சில
நாள்கள் நாம் எதிர்பாராத விஷயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும். அவை நல்லவையாக
இருந்தால் மனம் மகிழும்; துன்பம் தருபவையாகிவிட்டால் அவ்வளவுதான் அந்த நாளின் நினைவு
மனத்தில் அழிக்க முடியாதபடி பதிந்துவிடும். பின்னர், எப்போதெல்லாம் மனம் சோர்வுகொள்ளுமோ
துயர நினைவில் மூழ்குமோ அப்போதெல்லாம் அந்த நாள் மனவடுக்கில் மேல் தட்டில் தட்டுப்படும்.
அப்படியொரு நாளாகிவிட்டது இந்த ஏப்ரல் 15.
மதியம்
மூன்று மணிக்குப் படுத்து உறங்கிவிட்டேன். ஐந்தே கால் அளவில் முழித்தேன். இரண்டு மணி
நேரத்துக்கு மேல் தூங்கியதால் மனம் சொங்கித்தனமான உணர்வைக் கொண்டிருந்தது. கையில் மொபைலைத்
தூக்கிவைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை மேய்ந்துகொண்டிருந்தேன். கல்லூரி நண்பன் பாலா ஜோசப்
செபஸ்தியான் படங்களைக் கொண்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு
மெதுவாக கமெண்ட் செக்ஷனுக்கு வந்தால் பலரும் RIP, ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்கள்.
சட்டென ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. மீண்டும் மேலே போய் பாலா என்ன எழுதியிருக்கிறான்
என்று படித்தேன். நம்பவே முடியவில்லை. பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அது உண்மைதான்.
நண்பன் ஜோஸப் செபஸ்டியன் கொரானா காரணமாக உயிரிழந்திருந்தான்.
யாரிடம்
விசாரிக்கலாம் செபஸ்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் யார் எனத் தீவிரமாக
யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று செல்லத்துரையின் நினைவு வந்தது. ஆகவே, செல்லத்துரைக்குப்
பேசினேன். அவன் செய்தியை உறுதிப்படுத்தினான். ஏப்ரல் 13 அன்றைய இரவில் 12 மணி அளவில்
மரணமடைந்ததாகவும் கொரோனா மரணம் என்பதால் அங்கேயே நல்லடக்கம் நடைபெற்றுவிட்டதாகவும்
கூறினான். ஏப்ரல் 4 ஈஸ்டர் அன்றுகூடப் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தான். டெல்லியில் வசிக்கும் நண்பன் வெங்கடேஸ்வரன் இரண்டு மூன்று நாள்களுக்கு
முன்னதாக செபஸ்டியனிடம் பேசியபோது, தொற்றிலிருந்து மீண்டு விட்டதாகவும் ஓரிரு நாளில்
டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று சொன்னதாகவும் கூறினான். ஆனால், அதற்குள் கார்டியாக் அரெஸ்ட்
காரணமாக சட்டென்று உயிர் பிரிந்திருக்கிறது.
செபஸ்டியானை
எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடிந்த வருடத்தில் குற்றாலத்தில்
நடைபெற்ற செல்வ மாமாவின் திருமணத்துக்கு வந்திருந்தான். அப்போது தென்காசி கீழப்பாளையம்
வீட்டில் எடுத்த புகைப்படங்களில் அவனும் வழக்கமான சிரிப்புடன் இப்போதும் காணப்படுகிறான்.
அதன் பின்னர் வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிட்டோம்.
மீண்டும் கல்லூரி நண்பர்களின் கூடுமை 1998இல் சென்னையில் நடைபெற்றபோது சந்தித்தேன்.
அப்போது நான் சரியான வேலை இல்லாமல் இருந்தேன். ஆகவே, அவன் தனக்குத் தெரிந்த என்விஎச்
கோயா நிறுவனத்தில் என்னையும் வேலைக்குச் சேர்த்துவிட்டான்.
இருவரும்
அந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தோம். இருவரையும் குஜராத் அனுப்புவதாக முதலில் சொன்னார்கள்.
வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டால் தமிழ்ப் படம் பார்க்க முடியுமோ முடியாதோ என்று தோன்றியதால்,
வேலை நிமித்தமாகப் புறப்படுவதற்கு முந்தைய நாளில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் – அப்படித்தான்
நினைவு – பிரபு சுவலட்சுமி நடித்த பொன் மனம் திரைப்படத்தை இருவரும் சேர்ந்து பார்த்தோம்.
பின் ஏனோ நிறுவனம் அவனை குஜராத்துக்கு அனுப்பியது. நான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டேன்.
அப்போது கையில் மொபைல் இல்லாததால் தொடர்பு விடுபட்டுவிட்டது.
சில
வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை பாரிஸ் பஸ் நிலையம் அருகே வைத்து செபஸ்டியானைப் பார்த்தேன்.
அப்போது நான் கோயா நிறுவனத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அவனும்
கோயாவிலிருந்து சென்று வேறொரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினான். சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றான். அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற நண்பர்களின்
கூடுகையில் ஒருமுறை பார்த்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான். நண்பர்களுடன் புகைப்படம்
எடுத்துக்கொண்டான். எப்போதுமே உற்சாகமா காணப்படுவான். கடுமையான உழைப்பாளி. கல்லூரிக்
காலத்தில் அவன் தன் தந்தையின் தோள்மீது கைபோட்டுப் பேசிச் சென்ற காட்சி ஒன்று மனத்தில்
எழுகிறது. அவனுடைய உற்சாகமான சிரிப்பை மனம் ஒருபோதும் மறக்காது. கொரானா காலம் செபஸ்டியனுக்கு அஞ்சலி எழுதவைக்கும் என எண்ணவில்லை.
மரணம் நிகழ்ந்த கணத்துக்கும்
அதற்கு முந்தைய கணத்துக்கும் இடையே
ஓர் ஆயுள் காலம் வந்தமர்ந்துவிடாதா என
அற்ப மனம் ஏங்கும்.
யதார்த்தமோ செவிட்டிலறையும்.
எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறோம்.
ஆனால், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்னும் வாய்ப்பு
மனத்தைச் சாந்தப்படுத்திவைக்கிறது.
இப்போது உன் மரணம்
அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிவிட்டது.
இவ்வளவு சீக்கிரம் இது நிகழ்ந்திருக்க வேண்டாம்
நீ எங்கோ சென்றுவிட்டாய் உன் சிரிப்பு எங்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
அதை என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக