அஞ்சலி (19.11.1961 - 17.04.2021): நடிகர் விவேக்
மரணம் ஒரு புதிர். அதிலும் பலமுறை பழகிய புதிர். எப்படி முயன்றும் அவிழ்க்க இயலாத புதிர். அதனால்தான் அதன் மீதான மர்மம் நீடித்து நிலைத்திருக்கிறது. இதோ இப்போது நிகழ்ந்திருக்கும் நடிகர் விவேக்கின் மரணமும் இப்படி விடைகாண இயலா ஒரு புதிராகவே வந்து விடிந்திருக்கிறது. விளக்கு எரியும்போதும் அதனடியில் ஓரிருள் வட்டம் படர்ந்திருக்கும். அப்படித்தான் நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது போலும். நகைச்சுவை நடிகர் விவேக்கின் வாழ்விலும் இப்படியான துயரம் மகனின் மறைவு வழியே படிந்தது. 2015 ஆம் ஆண்டில் தன் மகன் தன்னைவிட்டுப் பிரிந்த துயரத்திலிருந்து மீள அவர் எவ்வளவோ முயன்றும் அந்தத் துயரத்திலேயே தன்னையும் மூழ்கடித்துக்கொண்டாரோ என்ற எண்ணத்தை அவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய காலை (17.04.201) துயரத்துடன் விடிந்துள்ளது. அதிகாலை நான்கு முப்பதைந்துக்குப் பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார் என்னும் தகவல் தந்த துயரம் அது. விவேக்கின் மரணம் இந்த அளவுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நேற்றைக்கு முந்தைய நாளில்தான் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். முதல் நாள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்; மறு நாள் மாரடைப்பு வந்திருக்கிறது, அடுத்த நாள் மாண்டுவிட்டார் என்பதைத்தான் பலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
விவேக்குக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என அரசின் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பொது மக்களின் மனங்களில் விவேக்கின் மரணம் தடுப்பூசி குறித்த பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் திரளுக்குத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய சந்தேகங்களுக்கு அரசு தந்துள்ள விடை போதுமானதுதானா எனப் பெரும்பாலானோர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் மக்களை எப்போதும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர் விவேக். 1961ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் பிறந்திருக்கிறார். வீட்டில் ராஜு என அழைக்கப்பட்ட விவேக்கின் பெயர் விவேகானந்தன். அப்பா ஆசிரியர். திருநெல்வேலி, மதுரை, நீலகிரி, சென்னை ஆகிய ஊர்களில் வசித்திருக்கிறார். நீலகிரியில் படித்தபோது, 1969இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமர் பதில் கடிதமும் அனுப்பியிருக்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிகாம், எம்காம் படித்திருக்கிறார். தன் தாய்க்கு நிகரான கல்லூரி இது என்கிறார் விவேக். சென்னையில் தலைமைச்செயலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, மாலை நேர சட்டக் கல்லூரியில் படித்திருக்கிறார். பள்ளியில் படித்த காலத்திலேயே இவருக்கு கலைத்துறையின் மீது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. இவர் மதுரை டெலிபோன்ஸில் வேலை செய்த போது அங்கே இவரது காமெடி நிகழ்ச்சியைப் பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜ் அவரை இயக்குநர் பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கோவிந்தராஜைத் தனது வழிகாட்டி என்கிறார் விவேக். இதைத் தொடர்ந்து சென்னை ஹ்யூமர் கிளப்பில் பல காமெடி நிகழ்ச்சிகளை எழுதி வழங்கியிருக்கிறார் விவேக். பாலசந்தரிடம் எழுத்து உதவிக்காகத் தான் சென்றிருக்கிறார். ஆனால், விவேக்கை பாலசந்தர் நடிகராக்கிவிட்டார். 1987இல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய விவேக் இறுதியாக நடித்த தமிழ்த் திரைப்படம் தாராள பிரபு.
புதுப் புது அர்த்தங்கள் படத்தில் இவர் கூறும் அண்ணன் சொல்லு அண்ணன் சொல்லு வசனம் இவரை ரசிகர்களிடத்தில் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தது. விவேக்கின் மிமிக்ரி திறமை அவருக்குப் பெரிதாகக் கைகொடுத்தது. முதல் மரியாதை சிவாஜியை அவர் நகலெடுத்த காமெடி காட்சியை நம்மால் மறக்கவே முடியாது. கரு.பழனியப்பனின் பார்த்திபன் கனவு படத்தில் அவர் வழங்கிய அந்த காமெடி காட்சியைப் பார்த்த பிறகு முதல் மரியாதை சிவாஜியைப் பார்த்தால்கூட விவேக் ஞாபகத்தைத் தவிர்க்க முடியாது. இந்தப் படத்தின் காமெடி டிராக் கல்யாணபரிசு டணால் தங்கவேலு காமெடியின் இன்னொரு வடிவம் தாம். மேலும், விவேக்கைப் பெரிய நகைச்சுவை நடிகர் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், எம் ஆர் ராதா போலவோ, டி எஸ் பாலையா போலவே ஏன் வடிவேலு போலவோ கூட அவரால் உடல்மொழியால் நகைச்சுவையைக் கடத்திவிட முடியவில்லை. ஆனால், நகைச்சுவை நடிப்பில் அவர் கோலோச்சியதற்கு அவரது வசனங்களே ஊன்றுகோல்களாயின. விவேக் என்று நீங்கள் யோசித்துப் பார்த்தால் சட்டென்று நினைவுவருபவை எல்லாமே வசனங்கள்தாம் என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் விவேக் பாலசந்தர் பட்டறையில் மெருகேறியவர் என்பதற்கு அதுவே வலுச்சேர்க்கிறது.
ரஜினியுடன் உழைப்பாளி, வீரா ஆகிய படங்களில் நடித்த விவேக் நீண்ட நாள்களுக்குப் பிறகு சிவாஜியில் அவருடன் இணைந்திருந்தார். தனுஷுடன் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார். அதில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்திருக்கிறது. பிறகு ஏதோ காரணத்தால் வடிவேலுக்குப் பதில் விவேக் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகவே, அதன் உடல்மொழி வடிவேலை ஞாபகப்படுத்துவது போல் அமைந்திருக்கும். அதிலும் தனது முத்திரையைப் படித்திருப்பார். சமகாலச் சம்பவங்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தனது படத்தில் காட்சிகளில் செருகிவிடுவார். அதனால் அவர் படத்தைப் பார்க்கும்போது அந்தக் காலகட்டத்தின் முக்கியமான விஷயங்களின் ரெபரென்ஸை அவருடைய படத்தில் காண முடியும். இது விவேக்கின் சிறப்பு என்றுகூடச் சொல்லலாம். கவிதையில் அதிகமான அறிவியலை வைரமுத்து பாடியதுபோல் விவேக் தனது நகைச்சுவைக் காட்சிகளில் சமகாலப் பாதிப்பு அதிகமாக இடம்பெற்றிருக்கும்.
தனுஷுடன் நடித்த உத்தமபுத்திரன் தனக்கொரு வித்தியாசமான படம் என்று சொல்கிறார் விவேக். 1987இல் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கினாலும் 1999இல் வாலி படத்திலிருந்துதான் சொந்தமாக காமெடி டிராக் எழுதும் நிலைக்கு உயர்ந்தார். உன்னருகே நானிருந்தால், அலைபாயுதே, குஷி, மின்னலே, 12B, ரன், தூள், சாமி, பேரழகன், அந்நியன் என விவேக்கின் பயணம் விரிந்துகொண்டே இருந்தது. எம் ஆர் ஆர் ராதா குரலை அவர் மிமிக்ரி செய்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தபோதும், கமலுடன் எந்தப் படத்திலும் அவர் சேர்ந்து நடித்திருக்கவில்லை. ஆனால், நான் தான் பாலா என்னும் படத்தில் தான் நாயகனாக நடிக்க, அந்தப் பரிணாம வளர்ச்சிக்கு கமலின் ஆலோசனை காரணம் என்று கூறியிருக்கிறார் விவேக். இந்தியன் - 2 படத்தில் கமலுடன் நடிக்கவிருந்தார். ஆனால், அதற்குள் காலன் முந்திக்கொண்டார்.
விவேக்கை வெறும் காமெடி நடிகர் எனச் சுருக்கிவிட முடியாது. அவர் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்திருக்கிறார். இசையில் அவருக்குப் பெரிய நாட்டம் இருந்திருக்கிறது. அவருடைய மூத்த மகள் அமிர்தாநந்தினிக்குப் பெயர் சூட்டியவர் இளையராஜா. கவிதை எழுதுவதில் நிறைவு கண்டிருக்கிறார். நீங்கள் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு கேட்டபோது, சிட்னி ஷெல்டன் பெயரைச் சொல்கிறார் விவேக். தனது படங்களில் மூட நம்பிக்கையை அவர் விமர்சித்திருந்தாலும், அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஷீரடி பாபாவின் படத்தைத் தனது பர்ஸில் வைத்திருந்திருக்கிறார். அதே நேரத்தில் பல சர்ச்சைகளுக்கு ஆளான ஜக்கி வாசுதேவின் சீடர் போலவும் நடந்துகொண்டிருக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிரியத்துக்குரிய சீடன் போல தன்னைக் காட்டிக்கொள்வதில் விவேக் விருப்பம் கொண்டிருந்திருக்கிறார். அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க, பசுமை கலாம் திட்டத்தின் கீழ் அவர் லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார் என்பது அதன் சான்றுதான். தன்னைச் சுற்றியுள்ள பலருக்கும் உதவியிருக்கிறார். தன் மகன் சாய் பிரசன்னா மறைந்தபிறகு அவர் பெயரில் சாய் ஃபவுண்டேஷன் என்பதை ஏற்படுத்தி பலருக்கும் உதவினார். இப்படியான பல அம்சங்கள் கொண்டிருந்த நடிகர் ஒருவர் திடீரென மறைந்துவிட்டாரே என்பதைத் தான் பலராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெருங்கோட்டூரில் தொடங்கிய அவரது வாழ்க்கை மேட்டுக்குப்பத்தில் வந்து முடிந்துள்ளது. அவரது உடலுக்கு அவருடைய இளைய மகள் தேஜஸ்வினி தீ மூட்டியிருக்கிறார். இந்தியாவிலேயே ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஒரே நடிகர் விவேக்தான். 2009இல் பத்மஸ்ரீ பெற்றுக்கொண்டார். தமிழக அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழக அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துக்கொடுத்திருக்கிறார். அதனால்தான் தமிழக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலிலும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று அவருக்கு காவல்துறை மரியாதை அளித்திருக்கிறது.
பொதுவாக, எந்தக் கலைஞருக்கும் எப்போதும் மரணமே என்பதே இல்லை. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் நாம் அவர்களை அவர்களது கலை வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இறப்பு என்பது ஓர் இழப்பு என்பதே நமது வருத்தம். மரணம் அந்த வருத்தத்தைத் தராமல் போவதேயில்லை என்பதே உண்மை. அந்த உண்மைதான் நம்மைச் சுடுகிறது. அதன் சூடு உடனே ஆறுவதில்லை. அதற்குச் சில காலம் ஆகும். அதுவரை காத்திருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக