இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 22, 2019

ஹீரோ அல்ல ஜீரோ

சிறுவயது முதலே சக்திமான் மீது விருப்பம் கொண்டு சூப்பர் ஹீரோவாகும் ஆசை கொண்டவர் சக்தி (சிவகார்த்திகேயன்). ஆனால், பிழைப்புக்காக அவர் போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறார்.  கல்லூரிச் சேர்க்கை நேரத்தில் மாணவர்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து அதிலும் கமிஷன் பார்க்கிறார். அவருடைய தங்கை போன்ற மதிக்கு ஏரோ நாட்டிகல் படிப்புக்காக சீட்டுக்கு அலைகிறார். அது கிடைக்காமல் போகிறது. மதி கண்டுபிடித்த உப்புநீர் இன்ஜினைக் கண்காட்சிக்கு வைத்து அதனால் சீட் பெறுகிறார். ஆனால், மதி காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பைத் திருடிவிட்டார் எனச் சொல்லிவிடுகிறார்கள். 

அதில் மனமுடைந்த மதி தற்கொலைசெய்துகொள்கிறார். மதியின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் சத்தியமூர்த்தி (அர்ஜுன்) இருக்கிறார். மதி தற்கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார் மகாதேவ் (அபய் தியோல்).  அபய் தியோலைப் பழிவாங்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சக்தி. அதில் அவர் வென்றாரா, எதிரிகளை ஒழித்தாரா, சத்ய மூர்த்தி எவ்வகையில் உதவினார் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ஹீரோ.

கல்விக்கு எதிரான கருத்துப் பேசும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். நமது கல்விமுறைக்கு எதிராகக் குரல் தருவதற்காகவே ஹீரோவின் திரைக்கதை பயணிக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படத்தில் உள்ளன. சுவாரசியமற்ற சம்பவங்களாலும் காட்சிகளால் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். படம் முழுக்க அந்தரத்தில் பறப்பது போன்று எந்த ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இருக்கிறது.
திறமையிருந்தும் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களை சத்யமூர்த்தி அழைத்துவந்து படிப்புச் சொல்லிக்கொடுக்கிறார். புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அரசுக்கே தெரியாமல் அவர் கல்வி நிறுவனம் நடத்துகிறார் என்பதெல்லாம் காதில் சுற்றப்படும் பெரிய பூ. சத்திய மூர்த்தி மாணவர்களை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்புகிறார். அது எப்படி சாத்தியம்? அவர் நிறுவனம் நடத்துவதே தெரியாத போது என்ன அடிப்படையில் அவருடைய மாணவர்கள் சாதிக்கிறார்கள். ஏதாவது கண்டுபிடிப்பு வெளி உலகத்துக்கு வந்தால் அதை மோப்பம் பிடித்துவிடுகிறான் வில்லன். ஆனால், சத்திய மூர்த்தி அவனுக்கே தெரியாமல் எல்லாவற்றையும் செய்கிறார் என்பதையெல்லாம் நம்பும்படியாக இல்லை.  

மாணவர்களின் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அபகரித்து அவர்களை முடமாக்கிவிட்டுக் கண்டுபிடிப்புகளைக் காசாக்குகிறார் அபய் தியோல். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பே சரியாக இல்லை. அவர் யார், கல்வி நிறுவனம் நடத்துகிறாரா, எல்லா விஷயத்தையும் அறிந்து எப்படித் தடுக்கிறார்? இவை எதற்கும் பதில் இல்லை.

நல்ல மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்களிடமும் பெரிய திறமைகள் ஒளிந்திருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால் மாணவர்கள் பெரிய அளவில் வருவார்கள். அதற்கு நமது கல்வி முறை உதவிகரமாக இல்லை. இதைச் சொல்லும் இந்தப் படம் அதை நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் சொல்லவில்லை என்பது படத்தின் பெரிய பலவீனம்.
வழக்கறிஞர் ஒருவர் தான் படிக்க நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்வதாகக் கூறுகிறார். கல்வி முறை பற்றி அறிந்த ஒருவர் இதைக் கேட்டுச் சிரிக்கத்தான் செய்வார். மாணவர்களின் ரப் நோட்டில் அவர்களுடைய திறமையை அறியலாம் என்ற சாதாரணக் கருத்தை ஊதிப் பெருக்கி சூப்பர் ஹீரோவரை கொண்டு சென்றதே அபத்தம்.

சிவகார்த்திகேயன் வழக்கம் போல் நடித்திருக்கிறார். அர்ஜுனுக்கு முக்கியமான வேடம் அதை ஒழுங்காகச் செய்திருக்கிறார். கதாநாயகி என்ற ஒருவர் வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை வைத்திருக்கிறார்கள். அழகம் பெருமாள், இளங்கோ குமார வேல், ரோபோ சங்கர் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். இசை, பாடல்கள் யுவன் சங்கர் ராஜா. இறுதியில் ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.   

கல்வி முறைக்கு எதிராகக் கருத்து சொல்வதற்கும் பெரிய கல்வி அவசியம். அது இல்லாமல் படமெடுத்தால் அது சூப்பர் ஹீரோ படமாக உருவாகாது. இப்படியான அமெச்சூர் படமாகத் தான் உருவாகும். இவன் ஹீரோ அல்ல வெறும் ஜீரோ.

வியாழன், டிசம்பர் 19, 2019

CIFF 2019: ஒரு குப்பைப் படம்

இன்று காலை 11 மணிக்கு தேவியில் X – The eXploited என்னும் ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் பார்த்தேன். அரசியல் தூவப்பட்ட கிரைம் திரில்லர் வகைப் படம். அடுக்கடுக்காக நடைபெற்ற பல தற்கொலைச் சம்பவங்கள் கொலை என காவல் துறை சந்தேகிக்கிறது. அதைத் துப்புத் துலக்க ஒரு பெண் அதிகாரி வருகிறார். அவருடைய கணவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதுவும் ஒரு கொலை என்பது அவருக்குத் தெரியவருகிறது. இதனால் மனப் பாதிப்பு ஏற்படும் அந்த அதிகாரி அத்துடன் குற்றச் செயல்களின் பின்னணியைக் கண்டுபிடிக்கிறார். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி மாற்றிக் காட்சிகளைக் கோக்கும் பாணியில் படக் காட்சிகள் வந்துசெல்கின்றன. அரசுக்கெதிராக சாதாரண மனிதர்கள் எதையும் செய்ய முடிவதில்லை என்பதையே படம் பேசுகிறது. அதிகாரிகளாலும் எதையும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம். இந்தப் படத்தின் உருவாக்கம் இதைப் பார்க்கும்படி செய்தது. 
அடுத்து கேசினோவில் Despite the Fog என்னும் இத்தாலிப் படம். முகம்மது என்னும் சிறுவன் எல்லை தாண்டிவந்துவிடுகிறான். கடலில் ரப்பர் படகு ஒன்றில் வரும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவனுடைய பெற்றோர் இறந்துவிடுகிறார்கள். அவனை சமீர் என்னும் இளைஞன் காப்பாற்றுகிறான். அவன் சுவீடன் செல்ல வேண்டும் எனச் சொல்வதால் சிறுவனும் அங்கே செல்ல நினைக்கிறான். இதனிடையே ஒரு கிறித்தவத் தம்பதியிடம் முகம்மது வந்துவிடுகிறான். அந்தத் தம்பதி தனது மகனை இழந்திருந்தவர்கள். எனவே அந்தப் பெண்ணுக்கு தன் மகனே மீண்டும் வந்ததுபோல் திருப்தி ஏற்படுகிறது. கிறித்தவ வீட்டில் வாழும் இஸ்லாமியச் சிறுவன் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான், அவனால் அங்கே இருக்க முடிந்ததா என்பதைப் படம் பேசுகிறது. கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என நம்பிச் சென்றால் படம் மிகவும் சுமார் ரகம். 

இறுதியாக கேசினோவில் இரவும் 7 மணிக்கு The Bra என்னும் மௌனப் படம். சில படங்கள் வசனமாகப் பேசிக் கொல்லும் இந்தப் படம் மௌனமாகக் கொன்றது. சரியான குப்பைப் படம். ஆனால் உலக சினிமா திரையிடலுக்குத் தைரியமாக அனுப்பியிருக்கிறார்கள். ரயில் இன்ஜின் டிரைவர் தனது இன்ஜினை ஓட்டிச் செல்லும்போது ஒருநாள் அவரது ரயிலில் பெண் ஒருவரின் மேல் உள்ளாடை மாட்டிக்கொண்டுவிடும். அது யாருக்குரியது என அவர் தேடி அலையும் அலைச்சல்தான் படம். சரியான பாடாவதிப் படம். 

CIFF 2019: மனிதரை ஆளும் ஆவணம்

இன்று (டிசம்பர் 17) தேவி தியேட்டரில் மதியம் 2 மணிக்கு Holy Boom என்னும் கிரேக்கத் திரைப்படம் பார்த்தேன். சூழல் காரணமாக வேறு நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர். அவருடைய கணவன் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறான். அவனது சடலத்தை வாங்க வேண்டும் என்றால் இவரது பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அதை ஒரு குழு வைத்துக்கொண்டு தர மறுக்கிறது. கணவனின் சடலம் மருத்துவமனையில் கிடக்கிறது. சிறு குழந்தையை வைத்துக்கொண்டு அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்பது கதை. இதைத் தவிர இன்னும் சிலர் படத்தின் முக்கியப் பாத்திரங்கள். வேறு நாட்டில் அகதிகள் போல் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசிய படம். 

கிரேக்கப் பெண்ணைக் காதலிக்கிறான் கறுப்பின இளைஞன் ஒருவன். அவனது சிக்கலைப் போக்கப் பணம் தேவைப்படுகிறது. காதலியும் அவனும் சேர்ந்து தேவாலயக் காணிக்கையைத் திருடத் திட்டமிடுகிறார்கள். திருடிவிட்டு வரும் வழியில் காதலன் மாட்டிக்கொள்கிறான். அவனைச் சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். அவனது ரத்தம் வழிந்தோடிய சாலையில் கிறிஸ்தவர்களின் ஆராதனைப் பவனி நடைபெறுகிறது. இப்படி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் படம் இது

சிறு வயதிலேயே தன் குழந்தையைப் பறிகொடுத்த முதிய பெண் ஒருவர் வருகிறார் இவர் அனைவருக்கும் உதவுகிறார். கிரேக்கப் பெண்ணுக்கும் அவருடைய காதலனுக்கு அடைக்கலம் தருகிறார். தனியே வீட்டில் அழும் குழந்தை குறித்து வருத்தம் கொள்கிறார். ஒருமுறை அந்தத் தாய் காவல் துறையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது குழந்தையின் அழுகை பொறுக்க மாட்டாமல் அதைக் கறுப்பின இளைஞன் மூலம் தூக்கிவந்து விடுகிறார் அந்த முதிய பெண்மணி. இந்த நேரத்தில் தாயின் பேச்சைக் கேட்டு குழந்தையைக் காண வீட்டுக்கு வரும் காவல் துறை அங்கே குழந்தை இல்லாததைக் கண்டு தாய் பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் என நினைக்கிறது.  

CIFF 2019: மனிதத் தவறுகள் குற்றங்களல்ல

இன்று (டிசம்பர் 16) காலையில் எந்தப் படமும் பார்க்கவில்லை. மதியம் 2:45 மணிக்கு கேசினோவில் Zero Floor என்னும் ஈரானியப் படம் பார்த்தேன். மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன் இறந்துவிடுகிறான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்றவர்கள். அப்பா தன் தம்பியுடனும் அம்மா தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்களும் சிக்கல்களும் தான் படம். அதை மீறி அந்தப் பையனை எப்படிப் பெற்று இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதையே திரைக்கதை சித்தரித்திருந்தது. 
அடுத்ததாக, Irina எனும் பல்கேரிய நாட்டுத் திரைப்படம். உணவகம் ஒன்றில் பணிபுரியும் பணிப்பெண். கணவன் ஒரு சிறு குழந்தை ஆகியோரைக் கொண்ட சிறு குடும்பம். அவனுடனேயே அவளுடைய தங்கையும் வசிக்கிறாள். அவள் மட்டுமே சம்பாதிக்கிறாள். அவள் உணவகத்தில் மேற்கொள்ளும் சிறு சிறு திருட்டால் வேலை போய் விடுகிறது. பணத்துக்காக வாடகைத் தாயாகிறாள். ஒரு செல்வந்தத் தம்பதியின் குழந்தையைச் சுமக்கிறாள். மனிதர்கள் அவர்தம் நிறைகுறைகள் எனப் படம் செல்கிறது. 

இறுதியாக Summer of Changsha என்னும் சீனப் படம் பார்த்தேன். துப்பறியும் அதிகாரி இருவர். ஒரு கொலை நடக்கிறது. அதைத் துப்புத் துலக்கும்போது அது ஒரு மருத்துவரின் சகோதரன் என்று தெரியவருகிறது. அந்த மருத்துவரின் கனவில் அந்தச் சகோதரன் வந்து தன் உடன் எங்கெங்கு கிடக்கிறது என்பதைச் சொல்கிறான். கொலையாளி யார் எனத் துப்புத் துலக்குகிறார்கள். இதற்கிடையே மருத்துவருக்கும் துப்பறியும் அதிகாரிக்கும் காதல் வருகிறது. அவருடைய காதலி ஏற்கெனவே இறந்துவிட்டாள். மருத்துவரின் குழந்தையும் இறந்திருக்கும். இருவருக்குமான குற்றவுணர்வு காதல் என்று படம் சென்றது. மிக நிதானமான, சுமாரான படம்.  

புதன், டிசம்பர் 18, 2019

CIFF 2019: அவனுக்குப் பிறக்காத அவனுடைய மகன்

இன்று (டிசம்பர் 15) முழுக்க கேசினோ தியேட்டரிலேயே பொழுதை ஓட்டியாகிவிட்டது. காலையில் முதலில் Alice என்னும் படம் பார்த்தேன். பிரெஞ்சுப் படம். கணவனின் துரோகத்தை அறிந்த மனைவி தானும் அப்படியொரு தகாத பாதைக்குச் செல்லும் சூழலை எதிர்கொண்ட படம். தனது பணத்தை எல்லாம் ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்ட கணவனால் குடும்பமே மூழ்கிவிடும் சூழல் வந்து வாய்க்கிறது. கணவனும் எங்கேயோ சென்றுவிட்டான். அவளுடைய பெற்றோரும் உதவ முடியாத நிலையில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். அந்தத் தொழிலில் அவளுக்கு ஒரு தோழியும் கிடைக்கிறாள். அந்தத் தோழியிடம் தான் பணத்தை முழுவதும் கணவன் இழந்தான் என்பது இறுதியில் தெரிகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் மனைவியைத் தேடி கணவன் வருகிறான். அவனுக்கு மனைவியின் செயல்பாடுகளும் தெரியவருகின்றன. இருவருமே ஒரு புதிய வாழ்க்கையை வாழ முடிவுசெய்துகொள்ளலாம் என்கிறான் கணவன். அந்த மனைவியோ அவளுடைய தோழியுடன் சென்று புதிய வாழ்வை அமைத்துக்கொள்கிறாள். 
அடுத்ததாக Just 6.5 என்னும் ஈரான் திரைப்படம். போதைப் பொருள் கடத்தல் தான் படத்தின் அடிப்படை. முக்கியப் போதைப் பொருள் கடத்தல்காரரைத் தேடி ஓடும் காவல் துறையினர் இருவர் செல்கிறார்கள். முக்கிய நபருக்குப் பதில் வேறொரு நபர் கிடைக்கிறார். அவருக்கே இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதிகார மட்ட ஊழல், நேர்மையற்ற நீதி எனப் படம் செல்கிறது. வசனம் வசனம் வசனம் எனப் பேசித் தீர்க்கிறார்கள். சப் டைட்டிலை வைத்துக்கொண்டு பெரிதாகப் படத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சப் டைட்டில் தொடர்ந்து திரையில் தென்பட்டுக்கொண்டேயிருந்தது. 
அடுத்து, Charcoal என்னும் ஈரானியத் திரைப்படம். மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய காரணத்துக்காக நகைகளைத் திருடி சிறைக்குச் சென்றுள்ள மகன், அவருடைய தந்தை இருவரும் மையப் பாத்திரங்கள். அவர் கரி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய எதிரி நகைக்கடைக்காரர். மகனையும் குடும்பத்தையும் காப்பாற்ற கடத்தலில் ஈடுபட வேண்டிய சூழலையும் எதிர்கொள்கிறார் அந்தத் தந்தை. படத்தின் தொடக்கத்தில் மகனைச் சிறையிலிருந்து அழைத்துவரும் தந்தை இறுதியில் அவரே சிறைக்குச் சென்றுவிடுகிறார். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. 
இறுதியாக, A Son என்னும் துனிசியா நாட்டுப் படம். வேறுபட்ட கதைக் களம். மகிழ்ச்சியுடன் மனைவி மகனுடன் காரில் செல்கிறார் அவர். திடீரெனப் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகப் புறப்பட்டுவரும் தோட்டா ஒன்று மகனைப் பதம் பார்த்துவிடுகிறது. உயிருக்குப் போராடும் மகனுக்கான சிகிச்சையில் அவனது கல்லீரலை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த பரிசோதனையில் அந்த மகன் அவருக்குப் பிறக்கவில்லை என்ற உண்மை தெரிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவியில் அலுவலக நபர் ஒருவர் மூலம் அந்தக் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சூழலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படம். இதனிடையே லிபியா இரக்கமற்ற போர் ஆகியவை குறித்த சித்தரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தீவிரமான படம். பார்த்த ஓரிரு நல்ல படங்களில் இதுவும் ஒன்று.    

செவ்வாய், டிசம்பர் 17, 2019

CIFF 2019: சடலத்தைப் புதைப்பது எளிதல்ல

இன்று (டிசம்பர் 14) காலை தேவியில் 11:00 Sibyl படம் பார்த்தேன். உளவியல் மருத்துவர் ஒருவர் அவரிடம் ஆலோசனைக்காக வரும் நடிகை, அவரது காதல், காதலன், மருத்துவரின் காதல், குடும்பம் எனச் செல்லும் படம் வாழ்க்கை குறித்துப் பேசியது. நடிகர் ஒருவரால் கர்ப்பமான நடிகை கர்ப்பத்தைக் கலைக்கவா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். அது குறித்த ஆலோசனைக்காகத் தான் மருத்துவரை நாடுகிறார். மருத்துவர் ஓர் எழுத்தாளரும்கூட. தன்னிடம் ஆலோசனைக்காக வருபவர்களிடம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் நாவலொன்றை எழுதுகிறார். நடிகைக்கு ஆலோசனை தரத் தொடங்குபவர் ஒரு கட்டத்தில் முழுவதும் நடிகை போலவே மாறிவிடுகிறார். 
நடிகை முழுவதுமாக மருத்துவரின் ஆலோசனையை நாடியே இருக்கிறார். தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குக்கூட மருத்துவரை வரவழைத்துக்கொள்கிறார். இயக்குநருக்குப் பதில் மருத்துவரே காட்சிகளை விளக்குகிறார். படமும் எடுத்து முடித்துவிடுகிறார்கள். நடிகையின் காதலனுடன் மருத்துவருக்கு உறவு ஏற்படுகிறது. இப்படி என்னென்னவோ நடைபெறுகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனிதர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பேசுகிறது படம். 

அடுத்ததாக அண்ணா தியேட்டரில் The Silence of Om என்னும் படம் பார்த்தேன். ஒரு கேங்ஸ்டரின் மகன் ஒரு குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறான். சிறையில் அவனுடன் இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தன் தகப்பனைக் கொன்று விட்டு மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான். தந்தையைக் கொன்றுவிட்டாலும் சிறையில் தான் இறந்தபின்னர் தந்தையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறான். கேங்க்ஸ்டரின் மகனுக்கும் தந்தைமீதான பிரியம் புரிகிறது. சிறுவயதிலிருந்தே அவனை அடித்துக்கொண்டே இருப்பவர் அவர். அவன் உடம்பில் டாட்டூ குத்திக்கொள்வது அவருக்குப் பிடிக்காது. அவன் வெளியில் வந்த பின்னர் அவனுடைய காதலி அந்த டாட்டூவைப் பார்க்க பிரியப்படும் கணத்தில் விழுந்து உயிரை விட்டுவிடுகிறாள். ஆசையை விட்டுவிடுவதே நல்லது என்னும் பௌத்தக் கருத்தை உணர்த்துகிறது படம். 

இறுதியாக தேவிபாலா திரையரங்கில் Amare Amaro என்னும் படம் பார்த்தேன். இதில் இறந்துபோன தன் சகோதரனைப் புதைக்க ஒரு தம்பி மேற்கொள்ளும் முயற்சிகளே படம். இதில் நிலக் காட்சிகள் அழகாக இருந்தன. இறந்த வீடு மூன்று நாட்களுக்குத் திறந்தே இருக்க வேண்டும் போன்ற பண்பாட்டு அம்சங்கள் இருந்தன. அதிகாரம் மிக்க நகரத்தின் தலைவரான பெண்ணின் மகளை அந்தத் தம்பி காதலிக்கிறான். இறுதியில் அண்ணனைப் புதைக்கும் முயற்சியில் அந்தத் தம்பியும் அவனுடைய காதலியும் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்துவிடுகிறார்கள். அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலையைப் படம் குறிப்புணர்த்துகிறது. 

ஞாயிறு, டிசம்பர் 15, 2019

காளிதாஸ்: காதலித்தால் போதுமா?

காதலித்து மணந்துகொண்டாலும் தன் முழு நேரத்தையும் காவல் துறைக்கு ஒதுக்கிவிட்ட ஆய்வாளர் காளிதாஸ் (பரத்). எப்போதும் வேலை வேலை என்று அலைந்து வீட்டைக் கவனிக்காததால் அவருடைய மனைவி வித்யாவுக்கு (ஆன் ஷீத்தல்) பெருங்கோபம். இந்தச் சூழலில் அவருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயரமான மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்) வருகிறார். காளிதாஸ் இறந்த பெண்கள் தற்கொலைசெய்துகொண்டார்கள் என்கிறார். சுரேஷ் மேனன் அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார். மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அவை தற்கொலையா, கொலையா, இவற்றின் பின்னணி மர்மம் என்ன? காளிதாஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான பிணக்கு தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
இதைப் போன்ற உளவியல்ரீதியான தொடர் கொலைப் படங்கள் பல வந்துவிட்டன. என்றபோதும், இறுதிவரை படத்தை இயன்ற அளவு தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் அல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. தனிமையின் துயரை வெளிப்படுத்தும் வகையில் வித்யா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புலனாய்வுப் படம் போல் அல்லாமல், காவல் துறையினரின் கடமை உணர்வு குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காவலர் சிங்க துரையிடம் வித்யா உரிமையுடன் காளிதாஸ் குறித்துக் கோபப்படுவது, ஜார்ஜ் காளிதாஸ் வீட்டுக்கு வருவது போன்ற காட்சிகள் அழகு.

நாமெல்லாம் இங்க என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக்கோம் என்று சுறுசுறுப்புடன் காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் பணியாற்றியபோதும், அந்தக் கதாபாத்திரத்தை முடிந்த அளவு ஒழுங்காகச் செய்திருக்கிறார் என்ற போதும் அவரை ஏனோ காக்கி உடையில் பார்க்கவே முடியவில்லை.  அலுவலகப் பணி தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், மனைவியின் துயரைப் போக்க இயலாமலும் உருவாகும் தவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திர உருவாக்கமே சற்று மாறுபட்டதாக இருக்கிறது.  அந்த மாறுபாடான நடத்தைக்குத் தேவையான நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார். ஆசை ஆசையாகக் குழந்தையுடன் கொஞ்சுவது, மேல் மாடியில் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுடன் நேரத்தைச் செலவழிப்பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தாலும் சுரேஷ் மேனன்தான் படத்தை முழுவதும் கூட்டிச் செல்கிறார். காளிதாஸ் நாயகன் என்றபோதும் சுரேஷ் மேனனுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றியதால் அனுபவப் பட்டிருக்கும் நிதானத்தை அழகாகக் காட்டியுள்ளார். தேவையற்ற பதற்றம் எதுவுமின்றி வழக்கை விசாரித்துச் செல்லும் தன்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சுரேஷ் பாலா ஒரு திரில்லர் படத்துக்கான அமானுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகாக உள்ளன. மழையில் நனைய வைத்தது ஒரு நாள் பாடல் அழகு. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தலில்லை.   

போலீஸ்காரனுக்கும் லப் டப் லப் டப்புன்னு அடிக்குதுன்னு பப்ளிக்குகுத் தெரியட்டுமே. ஒருத்தர சாவடிக்கிறது அவருக்குக் கொடுக்குற தண்டனைன்னு நினைக்குறோம் ஆக்சுவலி அது அவருக்குக் கொடுக்கிற ஃப்ரீடம். தப்பு சரியெல்லாம் அவங்கவங்க மனசப் பொறுத்திருக்கு. வேலை கொடுத்தவண்ட்ட பம்மி பம்மிப் பேசுற வாழ்க்கை கொடுத்தவட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

விசாரணையின்போது, பெயரைச் சீருடையில் அணிந்திருக்கும் பாதுகாவலரிடம் பெயர் கேட்பதைக் கவனித்து நீக்கியிருக்கலாம்.  வித்யா பற்றி முழுவதும் அறிந்த பரத் அவளுக்கு முறையாக நேரம் ஒதுக்காதது சற்று உறுத்தல். எந்நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பது, மனைவியைச் சரியாகக் கண்டுகொள்ளாத கணவர் எனச் சில அம்சங்களை ஒன்றிணைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறான் காளிதாஸ். இப்படியான படங்கள் புதிதில்லை என்பதால் காளிதாஸைப் பெரிய அளவுக்குக் கொண்டாட முடியவில்லை.

CIFF 2019: கிழக்கிலிருந்து மேற்கே

இன்று (டிசம்பர் 13) காலை வழக்கம்போல் கேசினோ சென்றேன். Holy Beasts என்ற படம் திரையிடுவதாக இருந்தது. ஆனால், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் படம் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. என்னடா சோதனை என்று தேவிபாலாவுக்குச் சென்றேன். Dear Emma, Sweet Böbe என்ற திரைப்படம் திரையிடுவதாகப் பட்டியல் தெரிவித்திருந்தது. அங்கேயும் படம் தொடங்குவதாகத் தெரியவில்லை. அடுத்ததாக, தேவி தியேட்டருக்கு வந்தேன். அங்கே Scent of my Daughter என்னும் திரைப்படம். நான் செல்வதற்குள் படம் தொடங்கிவிட்டிருந்தது. 
ராணுவத்தினர் பெண்கள் சிலரைப் பாதுகாப்பாக ஒரு முகாமில் கொண்டுவிடுவதற்காக ராணுவ வண்டியில் வைத்து அழைத்துவருகிறார்கள். அதில் ஒரு பெண் தப்பித்துவிடுகிறாள். அந்தப் பெண் தப்பித்துவரும் வழியில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயல்வதைப் பார்த்து அவளைக் காப்பாற்றுகிறாள். தீவிரவாதத் தாக்குதலில் தன் கணவரையும் குழந்தைகளையும் இழந்துவிட்டதால் சாகப் போவதாகச் சொல்கிறாள். தப்பித்துவந்த பெண் தன் கதையைச் சொல்கிறாள். அங்குள்ள முகாமில் இருக்கும் தன் சகோதரியைத் தேடப் போவதாகச் சொல்கிறாள். தற்கொலைசெய்துகொள்ள இருந்த பெண் அவளுக்கு உதவுவதாகக் கூறி அழைத்துவருகிறாள். இருவரும் ஒரு விடுதிக்கு வருகிறார்கள். அந்த விடுதியில் இப்ராஹிம் எனும் இளைஞன் இருக்கிறான். அவன் இவர்களுக்கு உதவுகிறான். 

முகாமில் அவளுடைய சகோதரி இல்லை. ஆனால், அவளை இறுதியில் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இப்ராஹிமை அவனுடைய மாமா பெண் காதலிக்கிறாள். ஆனால் அந்தக் காதலில் அவனுக்கு ஆர்வமில்லை. அவன் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறான். தற்கொலை முயற்சியில் தோற்ற பெண் இப்ராஹிமை விரும்புகிறாள். ராணுவ வண்டியில் பெண்களை அழைத்துவந்த வீரருக்கும் ஒரு காதல் இருக்கிறது. அவர் தீவிரவாதத் தாக்குதலில் ஒரு குடும்பத்தைப் பாதுகாப்பாக அழைத்துவரும் வேளையில் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்து உயிரைவிட்டுவிடுகிறார். அவருடைய காதலி பெருந்துயருக்காளாகிறாள். இப்படி வாழ்வின் வெவ்வேறு மனிதர்களின் கதை வழியே போர் தீவிரவாதம் போன்றவற்றைப் பேசிய படம் இது. 
அடுத்ததாக, தேவி பாரடைஸில் காளிதாஸ் படம் பார்த்தேன். அது பற்றிய தனிப் பதிவு இருக்கிறது. எனவே அதை விட்டுவிடலாம். மாலையில் கேசினோவில் Ballon என்ற ஜெர்மனியப் படத்தைப் பார்த்தேன். கிழக்கு ஜெர்மனியிலிருந்து ஒரு குடும்பம் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பித்துவருவதுதான் கதை. படம் பயங்கர விறுவிறுப்பு. ஒவ்வொரு காட்சியும் அடுத்து அடுத்து என்று நகர்ந்துவிட்டது. அந்தக் குடும்பத்தினர் ஒரு ராட்சத பலூனில் தப்பித்துச் செல்வதாக ஏற்பாடு.  நால்வரும் ஒரு பலூனில் புறப்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் போதாத வேளை, பலூன் வானில் வைத்து தகராறு செய்துவிட்டுத் தரையில் விழுந்துவிடுகிறது. யாருக்கும் பெரிய காயமின்றித் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் அந்த குடும்பத்தலைவியின் மருந்துப் பெட்டி பலூனில் மாட்டிக்கொள்கிறது. அதை வைத்துக்கொண்டு ராணுவத்தினர் தேடத் தொடங்குகிறார்கள். 
இன்னொரு பக்கம் இந்தக் குடும்பத்தினர் மீண்டும் இதே போல் தப்பிக்க ஒரு முயற்சியை மேற்கொள்கிறார்கள். ராணுவத்தினர் ஒவ்வொரு துப்பாகத் துலக்கி இவர்கள் நெருங்குகிறார்கள். இவர்கள் அரசுக்குத் தெரியாமல் அவ்வளவு பெரிய பலூனை உருவாக்கித் தப்பிக்க முயல்கிறார்கள். பலூனை உருவாக்கும் முயற்சியில் இந்தக் குடும்பத்துக்கு அவருடைய நண்பர்தான் உதவுகிறார் அவர் தான் பலூனைத் தைத்துக் கொடுத்தவர். முதல் முறை அவர் வரவில்லை. இரண்டாம் முறை அவரும் வருவதாக ஏற்பாடு. மொத்தமாக பலூன் வாங்க துணி வாங்கினால் அரசின் கண்ணில் பட்டுவிடும் ஆபத்து உண்டு. எனவே சிறிது சிறிதாக வெவ்வேறு இடங்களில் துணி வாங்கி பலூனை உருவாக்குகிறார்கள். ஒருவழியாக ராணுவம் இவர்களை மோப்பம் பிடித்து வந்த அன்று இவர்கள் பலூனில் ஏறிவிடுகிறார்கள். ஹெலிகாப்டர் மூலம்  ராணுவம் தேடுகிறது. ஆனாலும் பலூன் பறந்துவிடுகிறது. வழக்கம்போல் வானில் ஏற்பட்ட தகராறு காரனமாக பலூன் தரையில் விழுந்துவிடுகிறது. ஆனால் இப்போத் அது விடுந்த இடம் மேற்கு ஜெர்மனி. அவர்கள் எல்லையைத் தாண்டிவிடுகிறார்கள். 

வெள்ளி, டிசம்பர் 13, 2019

தமிழ்த் திரைப்படங்கள் 2019 ஒரு பார்வை


சிறிய படங்கள் எவை? சிறிய பட்ஜெட் படங்களா, ஒருவகையில் இது சரிதான். ஆனால் பட்ஜெட் குறைவாகவே இருந்தாலே அது சிறிய படமாகிவிடுமா? இல்லை. எனில், மாற்றுப் படங்களைச் சிறிய படங்கள் என்கிறோமோ. இதையும் முழுக்க ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஓரளவுக்கு மாற்றத்தை நோக்கிய படங்களைச் சிறு படங்கள் எனச் சொல்லலாம். படத்தின் உருவாக்கம், விநியோகம் பற்றிய கவலைகளின்றிச் சற்றுச் சுதந்திரமாக உருவாக்கப்படும் படங்களைச் சிறிய படங்கள் எனலாம். பிரபல நடிகர்களையும் பிரபலத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மட்டுமே நாடாமல் கதைக் களத்தையும் அதற்கேற்ற நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நம்பி உருவாக்கப்படும் படங்களைச் சிறு படங்கள் என நமது வசதிக்காக ஒரு வரையறை செய்துகொள்ளலாம்.

எல்லா ஆண்டுகளையும்போல் இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஆனால், ஆண்டின் இறுதியில் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஓரிரு படங்களைக்கூடச் சிறப்பானவை எனக் குறிப்பிட முடியாத சூழலே தொடர்கிறது என்பது சினிமா ஆர்வலர்களுக்கு வேதனை தரும் விஷயமே. எனினும், சற்றுத் தளர்வான, கரிசனமான பார்வையுடன் பரிசீலித்தால், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகச் சில படங்கள் உள்ளன. முதல் காலாண்டில் சிகை, பேரன்பு, டூலெட், நெடுநல்வாடை, சூப்பர் டீலக்ஸ், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் போன்ற சில படங்களைக் குறிப்பிடலாம்.


ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் உருவான எதிர்பார்ப்பு காரணமாக சூப்பர் டீலக்ஸ் பெரிய நம்பிக்கைக்குரிய படமாக வெளியீட்டுக்கு முன் தோற்றம் கொண்டது. ஆனால், படம் வெளியான பின் அது கொண்டாடத்தக்க படமாக அமையால் போனது. ஒரு தரப்பினர் இதைக் கொண்டாடித் தீர்த்தனர் என்றபோதும் அந்த அளவுக்கான தகுதியைப் படம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. அதே போல் மாற்று ஊடகத்தில் வெளியான சிகை திரில்லர் பாணியிலான ஒரு சராசரிப் படமே. அதன் களம் மாத்திரமே அதைக் குறிப்பிடக் காரணமாகிறது. பேரன்பு மிகையுணர்வுடன் புரிதலின்மை கைகோத்த படமாகவே இருந்தது. மம்முட்டி போன்ற பெரிய நடிகர் நடித்தபோதும் அது கையாண்ட உள்ளடக்கம் காரணமாக அதைச் சிறிய படமாகவே கருத வேண்டியுள்ளது.


சிறிய படங்களையும் சமூக ஊடகங்கள் வழியே சரியாகச் சந்தைப்படுத்தினால் அதை வெற்றிப் படமாக முன்னிறுத்திவிடலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்தது டூலெட். யதார்த்தமற்ற யதார்த்த படம் இது உலகத்தில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது என்ற பிம்பத்தின் வழியே தமிழின் சிறந்த படம் என முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆனால், சொந்த வீடு தரும் நிம்மதியையோ மகிழ்ச்சியையோ தராத சராசரியான வாடகை வீடு போன்ற திரைப்படமே இது. நெடுநல்வாடை திரைப்படம் கிராமத்து வாழ்வையும் உறவையும் ஓரளவு உயிர்ப்புடன் சித்தரித்திருந்தது. கிராமம், காதல், தியாகம் போன்ற மரபான அம்சங்கள் இருந்தபோதும், பூ ராமு போன்ற ஒரு குணச்சித்திர நடிகரை மையமாகக் கொண்டு ஒரு காலகட்ட வாழ்வைத் திரையில் முடிந்தவரை ஒப்பனையின்றி நிகழ்த்திச் சென்றது ரசிக்கத்தக்கதாக இருந்தது.


அடுத்த காலாண்டில் வெளியான சிறிய படங்களில் மெஹந்தி சர்க்கஸ், கேம் ஓவர், ஹவுஸ் ஓனர், ஜீவி போன்ற படங்களைக் கவனம் பெற்றவை எனச் சொல்லலாம். எண்பதுகளில், தொண்ணூறுகளில் சினிமாப் பாடல்கள் வழியாகவே வாழ்வின் முக்கிய தருணங்களைக் கழித்த ஒரு தலைமுறையின் வாழ்க்கையை நினைவூட்டிய, மெல்லிய உணர்வுகொண்ட படமாக இது அமைந்தது. ஊரூராக வந்து சர்க்கஸ் நடத்திய குழுவிலிருந்த பெண்ணுக்கும் பூம்பாறை என்ற ஊரின் பெரிய குடும்பத்துப் பையனுக்குமான காதல் படம் இது.  காதலியை அடைய கத்தி எறிய வேண்டிய சூழலில் அதைத் தவிர்த்து காதலிலிருந்து வெளியேறும் காதலனிடம் காதலி மீண்டும் கிடைக்கிறாள், ஆனால், அதற்கிடையே அவளுக்கு மணமாகி, பருவ வயது மகள் வந்துவிடுகிறாள். இறுதியாக காதலியைச் சுற்றிக் குறிதவறாமல் கத்தியைக் காதலன் எறியும்போது, அங்கே காலத்தைக் கடந்து காதல் சாகசம் நிகழ்த்துகிறது.  


அதே போல் ஜீவி திரைப்படமும் வழக்கமான பாதையைத் தவிர்த்த திரில்லர் என்ற வகையில் கவனிக்கவைத்தது. புத்திசாலித்தனமான திரைக்கதையைச் சார்ந்து பயணித்து சுவாரசியம் தந்த சினிமாவாக இது இருந்தது. ஹவுஸ் ஓனர் திரைப்படத்தைப் பொறுத்தவரை சென்னையை அச்சுறுத்திச் சென்ற 2015-ம் ஆண்டின் வெள்ள நிகழ்வின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதைத் தவிர்த்துக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த அம்சமுமில்லை. சென்னை வெள்ளம் எனும் சம்பவத்தின் துயரத்தில் துளி அளவைக் கூட உணர்த்த இயலாத உலர்ந்த படம் இது.


மூன்றாம் காலாண்டில் , ஆடை, கொளஞ்சி, தொரட்டி, பக்ரீத் போன்ற படங்கள் வெளியாயின. இதே வேளையில் வெளியான ஒத்த செருப்பு அளவு எண் 7, மகாமுனி ஆகிய படங்களையும் இந்தப் பட்டியலில் நினைவுகூரலாம். கூடா நட்பு கேடாய் முடியும் என்னும் பழமொழிக்காகவே ஒரு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததைப் போன்ற எண்ணத்தைத் தந்த படம் தொரட்டி. ஆனால், கிடை போட்டு வாழும் ஒரு சமூகக் குழுவின் வாழ்க்கை முறையைச் சித்தரித்திருந்த விதத்தால் இது தனித்துத் தெரிகிறது. புதிய முகங்களை வைத்து ஓரளவு நம்பிக்கைக்குரிய படத்தை உருவாக்கிட முடியும் என்னும் நம்பிக்கை தரத்தக்க படம் இது. பார்த்திபன் என்னும் ஒரே நடிகர் தன் திறமைமீது நம்பிக்கை வைத்துத் தன்னை மட்டுமே ஒரு முழுப் படத்தில் பார்க்கவைத்து, ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டவகையில் ஒத்தச் செருப்புப் படம் முக்கியமான படமாகவே தென்படுகிறது.


ஆண்டின் இறுதிப் பகுதியின் வெளியான படங்களில், கே.டி.என்கிற கருப்பு துரை,  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் நினைவுகொள்ளத் தக்கவை. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு தரமான படமாக மலர்ந்திருக்க வேண்டிய கதைக் களத்தைக் கொண்டிருந்தது. ஆனால், திரைக்கதை உருவாக்கத்தின் தொய்வுத் தன்மையும் குழப்பமும் கருத்தாசையும் சேர்ந்து படத்தைச் சாதாரணமானதாக்கியது. படம் எடுத்துக்கொண்ட களத்துக்குத் தொடர்பேயில்லாத ஆணவக் கொலை சாதி கடந்த திருமணம் போன்ற அம்சங்கள் படத்தின் கவனச்சிதறலாகிப் போயின. போர் பாதிப்பைச் சொல்ல முயன்றதற்குப் பதில் காயலான் கடை மனிதர்களின் நல்லது கெட்டதுகளை முறையாக எடுத்துவைத்திருந்தாலே அது குறிப்பிடத்தகுந்த படமாக மாறியிருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.  

கே.டி. என்ற கருப்பு துரை சொல்லிக்கொள்ளத்தக்க மாற்றுப்பட முயற்சி எனலாம். அதன் நோக்கத்தை அது முழுமையாக எட்டவில்லை என்றாலும் முதியவருக்கும் சிறுவனுக்குமான உறவை முடிந்தவரை யதார்த்தமாகவும் மிகையுணர்ச்சியின்றியும் கலகலப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்த படம் இது. தலைக்கூத்தல் என்ற பண்பாட்டு அம்சமொன்றைக் கதைக் களமாகக் கொண்டிருந்தது.


சிறிய படங்கள் என்று சொல்லும்போது அவற்றின் முதன்மை நோக்கம் வெறுமனே லாபமீட்டுவது என்பது மட்டுமாகவே இருக்காது என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். என்றாலும், லாபத்தைக் கணக்கில்கொள்ளாமல் படங்களை உருவாக்கிவிடவும் முடியாது. இந்த இரண்டையும் பெரிய அளவிலான சமரசமின்றி சங்கமிக்கச் செய்து கிடைக்கும் புள்ளியில் நமது வாழ்வு சார்ந்த மண் சார்ந்த பண்பாடு சார்ந்த கதைகளைத் திரைக்கதைகளாக வடித்தெடுக்கப்படும்போது மட்டுமே உருப்படியான படங்களை உருவாக்கிட முடியும். அதற்கான இணையவெளிகள் முன்னெப்போதுமில்லாத வகையில் இப்போது திறந்துகிடக்கின்றன. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் கையிலேயே திரையரங்கைச் சுமந்து திரிகின்றனர். அவர்களது ரசனையைப் பூர்த்திசெய்யும் படங்களுக்காகத் தான் அவர்களும் காத்திருக்கின்றனர். நமது படங்கள் இதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. வருங்காலத்திலாவது புரிந்துகொண்டால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

வியாழன், டிசம்பர் 12, 2019

CIFF 2019: சப் டைட்டில் ஒழுங்கா போடுங்கண்ணே!

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2019


ஆண்டுக்கொரு முறை டிசம்பரில் நடத்தப்படும் சர்வதேசத் திரைப்பட விழா இன்று (டிசம்பர் 12) தொடங்கியது. காலையில் உற்சாகமாக கிளம்பிவிட்டேன். கேசினோவில் 9:45 மணிக்கு Thou Shalt Not Kill  படம் பார்க்கலாம் என்று சென்றால் தொடக்கமே தகராறுதான். சப் டைட்டில் ஓடவில்லை. கேசினோ சீரமைக்கப்பட்ட பிறகு இன்றுதான் செல்கிறேன். அந்த மினுமினுப்பு பத்திருபது நிமிடம்தானே தாங்கும். அதற்குப் பின்னர் சப் டைட்டில் இல்லாமல் படம் பார்க்க மனமில்லை. சரி இந்தப் படம் அவ்வளவு தான் என்று முடிவுசெய்துவிட்டேன். 

அடுத்ததாக, தேவி திரையரங்கில் 11:00 மணிக்கு Oh Mercy படத்துக்குச் சென்றால் அங்கேயும் அதே சிக்கல். முதல் இருபது நிமிடங்கள் சப் டைட்டில் இல்லாமல் படம் ஓடியது. அரங்கில் ஏற்பட்ட கத்தல் காரணமாகப் படம் நிறுத்தப்பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் வெண் திரையை மட்டுமே பார்க்க முடிந்தது. படம் ஓடுவதாகத் தெரியவில்லை. வெளியேறிவிட்டேன். 

மீண்டும் 12:15 மணிக்கு கேசினோவில் Curiosa படத்துக்குச் சென்றேன். கேசினோவில் பால்கனியில் அமர்ந்தால் சப் டைட்டிலைப் பார்ப்பதற்கு பகீரத பிரயத்தனம் தேவைப்படுகிறது. முன்னால் இருப்பவரின் தலையைத் தவிர்த்துவிட்டு சப் டைட்டிலைப் படிப்பதற்குள் கழுத்துவலியே வந்துவிடுகிறது. படம் காதல், காமம் என்று பழகிய பாதையில் நடைபோட்டது. நாயகன் கேமராக் கலைஞன். அவனுடைய நண்பனின் மனைவிக்கும் அவனுக்கும் காதல். அவளுக்கோ கணவனைவிடக் கலைஞன் மீதுதான் காதல். சகட்டுமேனிக்குக் கட்டிப் புரள்கிறார்கள். இறுதியில் இந்த ஜோடியின் குழந்தைக்கு கணவன் தகப்பன் ஆகிறான். 1800களில் நடைபெறும் கதை. 

கேமராக் கலைஞன் பெண்கள் பலரை நிர்வாணப் புகைப் படமெடுத்து அதை ஆல்பமாக்கி வைத்திருக்கிறான். இறுதியில் நாயகி எழுத்தாளராகிவிடுகிறாள். கலாரசனையுடன் பார்க்க வேண்டிய படம். கலாரசனைக்குப் பதில் காம ரசனை என்றுகூடப் போட்டுக்கொள்ளலாம். 


அடுத்ததாக கேசினோவில் 2:45க்கு Hier என்ற படம் பார்த்தேன். இது பொறுமையைக் கோரிய படம். நாயகன் பல நாடுகளில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்துகிறான். வட ஆப்பிரிக்கா நாட்டுக்குப் பணி நிமித்தமாகச் செல்லும்போது அங்கே அவனுக்கு ஏற்படும் சிக்கல்கள்தான் திரைக்கதையாக விரிகின்றன.  அங்கே ஒரு பாரில் அவன் பார்க்கும் பெண்ணைத் துரத்திச் செல்கிறான். அதைத் தொடர்ந்து அவன் எதிர்கொள்ளும் விநோதச் சம்பவங்கள் கற்பனைக்கு அடங்காதவை. எங்கெங்கோ செல்கிறான். என்னென்னவோ நடைபெறுகின்றன. அந்தப் பெண் அவனை ஏமாற்றிச் சென்றவள் என்பதால் அவளைக் கண்டுபிடிக்கப் படாதபாடு படுகிறான். ஆனால், அது நடைபெறவே இல்லை. எல்லாமே ஒருவித மாயத் தோற்றமாகவே உள்ளது. உளவியல்ரீதியான சித்தரிப்புகளைக் கொண்ட படம். 

செவ்வாய், டிசம்பர் 10, 2019

காமம் வரும் முன்னே காதல் வரும் பின்னே


எந்தக் காரியத்தையும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே முடிவுசெய்கிறார் தனுசு ராசிக்காரரான அர்ஜுன் (ஹரிஷ் கல்யாண்). அவருக்குக் கன்னி ராசிப் பெண்ணுடன் திருமணம் நடைபெறுவது நல்லது என ஜோதிடர் கூறியதால் அந்தப் பெண்ணைத் தேடுகிறார் அவர். காதலியின் திருமணத்தன்று அவர் சந்திக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் (டிகங்கனா சூரியவன்ஷி) அவருக்கும் முதல்நாளன்றே உறவு ஏற்பட்டுவிடுகிறது. செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட விஜயாவுக்கும் அர்ஜுனுக்கும் காதல் மலர்ந்ததா கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதே திரைக்கதை.

பரிகாரம் செய்யாமல் தந்தை மணமுடித்துக்கொண்டதால் தன் தாய் பாண்டியம்மாள் (ரேணுகா) இளம்வயதிலேயே கைம்பெண்ணாகிவிடுகிறார் என்பதை அறிந்ததிலிருந்து ஹரிஷுக்கு ஜோதிடத்தில் திடமான நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கும் எல்லாப் பெண்களையும் ராசி கேட்டே பழகுகிறான். இதனாலேயே எந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடிக்காமல் போய்விடுகிறது. அனிதாவுடனான (ரெபா மோனிக்கா ஜான்) காதலும் முறிந்துபோய்விடுகிறது. பார்த்த மாத்திரத்தில் காதல் வருவதற்குப் பதில் பார்த்த மாத்திரத்தில் காமம் வந்துவிடுகிறது. அதன் பின்னரே காதலிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள் இருவரும். இது கொஞ்சம் திரைக்கதையில் புதிதாக இருக்கிறது. உறவு கொண்டுவிட்டோமே எனப் பெரிதாக இருவரும் கவலைகொள்ளவில்லை. மூடநம்பிக்கைக்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது திரைக்கதை.


ஹரிஷ் கல்யாணுக்கு வழக்கம்போல் துறுதுறுப்பான இளைஞன் வேடம். காதல் காட்சிகளில் கவர்கிறார். சோகக் காட்சிகளில் பெரியாத ஈர்க்கவில்லை. காதலியைக் கடலுக்குள் அழைத்துச் சென்று வெகுளிக் காதலனாக வெளிப்படுத்தும் அன்பு அழகு.

தன் பிரியத்துக்குரிய காதலனுடன் சேர்ந்துவாழும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தாலும் தன் லட்சியத்திலேயே உறுதியாக இருந்து செவ்வாய்க் கிரகத்துக்குப் போக முடிவெடுத்துவிட்ட பெண் வேடம் தமிழுக்குப் புதிது. இந்த வேடத்தில் தமிழில் அறிமுகமாகியுள்ள டிகங்கனா சூரியவன்ஷி வசீகரிக்கிறார். ரெபா மோனிக்கா ஜானுக்குப் பெரிய வேலை இல்லை. ஒரு பாடலிலும் சில காட்சிகளில் தலைகாட்டிப் போகிறார்.   

பிரியாணிப் பிரியரான, முற்போக்குச் சிந்தனைகொண்டவராக அர்ஜுனின் தாய்மாமா   வேடத்தில்  முனீஸ்காந்த் உற்சாகப்படுத்துகிறார். எங்கெங்கே என்ன பிரியாணி கிடைக்கும் என்பதைப் பட்டியில் போட்டு உண்ணும் பழக்கம் கொண்ட வேடம் கலகலப்பு. இறுதியாக, குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார்.


பாண்டியம்மாளாக நடிகை ரேணுகா பாந்தமான அம்மா வேடத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். செக்யூரிட்டியாக வரும் நடிகர் சார்லி கனமான கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பைத் தந்திருக்கிறார். பரிகாரம் எல்லாம் செய்து, மணமுடித்துக் கொடுத்த  மகளை இழந்து வருந்தும் காட்சியில் உருகவைக்கிறார்.  

கட்டியக்காரன் போல் படத்தின் போக்கைக்  கதையாகச் சொன்னபடி வரும் யோகிபாபுவின் கதாபாத்திரம் படத்தில் தேவையற்ற ஒன்று. ஷெல்வி முதலான பிரபல சோதிடர்கள் வந்துபோகும் படத்தில் சோதிடராக  நடித்திருக்கிறார் பாண்டிய ராஜன்.  பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது.  


காதல் என்பதற்காகவே உருகிய காலம் போய் லட்சியத்துக்குக் குறுக்கே காதல் வந்தால் விலகத் தெரிய வேண்டும் என்பதை உணர்த்திய வகையில் கவனிக்கவைக்கிறார் சஞ்சய் பாரதி. தன்னை நம்பாமல் ஜோதிடம் முதலான விஷயங்களை  நம்பித் திரிவதன் அபத்தத்தை எளிதாக எடுத்துவைத்திருக்கும் இந்த தனுசு ராசிக்காரனைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம்.

ஞாயிறு, டிசம்பர் 08, 2019

வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு


இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஒரு வெடிகுண்டு மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்குகிறது. அதை ஒரு ஜெர்மானியப் பெண் கண்டு காவல்துறைத்துக்குத் தகவல் தருகிறார். அந்தக் குண்டு, காவல் நிலையத்திலிருந்து களவாடப்பட்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லோடு ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் செல்வம் (தினேஷ்). அவருக்கே தெரியாமல் அவரது லாரிக்கு அது வந்துவிடுகிறது. அந்தக் குண்டைக் கைப்பற்ற ஆயுதத் தரகர் ஜான் விஜய் முயல்கிறார். ஆகவே, காவல் துறையினர் அதைத் தேடிப் புறப்படுகின்றனர். வெடிகுண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) ஒரு ஊழலை அம்பலமாக்க அந்தக் குண்டைக் கண்டுபிடிக்க விரைகிறார். அந்தக் குண்டு என்ன ஆனது, அதன் பின்னணியிலான அரசியல் என்ன போன்றவற்றுக்கு விடை தருகிறது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. 

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் உலகமெங்கும் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில் இது தமிழ்ப் பட முயற்சி. போரால் பாதிக்கப்படாத இந்தியா போன்ற நாட்டில் போரின் பாதிப்பைச் சொல்லி ஆயுதப் பயன்பாட்டைக் கைவிடச் சொல்லும் திரைக்கதை இது. களம் தமிழுக்குப் புதிது. இரும்புக் கடை வியாபாரம் அதில் தொழிலாளர் முதலாளி உறவு போன்ற அம்சங்கள் புதிதாக இருப்பதால் அதைக் கவனிக்க வாய்ப்பு தருகிறது திரைக்கதை. படத்தின் தொடக்கத்திலேயே வெடிகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சொல்லிவிடுவதால் அந்தக் குண்டு வெடிக்குமோ வெடிக்காதோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிவிடுகிறது. இது ஒரு சரடு.



சாதி கடந்த காதல் ஒன்றும் திரைக்கதையில் ஒரு சரடாக வருகிறது. லாரி ஓட்டுநரான தினேஷைக் காதலிக்கிறார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சித்ரா (ஆனந்தி). அது வழக்கம்போல் ஆணவக்கொலை முயற்சி, தப்பித்தால் எனப் பயணிக்கிறது. இந்த இரண்டு சரடுகளையும் இணைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை பெரிய சுவாரசியத்தையும் தரவில்லை; மந்தமாகவும் இல்லை. அப்படியே பெரிய ஏற்ற இறக்கமின்றிப் பயணித்து அப்படியே முடிந்துவிடவும் செய்கிறது. 

நடிகர் தினேஷுக்கு முக்கியமான பாத்திரம். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமையைச் சித்தரிக்கும் அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒருபுறம் வெடிகுண்டு, மறுபுறம் காதலி இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் வேடத்தை தன்னால் இயன்ற அளவு செய்துள்ளார். 

முனிஸ்காந்துக்கும் இது குறிப்பிடத்தக்க படம். பஞ்சர் என அழைக்கப்படும் அவர் தன் அசல் பெயரான சுப்பையா சாமி என்பதைச் சொல்லும்போது அவருடைய முதலாளிக்கே அது தெரியவில்லை. ஆள் முரடாகத் தெரிந்தாலும் அசடாகவே இருக்கும் மனிதர்களின் பிரதிநிதிப் பாத்திரத்தைத் தன் நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார்.  லாரியில் இருப்பது வெடிகுண்டு எனத் தெரிந்தபிறகு அவரது பதற்றமும் பயமும் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றன. 

நடிகை ஆனந்தி இதே போன்ற வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதால் புதிய வேடத்தில் பார்ப்பது போலவே இல்லை.  ஏற்கெனவே நன்கு பழகிய பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தன் நடிப்பால் தந்துவிடுகிறார். 



ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் ஒரு பயணக் கதைக்கு அவசியமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு திரைக்கதைப் போதுமான அளவில் போதுமானவற்றைப் படம் பிடித்து உதவியிருக்கிறது. டென்மாவின் இசையில் பாடல்களும் பின்னணியிசையும் இதமாக உள்ளன. 

எல்லாவற்றையும் பேசித் தீத்துக்கணும் ஆயுதத்த தூக்கக் கூடாது, 500 வருஷம் புல்லு பூண்டு கூட முளைக்காதுடா அந்தக் குண்டு வெடிச்சா போன்ற வசனங்கள் படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்தைத் தெளிவாகச்சொல்கின்றன. 

புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநர் அதியன் ஆதிரை கவனத்தை ஈர்க்கிறார். வெடிகுண்டுக்கு பூசாரி கடவுள் போல் ஜோடனைசெய்து அழகு பார்ப்பது அழகு. ஆனாலும், நிமிர்ந்து உட்காரவைக்கும்படியான எந்தத் தருணமும் படத்தில் இல்லை என்பது ஏமாற்றம். அந்த வெடி குண்டும் பல காட்சிகளில் ஏதோ ஒரு சாதாரணப் பொருள் போல் தென்படுகிறதே ஒழிய வெடிகுண்டு என்னும் பதற்றத்தையோ பதைபதைப்பையோ தரவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்காத குண்டு என்பதும் அது கரை ஒதுங்கும் என்பதும் வெடித்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மையாக இருக்கலாம், ஆனால் நம்புவதற்கு ஒவ்வாதவையாக உள்ளது. அதனாலேயே படத்துடன் ஒன்ற இயலவில்லை. தொழிலாளி முதலாளி, ஆதிக்க சாதி ஒடுக்கப்பட்ட சாதி என்று பழகிய தடத்திலேயே படம் சென்றுமுடிந்துவிடுகிறது. போரின் பாதிப்பைப் பெரிதாக அறிந்திராத நமக்கு எதற்கு இப்படி ஒரு படம் என்னும் கேள்வி எழவே செய்கிறது. 



வெடிக்குமா வெடிக்காதா என்ற எதிர்பார்ப்பிலேயே படத்தை நகர்த்திய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு கடைசிவரை வெடிக்கவே இல்லை என்பது ஏமாற்றமா, ஆறுதலா?

ஞாயிறு, நவம்பர் 24, 2019

கே. டி. (எ) கருப்பு துரை

கல்லுப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்புதுரை (மு.ராமசாமி). நோயில் விழுந்து நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையில் கிடப்பவரைப் பராமரிக்க முடியாமல் அவரைத் தலைக்கு ஊற்றி கருணைக் கொலை செய்துவிடக் குடும்பத்தினர் முடிவுசெய்கிறார்கள். இதைக் கேட்டு பதறும் முதியவர் வீட்டிலிருந்து வெளியேறிவிடுகிறார். செங்கோட்டை செல்லும் பேருந்தில் புறப்படும் முதியவர் அது இடையில் ஒரு கிராமத்தில் பழுதாகி நிற்கவும், அங்குள்ள கோயிலுக்கு வருகிறார். அங்குள்ள மண்டபத்தில் தங்குகிறார். அங்கே ஏற்கெனவே தங்கியிருக்கும் குட்டி (நாகவிஷால்)என்னும் ஆதரவற்ற சிறுவன் முதலில் பெரியவரைப் போட்டியாகக் கருதுகிறான். பின்னர் அவர்கள் இருவருக்குமிடையே ஆத்மார்த்தமான பிரியம் உண்டாகிறது. காணாமல் போன கருப்பு துரையைக் குடும்பத்தினர் தேடுகிறார்கள். கருப்பு துரை குடும்பத்துக்குத் திரும்பினாரா, சிறுவனுடன் எஞ்சிய வாழ்வைக் கழித்தாரா என்னும் கேள்விக்கு விடை தருகிறது கேடி எ கருப்புதுரை.

தான் ஆசை ஆசையாக வளர்த்த தன் பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே என்னும் வேதனையில் வாடும் கருப்புதுரை, குட்டியின் பிரியத்தில் நெகிழ்கிறார். குட்டிக்கும் பெரியவரின் அன்பு இனம்புரியாத இன்பம் தருகிறது. இவர்களுக்கு இடையேயான பிரியமான பயணமான திரைக்கதை எதிர்பாராத முடிவைத் தந்து முற்றுப் பெறுகிறது. வழக்கமாக இந்த மாதிரியான நெகிழ்ச்சியான பயணப் படத்தில் முடிந்தவரை ரசிகர்களை அழவைத்துவிட வேண்டும் என இயக்குநர் விரும்புவார். ஆனால், இந்தப் படம் முழுவதுமே சின்னச் சின்ன நகைச்சுவையால் சுவாரசியமாக நகர்ந்துவிடுகிறது.


கிராமத்தின் ரம்மியமான சூழலில் வாழ்வைத் தங்களுக்குப் பிடித்தவகையில் முதியவரும் சிறுவனும் கடத்தும்போது, பின்னணியில் அவ்வப்போது சென்றுகொண்டிருக்கும் ரயில் பரபரப்பான பிறரது வாழ்க்கையை உணர்த்தியபடி செல்வது அழகு.

பெரியவரைப் பிரிந்துசெல்லும்போது அவருக்கு ஒன்றும் தெரியாது கவனித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லும்படி குட்டி போகும் காட்சி நெகிழ்ச்சி. என் ஆத்தாகூட என்ன இப்படிக் கவனிச்சுக்கிடலடா என்று கருப்பு துரை குட்டியிடம் கூறும் காட்சி உருக்கம். இப்படிப் பல தருணங்களை படத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் மதுமிதா.

மு.ராமசாமி, நாகவிஷால் இருவரும்தான் படத்தை முழுவதும் தாங்கிச் செல்கிறார்கள். சிறுவனாக இருந்தாலும் பெரிய மனிதத் தோரணையுடன் நடந்துகொள்ளும் குட்டியிடம் பிரியத்தை வெளிப்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும் பிரியாணியைச் சுவையாக ரசித்து உண்ணும்போது,  தன் முன்னாள் காதலியை வீடு தேடிச் சென்று காணும்போது என அனைத்துக் காட்சிகளிலும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருப்புதுரையை கேடி எனச் சுருக்கமாக அழைப்பதில் தொடங்கி, அவரை அன்பால் மிரட்டுவது, அவரது நடவடிக்கைகளுக்குப் பொருள் புரியாமல் தவிப்பதுவரை எல்லாக் காட்சிகளிலும் ராமசாமிக்கு ஈடு கொடுத்துப் பெரிய நடிகர்போலவே நடித்திருக்கிறார் நாகவிஷால்.


கூத்துக் கலைஞராக வரும் குணாபாபு, பிரியாணிக் கடைக்காரர், கருப்புதுரையின் காதலியாக வரும் மூதாட்டி எனப் பல துணைக் கதாபாத்திரங்களும் கவனத்தை ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் கிராமத்தின் அழகை அழகாகவே காட்டியிருக்கிறார். இரவுக் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. காட்சிகளில் தென்படும் இருளும் ஒளியும் இணைந்து  நேரடியாகச் சம்பவங்களைப் பார்ப்பது போன்ற எண்ணத்தைத் தருகிறது.

விஜய் வெங்கட்ரமணனின் கச்சிதமான படத் தொகுப்பில் படம் எந்த இடத்திலும் தேவையற்ற நீட்சியைக் கொண்டிருக்கவில்லை.  பின்னணியிசையும் உறுத்தாத வகையில் அமைந்துள்ளது.

படத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி ஈசன் கதாபாத்திரம். அது எதற்கு என்றே புரியவில்லை. நீண்ட நாட்களாகப் படுக்கையில் கிடந்த பெரியவர் திடீரென எழுந்து பழையபடியே நடமாடுவதை நம்புவது சற்றுக் கடினமாகவே உள்ளது. நல்ல ஆரோக்கியமானவர்களைக் கருணைக்கொலை செய்வார்களா, உறவுகளிடமிருந்து விலகி வரும் பெரியவர் மீண்டும் அதே போன்ற உறவை ஏற்படுத்திக்கொள்வாரா போன்ற கேள்விகள் எழவே செய்கின்றன.

இவற்றையெல்லாம் மீறி, உறவு என்றால் எப்படி இருக்க வேண்டும், முதியவர்களிடம் ஆதரவற்றவர்களிடமும் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்றவற்றை போதிக்காமல் உணர்த்தியவகையில் கே.டி.(எ) கருப்புதுரை சிறப்புத் துரையாக ஜொலிக்கிறார்.

திங்கள், நவம்பர் 18, 2019

சங்கத்தமிழன் சாதாரணமானவன்

தேனிமாவட்டம் மருதமங்கலம் கிராமத்தில் சஞ்சய் என்னும் கார்ப்பரேட் நிறுவனம் தாமிர உருக்காலை அமைக்கத் துடிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு வரும் என்பதால் ஊர் மக்கள் எதிர்க்கிறார்கள். வழக்குப் போடுகிறார்கள். உருக்காலை பாதுகாப்பானது எனச் சொல்லும் கார்ப்பரேட்நிறுவனத்திடம் சரியான ஆதாரங்களைத் தாக்கல் செய்யச் சொல்லி நீதிமன்றம் கோருகிறது. சென்னையில் முருகன் (விஜய் சேதுபதி) சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க முயன்றுவருகிறார். முருகனுக்கும் சஞ்சய் கார்ப்பரேட் நிறுவன அதிபர் சஞ்சயுடைய மகளான கமாலினிக்கும் (ராஷி கண்ணா) காதல் மலர்கிறது. இதை அறிந்த சஞ்சய்தன் மகளின் காதலனை நேரில் பார்க்கும்போது அலறுகிறார். அது முருகன் அல்லதமிழ் என்கிறார். தமிழ் யார், முருகனுக்கும் அவனுக்கும் என்ன உறவு, தாமிர உருக்காலை தொடங்கப்பட்டதாபோன்ற கேள்விகளுக்கு விடைதருகிறது சங்கத்தமிழன்.
சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் கேடுவிளைவிக்கும் ஆலை பற்றிய சீரியஸானவிஷயத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். அதுதான் பயங்கர காமெடி. படத்தின் முதல் பாதியில் திரைக்கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னவெல்லாமோ நடைபெறுகிறது. அதற்கான காரணங்களை எல்லாம் படத்தின் பின்பாதியில் அறிய முடிகிறது. படத்தின் திரைக்கதை எண்பதுகள்காலத்தில் நடைபெறுவது போல் சராசரியான சம்பவங்களால்உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பல இடங்களில் பழையபடத்தைப் பார்ப்பதுபோல் அலுப்பாக உள்ளது.
முருகனைத்தமிழ் வேடத்தில் தேனிக்கு அனுப்பும்போது படம் சுவாரசியமான திசைக்குநகர்வதுபோல் தோன்றுகிறது. ஆனால், அங்கே சென்று ஏற்கெனவே தமிழ் செய்த அதே வேலையைத் தான் தொடர்கிறார் முருகன். தமிழும் முருகனும் ஒருவர்தான் என்னும் படத்தின் திருப்பம் மிகச் சாதாரணமாகக் கடந்துசென்றுவிடுகிறது. சமகாலத்தில் பேசப்பட்ட முக்கியமான ஸ்டெர்லைட் ஆலையை நினைவூட்டும் படம் அழுத்தமாகச் சொல்லப்படாததால் பத்துடன் பதினொன்றாகியிருக்கிறது.
முருகன், தமிழ் என்னும் இரு வேடங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பெரிய வித்தியாசங்கள் இல்லாத வேடம். வழக்கம்போல் வள வள என்று பேசிக்கொண்டே இருக்கிறார். படத்தில் எத்தனை முறை தன் கண்ணாடியைக் கழற்றி எறிகிறார் விஜய் சேதுபதி எனப் போட்டியே வைக்கலாம். காமெடி செய்கிறேன் பேர்வழி என சூரியும் விஜய் சேதுபதியும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் பல இடங்களில் கடுப்பையும்; சில இடங்களில் லேசான சிரிப்பையும் தருகின்றன.
ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் இருந்தபோதும் படத்தின் சுவையான காதல் காட்சிகளுக்குப் பஞ்சம்தான். நகரத்தில் ராஷி கண்ணாவுடனான காதலை ஒப்பிடும்போது கிராமத்தில் நிவேதா பெத்துராஜுடனான காதல் தேறும்.
விஜய் சேதுபதியின் தந்தையாக நாசர். பெரிய வேடம் ஆனால் வழக்கமான பெரிய குடும்பத்துத் தந்தை என்பதைத் தாண்டி சொல்ல எதுவும் இல்லை. விஏஓவாக நடிகர் முனைவர் ஸ்ரீமன் நடித்திருக்கிறார். சஞ்சய் நிறுவன அதிபர் சஞ்சய்யைத் தரை மட்டத்துக்கு இறக்கியிருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கிராமத்தின் பசுமையை கண்ணுக்கு அழகாகக் காட்டியிருக்கிறது. இசை என்னும் பெயரில் விவேக் மெர்வின் மிரட்டியிருக்கிறார். அவ்வளவு சத்தம். படம் முழுவதுமே விஜய் சேதுபதி முதல் காட்சியில் நுழைவது போலவே மாஸாக வருகிறார்; தமாஷாக இருக்கிறது.
சமூகத்தைப் பாதிக்கும் தீவிரமான பிரச்சினையை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய படம் அந்தக் கடமையில் தவறுவதால் இந்தச் சங்கத்தமிழன் சாதாரணமானவன்.