தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு திரைப்படத்தைத் திரையில் நேர்த்தியுடன் தருவது என்பது ஓரளவு எளிதானதுதான். திரைப்படத்தை உண்மையான ஆர்வத்துடன் உருவாக்க முயலும் இயக்குநர் அப்படியான படத்தை எளிதாகத் தந்துவிட முடியும். ஆகவே, இந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் அந்த வகையில் படத்தை உருப்படியாகவே தந்திருக்கிறார். யதார்த்தமான படம் போன்ற பாவனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால், படமோ யதார்த்தமானது அன்று. அது பலவிடங்களில் யதார்த்தத்தை மீறியது.
சூரங்குடி ஊராட்சி வடக்கூர் தெக்கூர் என இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஆனால், அந்த இரு பிரிவுகளுக்கும் தலைமை வகிக்கும் மதியும் ரத்தினமும் ஒரே தகப்பனையும் தனித்தனித் தாயையும் கொண்டவர்கள். அந்தப் பெரியவர் இரண்டு பிரிவினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு பிரிவிலிருந்து ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் சாதி, சமய பூசலற்றவர் என்பதைப் போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். அவரது வீட்டில் பெரியார் படம் இருக்கிறது. ஒரு வகையில் அவர் திராவிடர் என்பதைச் சுட்டுகிறது படம். அங்கு தான் சிக்கலும் தொடங்குகிறது. திராவிடக் கட்சிகள் பணத்துக்கு வாக்கு வாங்கி மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகச் சுருக்கிவிட்டனர் என்னும் மேம்போக்கான புரிதலே படத்தை முன்னிழுத்துச் செல்கிறது. அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது, சீரியல் பார்ப்பது என இடம்பெற்றிருக்கும் காட்சிகள் யாரைக் கிண்டலடிக்கின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் ஒரு காட்சியில் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களது புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவர்களை எல்லாம் யார் முன்னிருத்துகிறார்கள். படம் யாரைப் போற்றுகிறது யாரைத் தூற்றுகிறது என்பது எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளது. அதனால்தான் படத்துடன் ஒன்றுபட முடியாமலும்போகிறது.
படத்தில் நடித்திருக்கும் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அரசியல் படத்துக்கு அது சொல்ல வரும் அரசியல் வலுவாக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தின் அரசியல் உள்ளீடற்று பொக்காக உள்ளது. இயக்குநர் மய்யத்தில் நின்றுகொண்டு படமெடுத்திருக்கிறார். வாக்குக்குப் பணம் வாங்குவது குறித்துப் படம் விமர்சிக்கிறது. ஆனால், தனிமனிதர் பணம் பெறாமல் அதே வாக்கைச் சமூகத்துக்காகப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்றும் சொல்கிறது. அதுதான் குழப்பமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் வருகிறது. ஆகவே, மக்கள் ஓரணியில் திரண்டு புரிதலுடன் வாக்களிப்பது என்பது எப்போதும் எட்டாக்கனியே. அதன் மகத்துவத்தையே படம் பேசுகிறது. ஆகவே, அது ஒரு உட்டோப்பியா என்னும் அளவிலேயே தங்கிவிடுகிறது.
அரசியல் கட்சிகள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றன என்பது அரைவேக்காட்டுத் தனமான இன்னும் சொல்லப்போனால் மய்யத்தனமான புரிதல். ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஊழல் புரையோடிப்போய்விட்டது என்று இப்போது முன்வைக்கப்படும் நாலாந்தரக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையிலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் மிகவும் ஆபத்தானது. இப்படியான படங்களை அதன் எளிமைத் தன்மைக்காக விதந்தோதுவது சிக்கலானது. ஏனெனில், அந்த எளிமைத் தன்மை விஷம் கக்கப் பயன்பட்டுள்ளது. அதைப் புறந்தள்ளிவிட்டு இதை நல்ல படம் என்று முன் மொழிதல் அரசியல் புரிதலற்ற தன்மையென்றே விளங்கிக்கொள்ள முடிகிறது.
ஸ்மைல் என்ற பெயர் கொண்ட நாவிதராக யோகி பாபு நடித்திருக்கிறார். அவரை அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் இளிச்சவாயன் என்றே கூப்பிடுகிறார்கள். அவரும் அவர்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்கிறார். இதெல்லாம் எந்தக் காலத்தில் நடைபெறுகிறது? அவரது உண்மையான பெயரே அவருக்கு மறந்துவிட்டதாம். அதனால் அந்த ஊருக்குப் பணிக்கு வரும் அஞ்சல் நிலையப் பணியாளரான பெண் அவருக்குப் பெயர் வைக்கிறார். மண்டேலா என்னும் பெயரை அவருக்குச் சூட்டி அவருக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்றுத் தருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே மெல்லிய அன்பு இழையோடுகிறது.
ஒரு ஓட்டுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள் என்பது திரைக்கதையின் சவ்வுப் பகுதி. ஏனெனில், அந்த ஒற்றை அம்சத்தை வைத்துத்தான் கதையை இழுக்க வேண்டும் என்பதால் இயன்ற அளவுக்கு இழுத்திருக்கிறார்கள். ஆகவே, படத்தை மிகப் பொறுமையாகப் பார்க்க வேண்டியதும் இருக்கிறது. குறியீட்டுத் தன்மையுடன் திராவிட அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம் குருட்டாம்போக்குத் தன்மையில் மூழ்கியிருப்பதால் படம் முன்வைக்கும் அரைகுறை அரசியல் படத்தை முழுமைப்படுத்தாமல் குறைபடுத்துகிறது. கடின உழைப்பு, சிறந்த நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி என்றெல்லாம் படத்தில் நேர்மறையான விஷயங்கள் இருந்தாலும் அது முன்வைக்கும் அரசியல் நச்சு மிக்கது என்பதால் இந்தப் படத்தைப் புறந்தள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழில் அரசியல் படங்களின் போதாமை காரணமாக இதைப் போன்ற படங்களைப் புகழ்ந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான செயல்பாடன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக