டாலர் எனும் புதிருக்குள் சிக்கிய வாழ்க்கை
அந்த மாலைப்பொழுது கொஞ்சம் இறுக்கமானதாக அமைந்தது. கண்முன்னே அமெரிக்கத் தம்பதி ஒன்றின் குடும்பச் சிக்கல் அரங்கேறிக்கொண்டிருந்தது. தீவிர மன உணர்வுகளைக் கிளறியபடி நகர்ந்துகொண்டிருந்ததுஅல்லயன்ஸ் பிரான்சேயில் கண்ட நாடகமான வேலி. நவீன வாழ்வின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மனிதர்கள் தேசங்களின் எல்லையை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள்.ஆனால் அவர்களது மனதில் சொந்த தேசம் விதைத்த எண்ணங்களே பரிபூரணமாக நிரம்பிவழிகின்றன.தாங்கள் சென்ற நாட்டில் திடீரென ஒரு சிக்கல் ஏற்படும்போது நிலைதவறிவிடுகிறார்கள். உறவுகளுக்குள்ளேயே சிக்கல் முளைத்துவிடுகிறது. இதற்கெல்லாம் மனிதர்களின் மனோபாவம் காரணமா,அவர்கள் சென்று வசித்துவரும் வெளிநாடு காரணமா இப்படிப் பலகேள்விகளை எழுப்புகிறது வேலி.
எந்த நேரத்திலும் மனிதர்களை மனப்பிறழ்வுக்குள்ளாக்கிவிடும் சாத்தியங்களைக் கொண்ட நெருக்கடிகளைத் தாராளமாகத் தந்துகொண்டேயிருக்கிறது அந்த அமெரிக்க வாழ்க்கை. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துவருகிறான் ராஜன் தன் மனைவி ஜெயாவுடன். டாலர்களைக் குவிப்பதற்காக,படுக்கையறையின் ஒரு பகுதியில் தலையணை போல் எப்போதும் இடம்பிடித்துக் கொள்கிறது மடிக் கணினி. தன் ஒன்றரை வயதுக் குழந்தை கட்டிலிலிருந்து தவறி விழுந்து விபத்து நேர்ந்துவிடுவதாக ராஜன் கூறுகிறான். அதை அவனுடைய மனைவியும் நம்புகிறாள். குழந்தை சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க மருத்துவர்களது அறிக்கை சொல்கிறது. குழந்தை வளர்க்கும் தகுதி ராஜனுக்கு இல்லை என்று அவர்களின் சட்டம் சொல்ல முற்படுகிறது. சராசரியான இந்தியத் தாயான ஜெயாவுக்குத் தங்கள் குழந்தை தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்னும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ராஜனின் நெருங்கிய நண்பன் கோபால், அவனுடைய மனைவி ரேகா ஆகியோரின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் காந்தாவை இந்த வழக்குக்காக அமர்த்துகிறார்கள்.
நாடகத்தில் ஒரு புதிர் மெல்ல மெல்ல அவிழ்கிறது. அது முழுவதுமாக அவிழ்ந்துகொள்ளும்போது நாடகம் நிறைவடைகிறது பார்வையாளனின் மனத்தில் வாழ்வு குறித்த வெறுமை சூழ்ந்துகொள்கிறது.வாழ்க்கையின் ஆதார நம்பிக்கைகளை மிக லாவகமாக ஆனால் தீவிரமாக அசைத்துப் பார்க்கிறது இந்த நாடகம். போலி ஆசாபாசத்துடன் நவநாகரிக உடையணிந்து நடமாடும் நவீன மனிதர்களை எள்ளி நகையாடுகிறது வேலி. மனிதர்களின் அகத்தில் கரைபுரண்டு ஓடும் சாக்கடையின் துர்நாற்றத்தை, புறத்தில் போட்டுக்கொள்ளும் ஒப்பனையால் தவிர்க்க நினைக்கும் அறியாமையைக் கொடூரத்துடன் குத்திக்காட்டுகிறது நாடகம்.
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் அவன் மீது அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என்கிறது பரிசுத்த வேதாகமம். தான் எப்படியிருந்தாலும் தன் குழந்தை ஊரார் மெச்சும் உத்தமனாக வளர வேண்டும் என்பதே பெற்றொரின் விழைவு. அதன் பொருட்டே அவர்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டிக்கிறார்கள். ஆனால் அது வரம்பை மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அப்படியான பொறுப்பில் அவர்கள் சிறிதளவு பிசகினாலும் சட்டம் தன் கடமையைக் கவனிக்க வந்துவிடுகிறது. இது அமெரிக்காவின் சட்டம். ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைச் சட்டம் கண்காணிக்கத் தொடங்கினால் அங்கே உணர்வுக்கு வேலையில்லை. அமெரிக்க சட்டத்தின் நோக்கம் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதல்ல தனிமனிதனின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே.
ஐந்து கதாபாத்திரங்கள், ஒன்றரை வயதுக் குழந்தை அப்பு உள்பட காட்டப்படாத ஓரிரு கதாபாத்திரங்கள்,டிரேயில் ஒரு தண்ணீர் ஜாடி, இரண்டு டம்ளர்கள், சில கோப்புகள், லேடிஸ் பேக், ஜெண்ட்ஸ் பேக், ஒரு சீப்பு,ஒரு மொபைல், ஒரு பேனா, ஒரு டைரி. அநேகமாக இவைதான் அரங்கத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால் பார்வையாளன் கண்முன்னே அமெரிக்காவை, அங்கே ஒரு தம்பதி எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளை, சட்டச் சிக்கல்களைத் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். இதைச் சாத்தியப்படுத்தியதில் நாடக இயக்குநரின் பண்பட்ட இயக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. நாடகத்தின் பேசுபொருளை மிகத் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் சித்தரித்திருக்கிறது நாடகம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த வேடத்துக்கு ஏற்றபடி மிக பாந்தமாகப் பொருத்தியிருக்கிறது. அது மிகவும் தத்ரூபமாக அமைந்திருப்பதால் தான் பார்வையாளனால் அந்த வழக்கறிஞர் பாத்திரத்துடன் ஒன்றவே முடியவில்லை.அது நாடகத்தின் சிருஷ்டியில் நேர்ந்திருக்கும் ரஸவாதம்.
கணவனுக்குப் பயந்து அவனுக்கு அடங்கியே நடந்துபழகிய ஜெயாவின் உடல்மொழியிலேயே சதா ஒரு பயம் தென்படுகிறது. தயக்கத்தின் வேர் அவளுடைய நடையையே பாதித்திருக்கிறது. ஆனால் அவள் குழந்தைக்குக் கணவனால் ஆபத்து என்று தெரிந்தபோது அவளிடம் வெளிப்படும் ஆங்காரம் அவளிடம் குடிகொண்டிருக்கும் இந்திய தாய் மனத்தை வெளிக்கொண்டுவந்துவிடுகிறது. சிறுவயதில் தந்தையின் கடுமையான தண்டனைகளைப் பெற்று வளர்ந்திருந்த ராஜன், அவனுக்கும் ரேகாவுக்குமான வெளியில் சொல்ல முடியாத உறவு, வேலையின் நெருக்கடி ஆகியவற்றால் எப்போதும் தீராத மனக் குழப்பத்துடனேயே இருக்கிறான். அதிலிருந்து தப்ப தற்காலிகத் தீர்வாகக் குடியை நாடுகிறான். ரேகா ஒரு புதுமைப்பெண். அவள் மென்மையானவள்தான். ஆனால் அது சுரண்டப்படும்போது அவள் கொதித்தெழுகிறாள். எந்த எல்லைக்கும் சென்று தன் கோபத்தைக் காட்டுகிறாள். ராஜன் மீது அவளுக்கிருப்பது சாதாரண பழிவாங்கும் உணர்வல்ல.அது ஆண்களின் கயமைத் தனத்தின்மீது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடு.அதனால் தான் அவளால் ஜெயாவுக்கு இரக்கப்பட முடிகிறது. இந்த நாடகத்தில் அந்த கோபால் பாரதி சுட்டும் ஒரு வேடிக்கை மனிதன் அவ்வளவே. அவனது அறியாமை அவனைப் பாதுகாத்துக்கொள்கிறது.குழந்தை இல்லை என்னும் ஏக்கம் தத்து எடுக்க விரும்பாத மனைவி என அவனது வாழ்க்கை நித்ய கண்டம் பூரண ஆயுசு ரகம் தான்.
மனித வாழ்வைப் புரட்டிப் போட்ட நவீன சாதனமென மொபைலைச் சொல்லலாம். நவீன வாழ்வில் செய்திகளும், சம்பவங்களும் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன. தீர்வுக்கான முயற்சியாக இவைஅடையாளம் காணப்பட்டாலும் மன அழுத்தத்தை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் மொபைலுக்கு உள்ள பங்கை எளிதில் புறந்தள்ள முடியாது. இந்த நாடகம் அதை நுட்பமாகச் சித்தரித்திருக்கிறது. ஜெயா தன் தாயுடன் மொபைலில் மேற்கொள்ளும் உரையாடலில் தொடங்கும் நாடகம் ராஜன் வழக்கறிஞர் காந்தாவுடன் மொபைலில் வாக்குமூலம் தருவதாகச் சொல்வதுடன் நிறைவடைகிறது. ஒரு திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து நாடகம் தரும் அனுபவம் முற்றிலும் வேறுபடுகிறது. நாடகத்தின் அனுபவம் மனதில் அடியாழம்வரை ஊடுருவுகிறது. தீவிர நாடகமான வேலி மனத்தில் வெவ்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; வாழ்வு தொடர்பான நமது புரிதலை வளப்படுத்த உதவுகிறது.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகம் என்னும் ஒரு கலையின் மகத்துவத்தை நம்மிடையே புரியவைத்து விடைபெறுகிறது இந்த வேலி.
எழுதியவர் :சுதிப்தா பாமிக்
நடிகர்கள்:
ராஜீவ் ஆனந்த் - ராஜன்
பரீன் அஸ்லம் - ஜெயா
அமல் -கோபால்
டெல்பின் ராஜேந்திரன் - ரேகா
விலாசினி - காந்தா லால்வாணி
ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் ஒளி அமைப்பு : சுனிபா பாசு.
மேடை நிர்வாகம் : மணிபாலன் , மனோ , பார்த்திபன்
தமிழ் மொழிபெயர்ப்பு & தயாரிப்பு : அம்ஷன் குமார்
இந்நாடகம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இந்தக் கட்டுரையின் சுருக்கம் தி இந்து நாளிதழில் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக