இந்த வலைப்பதிவில் தேடு

கணவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 19, 2019

CIFF 2019: மனிதரை ஆளும் ஆவணம்

இன்று (டிசம்பர் 17) தேவி தியேட்டரில் மதியம் 2 மணிக்கு Holy Boom என்னும் கிரேக்கத் திரைப்படம் பார்த்தேன். சூழல் காரணமாக வேறு நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர். அவருடைய கணவன் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறான். அவனது சடலத்தை வாங்க வேண்டும் என்றால் இவரது பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அதை ஒரு குழு வைத்துக்கொண்டு தர மறுக்கிறது. கணவனின் சடலம் மருத்துவமனையில் கிடக்கிறது. சிறு குழந்தையை வைத்துக்கொண்டு அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்பது கதை. இதைத் தவிர இன்னும் சிலர் படத்தின் முக்கியப் பாத்திரங்கள். வேறு நாட்டில் அகதிகள் போல் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசிய படம். 

கிரேக்கப் பெண்ணைக் காதலிக்கிறான் கறுப்பின இளைஞன் ஒருவன். அவனது சிக்கலைப் போக்கப் பணம் தேவைப்படுகிறது. காதலியும் அவனும் சேர்ந்து தேவாலயக் காணிக்கையைத் திருடத் திட்டமிடுகிறார்கள். திருடிவிட்டு வரும் வழியில் காதலன் மாட்டிக்கொள்கிறான். அவனைச் சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். அவனது ரத்தம் வழிந்தோடிய சாலையில் கிறிஸ்தவர்களின் ஆராதனைப் பவனி நடைபெறுகிறது. இப்படி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் படம் இது

சிறு வயதிலேயே தன் குழந்தையைப் பறிகொடுத்த முதிய பெண் ஒருவர் வருகிறார் இவர் அனைவருக்கும் உதவுகிறார். கிரேக்கப் பெண்ணுக்கும் அவருடைய காதலனுக்கு அடைக்கலம் தருகிறார். தனியே வீட்டில் அழும் குழந்தை குறித்து வருத்தம் கொள்கிறார். ஒருமுறை அந்தத் தாய் காவல் துறையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது குழந்தையின் அழுகை பொறுக்க மாட்டாமல் அதைக் கறுப்பின இளைஞன் மூலம் தூக்கிவந்து விடுகிறார் அந்த முதிய பெண்மணி. இந்த நேரத்தில் தாயின் பேச்சைக் கேட்டு குழந்தையைக் காண வீட்டுக்கு வரும் காவல் துறை அங்கே குழந்தை இல்லாததைக் கண்டு தாய் பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் என நினைக்கிறது.  

ஞாயிறு, மே 28, 2017

சினிமா ஸ்கோப் 35: புதுப்புது அர்த்தங்கள்


விலக்க இயலாத நெருக்கமும் விளங்கிக்கொள்ள முடியாத இடைவெளியும் கொண்ட கணவன் மனைவி உறவு அந்தரங்கமானது; ஆத்மார்த்தமானது. அந்த உறவுக்கென மரபு சார்ந்த சில நியதிகளும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. தனி மனித மனம் விதிமுறைகளை மீறவே யத்தனிக்கும். இரு நபர்களுக்கிடையேயான அந்த உறவில் மூன்றாம் நபர் குறுக்கிடும்போது ஏற்படும் விரிசல் அல்லது விரிசல் காரணமாக மூன்றாம் நபர் உள்நுழைதல் சிக்கலுக்கும் அதே நேரத்தில் படைப்புக்கும் அடித்தளமிடும். ஆகவே, அதனடிப்படையில் அநேகப் படங்களை உருவாக்கிவிடுகிறார்கள். 

சில நிர்ணயங்களுக்குள் வாழ்வதும் ஒரு வாழ்க்கை, சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை. மீறிய இவர்கள் புதிய வார்ப்புகள் என்ற வாக்கியங்களுடன் நிறைவுபெறும், பாரதிராஜா திரைக்கதை இயக்கத்தில் தயாரான புதிய வார்ப்புகள் (1979) படம். இந்தப் படத்தில் தன் மனைவி ஜோதியின் (ரதி) கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று தான் கட்டிய தாலியை அறுத்தெறிந்து, அவளை அவளுடைய காதலன் சண்முகமணியுடன் (கே.பாக்யராஜ்) அனுப்புவான் அமாவாசை (கவுண்டமணி). ஆர். செல்வராஜ் கதை எழுதிய இந்தப் படத்தின் வசனம் கே. பாக்யராஜ். 


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதே பாக்யராஜ் ‘எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும் ஆனால், உங்கள் மனைவி எனக்குக் காதலியாயிட்டு வராது’ என்று அந்த 7 நாட்களில் வசனம் பேசுவார். இது வெளியான வருடம் 1981. சரியாகப் பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1991-ல் வெளியான புதிய ராகம் படத்தில் ஒருவருடைய மனைவியான பின்னரும் ஒரு பெண் தன் முன்னாள் காதலருடன் இணைந்துவிடுவாள். அந்த 7 நாட்களில் பெண்ணின் பெருமையாக, மண்ணின் மகிமையாகப் போற்றப்பட்ட மஞ்சள் நிறத் தாலி, இந்தப் படத்தில் மலம் போல் டாய்லெட் கோப்பைக்குள் மூழ்கடிக்கப்படும். இதைத் தயாரித்து இயக்கியவர் நடிகை ஜெயசித்ரா. இது அவருடைய முதல் படம். இளையராஜாவின் இசையில் வெளியான இந்தப் படத்துக்கு ஜீவனளித்ததில் இசைக்கு முக்கியப் பங்குண்டு. 

புரியாத புதிர் (1990) படத்தில் சந்தேகப்படும் கணவனாக நடித்த ரகுவரன் புதிய ராகத்திலும் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் வெளியான தொட்டாற்சிணுங்கியிலும் ரகுவரனுக்கு இதே போன்ற வேடம்தான். புதிய ராகம் பட நாயகியான பாடகி ஜெயசித்ராவின் வருமானத்தில் வாழும் ரகுவரனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை எனலாம். அத்தனையையும் தாலிக்காகப் பொறுத்துக்கொண்ட ஜெயசித்ராவால் அவன் தன் கர்ப்பப் பையை அறுத்தெறிந்ததை மட்டும் தாங்கிக்கொள்ள முடியாமல் தாலியைத் துச்சமாக மதித்து - அதையும் அவன்தான் அறுத்தெறிவான் - தூக்கி எறிந்துவிட்டுத் தன் காதலனுடன் வாழ வருவாள் நாயகி. கணவன் மனைவி உறவில் காதல் இல்லாமல் போகும்போது அங்கே விரிசல் உண்டாகிறது. இந்தக் காதலின் அவசியத்தை அழகாக உணர்த்தும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் வெளியான த பிரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கவுண்டி. தன் வாழ்நாளில் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த காதல் நினைவுகளிலும் காதலன் ஞாபகங்களிலும் எஞ்சிய வாழ்நாளையே கழிக்கும் மனைவியின் கதை அது. 


இயக்குநர் கே .ரங்கராஜ் இயக்கிய முதல் படமான நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் கணவன் மனைவிக்கிடையேயான விரிசல் காரணமாகக் காதல் காணாமல் போகும். யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போறது’ என்னும் சங்கர் கணேஷின் பாடல் வழியே இந்தப் படத்தை எளிதில் நினைவுகூரலாம். ஒரு மனைவி எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக்கொள்வாள் ஆனால், தன் கணவனைப் பங்குபோடமாட்டாள் என்ற ஐதீகத்தைப் புறந்தள்ளியிருக்கும் இந்தப் படம். இதில் தன் தோழிக்காகத் தன் கணவனையே தந்துவிடுவாள் ஒரு மனைவி. தான் நேசித்து மணந்தவன் தன் தோழியின் கணவன் என்பதை அறிந்து உயிரையே விட்டுவிடுவாள் ஒரு பெண். தான் நேசிக்கும் மனைவியின் விருப்பத்துக்காக அவளுடைய தோழியையே மணக்கச் சம்மதிப்பான் ஒருவன். யதார்த்தத்தில் சாத்தியப்படாத அசாத்திய விஷயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை. இதன் வழியே தமிழர் பண்பாட்டு அம்சம் எனச் சொல்லப்படும் தாலியின் பெருமை கேள்விக்குள்ளாக்கப்படும்; கணவன் மனைவி உறவு குறித்த பரிசீலனை மேற்கொள்ளப்படும். 

கே.பாக்யராஜின் மௌன கீதங்களில் ஒரு முறை மற்றொரு பெண்ணை நாடிய கணவனை விட்டு விலகிவிடுவாள் ஒரு மனைவி. திரும்பவும் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்ற திரைக்கதை வழியே கணவன் மனைவி உறவில் மேற்கொள்ள வேண்டிய சில அனுசரிப்புகளைச் சுட்டிச் செல்வார் பாக்யராஜ். கே.ரங்கராஜின் உன்னை நான் சந்தித்தேன் படத்தில் தன் மேல் சந்தேகப்படும் கணவனின் போக்கு பிடிக்காமல், எந்தத் தவறும் செய்யாத அந்த மனைவி கணவனைவிட்டு விலகிவிடுவாள். அவள், தன் மனைவியின் நினைவில் வாழும் குடிகார மனிதர் ஒருவரின் குழந்தையின் நல்வாழ்வுக்காக அவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பாள். அவர் இறந்த பின்னர் அந்த மகளுக்காகத் தன் பூவையும் பொட்டையும் இழப்பாள். அதே கோலத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவனைச் சந்திப்பாள். அதன் பின்னர் அவள் வாழ்வு என்ன ஆனது என்பது எஞ்சிய திரைக்கதை. 


எந்த நாடானாலும் தன் மனைவி மற்றொரு மனிதரின் கருவைச் சுமந்தால் அவளுடைய கணவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாதுதான் போல. ரஷ்யப் படமான த பேனிஷ்மெண்டில் அப்படித்தான் தன் கணவனிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் அந்தக் குழந்தை உன்னுடையதில்லை என்றும் ஒரு மனைவி தன் கணவனிடம் கூறுவாள். அதைக் கேட்டு நொறுங்கிப்போவான் அந்தக் கணவன். ஏற்கெனவே அவர்களுக்கு இரண்டு குழந்தை வேறு இருக்கும். இந்த நிலையில் இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறான் என்பதை அந்தப் படம் திரைக்கதையாக விரித்திருக்கும்; அதன் முடிவோ அதிர்ச்சிதரத்தக்கதாக இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவின் இரண்டாம் படம் இது. இந்தப் படத்தின் காட்சிக் கோணங்களும், படத்தின் பின்னணியில் ஒலிக்கும் சப்தங்களும், படமாக்கப்பட்ட நிலக் காட்சிகளும், கட்டிடங்களும், கதாபாத்திரங்களின் மவுனங்களும் காட்சியின் இடையே நீளும் அமைதியும்… இவை எல்லாமும் சேர்ந்து கதாபாத்திரங்களின் உணர்வை அப்படியே பார்வையாளர்களுக்கு மடைமாற்றும்.

கடந்த ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் ஆஸ்கர் வென்ற த சேல்ஸ்மேன் படத்திலும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே குறுக்கீடாக வந்து சேர்ந்த ஒரு மனிதரால் நேரும் அலைக்கழிப்பே திரைக்கதையாகியிருக்கும். திரைப்படங்களின் வாயிலாக நாம் காணும் கணவன் மனைவி உறவை வைத்துப் பார்க்கும்போது, உலகின் எல்லாப் பகுதிகளிலும் கணவன் மனைவி உறவு என்பது ஒரே போன்ற சிக்கல்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. நமது உறவுகளில் மகா குழப்பத்தை உண்டுபண்ணும் மஞ்சள், குங்குமம், தாலி, பூ போன்ற விஷயங்களை பிற நாட்டுப் பார்வையாளர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பதை நினைத்தாலே வியப்பாக உள்ளது.

வியாழன், மார்ச் 03, 2011

ஆனாலும் அவன் என் நண்பன்

பெரும்பாலான நேரங்களில் என்னை எனக்குப் பிடிக்காது. மனத்திற்குள் சில நேரங்களில் சஹாரா குடிகொண்டுவிடும். உலகத்தின் ஒட்டுமொத்த ஹெச்டூஓவும் ஒரே நொடியில் ஆவியாகிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீரைத் தவிர எதுவும் தென்படாது. ஒரு துளி நீருக்கான ஏக்கம் அதிகமாகும். நிறைவேறா ஏக்கம் கடும் சுமையாக மனத்தை வருத்த கண்கள் கலங்கும். வறண்ட தொண்டைக்கு கிடைக்காத நீர் வழிந்தோடும் இளகிய கண்களிலிருந்து. அத்தகைய நேரங்களில் எல்லாம் எப்படித்தான் அவனுக்கு மூக்கு வியர்க்குமோ வந்துவிடுவான். என்ன தான் தனிமையை ரசித்தாலும் விரும்பினாலும் சில நேரங்களில் ஆதரவான ஒரு சொல்லோ பார்வையோ தேவைப்பட்டுவிடுகிறது, அது எங்கிருந்தும் கிடைப்பது அரிது என்பதை உணர்ந்தபோதும் மனம் அறியாக் குழந்தையாக ஆசைப்பட்டுவிடும். அதற்கென்ன தெரியும் அப்பனின் ஒட்டுக்கோவண நிலைமை? இழுத்துப்போர்த்தத் தான் அது சொல்லும்.



சஹாராவில் தண்ணீர் வார்க்க அவன் வந்திருப்பான் என எண்ணிவிடாதீர்கள். அது அவனது பழக்கமில்லை. ஒரு நாளும் அவன் ஆறுதலாகப் பேசியதில்லை ஆனால் என்ன மாயமோ மந்திரமோ அவனது வசைமொழிகூட அவ்வளவு ஆறுதல் தரும். வேதனைப் பொழுதுகளின் வெம்மையைத் தான் அவன் கூட்டுவான். ஆனால் அந்தச் செயலில் ஒரு குளுமை இருக்கும். அது ஒரு விநோதமான மனோபாவம்தான். அவனைக் கொல்ல முடிந்தால் கொன்றுவிடத் துணியும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன். ஆனால் எனது துக்கங்களிலிருந்து என்னைக் காப்பாற்ற முதலில் நீளும் கரத்திற்கு அவன் தான் சொந்தக்காரன். என் கிணற்றில் மிக ஆழத்தில் யாரும் அறிய மாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் நான் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களையும் அவனது மாயக் கண் கண்டுகொள்ளும்.  நான் குற்றம் செய்வதில் சமர்த்தன். அவனை எப்படியாவது ஏமாற்றிவிட்டு குற்றம்புரிவேன். நான் குற்றம்புரிய வேண்டும் என்பதற்காகவே ஏமாந்தவனாக நடித்தவனைப்போல் அடுத்த கணம் வந்திடுவான். முதலிலேயே என்னைத் தடுத்திருக்கலாமே என்பேன் ஒன்றுமே அறியாதவன் போல் மெல்ல நகைப்பான். அவன் முன் தோற்றுப்போய் அவமானத்தைத் தாங்கியபடி நிற்க வேண்டும். அவன் சாட்டையை எடுப்பதில்லை. ஆனால் அவன் சாட்டையை நினைத்தாலே உடம்பில் சுளீரென்றிருக்கும்.


வெளிச்சத்தில் சண்டையிட்டு இருட்டில் இணைந்துகொள்ளும் வெட்கமற்ற கணவன் மனைவி போன்ற உறவுதான் அவனுக்கும் எனக்கும். அவன் வந்தால் எரிச்சலாக இருக்கும். அவன் வராவிடிலோ அவன் நினைப்பாகவே இருக்கும். என்னை வெறுத்து எங்கும் போய்விட்டானோ எனக் கவலையாக இருக்கும். அவனிடம் சொன்னால், என்னை நீ நிம்மதியாக விட்டுவிடுவாயா என்ன, என்பது போல் பார்ப்பான். அவன் குறித்த என் நினைவுதான் அவனை இழுத்து வந்ததோ என்றுகூடத் தோன்றும். யாரிடமும் அவனைப் பற்றிக் குறைகூற முடியாது. ஏனெனில் இப்படிப்பட்ட ஒருவனோடு உனக்கென்ன நட்பு அவனை வெட்டிவிடு என வெடுக்கென சொல்லக்கூடும். அந்தச் சொல் அவனை வாட்டாது ஆனால் என்னை வாட்டிவிடும். உலகத்திலேயே மிக அதிகமாக நான் வெறுப்பது அவனைத்தான் ஆனாலும் அவன் என் நண்பன். என்னைவிட அவனை யாரும் நேசிக்க இயலாது. அவனைத் தவிர வேறு யாராலும் என்னை நேசிக்க முடியாது. எனவே தான் காத்திருக்கிறேன் அவனுக்காக... அவனது பிரியத்துக்காக... கிட்டப்போகப்போக எட்டப்போகும் அவனது தோழமைக்காக...       

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்