இன்று (டிசம்பர் 15) முழுக்க கேசினோ தியேட்டரிலேயே பொழுதை ஓட்டியாகிவிட்டது. காலையில் முதலில் Alice என்னும் படம் பார்த்தேன். பிரெஞ்சுப் படம். கணவனின் துரோகத்தை அறிந்த மனைவி தானும் அப்படியொரு தகாத பாதைக்குச் செல்லும் சூழலை எதிர்கொண்ட படம். தனது பணத்தை எல்லாம் ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்ட கணவனால் குடும்பமே மூழ்கிவிடும் சூழல் வந்து வாய்க்கிறது. கணவனும் எங்கேயோ சென்றுவிட்டான். அவளுடைய பெற்றோரும் உதவ முடியாத நிலையில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். அந்தத் தொழிலில் அவளுக்கு ஒரு தோழியும் கிடைக்கிறாள். அந்தத் தோழியிடம் தான் பணத்தை முழுவதும் கணவன் இழந்தான் என்பது இறுதியில் தெரிகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் மனைவியைத் தேடி கணவன் வருகிறான். அவனுக்கு மனைவியின் செயல்பாடுகளும் தெரியவருகின்றன. இருவருமே ஒரு புதிய வாழ்க்கையை வாழ முடிவுசெய்துகொள்ளலாம் என்கிறான் கணவன். அந்த மனைவியோ அவளுடைய தோழியுடன் சென்று புதிய வாழ்வை அமைத்துக்கொள்கிறாள்.
அடுத்ததாக Just 6.5 என்னும் ஈரான் திரைப்படம். போதைப் பொருள் கடத்தல் தான் படத்தின் அடிப்படை. முக்கியப் போதைப் பொருள் கடத்தல்காரரைத் தேடி ஓடும் காவல் துறையினர் இருவர் செல்கிறார்கள். முக்கிய நபருக்குப் பதில் வேறொரு நபர் கிடைக்கிறார். அவருக்கே இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதிகார மட்ட ஊழல், நேர்மையற்ற நீதி எனப் படம் செல்கிறது. வசனம் வசனம் வசனம் எனப் பேசித் தீர்க்கிறார்கள். சப் டைட்டிலை வைத்துக்கொண்டு பெரிதாகப் படத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சப் டைட்டில் தொடர்ந்து திரையில் தென்பட்டுக்கொண்டேயிருந்தது.
அடுத்து, Charcoal என்னும் ஈரானியத் திரைப்படம். மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய காரணத்துக்காக நகைகளைத் திருடி சிறைக்குச் சென்றுள்ள மகன், அவருடைய தந்தை இருவரும் மையப் பாத்திரங்கள். அவர் கரி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய எதிரி நகைக்கடைக்காரர். மகனையும் குடும்பத்தையும் காப்பாற்ற கடத்தலில் ஈடுபட வேண்டிய சூழலையும் எதிர்கொள்கிறார் அந்தத் தந்தை. படத்தின் தொடக்கத்தில் மகனைச் சிறையிலிருந்து அழைத்துவரும் தந்தை இறுதியில் அவரே சிறைக்குச் சென்றுவிடுகிறார். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது.
இறுதியாக, A Son என்னும் துனிசியா நாட்டுப் படம். வேறுபட்ட கதைக் களம். மகிழ்ச்சியுடன் மனைவி மகனுடன் காரில் செல்கிறார் அவர். திடீரெனப் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகப் புறப்பட்டுவரும் தோட்டா ஒன்று மகனைப் பதம் பார்த்துவிடுகிறது. உயிருக்குப் போராடும் மகனுக்கான சிகிச்சையில் அவனது கல்லீரலை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த பரிசோதனையில் அந்த மகன் அவருக்குப் பிறக்கவில்லை என்ற உண்மை தெரிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவியில் அலுவலக நபர் ஒருவர் மூலம் அந்தக் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சூழலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படம். இதனிடையே லிபியா இரக்கமற்ற போர் ஆகியவை குறித்த சித்தரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தீவிரமான படம். பார்த்த ஓரிரு நல்ல படங்களில் இதுவும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக