படத்தின் கதாபாத்திர உருவாக்கங்கள் மிகச் சன்னமான சித்தரிப்புகளால் ஆனவை. ஆனால், அவை பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. படத்தின் தொடக்கக் காட்சியை சினிமா என்னும் கலை கண்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டெனலாம். அது நாள்தோறும் நாம் காணும் ஒரு காட்சிதான். அதை அவ்வளவு ரசிக்கத்தக்க அளவில் படமாக்கியுள்ளார்கள். ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒரு பொருளைக் கொண்டுபோய் வாடிக்கையாளரிடம் கொடுக்கும் மிகவும் சாதாரணக் காட்சி அது. ஆனால், படமாக்கப்பட்ட விதத்தால் அது பார்வையாளரை அப்படியே கவர்ந்துவிடுகிறது.
ஒளிப்பதிவும் இசையும் அளந்தெடுத்த அல்லது அறுத்தெடுத்த வசனங்களும் படத்தின் தரத்தை உயர்த்த மிகவும் பயன்பட்டுள்ளன. கேரள நிலத்தின் அழகையும் பசுமையையும் காட்டுவதற்கு கேமரா கோணங்கள் பெரிதும் உதவியுள்ளன. பனச்சல் என்னும் ஒரு வீடு, வீட்டிலுள் காணப்படும் ஒரு குளம், வீட்டையொட்டி ஓடும் ஓரோடை இவை மிகச் சாதாரணமானவைதாம். ஆனால், திரையில் இவற்றை காட்சிக்குவைத்திருக்கும் பாங்கு இவற்றை அசாதாரணமானதாக்குகிறது. நம் கண்களால் காண்பதைவிடப் பரந்து பட்ட காட்சிகளை கேமரா அள்ளித்தருவதாலேயே காட்சிகளின் தீவிரம் அப்படியே மனத்தில், ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குவது போல் இறங்கிவிடுகிறது.
பனச்சல் வீட்டின் தலைவன் குட்டப்பன். அவன்தான் எல்லாம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இரண்டாம் மகன் ஜெய்சன் நீட்டும் செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் குட்டப்பனின் அழுத்தம் குடும்பத்தின்மேலுள்ள தனது ஆதிக்கத்தை எளிதில் யாருக்கும் விட்டுத்தரத் தயாராக இல்லாத குணத்தைக் கல்வெட்டில் பொறிப்பதுபோல் பதிக்கிறது. குட்டப்பனுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் ஜோமோன், குடிகாரன். மண முறிவு ஏற்பட்டு மனைவியிடம் இருந்து பிரிந்து தன் பருவ வயது மகனுடன் பனச்சல் வீட்டில் வசித்துவருகிறான். அவன் எந்தக் காரியத்துக்கும் தந்தையின் உத்தரவை எதிர்பார்த்து நிற்பவன். பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்கும் தகப்பனின் அறையில் ஒரு மது பாட்டிலை எடுக்கும்போதுகூட, குட்டப்பனிடம் சொல்லிவிட்டே எடுக்கிறான். அவன் மகனான பாப்பியோ மிகத் தந்திரமாகப் பாட்டனின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் துப்பாக்கியே வாங்கிவிடுகிறான்.
நடுவுள்ளவனான ஜெய்சன் தன் மனைவி பின்ஸியுடன் அதே வீட்டில் வசித்துவருகிறான். ரப்பர் கடையைக் கவனித்துவருகிறான். வணிகத்தின் பொருட்டு ஏற்பட்ட பழக்கமோ என்னவோ எல்லாரிடமும் நயந்துபேசியே தன் தரப்புக்குச் சாதகமான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள முயல்கிறான். அவனையும் தன் பேச்சுக்கு இணங்கிப்போகச் செய்கிறாள் பின்ஸி. குட்டப்பன் சடலம் கிடத்தப்பட்ட அறைக்கு வருமாறு அழைக்கும்போது ஜோஜியை முகக்கவசம் அணிந்துகொள்ளச் சொல்கிறாள் பின்ஸி. அவள் எவ்வளவு இறுக்கமான உணர்வால் வனையப்பட்டவள் என்பதை இந்த ஒற்றை வசனம் தீர்க்கமாகச் சொல்கிறது.
இளைய மகன் ஜோஜிதான் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாகியிருக்கிறான். குதிரை வணிகத்தில் தோல்வியையே தொடர்ந்து சந்தித்துவருபவன். ஆகவே, தந்தை அவனை இரண்டாம் தர நிலையிலானவனாகக் கருதுகிறார். அது அவனுக்கும் தெரியும். குட்டப்பனோ எந்த மகனுக்கும் எந்த உரிமையும் தராமல் எல்லாக் கட்டுப்பாட்டையும் தன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் குட்டப்பன் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் இறந்துவிடுவார் என குடும்ப மருத்துவர் ஃபெலிக்ஸ் தெரிவிக்கிறார். ஆனால், அது நடைபெறவில்லை. அவர் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது ஆட்சியைப் பரிபாலிக்கத் தொடங்குகிறார்.
தந்தை இறந்துவிடுவார் என நினைத்த இளைய மகனுக்கு இது பெரிய சிக்கலாகப் போய்விடுகிறது. அவர் உயிரோடிருக்கும்வரை தன்னால் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாது என நினைக்கிறான் அவன். அடுத்த மகனும் நகரத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கத் திட்டமிட்டிருக்கிறான். அவனுக்கும் தந்தையின் இருப்பு இடைஞ்சல் என்றே படுகிறது. அவர்கள் நினைத்ததைப் போல் தந்தைக்கும் முடிவு வருகிறது. அதைத் தொடர்ந்து மூத்த மகனுக்கும் முடிவு வருகிறது. இதனால் பனச்சல் வீடு என்ன ஆனது, ஏன் அந்த வீட்டுக்கு இப்படியொரு நிலைமை என்பதையெல்லாம் ஷியாம் புஷ்கரனின் திரைக்கதையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திலீஷ் போத்தன். படத்தின் கதை மிகவும் சராசரியான மேடை நாடகத்துக்கானது. அதைக் காட்சி மொழியின் உதவியுடன் கலாபூர்வத் திரைப்படமாக்கியிருப்பதில் திலீஷ் போத்தனின் திறமை வெளிப்படுகிறது. கதாபாத்திரங்களின் மனநிலைகளைப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு சினிமா சாத்தியப்படுத்தும் அத்தனை தொழில்நுட்பத்தையும் கைதேர்ந்தவகையில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார்கள் தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும்.
ஜெய்சன் மனைவி பின்ஸியாக நடித்திருக்கும் உன்னிமாயா பிரசாத்தும், ஜோமோன் கதாபாத்திரமேற்றிருக்கும் பாபுராஜும் திரைப்படத்துக்கான இயல்புடன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தன் தம்பி ஜோஜி ஏர் கன்னைத் தூக்குவதைக் காணும்போது, ஜோமோனிடம் வெளிப்படும் நக்கல் கலந்த புன்னகை அவருடைய நடிப்பைச் சொல்லிவிடுகிறது. கோடீஸ்வரா என ஃபெலிக்ஸ் தன்னை அழைக்கும்போது, ஜோஜியின் மனம் கொள்ளும் குதூகலத்தைப் பின்னணியிசை மிகத் துல்லியமாக மொழிபெயர்த்துவிடுகிறது. வசனங்களை இயன்ற அளவு பிசிறில்லாமல் அளவெடுத்தாற்போல் நறுக்கியெடுத்து நடிகர்களிடம் கொடுத்திருப்பார்கள்போல. ஒரு நாடகத்தை எந்த அளவுக்கு வசனங்கள் தூக்கிச் சுமக்குமோ அந்த அளவுக்கு இந்தப் படத்தை இசை தூக்கிச் சுமக்கிறது.
மரத்திலிருந்து நழுவி நதிமீது விழுந்து கிடக்கும் இலைகள் போல் படம் முழுவதும் இசைத் துணுக்குகள் நிறைந்துகிடக்கின்றன; சில காட்சிகளில் மௌனமும் ஓரிசையாய் மலர்ந்துகிடக்கிறது (ஜோஜி, குட்டப்பனின் மருந்து டப்பாவில் மருந்தை மாற்றி வைக்குமிடத்தில் மௌனம் இசை சாம்ராஜ்யத்தை நடத்துகிறது). தமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துதீர வேண்டிய விருப்பத்தில் சிக்குண்டு கிடக்கும் மனிதர்கள் அதற்காகத் தேவைப்படும் குற்றங்களைப் புரிய தயங்குவதில்லை. தமது குற்றத்தைப் பிறர் அறிந்துகொள்ளும்வரை தங்களது குணாதிசயத்தை வெளிப்படுத்தாமல் போர்வையில் போர்த்தி பாதுகாத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் குற்றங்களின் நிமித்தம் தாம் கொள்ளும் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இயலாமல் திண்டாடுகிறார்கள். அவர்களது இயல்பான குணம் வெளிப்படும்போது அவர்களது குரூரத்தை அறியும் மனிதர்கள் திடுக்கிடுகிறார்கள். மனிதர்களிடம் வெளிப்படும் இயல்பான குணங்களில் நல்ல தன்மையும் கெட்ட தன்மையும் கலந்தே காணப்படுகின்றன. இந்தக் குணங்களின் காரணமாக அவர்களது வாழ்வில் ஏற்படும் அலைக்கழிப்புகளையும் அற்ப மகிழ்ச்சிகளையும் காட்சி மொழியில் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறது ஜோஜி. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி ஒரு முழுமையான திரைப்படம் தரும் நிறைவைத் தராமல் நழுவியும் இருக்கிறது ஜோஜி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக