இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஒரு வெடிகுண்டு மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்குகிறது. அதை ஒரு ஜெர்மானியப் பெண் கண்டு காவல்துறைத்துக்குத் தகவல் தருகிறார். அந்தக் குண்டு, காவல் நிலையத்திலிருந்து களவாடப்பட்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லோடு ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் செல்வம் (தினேஷ்). அவருக்கே தெரியாமல் அவரது லாரிக்கு அது வந்துவிடுகிறது. அந்தக் குண்டைக் கைப்பற்ற ஆயுதத் தரகர் ஜான் விஜய் முயல்கிறார். ஆகவே, காவல் துறையினர் அதைத் தேடிப் புறப்படுகின்றனர். வெடிகுண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) ஒரு ஊழலை அம்பலமாக்க அந்தக் குண்டைக் கண்டுபிடிக்க விரைகிறார். அந்தக் குண்டு என்ன ஆனது, அதன் பின்னணியிலான அரசியல் என்ன போன்றவற்றுக்கு விடை தருகிறது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு.
இரண்டாம் உலகப் போர் பின்னணியில் உலகமெங்கும் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில் இது தமிழ்ப் பட முயற்சி. போரால் பாதிக்கப்படாத இந்தியா போன்ற நாட்டில் போரின் பாதிப்பைச் சொல்லி ஆயுதப் பயன்பாட்டைக் கைவிடச் சொல்லும் திரைக்கதை இது. களம் தமிழுக்குப் புதிது. இரும்புக் கடை வியாபாரம் அதில் தொழிலாளர் முதலாளி உறவு போன்ற அம்சங்கள் புதிதாக இருப்பதால் அதைக் கவனிக்க வாய்ப்பு தருகிறது திரைக்கதை. படத்தின் தொடக்கத்திலேயே வெடிகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சொல்லிவிடுவதால் அந்தக் குண்டு வெடிக்குமோ வெடிக்காதோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிவிடுகிறது. இது ஒரு சரடு.
சாதி கடந்த காதல் ஒன்றும் திரைக்கதையில் ஒரு சரடாக வருகிறது. லாரி ஓட்டுநரான தினேஷைக் காதலிக்கிறார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சித்ரா (ஆனந்தி). அது வழக்கம்போல் ஆணவக்கொலை முயற்சி, தப்பித்தால் எனப் பயணிக்கிறது. இந்த இரண்டு சரடுகளையும் இணைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை பெரிய சுவாரசியத்தையும் தரவில்லை; மந்தமாகவும் இல்லை. அப்படியே பெரிய ஏற்ற இறக்கமின்றிப் பயணித்து அப்படியே முடிந்துவிடவும் செய்கிறது.
நடிகர் தினேஷுக்கு முக்கியமான பாத்திரம். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமையைச் சித்தரிக்கும் அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒருபுறம் வெடிகுண்டு, மறுபுறம் காதலி இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் வேடத்தை தன்னால் இயன்ற அளவு செய்துள்ளார்.
முனிஸ்காந்துக்கும் இது குறிப்பிடத்தக்க படம். பஞ்சர் என அழைக்கப்படும் அவர் தன் அசல் பெயரான சுப்பையா சாமி என்பதைச் சொல்லும்போது அவருடைய முதலாளிக்கே அது தெரியவில்லை. ஆள் முரடாகத் தெரிந்தாலும் அசடாகவே இருக்கும் மனிதர்களின் பிரதிநிதிப் பாத்திரத்தைத் தன் நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார். லாரியில் இருப்பது வெடிகுண்டு எனத் தெரிந்தபிறகு அவரது பதற்றமும் பயமும் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றன.
நடிகை ஆனந்தி இதே போன்ற வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதால் புதிய வேடத்தில் பார்ப்பது போலவே இல்லை. ஏற்கெனவே நன்கு பழகிய பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தன் நடிப்பால் தந்துவிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் ஒரு பயணக் கதைக்கு அவசியமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு திரைக்கதைப் போதுமான அளவில் போதுமானவற்றைப் படம் பிடித்து உதவியிருக்கிறது. டென்மாவின் இசையில் பாடல்களும் பின்னணியிசையும் இதமாக உள்ளன.
எல்லாவற்றையும் பேசித் தீத்துக்கணும் ஆயுதத்த தூக்கக் கூடாது, 500 வருஷம் புல்லு பூண்டு கூட முளைக்காதுடா அந்தக் குண்டு வெடிச்சா போன்ற வசனங்கள் படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்தைத் தெளிவாகச்சொல்கின்றன.
புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநர் அதியன் ஆதிரை கவனத்தை ஈர்க்கிறார். வெடிகுண்டுக்கு பூசாரி கடவுள் போல் ஜோடனைசெய்து அழகு பார்ப்பது அழகு. ஆனாலும், நிமிர்ந்து உட்காரவைக்கும்படியான எந்தத் தருணமும் படத்தில் இல்லை என்பது ஏமாற்றம். அந்த வெடி குண்டும் பல காட்சிகளில் ஏதோ ஒரு சாதாரணப் பொருள் போல் தென்படுகிறதே ஒழிய வெடிகுண்டு என்னும் பதற்றத்தையோ பதைபதைப்பையோ தரவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்காத குண்டு என்பதும் அது கரை ஒதுங்கும் என்பதும் வெடித்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மையாக இருக்கலாம், ஆனால் நம்புவதற்கு ஒவ்வாதவையாக உள்ளது. அதனாலேயே படத்துடன் ஒன்ற இயலவில்லை. தொழிலாளி முதலாளி, ஆதிக்க சாதி ஒடுக்கப்பட்ட சாதி என்று பழகிய தடத்திலேயே படம் சென்றுமுடிந்துவிடுகிறது. போரின் பாதிப்பைப் பெரிதாக அறிந்திராத நமக்கு எதற்கு இப்படி ஒரு படம் என்னும் கேள்வி எழவே செய்கிறது.
வெடிக்குமா வெடிக்காதா என்ற எதிர்பார்ப்பிலேயே படத்தை நகர்த்திய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு கடைசிவரை வெடிக்கவே இல்லை என்பது ஏமாற்றமா, ஆறுதலா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக