![]() |
ஜீ. முருகன் |
பக்கங்கள் : 400 விலை : ரூ.320வெளியீடு:ஆதி பதிப்பகம்திருவண்ணாமலை 606806தொடர்புக்கு: 9994880005
![]() |
ஜீ. முருகன் |
பக்கங்கள் : 400 விலை : ரூ.320வெளியீடு:ஆதி பதிப்பகம்திருவண்ணாமலை 606806தொடர்புக்கு: 9994880005
அப்போது எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தேன். அந்தச் சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி ரஜினி காந்த் நடித்த விடுதலை (1986 ஏப்ரல் 11) திரைப்படம் வெளியானது. திருநெல்வேலி நியூராயல் தியேட்டரில் படத்தை வெளியிட்டிருந்தார்கள். விடுமுறையில் குடும்பத்துடன் பேட்டை செல்லையா அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தோம். அண்ணன் பேட்டை மில்லில் வேலை பார்த்தார்.
அவர் வீட்டில் ஒரு மேசையில் டேப் ரிக்கார்டர் இருக்கும். எதிரே நாற்காலியைப் போட்டு மேசை டிராயரில் இருக்கும் கேஸட்டுகளில் எதையாவது போட்டுக் கேட்பேன். பெரும்பாலான கேஸட்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கப் பாடல்களே இருந்தன. அங்குதான் முதன்முதலில் அந்தப் பாடல்களைக் கேட்டேன். ஏனோ அந்தச் சிறுவயதில் அந்தப் பாடல்களைக் கேட்பது ஈர்ப்புக்குரியதாக இருந்தது. என்னவோ சொர்க்கமே காலடியில் கிடப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். ஒருநாள் அண்ணன் என்னைப் படத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினார். அப்போது ரஜினி படம் என்றால் சோறு தண்ணிகூடத் தேவைப்பட்டிருக்காத காலம். இப்போது ரஜினி படத்தைப் பார்க்காட்டி உயிர் போகும்னு சொன்னா போகட்டும் என்று விட்டுவிட முடிகிறது.
என்ன படம் பார்க்க விரும்புகிறாய் என செல்லையா அண்ணன் கேட்டதும், மறுபேச்சின்றி ரஜினி நடித்த விடுதலை படம் பார்க்கலாம் என்று கூறினேன். லீவு முடிந்து ஸ்கூலுக்குப் போனதும் படத்தின் கதையையும் சொல்லலாம்; படம் பார்த்த கதையையும் சொல்லலாம் என்ற ஆசைதான். அண்ணனுடன் புறப்பட்டேன். மணி பதினொன்று கிட்ட ஆகிவிட்டது. மனம் பார்க்கப்போகும் படத்தை எண்ணி பரபரப்பானது. பேட்டை மெயின் ரோட்டில் ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் கேசரி வாங்கிக் கொடுத்தார். ஜம்முன்னு சேரில் உட்கார்ந்து கேசரியைச் சாப்பிடும் கௌரவத்தை அண்ணன் தந்திருந்தார். அது இப்போது நினைத்தால் இனிக்கிறது. ஆனால் அன்று கேசரியைவிட சிங்க நிகர் தலைவன் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. ஆகவே, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படத்துக்குப் போக வேண்டும் என்று தான் ஆர்வமாக இருந்தது.
தென்காசியில் படம் பதினோரு மணிக்கெல்லாம் போட்டுவிடுவார்கள். அதற்குப் பழகியிருந்ததால் நேரமாகிக்கொண்டிருக்கிறதே அண்ணன் மிக நிதானமாக இருக்கிறாரே என்றிருந்தது. கேசரி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அய்யய்யோ படம் போட்டுவிடுவானே என்றிருக்கிறது. அண்ணனோ நிதானமாக இருக்கிறார். அவரிடம் சொல்லவும் முடியவில்லை. நம்மையும் ஓர் ஆளாக மதித்து ஒருவர் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். அவரை எப்படி அவசரப்படுத்த முடியும்?
ஒருவழியாக பஸ் பிடித்து டவுனில் இறங்கினோம். அருகிலேயே தான் ராயல் தியேட்டர். டிக்கெட் எடுத்து அவசர அவசரமா உள்ளே போனா, யார் நீ எனக் கேட்கும் வில்லனிடம் 'நான் கடவுளோட புள்ள' அப்படின்னு ரஜினி சொல்லிட்டிருக்கார். படம் போட்டு ஏழெட்டு நிமிஷமாயிருச்சு. படம் படு மொக்கை. ஆனால் அதையே மீண்டும் தென்காசி பரதனிலும் பார்த்தேன். திருநெல்வேலியில் ஏழெட்டு நிமிஷம் கழிச்சுத்தானே பார்த்தேன். ஆகவே, முதலிலிருந்து தென்காசியில் பார்த்தேன். நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க பாடல் கேட்கும்போதெல்லாம் சும்மா நரம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருக்கும்.
சிவாஜியும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களிலேயே படு தோல்வி அடைந்த இந்தப் படம் படு கேவலமான படமும்கூட. சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இந்தப் படத்தில் காக்கி உடையில் சொல்வார். சிவாஜியின் மிகை நடிப்பு அதிகமாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்கு கார் திருடன் பாத்திரம். இந்தப் படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் காட்சி அப்போது மிகவும் பிடித்திருந்தது. விஷ்ணுவர்தன் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். கே.பாலாஜி தயாரித்திருந்த இந்தப் படத்தில் மாதவி, அனுராதா, விஜய குமார், பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே விஜயன் இயக்கிய படம். சந்திரபோஸ் இசையில் நீலக்குயில்கள் ரெண்டு பாடலும் கேட்பதற்கு இனிமையானது. இந்தியில் வெளியான குர்பானி திரைப்படத்தின் மறு ஆக்கம் விடுதலை. ஆனால், இந்திப் படம் போல் நன்றாக அமையவில்லை தமிழ்ப் படம் என்பது அப்போதைய ரசிகர்களின் கணிப்பு. இப்போது ராயல் தியேட்டரோ, பரதன் தியேட்டரோ இல்லை என்பதும் நானும் ரஜினி ரசிகனாக இல்லை என்பதும் புரியும்போது, வாழ்க்கை, விடுதலை என்பதற்கெல்லாம் வேறு பொருள்கள் உண்டு என்று தோன்றுகிறது.
![]() |
இவான் துர்கநேவ் |
சில
நாள்கள் நாம் எதிர்பாராத விஷயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும். அவை நல்லவையாக
இருந்தால் மனம் மகிழும்; துன்பம் தருபவையாகிவிட்டால் அவ்வளவுதான் அந்த நாளின் நினைவு
மனத்தில் அழிக்க முடியாதபடி பதிந்துவிடும். பின்னர், எப்போதெல்லாம் மனம் சோர்வுகொள்ளுமோ
துயர நினைவில் மூழ்குமோ அப்போதெல்லாம் அந்த நாள் மனவடுக்கில் மேல் தட்டில் தட்டுப்படும்.
அப்படியொரு நாளாகிவிட்டது இந்த ஏப்ரல் 15.
மதியம்
மூன்று மணிக்குப் படுத்து உறங்கிவிட்டேன். ஐந்தே கால் அளவில் முழித்தேன். இரண்டு மணி
நேரத்துக்கு மேல் தூங்கியதால் மனம் சொங்கித்தனமான உணர்வைக் கொண்டிருந்தது. கையில் மொபைலைத்
தூக்கிவைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை மேய்ந்துகொண்டிருந்தேன். கல்லூரி நண்பன் பாலா ஜோசப்
செபஸ்தியான் படங்களைக் கொண்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு
மெதுவாக கமெண்ட் செக்ஷனுக்கு வந்தால் பலரும் RIP, ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்கள்.
சட்டென ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. மீண்டும் மேலே போய் பாலா என்ன எழுதியிருக்கிறான்
என்று படித்தேன். நம்பவே முடியவில்லை. பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அது உண்மைதான்.
நண்பன் ஜோஸப் செபஸ்டியன் கொரானா காரணமாக உயிரிழந்திருந்தான்.
யாரிடம்
விசாரிக்கலாம் செபஸ்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் யார் எனத் தீவிரமாக
யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று செல்லத்துரையின் நினைவு வந்தது. ஆகவே, செல்லத்துரைக்குப்
பேசினேன். அவன் செய்தியை உறுதிப்படுத்தினான். ஏப்ரல் 13 அன்றைய இரவில் 12 மணி அளவில்
மரணமடைந்ததாகவும் கொரோனா மரணம் என்பதால் அங்கேயே நல்லடக்கம் நடைபெற்றுவிட்டதாகவும்
கூறினான். ஏப்ரல் 4 ஈஸ்டர் அன்றுகூடப் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தான். டெல்லியில் வசிக்கும் நண்பன் வெங்கடேஸ்வரன் இரண்டு மூன்று நாள்களுக்கு
முன்னதாக செபஸ்டியனிடம் பேசியபோது, தொற்றிலிருந்து மீண்டு விட்டதாகவும் ஓரிரு நாளில்
டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று சொன்னதாகவும் கூறினான். ஆனால், அதற்குள் கார்டியாக் அரெஸ்ட்
காரணமாக சட்டென்று உயிர் பிரிந்திருக்கிறது.
செபஸ்டியானை
எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடிந்த வருடத்தில் குற்றாலத்தில்
நடைபெற்ற செல்வ மாமாவின் திருமணத்துக்கு வந்திருந்தான். அப்போது தென்காசி கீழப்பாளையம்
வீட்டில் எடுத்த புகைப்படங்களில் அவனும் வழக்கமான சிரிப்புடன் இப்போதும் காணப்படுகிறான்.
அதன் பின்னர் வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிட்டோம்.
மீண்டும் கல்லூரி நண்பர்களின் கூடுமை 1998இல் சென்னையில் நடைபெற்றபோது சந்தித்தேன்.
அப்போது நான் சரியான வேலை இல்லாமல் இருந்தேன். ஆகவே, அவன் தனக்குத் தெரிந்த என்விஎச்
கோயா நிறுவனத்தில் என்னையும் வேலைக்குச் சேர்த்துவிட்டான்.
இருவரும்
அந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தோம். இருவரையும் குஜராத் அனுப்புவதாக முதலில் சொன்னார்கள்.
வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டால் தமிழ்ப் படம் பார்க்க முடியுமோ முடியாதோ என்று தோன்றியதால்,
வேலை நிமித்தமாகப் புறப்படுவதற்கு முந்தைய நாளில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் – அப்படித்தான்
நினைவு – பிரபு சுவலட்சுமி நடித்த பொன் மனம் திரைப்படத்தை இருவரும் சேர்ந்து பார்த்தோம்.
பின் ஏனோ நிறுவனம் அவனை குஜராத்துக்கு அனுப்பியது. நான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டேன்.
அப்போது கையில் மொபைல் இல்லாததால் தொடர்பு விடுபட்டுவிட்டது.
சில
வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை பாரிஸ் பஸ் நிலையம் அருகே வைத்து செபஸ்டியானைப் பார்த்தேன்.
அப்போது நான் கோயா நிறுவனத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அவனும்
கோயாவிலிருந்து சென்று வேறொரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினான். சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றான். அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற நண்பர்களின்
கூடுகையில் ஒருமுறை பார்த்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான். நண்பர்களுடன் புகைப்படம்
எடுத்துக்கொண்டான். எப்போதுமே உற்சாகமா காணப்படுவான். கடுமையான உழைப்பாளி. கல்லூரிக்
காலத்தில் அவன் தன் தந்தையின் தோள்மீது கைபோட்டுப் பேசிச் சென்ற காட்சி ஒன்று மனத்தில்
எழுகிறது. அவனுடைய உற்சாகமான சிரிப்பை மனம் ஒருபோதும் மறக்காது. கொரானா காலம் செபஸ்டியனுக்கு அஞ்சலி எழுதவைக்கும் என எண்ணவில்லை.
மரணம் நிகழ்ந்த கணத்துக்கும்
அதற்கு முந்தைய கணத்துக்கும் இடையே
ஓர் ஆயுள் காலம் வந்தமர்ந்துவிடாதா என
அற்ப மனம் ஏங்கும்.
யதார்த்தமோ செவிட்டிலறையும்.
எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறோம்.
ஆனால், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்னும் வாய்ப்பு
மனத்தைச் சாந்தப்படுத்திவைக்கிறது.
இப்போது உன் மரணம்
அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிவிட்டது.
இவ்வளவு சீக்கிரம் இது நிகழ்ந்திருக்க வேண்டாம்
நீ எங்கோ சென்றுவிட்டாய் உன் சிரிப்பு எங்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
அதை என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை.
படத்தின் கதாபாத்திர உருவாக்கங்கள் மிகச் சன்னமான சித்தரிப்புகளால் ஆனவை. ஆனால், அவை பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. படத்தின் தொடக்கக் காட்சியை சினிமா என்னும் கலை கண்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டெனலாம். அது நாள்தோறும் நாம் காணும் ஒரு காட்சிதான். அதை அவ்வளவு ரசிக்கத்தக்க அளவில் படமாக்கியுள்ளார்கள். ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒரு பொருளைக் கொண்டுபோய் வாடிக்கையாளரிடம் கொடுக்கும் மிகவும் சாதாரணக் காட்சி அது. ஆனால், படமாக்கப்பட்ட விதத்தால் அது பார்வையாளரை அப்படியே கவர்ந்துவிடுகிறது.
ஒளிப்பதிவும் இசையும் அளந்தெடுத்த அல்லது அறுத்தெடுத்த வசனங்களும் படத்தின் தரத்தை உயர்த்த மிகவும் பயன்பட்டுள்ளன. கேரள நிலத்தின் அழகையும் பசுமையையும் காட்டுவதற்கு கேமரா கோணங்கள் பெரிதும் உதவியுள்ளன. பனச்சல் என்னும் ஒரு வீடு, வீட்டிலுள் காணப்படும் ஒரு குளம், வீட்டையொட்டி ஓடும் ஓரோடை இவை மிகச் சாதாரணமானவைதாம். ஆனால், திரையில் இவற்றை காட்சிக்குவைத்திருக்கும் பாங்கு இவற்றை அசாதாரணமானதாக்குகிறது. நம் கண்களால் காண்பதைவிடப் பரந்து பட்ட காட்சிகளை கேமரா அள்ளித்தருவதாலேயே காட்சிகளின் தீவிரம் அப்படியே மனத்தில், ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குவது போல் இறங்கிவிடுகிறது.
பனச்சல் வீட்டின் தலைவன் குட்டப்பன். அவன்தான் எல்லாம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இரண்டாம் மகன் ஜெய்சன் நீட்டும் செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் குட்டப்பனின் அழுத்தம் குடும்பத்தின்மேலுள்ள தனது ஆதிக்கத்தை எளிதில் யாருக்கும் விட்டுத்தரத் தயாராக இல்லாத குணத்தைக் கல்வெட்டில் பொறிப்பதுபோல் பதிக்கிறது. குட்டப்பனுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் ஜோமோன், குடிகாரன். மண முறிவு ஏற்பட்டு மனைவியிடம் இருந்து பிரிந்து தன் பருவ வயது மகனுடன் பனச்சல் வீட்டில் வசித்துவருகிறான். அவன் எந்தக் காரியத்துக்கும் தந்தையின் உத்தரவை எதிர்பார்த்து நிற்பவன். பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்கும் தகப்பனின் அறையில் ஒரு மது பாட்டிலை எடுக்கும்போதுகூட, குட்டப்பனிடம் சொல்லிவிட்டே எடுக்கிறான். அவன் மகனான பாப்பியோ மிகத் தந்திரமாகப் பாட்டனின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் துப்பாக்கியே வாங்கிவிடுகிறான்.
நடுவுள்ளவனான ஜெய்சன் தன் மனைவி பின்ஸியுடன் அதே வீட்டில் வசித்துவருகிறான். ரப்பர் கடையைக் கவனித்துவருகிறான். வணிகத்தின் பொருட்டு ஏற்பட்ட பழக்கமோ என்னவோ எல்லாரிடமும் நயந்துபேசியே தன் தரப்புக்குச் சாதகமான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள முயல்கிறான். அவனையும் தன் பேச்சுக்கு இணங்கிப்போகச் செய்கிறாள் பின்ஸி. குட்டப்பன் சடலம் கிடத்தப்பட்ட அறைக்கு வருமாறு அழைக்கும்போது ஜோஜியை முகக்கவசம் அணிந்துகொள்ளச் சொல்கிறாள் பின்ஸி. அவள் எவ்வளவு இறுக்கமான உணர்வால் வனையப்பட்டவள் என்பதை இந்த ஒற்றை வசனம் தீர்க்கமாகச் சொல்கிறது.
இளைய மகன் ஜோஜிதான் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாகியிருக்கிறான். குதிரை வணிகத்தில் தோல்வியையே தொடர்ந்து சந்தித்துவருபவன். ஆகவே, தந்தை அவனை இரண்டாம் தர நிலையிலானவனாகக் கருதுகிறார். அது அவனுக்கும் தெரியும். குட்டப்பனோ எந்த மகனுக்கும் எந்த உரிமையும் தராமல் எல்லாக் கட்டுப்பாட்டையும் தன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் குட்டப்பன் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் இறந்துவிடுவார் என குடும்ப மருத்துவர் ஃபெலிக்ஸ் தெரிவிக்கிறார். ஆனால், அது நடைபெறவில்லை. அவர் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது ஆட்சியைப் பரிபாலிக்கத் தொடங்குகிறார்.
தந்தை இறந்துவிடுவார் என நினைத்த இளைய மகனுக்கு இது பெரிய சிக்கலாகப் போய்விடுகிறது. அவர் உயிரோடிருக்கும்வரை தன்னால் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாது என நினைக்கிறான் அவன். அடுத்த மகனும் நகரத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கத் திட்டமிட்டிருக்கிறான். அவனுக்கும் தந்தையின் இருப்பு இடைஞ்சல் என்றே படுகிறது. அவர்கள் நினைத்ததைப் போல் தந்தைக்கும் முடிவு வருகிறது. அதைத் தொடர்ந்து மூத்த மகனுக்கும் முடிவு வருகிறது. இதனால் பனச்சல் வீடு என்ன ஆனது, ஏன் அந்த வீட்டுக்கு இப்படியொரு நிலைமை என்பதையெல்லாம் ஷியாம் புஷ்கரனின் திரைக்கதையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திலீஷ் போத்தன். படத்தின் கதை மிகவும் சராசரியான மேடை நாடகத்துக்கானது. அதைக் காட்சி மொழியின் உதவியுடன் கலாபூர்வத் திரைப்படமாக்கியிருப்பதில் திலீஷ் போத்தனின் திறமை வெளிப்படுகிறது. கதாபாத்திரங்களின் மனநிலைகளைப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு சினிமா சாத்தியப்படுத்தும் அத்தனை தொழில்நுட்பத்தையும் கைதேர்ந்தவகையில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார்கள் தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும்.
ஜெய்சன் மனைவி பின்ஸியாக நடித்திருக்கும் உன்னிமாயா பிரசாத்தும், ஜோமோன் கதாபாத்திரமேற்றிருக்கும் பாபுராஜும் திரைப்படத்துக்கான இயல்புடன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தன் தம்பி ஜோஜி ஏர் கன்னைத் தூக்குவதைக் காணும்போது, ஜோமோனிடம் வெளிப்படும் நக்கல் கலந்த புன்னகை அவருடைய நடிப்பைச் சொல்லிவிடுகிறது. கோடீஸ்வரா என ஃபெலிக்ஸ் தன்னை அழைக்கும்போது, ஜோஜியின் மனம் கொள்ளும் குதூகலத்தைப் பின்னணியிசை மிகத் துல்லியமாக மொழிபெயர்த்துவிடுகிறது. வசனங்களை இயன்ற அளவு பிசிறில்லாமல் அளவெடுத்தாற்போல் நறுக்கியெடுத்து நடிகர்களிடம் கொடுத்திருப்பார்கள்போல. ஒரு நாடகத்தை எந்த அளவுக்கு வசனங்கள் தூக்கிச் சுமக்குமோ அந்த அளவுக்கு இந்தப் படத்தை இசை தூக்கிச் சுமக்கிறது.
மரத்திலிருந்து நழுவி நதிமீது விழுந்து கிடக்கும் இலைகள் போல் படம் முழுவதும் இசைத் துணுக்குகள் நிறைந்துகிடக்கின்றன; சில காட்சிகளில் மௌனமும் ஓரிசையாய் மலர்ந்துகிடக்கிறது (ஜோஜி, குட்டப்பனின் மருந்து டப்பாவில் மருந்தை மாற்றி வைக்குமிடத்தில் மௌனம் இசை சாம்ராஜ்யத்தை நடத்துகிறது). தமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துதீர வேண்டிய விருப்பத்தில் சிக்குண்டு கிடக்கும் மனிதர்கள் அதற்காகத் தேவைப்படும் குற்றங்களைப் புரிய தயங்குவதில்லை. தமது குற்றத்தைப் பிறர் அறிந்துகொள்ளும்வரை தங்களது குணாதிசயத்தை வெளிப்படுத்தாமல் போர்வையில் போர்த்தி பாதுகாத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் குற்றங்களின் நிமித்தம் தாம் கொள்ளும் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இயலாமல் திண்டாடுகிறார்கள். அவர்களது இயல்பான குணம் வெளிப்படும்போது அவர்களது குரூரத்தை அறியும் மனிதர்கள் திடுக்கிடுகிறார்கள். மனிதர்களிடம் வெளிப்படும் இயல்பான குணங்களில் நல்ல தன்மையும் கெட்ட தன்மையும் கலந்தே காணப்படுகின்றன. இந்தக் குணங்களின் காரணமாக அவர்களது வாழ்வில் ஏற்படும் அலைக்கழிப்புகளையும் அற்ப மகிழ்ச்சிகளையும் காட்சி மொழியில் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறது ஜோஜி. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி ஒரு முழுமையான திரைப்படம் தரும் நிறைவைத் தராமல் நழுவியும் இருக்கிறது ஜோஜி.
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு திரைப்படத்தைத் திரையில் நேர்த்தியுடன் தருவது என்பது ஓரளவு எளிதானதுதான். திரைப்படத்தை உண்மையான ஆர்வத்துடன் உருவாக்க முயலும் இயக்குநர் அப்படியான படத்தை எளிதாகத் தந்துவிட முடியும். ஆகவே, இந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் அந்த வகையில் படத்தை உருப்படியாகவே தந்திருக்கிறார். யதார்த்தமான படம் போன்ற பாவனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால், படமோ யதார்த்தமானது அன்று. அது பலவிடங்களில் யதார்த்தத்தை மீறியது.
சூரங்குடி ஊராட்சி வடக்கூர் தெக்கூர் என இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஆனால், அந்த இரு பிரிவுகளுக்கும் தலைமை வகிக்கும் மதியும் ரத்தினமும் ஒரே தகப்பனையும் தனித்தனித் தாயையும் கொண்டவர்கள். அந்தப் பெரியவர் இரண்டு பிரிவினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு பிரிவிலிருந்து ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் சாதி, சமய பூசலற்றவர் என்பதைப் போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். அவரது வீட்டில் பெரியார் படம் இருக்கிறது. ஒரு வகையில் அவர் திராவிடர் என்பதைச் சுட்டுகிறது படம். அங்கு தான் சிக்கலும் தொடங்குகிறது. திராவிடக் கட்சிகள் பணத்துக்கு வாக்கு வாங்கி மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகச் சுருக்கிவிட்டனர் என்னும் மேம்போக்கான புரிதலே படத்தை முன்னிழுத்துச் செல்கிறது. அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது, சீரியல் பார்ப்பது என இடம்பெற்றிருக்கும் காட்சிகள் யாரைக் கிண்டலடிக்கின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் ஒரு காட்சியில் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களது புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவர்களை எல்லாம் யார் முன்னிருத்துகிறார்கள். படம் யாரைப் போற்றுகிறது யாரைத் தூற்றுகிறது என்பது எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளது. அதனால்தான் படத்துடன் ஒன்றுபட முடியாமலும்போகிறது.
படத்தில் நடித்திருக்கும் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அரசியல் படத்துக்கு அது சொல்ல வரும் அரசியல் வலுவாக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தின் அரசியல் உள்ளீடற்று பொக்காக உள்ளது. இயக்குநர் மய்யத்தில் நின்றுகொண்டு படமெடுத்திருக்கிறார். வாக்குக்குப் பணம் வாங்குவது குறித்துப் படம் விமர்சிக்கிறது. ஆனால், தனிமனிதர் பணம் பெறாமல் அதே வாக்கைச் சமூகத்துக்காகப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்றும் சொல்கிறது. அதுதான் குழப்பமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் வருகிறது. ஆகவே, மக்கள் ஓரணியில் திரண்டு புரிதலுடன் வாக்களிப்பது என்பது எப்போதும் எட்டாக்கனியே. அதன் மகத்துவத்தையே படம் பேசுகிறது. ஆகவே, அது ஒரு உட்டோப்பியா என்னும் அளவிலேயே தங்கிவிடுகிறது.
அரசியல் கட்சிகள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றன என்பது அரைவேக்காட்டுத் தனமான இன்னும் சொல்லப்போனால் மய்யத்தனமான புரிதல். ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஊழல் புரையோடிப்போய்விட்டது என்று இப்போது முன்வைக்கப்படும் நாலாந்தரக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையிலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் மிகவும் ஆபத்தானது. இப்படியான படங்களை அதன் எளிமைத் தன்மைக்காக விதந்தோதுவது சிக்கலானது. ஏனெனில், அந்த எளிமைத் தன்மை விஷம் கக்கப் பயன்பட்டுள்ளது. அதைப் புறந்தள்ளிவிட்டு இதை நல்ல படம் என்று முன் மொழிதல் அரசியல் புரிதலற்ற தன்மையென்றே விளங்கிக்கொள்ள முடிகிறது.
ஸ்மைல் என்ற பெயர் கொண்ட நாவிதராக யோகி பாபு நடித்திருக்கிறார். அவரை அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் இளிச்சவாயன் என்றே கூப்பிடுகிறார்கள். அவரும் அவர்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்கிறார். இதெல்லாம் எந்தக் காலத்தில் நடைபெறுகிறது? அவரது உண்மையான பெயரே அவருக்கு மறந்துவிட்டதாம். அதனால் அந்த ஊருக்குப் பணிக்கு வரும் அஞ்சல் நிலையப் பணியாளரான பெண் அவருக்குப் பெயர் வைக்கிறார். மண்டேலா என்னும் பெயரை அவருக்குச் சூட்டி அவருக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்றுத் தருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே மெல்லிய அன்பு இழையோடுகிறது.
ஒரு ஓட்டுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள் என்பது திரைக்கதையின் சவ்வுப் பகுதி. ஏனெனில், அந்த ஒற்றை அம்சத்தை வைத்துத்தான் கதையை இழுக்க வேண்டும் என்பதால் இயன்ற அளவுக்கு இழுத்திருக்கிறார்கள். ஆகவே, படத்தை மிகப் பொறுமையாகப் பார்க்க வேண்டியதும் இருக்கிறது. குறியீட்டுத் தன்மையுடன் திராவிட அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம் குருட்டாம்போக்குத் தன்மையில் மூழ்கியிருப்பதால் படம் முன்வைக்கும் அரைகுறை அரசியல் படத்தை முழுமைப்படுத்தாமல் குறைபடுத்துகிறது. கடின உழைப்பு, சிறந்த நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி என்றெல்லாம் படத்தில் நேர்மறையான விஷயங்கள் இருந்தாலும் அது முன்வைக்கும் அரசியல் நச்சு மிக்கது என்பதால் இந்தப் படத்தைப் புறந்தள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழில் அரசியல் படங்களின் போதாமை காரணமாக இதைப் போன்ற படங்களைப் புகழ்ந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான செயல்பாடன்று.
நான் முதன்முதலில் எந்தத் தேர்தலில் வாக்களித்தேன் என்பதே மறந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வாக்களித்தேன் என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேனா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தேனா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தேனா என்னும் தெளிவு இல்லை. அது ஒரு மங்கிய சித்திரமாகவே மனத்தின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது. அண்மையில் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். பாஜக ஆட்சி அமைந்தபிறகுதான் வாக்களிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை உணர முடிந்திருக்கிறது.
ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது சிலருக்கு ஒரு சடங்கு. ஆனால், உண்மையில் வாக்களிப்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது ஜனநாயக உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. பொதுவாக, வாக்களிப்பது குறித்து பெரிய புரிதல் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. நாம் வாக்களித்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்னும் விட்டேத்தியான மனநிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த மனநிலையிலிருந்து விடுபட்டால் மட்டுமே நூறு சதவீத வாக்களிப்பு என்பதை நம் நாடு சாத்தியமாக்கும் என்பது உறுதி. மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமை கொண்ட நமது நாடும் தேர்தல் என்பதை மிகப் பெரிய பொருள்செலவுடனும் ஆள்பலத்துடனும் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 முதலே வாக்களிப்பதன் அவசியத்தை மனம் குறித்துவைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் பீடு நடைபோட்டது. பத்தாண்டுகளாக ஆட்சி வாய்ப்பை இழந்திருந்த திமுக எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்னும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எல்லாவற்றையும் சமாளித்தது திமுக. நாடாளுமன்றக் கூட்டணியை எந்தச் சேதாரமுமின்றி அப்படியே தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.
அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து சிக்கல்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை இம்முறை தவறவிட்டது அதிமுக. பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக என்பது அதிமுகவுக்கு மிகப் பெரிய சவால். தமிழ்நாட்டில் பாஜக என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ள கட்சி. இதனுடன் கூட்டணி சேர்வது என்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல்தான். மீள்வது பெருங்கடினம். ஆனால், அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவைத் தவிர்த்துவிடவோ தள்ளிவைக்கவோ முடியவில்லை. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு.
இது தவிர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பெரிய கேள்விக் குறி. ஆனால், அதிமுகவின் வாக்குகளைப் பெரிய அளவில் சிதைக்கும் கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை அதுவும் அதிமுக வாக்குகளைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கட்சி பெறும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது உறுதி. இது போக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒன்றும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் பெற்ற தொகுதிகளில் மூன்றைத் திரும்பக் கொடுத்து சாதனை புரிந்தது. நாம் தமிழரும் இந்தக் களத்தில் போட்டியிடுகிறது.
![]() |
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் |
இப்படியான தேர்தலில் காலையிலேயே வாக்களித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாகக் காலையில் வெயில் இல்லை. இதமான சூழலே நிலவியது. காலையில் ஏழே கால் அளவில் புறப்பட்டு நன்னகரத்தில் உள்ள எனது வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்:28) வாக்களிக்கச் சென்றேன். கறுப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். அருகருகே இரண்டு வாக்குச் சாவடிகள் இருந்தன. முதல் வாக்குச்சாவடியில் ஆண், பெண் இருபாலர் வரிசையில் பலர் நின்றிருந்தனர். நான் இரண்டாவதாக இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியதிருந்தது. அதில், பெண்கள் ஓரிருவர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். ஆண்கள் வரிசையில் பத்து பேருக்கு மேலே நின்றிருந்தனர். நான் எனது முறைக்காகக் காத்திருந்தேன்.
வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் சிலிப்பைச் சோதிப்பதற்காகவும், சானிடைஸர், கையுறை வழங்குவதற்காகவும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பூத் சிலிப்பைச் சோதித்து உள்ளே வாக்களிக்க அனுப்பினர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரால் நிற்க முடியாத காரணத்தால் எல்லாருடமும் அனுமதி பெற்று வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். வாக்களித்த பின்னர் எல்லாருக்கும் இருகை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார்.
வாக்குச்சாவடியில் சுவரில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களும், வாக்காளர் குறித்த விவரங்களுக்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தன. தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இது போக நோட்டாவும் உண்டு. ஆக, மொத்தம் 19. என்னுடைய பூத் சிலிப்பைச் சோதித்துவிட்டு சானிடைஸர் வழங்கினார்கள். கைகளில் அதைப் பரவச் செய்தேன். பின்னர் கையுறையை அணிந்துகொண்டேன். பாலிதீன் கவர் போன்றிருந்தது கையுறை. சிறிது நேரத்துக்குப் பின்னர் வாக்குச்சாவடிக்குள் அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும், எதிரே அலுவலர்கள் மூவர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் தனியே அவர்களுக்கு எதிரே அவர்களுக்கு இடப்புற மூலையில் அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் நான்கு அலுவலர்கள் இருந்தனர். அனைவருமே பெண்கள்தாம்.
வரிசையாக அமர்ந்திருந்த அலுவலர்களில் எனக்கு வலப்புறம் முதலில் அமர்ந்திருந்த அலுவலர் பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று சோதித்தார். சோதித்தபின் என் பெயருக்கு எதிரே டிக் செய்து விட்டு, ரோஸ் கலர் கூப்பன் ஒன்றைக் கொடுத்தார். அடுத்து அமர்ந்திருந்த அலுவலர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார். அடுத்து இறுதியாக அமர்ந்திருந்த அலுவலரிடம் ரோஸ் நிற கூப்பனைக் கொடுத்தேன். அவர் வாக்களிக்கும் இயந்திரத்தைக் காட்டி வாக்களிக்கச் சொன்னார். வாக்கு இயந்திரம் ப வடிவ தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு காரணமாக நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பதைப் பிறர் அறியாமல் பாதுகாக்க முடிந்தது.
வாக்கு இயந்திரத்தில் நான் யாருக்கு வாக்களிக்க விரும்பினேனோ அந்த வேட்பாளருக்கு எதிரே இருந்த பொத்தானை அழுத்தினேன். அழுத்திவிட்டு அருகிலிருந்த விவிபாட் இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் நான் வாக்களித்த வேட்பாளர் பெயரும் சின்னமும் தாங்கிய சீட்டு தோன்றி, மறைந்தது. அதன் பின்னர் இயந்திரத்திலிருந்து பீப் ஒலி எழுந்தது. வெளியே வந்துவிட்டேன். இந்த முறை வாக்களித்துவிட்டேன். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். வீட்டுக்கு வந்து வாக்களித்ததை அறிவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டேன்.
வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பத்து சதவீதத்துக்கு மேலே வாக்குப் பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக அவை இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிலை நீடித்தால் வாக்கு சதவீதம் எண்பது வரை செல்லலாம் என்று நினைக்கிறேன்.