கிறிஸ்டோபர் நோலன் என்ற பெயர் ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே மகத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது. மெமெண்டோ என்னும் அவரது படம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மெமெண்டோவின் தாக்கத்தில் உருவானது என்பதை நம்மில் அறியாதோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. அந்தப் படம் தமிழில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஏ.ஆர். முருகதாஸுக்கு இந்திய இயக்குநர் அந்தஸ்து கிடைக்க காரணமான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்சோம்னியா, இன்ஸெப்ஷன், இண்டர்ஸ்டெல்லர், டன்கிர்க் படங்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் டெனெட்.
டெனெட் திரைப்படத்தின் கதையைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கிண்டல்களும் கேலிகளும் உலவிவருகின்றன. ஏனெனில், அவ்வளவு சிக்கலான கதை அது. கடந்த காலத்துக்குள் சென்று நமது தவறு ஒன்றைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அல்லது எதிர்காலத்துக்குள் சென்று நாம் எதிர்கொள்வதை அறிந்துகொண்டால் அதை எப்படி எதிர்கொள்வோம்? இதை யோசித்துப் பாருங்கள். ஒரு சுவாரசியம் தென்படுகிறதல்லவா? அந்த சுவாரசியத்தின் அடிப்படையில் தான் இந்தப் படமே அமைந்திருக்கிறது.
ஒருமுறை பார்த்து அதன் கதையையும் திரைக்கதையையும் முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது உண்மையிலேயே சாதனைதான். தொடர்ந்து ஆங்கிலப் படங்களிலேயே மூழ்கி முத்தெடுப்பவர்களுக்கு ஒருவேளை அதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால், அவ்வளவு கடினப்பட்டுப் பார்க்க வேண்டிய அளவுக்கு முக்கியமான படமா டெனெட் என்றால் தொழில்நுட்பரீதியில் சரிதான். ஏனெனில், தொழில்நுட்பரீதியாக செறிவான இந்தப் படம் உள்ளடக்கரீதியில் தக்கையான, தட்டையான படம்தான். மனித உணர்வுகளுக்கு இடமே அளிக்காத ஒரு படம் இது. முழுக்க அறிவியல் புனைவு என்னும் வறண்ட வானிலையில் நகரும் படமிது.
தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்னும் மனப் போக்கு கொண்டவர் ஆங்கில ரஷ்யரான, ஆந்த்ரேய் சேட்டர் (கென்னத் ப்ரனா என்னும் வட அயர்லாந்து நடிகர்). ஆயுத வியாபாரியான இவர் உலகை அழிக்கும் தன்மையிலான நேர்மாறு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார். ரஷ்யாவின் ரகசிய நகரத்தில் இவருடைய நேர்மாறு ஆயுத ஆலை இயங்குகிறது. நேர் மாறு ஆயுதம் என்பது அணு ஆயுதத்தைவிட மோசமானது. அதனால் கடந்த காலத்துக்கும் சென்று சேதம் விளைவிக்க முடியும். இப்படிப்பட்ட ஆயுதங்களை விற்கும் முகவரான சேட்டரால் உலகம் அழியும் ஒரு சூழல் உருவாகிறது. இதிலிருந்து மனிதர்களைக் காக்கும் பொறுப்பு சிஐஏ ஏஜண்டான நாயகனிடம் விடப்படுகிறது. இந்த வேடமேற்றிருப்பவர் ஜான் டேவிட் வாஷிங்டன். அதை அவர் நிறைவேற்றுகிறாரா, மனிதர்களை அவரால் காக்க முடிந்ததா என்பதே திரைக்கதையின் எஞ்சிய பயணம்.
வழக்கம் போன்ற ஹாலிவுட் படங்களில் காணப்படும் நன்மை தீமைக்கான போர் தான் இந்தப் படத்தின் கருவும். திரைக்கதையை உன்னிப்பாகக் கவனித்தால்தான் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது. நமது புராணங்களில் உள்ளதுபோல் பல ஜீபூம்பாக்கள் திரைக்கதையைத் தேற்றியுள்ளன. ஆனால், இடையிடையே இயற்பியல் விளக்கம் தருகிறார்கள். ஆனால், படத்தில் ஒரு வசனம் வருகிறது: இதைப் புரிந்துகொள்ள முயலாதே உணர்ந்துகொள் என்று அது தான் உண்மை. படத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் படத்தின் காட்சி அனுபவத்தைத் தவறவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, காட்சிகளைத் தொடர்ந்து அப்படியே சென்றோம் என்றால் படம் புரிந்துவிடும்.
தன்னைத் துளைத்த தோட்டா நேர்மாறானது என்பதால் அந்த தோட்டாவின் உலோகக் கலவை இந்தியாவைச் சேர்ந்தது என்று அறிந்துகொண்ட நாயகன் இந்தியாவுக்கு வருகிறான். அங்கே அவன் ஆயுத தரகரையும் அவருடைய மனைவியையும் சந்திக்கிறான். பிரியா என்னும் பெயர் கொண்ட அவர் நடிகை டிம்பிள் கபாடியா. அவரிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆந்த்ரேய் சேட்டரின் மனைவியான கேத்ரினைக் (எலிசபெத் டெபிக்கி என்னும் ஆஸ்திரேலிய நடிகை) காண்கிறான். என்னா உயரம் அந்த நடிகை! அவர் கலைப்பொருள்களை மதிப்பிடுபவர். அவர் வழியே சேட்டரைப் பிடிக்க முயல்கிறான் நாயகன். இதில் நாயகனுக்கு உதவுபவன் நீல் என்பவன் (ராபர்ட் பேட்டின்சன் எனும் ஆங்கில நடிகர்).
வில்லன் எதிர்காலத்துக்குள் சென்று என்ன நடக்கும் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னர் அந்தச் சம்பவம் நடக்கும்போது அதைச் சமாளிக்கிறான். இப்படியான காட்சிகளை நம்பித்தான் ஆக வேண்டும். நாயகன் மட்டும் லேசுப்பட்டவனா அவனும் கடந்த காலத்துக்குச் சென்று நம்பவியலாத காரியங்களில் எல்லாம் ஈடுபடுகிறான். பார்ப்பவரைக் கவரும் விதத்திலான பிரும்மாண்டமும் தொழில்நுட்பத் தரமும் படத்தை வாய் பிளந்து பார்க்கவைக்கின்றன. ஆனால், முழுவதும் பார்த்து முடித்தபிறகு, ஒரு பூஞ்சையான படத்தைப் பார்க்கவே நேரத்தைச் செலவழித்திருக்கிறோம் என்பது தெரிகிறது.
ஹாலிவுட் படங்களுக்கே உரிய சேஸிங் காட்சிகளும் வானளாவிய கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறும் பழங்கால உத்தி நவீனத் தொழில்நுட்பத்துடன் உதவும் காட்சிகளும் உண்டு. ஒரே நேரத்தில் ஒரு குழுவினர் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் கடந்த காலத்துக்கும் ஒரு பிரிவினர் நிகழ்காலத்துக்கும் செல்வது போன்ற காட்சிகளை எல்லாம் நம்பினால் தான் படத்தை ரசிக்க முடியும். படத்தின் தொடக்கத்தில் நிகழும் ஓபரா அரங்கில் நிகழும் தாக்குதல் முதல் இறுதிக்காட்சியில் புளுட்டோனியம் 241ஐ எடுப்பது வரை பார்வையாளர்களை திரையரங்கில் இருத்திவைப்பதற்கான நேர்த்தியான திரைக்கதைதான். என்றபோதும் வழக்கமான ஹாலிவுட் படங்களைப் பார்த்துப் பிரமிப்போருக்கான படம் இது என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை. கிறிஸ்டோபர் நோலன் படம் என்பதால் பார்க்கலாம். ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் நல்ல படங்களில் ஒன்று இதுவல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக