ஜனவரி 10 அன்று 73-வது கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் கலக்கல் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ டிராமா பிரிவின் சிறந்த நடிகர் விருதை வென்றிருந்தார். அவருக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்திருந்த ‘த ரெவனன்ட்’ திரைப்படம் வேறு இரு விருதுகளையும் பெற்றிருந்தது. டிராமா பிரிவின் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அது சிறந்த இயக்குநருக்கான விருதை ‘அமோரஸ் பெரஸ்’, ‘21 கிராம்ஸ்’, ‘பேபல்’, ‘பேர்ட்மேன்’ போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றிருக்கும் அலெஹாண்ட்ரோ இன்யாரீட்டூவுக்கு வாங்கித் தந்திருந்தது.
கடந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்த உடன் ஹாலிவுட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இந்தப் படத்தின் மீது விழுந்துவிட்டது. டிகாப்ரியோவின் அதிரடி ஆக்ஷன் நடிப்பைக் காணத் திரையரங்குகளுக்குப் படையெடுக்கிறார்கள் அவர்கள். இது ஒரு பழிவாங்கல் கதைதான். அதுவும் 1820-களில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
‘மாண்டவன் மீண்டு வந்தால்’ என்பதுதான் படம் சொல்லும் கதை! மைக்கேல் புங்கே என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதி 2002-ல் வெளியான ‘த ரெவனன்ட்: எ நாவல் ஆஃப் ரிவஞ்ச்’ என்ற நாவலுக்கு மார்க் எல் ஸ்மித்தும் இயக்குநர் இன்யாரீட்டூவும் இணைந்து திரைக்கதை அமைத்திருந்தார்கள். டிகாப்ரியோவுடன் டாம் ஹார்டி, வில் பவுல்டர் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த வேட்டைக்காரரான ஹுயுக் க்ளாஸ் வேடத்தை ஏற்று நடித்திருக்கும் டிகாப்ரியோவின் நடிப்பு ரசிகர்களை மெய்மறக்கச் செய்கிறது. துரோகத்தை எதிர்கொண்டு துணிச்சலுடன் போராடும் நாயக பாத்திரத்தை டிகாப்ரியோவின் செறிவான நடிப்பு பன்மடங்கு உயர்த்திவிட்டிருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் அவருக்கு கோல்டன் க்ளோப் விருதும் கிடைத்திருக்கிறது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள் ரசிகர்கள். டிகாப்ரியோ, டாம் ஹார்டி ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் வரவேற்றுள்ளார்கள் என்பது படத்தின் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.
கடுங்குளிர் பிரதேசத்தில் பிரயத்தனத்துடன் படப்பிடிப்பை நடத்தி முடித்திருந்த இயக்குநரின் மனதை இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் விருதுகள் குளிரவைத்துவிட்டன. விருதுகளால் மகிழ்ந்த இன்யாரீட்டூ “வலி தற்காலிகமானது; திரைப்படமோ என்றென்றைக்குமானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டிருப்பவர் கிராவிட்டி, பேர்ட்மேன் ஆகிய படங்களுக்காக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள இம்மானுவேல் லுபெஸ்கி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக