்கில் பத்திரிகை நடத்தும் ஜெய்சங்கர், சந்திரசேகர் அருண்பாண்டியன் நட்பு, காதல், செண்டிமெண்ட், சமூக அக்கறை, நேர்மை தவறாத காவல் அதிகாரி டி.எஸ்.பி.தீனதயாளு, இனிமையான பாடல்கள், திகிலூட்டும் பின்னணியிசை எனப் பொழுதுபோக்கு சினிமாவுக்கான அத்தனை இடுபொருள்களையும் கலந்து உருவாக்கப்பட்ட படம் இது. க்ளைமாக்ஸில் வரிசையாக கார்கள் வரும் காட்சி அப்போது மிகவும் சிலாகித்துப் பேசப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் போன்றே அது உருவாக்கப்பட்டது. கௌபாய் படங்களில் வரும் கதாபாத்திரம் போல் அருண்பாண்டியன் வேறு ஒரு மவுத் ஆர்கனை வாசித்துக்கொண்டிருப்பார். 

மேற்கண்ட படங்களில் எல்லாம் கொலை செய்பவர் யார், எதற்காகக் கொலை செய்கிறார் போன்ற விவரத்தைப் படத்தின் பயணம் தெளிவாக்கிக்கொண்டே வரும். ஆனால் கொலைகள் எதற்காக நடைபெறுகின்றன, யார் கொலை செய்வது என்ற விவரத்தைத் தெளிவாகச் சொல்லாமலே ஒரு படத்தை உருவாக்க முடியுமா? சந்தேகம்தான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் பாங் ஜூன் ஹோ, தான் இயக்கிய ‘மெமரிஸ் ஆஃப் மர்டர்’ படத்தை அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் ஒரு மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

மெமரிஸ் ஆஃப் மர்டர்
மழை பொழியும் இரவுகளில் மிகவும் அழகான, சிவப்பு உடை அணிந்த இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கொலைக்கான காரணத்தையோ கொலையாளியையோ கண்டுபிடிக்க முடியாமல் புலனாய்வுத் துறையினர் திணறுகிறார்கள். இந்த மர்ம முடிச்சுகளைக் கண்டறிய சியோலிலிருந்து புலனாய்வாளர் ஒருவர் வருகிறார். அவர் நிதானமாகச் செயல்படுகிறார். கையில் கிடைத்த விவரங்களை வைத்து மேலும் ஒரு கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதே போல் இரு நாட்களுக்குள் அந்தப் பிணத்தையும் கண்டுபிடிக்கிறார். கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி செய்யப்பட்டிருக்கின்றன, சடலங்கள் ஒரே போல் கிடத்தப்பட்டிருக்கின்றன. கொலைகள் தொடர்கின்றன. ஆனால், சாட்சிகள் மட்டும் கிடைக்கவில்லை. கொலை நடைபெறும் இரவுகளில் எல்லாம் ரேடியோ நிலையத்தில் வருத்தமான கடிதம் என்னும் ஒரு பாடல் ஒலிபரப்பாகியிருக்கிறது என்னும் உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தத் துப்பை வைத்துக் கொலையாளியை நெருங்க முடியுமா என்னும் கோணத்தில் செல்கிறார்கள். ஆனாலும், இறுதிவரை அவர்களால் கொலையாளி இவர்தான் எனத் திட்டவட்டமாகச் சொல்ல ஒரு சான்றுகூடக் கிடைக்கவில்லை.  

மெமரிஸ் ஆஃப் மர்டர்
இந்தப் படத்தின் சிறப்பு இதன் நிதானம். புலன்விசாரணை என்ற அதன் நேர்கோட்டுப் பயணம் எந்த இடத்திலும் சிறு விலகலைக்கூடச் சந்திப்பதில்லை. அநாவசியமான திகில் எதுவும் பார்வையாளர்களுக்கு ஊட்டப்படவில்லை. ஆனால், இந்த மர்மம் தெளிவாகிவிடாதா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை ஏற்படுத்திவிடும். இது தென் கொரியாவின் ஹ்வஸியாங் என்னும் நகரத்தில் 1986-லிருந்து 1991-க்குள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைச் சித்தரித்து உருவாக்கப்பட்ட படம். இந்த உண்மைச் சம்பவத்திலும் கொலையாளி இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. யார் கொன்றார், எதற்குக் கொன்றார் என்ற விவரம் வெளியுலகுக்குத் தெரியவரவேயில்லை. உலகெங்கும் இதைப் போல் தெளிவாகாத மர்ம வழக்குகள் இருந்துகொண்டேயிருக்குமோ?

< சினிமா ஸ்கோப் 18 >                          < சினிமா ஸ்கோப் 20 >

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

இயேசுவின் உடலைத் தேடி...


இயேசு கிறிஸ்துவையும் பரிசுத்த வேதாகமத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் அநேகப் படங்கள் வந்துள்ளன. இயேசுவின் அற்புதங்களைப் புகழ்ந்தும் விமர்சித்தும் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன என்பது கடந்த கால வரலாறு, அந்த வரிசையில் வெளிவர இருக்கும் புதிய ஹாலிவுட் திரில்லர் படம் ‘ரைஸன்’.

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையற்ற ஒருவரின் பார்வையில் இந்தப் படம் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்ன இந்தப் படத்தில் இருக்கிறது என்ற எண்ணமே இப்படத்தின் மீதான சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் நடைபெறும் நிகழ்வுகளைச் சம்பவங்களாகக் கொண்டது இப்படத்தின் திரைக்கதை. க்ளேவியஸ் என்னும் ரோமத் தளபதியும் அவனுடைய உதவியாளனான லூஸியஸும் இயேசுவின் மர்மங்களைக் கண்டறியப் புறப்படுகிறார்கள். ரோம ஆளுநர் பொந்தி பிலாத்து இவர்கள் இருவரையும் காணாமல் போன இயேசுவின் உடலைக் கைப்பற்ற அனுப்புகிறான். அவர்களது நோக்கம் இயேசு உயிர்த்தெழுதல் சாத்தியமற்றது என்பதை நிரூபிப்பதும், ஜெருசலேமில் புரட்சி எழாமல் தடுப்பதுமே ஆகும். இதில் அவர்கள் வெற்றிபெற்றார்களா, இயேசுவுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஹாலிவுட் இந்தப் படத்தை முடக்க திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தாலேயே இப்படம் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகவில்லை என ஜீஸஸ் டெய்லி என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. சோனி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்று வெளியிடுவதாலேயே இதைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கப்போகிறது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தப் படத்தை, 1984-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘ரெட் டான்’ படத்தின் திரைக்கதாசிரியரும் ‘வாட்டர் வேர்ல்டு’ (1995) திரைப்படத்தை கெவின் காஸ்னருடன் சேர்ந்து இயக்கி கவனம் பெற்றவருமான கெவின் ரெனால்ட்ஸ் இயக்கியிருக்கிறார். ரைஸன் படத்தின் கதையைப் பால் அயலோ எழுத திரைக்கதையை கெவின் ரெனால்ட்ஸும் பால் அயலோவும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஜோஸப் ஃபைன்ஸ் ரோமத் தளபதி வேடத்தையும், அவருடைய உதவியாளர் வேடத்தை டாம் ஃபெல்ட்டன் என்னும் நடிகரும் ஏற்றிருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சைகளை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் உருவாவதையே தடுக்க முயன்ற ஹாலிவுட், படம் வெளியான பின்னர் என்ன எதிர்வினையை ஆற்றுமோ என்னும் திகிலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரில்லராக இப்போதைக்கு ரைஸன் அமைந்திருக்கிறது.

டிசம்பர் 25 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்