இந்த வலைப்பதிவில் தேடு

அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

மரணமென்னும் புதிர்

அஞ்சலி (19.11.1961 - 17.04.2021): நடிகர் விவேக்


மரணம் ஒரு புதிர். அதிலும் பலமுறை பழகிய புதிர். எப்படி முயன்றும் அவிழ்க்க இயலாத புதிர். அதனால்தான் அதன் மீதான மர்மம் நீடித்து நிலைத்திருக்கிறது. இதோ இப்போது நிகழ்ந்திருக்கும் நடிகர் விவேக்கின் மரணமும் இப்படி விடைகாண இயலா ஒரு புதிராகவே வந்து விடிந்திருக்கிறது. விளக்கு எரியும்போதும் அதனடியில் ஓரிருள் வட்டம் படர்ந்திருக்கும். அப்படித்தான் நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது போலும். நகைச்சுவை நடிகர் விவேக்கின் வாழ்விலும் இப்படியான துயரம் மகனின் மறைவு வழியே படிந்தது. 2015 ஆம் ஆண்டில் தன் மகன் தன்னைவிட்டுப் பிரிந்த துயரத்திலிருந்து மீள அவர் எவ்வளவோ முயன்றும் அந்தத் துயரத்திலேயே தன்னையும் மூழ்கடித்துக்கொண்டாரோ என்ற எண்ணத்தை அவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய காலை (17.04.201) துயரத்துடன் விடிந்துள்ளது. அதிகாலை நான்கு முப்பதைந்துக்குப் பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார் என்னும் தகவல் தந்த துயரம் அது.  விவேக்கின் மரணம் இந்த அளவுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நேற்றைக்கு முந்தைய நாளில்தான் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். முதல் நாள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்; மறு நாள் மாரடைப்பு வந்திருக்கிறது, அடுத்த நாள் மாண்டுவிட்டார் என்பதைத்தான் பலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 


விவேக்குக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என அரசின் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பொது மக்களின் மனங்களில் விவேக்கின் மரணம் தடுப்பூசி குறித்த பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் திரளுக்குத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய சந்தேகங்களுக்கு அரசு தந்துள்ள விடை போதுமானதுதானா எனப் பெரும்பாலானோர் கேள்வி எழுப்புகிறார்கள்.  

ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் மக்களை எப்போதும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர் விவேக். 1961ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் பிறந்திருக்கிறார். வீட்டில் ராஜு என அழைக்கப்பட்ட விவேக்கின் பெயர் விவேகானந்தன். அப்பா ஆசிரியர். திருநெல்வேலி, மதுரை, நீலகிரி, சென்னை ஆகிய ஊர்களில் வசித்திருக்கிறார். நீலகிரியில் படித்தபோது, 1969இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமர் பதில் கடிதமும் அனுப்பியிருக்கிறார். 

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிகாம், எம்காம் படித்திருக்கிறார். தன் தாய்க்கு நிகரான கல்லூரி இது என்கிறார் விவேக். சென்னையில் தலைமைச்செயலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, மாலை நேர  சட்டக் கல்லூரியில் படித்திருக்கிறார். பள்ளியில் படித்த காலத்திலேயே இவருக்கு கலைத்துறையின் மீது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. இவர் மதுரை டெலிபோன்ஸில் வேலை செய்த போது அங்கே இவரது காமெடி நிகழ்ச்சியைப் பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜ் அவரை இயக்குநர் பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கோவிந்தராஜைத் தனது வழிகாட்டி என்கிறார் விவேக். இதைத் தொடர்ந்து சென்னை ஹ்யூமர் கிளப்பில் பல காமெடி நிகழ்ச்சிகளை எழுதி வழங்கியிருக்கிறார் விவேக். பாலசந்தரிடம் எழுத்து உதவிக்காகத் தான் சென்றிருக்கிறார். ஆனால், விவேக்கை பாலசந்தர் நடிகராக்கிவிட்டார். 1987இல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய விவேக் இறுதியாக நடித்த தமிழ்த் திரைப்படம் தாராள பிரபு


புதுப் புது அர்த்தங்கள் படத்தில் இவர் கூறும் அண்ணன் சொல்லு அண்ணன் சொல்லு வசனம் இவரை ரசிகர்களிடத்தில் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தது. விவேக்கின் மிமிக்ரி திறமை அவருக்குப் பெரிதாகக் கைகொடுத்தது. முதல் மரியாதை சிவாஜியை அவர் நகலெடுத்த காமெடி காட்சியை நம்மால் மறக்கவே முடியாது. கரு.பழனியப்பனின் பார்த்திபன் கனவு படத்தில் அவர் வழங்கிய அந்த காமெடி காட்சியைப் பார்த்த பிறகு முதல் மரியாதை சிவாஜியைப் பார்த்தால்கூட விவேக் ஞாபகத்தைத் தவிர்க்க முடியாது. இந்தப் படத்தின் காமெடி டிராக் கல்யாணபரிசு டணால் தங்கவேலு காமெடியின் இன்னொரு வடிவம் தாம். மேலும், விவேக்கைப் பெரிய நகைச்சுவை நடிகர் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், எம் ஆர் ராதா போலவோ, டி எஸ் பாலையா போலவே ஏன் வடிவேலு போலவோ கூட அவரால் உடல்மொழியால் நகைச்சுவையைக் கடத்திவிட முடியவில்லை. ஆனால், நகைச்சுவை நடிப்பில் அவர் கோலோச்சியதற்கு அவரது வசனங்களே ஊன்றுகோல்களாயின. விவேக் என்று நீங்கள் யோசித்துப் பார்த்தால் சட்டென்று நினைவுவருபவை எல்லாமே வசனங்கள்தாம் என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் விவேக் பாலசந்தர் பட்டறையில் மெருகேறியவர் என்பதற்கு அதுவே வலுச்சேர்க்கிறது.  

ரஜினியுடன் உழைப்பாளி, வீரா ஆகிய படங்களில் நடித்த விவேக் நீண்ட நாள்களுக்குப் பிறகு சிவாஜியில் அவருடன் இணைந்திருந்தார். தனுஷுடன் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார். அதில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்திருக்கிறது. பிறகு ஏதோ காரணத்தால் வடிவேலுக்குப் பதில் விவேக் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகவே, அதன் உடல்மொழி வடிவேலை ஞாபகப்படுத்துவது போல் அமைந்திருக்கும். அதிலும் தனது முத்திரையைப் படித்திருப்பார். சமகாலச் சம்பவங்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தனது படத்தில் காட்சிகளில் செருகிவிடுவார். அதனால் அவர் படத்தைப் பார்க்கும்போது அந்தக் காலகட்டத்தின் முக்கியமான விஷயங்களின் ரெபரென்ஸை அவருடைய படத்தில் காண முடியும். இது விவேக்கின் சிறப்பு என்றுகூடச் சொல்லலாம். கவிதையில் அதிகமான அறிவியலை வைரமுத்து பாடியதுபோல் விவேக் தனது நகைச்சுவைக் காட்சிகளில் சமகாலப் பாதிப்பு அதிகமாக இடம்பெற்றிருக்கும். 


தனுஷுடன் நடித்த உத்தமபுத்திரன் தனக்கொரு வித்தியாசமான படம் என்று சொல்கிறார் விவேக். 1987இல் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கினாலும் 1999இல் வாலி படத்திலிருந்துதான் சொந்தமாக காமெடி டிராக் எழுதும் நிலைக்கு உயர்ந்தார். உன்னருகே நானிருந்தால், அலைபாயுதே, குஷி, மின்னலே, 12B, ரன், தூள், சாமி, பேரழகன், அந்நியன் என விவேக்கின் பயணம் விரிந்துகொண்டே இருந்தது. எம் ஆர் ஆர் ராதா குரலை அவர் மிமிக்ரி செய்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தபோதும், கமலுடன் எந்தப் படத்திலும் அவர் சேர்ந்து நடித்திருக்கவில்லை. ஆனால், நான் தான் பாலா என்னும் படத்தில் தான் நாயகனாக நடிக்க, அந்தப் பரிணாம வளர்ச்சிக்கு கமலின் ஆலோசனை காரணம் என்று கூறியிருக்கிறார் விவேக். இந்தியன் - 2 படத்தில் கமலுடன் நடிக்கவிருந்தார். ஆனால், அதற்குள் காலன் முந்திக்கொண்டார். 

விவேக்கை வெறும் காமெடி நடிகர் எனச் சுருக்கிவிட முடியாது. அவர் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்திருக்கிறார். இசையில் அவருக்குப் பெரிய நாட்டம் இருந்திருக்கிறது. அவருடைய மூத்த மகள் அமிர்தாநந்தினிக்குப் பெயர் சூட்டியவர் இளையராஜா. கவிதை எழுதுவதில் நிறைவு கண்டிருக்கிறார். நீங்கள் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு கேட்டபோது, சிட்னி ஷெல்டன் பெயரைச் சொல்கிறார் விவேக். தனது படங்களில் மூட நம்பிக்கையை அவர் விமர்சித்திருந்தாலும், அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஷீரடி பாபாவின் படத்தைத் தனது பர்ஸில் வைத்திருந்திருக்கிறார்.  அதே நேரத்தில் பல சர்ச்சைகளுக்கு ஆளான ஜக்கி வாசுதேவின் சீடர் போலவும் நடந்துகொண்டிருக்கிறார். 


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிரியத்துக்குரிய சீடன் போல தன்னைக் காட்டிக்கொள்வதில் விவேக் விருப்பம் கொண்டிருந்திருக்கிறார். அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க, பசுமை கலாம் திட்டத்தின் கீழ் அவர் லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார் என்பது அதன் சான்றுதான். தன்னைச் சுற்றியுள்ள பலருக்கும் உதவியிருக்கிறார். தன் மகன் சாய் பிரசன்னா மறைந்தபிறகு அவர் பெயரில் சாய் ஃபவுண்டேஷன் என்பதை ஏற்படுத்தி பலருக்கும் உதவினார். இப்படியான பல அம்சங்கள் கொண்டிருந்த நடிகர் ஒருவர் திடீரென மறைந்துவிட்டாரே என்பதைத் தான் பலராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெருங்கோட்டூரில் தொடங்கிய அவரது வாழ்க்கை மேட்டுக்குப்பத்தில் வந்து முடிந்துள்ளது. அவரது உடலுக்கு அவருடைய இளைய மகள் தேஜஸ்வினி தீ மூட்டியிருக்கிறார். இந்தியாவிலேயே ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஒரே நடிகர் விவேக்தான். 2009இல் பத்மஸ்ரீ பெற்றுக்கொண்டார். தமிழக அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழக அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துக்கொடுத்திருக்கிறார். அதனால்தான் தமிழக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலிலும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று அவருக்கு காவல்துறை மரியாதை அளித்திருக்கிறது. 

பொதுவாக, எந்தக் கலைஞருக்கும் எப்போதும் மரணமே என்பதே இல்லை. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் நாம் அவர்களை அவர்களது கலை வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இறப்பு என்பது ஓர் இழப்பு என்பதே நமது வருத்தம். மரணம் அந்த வருத்தத்தைத் தராமல் போவதேயில்லை என்பதே உண்மை. அந்த உண்மைதான் நம்மைச் சுடுகிறது. அதன் சூடு உடனே ஆறுவதில்லை. அதற்குச் சில காலம் ஆகும். அதுவரை காத்திருப்போம். 

வியாழன், ஏப்ரல் 15, 2021

மரணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம்?


சில நாள்கள் நாம் எதிர்பாராத விஷயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும். அவை நல்லவையாக இருந்தால் மனம் மகிழும்; துன்பம் தருபவையாகிவிட்டால் அவ்வளவுதான் அந்த நாளின் நினைவு மனத்தில் அழிக்க முடியாதபடி பதிந்துவிடும். பின்னர், எப்போதெல்லாம் மனம் சோர்வுகொள்ளுமோ துயர நினைவில் மூழ்குமோ அப்போதெல்லாம் அந்த நாள் மனவடுக்கில் மேல் தட்டில் தட்டுப்படும். அப்படியொரு நாளாகிவிட்டது இந்த ஏப்ரல் 15. 

மதியம் மூன்று மணிக்குப் படுத்து உறங்கிவிட்டேன். ஐந்தே கால் அளவில் முழித்தேன். இரண்டு மணி நேரத்துக்கு மேல் தூங்கியதால் மனம் சொங்கித்தனமான உணர்வைக் கொண்டிருந்தது. கையில் மொபைலைத் தூக்கிவைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை மேய்ந்துகொண்டிருந்தேன். கல்லூரி நண்பன் பாலா ஜோசப் செபஸ்தியான் படங்களைக் கொண்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மெதுவாக கமெண்ட் செக்‌ஷனுக்கு வந்தால் பலரும் RIP, ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்கள். சட்டென ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. மீண்டும் மேலே போய் பாலா என்ன எழுதியிருக்கிறான் என்று படித்தேன். நம்பவே முடியவில்லை. பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அது உண்மைதான். நண்பன் ஜோஸப் செபஸ்டியன் கொரானா காரணமாக உயிரிழந்திருந்தான்.

யாரிடம் விசாரிக்கலாம் செபஸ்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் யார் எனத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று செல்லத்துரையின் நினைவு வந்தது. ஆகவே, செல்லத்துரைக்குப் பேசினேன். அவன் செய்தியை உறுதிப்படுத்தினான். ஏப்ரல் 13 அன்றைய இரவில் 12 மணி அளவில் மரணமடைந்ததாகவும் கொரோனா மரணம் என்பதால் அங்கேயே நல்லடக்கம் நடைபெற்றுவிட்டதாகவும் கூறினான். ஏப்ரல் 4 ஈஸ்டர் அன்றுகூடப் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தான். டெல்லியில்  வசிக்கும் நண்பன் வெங்கடேஸ்வரன் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாக செபஸ்டியனிடம் பேசியபோது, தொற்றிலிருந்து மீண்டு விட்டதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று சொன்னதாகவும் கூறினான். ஆனால், அதற்குள் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக சட்டென்று உயிர் பிரிந்திருக்கிறது.


செபஸ்டியான் பற்றிய பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன. கல்லூரிக் காலம் நிறைவுறும் வேளை, நண்பர்கள் முத்தரசு, செல்லத்துரை, மஜீத், நாகராஜன், சுலைமான், செபஸ்டியன் ஆகியோருடன் சென்றுவந்த சுற்றுலா நாள்கள் நினைவிலாடின. அப்போது எடுத்த புகைப்படங்களில் சில ஃபேஸ்புக்கில் கிடைத்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மரணம் பற்றி தத்துவார்த்தமாக எவ்வளவோ பேசுகிறோம். ஆனால், நெருங்கிய நண்பர்களின் அல்லது உறவுகளின்போது, பேச்சிழந்து நிற்கிறோம்.

செபஸ்டியானை எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடிந்த வருடத்தில் குற்றாலத்தில் நடைபெற்ற செல்வ மாமாவின் திருமணத்துக்கு வந்திருந்தான். அப்போது தென்காசி கீழப்பாளையம் வீட்டில் எடுத்த புகைப்படங்களில் அவனும் வழக்கமான சிரிப்புடன் இப்போதும் காணப்படுகிறான்.  அதன் பின்னர் வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிட்டோம். மீண்டும் கல்லூரி நண்பர்களின் கூடுமை 1998இல் சென்னையில் நடைபெற்றபோது சந்தித்தேன். அப்போது நான் சரியான வேலை இல்லாமல் இருந்தேன். ஆகவே, அவன் தனக்குத் தெரிந்த என்விஎச் கோயா நிறுவனத்தில் என்னையும் வேலைக்குச் சேர்த்துவிட்டான்.

இருவரும் அந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தோம். இருவரையும் குஜராத் அனுப்புவதாக முதலில் சொன்னார்கள். வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டால் தமிழ்ப் படம் பார்க்க முடியுமோ முடியாதோ என்று தோன்றியதால், வேலை நிமித்தமாகப் புறப்படுவதற்கு முந்தைய நாளில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் – அப்படித்தான் நினைவு – பிரபு சுவலட்சுமி நடித்த பொன் மனம் திரைப்படத்தை இருவரும் சேர்ந்து பார்த்தோம். பின் ஏனோ நிறுவனம் அவனை குஜராத்துக்கு அனுப்பியது. நான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டேன். அப்போது கையில் மொபைல் இல்லாததால் தொடர்பு விடுபட்டுவிட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை பாரிஸ் பஸ் நிலையம் அருகே வைத்து செபஸ்டியானைப் பார்த்தேன். அப்போது நான் கோயா நிறுவனத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அவனும் கோயாவிலிருந்து சென்று வேறொரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினான். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றான். அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற நண்பர்களின் கூடுகையில் ஒருமுறை பார்த்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான். நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான். எப்போதுமே உற்சாகமா காணப்படுவான். கடுமையான உழைப்பாளி. கல்லூரிக் காலத்தில் அவன் தன் தந்தையின் தோள்மீது கைபோட்டுப் பேசிச் சென்ற காட்சி ஒன்று மனத்தில் எழுகிறது. அவனுடைய உற்சாகமான சிரிப்பை மனம் ஒருபோதும் மறக்காது. கொரானா காலம் செபஸ்டியனுக்கு அஞ்சலி எழுதவைக்கும் என எண்ணவில்லை. 

மரணம் நிகழ்ந்த கணத்துக்கும்

அதற்கு முந்தைய கணத்துக்கும் இடையே

ஓர் ஆயுள் காலம் வந்தமர்ந்துவிடாதா என

அற்ப மனம் ஏங்கும்.

யதார்த்தமோ செவிட்டிலறையும்.

எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறோம்.

ஆனால், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்னும் வாய்ப்பு

மனத்தைச் சாந்தப்படுத்திவைக்கிறது.

இப்போது உன் மரணம்

அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிவிட்டது.

இவ்வளவு சீக்கிரம் இது நிகழ்ந்திருக்க வேண்டாம்

நீ எங்கோ சென்றுவிட்டாய் உன் சிரிப்பு எங்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

அதை என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை.

சனி, ஆகஸ்ட் 20, 2016

இறைவி: சிற்பி சிதைத்த சிலைகள்


ஓரிரு படங்கள் இயக்கிய பின்னர், தான் ஒரு இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டியதும் சமூக அக்கறை தொனிக்கும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற வேட்கை ஓர் இயக்குநருக்கு எழுவது இயல்பு. கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ அப்படி உருவான படைப்பே. எல்லாப் படங்களையும் போலவே இதிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வருகிறார்கள். இது பெண்களுக்கான படமோ ஆண்களுக்கான படமோ அல்ல, இது குத்துப்பாடலைக் கலையாகக் கருதும் சராசரியான ஒரு சினிமா. ஆனால் ஒரு வணிக சினிமாவாக ‘ஜிகர்தண்டா’ கொண்டிருந்த நேர்த்தி இதில் இல்லை. ‘இறைவி’யில் சில நெகிழ்ச்சியான, உயிரோட்டமான தருணங்களை உருவாக்கித் தர முயன்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த முயற்சி பல இடங்களில் தோல்வியையே அடைந்துள்ளது. வெற்றி தோல்வி முக்கியமல்ல முயற்சியே போதும் என்று மொழியும் நல் மனங்களைக் கொண்டோர் அவரை உச்சிமோந்து வருகிறார்கள்.   

கார்த்திக் சுப்புராஜ் ஒரு நேர்காணலில், இது பெண்ணியப் படமல்ல என்று தெரிவித்தார். அது உண்மை என்பது படத்தைப் பார்த்த பின்னர் தெளிவாகப் புலனாகிறது. கதையின் மையமான வடிவுக்கரசி ஏற்றிருக்கும் மீனாட்சி என்னும் கதாபாத்திரம் படம் முழுவதும் கோமா நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மையில் ஒரு குறியீடு. மீனாட்சியின் மூத்த மகனான இயக்குநர் அருள் செல்வன் என்ற வேடமேற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வேடம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. அவருக்குத் தொந்தரவு தராத வேடமான இதுதான் படத்தின் பிரதான வேடம். ‘இறைவி’யின் ஆதிச் சிக்கல் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது. அருள் பிரமாதமான இயக்குநர் என்பதாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் நம்புகிறார்கள். அவருடைய மே 17 படம் படமாக்கப்பட்டும் வெளிவர இயலவில்லை. தயாரிப்பாளர் முகுந்தனுக்கும் அருளுக்கும் ஏற்பட்ட ஈகோ மோதலே இதற்குக் காரணம். படம் வெளியானால் அருள் செல்வன் உலகத் தமிழர்களால், புலம் பெயர் தமிழர்களால் விதந்தோதப்படலாம் என்னும் நம்பிக்கை அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளது. ஆனால் இறுதிவரை அந்தப் படம் வெளியானதா இல்லையா என்பதை யாராலும் எளிதில் சொல்லிவிட முடியாது.


தமிழர்களின் உணர்ச்சியை உத்தேசித்து கண்ணகியையும் ஈழத் தமிழர் விஷயத்தையும் கதையில் சேர்த்திருக்கிறார்கள். சிலப்பதிகாரம், இலங்கைத் தமிழர் விவகாரம் என்ற சங்கதிகள் இணையும்போது படத்தின் நிறம் மாறும். கூடவே மகளிரின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசும்போது அப்படத்துக்குத் தனிக்கவனம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் படத்தை உருவேற்றியிருக்கிறார்கள். இவையெல்லாம் இப்படத்திற்கு ஒரு அறிவுஜீவித் தனமான பிம்பத்தை உருவாக்கும் முயற்சி என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தைச் சந்தைப்படுத்தும் ஓர் உத்தி. அந்த உத்தி வெற்றியடைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படம் ஒரு போலி அறிவுஜீவித்தனமான படமாகவே காட்சி கொள்கிறது. இயல்பான சம்பவங்களோ, காட்சியமைப்போ, வசனங்களோ இல்லாமல் எல்லாமே போலச் செய்தது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரது படங்களின் பாதிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர் வேடம் போட்டது போல் படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மீனாட்சி, யாழினி, பொன்னி, மலர்விழி என்ற நான்கு பெண்களின் வாழ்வு அவர்களைச் சேர்ந்த ஆண்களால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதே கதை. ஆனால் அது திரைக்கதைக்குத் தாவும்போது தடாலடியாகக் கீழே விழுந்து படத்துக்கு மிகப் பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடுகிறது. கதைக்குத் தேவையான திரைக்கதை அமைக்கப்படாமல் திரைக்கதையின் பயணம் வேறொரு திசையில் செல்கிறது. படத்தின் முக்கியத் திருப்பங்கள் சீரியல் தனமானவை. திரைக்கதையை நகர்த்த வேண்டும் என்ற முனைப்பே பிரதானமாக உள்ளது காட்சிகளின் நம்பகத் தன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. விஜய் சேதுபதி போலீஸ் வாகனத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் இடம்பெறும் இரு கொலைகளும் அவசியமில்லாதவை. அதிலும் தயாரிப்பாளரை மைக்கேல் கொல்லும் காட்சி வன்முறையானது. தான் எதைச் சொல்லப்போகிறோம் என்ற தெளிவு இயக்குநரிடம் இல்லாத தன்மையையே இது காட்டுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் அபாயகரமானவை அதனாலேயே அவை கொண்டாடப்படவும் செய்கின்றன என்பது ஒரு முரண்நகை அல்லது தற்போதைய தமிழ்ச் சூழல்.


இயக்குநர் அருள் செல்வன் படம் முடங்கிப்போய்விட்ட காரணத்தால் முழு நேரக் குடிகாரனாகிவிட்டார். தன்னைத்தானே சிதைத்துக்கொள்கிறார். படத்தை வெளியிட சிலைகளைக் கொள்ளையடிக்கும் முயற்சிக்கு அருள் செல்வனின் தந்தையான சிற்பி தாஸ் வரை அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ‘தங்களிடம் பராமரிப்பே இல்லாத நிலையில் இருக்கும் சிலை அது பேணப்படும் இடத்திற்குச் செல்வது சரிதானே’ என்று தன் மனைவியைக் குறிப்பிட்டு தாஸ் வசனம் பேசுவதன் மூலம் சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. இது சரியென்றால் குடிகார அருள் செல்வனைவிட்டு அவருடைய மனைவி யாழினி விலகிச் செல்ல விரும்புவது நியாயம்தானே? ஒருவேளை மே 17 என்னும் படம் வெளியாகி அப்படம் தோற்றுவிட்டால் அவர் மீண்டும் குடிகாரனாகும் வாய்ப்பு உள்ளதே. அப்படிப்பட்ட ஒரு குடிகாரக் கணவனைவிட்டு யாழினி செல்லாமல் அருள் செல்வனைத் தியாகியாகக் காட்டியிருப்பது எந்தவகை நியாயம் எனத் தெரியவில்லை. அதிலும் இறுதியில் அவர் பேசும் ஆண் நெடில் என்னும் வசனம் அருவருப்பானது ஆனால் திரையரங்கில் இந்த வசனத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு குமட்டச்செய்கிறது.       

மலர்விழி கதாபாத்திரம் காதல் கணவனை இழந்தபிறகு துணையாக மைக்கேலைக் கொள்கிறார். அவருக்கு மைக்கேல் மேல் துளியும் காதலில்லை. ஆனால் உடல் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மைக்கேல் மலர்விழியைக் காதலிக்கிறார். அவரையே மணந்துகொள்ள விரும்புகிறார். ஆனால் மலர்விழி மறுக்கவே பொன்னியை மணந்துகொள்கிறார். மலர்விழி கதாபாத்திரம் தனது பாலியல் தேவையை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது புனித மழை நீரை இயக்குநர் தெளிக்கிறார். மைக்கேல் மழையில் நனைந்தபடி வெளியேறுவதை மாடியிலிருந்து பார்க்கும் மலர் கண்ணீர் வடிப்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?


ஜெகன் கதாபாத்திரச் சித்தரிப்பும் சரிவரக் கையாளப்படவில்லை. பெண்களின் துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் அவர். ஆனால் அவரால்தான் பொன்னியின் வாழ்க்கையில் சிக்கலே வருகிறது. அவருக்குப் பொன்னி மீது காதல். பொன்னியை விரும்புவதை வெளிப்படையாகச் சொல்கிறார். சமூகம் போதித்த கட்டுப்பாடுகளை பொன்னியால் மீற முடியாமல் அந்தக் காதலை மறுக்கிறார். ஆனால் பொன்னியை அடைய ஜெகன் போடும் திட்டமோ சிறிதுகூடத் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கவில்லை. அந்தத் திட்டம் நம்பத்தகுந்ததாகவோ, ஏற்றுக்கொள்ளும்படியாகவோ அமைக்கப்படவில்லை.   

கதை தொடர்பான அனுபவமோ புரிதலோ இல்லாமல் படத்தைக் கையாண்டிருப்பதால் படத்துடன் ஒன்றுவது சிரமமாக உள்ளது. அஞ்சலி கதாபாத்திரம் மட்டுமே படத்தின் சினிமாத்தனத்தை மீறி இயல்பாக உலவுகிறது. பாலசந்தரின் படங்களிலும் ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களிலும் பெண் கதாபாத்திரங்களிடம் காணப்பட்ட தெளிவு இந்தப் படத்தின் கதாபாத்திரங்களிடம் காணப்படவில்லை. படத்தின் பல காட்சிகளில் மழை பொழிகிறது. மழையில் நனையப் பெண்கள் விருப்பம் கொள்கிறார்கள், ஆனால் நனைவதே இல்லை. பெண்களின் சிக்கலுக்கு ஆண்களே காரணம் என்ற கருத்தியல் முன்வைக்கப்படுவது ஆண் பெண் உறவு குறித்த புரிதலின் போதாமையினாலேயே. இத்தகைய கதையைக் கையாளும் பக்கும் இன்னும் கார்த்திக் சுப்புராஜுக்கு கைவரவில்லை என்பதையே இப்படம் உணர்த்துகிறது.     

நண்பர் முரளியின் அடவி இதழில் ஆகஸ்டு 2016இல் வெளியானது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்