இன்று காலை 11 மணிக்கு தேவியில் X – The eXploited என்னும் ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் பார்த்தேன். அரசியல் தூவப்பட்ட கிரைம் திரில்லர் வகைப் படம். அடுக்கடுக்காக நடைபெற்ற பல தற்கொலைச் சம்பவங்கள் கொலை என காவல் துறை சந்தேகிக்கிறது. அதைத் துப்புத் துலக்க ஒரு பெண் அதிகாரி வருகிறார். அவருடைய கணவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதுவும் ஒரு கொலை என்பது அவருக்குத் தெரியவருகிறது. இதனால் மனப் பாதிப்பு ஏற்படும் அந்த அதிகாரி அத்துடன் குற்றச் செயல்களின் பின்னணியைக் கண்டுபிடிக்கிறார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி மாற்றிக் காட்சிகளைக் கோக்கும் பாணியில் படக் காட்சிகள் வந்துசெல்கின்றன. அரசுக்கெதிராக சாதாரண மனிதர்கள் எதையும் செய்ய முடிவதில்லை என்பதையே படம் பேசுகிறது. அதிகாரிகளாலும் எதையும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம். இந்தப் படத்தின் உருவாக்கம் இதைப் பார்க்கும்படி செய்தது.
அடுத்து கேசினோவில் Despite the Fog என்னும் இத்தாலிப் படம். முகம்மது என்னும் சிறுவன் எல்லை தாண்டிவந்துவிடுகிறான். கடலில் ரப்பர் படகு ஒன்றில் வரும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவனுடைய பெற்றோர் இறந்துவிடுகிறார்கள். அவனை சமீர் என்னும் இளைஞன் காப்பாற்றுகிறான். அவன் சுவீடன் செல்ல வேண்டும் எனச் சொல்வதால் சிறுவனும் அங்கே செல்ல நினைக்கிறான். இதனிடையே ஒரு கிறித்தவத் தம்பதியிடம் முகம்மது வந்துவிடுகிறான். அந்தத் தம்பதி தனது மகனை இழந்திருந்தவர்கள். எனவே அந்தப் பெண்ணுக்கு தன் மகனே மீண்டும் வந்ததுபோல் திருப்தி ஏற்படுகிறது. கிறித்தவ வீட்டில் வாழும் இஸ்லாமியச் சிறுவன் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான், அவனால் அங்கே இருக்க முடிந்ததா என்பதைப் படம் பேசுகிறது. கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என நம்பிச் சென்றால் படம் மிகவும் சுமார் ரகம்.
இறுதியாக கேசினோவில் இரவும் 7 மணிக்கு The Bra என்னும் மௌனப் படம். சில படங்கள் வசனமாகப் பேசிக் கொல்லும் இந்தப் படம் மௌனமாகக் கொன்றது. சரியான குப்பைப் படம். ஆனால் உலக சினிமா திரையிடலுக்குத் தைரியமாக அனுப்பியிருக்கிறார்கள். ரயில் இன்ஜின் டிரைவர் தனது இன்ஜினை ஓட்டிச் செல்லும்போது ஒருநாள் அவரது ரயிலில் பெண் ஒருவரின் மேல் உள்ளாடை மாட்டிக்கொண்டுவிடும். அது யாருக்குரியது என அவர் தேடி அலையும் அலைச்சல்தான் படம். சரியான பாடாவதிப் படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக