இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 30, 2017

டன்கிர்க் (ஆங்கிலம்): பிழைத்திருப்பதே பெரும் சாதனை



ற்கால ஹாலிவுட் இயக்குநர்களில் கிறிஸ்டோபர் நோலன் என்னும் பெயர் ரசிகர்களைச் சட்டென்று புருவம் உயர்த்தவைக்கும். இவரது முதல் படமான ‘ஃபாலோயிங்’ 1998-ல் வெளியானது. ஆனால், இரண்டாம் படமான ‘மெமண்டோ’ வழியாகவே ரசிகர்களின் பெரும் செல்வாக்கைப் பெற்றார். ‘த டார்க் நைட்’ வரிசைப் படங்கள், ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர் ஸ்டெல்லார்’ எனத் தொடர்ந்து அறிவியல் புனைவுப் படங்களின் மூலம், தனது இயக்குநர் என்னும் பொறுப்பை அழுத்தமாகவும் திருத்தமாகவும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியவர் நோலன். இவரது பத்தாம் படமான ‘டன்கிர்க்’ ஜூலை 13 அன்று லண்டனில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது. எல்லா ஹாலிவுட் இயக்குநர்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது ஒரு இலக்காகவே இருக்கும். நோலன் குறிப்பிடத்தகுந்த படங்களை உருவாக்கியுள்ளபோதிலும் இதுவரை ஆஸ்கரின் சிறந்த இயக்குநர் பிரிவுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதில்லை. இந்தப் படத்துக்காக நோலனுக்கு அந்த ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என்று இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


‘டன்கிர்க்’ என்னும் பெயர் இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்ஸில் ஊடுருவிய நாஜிப் படையினர், நேசப்படையினரைச் சுற்றிவளைத்துவிட்டனர். அவர்கள் தப்பிப்போக கடல் மார்க்கம் மட்டுமே மிச்சமிருந்தது. ஆகவே, இங்கிலிஷ் கால்வாய் வழியே இங்கிலாந்தை அடையலாம் என்னும் நிலையில், ஆங்கிலேயப் படைவீரர்கள் உள்ளிட்ட சுமார் 4,00,000 படைவீரர்கள் மீட்கப்பட்டனர். ராணுவ வரலாற்றில் மிகவும் அதிசயமான, ‘ஆபரேசன் டைனமோ’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வையே நோலன் ‘டன்கிர்க்’ படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், படத்தில் அரசியல் சம்பவங்களைக் கொண்ட காட்சிகளை அவர் இணைக்கவில்லை. இறுதியாக நாளிதழில் மட்டுமே வின்ஸ்டன் சர்ச்சிலின் உரை இடம்பெறுகிறது. வழக்கமாக இரண்டாம் உலகப் போரைப் பற்றிய படங்களில் நாஜிக்களும் அவர்களின் வதை முகாம்களுமே ஆதிக்கம் செலுத்தும். மனிதவர்க்கத்தையே இரண்டாகக் கிழித்துப் போடும் இந்தப் போர் எதற்காக என்று மனசாட்சியை உலுக்கும். ஆனால், நோலன் டன்கிர்க்கில் இரண்டாம் உலகப் போரின் அந்த எதிர்மறைப் பக்கத்தைத் தவிர்த்துவிட்டார்; அதைப் போல் பெரும்பாலும் பெண்களையும் தவிர்த்துவிட்டார்.

1958-ல், லெஸ்லி நார்மன் இயக்கத்தில் வெளியான ‘டன்கிர்க்’கில்கூடப் படத்தின் முதல் பாதியில் ஆங்கிலேயக் காலாட் படைவீரர்களுக்கும் நாஜிக்களுக்குமிடையே நடைபெறும் துப்பாக்கி மோதல் காட்சிகள் உண்டு. அதன் மறுபாதியில்தான் டன்கிர்க் கடற்கரைப் பகுதியின் மோல் என அழைக்கப்படும், கடல் நீரால் கடற்கரைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் அந்த மரப்பலகைகளாலான தடுப்புப் பகுதிக்கு வருகிறார்கள். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கில் படத்தின் தொடக்கமே, வீரர்களைக் கடற்கரையை நோக்கித் துரத்துகிறது. டாமி என்னும் அந்த ஆங்கிலேய இளம் வீரன் (ஃபியான் வொயிட்ஹெட்) உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தலைதெறிக்க ஓடுகிறான். வழியெங்கும் நாஜிக்களின் குண்டுகள் துரத்துகின்றன; கடற்கரையில் காத்திருக்கும் வேளையிலும் வானிலிருந்து போர் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்னும் பதற்றத்தினிடையே நேசப் படையின் வீரர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்னும் மனநிலையுடன் காத்திருக்கிறார்கள்.


பொதுவாக, நோலனின் படங்கள் நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் முன்னதும் பின்னதுமான நான் லீனியர் வகையைச் சார்ந்தே செல்லும் தன்மை கொண்டவை. இந்தப் படத்தின் திரைக்கதையை மூன்று கோணங்களாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார் . முதல் கோணம் மோலில் காத்திருக்கும் படைவீரர்களின் பயணம். இரண்டாம் கோணம் இங்கிலாந்திலிருந்து படைவீரர்களைக் காப்பாற்ற படகைக் கொண்டுவரும் டாசனின் (மார்க் ரிலயன்ஸ்) பயணம். மற்றொரு கோணம் நாஜிக்களின் வான் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆங்கில விமானப் படைவீரர்களான ஃபாரியர், காலின் ஆகியோரது பயணம். இந்த மூன்று பயணங்களும் மாறி மாறி வருகின்றன.1958-ல் வெளியான ‘டன்கிர்க்’கில் ஆங்கிலேயே விமானப் படை வீரர்களது முறியடிப்புக் காட்சிகள் இடம்பெற்றிருக்காது. 
ஹான்ஸ் ஜிம்மரின் இசை , காத்திருப்பின் படபடப்பையும் மூச்சிரைக்க ஓடுவதையும் துப்பாக்கிக் குண்டுகளின் வெடியோசையையும் துல்லியமாக உணர்த்துகிறது. இதனால் பார்வையாளர்களும் கடற்கரையில் காத்திருக்கும் வீரர்களின் மன நிலையைச் சட்டென பெற்றுவிட முடிகிறது. என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியாமல் எல்லாவற்றையும் தனிமையச்சத்துடனும் பதைபதைப்புடனும் பார்த்துக்கொண்டிருக்கச் செய்வதில் நோலன் வெற்றிபெற்றிருக்கிறார். அதற்கு நடிகர்களின் இயல்பான நடிப்பும் நோலனின் ஆளுமைப் பண்பும் ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்பங்களும் பெருமளவில் கைகொடுத்துள்ளன. பார்வையாளர்களை உணர்ச்சி வெள்ளத்துக்குள் ஆழ்த்தாமல் படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துவிடுகிறது. ஏதாவது ஒரு காட்சியில் உணர்ச்சி மேலிடும்போது, சட்டெனப் படம் அடுத்த கோணத்துக்குச் சென்றுவிடுகிறது.


வழக்கமாக, பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த இரண்டாம் உலகப் போர் படங்களைப் பார்க்கும்போது, இந்தப் போர் எதற்காக என்னும் கேள்வி அழுத்தமாக எழும். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கைப் பார்த்தபோது, போர் பற்றிய எந்தக் கேள்வியும் எழவில்லை. பொதுவாகப் போர்களில் குடிமக்களுக்கு எந்த வேலையும் இருக்காது. போரால் பெருமளவில் குடிமக்கள் பாதிக்கப்பட்டாலும்கூட அவர்களது நேரடியான ஈடுபாடு என்பது இருக்காது. ஆனால், டன்கிர்க் சம்பவத்தில் குடிமக்கள் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அதனாலேயே நோலன் இதைப் படமாக்க எண்ணியிருக்கலாம். ஏனெனில், போரின் வெற்றி - தோல்வி என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு உயிர் பிழைத்திருப்பதே பெரும் சாதனைதான் என்பதை இந்தப் படம் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

டன்கிர்க் சம்பவத்தைப் பொறுத்தவரையில் லட்சக்கணக்கான வீரர்கள் காப்பாற்றப்பட்டதைப் போல், ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டும்போனார்கள். அதைப் போல் வீரர்கள் பலர் எதிரிகளிடம் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் இந்தப் படம் உதாரணங்களைத் தந்துள்ளது. ஆனால், வரலாற்றை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறோம் என்னும் திருப்தி ஏற்பட்டபோதும் ஒரு சிறந்த படம் பார்த்த திருப்தியை நோலனின் ‘டன்கிர்க்’ தரவில்லை. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இந்தியர்களது பங்களிப்பை எந்தப் படமும் நினைவுவைத்துப் பிரதிபலித்ததில்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. இது பற்றி நௌபிரேக்கிங் இணையதளம் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது. ‘இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து சண்டையிடவில்லை, ஆனால், ஆங்கிலேயப் பேரரசு சண்டையிட்டது’ என்று ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் யாஸ்மின் கான் தனது ‘த ராஜ் அட் வார்’ (The Raj At War: A People's History Of India's Second World War)என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை மேற்கோள் காட்டி எழுப்பியிருக்கும் கேள்வியையும் சேர்த்துப் பார்க்கும்போது, படம் ஏன் முழுமையான திருப்தியைத் தரவில்லை என்பதற்கு விடை கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக