இந்த வலைப்பதிவில் தேடு

பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

பாலியல் குற்றங்களின் அரசியல்


ஆண் பெண் உறவு குறித்த பக்குவத்தை நம் சமூகம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையோ அந்த உறவு தொடர்பான புரிதலை வளர்த்துக்கொள்ளவில்லையோ என்னும் எண்ணத்தை வலுப்படுத்தும்படியான பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறியவண்ணமே உள்ளன. அண்மைச் சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுக்குவிடப்பட்ட கே.டி.ராகவன் வீடியோவைச் சொல்லலாம். பருவம் வந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட, அந்தரங்க உறவைப் பொதுவெளியில் பகிரும் நாகரிகமற்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கும் நடிகைக்குமான ரகசிய உறவைத் தமிழ்நாட்டின் முக்கிய செய்தி அலைவரிசை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. முக்கியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரது பாலியல் வீடியோ ஒன்று இதைப் போல் பொதுவெளியில் கசியவிடப்பட்டது. அந்த வேட்பாளர் அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார் என்பதையும் மறந்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரது பாலியல் வீடியோவையும் தமிழ்ச் சமூகம் பார்த்தது. இப்படியான விஷயங்கள் தொடர்பாக அநேக மீம்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழர், பண்பாடு, பாரம்பரியம், பெருமை பேசும் தமிழ்நாட்டில் இன்னும் இத்தகைய வீடியோக்கள் வெகுமக்கள் பரப்பைச் சுவாரசியப்படுத்தும் போக்கு கண்டு நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். ஆனாலும், எவரும் அப்படியொரு வெட்கம் கொள்ளாமல் தங்களது பாலியல் அரிப்பைத் தீர்க்கும் பேசுபொருளாக இப்படியான விஷயங்களைக் கருதுகிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பு அச்சம் தரத்தான் செய்கிறது ஆனாலும், நடைமுறையில் நமது நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?  

ஆணும் பெண்ணும் இணங்கிக் கொள்ளும் உறவை வரம்பற்ற நட்பை மூன்றாம் மனிதர் கேள்விகேட்பதோ அப்படியான உறவில் தலையிடுவதோ நாகரிக சமுதாயத்தில் அநாகரிகமாகவே பார்க்கப்படும். திருமணம் தாண்டிய உறவுகளில் ஏதேனும் சட்டப்பிரச்சினை இருந்தால் அது தொடர்பான மனிதர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். அதே வேளையில் அதிகாரம் காரணமாகவோ ஆதிக்கம் காரணமாகவோ பெண் ஒருவர் பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளானால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு பொதுச் சமூகம் அவர் பக்கம் நிற்க வேண்டும். இந்த இரண்டு வகைகளிலுமே முக்கிய ஆதாரமான வீடியோ, ஆடியோ போன்றவற்றைப் பொதுவெளியில் வெளியிட எந்த அவசியமும் இல்லை. நடைபெற்ற குற்றத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணங்களாகவே அவை கருதப்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில், மாநிலத்தில் இத்தகைய காட்சிகள் பொதுவெளியில் கேளிக்கைக்கான விஷயமாகச் சந்தி சிரிப்பது உள்ளபடியே அவமானமானகரமானதே.

தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்திருந்தவர் ஊடகத் துறையில் செயல்படுபவர். இந்த விஷயத்தை முன்னிட்டுத் தமிழ்ச் சமூகம் பெரிய விவாதங்களில் ஈடுபடுகிறது. பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாக முகம் சுளிக்கச் செய்யும் வகையிலான தொடர்பை ராகவன் பேணிவந்தது அந்த வீடியோவில் அம்பலமானது. அந்தப் பெண்ணுக்கும் ராகவனுக்கும் கட்சிரீதியான தொடர்பு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. கட்சிப் பெண்களிடம் அவர் தகாத செயலில் ஈடுபடுவதை அம்பலமாக்கும் வகையில் அந்த வீடியோ வெளியானதாகச் சொல்லப்பட்டது. உண்மை என்ன என்பது தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிச் செயல் என்பது போல் பார்க்கப்பட்டது. ஆனால், அது பரவிய வேகம் கே.டி.ராகவனை மாநிலத்தின் கடைசி மனிதர்வரை கொண்டுசேர்க்கச் செய்த ரகசியச் செயலோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போனது. அந்த அளவுக்கு இந்த வீடியோ ராகவனைப் பற்றிய அறியாத பலரிடமும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஒரு நல்ல விஷயம் பரவும் வேகத்தைவிட ஒரு கெட்ட விஷயம் மிகவும் வேகமாகவும் வீரியமாகவும் பரவிவிடுவது வருத்தம் தரக்கூடிய உண்மை. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்பது போல் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேம்போக்கான அந்தக் கருத்தும் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. அப்படியானால் இப்படித்தான் ஆண்கள் அனைவரும் நடந்துகொள்கிறார்களா, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வதைவிட அதை நியாயப்படுத்துவது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதான விமர்சனங்கள் எழுந்தன.

கே.டி.ராகவனோ தன்னையும் தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும், அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எந்தத் தவறும் செய்யாதபோது கட்சிப் பொறுப்பிலிருந்து ஏன் அவர் விலக வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. பழி விழுந்தபின்னர் பதவியில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்க முடியும் என அவர் தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறிய மதன் அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.  வீடியோ, ஆடியோ ஆகியவற்றை வெளியிட்ட மதன், வெண்பா ஆகிய இருவரும் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படியொரு வீடியோ தன்னிடம் உள்ளது என்பது தெரிந்த பின்னரும் அது பொதுவெளியில் பரவிடும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்த பின்னரும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.

அதே நேரத்தில் பாஜக போன்ற பலமானதொரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள மனிதர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு வீடியோவை சாதாரண ஊடகவியலாளர் ஒருவர் எளிதில் வெளியிட்டுவிட முடியுமா? அதையெல்லாம் கடந்து அந்த வீடியோவைத் துணிச்சலாக வெளியிட்டிருப்பதன் பின்னணியில் உள்ள விவகாரம் சாதாரணமாக இருக்குமா என்னும் ரீதியில் அரசியல் விமர்சகர்கள் இந்த விஷயத்தை விவாதத்துக்கு உட்படுத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலையும் அரசியல்ரீதியாகத் தன்னை வந்து சந்திக்கும் கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் தான் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றிக் கூறிய கருத்துகளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படியான விஷயங்களை மொத்தமாகப் பார்க்கும்போது, பெண்கள் பற்றிஆண்கள் கொண்டிருக்கும் பழமைவாத எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அவை உள்ளன.

யாராவது ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால் உடனே அவரது பாலியல் தொடர்பான விஷயங்களை அம்பலப்படுத்துவது, பெண் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவரது பாலியல்நடத்தையைக் கேள்விக்குட்படுத்துவது போன்றவை மிகவும் அநாகரிகமான செயல்கள். இதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. சூழலின் ஆரோக்கியமற்ற தன்மைக்கு என்ன காரணம்? இங்கே நாகரிமற்ற நடவடிக்கை என இத்தகைய வீடியோக்களைக் குறிப்பிடுவது, அது இருவர் ஒப்புதலுடன் நடைபெற்ற அந்தரங்கச் செயல் என்னும் நம்பிக்கையில்தான். அதேவேளையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தின் ரணம் இன்னும் நம் மனத்தில் ஆறாமல் அப்படியேதான் உள்ளது. இப்படியான சம்பவங்கள் ஆணாதிக்கச் சூழல் இன்னும் அகலவில்லை என்பதையே காட்டுகிறது. ராகவன் தொடர்பிலான வீடியோ எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது முறையான விசாரணை வழியாகவே தெரியவரும்.

அரசியலில், திரைப்படத் துறையில், அரசு, தனியார் நிறுவனங்களில், பள்ளி கல்லூரிகளில் என எங்கெங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். துணிச்சல் கொண்ட பெண்கள் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறார்கள். அதேவேளையில் பெண்களில் பலர் இத்தகைய சம்பவங்களை சிவ பெருமான் தொண்டையில் சிக்கிய ஆலகால விஷம் போல் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். படிநிலையில் தங்களைவிட மேலே இருக்கும் ஆண்கள் தங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுக்குட்படுத்தும்வேளையில், துணிச்சலான பெண்கள் பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டும் பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் பிற்போக்குத் தனம் இங்கு நிலவுகிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பிற்போக்குத்தனத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டாமா?

பெண்களின் பாலியல்ரீதியான பாதுகாப்புக்கு வழிகோலும் விசாகா கமிட்டி போன்ற அம்சங்களால்கூட இன்னும் ஆக்கபூர்வமான பலன்கள் கிட்டிவிடவில்லை. விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிறுவங்களிலேயே கூட பெண்ணுக்கு எதிரான இப்படியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் நாம் அறியாத உண்மை அல்ல. ஒப்புக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரமிகு பதவியில் ஆண் இருப்பின் பெண்கள் ஒடுக்கப்படுவதும் ஊமையாக்கப்படுவதும் வெகு சாதாரணமாக நிகழ்ந்துவருகின்றன. ஆனாலும், இவற்றைக் கண்டும் காணாமலும் நாம் போகிறோம். சிவபெருமான் தன் உடம்பின் பாதியை உமையவளுக்குக் கொடுத்தார் என்று சொல்கிற நாம்தான் அதே உமையவளைப் போன்ற பெண் ஒருவரைத் தகாத வகையில் நடத்தத் துடிக்கிறோம். பாலியல் என்னும் மிருக உணர்ச்சிக்கு இன்னும் இப்படியான அத்துமீறல்கள் வழியே தீனி போட முயல்வது குறித்து வெட்கப்பட வேண்டாமா? பதவியும் அதிகாரமும் பணமும் தரும் போதையில் நெறிதவறும் பெரும்பாலானோரின் இலக்கு பெண்களாகவே இருப்பது பற்றி பண்பாடு மிக்க ஒரு சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என்று தணியும் இந்த பாலியல் மோகம்? சட்டப்படியான தண்டனைகள் பெற்றுத்தர வாய்ப்பு இருந்தபோதும், பெண்ணை சக உயிர் என்று உணராதவரையிலும், தனிமனிதர் திருந்தாதவரையிலும் இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்யும் என்பது கசப்பான உண்மை.  

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. 

ஞாயிறு, மார்ச் 31, 2019

சூப்பர் டீலக்ஸ்: அடுகரி தொடர வீழ...


ஆரண்யகாண்டம் படத்துக்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸுடன் வந்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஒரு புறம் அறிவியல் மறுபுறம் ஆண்டவர் என நகரும் கருணயற்ற உலகத்தில், எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தபோதும், கிடைக்கும் தருணத்தை மகிழ்ச்சியாக வாழ்வதே நிம்மதி எனும் ஆதி காலத்து உபதேசத்தை நவீனத் திரைப்படமாக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. 

மனத் தளர்ச்சி அடைந்திருந்த முன்னாள் காதலரை வீட்டுக்கு அழைக்கிறார் திருமணமான வேம்பு (சமந்தா). வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உறவு நிகழ்கிறது. அடுத்த கணம் மரித்துவிடுகிறார் காதலன். அதிர்ச்சியில் உறைகிறார் வேம்பு. அந்த நேரத்தில் வீட்டுக்கு வருகிறார் அவருடைய கணவர்முகில் (ஃபகத் பாசில்). 


நான்கு வளரிளம் பருவ நண்பர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நண்பனுடைய வீட்டில் ‘பக்திப் படம்’ பார்க்கத் திட்டமிடுகிறார்கள். படம் தொடங்குகிறது.அதில் நடித்திருக்கும் நடிகை நண்பர்களில்ஒருவனான சூர்யாவின் தாய் லீலா (ரம்யாகிருஷ்ணன்). அதிர்ச்சியடைந்த சூர்யா தாயைக்கொல்ல விரைகிறான். 

ஜோதியின் (காயத்ரி) கணவர் மாணிக்கம் ஏழாண்டுகளுக்கு முன்னர் ஓடிச்சென்றுவிட்டார். அவர் திரும்பிவருகிறார் என்ற தகவலால் உற்சாகமடைந்திருக்கிறான் அவர்களுடைய மகன் ராசுக்குட்டி. வீடே மாணிக்கத்தின் வரவுக்காகக் காத்திருக்கிறது. மாணிக்கம் ஷில்பா எனும் திருநங்கையாக வந்து சேர்கிறார்.


சுனாமியில் இயேசு சிலையைப் பிடித்ததால் உயிர்பிழைத்த தனசேகரன் (மிஷ்கின்) அற்புதம் என்ற கிறித்தவராகிவிடுகிறார். ஆண்டவருடைய அற்புதத்தால் நோயிலிருந்து மனிதர்களைமீட்டுவருகிறார். அவருடைய மகன் வயிற்றில் ஸ்குருடிரைவர் குத்தி உயிருக்குப் போராடுவதாகத் தகவல்வருகிறது. அவர் ஜெபத்தை நம்ப, மனைவிமருத்துவமனைக்குச் செல்லத் துடிக்கிறார். படத்தில் ஈவு இரக்கமே இல்லாமல் வெட்டி எறிந்திருக்க வேண்டிய கதை அற்புதத்தின் கதை. மிஷ்கினைத் தாங்கிக்கொள்ள தனி மனம் வேண்டும். 


இந்த நான்கு சம்பவங்களின் தொடர்ச்சிகளை அடுக்கி உருவாக்கப்பட்டுள்ளது சூப்பர் டீலக்ஸ். தற்செயல் நிகழ்வின் விளைவை அடிப்படையாகக்கொண்டு 2006-ல் வெளியான ‘பேபல்’ திரைப்படத்தைப்  போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிகழ்வுகளுக்கிடையேயான தொடர்பை அடியொற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஏற்கெனவே இதே பட்டர் ஃப்ளை எஃபெக்ட் உத்தியைப்  பயன்படுத்தி தசாவதாரம் படத்தை கமல் உருவாக்கியிருக்கிறார். அதில் விஷ்ணு சிலை கடலில் இதில் இயேசு சிலை கடலில். அதிலும் சுனாமி இதிலும் சுனாமி.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் படம். அந்தநேரத்தைச் சுவாரசியப்படுத்த பல பின்னணி விவரங்களைப் படத்தில் பார்த்துப் பார்த்துச் சேர்த்துள்ளனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல் ஃப்ரேம் செட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு நினைவுகளைக் கிளறும் விதத்தில் அமைந்துள்ளன. இளைஞர்களைக் கவரும் வகையிலான பாலியல் கிளர்ச்சி தரும் கதைகள், சொற்றொடர்கள் ஆகியவை தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் திருநங்கைகளைக் கிண்டல் செய்யும் காட்சியும், வேம்புவே தான் ஒரு ஐட்டமா எனக் கேட்கும் காட்சியும் அருவருப்பாக உள்ளது. 


பின்னணியில் ஒலிக்கும் பாடல், சுவரொட்டிகள், பயன்படுத்தப்பட்டிருக்கும் அரங்கப் பொருட்கள் எனஅனைத்துமே சினிமா அனுபவத்தைத் தருவதில் உயிர்த் துடிப்புடன் உள்ளன. பப்பிலஹரியின் இசையில் உருவான டிஸ்கோ டான்சர் பாடலுடன் (இந்த டிஸ்கோ டான்சர் படம் தமிழில் பாடும் வானம்பாடி என்னும் தலைப்பில் ஆனந்த்பாபுவின் நடிப்பில் வெளியானது) முடிவடையும் இந்தப் படத்தில் பல பழைய பாடல்கள் பின்னணி இசையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னணி ஒலிகளுக்கும் இசைக்கும் பங்களித்தவகையில் யுவன் ஷங்கர் ராஜா பேரளவில் சூப்பர் டீலக்ஸை சினிமாவாக்க கைகொடுத்துள்ளார். 

தியாகராஜாவை மீறி சமந்தாவும் விஜய் சேதுபதியும் முன்னணிக்கு வந்துவிடுகிறார்கள். நடந்த சம்பவம் பற்றிய எந்தக் குற்றவுணர்வுமின்றி மிக இயல்பான மனநிலையைப் படம் முழுவதும் சமத்காரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா. அந்த நடிப்புஅந்தக் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீத நம்பகத்தன்மையை அளித்துவிடுகிறது.


திருநங்கையாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பான  உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஃபகத் பாசில் சடலத்துடன்சகஜமாக உரையாடும் காட்சி ஆசுவாசம் தருகிறது. ராசுக்குட்டியாக நடித்திருக்கும் சிறுவன் தாய் தோற்றத்தில் வந்திருக்கும் தந்தையை அப்படியேஏற்றுக்கொள்ளும் விதம் நெகிழ்ச்சியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் பக்ஸ் படத்தில் ஒட்டவே இல்லை. அவர் வரும் காட்சிகள் அலுப்பாகவே உள்ளன. 

தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகப் படத்தைக் கையாண்டிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்த தன்மையால் எந்த இடத்திலும் உணர்வுரீதியாகப் படத்துடன் ஒன்ற வேண்டிய தேவை எழவில்லை. சினிமா என்பது ரசனையுடன் பார்ப்பதற்குகந்த சாதனம் என்ற அளவிலேயே சினிமாவைப் படைத்திருக்கும் குமாரராஜா அதில்கருத்தையும் சொல்லியிருப்பது உறுத்தலாக உள்ளது. சமகால விஷயங்களை அங்கங்கே விதைத்துவிட்டு யதார்த்தம் என்று சொல்வது யதார்த்தமல்ல. வாழ்வின் ரகசியத்தை வாழ்பவர்களே அறிந்துகொள்ள மாட்டார்களா?  


நவீனமாகப் படத்தை உருவாக்கியிருந்தாலும் படத்தின் அடிப்படை அடுகரி தொடர வீழ… எனும் விவேக சிந்தாமணிப் பாடல் தந்த வாழ்வியல் தத்துவமே என்பதால் சூப்பர் டீலக்ஸ் புதுத்தொன்னையில் பழைய நெய்.

வெள்ளி, மார்ச் 02, 2018

ஆ (தெலுங்கு): புதுமையா, பித்துக்குளித்தனமா?

அந்தத் தெலுங்குப் படத்தின் டிரெயிலரில் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும். இறுதியாக நாயகன் யாரெனக் கேள்வி எழுப்பப்படும். கதையே ஹீரோ என ஒரு வசனம் ஒலிக்கும். அதைக் கேட்டவுடன், ஆ என்ற அதிர்ச்சி வெளிப்படும். அப்போது அதுவே படத்தின் தலைப்பு என்று சொல்லப்படும்.

டிரெயிலரில் சொல்லப்பட்டது போல் கதை ஹீரோ அல்ல. ஆனால், திரைக்கதைதான் ஹீரோ. குழந்தைப் பருவத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஆண்களை வெறுக்கிறாள். அவளைப் பன்முக ஆளுமைக் கோளாறு நோய் தாக்குகிறது. அந்த நோயின் தூண்டுதலால் அவளுக்கு ஏற்படும் மனக்குழப்பமும் அதனால் அவள் மேற்கொள்ளும் முடிவுமே ‘ஆ’ என்னும் இந்தப் படத்தின் மையம்.


இந்தக் கதையை நேரடியாகச் சொல்லாமல், துண்டு துண்டாக, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லிச் செல்கிறார் புதிய இயக்குநர் பிரசாந்த் வர்மா. படத்தின் தொடக்கத்தில் ஓரிளம்பெண் தன் பெற்றோருக்குத் தன் காதலைத் தெரியப்படுத்தி தன் இணையை அறிமுகப்படுத்த இருக்கிறாள். ஆச்சாரமான அந்தப் பெற்றோர் இணையின் சாதி, படிப்பு, அந்தஸ்து, சொத்துபத்து விவரம் போன்றவற்றை ஓர் இந்திய மனோபாவத்தில் வினவுகிறார்கள்.

அந்தப் பெண்ணும் பொறுமையாகப் பதில் சொல்கிறாள். இறுதியாக அவளுடைய இணை வந்து சேரும்போது பெற்றோருக்கு அதிர்ச்சி ‘ஆ’ என வாய்பிளக்கிறார்கள். ஏனெனில், வந்து நிற்பதும் ஒரு பெண். அவளைத் தான் தன் மகள் காதலிக்கிறாள். இருவரும் மணமுடிக்க இருக்கிறார்கள் என்பதை அந்த இந்திய மனங்கள் ஏற்க முடியாமல் தவிக்கின்றன.

அரைகுறையான சமையல் வேலையைத் தெரிந்துவைத்துக்கொண்டு யூடியூபில் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து சமாளிக்கும் ஒரு சமையல்காரன். அவன் ஒரு ரெஸ்டாரெண்டுக்கு வேலை தேடி வருகிறான். அங்கே அவனுக்கு ஒரு மீனும் ஒரு போன்சாய் மரமும் உதவுகின்றன. அவை அவனிடம் உரையாடுகின்றன. அவனும் அவற்றுடன் அந்நியோன்யமாக உரையாடுகிறான். ஒரு கட்டத்தில் தனது வேலைக்காகத் தனக்கு சமையல் சொல்லித் தந்த மீனையே கொல்ல வேண்டிய சூழல் வருகிறது. மீன் ‘ஆ’ என அதிர்ச்சியாகப் பார்க்கிறது.


செக்யூரிட்டியாக வேலைபார்க்கும், ஒரு டைம் மிஷினை உருவாக்கிட முயலும் விஞ்ஞான ஆர்வம் கொண்ட இளைஞன், சிறு குழந்தையிடம் மமதையுடன் நடந்துகொள்ளும் மந்திரவாதி, போதைக்கு ஆளான இளம்பெண், அவளை வைத்து ஒரு கொள்ளையைத் திட்டமிடும் காதலன். தனது பிறந்தநாளன்று தன்னையும் இன்னும் சிலரையும் கொன்றுவிட நினைக்கும் ஓர் இளம்பெண். இப்படிச் சில கதாபாத்திரங்களும் சில அதிர்ச்சிகளுமாக ஆ நகர்கிறது.

கதை என்னும் ஒன்று தேவையில்லை திரைக்கதையை மட்டும் வித்தியாசமாக நகர்த்தினால் போதும் என்னும் புதுயுக இயக்குநர்களின் பாணியையே இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், திரைக்கதையில் புதுமை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. நன்கு நுனிப்புல் மேய்ந்த மேடு, மரத்தின் அடியில் வாகாய் அமர்ந்து அசைபோடுவது போல் படம் நகர்கிறது.

பின் நவீனத்துவப் படம் என்னும் மாயையின் சாயை படத்தில் ததும்புகிறது. குழந்தைப் பருவ பாலியல் துன்புறுத்தல், இயற்கை நேசம், மரணம், பன்முக ஆளுமைக் கோளாறு எனப் பல விஷயங்களை மிகவும் அலட்டலாகப் படம் கையாண்டிருக்கிறது. பேய்ப்படம், திகில் படம், நகைச்சுவைப் படம், அனிமேஷன் படம், சயன்ஸ் பிக்‌ஷன் படம் போன்றவற்றைத் தனித் தனியே எடுக்காது ஒரே படத்தில் எடுத்திருப்பது புதுமையா?இதை மல்டி ஜானர் என வகைப்படுத்திப் பார்வையாளர்கள் தலையில் போடுகிறார்கள்.

உலக மொழிகளிலும் தமிழிலும் ‘எ பியூட்டில்ஃபுல் மைண்ட்’, ‘ஷட்டர் ஐலண்ட்’, ‘ஆளவந்தான்’, ‘குடைக்குள் மழை’போன்ற பல படங்களைப் பார்த்துவிட்டோம். தமிழ்ப் பார்வையாளர்களுக்கு இந்தப் படம் எந்த வகையிலும் புதுமையல்ல. இந்தப் படத்தைவிட இந்தப் படத்துக்கு ஆதரவாகப் பெருவாரியாக வந்துவிழும் விமர்சனங்களே ஆ என வாய்பிளக்க வைக்கின்றன. மற்றபடி இது பொழுதுபோக்கு நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சாதாரணப்படமே,

2018 பிப்ரவரி 23 அன்று இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியானது

ஞாயிறு, மார்ச் 06, 2016

முதல் பரிந்துரையில் ஆஸ்கர்!

(தி இந்துவில் 04.03.2016 அன்று வெளியானது)

ஆஸ்கர் விருதுக்காகப் பல ஆண்டுகள் போராடும் நடிகர்கள் மத்தியில் அவ்விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் முறையே ஆஸ்கரை வென்றிருக்கிறார் நடிகை ப்ரே லார்சன். லென்னி ஆப்ரஹம்சன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'ரூம்' திரைப்படத்துக்காக இந்த விருதைப் பெற்றிருக்கும் லார்சன் இதே படத்துக்காக கோல்டன் க்ளோப் விருதையும், பாப்தா விருதையும் இந்த ஆண்டு வென்றிருக்கிறார். தன் மகன் ஜேக்குடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருக்கும் ஜாய் என்னும் தாய் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்றிருந்தார் லார்சன்.

ஜேக்கின் தந்தையான நிக்கால் ஏழாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பார் ஜாய். மகன் உறங்கும் பல சமயங்களில் நிக், ஜாயுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய துயரார்ந்த கதாபாத்திரமான ஜாய் வெளிப்படுத்த வேண்டிய அத்தனை உணர்வுகளையும் மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தித் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டார் லார்சன். அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதுதான் அவருடைய தனிச் சிறப்பு.

தனது துறை நடிப்புதான் என்பதை ஆறு வயதிலேயே முடிவு செய்துவிட்டார் லார்சன். 1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று கலிஃபோர்னியா மாகாணத்தின் ஸேக்ரமெண்டோ என்னுமிடத்தில் பிறந்தார். நடிப்புத் துறையில் முன்னேற வேண்டும் என்னும் தனது கனவு கைகூட வேண்டும் என்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குத் தன் தாயுடனும் சகோதரியுடனும் குடியேறியவர் அவர். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2003-ல் டிஸ்னியின் தொலைக்காட்சிப் படமான ‘ரைட் ஆன் ட்ராக்’கில் நடித்தார். பாடகியாக அவதாரமெடுத்த லார்சன் 2005-ல் தனது ஆல்பமான ‘ஃபைனலி அவுட் ஆஃப் பி.இ.’யை வெளியிட்டார். சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை அது பெற்றது. 2006-ல் வெளியான ‘ஹூட்' படத்தில் இவரது நடிப்பு பெரிய கவனத்தைப் பெற்றது.

தொடர்ந்து ‘க்ரீன்பெர்க்' (2010), 21 ‘ஜம்ப் ஸ்ட்ரீட்' (2012) உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரது நடிப்புக்குத் தீனி போட்ட படமாக ‘ஷார்ட் டேர்ம் 12’ அமைந்தது. அந்தப் படத்தில் அவர் விமர்சகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்தப் பயணத்தில் முத்திரை பதிக்கும் வகையில் அமைந்துவிட்டது ரூம் திரைப்படம். சிறிய அறையில் வாழும் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாகிவிட்டார் லார்சன்.

ஞாயிறு, நவம்பர் 01, 2015

அமெரிக்கா எதிர்பார்க்கும் படம்!


பிரபல அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தாமஸ் மெக்கர்த்தி இயக்கத்தில் வரும் நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது ‘ஸ்பாட்லைட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம். இயக்குநர் மெக்கர்த்தி தனது ‘அப்’ திரைப்படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் வெளிவரும் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினர் மேற்கொண்ட விசாரணையைப் பற்றிய படம் இது. 2002-ம் ஆண்டு மாஸாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற பாலியல் முறைகேடுகளைத் துப்புத் துலக்கி விளக்கமான அறிக்கைகளைத் தொடர்ந்து பிரசுரித்துவந்தது ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை. இதற்காக 2003-ம் ஆண்டு அந்தப் பத்திரிகைக்கு புலிட்ஸர் விருதும் கிடைத்தது. இந்தச் சம்பவங்களை உள்ளடக்கியதே இந்த ஸ்பாட்லைட் திரைப்படம்.

கத்தோலிக்க ஆலயத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் சுரண்டலுக்காக ஐந்து கத்தோலிக்கப் பாதிரியார்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விவகாரத்தில் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை துணிச்சலுடன் செயல்பட்டுத் திரைமறைவு ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுப் பாதிரியார்கள் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான ‘த பாஸ்டன் க்ளோப் ’ அறிக்கைகள் படு சூடாக அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டன. இந்தச் சூடான சம்பவங்களை அப்படியே ருசிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் தாமஸ் மெக்கார்த்தி. இதைத் திரைக்கதையாக்கியதில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜோஷ் சிங்கர்.

கால ஓட்டத்தில் இந்தப் பாலியல் முறைகேடுகள் தொடர்பான முணுமுணுப்புகள் சிறிது சிறிதாகச் சமூகத்தினரிடையே ஒலித்து மறைந்துவிட்டது. மக்களும் ஊடகங்களும் இந்த அவமானகரமான கதையை மறந்துவிட்டுத் தத்தம் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சட்ட அமைப்பும் காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்தை விட்டு விலகி நெடுதூரம் வந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த உண்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது பாஸ்டன் க்ளோப் பத்திரிகை. உண்மையை வெளி உலகுக்குத் தெரியப் படுத்த துணிச்சலுடன் செயலாற்றியது.

இதுதான் இப்போது திரைப்படமாகியிருக்கிறது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் பாலியல் முறைகேடுகளை அறியாத தலைமுறையினருக்கு இந்தப் படம் அந்த மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தும். இந்தப் பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினராக மார்க் ரூஃபலோ, மைக்கேல் கீட்டன், ரேச்சல் மெக்காதம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான திரைக்தையை மெக்கார்த்தியும் ஜோஷ் சிங்கரும் கடந்த 2013-ம் வருடத்திலேயே முடித்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2014 செப்டம்பர் 24 அன்று பாஸ்டனில் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. கடந்துபோன வரலாற்றின் கறை படிந்த தருணங்கள் மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும்போது அது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துமோ என்ற ஆவலுடன் அமெரிக்கா இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்